நூல்: தலைமைத்துவம்



நூல்: தலைமைத்துவம்


ஆசிரியர் S A மன்சூர் அலி



பிஸ்மில்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

முகவுரை:

இன்றைய தலைவர்களிடத்தில் நம்பிக்கை இழந்து போய் விட்ட இளைய தலைமுறையைக் கொண்ட சமூகம் இது! இன்றைய தலைமைத்துவ வெற்றிடத்தை, நம்மில் எல்லாருமே உணர்ந்திருக்கும் கால கட்டம் இது!

தலைமைத்துவம்! நாம் வாழும் நவீன யுகத்தில், ஆழமான ஆய்வு ஒன்றை வேண்டி நிற்கும் அவசியமான தலைப்பு இது! இது மேலோட்டமாகப் படித்து விட்டு, அப்படியே கடந்து போய் விடுகின்ற ஒரு தலைப்பு அன்று! திருக்குர் ஆனிலிருந்தும், ஒரு சில நபிமொழிகளிலிருந்தும் சில மேற்கோள்களைக் காட்டி விட்டு, இவைகளே இஸ்லாம் எதிர்பார்க்கும் தலைமைத்துவப் பண்புகள் என்று நுனிப்புல் மேய்ந்து விட்டுச் சென்று விடுவதில் எந்த விதப் பயனும் விளையப் போவதில்லை!

இறை நம்பிக்கையற்ற மேற்குலகினர் - தலைமைத்துவம் என்ற தலைப்பை அக்கு வேறு ஆணி வேறாக அலசி வருகிறார்கள்! ஏனெனில், இந்த நவீன யுகத்தை வழி நடத்திச் சென்றிட, மனித குலம் சந்திக்கும் எண்ணற்ற புதிய சவால்களை எதிர்கொண்டிட, பெரும் நிர்வாகங்களைத் திறமையுடன் மேலாண்மைச் செய்திட என்று - பல்வேறு கண்ணோட்டங்களில் இந்தத் தலைப்பு குறித்து அவர்கள் ஆய்வு செய்கிறார்கள்!

நாம் இன்னும் இந்தத் தலைப்புக்கு அருகில் கூட வரவில்லை என்றே நான் எண்ணுகிறேன்! விந்தையிலும் விந்தை! முஸ்லிம்களாகிய நாம் ஒவ்வொருவரும் தனித்தனித் தீவுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால் அது மிகையில்லை! அதனால் தான் நம்மில் எண்ணற்ற இயக்கங்கள்! எண்ணற்ற குழுக்கள்! ஒரு மிகக் குறைந்த செயல்திட்டத்தில் அடிப்படையில் கூட ஒன்று சேர்ந்து செயல்படக் கூட "இயலாமை" மிக்க சமூகமாக நாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஒரு சிந்தனைக்கெதிராக ஒரு ஆக்கப் பூர்வமான விமர்சனத்தை முன் வைத்தாலே வெகுண்டெழுந்து வந்து தாக்கத் தொடங்கி விடுகிறார்கள். இதனால் ஒவ்வொருவருக்கும் இடையே தீராத பகையும் இடைவெளியும் அதிகரித்துக் கொண்டே செல்வதை யாரும் அவதானிக்க முடியும்!

தலைமைத்துவம் குறித்த நூல் ஒன்றை எழுதிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். எனது இந்த முயற்சி, எளிமையான ஒரு துவக்கம் தான்!

***


தலைவன் (leader) என்பவன் யார்? அல்லது தலைமைத்துவம் (leadership) என்பது என்ன? - என்ற அடிப்படையான கேள்விகளுக்கு - ஒரே ஒரு வரைவிலக்கணத்தைக் கொண்டு அதனை நாம் முழுமையாகப் புரிந்து கொண்டு விட முடியாது!

We cannot understand the concept of a leader or leadership with a single dimensional definition!

தலைமைத்துவம் என்பது பல கண்ணோட்டங்களை (perspectives) உள்ளடக்கியது! நாம் இந்த நூலில், அவற்றுள் மிக முக்கியமான ஒரு சில கண்ணோட்டங்களின் அடிப்படையில் தான் இந்தத் தலைப்பை அணுக இருக்கின்றோம். வெவ்வேறு கண்ணோட்டங்களை உள்ளடக்கிய ஒரு பரந்த பார்வையைக் கொண்டு அணுகும்போதே, தலைமைத்துவம் குறித்து ஓரளவுக்கேனும் ஆழமாக அதனை நாம் புரிந்து கொள்ள முடியும்!

யாம் அறிந்தவரையில், தலைமைத்துவம் குறித்த பல கண்ணோட்டங்களை உள்ளடக்கிய பட்டியல் ஒன்று இதோ:

1 வழிகாட்டும் தலைமைத்துவம் - Leadership and Guidance

2 பொறுப்புணர்வும் தலைமைத்துவமும் - Leadership and Responsibility

3 தலைமைத்துவமும் செயல்பட வைக்கும் திறமையும் - Leadership and Influence / Commitment

4 தலைமைத்துவத்தின் தன்மைகள் - Traits approach to leadership

5 மனித வள மேம்பாடும் தலைமைத்துவமும் - Leadership and Human Resource Development

6 தலைமைத்துவத் திறமைகள் - Skills Approach to Leadership

7 தலைமைத்துவமும் தொலை நோக்குப் பார்வையும் - Leadership Vision

8 தலைமைத்துவமும் ஆன்மிகமும் - Leadership and Spirituality

9 தலைமைத்துவமும் அறிவாற்றலும் - Leadership and Intellect

10 தலைமைத்துவமும் உணர்ச்சிக் கட்டுப்பாடும் - Leadership and Emotional Intelligence

11 தலைமைத்துவப் பண்புகள் - Leadership Qualities

12 தலைமைத்துவமும் அணி உருவாக்கமும் - Leadership and Team Building

13 தலைமைத்துவமும் சூழ் நிலைகளைக் கையாள்தலும் - Leadership and Situational Engineering

14 தலைமைத்துவமும் மற்றவர் உணர்வுகளைப் புரிந்து கொள்தலும் - Leadership and Empathy

15 தலைமைத்துவமும் தன்னிலை உறுதிப்பாடும் - Leadership and Assertiveness

16 கருத்துப் பரிமாற்றமும் தலைமைத்துவமும் - Leadership and Communication

17 தலைமைத்துவமும் சுயக் கட்டுப்பாடும் - Leadership and Personal Organization

18 பின்பற்றுபவர்களை ஊக்குவித்தலும், அவர்களைத் தேர்வு செயதலும் - Leadership and Empowering and Choosing

19 தலைமை செயல்படும் பாங்கு - Leadership Styles

20 தலைமைத்துவத்தின் தாக்கம் - Leadership Outcome

எனினும், இன்னூலில் இவற்றுள் ஒரு சில கண்ணோட்டங்களைப் பற்றி விரிவாகவும், ஏனைய கண்ணோட்டங்களைப் பற்றி சுருக்கமாகவும் எழுதுவதே எம் நோக்கம்.

எஸ் ஏ மன்சூர் அலி


***

1 எங்கும் தலைமை! எதிலும் தலைமை!!


ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் சொல்கிறார்கள்:

"கூட்டமைப்பு இல்லாமல் இஸ்லாம் இல்லை!

தலைமை இல்லாமல் கூட்டமைப்பு இல்லை!

கீழ்ப்படிதல் இல்லாமல் தலைமைத்துவம் இல்லை!"


**

"லா இஸ்லாம இல்லா பி ஜமாஅதின்

லா ஜமாஅத இல்லா பி இமாரதின்

லா இமாரத இல்லா பி இதாஅதின்"

***

முஸ்லிம்கள் எங்கிருந்த போதிலும் சரி, எப்படிப்பட்ட சூழலில் இருப்பினும் சரி, சுதந்திரமாக வாழ்ந்தாலும் சரி, அடிமைப் படுத்தப் பட்டிருப்பினும் சரி, ஒரு சிறிய பணியைச் செய்து முடிப்பதாயினும் சரி, மிகப் பெரும் போர் ஒன்றை வழி நடத்துவதாயினும் சரி - அவர்களுக்குத் தலைமை அவசியம்.

சுருங்கச் சொன்னால் தலைமை என்று ஒன்று இல்லாத நேரம், இல்லாத சூழல், இல்லாத நிலைமை - முஸ்லிம் சமுகத்திற்கு இருக்கவே முடியாது. இதனை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலமாக நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 13 ஆண்டுகள் மக்காவில் தங்கி இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு சில நூறுகள் தான்.

முஸ்லிம்கள் அங்கே கொடுமைப் படுத்தப் பட்டார்கள். அவர்களுக்கென எந்த ஒரு உரிமையும் அங்கே இல்லாதிருந்தது. அந்தச் சூழலிலும் நபிகள் (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்கி வழி நடத்திச் சென்றார்கள்.

முஸ்லிம்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகள் எல்லை மீறிச் சென்று விட்ட போது அபிஸீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்திடுமாறு நபிகளார் ஆலோசனை வழங்கினார்கள். பத்து பேர்கள் கொண்ட முதல் குழு மக்காவை விட்டுப் புறப்பட்டது. உத்மான் பின் மள்ஊன் (ரலி) அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். ஹிஜ்ரத்தின் போதும் தலைமை!

பின்னர் அல்லாஹ்வின் கட்டளைப் படி அனைத்து முஸ்லிம்களும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு இஸ்லாமிய அரசினை நிறுவுகிறார்கள். அந்த பத்து ஆண்டு கால மதீனத்து வாழ்விலும் நபி (ஸல்) அவர்களே தலைவர்! அதாவது ஆட்சித் தலைவரும் கூட.

நபி (ஸல்) அவர்கள் எதிர்கொண்ட போர்கள் பற்றி நாமனைவரும் அறிவோம். முதலில் பத்ருப் போரை எடுத்துக் கொள்வோம். 313 நபித்தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் போருக்குப் புறப்பட்டனர். அப்படியானால் அவர்கள் போர் முடித்து மதீனா திரும்பும் வரை மதீனாவின் நிர்வாகத்தை யார் கவனிப்பது? முதலில் அந்தப் பொறுப்பு அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களிடமும் பின்பு அபூலுபாபா பின் அப்துல் முன்திர் (ரலி) அவர்களிடமும் தான் ஒப்படைக்கப் பட்டது.

சரி, பத்ருப் படைக்கு இப்போது வருவோம். அந்தச் சிறிய படையும் இரண்டு அணிகளாகப் பிரிக்கப் பட்டன. வலது புற அணிக்குத் தலைவர் - அல் ஜுபைர் பின் அல் அவ்வாம் (ரலி). இடது புற அணிக்குத் தலைவர் - அல் மிக்தாத் பின் அம்ர் (ரலி). இந்த இரண்டும் தவிர்த்து பின் புறத்தில் இருந்த அணிக்குத் தலைவர் - கைஸ் பின் அபீ ஸஃஸஆ (ரலி). இவை எல்லாவற்றிற்கும் நபி (ஸல்) அவர்கள் தான் தலைமைத் தளபதி (Commander-in-Chief)! எப்படிப் பட்ட ஒரு கட்டுக் கோப்புடன் நபி (ஸல்) அவர்கள் போர் நடத்தியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?

இனி உஹதுக் களத்துக்குள் புகுவோம். ஆயிரம் நபித்தோழர்கள் முதலில் புறப்பட்டாலும் போரில் உண்மையில் கலந்து கொண்டவர்கள் 700 பேர்களே. போருக்குப் புறப்படும் முன்பே நபி (ஸல்) அவர்கள் தம் படையினரை மூன்று அணியினராகப் பிரித்தார்கள். அவைகளாவன:

1. அல்-முஹாஜிரீன் அணி - இதற்குத் தலைவர் - முஸ் அப் பின் உமைர் (ரலி)

2. அல்- அன்ஸாரி 'அவ்ஸ்' அணி - இதற்குத் தலைவர் - உஸைத் பின் ஹுளைர் (ரலி)

3. அல்- அன்ஸாரி 'ஃகஸ்ரஜ்' அணி - இதற்குத் தலைவர் - அல் ஹுபாப் அல் பின் அல் முன்திர் (ரலி)

வழக்கம் போல மதீனாவின் நிர்வாகத்தைக் கவனிக்கவும், தொழுகை நடத்தவும் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களை நியமித்தார்கள் நபியவர்கள்.

போர்க் களத்திற்கு எதிரிகளை விட சற்று தாமதமாகவே வந்து சேர்ந்தது முஸ்லிம் படை. கிடைத்த குறுகிய நேரத்திற்குள் நபி (ஸல்) அவர்கள் 50 பேர் கொண்ட ஒரு குழுவைத் தேர்வு செய்து, அதற்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) என்ற அன்ஸாரித் தோழரைத் தலைவராக நியமித்து ஒரு மலைக்கு அருகில் அவர்களை நிறுத்தி, எதிரிகள் பின்புறமாக வந்து தாக்கி விடாமல் இருக்க ஏற்பாடு செய்தார்கள்.

மற்ற நபித்தோழர்கள் இரு அணிகளாகப் பிரிந்து வலது புற அணிக்குத் அல் முன்திர் பின் அம்ர் (ரலி) அவர்களைத் தலைவராக்கினார்கள். இடது புற அணிக்கு அல் ஜுபைர் பின் அல் அவ்வாம் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்தார்கள்.

ஏன் இவ்வளவு ஏற்பாடுகள்? அப்போது தான் ஒரு கட்டுக் கோப்புடன் செயல் பட முடியும் என்ற ஒரு நோக்கத்தைத் தவிர நிறைய பேர்களைத் தலைவர்களாக்கிப் பார்த்து விட வேண்டும் என்பதற்காக அல்ல.

