இப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்

இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.

ஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.


அக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.

கொள்கைக்காக நாடு துறந்தவர்கள்.


படைத்த இறைவனுக்காக தனது மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்திட்டவர்கள்.

இறுதி மூச்சுள்ள வரை வயதான காலத்திலும் நாடு விட்டு நாடு சென்று இறை மார்க்கத்தை நிலைநாட்டிட அயராது பாடுபட்டவர்கள்.

உண்மையை, சத்தியத்தைக் கண்டு பிடித்திடுவதில் (intellectual curiosity) ஊக்கம் மிக்கவர்கள். அறிவுக் கூர்மை, புத்திசாலித்தனம், விவேகம் (wisdom) – இவற்றுக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர்கள்.

இப்ராஹீம் நபிக்கு இரண்டு புதல்வர்கள். ஒருவர் – இஸ்மாயில் (அலை); மற்றவர் – இஸ்ஹாக் (அலை). இப்ராஹீம் நபியின் இரு புதல்வர்களுமே இறைத்தூதர்கள் தாம்.

இப்ராஹீம் நபியின் அயராத உழைப்புக்குப் பின்னரும் – குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்குக் கூட மக்கள் இஸ்லாத்தை ஏற்றிடவில்லை. அவர்கள் நாடு நகரம் எல்லாம் சுற்றி அலைந்தார்கள்.

பிறந்த நாடான ஈராக்கை விட்டு வெளியேறிய அவர்கள் எகிப்துக்குச் சென்றிருக்கிறார்கள். சிரியாவுக்கும், சிரியாவின் வடக்கே அமைந்துள்ள ஹர்ரான் (Harran) வரைக்கும் கூடச் சென்று திரும்பி இருக்கிறார்கள். ஃபலஸ்தீனில் சில காலம் தங்கி இருக்கிறார்கள்.

பின்பு அரேபியாவின் ஹிஜாஸ் பகுதியில் உள்ள மக்காவுக்கும் வந்து சென்றிருக்கிறார்கள். 4000 – ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த இப்ராஹீம் (அலை) அவர்கள் – எப்படிப்பட்ட “வாகன வசதியைப்” பெற்றிருந்திருப்பார்கள் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினம் அல்லவே?

இப்ராஹீம் (அலை) அவர்கள் 175 வயது வரை வாழ்ந்தார்கள் என்று ஒரு வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது. இப்ராஹீம் (அலை) அவர்கள் இளமையாக இருந்த கால கட்டத்தில் அவர்களை அல்லாஹ் “மனித குலத் தலைவர் நீங்கள்!” என்று அறிவித்திடவில்லை. மூன்று பெரும் சோதனைகளின் முடிவுக்குப் பின்னரே அந்த “இமாம்” எனும் பட்டம் அவர்களுக்கு வழங்கப் பட்டது.

அந்த மூன்று பெரும் சோதனைகள் என்னென்ன?

ஒன்று – நெருப்புக் குண்டம்.

இரண்டு – மனைவி ஹாஜரா அவர்களையும் மகன் இஸ்மாயில் அவர்களையும் பாலைவன மக்காவில் தன்னந் தனியாக விட்டு விட்டுத் திரும்புதல்.

மூன்று – பெற்ற மகன் இஸ்மாயிலை அறுத்துப் பலியிட வேண்டும் என்ற இறைக் கட்டளை. இந்த மூன்றாவது சோதனையான – இஸ்மாயிலைப் பலியிடும் கட்டளை இறைவனிடம் இருந்து இடப்பட்ட சமயம் நிச்சயமாக இப்ராஹீம் நபியின் “முதுமையான” கால கட்டத்தில் தான்.

வயதோ – முதுமையை எட்டி விட்டது. மக்களோ இறை மார்க்கத்தை ஏற்றிடத் தயாராக இல்லை. என்ன செய்வது? எதிர்காலம் என்னவாகும்? தமக்குப் பின்னர் தமது வழித்தோன்றல்கள் – அடுத்த தலைமுறையினர் – என்ன செய்திட வேண்டும்? எங்கிருந்து அவர்கள் பணியாற்றிட் வேண்டும்?

திட்டமிடுகிறார்கள். தொலை நோக்கோடு ஒரு நீண்ட காலத் திட்டம் ஒன்றை வகுக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ, அல்லாஹ் “நீங்கள் தான் மக்களின் தலைவர்” என்று அறிவித்திட்ட போது – என்னுடைய சந்ததிகளையும் (இந்த வாக்குறுதி) சாருமா? என்று உடனேயே இறைவ்னிடத்தில் கேட்டு விட்டார்கள்! அந்த நீண்ட காலத்திட்டம் தான் என்ன?

