மறைகின்ற சூரியன்!



(ஆயத் - 2 )

*******

இறைவனின் படைப்புகள் எனும் அத்தாட்சிகளும் (ஆயத் - அடையாளம் - குறியீடு - sign) , நமக்கு பல்வேறு செய்திகளைச் சொல்கின்றன; மேலோட்டமாக அவைகளைப் பார்க்கும்போது, அவை சொல்ல வருகின்ற செய்திகளை நாம் புரிந்து கொள்ள இயலாது. மாறாக, அந்த அடையாளங்கள் நமக்கு சொல்ல வருகின்ற செய்திகளைப் புரிந்து கொள்வதிலேயே, நமது ஆன்மிக அறிவுத்திறன் (spiritual perception) அடங்கியுள்ளது என்பதை முன்னர் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா?

அதனை ஒரு உதாரணம் மூலம் விளக்குவதே இப்பதிவு.

மறைகின்ற சூரியனை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். சூரியன் மறைவதும் ஒரு அத்தாட்சி தான். அதாவது ஒரு அடையாளம் அல்லது ஒரு குறியீடு தான்.

தற்செயலாகவோ, அல்லது தாமே முன் வந்தோ - ஒருவர் சூரியன் மறைவதை ஒரு நாள் மாலையில் காண்கிறார். அந்தக் காட்சி அவருக்குள் என்னென்ன எண்ண அலைகளைத் தோற்றுவிக்கலாம்?

இந்தக் காட்சி எவ்வளவு அழகாக இருக்கிறது என்று ஒருவர் வியக்கலாம்! அவர் அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்து ஆழமாக சிந்திக்கத் தொடங்கி விடலாம்!

ஆனால் இன்னொருவருவருக்கு, அது ஒரு சாதாரண அன்றாட நிகழ்வுக்கு மேல் ஒன்றுமில்லாமல் போகலாம்.

இந்த இரண்டாமவரை விட்டு விடுவோம். முதலாமவரை எடுத்துக் கொள்வோம். அவர் தனது சிந்தனையை அதோடு நிறுத்தி விடாமல் மேலே தொடர்கிறார் என்று வைத்துக் கொள்வோம். என்னவெல்லாம் அவர் சிந்திப்பதற்கு வாய்ப்பிருக்கிறது?

"இவ்வளவு அழகாக இருக்கிறதே! என்ன ஒரு பிரம்மாண்டம்! இறைவனைத் தவிர வேறு யார் இப்படிப்பட்ட காட்சி ஒன்றை உருவாக்கிக் காட்டிட முடியும்?"

அடுத்து அவர் சிந்தனை இறைவனின் பக்கம் திரும்புகிறது.

"யா அல்லாஹ்! ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட அழகான காட்சிகளைப் படைத்துக் கொண்டிருப்பவனே! என்னையும், என் வாழ்க்கையையும் நீ எனக்கு அழகாக்கித் தருவாயாக இறைவா!" - என்று மனம் உருகிப் பிரார்த்திக்கிறார். இதனைத் தான் நாம் ஆன்மிகப் புரிந்துணர்வு (spiritual perception) என்கிறோம்.

சூரியன் மறைகின்ற அந்த ஒரு "அடையாளம்" அல்லது "குறியீடு" - எல்லோருக்கும் பொதுவானது தான். ஆனால் ஒருவர் அந்த அடையாளத்திலிருந்து பாடம் ஒன்றைக் கற்றுக் கொண்டிருக்கிறார். இன்னும் பலர் பாடம் கற்றுக் கொள்ளத் தவறி விடுகின்றனர்!

இதற்கு அடுத்த கட்டத்துக்கும் நாம் செல்வோம்.

மாலை நேரத்து சூரியன் மறைகின்ற அந்தக் காட்சியின் அழகை அள்ளிப் பருகிக் கொண்டிருந்தவருக்கு, திடீரென்று இன்னொரு சிந்தனையும் வருகிறது!

அது என்ன?

அடடா! இந்தச் சூரியன் இப்போது மறையப் போகிறதே! அப்படியானால்? அப்படியானால்? நாம்? நான்? இந்தச் சூரியனின் இன்றைய "மறைவு" எனது முடிவை எனக்கு நினைவூட்டுகிறதா? ஆம்! நானும் ஒரு நாள் மறையப் போகிறவன் தான்! சூரியனின் அழகை ரசித்துக் கொண்டிருந்தவர், இப்போது தன் வாழ்வின் முடிவைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கி விட்டார்!