'முஃத்தா' போரை எடுத்துக் கொள்வோம். அண்ணலார் இந்தப் போரில் கலந்து கொள்ளவில்லை. 3000 பேர் கொண்ட படை ஒன்றை அனுப்பி வைத்தார்கள். ஸைத் பின் ஹாரிதா (ரலி) அவர்களைத் தலைவராக்கினார்கள். அவர்கள் கொல்லப் பட்டால் ஜஃபர் பின் அபீ தாலிப் (ரலி) அவர்களையும், அவர்களும் கொல்லப் பட்டால் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களையும் தலைமைக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படி அண்ணலார் உத்தரவிட்டார்கள். போரில் அம்மூன்று தலைவர்களும் ஷஹீதானதும், ஏனைய நபித்தோழர்கள் காலித் பின் வலித் (ரலி) அவர்களைத் தலைவராகத் தேர்வு செய்து கொண்டார்கள்.

சரி, போர்கள் இருக்கட்டும் - மற்ற நேரங்களில்?

ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ஒரு கூட்டத்தாருக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பத்து நபித்தோழர்களை அனுப்பி வைக்கிறார்கள். இங்கேயும் தலைவரைத் தேர்ந்தெடுக்க மறக்கவில்லை. ஆஸிம் பின் தாபித் (ரலி) அவர்களைத் தலைவர் ஆக்கி அனுப்பி வைத்தார்கள்.

அதே ஆண்டில் 'நஜ்து' பகுதியில் உள்ள் இன்னொரு கூட்டத்தார் அண்ணலாரிடம் வேண்ட எழுபது நபித்தோழர்களை அவர்களிடம் அனுப்பி வைக்கிறார்கள். மறவாமல் தலைவராக அல் முன்திர் பின் அம்ர் (ரலி) அவர்களை நியமிக்கிறார்கள்.

ஹிஜ்ரி 9 - ம் ஆண்டு ஹஜ் கடமையாக்கப் பட்டது. சுமார் 100 நபித்தோழர்கள் அந்த ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள். அவர்களுக்கு ஹள்ரத் அபூ பக்ர் சித்தீக் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்து அனுப்பி வைத்தார்கள்.

தான் இவ்வுலகை விட்டுப் பிரிய சில நாட்களுக்கு முன்பு கூட கிழக்கு ரோமப் (பைஸாந்தியப்) பேரரசை நோக்கி ஒரு படையை அனுப்பி வைக்க ஏற்பாடுகளைச் செய்தார்கள் அண்ணலார் அவர்கள். அப்படைக்கும் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தலைவராக நியமிக்கத் தவறி விடவில்லை அவர்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

"மூன்று பேர்கள் பயணம் மேற்கொள்வதாக இருந்தால், அவர்கள் தங்களுக்குள் ஒருவரைத் தலைவராக்கிக் கொள்ளட்டும்." அறிவிப்பாளர்: அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி)

"ஒரு கூட்டில் வாழ்கின்ற மூன்று மனிதர்களாக இருந்தாலும் சரி, அவர்களும் தமக்குள் ஒருவரை அவசியம் தங்கள் தலைவராக ஆக்கிக் கொள்ள வேண்டும்." அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)

ஆனால் நமது நிலை என்ன?

தலை சிறந்த சிந்தனையாளர் சகோதரி மர்யம் ஜமீலா (Maryam Jameelah) அவர்கள் கூறுகிறார்கள்:

"It is extremely difficult to get Muslims and most other oriental peoples to collaborate and cooperate with one another.... It is very rare that two or more scholars will agree to work together even on a single book...."

"முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த கிழக்குலக மக்களாக இருந்தாலும் சரியே - அவர்களில் - ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் ஒத்துழைத்துப் பணியாற்றக் கூடியவர்களைக் காண்பது - மிக மிகக் கடினம்.! ....அவ்வளவு ஏன், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரே ஒரு நூல் எழுதுவதற்காகக் கூட அவர்கள் ஒன்று பட்டு பணீயாற்றுவதற்கு சாத்தியம் மிக மிக குறைவே!"

இப்போது ஒரு கேள்வி.

தலைமை குறித்து அதிகமாக வலியுறுத்தப் பட்டிருந்தும், அதற்கான விரிவான வழி காட்டுதல்கள் நம்மிடம் இருந்தும், ஒரு தலைமைக்குக் கீழ் ஒருங்கிணைந்து பணியாற்றுவதின் சிறப்பை ஏன் நாம் இன்னும் உணர்ந்திடவில்லை? எந்த ஒரு துறையிலும் நம்மால் ஒருங்கிணைந்து செயல் பட முடியவில்லையே அது ஏன்? சிந்திப்போமா?

***

2A வழிகாட்டும் தலைமைத்துவம்

(Leadership and Guidance)

முதலில் - தலைமை என்பதன் பொருளை எடுத்துக் கொள்வோம்.

தமிழில்.... தலைவன் – தலைமைத்துவம்

ஆங்கிலத்தில் ….. - Leader – Leadership

குர்ஆனிய வழக்கில் … - இமாம் – இமாமத்

இமாம், இமாமத், அதன் வேர்ச்சொல், மற்றும் அதன் துணைச்சொற்களின் அகராதிப் பொருளைப்

பார்ப்போமா?

Amaama – in front of - முன்னால் வந்து நிற்பது

Imaam – leader - தலைவன்

A-immah - leaders - தலைவர்கள்

Umm – mother - தாய்

Ummahat – mothers - தாய்மார்கள்

Ummat – nation, generation - சமூகம், சமுதாயம், தலைமுறை

Umam – plural of Ummah - சமூகங்கள்

Imamat - leadership - தலைமைத்துவம்

** **

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

1 தலைவன் என்பவன் தாயைப் போன்றவன்!

2 தனக்குரிய தலைவனைப் பெற்ற சமூகமே -உம்மத் என்றழைக்கப்படும்!

3 தலைவன் இல்லாத சமூகம், தாய் இல்லாத குழந்தைகளைப் போல்!

** **

அடுத்து - தலைவன் யார் என்பதற்கான ஒரு அடிப்படையான இலக்கணத்தை, திருமறை வசனம் ஒன்றிலிருந்து பார்ப்போம்.

وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا ۖ وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ

இன்னும் அவர்கள் பொறுமையுடனிருந்து, நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்ட போது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை - இமாம்களை - அவர்களில் நின்றும் உண்டாக்கினோம். (32: 24)

இந்த வசனத்தில் தலைவர்களை அல்லாஹ் எப்படி அழைக்கிறான் தெரிகிறதா?

“நேர்வழி காட்டும் தலைவர்கள்” -  என்றழைப்பதை கவனியுங்கள்!

அதாவது - பொறுப்பு ஒன்றைத் தாமாக முன் வந்து (அமாம) ஏற்றுக் கொண்டு, தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு "நேற்வழி" காட்டி அழைத்துச் செல்பவனே தலைவன் ஆவான் என்ற வரைவிலக்கணத்தை இவ்வசனம் தெளிவாக எடுத்துச் சொல்கிறது!!

அதாவது இமாமத் என்பது மக்களுக்கு நேர்வழி (ஹிதாயத்) காட்டுவதற்காகத் தான்!

Imaamat is for hidaayat!

நேர்வழி என்பது என்ன என்பதையும் இவ்வசனமே நமக்குச் சுட்டிக் காட்டி விடுகிறது!

“நம்முடைய (அதாவது - இறைவனுடைய) கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்கள் - என்று சேர்த்துச் சொல்கிறது இவ்வசனம்!

இன்னொரு வசனத்தையும் பார்ப்போம்.

وَجَعَلْنٰهُمْ اَٮِٕمَّةً يَّهْدُوْنَ بِاَمْرِنَا وَاَوْحَيْنَاۤ اِلَيْهِمْ فِعْلَ الْخَيْرٰتِ وَاِقَامَ الصَّلٰوةِ وَاِيْتَآءَ الزَّكٰوةِ‌ۚ وَكَانُوْا لَـنَا عٰبِدِيْنَ ۙ‌ۚ

இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக - தலைவர்களாக - நாம் அவர்களை ஆக்கினோம்; மேலும், நன்மையுடைய செயல்களை புரியுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ஜகாத்தை கொடுத்து வருமாறும், நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் -

அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர். (21: 73)

இப்போது புரிகிறதா?

மக்களை - இறைவனின் நேர்வழியில் தொடர்ந்து அழைத்துச் செல்வதே - இஸ்லாமியத் தலைமைத்துவத்தின் - அடிப்படையான, முதன்மையான இலக்கணம் என்பதை நாம் முதலில் ஆழமாக மனதில் பதிய வைத்திட வேண்டும்.


***

அறிவுக்குத் தேவை - நேர்வழி!

சென்ற கட்டுரையில், மக்களை - இறைவனின் நேர்வழியில் தொடர்ந்து அழைத்துச் செல்வதே - இஸ்லாமியத் தலைமைத்துவத்தின் - அடிப்படையான, முதன்மையான இலக்கணம் என்பதைப் பார்த்தோம் அல்லவா?

ஆமாம்! தலைமைக்கு அவசியமான தகுதி என்பது, தன்னைப் பின்பற்றும் மக்களுக்கு - ஹிதாயத் எனும் நேர்வழி காட்டும் தகுதி தான்!  தலைமைக்கு நேர்வழி அவசியம் என்பதை ஏன் நாம் இந்த அளவுக்கு வலியுறுத்துகிறோம் தெரியுமா? 

மனிதனின் அறிவை, மனிதனின் கண்களோடு ஒப்பிட்டு பின் வருமாறு விளக்குகிறார் இஸ்லாமிய அறிஞர் முஹம்மத் அல் ஷனாவி அவர்கள்.

ஒருவருக்கு கூர்மையான பார்வை உடைய இரண்டு கண்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். ஆனாலும், அவரால் எதனையும் பார்க்க இயலாமல் போவது எப்போது? வெளிச்சம் என்ற ஒன்று இல்லாத போது! சரிதானா?

அது போலத்தான், மிகக் கூர்மையான அறிவுடையவர் ஒருவரை எடுத்துக் கொள்வோம்.  ஆனாலும், அவரால் அவரது அறிவைக் கொண்டு திறம்பட செயல் பட இயலாமல் போவது எப்போது? இறைவனின் வழிகாட்டுதல் எனும் நேர்வழி (ஹிதாயத்) அவரிடம் இல்லாத போது!

ஆம்! அறிவுக்குத் தேவை - நேர்வழி!

திருக்குர்ஆன் ஒரு பேரொளியாகும்! இதோ, ஒரு திருமறை வசனம்:

يٰۤـاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمْ بُرْهَانٌ مِّنْ رَّبِّكُمْ وَاَنْزَلْنَاۤ اِلَيْكُمْ نُوْرًا مُّبِيْنًا

 மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம். (4: 174)

**
ஹள்ரத் உமர் அவர்களிடம் ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்டாராம்.

"இஸ்லாத்தைத்  தழுவுவதற்கு முன்பும் கூட, நீர் ஒரு மிகச் சிறந்த அறிவாளியாகத் தானே இருந்தீர்! பின்னர் ஏன் நீர் கற்களையும், சிலைகளையும் அப்போது வணங்கிக் கொண்டிருந்தீர்?"

உமர் (ரளி) அவர்கள் பதில் அளித்தார்களாம்:

ஏனெனில், எனது அறிவுக்கு அப்போது வழிகாட்டுதல் என்பது இல்லாதிருந்தது தான்! 

Umar’s reply to the question: "Because my intelligence did not have guidance."

***

பொதுவாக, தலைமைக்கு "அறிவாற்றல்" (அக்ல் - AQL) அவசியம் என்பதை நாம் உணர்ந்தே இருக்கின்றோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் - தலைமை "நேர்வழி" பெற்றிருத்தல் அவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றோம்? 

ஒரு தலைவனின் அறிவாற்றல் என்பது அவர் பயணிக்கும் வாகனம்!
அவர் தாமும் தம்முடன் இருப்பவர்களும் சென்று சேர வேண்டிய இலக்கு - இறைவன்!
அவர்கள் பயணிக்கும் சாலை - சிராத்துல் முஸ்தகீம் எனும் Super Highway!
தலைவரின் கரங்களில் இருப்பது இறைவனின் திருமறை எனும் பேரொளி!
தலைவரும் அவரைப் பின்பற்றுபவர்களும், தம் இலக்கை அடைவது திண்ணம்!

சரிதானா?

ஆனால், இப்போது ஒரு கேள்வி?

தலைமைக்கு "நேர்வழி" கிடைப்பது எப்படி என்பது தான் அந்தக் கேள்வி! 

நியாய உணர்வற்றவர்களுக்கு தலைவராகும் தகுதி கிடையாது!

இறைவனின் வழிகாட்டுதல் எனும் நேர்வழி என்பது யாருக்குக் கிடைக்கும்?

இறையச்சம் உள்ளவர்க்கு நேர்வழி காட்டும் என்கிறது திருமறை!

“இறையச்சம் உடையவர்க்கே இந்தக் குர்ஆன் வழிகாட்டும்.” (2:2)

அதாவது தக்வாவையும், நேர்வழி எனும் ஹிதாயத்தையும் இணைத்துச் சொல்கிறது இவ்வசனம். 

இறையச்சம் இல்லாத ஒரு தலைவர் மக்களை நேர்வழியின் பக்கம் அழைத்துச் செல்ல எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. ஏனெனில், தலைமைக்கு நேர்வழி கிட்டவில்லையென்றால் அவர் மக்களுக்கு எங்கனம் நேர்வழி காட்ட முடியும்?

எனவே தான் பொறுப்பு வழங்கப்பட்ட கலீஃபாக்கள், அதனை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ளாமல், “இந்தப் பொறுப்பு குறித்து இறைவனுக்கு நான் எவ்வாறு பதில் சொல்வேன்?” என்று அஞ்சி கண்ணீர் சிந்திய நிகழ்ச்சிகளை நாம் வரலாற்றில் பார்க்கிறோம்.

