தக்வா என்பதன் ஆழமான பொருள் என்ன தெரியுமா?

இறைவனின் அழகிய பெயர்களுள் ஒன்று தான் அர்-ரஹ்மான் என்பதாகும். இதன் பொருள் அளவற்ற பாசம் உடையவன் என்பதாகும். இதன் மூலச்சொல் "ரஹ்ம்" என்பது ஒரு தாயின் கருவறையைக் குறிக்கும்.

ஒரு தாய்க்கும் அந்தத் தாய், தான் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் உள்ள நெருக்கமான உறவை விட மிக நெருக்கமான உறவு இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு.

ஏனெனில்.....
உலகில் உள்ள அனைத்துப் படைப்பினங்களும் - தாம் பெறுகின்ற செல்வங்களின் மீது காட்டுகின்ற பாச உணர்வை எல்லாம் மூட்டைக் கட்டி அதனை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். அதுவே இறைவன் நம் மீது காட்டுகின்ற பாசத்தின் அளவாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் அன்பை நூறு பாகங்களாகப் பங்கிட்டான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது பாகங்களைத் தன்னிடமே வைத்துக்கொண் டான். (மீதியிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் ஒன்றன் மீதொன்று பாசம் காட்டுகின்றன. எந்த அளவுக்கென்றால், மிதித்துவிடு வோமா என்ற அச்சத்தால் பிராணி தனது குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக்கொள்கிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (சஹீஹ் முஸ்லிம் - ஹதீஸ் எண் 5310)

இவ்வாறு அளவற்ற பாசத்துக்குச் சொந்தக் காரனாகிய இறைவன் - எங்கோ ஒளிந்து கொண்டிருக்கவில்லை! நம்மை அவன் அனுதினமும் கண்காணித்தவண்ணம் இருக்கின்றான். அவனுடைய கருணைப் பார்வை நம்மை எப்போதும் சூழ்ந்திருக்கின்றது! அவன் மிகத் துல்லியமாக நாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான். நம் தேவைகள் அனைத்தையும் அவன் அறிந்திருக்கின்றான். அவன் நம் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கும் நிலையில் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கின்றான். இவ்வாறு - நம்மைப் படைத்த இறைவனின் உள்ளமையை - நாம் விழிப்புணர்வுடன் உணர்கின்ற நிலையைத் தான் - "தக்வா" - என்ற சொல் குறிக்கின்றது.

தக்வா என்றால் "இறையச்சம்" என்று பொதுவாக மொழிபெயர்க்கிறார்கள் சிலர். இது ஒரு முழுமையான சரியான மொழிபெயர்ப்பு அன்று என்கிறார் ஒரு இஸ்லாமிய அறிஞர்.

ஆங்கிலத்தில் God-Consciousnes, Piety, - என்றெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டாலும் - அது முழுமையான சரியான மொழிபெயர்ப்பு அன்று!

ஏனெனில் இறை அன்பு, இறைப்பாசம், இறைக்கருணை - இவை எல்லாம் தோன்றும் இடம் இதயம். இறைவனின் உள்ளமையை இதயத்தால் ஆழமாக உணர்கின்ற நிலையையே - தக்வா - என்ற சொல் குறிக்கின்றது.

எனவே தக்வா என்ற சொல்லை - ஆங்கிலத்தில் - Reverential God consciousness - மொழி பெயர்க்கிறார் அந்த இஸ்லாமிய அறிஞர்.

Reverence - என்றால் என்ன பொருள்? It is a feeling of great respect and admiration for somebody or something.

எனவே தக்வா என்பதை இப்படி விளக்குவோம்:

அளவு கடந்த மதிப்பு, அளவு கடந்த வியப்பு மற்றும் அளவு கடந்த போற்றுதல் ஆகிய இவ்வனைத்துக்கும் உரிய நம் இறைவனின் உள்ளமையை இதயத்தால் உணர்கின்ற நிலைக்குப் பெயர் தான் தக்வா என்பதாகும்.

எனவே - "இத்தகுல்லாஹ்!" என்பதை "இறைவனை அஞ்சிக்கொள்!" என்பதற்குப் பதிலாக - "பாச உணர்வு மிக்க இறைவனின் உள்ளமையை உளப்பூர்வமாக உணர்ந்து கொள்!" - என்று புரிந்து கொள்வோமாக!

Comments