அநியாயம் செய்திட நமக்குத் துணிவு வருமா?


அந்த நபிமொழியை மீண்டும் ஆழமான ஒரு ஆய்வுக்கு உட்படுத்துவோம், இங்கே!

அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு முறை என் அடிமையை அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னாலிருந்து யாரோ, "அபூ மஸ்ஊதே நினைவிருக்கட்டும்! இவர்மீது உமக்கிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது" என்று கூறுவதை நான் செவியுற்றேன். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் உவப்புக்காக (இவரை நான் விடுதலை செய்துவிட்டேன்) இவர் சுதந்திரமானவர்" என்று கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்துகொள்! நீ இவ்வாறு செய்திருக்காவிட்டால் "நரகம் உம்மை எரித்திருக்கும்" அல்லது "நரகம் உம்மைத் தீண்டியிருக்கும்" என்று கூறினார்கள். (முஸ்லிம் - 3414)

***


இந்த நபிமொழியிலிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

பாடம் 1:

இந்த நிகழ்வில் பங்கு பெற்றவர்கள் மூன்று பேர்கள் மட்டுமே: நபி (ஸல்) அவர்கள், அபூ மஸ்வூத் (ரளி) அவர்கள், அவர்களின் அடிமை. அவ்வளவு தான். இந்த நிகழ்வில், நபிகளார், அபூ மஸ்வூத் அவர்களின் செயலைக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள். 

ஆனால், அபூ மஸ்வூத் அவர்கள், தமக்கு நடந்த நிகழ்வின் பாடங்களை, மற்ற நபித்தோழர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் முகமாக, அந்த நிகழ்வினை விரித்துச் சொல்லி, தம் கீழே இருக்கும் பணியாளர் ஒருவரிடம் நாம் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதை தெள்ளத் தெளிவாகப் புரிய வைக்கிறார்கள் இந்த நபிமொழி மூலம்!

இதிலிருந்து நாம் அறிய வருவது என்னவெனில், நாமும் நமக்கேற்பட்ட அனுபவங்களை வைத்து, நம் குடும்பத்தவர்க்கும், பிறருக்கும் பாடங்களைக் கற்றுத் கற்றுத் தருவது மிகச் சிறந்த வழிகளுள் ஒன்று!

பாடம் 2:

நபிமொழியில் - இஃலம் அபா மஸ்வூத் என்று வருகிறது! இதனை - அறிந்து கொள்ளுங்கள் அபூ மஸ்வூத்! அல்லது நினைவிருக்கட்டும் அபூ மஸ்வூத்! - என்று மொழிபெயர்க்கலாம்.

திருமறை குர் ஆனிலும், இது போன்று, இஃலம் - எனறு விளித்து அல்லாஹ் செய்திகளைச் சொல்வதை நாம் பார்க்கலாம்.  இமாம் அல் குஸைரி (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: எப்போதெல்லாம் இவ்வாறு – “அறிந்து கொள்ளுங்கள்!” - என்று விளித்து செய்தி சொல்லப்படுகிறதோ, அப்போதெல்லாம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது எனில் - உடனடியான - செயல் ஒன்றுக்கு உங்களை ஏவுகின்றான் இறைவன் என்பது தான்!
அதனால் தான் பார்க்கின்றோம். அபு மஸ்வூத் அவர்கள் உடனடியாகக் கையில் இருந்த  சாட்டையைக் கீழே  போட்டு விடுகின்றார்கள்!

பாடம் 3:

இன்னொன்றைக் கவனித்தீர்களா? தம் அடிமையை அபூ மஸ்வூத் அவர்கள் அடிப்பதைக் கண்ட நபியவர்கள், " ஏன் அவரை இப்படி அடிக்கிறீர்கள்?"என்று கேட்கவே இல்லை!

இதிலிருந்து என்ன தெரிகிறது எனில், நாம் அநியாயம் ஒன்றைச் செய்திடும்போதெல்லாம், அதனை "நியாயப் படுத்திடும்" மன நிலை தான் நம்மில் பலருக்கும் இருக்கிறது என்பது தான்!

கற்க வேண்டிய பாடம் என்னவெனில், எந்த ஒரு அநியாயத்தையும், எந்த ஒரு காரணத்தைக் கொண்டும், நியாயப்படுத்திடவே முடியாது - இஸ்லாத்தில்!

No transgression justifies another transgression in response!

பாடம் 4:

நபியவர்களின் எச்சரிக்கையை உள்வாங்கிக் கொண்ட, நபித்தோழர் அபூ மஸ்வூத் அவர்கள் அடுத்து என்ன செய்கின்றார் என்பதை கவனியுங்கள்.
நபியவர்கள், அந்த அடிமையை உரிமை விட்டு விடுங்கள் என்று ஏவிடவில்லை! ஆனால் தாமாகவே முன் வந்து அந்த அடிமையை உரிமை விட்டு விடுகிறார் அந்த நபித் தோழர்!

"யா ரஸுலுல்லாஹ்! அவரை அடித்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள்!" என்று மட்டும் அவர் சொல்லி விட்டுப் போயிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்திடவில்லை!

மாறாக, அந்த அடிமையை உரிமை விட்டு விடுகிறார்; மேலும், இனி எந்த ஒரு அடிமையையும் அடிக்கப் போவதில்லை என்று முடிவும் கட்டிக் கொள்கிறார். 

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் என்னவெனில், நாம் அநியாயம் ஒன்றைச் செய்து விட்டால், அதிலிருந்து மீண்டு தவ்பா செய்து கொள்வது மட்டும் போதுமானதன்று. செய்து விட்ட அந்த அநியாயத்துக்குப் பகரமாக அதனை ஈடுகட்டும் விதத்தில், அதற்கு என்ன செய்திட வேண்டுமோ அதனையும் செய்து விட வேண்டும் உறுதியாக!

பாடம் 5:

இன்னொன்றையும் கவனியுங்கள் இந்த நபிமொழியில். அபூ மஸ்வூத் அவர்களைப் பார்த்து, "நீங்கள் சுவர்க்கத்துக்குச் செல்ல மாட்டீர்கள்!" என்று சொல்லவில்லை நபியவர்கள். மாறாக நரக நெருப்பு உங்களைத் தீண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார்கள். இது ஏன்?

இது ஏனெனில், அபூ மஸ்வூத் அவர்கள், அந்த அடிமையின் முகத்தில் தான் அடித்தார்கள். அதற்கு ஈடாக ஒரு தண்டனையை அறிவிப்பது தான் பொருத்தம்! அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் அப்படிப்பட்ட தண்டனையை அறிவித்தார்கள் என்று அறிஞர் பெருமக்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்!

இனியேனும், ஒரு காலும், அநியாயம் செய்திட நமக்குத் துணிவு வருமா? 

Comments