இறையச்சம் குறித்து பின்னர் நாம் மேலும் விரிவாக விவாதிக்க இருக்கின்றோம்.

**

ஆனாலும், இன்னொரு மிக முக்கியமான "தகுதி" ஒன்று வேண்டும் தலைமைக்கு. அப்போது தான் அவருக்கே கூட நேர்வழி கிட்டிட முடியும்! அது என்ன?

அது தான் நீதியும் நியாய உணர்வும்! யாரிடத்திலே நீதியும் நியாய உணர்வும் இல்லையோ, அவருக்கு நேர்வழி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று பறை சாற்றுகிறது திருக்குர்ஆன்!

 ان الله لایهدي القوم الظالمین –

நிச்சயமாக அல்லாஹ் அநியாயம் செய்யும் அக்கிரமக்கார மக்களுக்கு  நேர்வழி காட்ட மாட்டான்.(28:50)

நாம் பிறக்கு அநியாயம் செய்து கொண்டிருக்கும் நிலையில், நமக்கு நேர்வழி கிடைக்காது என்பது தான் திருமறை எடுத்துச் சொல்லும் அந்த அதிர்ச்சித் தகவல்!

இப்ராஹிம் (அலை) அவர்கள் தம் சந்ததியினருக்கு தலைமைத்துவத்தை இறைவனிடம்வேண்டிய போது, இறைவன் அவர்களுக்குச் சொன்ன பதிலும் அது தான்! 

وَإِذِ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ ۖ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا ۖ قَالَ وَمِن ذُرِّيَّتِي ۖ قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ

இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். (2: 124)

இறைவன் ஏன் இவ்வாறு பதிலளித்தான் இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு? அதற்கான பதில் - இறைத்தூதர்கள் அனுப்பப்படுவதன் நோக்கத்திலேயே இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 لَـقَدْ اَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنٰتِ وَاَنْزَلْنَا مَعَهُمُ الْكِتٰبَ وَالْمِيْزَانَ لِيَقُوْمَ النَّاسُ بِالْقِسْطِ‌ۚ وَاَنْزَلْنَا الْحَـدِيْدَ فِيْهِ بَاْسٌ شَدِيْدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَـعْلَمَ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ وَ رُسُلَهٗ بِالْغَيْبِ‌ ؕ اِنَّ اللّٰهَ قَوِىٌّ عَزِيْزٌ

 நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் நாம் இறக்கினோம்; அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாக உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன். (57:25) 
***
படிப்பினை: ஒருவரை நீங்கள் உங்களின் தலைவராக ஏற்றுக் கொள்வதற்கான முதல் உரைகல், அவரிடம் நியாய உணர்வு இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துப் பார்த்துக் கொள்வது தான்! நியாய உணர்வற்றவர்களை ஒரு போதும் உங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளாதீர்கள்!

***

3 பொறுப்புணர்ச்சி தான் தலைமைத்துவத்தின் அடையாளம்!

தலைமைத்துவம் (Leadership) என்பதை சுருக்கமாக விளக்கி விட விரும்பினால் அதனை “பொறுப்பு” (Responsibility) என்ற ஒரே சொல்லில் வைத்து விளக்கி விடலாம்!


ஆமாம், தலைமைத்துவத்தையும் பொறுப்பினையும் நாம் பிரிக்கவே முடியாது!


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் தம் குடி மக்கள் குறித்து விசாரிக்கப் படுவார். குடும்பத்தலைவன் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப் படுவான்.

மனைவி தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளி ஆவாள். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவாள். பணியாள் – தன் எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளி ஆவான். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவான். அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்.(நபி மொழி ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

அபூ பக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் கலீஃபாவாக தேர்ந்து எடுக்கப் பட்ட போது, மதீனாவே மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் அந்த மகிழ்ச்சியில் இரு சிறுமிகள் மட்டும் பங்கு பெறவில்லை. காரணம், அபூ பக்ர் அவர்கள், தம் வீட்டின் அருகே வாழ்ந்த அந்த சிறுமிகளுக்கு, அவர்களது ஆடுகளிலிருந்து பால் கறந்து கொடுப்பது வழக்கம். அபூ பக்ர் அவர்கள் கலீஃபாவாக தேர்ந்து எடுக்கப் பட்ட போது, அந்த சிறுமிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது அபூ பக்ர் அவர்கள் வழக்கம் போல தங்களுக்குப் பால் கறந்து தருவார்களா – என்பது தான் அந்த சந்தேகம்.

இந்தத் தகவல் அபூ பக்ர் சித்தீக் அவர்களின் காதுகளில் விழுந்தது. உடனே அவர் அந்த சிறுமிகள் இருக்கும் இடம் தேடிச் சென்று சொன்னார்: இறைவன் அருளால் என் பதவி எனது வழக்கமான வேலைகளை மாற்றி விடாது என்று நம்புகிறேன். நான் நிச்சயமாக உங்களது ஆடுகளில் இருந்து பால் கறந்து கொடுக்கும் பணியை தொடருவேன்! அதன் பின்னர் அந்த வழியாக அவர் செல்லும் போதெல்லாம், “உங்கள் ஆடுகளில் பால் கறக்க வேண்டுமா?” என்று கேட்பது வழக்கம்.

இதனைத் தான் நாம் பொறுப்பு என்கிறோம். இந்தப் பொறுப்புணர்ச்சி தான் தலைமைத்துவத்தின் அடையாளம் என்கிறோம்.

பொறுப்பு என்பதற்கு இன்னொரு பரிமாணம் இருக்கின்றது.

இறை நம்பிக்கை என்பது எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். அதில் சிறப்பானது – “லாஇலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவாகும். அதில் தாழ்ந்தது – பாதையில் இடையூறு தருபவற்றை அகற்றுவது ஆகும். இன்னும் நாணமும் – இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும். (நபி மொழி ஆதார நூல்: புகாரி)

பாதையில் கற்களும் முற்களும் கிடக்கின்றன. பொறுப்பில்லாதவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? பிறரைக் குறை சொல்லத் துவங்கி விடுவார்கள். பின்பு போய் விடுவார்கள் அங்கிருந்து!

ஆனால் பொறுப்புணர்ச்சியுள்ளவன் என்ன செய்கிறான்? அவற்றைப் பார்க்கின்றான். உடனே அப்புறப் படுத்துகின்றான். வேலை முடிந்து விடுகிறது. அவன் யாரையும் குறை சொல்லிக் கொண்டிருப்பதில்லை. உடனே களத்தில் இறங்கி விடுவான். இதற்குப் பெயர் தான் Initiative என்பது.

இப்போது “உங்களில் ஒவ்வொருவரும்” நபி மொழியையும் “இறை நம்பிக்கை” நபி மொழியையும் ஒரு சேர சிந்தித்துப் பாருங்கள்.

இஸ்லாத்தில் இறைநம்பிக்கையும் பொறுப்பும் இணைக்கப் பட்டுள்ளது! (ஏனெனில் இடையூறு தருபவற்றை அகற்றுவது ஈமானின் கிளைகளில் ஒன்று).

அது போல – தலைமைத்துவமும் பொறுப்பும் இணைக்கப் பட்டுள்ளது!

எனவே இஸ்லாத்தில் இறைநம்பிக்கை – தலைமைத்துவம் – பொறுப்பு மூன்றுமே இணைந்து நிற்கிறது!

பொறுப்பு என்பதன் மூன்றாவது பரிமாணம் – ஒரு தலைவன் தான் எடுக்கின்ற முயற்சியில் தோல்வி அடைந்து விட்டால் தோல்விக்குத் தாமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

வெற்றிகரமான ஒரு விளையாட்டுப் பயிற்சியாளர். அவரது வெற்றிக்குக் காரணம் என்ன என்று அவரிடம் கேட்கப் பட்டது. அவர் சொன்னாராம்: எனது விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள் – வென்றார்கள் என்பேன். ஆனால் என்னால் பயிற்சியளிக்கப் பட்டவர்கள் தோல்வி அடைந்தால் அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்வேன்.”

ஆனால் – இன்று தோல்விகளுக்கு, பிரச்னைகளுக்கு, இழப்புகளுக்கு – பொறுப்பேற்பவர்கள் மிகவும் குறைவு.

கண்ணா மூச்சி விளையாட்டில் – கதவு திறந்திருந்த ஒரு லிஃப்ட்டில் ஒளிந்து கொள்ள ஒரு சிறுமி பெட்டியில் காலடி வைக்க – அங்கே அது இல்லாததால் (?) – கீழே விழுந்து ஒரு சிறுமி இறக்கிறாள் – காரணம் – நீண்ட நாட்களாக சரி செய்யப் படாத ஒரு யந்திரக் கோளாறு. யார் பொறுப்பு?

21 வயது நிரம்பிய ஒர் பெண். திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் பெற்றோர்கள். வேலைக்குச் செல்லும் வழியில் ஒரு துப்புரவு லாரி இடித்து இறந்து போகிறாள்! லாரியை ஓட்ட வேண்டிய ஓட்டுனர் – வண்டியைத் தகுதி இல்லாத இன்னொருவரிடம் கொடுத்து ஓட்டச் சொன்னதால் இந்த விபத்தாம். – யார் பொறுப்பு?

பொறுப்பு என்பதன் நான்காவது பரிமாணம் – “நான் யாருக்கு பதில் சொல்லிட வேண்டும்?” என்ற கணக்குப் பிரச்னை. அதாவது Accountability.

இந்தியா உட்பட பல நாடுகளில் – பெண்சிசுப் படுகொலைகள் (female infanticide) கோடிக் கணக்கில் நடக்கின்றனவாம். ஒரு அறிஞர் கேட்டார்: இவர்கள் “நாம் யாருக்கும் பதில் சொல்லிடத் தேவையில்லை என்று நினைத்தனால் தானே இத்தனை கொடூரமான படுகொலைகள்?

இந்த நிலை ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு இல்லையே?

“நீங்கள் வறுமைக்கு பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்!” (அல் குர் ஆன் 17: 31)

எந்த ஒரு செயல் குறித்தும் – அது குறித்து – இறைவனுக்கு முன்னால் நாம் விசாரிக்கப் படுவோம் என்று அஞ்சுகின்ற ஒரு இறை நம்பிக்கையாளனே பொறுப்பான தலைவனாக விளங்கிட முடியும்.

போரில் தன் ஒரே மகனையும் இழந்து விட்டு, மதினாவுக்கு அருகில் ஒரு குடிலில் ஒரு மூதாட்டி வசித்து வருகிறார் என்பது கலீஃபா அபூ பக்ர் சித்தீக் அவர்களின் கவனத்துக்கு வருகிறது. அவருக்கு இனி மேல், இறைவனுக்கு அடுத்தபடியாக தாமே ஆதரவாக இருக்க மனதில் உறுதி கொள்கிறார்கள். இதன் படி தினமும், அதிகாலையில் அந்த மூதாட்டி வீட்டுக்கு சென்று அதனை சுத்தம் செய்வதோடு, அவருக்கு வேண்டிய உணவுப் பொருட்களையும் வழங்கி விட்டு வருவது அவர்களின் அன்றாட அலுவல் ஆகி விட்டது.

இந்நிலையில் அந்த மூதாட்டி பற்றிய செய்தி, உமர் (ரலி) அவர்களுக்கும் எட்டுகிறது. ஒரு நாள் விடியற்காலையில் அங்கு சென்று அவர்கள் பார்த்த போது அந்த மூதாட்டிக்குரிய தேவைகள் முன்னரேயே நிறைவேற்ற்ப் பட்டிருப்பது தெரிய வருகிறது.

யார் அது? – என்ற கேள்வி – உமர் (ரலி) அவர்களுக்கு. மறு நாள் சற்று முன்னரே அங்கு வந்து சேர்ந்த உமர் அவர்கள் அந்தக் குடிலின் பின்புறம் மறைந்து கவனித்த போது – அது அபூ பக்ர் அவர்கள் தாம் என்பதை அறிந்து வியக்கின்றார்கள்!

இருவருக்கும் – என்ன ஒரு பொறுப்புணர்ச்சி பார்த்தீர்களா? இங்கே நுணுக்கமாக ஒரு விஷயத்தைக் கவனித்திட வேண்டும். அபூ பக்ர் சித்தீக் அவர்கள் தாம் கலீஃபாவாக ஆவதற்கு முன்பேயே – ஏழைச் சிறுமிகளின் ஆடுகளுக்குப் பால் கறந்து கொடுத்தவர். இரண்டாவது கலீஃபாவாக வருவதற்கு முன்னரேயே உமர் அவர்கள் அதிகாலையில் மூதாட்டி ஒருவருக்கு உதவி செய்திட ஓடுகிறார்.

இது எதனை உணர்த்துகிறது?

சிலர் சொல்வார்கள். எனக்குப் பதவி கொடுக்கப் பட்டால் – இதனைச் செய்வேன் அதனைச் செய்வேன் என்று. ஆனால் பதவிக்கு வந்ததும் எல்லாம் காற்றில் பறந்து போய்விடும்.

பதவிக்கு வந்தால் பொறுப்பேற்பேன் என்பது வெறும் வாய்ச்சொல். பொறுப்பேற்றால் பதவி தானாக வரும் என்பது தான் இஸ்லாமிய நியதி.

சரி, அப்படிப் பட்ட பொறுப்புள்ள தலைவர்கள் நமக்குக் கிடைப்பார்களா?

