அதிகாரமும் அநியாயமும்!


(இஸ்லாத்தில் சமூக நீதி - கட்டுரை – 2 )

எஸ் ஏ மன்சூர் அலி

ஒருவன் ஏன் பிறருக்கு அநியாயம் செய்திடத் துணிகின்றான்? தான் "பலம் மிக்கவன்" என்ற தவறானதொரு மன நிலையில் தான் (with a false sense of power), ஒருவன் அநியாயம் செய்திடத் துணிகின்றான். ஒருவனை அநியாயம் செய்திடத் தூண்டுவதே - அவன் தன்னிடம் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் - "பலமும் அதிகாரமும்" தான்!

அந்த பலம் - உடல் வலிமையாக இருக்கலாம். அல்லது பண வலிமையாக இருக்கலாம். அல்லது அதிகார பலமாக இருக்கலாம். சமூகரீதியாக எண்ணிக்கை (majority) பலமாக இருக்கலாம்! தவறாகக் கற்பித்துக் கொண்ட சமூக அந்தஸ்தாகக் கூட இருக்கலாம்.

இத்தகைய வலிமைகளை வைத்துக் கொண்டு தான் - பலவீனமானவர்களை, வலிமையற்றவர்களை, ஏழை-எளிய மக்களை தங்களின் அநியாயங்களுக்கு உட்படுத்துகிறார்கள் - வலிமை மிக்கவர்கள்.

ஆண்கள் பெண்களுக்கு அநியாயம் இழைப்பது, இதனால் தான்! பணம் படைத்தவர்கள் ஏழைகளுக்கு அநியாயம் இழைப்பது இதனால் தான்! வலிமை மிக்க சமூகங்கள் எளிய சமூகங்களுக்கெதிராக அநியாயங்களைக் கட்டவிழ்த்து விடுவதும் இதனால் தான்.

அடுத்து, வலிமை மிக்கவர்கள், தங்களின் அநியாயங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதற்கும், தங்களின் அநியாயங்களின் வீச்சை அதிகரித்துக் கொண்டே செல்வதற்கும் இன்னொரு காரணம் இருக்கிறது.

அது - தாங்கள் செய்திடும் அநியாயங்களை, உடனடியாகத் தட்டிக் கேட்பார் யாருமில்லை - என்ற மமதையினால் தான் அவர்கள் தங்களின் அநியாயங்களைத் துணிவுடன் தொடர்ந்து செய்கிறார்கள்.

"அடித்துப் போட்டால், "ஏன்?" என்று கேட்பதற்கு ஆளில்லாத அநாதைப் பயலே!" - என்ற சொல் வழக்கைக் கவனியுங்கள். நன்றாகப் புரியும்!

இப்படிப்பட்ட எல்லாவிதமான அநியாயங்களையும் தட்டிக் கேட்டிட இறைவனால் அனுப்பப் பட்டவர்கள் தான் இறைத்தூதர்கள்! இறை வசனத்தைக் கவனியுங்கள்:

நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் நாம் இறக்கினோம்; அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாக உதவி செய்பவர் எவர் என்பதையும் அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், மிகைத்தவன். (57:25)

"லி யகூமன்னாஸு பில் கிஸ்த்" - மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்களே எல்லா இறைத்தூதர்களும்!

தாங்கள் பலம் மிக்கவர்கள் என்ற தவறான மன நிலையிலும், தங்களைத் தட்டிக் கேட்பார் யாருமில்லை என்ற இறுமாப்பிலும் , பிறருக்கு அநியாயம் இழைப்பவர்களுக்கு, நல்லதொரு பாடத்தைக் கற்றுத் தருகிறார்கள், இறைவனின் இறுதித் தூதர் அண்ணல் நபியவர்கள்.

அந்தப்பாடம் என்ன?

நாம் யாருக்கு அநியாயம் ஒன்றைச் செய்து விடுகின்றோமோ, அவர் மீது நமக்கு இருக்கும் ஆற்றலை விட, நம்மைத் தண்டித்து விடுவதற்கு, நம் மீது அல்லாஹ் அதிக ஆற்றல் படைத்தவன்! - என்பது தான் அது!

ஷெய்க் உமர் சுலைமான் அவர்கள் எடுத்துக் கொள்ளும் இரண்டாவது நபிமொழி இதோ:

அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு முறை என் அடிமையை அடித்துக்கொண்டிருந்தேன். 

அப்போது எனக்குப் பின்னாலிருந்து யாரோ, "அபூ மஸ்ஊதே நினைவிருக்கட்டும்! இவர்மீது உமக்கிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது" என்று கூறுவதை நான் செவியுற்றேன். 

நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். 

உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் உவப்புக்காக (இவரை நான் விடுதலை செய்துவிட்டேன்) இவர் சுதந்திரமானவர்" என்று கூறினேன். 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்துகொள்! நீ இவ்வாறு செய்திருக்காவிட்டால் "நரகம் உம்மை எரித்திருக்கும்" அல்லது "நரகம் உம்மைத் தீண்டியிருக்கும்" என்று கூறினார்கள். 

(முஸ்லிம் - 3414)

Allah has more power over you than you have over him!

Comments