**
இந்தக் கட்டத்தில் மிகவும் பொருத்தமான துஆ ஒன்றை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.

"யா அல்லாஹ்! எங்களின் ஒவ்வொரு காரியத்தின் "முடிவையும்" மிக "அழகாக" ஆக்கித் தருவாயாக! இவ்வுலகின் கேவலத்திலிருந்தும், மறுமை வேதனையிலிருந்தும் எம்மைக் காப்பாயாக." ("அல்லாஹும்ம அஹ்ஸின் ஆகிபதனா பில் உ**ஂமூரி குல்லிஹா வ அஜிர்னா மின் ஹிஸ்யித்துன்யா வ அதாபில் ஆகிரா.")

நன்றாகக் கவனித்தீர்களா? "அழகும்", "முடிவும்" இந்த துஆவில் இணைக்கப்பட்டுள்ள்தை! சூரியனின் மறைவு அவருக்கு இதனைத் தானே கற்றுக் கொடுத்தது!

**

இந்த சிந்தனை ஓட்டத்துடன் அவர் வீடு திரும்புகிறார். இந்த சிந்தனை ஓட்டம் அவருக்குள் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரும்?

திருமறையிலிருந்தே ஒரு நிகழ்வை எடுத்துக் கொள்வோம். அல் கஹ்ஃபு அத்தியாயத்தில் வரும் துல்கர்னைன் சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். அவர் செல்கின்ற வழியில், ஒரு சமூகத்தார், துல்கர்னைன் அவர்களிடம், "யஃஜூஜ் - மஃஜூஜ்" கூட்டத்தார் தங்களுக்கிழைத்திடும் தீங்குகளிலிருந்து அவர்களைக் காத்துக் கொள்ள தடுப்புச் சுவர் ஒன்றைக் கட்டித் தருமாறு வேண்டுகிறார்கள்.

அவர்கள் “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்புச் சுவரை நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள். (18:94)

அதற்கவர்: “என் இறைவன் எனக்கு எதில் வசதிகள் அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, உங்கள் பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”என்றுகூறினார்.(18:95)

இப்போது கேள்வி என்னவெனில், துல்கர்னைன் அவர்கள், அம்மக்கள் தருவதாக சொன்ன தொகையை ஏன் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்? இதற்கு நீங்கள் அதே அத்தியாயத்தின் 86 - வது வசனத்தைக் கருத்தூன்றிப் படித்திட வேண்டும்!

சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்! (18:86)

ஆம்! துல்கர்னைன் அவர்களும் ஒரு நாள் சூரியன் மறைவதைப் பார்க்கிறார். அந்த "ஆயத்திலிருந்து" அவர் கற்றுக் கொண்ட பாடம் என்ன?

"தமக்கு ஆட்சியதிகாரம் எவ்வளவு இருந்தாலென்ன? நானும் ஒரு நாள் மறையப் போகிறவன் தானே! செல்வத்தைச் சேர்த்து சேர்த்து வைத்து என்ன பயன்? மறுமைக்கு உதவும் காரியத்தைச் செய்வதற்கு நாம் ஏன் கூலி பெற வேண்டும்? நிலையான நற்கருமம் ஒன்றைச் செய்து விட்டுப் போய்க் கொண்டே இருப்போம்!"

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.(18:46)

இதுவும் அதே அத்தியாயத்தின் இன்னொரு வசனம் தான்!

நாம் சொல்ல வருவது இது தான்!

இறைவனின் படைப்பில் அன்றாடம் நாம் பார்க்கின்ற "அடையாளங்களை" ஆயத்களை வைத்து நமது வாழ்க்கைக்கானப் பாடங்களைக் கற்றுக் கொள்வதோடு நில்லாமல், அதற்கு உடனடியாக துல்கர்னைன் போல் செயல் வடிவம் கொடுப்பதில் தான் நமது ஆன்மிக வெற்றி இருக்கிறது என்பதைத் தான்!

அல்லாஹ் மிக அறிந்தவன்!



நாம் சற்றும்
எதிர்பார்த்திராத
புறத்திலிருந்து

நமக்கு செல்வம்
வந்து சேர்வதிலும்

இறைவன்
நமக்குச் சுட்டிக் காட்டும்
செய்திகள் உண்டு!

#ஆயத்

Comments