கண்ட கண்ட இடத்தில் குப்பைகளைப் போட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தையே குறை கூறும் பொது மக்கள், மாணவர்களைக் குறித்த அக்கரையற்ற ஆசிரியர்கள், சுற்றுப் புறச் சூழல் குறித்த அக்கரையற்ற உற்பத்தியாளர்கள், உணவில் கலப்படம் செய்து விற்கும் கல் நெஞ்ச வியாபாரிகள், லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டத்தை மீறிச் செயல் பட அனுமதிகின்ற அதிகாரிகள், நோயாளிகளை ஏமாற்றுகின்ற மருத்துவர்கள், அரை குறை கட்டிடங்கள் கட்டித் தருகின்ற பொறிஞர்கள்….

- இப்படி சமுகத்தின் எல்லா அங்கங்களும் பொறுப்பற்ற மனிதர்களால் நிரம்பி வழிந்தால் – பொறுப்புள்ள தலைவர்கள் நமக்கு எங்கே கிடைப்பார்கள்?

நீதிபதி ஒருவர் சொன்னாராம். “நீதிபதிகள் நேர்மையாக நடந்திட வேண்டும் என்று பெரிதும் எதிர் பார்க்கப் படுகிறது. ஆனால் நாடே “பாலைவனமாக” காட்சியளிக்கும் போது நீதித்துறை மட்டும் எப்படி “சோலைவனமாக” விளங்கும்?

பாலைவனத்தைச் சோலை வனமாக்கிட முடியுமா?

முடியும்! ஆனால் அது நமது கைகளில் தான் உள்ளது!

ஏன் தெரியுமா?

“எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ், அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை!” (அல்-குர் ஆன் 13: 11)

எல்லாரும் மாறினால் தான் நானும் மாறுவேன் என்பவன் பொறுப்பற்றவன்.

ஆனால் இவரைப் பாருங்கள்.

1997 – ல் அமெரிக்கா, ஈராக்கின் மீது பல பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வந்த போது அதற்கு அமைதியாகத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பிய ஒரு அமெரிக்கக் குடி மகன் – வெள்ளை மாளிகை முன்பு எரியும் மெழுகு வர்த்தி ஒன்றுடன் தினமும் நின்று கொண்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்தாராம். ஒரு நாள், மழையையும் பொருட்படுத்தாமல் மெழுகு வர்த்திக்கு ஒரு குடையையும் பிடித்துக் கொண்டு நின்றாராம் அவர். இதைப் பார்த்து வியந்த வெள்ளை மாளிகை சேவகர் ஒருவர் அவரிடம் கேட்டாராம்:

நீங்கள் ஒருவர் இப்படி நின்று கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்தால் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வார்கள் என்று எண்ணுகிறீர்களா?

அதற்கு அவர் தெரிவித்த பதில்:

“நான் அவர்களை மாற்றி விடலாம் என்பதற்காக இங்கு நிற்கவில்லை. மாறாக என்னை அவர்கள் மாற்றி விட முடியாது என்பதை உணர்த்துவதற்காகத் தான் – இங்கு நான் நிற்கிறேன்!”

***

தலைமைக்குத் தேவை – தொலை நோக்குப் பார்வை!

Vision என்பது ஒரு அருமையான ஆங்கிலச் சொல். இதனை தொலை நோக்குப் பார்வை என்று தமிழில் நாம் மொழிபெயர்க்கலாம். இந்தச் சொல் குறித்து ஆங்கில அகராதி கூறுவதென்ன? : “The ability to think about or plan the future with great imagination and intelligence” (SYN: foresight)

தொலை நோக்குப் பார்வை என்பது அபரிமிதமான கற்பனைத் திறனுடனும், அறிவாற்றலுடனும் – எதிர்காலம் குறித்து சிந்திக்கவும் திட்டமிடவும் வல்ல திறமைக்குப் பெயராகும். இதனை அகப் பார்வை
என்றும் அழைக்கலாம்.

இந்தத் தொலை நோக்குப் பார்வை – சமுகத் தலைவர்கள், நிர்வாகத் தலைவர்கள், மேலாளர்கள், குடும்பத் தலைவர்கள் – இப்படி எல்லா மட்டங்களிலுமுள்ள தலைவர்களுக்கும் மிக அவசியம் ஆகும்.

இறைத் தூதர்கள் இப்படிப்பட்ட அகப் பார்வை உடையவர்களாகத் திகழ்ந்தார்கள் என்று அல்லாஹுதஆலா தனது திருமறையிலே குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.

உள் ஆற்றலும் (inner strength), அகப் பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூறுவீராக! (38: 45). அரபியிலே அல்லாஹ் அவர்களை “உலில் அய்தீ வல் அப்ஸார்” என்று குறிப்பிடுகின்றான்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகச் சிறந்த தொலை நோக்குப் பார்வை உடையவர்களாய் விளங்கினார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள். ஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள். அக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள். கொள்கைக்காக நாடு துறந்தவர்கள். படைத்த இறைவனுக்காக தனது மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்திட்டவர்கள். இறுதி மூச்சுள்ள வரை வயதான காலத்திலும் நாடு விட்டு நாடு சென்று இறை மார்க்கத்தை நிலைநாட்டிட அயராது பாடுபட்டவர்கள். உண்மையை, சத்தியத்தைக் கண்டு பிடித்திடுவதில் (intellectual curiosity) ஊக்கம் மிக்கவர்கள். அறிவுக் கூர்மை, புத்திசாலித்தனம், விவேகம் (wisdom) – இவற்றுக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர்கள்.

இப்ராஹீம் நபிக்கு இரண்டு புதல்வர்கள். ஒருவர் – இஸ்மாயில் (அலை); மற்றவர் – இஸ்ஹாக் (அலை). இப்ராஹீம் நபியின் இரு புதல்வர்களுமே இறைத்தூதர்கள் தாம். இப்ராஹீம் நபியின் அயராத உழைப்புக்குப் பின்னரும் – குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்குக் கூட மக்கள் இஸ்லாத்தை ஏற்றிடவில்லை. அவர்கள் நாடு நகரம் எல்லாம் சுற்றி அலைந்தார்கள். பிறந்த நாடான ஈராக்கை விட்டு வெளியேறிய அவர்கள் எகிப்துக்குச் சென்றிருக்கிறார்கள். சிரியாவுக்கும், சிரியாவின் வடக்கே அமைந்துள்ள ஹர்ரான் (Harran) வரைக்கும் கூடச் சென்று திரும்பி இருக்கிறார்கள். ஃபலஸ்தீனில் சில காலம் தங்கி இருக்கிறார்கள். பின்பு அரேபியாவின் ஹிஜாஸ் பகுதியில் உள்ள மக்காவுக்கும் வந்து சென்றிருக்கிறார்கள். 4000 – ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த இப்ராஹீம் (அலை) அவர்கள் – எப்படிப்பட்ட “வாகன வசதியைப்” பெற்றிருந்திருப்பார்கள் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினம் அல்லவே?

இப்ராஹீம் (அலை) அவர்கள் 175 வயது வரை வாழ்ந்தார்கள் என்று ஒரு வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது. இப்ராஹீம் (அலை) அவர்கள் இளமையாக இருந்த கால கட்டத்தில் அவர்களை அல்லாஹ் “மனித குலத் தலைவர் நீங்கள்!” என்று அறிவித்திடவில்லை. மூன்று பெரும் சோதனைகளின் முடிவுக்குப் பின்னரே அந்த “இமாம்” எனும் பட்டம் அவர்களுக்கு வழங்கப் பட்டது. அந்த மூன்று பெரும் சோதனைகள் என்னென்ன? ஒன்று – நெருப்புக் குண்டம். இரண்டு – மனைவி ஹாஜரா அவர்களையும் மகன் இஸ்மாயில் அவர்களையும் பாலைவன மக்காவில் தன்னந் தனியாக விட்டு விட்டுத் திரும்புதல். மூன்று – பெற்ற மகன் இஸ்மாயிலை அறுத்துப் பலியிட வேண்டும் என்ற இறைக் கட்டளை. இந்த மூன்றாவது சோதனையான – இஸ்மாயிலைப் பலியிடும் கட்டளை இறைவனிடம் இருந்து இடப்பட்ட சமயம் நிச்சயமாக இப்ராஹீம் நபியின் “முதுமையான” கால கட்டத்தில் தான்.

வயதோ – முதுமையை எட்டி விட்டது. மக்களோ இறை மார்க்கத்தை ஏற்றிடத் தயாராக இல்லை. என்ன செய்வது? எதிர்காலம் என்னவாகும்? தமக்குப் பின்னர் தமது வழித்தோன்றல்கள் – அடுத்த தலைமுறையினர் – என்ன செய்திட வேண்டும்? எங்கிருந்து அவர்கள் பணியாற்றிட் வேண்டும்? திட்டமிடுகிறார்கள். தொலை நோக்கோடு ஒரு நீண்ட காலத் திட்டம் ஒன்றை வகுக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ, அல்லாஹ் “நீங்கள் தான் மக்களின் தலைவர்” என்று அறிவித்திட்ட போது – என்னுடைய சந்ததிகளையும் (இந்த வாக்குறுதி) சாருமா? என்று உடனேயே இறைவ்னிடத்தில் கேட்டு விட்டார்கள்! அந்த நீண்ட காலத்திட்டம் தான் என்ன?

மக்காவிலே இறையில்லம் ஒன்றினை தமது மகன் இஸ்மாயிலின் துணையுடன் நிறுவி அங்கே இருந்து கொண்டு பணீயாற்றிட தனது மகனைப் பணிக்கின்றார்கள். தனது இன்னொரு மகனான இஸ்ஹாக் அவர்களை ஃபலஸ்தீனில் த்ங்கிடச் செய்கின்றார்கள். தமது அண்ணன் மகன் லூத் (அலை) அவர்களை டிரான்ஸ் ஜோர்டான் எனும் பகுதிக்கு அனுப்பி அங்கிருந்து கொண்டு பணீயாற்றிடப் பணிக்கின்றார்கள். இப்ராஹீம் நபியவர்களோ மகன் இஸ்ஹாக்குடனேயே தங்கி இறுதியில் அங்கேயே ஹிப்ரான் எனும் இடத்தில் வாழ்ந்து மறைகின்றார்கள்.

இந்த அருமையான திட்டத்தைத் தான் நாம் “தொலை நோக்குப் பார்வை” என்கிறோம்! அவர்களின் இந்தத் தொலை நோக்குப் பார்வைக்கு திருமறை குர் ஆன் வசனம் ஒன்றே சான்றாகக் காட்டிடப் போதுமானது.

“எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப் படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக – நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (குர்ஆன் 2: 129)

இப்ராஹீம் (அலை) அவர்களின் இந்த துஆ எப்போது நிறைவேறியது தெரியுமா? சுமார் 2800 ஆண்டுகளுக்குப் பிறகு தான்! ஆனால் அவர்களுடைய தொலை நோக்குப் பார்வையின் விளைவுகளைப் பட்டியல் போட்டுப் பாருங்கள். பனீ அஸ்ராயில் சமுகம், அவர்களுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள், பைத்துல் முகத்திஸ் எனும் நமது முதல் கிப்லா, கஃபதுல்லாஹ்வாகிய நமது கிப்லா, குர் ஆனை உள்ளடக்கிய நான்கு இறை வேதங்கள், இறுதித் தூதர் முஹம்மது (ஸல்), உம்மத் முஹம்மதிய்யா என்று அழைக்கப் படும் நமது சமுகம் (நமக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டவர்களே நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம்!), ஹஜ்ஜின் அடையாளச் சின்னங்கள்…. என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

அடுத்து முஹம்மது நபியவர்களின் தொலை நோக்குப் பார்வை குறித்து சுருக்கமாக மட்டும் இப்போது பார்ப்போம்.

அண்ணல் நபியவர்கள் மக்காவில் அழைப்புப் பணியைத் துவக்கி ஒரு சில ஆண்டுகளே ஆகியிருக்கும். அப்போது ஒரு சிலரே இஸ்லாத்தின் அணியில் சேர்ந்திருந்தனர். மக்கத்துக் குறைஷிகள் அந்த துவக்க கால முஸ்லிம்களை சொல்லொனாத அளவுக்குக் கொடுமைக்குட்படுத்திய கால கட்டம் அது. அப்படிக் கொடுமைக்குள்ளானவர்களுள் கப்பாப் பின் அல் அரத் (ரலி) அவர்களும் ஒருவர். ஒரு தடவை அவர் நபியவர்களைக் கஃபாவின் நிழலுக்கருகே காண்கிறார்கள். எங்களுக்காக உதவி செய்திட அல்லாஹ்வைத் தாங்கள் கேட்கக் கூடாதா? என்று அவர்கள் கேட்கிறார்கள்.

நபியவர்களின் முகம் சிவந்து விடுகிறது. அப்போது அவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா?

உங்களுக்கு முன்னால் வாழ்ந்த நம்பிக்கையாளர்களும் இதை விட அதிகமான கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டவர்களே! குழி ஒன்றைத் தயார் செய்து அதில் அவர்களை அமர வைத்து இரம்பத்தால் – தலைமுதல் கால் வரை – இரு கூறாகப் பிளக்கப் பட்டார்கள். இரும்பு சீப்பினால் அவர்களின் எலும்புகளிலிருந்து சதைகள் கிழித்தெரியப் பட்டன. ஆனால் இவை யாவும் அவர்களின் நம்பிக்கையைக் குலைத்து விடவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த அழைப்புப் பணி முழுமை அடைய அதிக காலம் ஆகாது. அப்போது ஒரு பயணி யமனின் தலைநகரமான சன்ஆவிலிருந்து புறப்பட்டு ஹள்ரமவுத் வரை சென்று சேர்வார் – அவர் அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாதவராக!

