ஆயத்!


ஆயத்!

இது முஸ்லிம் குழந்தைகளுக்குக் கூட தெரியும் அரபிச் சொல்!

திருமறை குர்ஆனிலே - ஆயத், ஆயாத், ஆயாத்தினா, ஆயாத்திஹி - போன்ற சொற்களை அடிக்கடி நாம் காண முடியும்.

திருக்குர்ஆனிலே, இந்தச் சொல்லும் இதன் துணைச்சொற்களும் சேர்த்து மொத்தம் 400 - க்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளன.

ஆயத் எனும் சொல் - திருமறையிலே இரண்டு விதமான பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஒன்று - இறை வசனம்

இரண்டு - அத்தாட்சி

வஹீ மூலம் அனுப்பப்படும் வேதங்களைக் குறித்திடும் இடங்களில், ஆயத் என்பதற்கு இறை வசனம் என்றும் , இறைவனின் படைப்புகளைக் குறித்திடும் இடங்களில் வரும் - ஆயத் என்ற சொல்லுக்கு அத்தாட்சி என்றும் மொழி பெயர்க்கப்படுகிறது.

சான்றுக்கு சில வசனங்களைப் பார்ப்போம்:

இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம். (2:151)

வானமும், பூமியும் அவனுடைய கட்டளையினால் நிலைபெற்று நிற்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; (30:25)

முஃமின்களுக்கு நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன. (45:3)

இறைவனின் படைப்பினங்கள் குறித்துப் பேசுகின்ற இடங்களில் - அவை இறைவனின் "ஆயாத்கள்" - என்பதை "இறைவனின் அத்தாட்சிகள்" என்று மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது அல்லவா? இதன் விளக்கம் என்ன?

இதற்கு - இறைவனின் படைப்பினங்கள் அனைத்தும், இறைவன் ஒருவனின் உள்ளமைக்கான அத்தாட்சிகளே என்ற பொருளிலேயே அவற்றை நாம் புரிந்து கொள்கிறோம்.

ஆனால், ஆயத் என்பதன் பொருள் மிக ஆழமானது!

ஆயத் என்பதனை ஆங்கிலத்தில் "sign" - என்று மொழிபெயர்க்கிறார்கள். அதாவது ஆயத் என்பதை ஒரு "அடையாளம்" அல்லது ஒரு "குறியீடு" என்று குறிப்பிடலாம்.

உதாரணம் ஒன்றைக்கொண்டு விளக்குவோம்.

போக்குவரத்துக்கான சாலைகளில், வாகனங்களை ஒழுங்கு படுத்துவதற்காக, மூன்று நிற விளக்குகளைக் கொண்ட கம்பங்களைப் பார்த்திருப்போம். அவை - சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களாகும். சிவப்பு நிறம் எதனைக் குறிக்கிறது? நில் - என்பதைக் குறிக்கிறது! பச்சை நிறம் - செல் என்பதைக் குறிக்கிறது!

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் - நாம் பார்ப்பது - நிறமுள்ள விளக்குகளை மட்டுமே! ஆனால் புரிந்து கொள்வது அவை சொல்ல வருகின்ற செய்தியைத் தான்!

இதே அடிப்படையில் தான் திருமறையில் இடம் பெற்றிருக்கும் ஆயத்களை நாம் புரிந்து கொள்ள கடமைப் பட்டிருக்கிறோம்.

ஒன்று: திருமறை வசனம் என்பது ஒரு ஆயத் தான். மேலோட்டமாகப் பார்த்து விட்டு இறைவன் சொல்வது இது தான் என்று நாம் முடிவுக்கு வந்து விடக்கூடாது. மாறாக, இறைவன் இவ்வசனத்தின் மூலமாக - என்ன செய்தி சொல்ல வருகின்றான் என்பதை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இரண்டு: இறைவனின் படைப்புகளை அல்லாஹ் ஆயத்கள் எனும் போதும் அதே அணுகுமுறை தான்! இறைவனின் படைப்புகள் எனும் அடையாளங்களும், நமக்கு பல்வேறு செய்திகளைச் சொல்கின்றன. மேலோட்டமாக அவைகளைப் பார்க்கும்போது, அவை சொல்ல வருகின்ற செய்திகளை நாம் புரிந்து கொள்ள இயலாது. மாறாக, அந்த அடையாளங்கள் நமக்கு சொல்ல வருகின்ற செய்திகளைப் புரிந்து கொள்வதிலேயே, நமது ஆன்மிக அறிவுத்திறன் (spiritual perception) அடங்கியுள்ளது.

இறைவனே மிக அறிந்தவன்!

Comments