மக்காவிலே இறையில்லம் ஒன்றினை தமது மகன் இஸ்மாயிலின் துணையுடன் நிறுவி அங்கே இருந்து கொண்டு பணீயாற்றிட தனது மகனைப் பணிக்கின்றார்கள்.

அவர்களின் தொலை நோக்குப் பார்வைக்கு திருமறை குர் ஆன் வசனம் ஒன்றே சான்றாகக் காட்டிடப் போதுமானது.

“எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக்
காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப் படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக – நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (குர்ஆன் 2: 129)

இப்ராஹீம் (அலை) அவர்களின் இந்த துஆ எப்போது நிறைவேறியது தெரியுமா? சுமார் 2800 ஆண்டுகளுக்குப் பிறகு தான்! ஆனால் அவர்களுடைய தொலை நோக்குப் பார்வையின் விளைவுகளைப் பட்டியல் போட்டுப் பாருங்கள். பனீ அஸ்ராயில் சமுகம், அவர்களுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள், பைத்துல் முகத்திஸ் எனும் நமது முதல் கிப்லா,

கஃபதுல்லாஹ்வாகிய நமது கிப்லா, குர் ஆனை உள்ளடக்கிய நான்கு இறை வேதங்கள், இறுதித் தூதர் முஹம்மது (ஸல்), உம்மத் முஹம்மதிய்யா என்று அழைக்கப் படும் நமது சமுகம் (நமக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டவர்களே நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம்!), ஹஜ்ஜின் அடையாளச் சின்னங்கள்…. என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

அடுத்து - தனது இன்னொரு மகனான இஸ்ஹாக் அவர்களை ஃபலஸ்தீனில் தங்கிடச் செய்கின்றார்கள். தமது அண்ணன் மகன் லூத் (அலை) அவர்களை டிரான்ஸ் ஜோர்டான் எனும் பகுதிக்கு அனுப்பி அங்கிருந்து கொண்டு பணீயாற்றிடப் பணிக்கின்றார்கள். இப்ராஹீம் நபியவர்களோ மகன் இஸ்ஹாக்குடனேயே தங்கி இறுதியில் அங்கேயே ஹிப்ரான் எனும் இடத்தில் வாழ்ந்து மறைகின்றார்கள்.

படிப்பினைகள்:

1.நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்து விடுகின்ற தன்மைக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாய்த் திகழ்பவர்கள். (பார்க்க: சூரா - மும்தஹினா)

2. நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் உண்மையை, சத்தியத்தைக் கண்டு பிடித்திடுவதில் (intellectual curiosity) ஊக்கம் மிக்கவர்கள். எனவே தான் அவர்கள் இறைவனிடம் "மறுமையில் இறைவன் எவ்வாறு உயிர் கொடுத்து எழுப்புவான்" என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் அதனை இறைவனிடமே கேட்டு விடுகின்றார்கள். இறைவனும் அந்த அத்தாட்சியை நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு நிகழ்த்திக் காட்டுகிறான். இத்தகைய ஊக்கம் இன்றைய மாணவர்களுக்கு இது மிக அவசியம்.

3. நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகச் சிறந்த தொலை நோக்குப் பார்வை உடையவர்களாய் விளங்கினார்கள். இக்காலச் சூழலில் - இந்தத் தொலை நோக்குப் பார்வை – நமது சமுகத் தலைவர்கள், நிர்வாகத் தலைவர்கள், மேலாளர்கள், குடும்பத் தலைவர்கள் – இப்படி எல்லா மட்டங்களிலுமுள்ள தலைவர்களுக்கும் மிக அவசியம் ஆகும்.

4. நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் விவாதத் திறமையிலிருந்தும் நாம் பாடம் கற்க வேண்டும். அவர்கள் மன்னன் நம்ரூதிடம் விவாதித்து அவனை வாயடைக்கச் செய்த அருமையான சம்பவத்தை அல்லாஹு த ஆலா தனது திருமறையிலே பதிவு செய்து தந்திருக்கின்றான்.

5. அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்பதற்கும் அவர்கள் ஒரு அழகிய முன்மாதிரி. இறைக் கட்டளையின் படி - தன் மனைவியையும், குழந்தையையும் வரண்ட பாலைவனத்தில் விட்டு விட்டு பேசாமல் திரும்புகிறார்களே, நாம் வியப்பின் உச்சிக்கே சென்று விடுகிறோம்.

படிப்பினைகள் இன்னும் ஏராளம்!

படிப்பினை பெறுவோமா என்பதே நம் கேள்வி!

Comments