அதைப் போலவே – அவர்கள் மதினாவில் ஆட்சியாளராக வாழ்ந்த கால கட்டத்திலும் – அவ்ர்களது தொலைநோக்கு சிந்தனை எப்படி இருந்தது தெரியுமா? அது அகழ்ப் போருக்கு நபியவர்களும் நபித்தோழர்களும் அகழ் ஒன்றைத் தோண்டி ஒண்டிருந்த சமயம்.

இதோ ஒரு நபித்தோழரே சொல்வதைக் கேட்போம்.

அகழ் தோண்டும் போது எந்த கடப்பாறையாலும் உடைக்க முடியாத ஒரு பாறை குறுக்கிட்டது. அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம். நபியவர்கள் கடப்பாறையால் “பிஸ்மில்லாஹ்” என்று கூறி ஓர் அடி அடித்து விட்டு “அல்லாஹ் மிகப் பெரியவன், ஷாம் தேசப் பொக்கிஷங்கள் எனக்கு வழங்கப் பட்டன. நான் இப்போது அங்குள்ள செந்நிறக் கோட்டைகளைப் பார்க்கிறேன்” என்றார்கள்.

பின்பு இரண்டாம் முறையாக அப்பாறையை அடித்தார்கள். “அல்லாஹ் மிகப் பெரியவன், பாரசீகத்தின் பொக்கிஷங்கள் எனக்கு கொடுக்கப் பட்டன. அல்லாஹ்வின் மீது ஆணையாக, அங்குள்ள மதாயின் நகரத்தின் வெள்ளை மாளிகையை இப்போது பார்க்கிறேன்” என்றார்கள்.

பின்பு மூன்றாம் முறையாக “பிஸ்மில்லாஹ்” என்று கூறி அடித்தார்கள். மீதமுண்டான கல்லும் உடைக்கப் பட்டது. அப்போது நபியவர்கள் “அல்லாஹ் மிகப் பெரியவன், எஅனக்கு யமன் தேசத்து பொக்கிஷங்கள் கொடுக்கப் பட்டன. அல்லஹ்வின் மீது சத்தியமாக, எனது இந்த இடத்திலிருந்து ஸன்ஆ நகரத்தின் தலைவாயில்களைப் பார்க்கிறேன்” என்றார்கள்.

சரி, நபித்தோழர்களில் தொலைநோக்குப் பார்வை உடையவர்களைப் பார்ப்போம்.

அபூ பக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் கலீஃபாவாக பொறுப்பேற்றுக் கொண்டதும் – மூன்று முக்கியமான முனைகளிலிருந்து – சோதனை! போலி நபிமார்கள் பிரச்னை ஒரு பக்கம். தொழுவோம் ஆனால் ஜகாத் தரமாட்டோம் என்று ஒரு பிரிவினர் அடம் பிடித்தனர். இன்னும் சில கூட்டத்தார்கள் மதினாவைத் தாக்கிடத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில் – அண்ணல் நபியவர்களின் மரணத்துக்கு முன்னர் தயார் நிலையில் ரோம தேசம் நோக்கிப் புறப்பட இருந்த பனிரெண்டாயிரம் வீரர்களை – அந்த முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அவர்களை ரோம தேசம் நோக்கி அனுப்பி விட்டார்கள் – பதவியேற்ற உடனேயே! ஒரு பக்கம் உமர் (ரலி) அவர்கள் கூட சற்று நிதானித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆலோசனை சொல்ல – கலீஃபாவாக அபூ பக்ர் அவர்கள் உறுதியுடன் செயல் பட்டது, பிரச்னைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது – இவைகளை ஆய்வு செய்திடும் போது அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

சரி, உமர் (ரலி) அவர்களை எடுத்துக் கொள்வோம். குர் ஆனை மனனம் செய்த ஹாஃபிள்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிய போது – குர் ஆனை நூல் வடிவில் ஒன்று திரட்ட வேண்டும் என்ற ஆலோசனை வழங்கியது – அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்குச் சான்று அல்லவா? .

அடுத்து, இஸ்லாமிய வரலாற்றை நாம் புரட்டிப் பார்த்தால் – நமது வரலாறு நெடுகிலும் – காலித் பின் வலித்,சுல்தான் சலாஹுத்தீன் ஐயூபி – போன்ற தூர நோக்குச் சிந்தனை உடைய தலைவர்களை நாம் காண முடிகிறது.

ஆனால் – இன்று அப்படிப் பட்ட தலைவர்கள் எங்கே என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி!

அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் திருப்பெயர்களீல் ஒன்று: அல் – பஸீர் ஆகும். இதற்கு “மிக நன்றாகப் பார்க்கக் கூடியவன்” என்று பொருள் தரலாம். திருமறை குர்ஆனிலே அல்லாஹ்வைக் குறித்திட இச்சொல் பல தடவைகள் பயன் படுத்தப் பட்டுள்ளன. இச்சொல்லுக்கு “தொலை நோக்குப் பார்வை உடையவன்” என்றும் பொருள் தரலாம். அதாவது அல்லாஹ் தொலை நோக்குப் பார்வை உடையவனாக விளங்குகிறான் என்றும் இச்சொல்லுக்கு நாம் விளக்கம் அளிக்கலாம்.

திருக்குர்ஆனிலே அல்லாஹ் – தான் தொலை நோக்குப் பார்வை உடையவன் என்பதை பல சான்றுகளுடன் விளக்கியிருக்கின்றான்.

“பார்வைகள் அவனை அடைய முடியா. ஆனால் அவனோ எல்லாப் பார்வைகளையும் சூழ்ந்து அடைகின்றான். (6: 103)

கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்பதெல்லாம் நமக்குத் தான். ஆனால் இறைவனின் பார்வையைப் பொறுத்தவரை எல்லாம் அவன் முன்பு – தெள்ளத்தெளிவாக!

இறைவனின் திட்டத்தை முழுமையாக அறிந்தவர் யாருமில்லை என்றாலும், இறைவனுக்கு மகத்தானதொரு பார்வையும், திட்டமும் இருக்கின்றது என்பது திருமறையை முழுவதும் ஆய்வு செய்தால் புரியும்.

அல்லாஹ்வின் குணங்களாக உங்கள் குணங்களை ஆக்கிக் கொள்ளுங்கள் (தஃகல்லகூ பி அஃக்லாகில்லாஹ்..) என்பது நபிமொழி. அப்படியென்றால் என்ன? சான்றாக – அல்லாஹ் கருணையாளனாக இருக்கிறான் என்றால் நாமும் கருணை உள்ளம் கொண்டவர்களாக விளங்கிட வேண்டும். அல்லாஹ் மன்னிப்பவனாக இருக்கிறான் என்றால், நாமும் மன்னிக்கும் தன்மை உடையவர்களாக விளங்கிட வேண்டும் என்பது தான்.

அது போலவே அல்லாஹ் – தொலை நோக்குப் பார்வை உடையவனாக இருக்கிறான் என்றால், நாமும் நமது வரையரைக்கு உட்பட்டு – தொலை நோக்குப் பார்வை உடையவர்களாக விளங்கிட வேண்டும் என்பது தான் இறைவனின் எதிர்பார்ப்பு!

தொலை நோக்குப் பார்வை என்பது தனி மனிதர்களுக்கும் தலைவர்களுக்கும் மட்டும் அன்று. அது எல்லாவிதமான நிறுவங்களுக்கும், ஏன் – அரசாங்கங்களுக்கும் கூட அவசியம்.

ஒருவருக்கு தொலை நோக்குப் பார்வை இல்லாவிட்டால் என்னவாகும்?

1. தொலை நோக்குச் சிந்தனை இல்லாதவன் – பயனற்ற காரியங்களில் மூழ்கியிருப்பான்.

2. எதை முந்திச் செய்ய வேண்டுமோ அதை பிந்திச் செய்து கொண்டிருப்பான். பின்னால் செய்ய வேண்டியதை முந்திச் செய்து கொண்டிருப்பான்.

3. ஏராளமான பொருள் மற்றும் பொன்னான நேரங்களை – வீணடித்துக் கொண்டிருப்பான். .

4. செய்த தவறுகளிலிருந்து பாடம் படித்துக் கொள்வதற்கு பதிலாக, மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்து கொண்டிருப்பான்.

5. புதிய சவால்களை எதிர்கொள்ளும் திராணி இருக்காது. செக்கு மாட்டு வாழ்க்கை தான் வாழ நேரிடும்.

மாறாக தொலை நோக்குப் பார்வை உடையவர்கள்

1. சோம்பேறிகளாக இருக்க மாட்டார்கள்.

2. பொறுப்பற்றவர்களாக இருக்க மாட்டார்கள்.

3. நீண்ட காலத் திட்டம் வகுத்து செயல் படுவார்கள்.

4. கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் படித்துக் கொள்வார்கள்.

5. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உடையவர்களாக விளங்குவார்கள்.

6. மற்றவ்ர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதில் ஆர்வம் மிக்கவ்ர்களாய் இருப்பார்கள்.

7. பெரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டுவார்கள்.

இவை நிறுவனங்களுக்கும் பொருந்தும்!

இப்போது உங்களிடம் ஒரு கேள்வி?

உங்களுடைய வயது இப்போது என்ன? முப்பதுக்குள் இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். உங்களின் அறுபதாவது வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள், எவைகளை சாதித்து முடித்திருப்பீர்கள்?

கற்பனை செய்யுங்கள்! கனவு காணுங்கள்! கற்பனைக்கு அளவே இல்லை! எனவே உங்கள் கனவை சுருக்கி விடாதீர்கள்! சரி தானே!

இஸ்லாமியத் தலைமைக்குரிய இலக்கணங்கள்!

இன்று ‘மஹல்லா’, ‘முத்தவல்லி’ அமைப்பில் இருந்து துவங்கி உலக் அரங்கில் பல்வேறு முஸ்லிம் நாடுகளின் ஆட்சித்தலைமை வரை எல்லா மட்டங்களிலும் முஸ்லிம்களுக்குத் தலைவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

ஆனால் ஊர் மட்டத்திலும் சரி, உலக அரங்கிலும் சரி, முஸ்லிம்களின் தலைமை பொறுப்புக்கு ஒருவர் வருகின்ற போது, அவருக்கு இஸ்லாமியத் தலைமைக்குரிய இலக்கணங்கள் இருக்கின்றனவா என்று பார்க்க நாம் கடமைப் பட்டிருக்கின்றோம்.


பொதுவாக திருமறை குர்ஆனில் எங்கெல்லாம் தலைமை – இமாமத் – பற்றி சொல்லப் படுகின்றதோ அங்கெல்லாம் ‘வழிகாட்டுதல்’ – ஹிதாயத் – பற்றிச் சொல்லப் படாமல் இருப்பதில்லை.

“இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக – தலைவர்களாக – நாம் அவர்களை ஆக்கினோம்; மேலும், நன்மையுடைய செயல்களை புரியுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ஜகாத்தை கொடுத்து வருமாறும், நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் – அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர்.” (21:73)

“இன்னும் அவர்கள் பொறுமையுடனிருந்து, நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்ட போது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை – இமாம்களை – அவர்களில் நின்றும் உண்டாக்கினோம்.” (32: 24)

மேற்கண்ட வசனங்கள், இஸ்லாமியத் தலைமைக்குரிய அடிப்படை இலக்கணமே மக்களுக்கு நேர்வழி காட்டுதல் தான் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேலும் அது ஏதோ ஒரு வழிகாட்டுதல் அல்ல.

‘நம்முடைய கட்டளையைக் கொண்டு’ அதாவது அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு வழிகாட்டுவது தான் தலைமைக்குரிய அடிப்படைப் பண்பாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது, முஸ்லிம்களின் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கின்ற ஒவ்வொரு முஸ்லிம் தலைமையும் தாம் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவுக்கும் அல்லாஹ்வுடைய கட்டளைகளை – வழிகாட்டுதலை – ஆதாரமாகக் காட்டக் கூடியவர்களாக விளங்கிட வேண்டும்.

இஸ்லாமியத் தலைமைக்குரிய அடுத்த இலக்கணம் தக்வா எனும் இறையச்சம். இது தலைமைக்கு மிக மிக அவசியம்.

ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களைக் கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப் படும்.” (புகாரி, முஸ்லிம்)

தமது பொறுப்பு குறித்து இறைவன் நம்மை விசாரணை செய்திடுவான் என்ற அச்சம் ஒவ்வொரு தலைவரிடத்தும் காணப் பட வேண்டிய அரும்பண்பாகும்.

இறையச்சம் இல்லாத ஒரு தலைவர் மக்களை நேர்வழியின் பக்கம் அழைத்துச் செல்ல எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. ஏனெனில்,

“இறையச்சம் உடையவர்க்கே இந்தக் குர் ஆன் வழிகாட்டும்.” (2:2)

தலைமைக்கு நேர்வழி கிட்டவில்லையென்றால் அவர் மக்களுக்கு எங்கனம் நேர்வழி காட்ட முடியும்?

எனவே தான் பொறுப்பு வழங்கப்பட்ட கலீஃபாக்கள், அதனை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ளாமல், “இந்தப் பொறுப்பு குறித்து இறைவனுக்கு நான் எவ்வாறு பதில் சொல்வேன்?” என்று அஞ்சி கண்ணீர் சிந்திய நிகழ்ச்சிகளை நாம் வரலாற்றில் பார்க்கிறோம்.

இஸ்லாமியத் தலைமைக்குரிய அடுத்த பண்பு ‘இல்ம்’ எனப்படும் இஸ்லாமிய அறிவு. எந்த ஒரு விஷயத்தில் ஒருவனுக்கு அறிவு இல்லையோ, அந்த விஷயம் குறித்து அவன் மற்றவர்களுக்கு வழி காட்டிட இயலாது.

