சூழ்நிலை பற்றி...

சூழ்நிலையை (situation) ஒரு மனித வளம் (human resource) என்கிறார்கள் மனித வளத்துறையினர். சூழ்நிலை ஒன்று மிகச் சிறப்பாகக் கையாளப்படுவதை, சூழ்நிலைப் பொறிமை (Situational Engineering) என்றும், சூழ்நிலை ஒன்றை சரிவரக் கையாளாகாத நிலையை சூழ்நிலைக் கைதி நிலை (Victims of Situation)  என்றும் அழைக்கிறார்கள் அவர்கள்.

நம்மைப் பொருத்தவரை, நபி (ஸல்) அவர்கள் தங்களது 23 ஆண்டு கால நபித்துவ சூழ்நிலை முழுவதையும், மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தே வைத்திருக்கிறோம். நபியவர்களின் நபித்துவ வாழ்வு முழுவதையும் நாம் ஆழமாக ஆய்வு செய்திட்டால், மிக நுட்பமான பல பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும்.

ஆனால், இன்று நம்மில் பெரும்பாலோருக்கு, சூழ்நிலைகளைக் கையாள்வது எப்படி என்பது பற்றிய சிந்தனையே இல்லை.

நேரே விஷயத்துக்கு வருகிறேன். இஸ்லாமிய இயக்கங்கள் மாநாடுகள் நடத்துகின்றன. அவர்களின் ஊர்வலத்தில், நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் முழக்கங்கள் முழங்கப்படுகின்றன. ஒரு சிலர், இப்படிப்பட்ட முழக்கங்கள் - இந்தப் பன்முகச் சூழலில் தவறான எண்ணங்களையே விதைக்கும், எனவே இது வேண்டாம் என்று கருத்து சொல்கிறார்கள்.  இதனைக் கோழைத்தனம் என்கிறார்கள் இன்னொரு சாரார். இவற்றில் எது சரி, எது தவறு என்பதை எதை வைத்து முடிவு செய்வது?

அண்ணலார் வாழ்க்கையிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ள முயல்வோம். அண்ணலாரின் நபித்துவ வாழ்க்கையை, மக்கத்து வாழ்க்கை, மதினத்து வாழ்க்கை என்று ஏன் பிரித்துப் பார்க்கிறோம்? மக்கத்து சூழ்நிலை வேறு, மதீனத்து சூழ்நிலை வேறு என்பதை புரிந்து கொள்வதில் என்ன கஷ்டம் நமக்கு?

குர்ஆனின் அத்தியாயங்களை ஏன், மக்கத்து அத்தியாயங்கள் என்றும், மதினத்து அத்தியாயங்கள் என்றும் பிரித்துப் பார்த்திட வேண்டும்? இறைவனே, மக்கத்து அத்தியாயங்களில் பேசும் பாங்கு வேறு, மதினத்து அத்தியாயங்களில் பேசும் பாங்கு வேறு என்பதில் யாருக்கு என்ன சந்தேகம்?

அண்ணலார் அவர்கள், மதினாவில் கூட, ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது, தன் பெயரை முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று எழுதப்படுவதை எதிரிகள் ஏற்காதபோது, முஹம்மது இப்னு அப்துல்லாஹ் என்றே எழுத ஒத்துக் கொண்டது கோழைத்தனமா?

கஃபதுல்லாஹ்வை, ஹள்ரத் இப்ராஹிம் (அலை) அவர்கள் கட்டிய அதே அமைப்பில் மாற்றிடத் தான் விரும்பிய போதும், இம்மக்கள் இப்போது தான் "அறியாமைக் காலத்திலிருந்து" வெளியே வந்திருக்கிறார்கள், எனவே இதனை இப்படியே விட்டுச் செல்கிறேன் என்று அப்படியே அண்ணலார் விட்டு விட்டார்களே, இதில் நமக்கு ஒரு பாடம் இல்லையா? 

சூழ் நிலை பற்றி நாம் நிறைய படிக்க வேண்டியுள்ளது!

இவை ஒரு பக்கம் இருக்கட்டும். நான் "சமரசம்" இதழில் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தேன் பல ஆண்டுகளுக்கு முன்பு (1984 - 85). அதன் தலைப்பு: பொட்டிலறைந்தாற்போல்!

அந்தக் கதையின் இறுதியில், மவ்லானா மவ்தூதி அவர்களின் கருத்து ஒன்றையும் எழுதியிருந்தேன். அந்தக் கருத்து இது தான்:

“மக்களிடம் யதார்த்தத்தில் இல்லாத சிறப்புகளை, அவர்களிடம் இருப்பதாகக் கூறி அவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் தலைவர்களை, நான் மடையர்கள் எனக்கூறுவேன்!” (நினைவில் இருந்து எழுதுகிறேன்.  சொற்பிரயோகத்தில் தவறு இருக்கலாம்)

ஆக்கப்பூர்வமான காரியங்களை அமைதியாகச் செய்து விட்டு, அடக்கி வாசிக்க வேண்டியதே இன்றைய சூழலில் நாம் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறை. இதனைக் கோழைத்தனம் என்பவர்கள் அவசியம் படிக்க வேண்டியது அண்ணாரின் வாழ்க்கை வரலாற்றைத் தான்!

Comments