எனவே இறைவனின் வழிகாட்டுதலின் பக்கம் அழைத்துச் செல்கின்ற இஸ்லாமியத் தலைமை, இறைவனின் வழிகாட்டுதல் குறித்த முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

(ஏன் சார், இதுவெல்லாம் நடக்கின்ற காரியமா என்று கேட்கிறீர்களா? நான் எழுதுவது நமது தலைமுறைக்கு அல்ல – இது அடுத்த அல்லது அதற்கு அடுத்த தலைமுறைக்கு!!)

எப்போது இஸ்லாமியத் தலைமை மார்க்கத்தைக் கற்றுணர்ந்த அறிஞர்களிடமிருந்து பறிக்கப்பட்டு மார்க்க அறிவைப் பெற்றிராத முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப் பட்டதோ அன்றில் இருந்து தான் முஸ்லிம்களின் பிரச்னைகள் சிக்கலாக்கப் பட்டன என்பதை யாரும் மறுக்க இயலாது.

சுருங்கச் சொன்னால் இறையச்சம் மிக்க தலை சிறந்த மார்க்க அறிஞர்களே இஸ்லாமியத் தலைமைக்குத் தகுதி படைத்தவர்கள்! அவர்கள் மட்டும் தான் இறைவனின் கட்டளைகளின் படி மக்களை வழி நடத்திச் சென்றிட முடியும்!

மேற்சொன்ன மூன்று விஷயங்களும் தான் தலைமைக்குரிய அடிப்படைப் பண்புகள் ஆகும். இதற்கு மேல் பல துணைப் பண்புகளையும் இஸ்லாம் தலைமையிடம் எதிர்பார்க்கிறது.

அவைகளில் ஒன்று – உறுதி கொண்ட நெஞ்சம்!

அபூதர் (ரலி) அவர்களிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அபூதரே! நான் உம்மைப் பலவீனம் உடையவராகக் காண்கிறேன், எனவே தலைமையை விரும்பாதீர். உமது பொறுப்பில் வருபவர் இரண்டு பேராக இருந்தாலும் சரியே!”

இதோ நாயகத்தோழர் அபூதர் (ரலி) அவர்களே அறிவிக்கும் நபிமொழி:  ”நாயகமே! தாங்கள் என்னை எதற்கும் நியமிப்பதில்லையே’ என்று நான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவினேன்.

அப்பொழுது அவர்கள் என் தோளில் தங்களின் கையால் ஒரு தட்டுத் தட்டிய பின், ‘அபூ தர்ரே! நிச்சயமாக, நீர் ஒரு பலஹீனமானவர். இஃது ஒரு நம்பிக்கையான வேலையாகும். அன்றி, மறுமை நாளில் இதனால் இழிவையும் துன்பத்தையும் அடைய நேரும். ஆனால் அதன் கடமையைச் சரிவர நிறைவேற்றியும் அதுபற்றிய எல்லாப் பொறுப்புக்களையும் செய்தும் இருப்பவரைத் தவிர்த்து’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.”

(அறிவிப்பவர்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத்)

இதிலிருந்து தெரிவது இஸ்லாமியத் தலைமைக்குப் பலவீனம் கூடவே கூடாது என்பது தான். எனவே பலம் தேவை. எப்படிப்பட்ட பலம் அது?

அபூ பக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் பதவி ஏற்றதும், ஒரு பிரிவினர் “தொழுவோம், ஆனால் ஜகாத் தர மாட்டோம்” என்று சொன்ன போது அவர்கள் சொன்னார்கள்: “ஒரு ஒட்டகத்தின் மூக்கணாங்கயிறு அளவாக அது இருப்பினும் அதனை அவர்களிடமிருந்து பெறும் வரையில் போர் தொடுப்பேன்.” இது தான் உறுதி! இது தான் பலம்!

ஒரு விஷயத்தில் இது தான் இறைவனின் தீர்ப்பு என்று தெரிந்து விடும் பட்சத்தில் அதனைச் செயல் படுத்திடுவதற்குக் கொஞ்சம் கூடத் தயக்கம் காட்டிடக் கூடாது.

அடுத்து – இஸ்லாமியத் தலைவர் “பதவிப்பித்து” பிடித்தவராக இருந்திடக் கூடாது.

ஒரு தடவை இரு நபித்தோழர்கள் ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் வந்து, “யா ரசூலுல்லாஹ்! அல்லாஹ் தங்களுக்கு அளித்துள்ள அதிகாரத்தில் ஏதாவது ஒன்றுக்கு என்னைத் தலைவராக்குங்களேன்” என்றார். அடுத்த நபித்தோழரும் அது போன்றே கேட்டுக் கொண்டார்.

அண்ணலார் மறுமொழி பகர்ந்தார்கள்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! யார் பதவியைக் கேட்கிறார்களோ, யார் அவற்றுக்காக ஆசைப் படுகின்றார்களோ அவர்களில் யாரையும் நான் அப்பதவிக்கு நியமிக்கவே மாட்டேன்.”

அடுத்து இஸ்லாமியத் தலைமை தனது அதிகாரத்தைக் குடும்பச் சொத்தாகக் கருதி விடக் கூடாது.

ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பானவர், ஒருவரை தன் உறவினர் அல்லது நண்பர் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே முஸ்லிம்கள் மீது அதிகாரியாக நியமித்து விடுவார் எனில், அவர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும்.” அறிவிப்பாளர்: யஸீத் பின் அபூ ஸுப்யான் (ரலி)

அடுத்து – இஸ்லாமியத் தலைவர் எளிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்பவராக அமைந்திட வேண்டும். ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டு நீதிபதி அல்லது ஆளுநராக நியமித்து அனுப்பிய போது “முஆதே! உல்லாசம் அனுபவிப்பதில் இருந்து உம்மை நீர் காத்துக் கொள்ளும். ஏனெனில் அல்லாஹ்வின் நல்லடியார்கள் உல்லாசம் அனுபவிப்பதில்லை.” (மிஷ்காத்)

மேலும் இஸ்லாமியத் தலைமை என்பது எளிதில் அணுகக் கூடியதாக அமைந்திட வேண்டும். தலைவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு தங்களை உயர்த்திக் காட்டிக் கொள்ளக் கூடாது. இஸ்லாமியத் தலைமை பொது மக்களின் நலன் நாடக் கூடியதாக அமைந்திட வேண்டும். பொது மக்களை மோசடி செய்திடக் கூடாது. பொது  மக்களைத் தங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அடிமைகள் என்று கருதிடக் கூடாது. பொது மக்கள் தங்களை விமர்சிப்பதைத் தடை செய்தல் கூடவே கூடாது.

மேலும் இஸ்லாமியத் தலைமை என்பது மக்களின் நேசத்துக்கு உரியதாக விளங்கிட வேண்டும்.

எவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களை நேசிக்கின்றீர்களோ அவர்களும் அன்றி, எவர்களுக்கு நீங்கள் (இறைவனிடம்) இறைஞ்சுகின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களுக்காக (இறைவனிடம்) இறைஞ்சுகின்றார்களோ அவர்களும் தாம் தலைவர்களில் மிக நல்லவர்கள் ஆவர்.

மேலும், எவர்கள் மீது நீங்கள் சினமுறுகின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்கள் மீது சினமுறுகின்றார்களோ அவர்களும் அன்றி, எவர்களை நீங்கள் சபிக்கின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களைச் சபிக்கின்றார்களோ அவர்களும் தாம் தலைவர்களில் மிகத்தீயோர் ஆவர்’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மிதீ)

இவைகளே இஸ்லாமியத் தலைமைக்குரிய முக்கியமான இலக்கணங்கள். இஸ்லாமிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தகுதி மிக்க தலைவர்களையும் நாம் பெற்றே வந்திருக்கின்றோம். தகுதியில்லாத தலைவர்களும் நம்மை ஆட்டிப் படைத்திருக்கின்றார்கள் என்பது புரியும்.

நமக்குத் தலைமை தாங்கிடும் இஸ்லாமியத் தலைவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை நாம் துல்லியமாக அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். தொழுகையும் ஜகாத்தும் நமக்கு எவ்வாறு அடிப்படைக் கடமைகளோ அது போல தகுதி மிக்க தலைவரைத் தேர்வு செய்வதும் ஒரு மிக முக்கியமான கடமையே!


திறமையா? சீனியாரிட்டியா??

உசாமா இப்னு ஸைத் (ரளி) அவர்கள். இவர் ஒரு சிறந்த நபித் தோழர். இளைஞர். நபி (ஸல்) அவர்கள் உசாமா(ரளி) அவர்களை முஸ்லிம்களின் படைக்குத் தளபதியாக்கினார்கள்.

அப்படையில் மூத்த வயதுடைய நபித்தோழர்களும் இருந்தனர். அப்போது உசாமா (ரளி) அவர்களின் வயது 19ஐத் தாண்டவில்லை. அச்சமயத்தில், வயதில் மூத்த முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளுக்கு இவர் தளபதியாக்கப்பட்டுள்ளாரே! என்று சிலர் குறை கூற ஆரம்பித்தனர்.


இளவயதில் தளபதியாக்கப்பட்டுள்ளது பற்றிக் குறைகளும் விமர்சனங்களும் நபி (ஸல்) அவர்களின் காதை எட்டியபோது அவர்கள் மிகுந்த கோபமடைந்தார்கள். உடனே மிம்பரில் ஏறி, அல்லாஹ்வைப் புகழ்ந்து,

பின்னர் கூறினார்கள்:

மக்களே! நான் உசாமாவைத் தளபதியாக்கியுள்ளது பற்றி நீங்கள் குறை கூறியது என் காதுக்கு எட்டியது. நான் உசாமாவைத் தளபதியாக்கியுள்ளது பற்றி நீங்கள் குறை கூறினால் இதற்கு முன்னர் அவருடைய தந்தையை நான் தளபதியாக்கியதையும் நீங்கள் குறைகூறிவிட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! தலைமைக்கு அவர் தகுதியானவராக இருந்திருந்தால் அவருக்குப்பின் அவருடைய மகனும் தலைமைக்குத் தகுதியானவரே! நிச்சயமாக அவர் மக்களுள் எனக்கு மிகவும் அன்பிற்குரியவராக இருந்தார். மேலும் அவ்விருவரும் எல்லா வித நன்மைக்கும் உரித்தானவர்களே. எனவே இவர் விசயத்தில் நன்மையையே நாடுங்கள். ஏனென்றால், நிச்சயமாக இவர் உங்களுள் உள்ள நல்லோர்களில் ஒருவராவார்.


நபி (ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்கள் கலீஃபா ஆக்கப்பட்டார்கள். அப்போது அன்ஸாரிகள் உமர்(ரளி) அவர்களிடம், உசாமாவைவிட வயதில் மூத்த யாரேனும் ஒருவரைத் தங்களுக்குத் தலைவராக நியமிக்குமாறு தாங்கள் வேண்டிக்கொள்வதாக அபூபக்ர் (ரளி) அவர்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள்.


அதனால் உமர் (ரளி) அவர்களிடம் சென்று இதுபற்றித் தெரிவித்தபோது, உமர் (ரளி) மீது பாய்ந்தார்கள். அமர்ந்த வண்ணம் உமர்(ரளி) அவர்களின் தாடியைப் பிடித்து உலுக்கினார்கள். மேலும் கூறினார்கள்: உமரே ! உம் தாய் உமக்குக் கடினமாகட்டுமாக! அவள் உம்மை இழக்கட்டுமாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரைத் தலைவராக்கியுள்ளார்கள். அவரை அப்பதவியைவிட்டு நீக்க என்னை நீர் ஏவுகிறீரா?


பின்னர் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்கள் உசாமாவின் படையில் சென்றார்கள். அப்போது உசாமா (ரளி) அவர்கள் தம்முடைய குதிரையில் பயணித்தார்கள். அபூபக்ர் (ரளி) அவர்கள் உசாமாவுடைய குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவண்ணம் நடந்து சென்றார்கள். அவ்வேளையில், அபூபக்ர் (ரளி) அவர்களிடம் உசாமா(ரளி) கூறினார்கள்: நான் இறங்கிக் கொள்கிறேன்; தாங்கள் குதிரையில் ஏறிக்கொள்ளுங்கள்.


அதைக் கேட்ட அபூபக்ர் (ரளி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் இறங்க வேண்டாம்; நான் ஏறிக் கொள்ளவும் வேண்டாம். அல்லாஹ்வின் பாதையில் சற்றுநேரம் என்னிரு கால்கள் புழுதிபடிவது என்மீது கடமையல்லவா? என்று மறுவினாத் தொடுத்தார்கள்.

நாம் கேட்கும் கேள்வி இது தான்:

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் - ஒருவரை ஒரு பொறுப்புக்குத் தேர்வு செய்திடும் போது - கவனத்தில் கொள்ளப் பட வேண்டியது - திறமையா? சீனியாரிட்டியா??


நிர்வாகப் பொறுப்பிற்கு யார் வர வேண்டும்?

(உமைர் இப்னு ஸஅத் ரலி)

நபியவர்களின் மறைவிற்குப் பிறகு கலீஃபாக்களின் ஆட்சியில் பாரசீகமும் பைஸாந்தியமும் முஸ்லிம்கள் வசமாகியிருந்த கால கட்டம் அது. முஸ்லிம்கள் கைப்பற்றிய நாடுகளுள் ஸிரியா ஒரு முக்கியமான நாடு. அங்கே நடைபெற்ற போர்க்களங்களில் தலைமை தாங்கி வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார் உமைர் இப்னு ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு என்ற உன்னதமான நபித்தோழர்.

ஸிரியாவின் கிழக்குப் பகுதியில் முஸ்லிம் படைகளுக்குத் தலைமை தாங்கிப் போராட்ட முனையில் இருந்த உமைருக்கு  கலீஃபா உமரிடமிருந்து தகவல் வந்தது:

‘ஹிம்ஸிற்குச் சென்று ஆளுநராகப் பொறுப்பேற்று மக்களை வழிநடத்தவும்.’
கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு, தம் ஆளுநர்களை குருட்டாம் போக்கில் தேர்ந்தெடுப்பவர் அல்லர். ஆளுநர் தேர்வுக்கென அவர் உருவாக்கி வைத்திருந்த விதிமுறைகள் மிகக் கடுமையானவை. தவிரவும் ஆளுநர் பொறுப்பில் அவர் நியமித்தவர்களும் மிகவும் சிறப்பு வாய்ந்த

நபித்தோழர்களையே!

ஆளுநர் பதவி என்றதும் உமைருக்கு அதில் சற்றும் விருப்பமேயில்லை. இறைவனின் பாதையில் களம் காண வேண்டும். போரிட வேண்டும். அடைந்தால் வெற்றி. இல்லையேல் உயிர் அவனுக்குத் தியாகம். இவையே அவரது புத்தி முழுவதையும் ஆக்கிரமித்திருந்த எண்ணங்கள். எனினும் கலீஃபாவின் ஆணையை மீற முடியாது என்ற காரணத்தால் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஹிம்ஸ் வந்தடைந்தார் உமைர் இப்னு ஸஅத்.
வந்து சேர்ந்ததும் மக்களைத் தொழுகைக்கு வரும்படி பள்ளிவாசலுக்கு அழைத்தார். வந்தார்கள் மக்கள். தொழுதனர் அனைவரும். முடிந்ததும் எழுந்து நின்று மக்களிடம் உரையாற்றினர் உமைர். இறைவனுக்கு நன்றியும் புகழும் உரைத்தபின்,

“மக்களே! இஸ்லாம் வலிமையான வாயில்கொண்ட ஓர் உறுதியான கோட்டை. இந்தக் கோட்டை நீதியால் கட்டப்பட்டிருக்கிறது; சத்தியம் அதன் வாயில். கோட்டை இடிக்கப்பட்டு அதன் வாயில் நொறுக்கப்பட்டால், இம்மார்க்கத்தின் புனிதத்தைக் காப்பாற்ற எந்த வழியுமில்லை. ஆட்சியாளர் சக்தியுள்ளவராய்த் திகழும்வரை இஸ்லாம் தாக்குதலுக்கு உட்படாது. ஆட்சியாளரின் வலிமை மக்களைச் சாட்டையால் கட்டுப்படுத்துவதும் அவர்களை வாளால் மிரட்டிப் பணியவைப்பதும் அன்று. மாறாய், மக்கள் மத்தியில் நீதியை நிலைநாட்டி, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதே வலிமை.”

அவ்வளவுதான் உரை. சுற்றி வளைத்துப் பேசும் நெடிய பிரசங்கம் இல்லை. ஆட்சியாளனுக்கு மக்களிடமிருந்து என்ன தேவை; மக்களுக்கு ஆட்சியாளன் என்ன செய்ய வேண்டும் என்று சுருக்கமான பேச்சு. தம் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டார் ஆளுநர் உமைர் இப்னு ஸஅத்.

அடுத்த ஓர் ஆண்டிற்கு அவரிடமிருந்து கலீஃபாவிற்குக் கடிதமும் இல்லை; சேகரித்த ஸகாத் வரியிலிருந்து அரசின் கருவூலமான பைத்துல்மாலுக்குப் பங்கும் செல்லவில்லை. உமருக்குக் கவலை ஏற்பட்டுவிட்டது. என்னதான் நடக்கிறது ஹிம்ஸில்? உமர் ரலியல்லாஹு அன்ஹுவுக்கு ஐயம் துளிர்விட ஆரம்பித்தது.

ஒருமுடிவுடன் தம் உதவியாளரை அழைத்தார். “ஹிம்ஸிலுள்ள நம் ஆளுநருக்குக் கடிதம் எழுதுங்கள். ‘அமீருல் மூஃமினீனின் இக்கடிதம் கிடைத்ததும் உடனே புறப்பட்டு வரவும். வரும்பொழுது முஸ்லிம்களிடமிருந்து திரட்டிய வரிப்பணத்தையும் கொண்டு வரவும்’” என்று வாசகத்தையும் விவரித்தார்.

கடிதம் உமைரை அடைந்தது. ஹிம்ஸின் ஆளுநர் பதவியை இறக்கி அங்கேயே வைத்துவிட்டு, மூட்டை-முடிச்சைக்கட்டிக் கொண்டு அவர் புறப்பட்டார். கையில் ஈட்டியை ஏந்திக்கொண்டு, கால்நடையாக மதீனாவை நோக்கி நடைப் பயணம் துவங்கியது. ஹிம்ஸிற்கும் மதீனாவிற்குமான தொலைவு தோராயமாக 1200 கி.மீ. நடந்தார் உமைர் இப்னு ஸஅத்!

ஒருவழியாக மதீனா வந்து சேர்ந்தபோது உமைரின் தோற்றம் முகம் வெளுத்து, தேகம் மெலிந்து, முடி நீளமாய் வளர்ந்து பயண வேதனை அவர்மேல் படர்ந்து கிடந்தது. அவரைப் பார்த்து அதிர்ந்துபோன உமர், “உமக்கு என்னாயிற்று உமைர்?” என்று விசாரித்தார்.

“ஒன்றும் பிரச்சினையில்லையே! அல்லாஹ்வின் கருணையால் நன்றாகத்தானே இருக்கிறேன். இவ்வுலகிற்குத் தேவையான அனைத்தும் என்னிடம் உள்ளன. அவை எனது கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன.”

அவருக்குத் தேவையான அனைத்தும் எவை? மூட்டையில் இருந்த சிறிதளவு உணவும் இரண்டு பாத்திரங்களும்!

“உம்முடன் என்ன எடுத்து வந்திருக்கிறீர்?” இதர உடைமைகளையெல்லாம் தனி மூட்டையாகக் கொண்டு வந்திருப்பாரோ என்ற எண்ணம் உமருக்கு.

“அமீருல் மூஃமினீன் அவர்களே! உடைமைகள் அடங்கிய சிறு மூட்டை. உணவு உண்ண, தண்ணீர் அள்ளிக் குளிக்க, துணி அலச ஒரு பாத்திரம். ஒளுச் செய்ய, நீர் அருந்த ஒரு பாத்திரம் ஆகிய இவையே எனது உடைமைகள். இவை போதும் எனக்கு. மற்றவை இவ்வுலக வாழ்க்கைக்கு அனாவசியம். அவை எனக்குத் தேவையுமில்லை. மக்களுக்கும் அத்தகைய அனாவசியத் தேவைகள் இருக்கக்கூடாது.”

“நடந்தா வந்தீர்?” என்றார் உமர்.

“ஆம் அமீருல் மூஃமினீன்”

“ஆளுநர் நீர் பயணித்து வர அவர்கள் பிராணி ஏதும் வழங்கவில்லையா?”

“அவர்களும் தரவில்லை. நானும் கேட்கவில்லை.”

அடுத்து முக்கிய விஷயத்திற்கு வந்தார் உமர். “அரசாங்கக் கருவூலத்திற்குச் சேரவேண்டிய பணம் எங்கே?”

“நான் எதுவும் கொண்டு வரவில்லை.”

”ஏன்?”

நிதானமாக பதிலளித்தார் உமைர். “நான் ஹிம்ஸை அடைந்ததுமே, அந்நகரின் மக்களுள் மிக நேர்மையானவர்களை அழைத்தேன். வரியைச் சேகரம் செய்யும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தேன். அவர்களிடம் பணமும் பொருளும் சேகரமானதும் அந்நகரில் மிகவும் தேவையுடையவர்கள், வறியவர்கள் யார், யார், உதவிகள் எங்கெல்லாம் தேவைப்படுகின்றன என்று ஆலோசனை கேட்பேன். தேவையானவர்களுக்கும் வறியவர்களுக்கும் அவை உடனே பகிர்ந்தளிக்கப்படும்.”

தம் நம்பிக்கையும் தேர்வும் வீண்போகவில்லை என்பதை அறிந்ததும் மகிழ்ந்தார் உமர்! உதவியாளரை அழைத்து “ஹிம்ஸின் ஆளுநராக இவர் நீடிக்க புதிய ஒப்பந்தம் எழுதுங்கள்” என்றார்.

“தேவையே இல்லை” என்று நிராகரித்தார் உமைர். “பதவி எனக்கு விருப்பமற்ற ஒன்று. அமீருல் மூஃமினீன்! தங்களுக்கும் தங்களுக்குப் பின்வரக்கூடியவர்களுக்கும் இனி நான் அரசாங்கப் பணி புரியவே மாட்டேன்” என்று அழுத்தமாய்க் கூறிவிட்டார்.

“என்னுடைய உறவினர்கள் வசிக்கும் கிராமம் மதீனாவிற்கு வெளியே அமைந்துள்ளது. நான் அங்குச் சென்று வாழ விரும்புகிறேன். அனுமதி அளியுங்கள்.” அனுமதித்தார் உமர். உமைரின் வாழ்க்கை அக்கிராமத்திற்குக் குடிபெயர்ந்தது.

சிலகாலம் கழிந்திருக்கும். உமைர் இப்னு ஸஅதின் நலம் அறிய விரும்பினார் உமர். நம்பகமான தம் நண்பர்களுள் ஒருவரான ஹாரித் என்பவரை அழைத்து, “உமைர் வசிக்கும் ஊருக்குச் செல்லவும். நீர் ஒரு பயணி என்று கூறி அவருடன் தங்கவும். அவர் சொகுசாய் வாழ்கிறார் என்று தெரிந்தால் ஏதும் பேசாமல் என்னிடம் திரும்புங்கள். ஆனால் அவர் வறுமையில் இருந்தால், இந்தாருங்கள் தீனார், அவருக்கு அளியுங்கள்” என்று ஒரு பையில் நூறு தீனார்களை அளித்தார்.

உமைரின் ஊருக்கு வந்தார் ஹாரித். அவரது வீட்டை விசாரித்து அறிந்து, சென்று சந்தித்தார்.

“அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.”

“வஅலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.“ வந்திருப்பவர் பயணி எனத் தெரிந்தது.

“நீர் எங்கிருந்து வருகிறீர்?” என்று விசாரித்தார் உமைர்.
“மதீனாவிலிருந்து.”

“தாங்கள் கிளம்பும்போது அங்கு முஸ்லிம்களின் நிலை என்ன?”

“அனைவரும் நலமுடன் உள்ளனர்.”

“அமீருல் மூஃமினீன் நலமா?”

“அவரும் நலமே. தம் பணியை மிக நேர்மையாய் நிறைவேற்றுகிறார்.”

“அனைத்துச் சட்டங்களையும், குற்றவாளிகளுக்கு அளிக்கும் தண்டனைகளையும் முறையே நிறைவேற்றுகின்றாரா?”


“சந்தேகமே வேண்டாம். தம்முடைய மகன் குற்றம் செய்தாலும் கலீஃபா தண்டிக்கத் தவறுவதில்லை"

அதைக் கேட்டு, “யா அல்லாஹ்! உன்மீது கொண்ட நேசத்தினாலேயே பாசம் பாராமல் உமர் நீதி செலுத்துகிறார். அவருக்கு நீ உதவி புரிவாயாக.” என்று இறைஞ்சினார் உமைர்.

உமைரின் வீட்டில் மூன்று நாள் விருந்தினராகத் தங்கினார் ஹாரித். ஒவ்வொரு நாள் மாலையும் விருந்தினருக்கு உணவளித்தார் உமைர். உணவு என்றால் வாற்கோதுமை ரொட்டி. அவ்வளவுதான். மற்றபடி இறைச்சி, குழம்பு என்று எதுவும் இல்லை.

மூன்றாம் நாள். அவ்வூரைச் சேர்ந்த ஒருவர் ஹாரித்திடம் உரையாடும்போது, “நீர் உமைருக்கும் அவருடைய மனைவிக்கும் பெரும் சிரமம் அளித்துவிட்டீர் தெரியுமா? அவர்கள் தினமும் உண்ணும் உணவு அந்த ரொட்டி மட்டுமே. அதையும் விருந்தினரான உமக்குத் தந்துவிட்டு அவர்கள் தங்களின் பசியைப் பொறுத்துக் கொண்டுள்ளனர். நீர் மேலும் சிலநாள் இவ்வூரில் தங்க வேண்டியிருந்தால் தயவுசெய்து என் வீட்டிற்கு வந்து விடுவீராக” என்று அழைப்பு விடுத்தார்.

ஹாரிதுக்கு உமைரின் நிலை நன்கு புரிந்துபோனது. தம்மிடம் அளிக்கப்பட்டிருந்த தீனார்கள் அடங்கிய பையை உமைரிடம் அளித்தார்.

“எதற்கு இது?” என்று கேட்டார் உமைர்.

“அமீருல் மூஃமினீன் இதைத் தங்களிடம் அளிக்கும்படிச் சொல்லித் தந்தார்.”

“இதை அவரிடமே திருப்பித் தந்துவிடுங்கள். என் சார்பாய் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ தெரிவியுங்கள். உமைருக்கு இதன் தேவை இல்லை என்று தெரிவித்துவிடுங்கள்.”

உள்ளிருந்து இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த உமைரின் மனைவி குறுக்கிட்டார்.

“அதைப் பெற்றுக்கொள்ளுங்கள் உமைர். உமக்குத் தேவையெனில் நீங்கள் பயன்படுத்தலாம். இல்லையெனில் தேவையுள்ள வறியவர்கள் இவ்வூரில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அளிக்கலாம்.”

இதைச் செவியுற்ற ஹாரித் பணப் பையை அங்கேயே வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டார். அந்த தீனார்களை சிறு பைகளில் பங்கிட்டுப் பிரித்தார் உமைர். ஏழைகளுக்கும், ஜிஹாதுக்குச் சென்று உயிர்த் தியாகி ஆகிப்போனவர்களின் பிள்ளைகளுக்கும் அதைப் பகிர்ந்தளித்துவிட்டு, பிறகுதான் இரவுத் தூக்கமே.

மதீனா திரும்பிய ஹாரித்திடம் விசாரித்தார் உமர். “அங்கு என்ன கண்டுவந்தீர் ஹாரித்?”

“அமீருல் மூஃமினீன். உமைர் மிகவும் வறுமையில், கடின வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்துவருகிறார்.”

“அவரிடம் பணம் அளித்தீரா?”

“ஆம்.”

“அதை அவர் என்ன செய்தார்?”

“எனக்குத் தெரியாது. ஆனால் அதிலிருந்து தமக்கென ஒரு திர்ஹமைக்கூட அவர் எடுத்திருக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.”

உமைருக்குக் கடிதம் எழுதினார் உமர். “இக் கடிதம் கிடைத்து, படித்து முடித்ததும் உடனே வந்து என்னைச் சந்திக்கவும்.”

மதீனாவுக்கு வந்து கலீஃபா உமரைச் சந்தித்தார் உமைர் இப்னு ஸஅத். முகமன்கூறி வரவேற்று தம் அருகே அவரை அமர்த்திக் கொண்டார் உமர்.

“பணத்தை என்ன செய்தீர் உமைர்?”

“அமீருல் மூஃமினீன்! அதைத் தாங்கள் எனக்கென அளித்துவிட்டபின் அதைப்பற்றி தங்களுக்கென்ன கவலை?”

“அதை நீர் என்ன செய்தீர் என்பதை நான் அறிய விரும்புகிறேன் உமைர்” என்று வற்புறுத்தினார் உமர்.

“செல்வமோ, சந்ததியோ எனக்கு யாதொரு உதவியும் புரிய இயலாத நாள் ஒன்று வருமே, அப்பொழுது அந்தப் பணம் எனக்கு உதவட்டும் என்று ஏற்பாடு செய்துவைத்துவிட்டேன்” என்றார் உமைர்.

கண்கள் கலங்கிப்போனார் உமர். “தமக்கெனத் தேவைகள் இருந்தும் தம்மைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிப்பார்களே அத்தகையவர்களில் நீர் ஒருவர் என்று நான் சாட்சியம் பகர்கிறேன் உமைர்.”

ஒட்டகம் சுமக்கும் பொதியளவு உணவுப் பொருட்களும், இரண்டு மேலங்கியும் உமைருக்கு அளிக்கும்படி கட்டளையிட்டார் உமர்.

“அமீருல் மூஃமினீன்! எங்களுக்கு இந்த உணவின் தேவை இல்லை” என்று அதையும் மறுத்தார் உமைர். “நான் கிளம்பும்போது என் குடும்பத்தினருக்காக இரண்டு ஸாஉ வாற்கோதுமையை அளித்து வந்திருக்கிறேன். அதை நாங்கள் உண்டு முடிக்கும்போது, அல்லாஹ் எங்களுக்கு மேற்கொண்டு் படி அளப்பான். ஆனால் இந்த இரண்டு அங்கி… அதை மட்டும் என் மனைவிக்காக எடுத்துக் கொள்கிறேன். ஏனெனில் அவளது உடை மிகவும் கிழிந்து அவளது உடலை முழுமையாகப் போர்த்தும் நிலையிலும் அது இல்லை.”

இதை என்னவென்று சொல்வது? செல்வச் செழிப்பில் தேவைக்கு மீறி ரகரகமாய், விதவிதமாய் அடுக்கி வைத்து, நாகரிகம் என்ற பெயரில் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு திரியும் நாம் இதை எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம்?

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு வெகு சில காலத்திற்குள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் உமைர் இப்னு ஸஅத். அந்த மரணச்செய்தி தெரியவந்ததும் உமரின் முகம் சோகத்தால் மாறிப்போனது. உள வேதனையுடன் கூறினார் உமர். “உமைர் இப்னு ஸஅத் போன்றவர்கள் எனது நிர்வாகத்திற்கு வேண்டும் என்பதே என் விருப்பம். முஸ்லிம்களின் நிர்வாகப் பணிகளுக்கு இத்தகையோரின் உதவியே எனக்கு அதிகம் தேவை.”

எளிதில் விவரித்துவிட முடியாத எளிய வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார் உமைர் இப்னு ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு!

மீண்டும் படியுங்கள் உமைர் பின் ஸஅத் அவர்களின் வைர வரிகளை:

“மக்களே! இஸ்லாம் வலிமையான வாயில்கொண்ட ஓர் உறுதியான கோட்டை. இந்தக் கோட்டை நீதியால் கட்டப்பட்டிருக்கிறது; சத்தியம் அதன் வாயில். கோட்டை இடிக்கப்பட்டு அதன் வாயில் நொறுக்கப்பட்டால், இம்மார்க்கத்தின் புனிதத்தைக் காப்பாற்ற எந்த வழியுமில்லை. ஆட்சியாளர் சக்தியுள்ளவராய்த் திகழும்வரை இஸ்லாம் தாக்குதலுக்கு உட்படாது. ஆட்சியாளரின் வலிமை மக்களைச் சாட்டையால் கட்டுப்படுத்துவதும் அவர்களை வாளால் மிரட்டிப் பணியவைப்பதும் அன்று. மாறாய், மக்கள் மத்தியில் நீதியை நிலைநாட்டி, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதே வலிமை.”

ஆம் சகோதரர்களே! நமது அனைத்து விதமான கூட்டமைப்புகளுக்கும் உமைர் பின் ஸஅத் போன்றவர்கள் தலைமை ஏற்றிடும்போதே இஸ்லாம் எனும் கோட்டை வலிமை பெறும்!

யா அல்லாஹ்! உமைர் பின் ஸஅத் அவர்களின் பண்புகளில் ஒரு சிறிதையாவது எங்களுக்கும் எங்கள் சந்ததிகளுக்கும் வழங்குவாயாக!!
உன்னதமான இந்த நபித்தோழரிடம் நமது தலைவர்கள் கற்க வேண்டிய பாடங்கள்:

1. எளிமை (அவருடைய உடைமைகள்)

2. தவக்குல் (அவர் வீட்டில் இருந்த உணவுப்பொருட்கள் இரண்டு ஸாஉ
வாற்கோதுமை மட்டும் தானாம்!)

3. தன்னை விட பிறர் நலம் நாடுதல்  (கணவன் - மனைவி இருவருமே பட்டினி கிடந்து விருந்தினரை உபசரித்திருக்கிறார்கள்.)

4. சகிப்புத் தன்மை (1200 கி.மீ தூரத்தை நடந்தே வந்தடைந்தார்! )

5. பதவியாசை இன்மை (ஆளுநர் பதவியில் ஒட்டிக்கொள்ள விரும்பவில்லை)

6.  பொருளாசை இன்மை (100 தீனார்களையும் சதகா கொடுத்து விட்டார்)

7. பொறுப்புணர்ச்சி ( ஸகாத் விஷயத்தில்)

8. மக்கள் நலனில் அக்கறை (கலீஃபா நீதியை நிலைநாட்டுகிறாரா என்ற விசாரணை)


தாமாகவே முன் வருவது தான் தலைமைத்துவத்தின் அடையாளம்!

இஸ்லாமிய நாகரிகத்தின் ஈடு இணையற்ற வரலாற்றுச் சான்றுகளுள் ஒன்று -இதோ!

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது,
அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.
உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?
பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்.

உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்.
அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்? என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!

அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள்
புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.

உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்து போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர். அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர் என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.
வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தலைவராகவும் விளங்கினார்கள்.

தலைமையிடத்தில் உறுதி வேண்டும்!

ஒரு கருத்தை ஏற்கச் செய்வதற்காகவோ அல்லது ஒரு கீழ்ப் படிதலை எதிர்நோக்கி ஒரு கட்டளையைப் பிறப்பிக்கும் போதோ - நாம் யார் இதனைச் சொல்ல என்பதனைத் தெளிவாக்கி விட வேண்டும். இதற்கு தன்னிலை உறுதிப்பாடு தேவை. ஆங்கிலத்தில் இத்தகைய உறுதிப்பாட்டை Assertiveness என்று சொல்வார்கள்.

இந்தத் திருமறை வசனத்தை கவனியுங்கள்:

'நிச்சயமாக நான் தான் அல்லாஹ்!
என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை!
ஆகவே - என்னையே நீர் வணங்கும்! (20: 24)

இவ்வசனம் மூசா (அலை) அவர்களை நோக்கி அல்லாஹ் பேசிய வசனமாக - சூரா தாஹாவில் இடம் பெற்றுள்ளது.

சகோதரர்களே! நபியவர்களைக் கொலை செய்து விடப் புறப்பட்ட உமர் (ரலி) அவர்கள் - இந்த வசனத்தைக் காதில் வாங்கித் தான் இஸ்லாத்துக்கு வந்தார்கள் என்பதும் வரலாற்று உண்மை.

நிறுவனத்தின் தலைவர்களுக்கு, மேலாளர்களுக்கு, ஜமாஅத் தலைவர்களுக்கு, ஏன் ஒரு தந்தைக்குக் கூட இந்த தன்னிலை உறுதிப்பாடு அவசியம்!

கருத்துக் கேட்பது, ஆலோசனை கேட்பது என்பது வேறு விஷயம்.

கீழ்ப் படிதல் இல்லாமல், தலைமைத்துவம் இல்லை!

"லா இமாரத இல்லா பி- இதா-அதின்" - என்பது உமர் (ரலி) அவர்களின் கூற்று.

பின் வரும் வரலாற்றுச் சம்பவம், தலைவர்களின் மிக ஆழமான சிந்தனைக்குரியது:

நபி(ஸல்) அவர்கள் மரணித்து அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரலி) தயாரானார்.

உமர் (ரலி), ‘லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்?’ என்று கேட்டார்.

அபூ பக்ர் (ரலி), உமரை நோக்கி, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்” என்றார்.

இது பற்றி உமர்(ரலி), ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார்.

அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்” என்றார்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: சஹீஹுல் புஹாரி

இதில் நாம் கற்க வேண்டியது என்னென்னவென்றால் -

1. சந்தேகமற்ற அறிவாற்றலின் அடிப்படையில் முடிவெடுத்தல் (Decision making based upon intellectual reasoning)

2. அதன் அடிப்படையில் சந்தேகங்களுக்கு தெளிவாக விளக்கமளித்தல் (Convince others with logical proof)

3. தன் உறுதியை வெளிப்படுத்துதல் (assertiveness)

4. தயக்கம் கிஞ்சிற்றும் இன்றி செயற்களத்தில் இறங்குதல் (taking actions without unwavering mind)

இவை அனைத்தும் தலைமைத்துவத்தின் அடையாளங்களாகும்.

நபியவர்களின் கடிதங்களை சற்று உற்று நோக்குங்கள் - இவ்விஷயம் இன்னும் நன்றாக விளங்கும்.

பாடம் கற்க வேண்டிய இன்னொரு தலைவர் பற்றி..

முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ
مجزأة بن ثور السدوسي

காதிஸ்ஸியாப் போரில் பாரசீகப் படைகளின் தளபதி ருஸ்தம் கொல்லப்பட்டதும் அந்தப் போர் ஒரு முடிவிற்கு வந்தது. அந்தப் போரில் பாரசீகப் படைப்பிரிவிற்கு ஜாலினுஸ் (Jalinus), ஹுர்முஸான் (Hormuzan) என்ற இரு முக்கியத் தலைவர்கள் இருந்தனர். போரின் இறுதியில் தப்பித்து ஆற்றைக் கடந்து ஓடிய ஜாலினுஸ் கொல்லப்பட்டான்.

ஆனால், ஹுர்முஸான் மட்டும் தப்பித்துவிட்டான். முஸ்லிம் படைகள் பாரசீகத்திற்குள் முன்னேறிச் சென்று கொண்டேயிருக்க, இதர சிலப் போர்கள் நிகழ்ந்தன. ஓயாத ஒழியாத போர்க்காலம் அது. உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றின் முக்கிய அத்தியாயங்கள் அவை.
முஸ்லிம் படைகள் முன்னேற முன்னேற, ஹுர்முஸான் மட்டும் ஒவ்வொரு போரிலும் ஓடினான் ஓடினான், தப்பித்து ஓடிக்கொண்டேயிருந்தான். இவ்வாறு அவன் ஓடி ஒளிந்து கொண்ட நகரங்களில் ஒன்று தான் தஸ்தர்!


தஸ்தர்!

பாரசீகப் பேரரசின் மகுடத்தில் இரத்தினக் கல் அந்நகரம்!  பண்டைய காலத்திலேயே கட்டப்பட்ட இந்நகரத்தில் தொன்று தொட்டு மக்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. நாகரீகத்தின் மையமாய் அந்நகரம் அமைந்து இருந்திருக்கிறது.  தஸ்தர் நகரைச் சுற்றிலும் உயரமான பருமனான சுவர் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு நகரைச் சுற்றி அமைக்கப்பட்ட சுவர்களிலேயே இதுதான் முதல் விசாலமான சுவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்த தஸ்தர் நகருக்குள் சென்று பாதுகாப்பாக ஒளிந்து கொண்டான் ஹுர்முஸான். வலுவான தடுப்புச் சுவர் உள்ள நகர். நகரின் சுவருக்கு வெளியே ஆழமான அகழியொன்று வெட்ட ஏற்பாடு செய்து, முஸ்லிம்கள் எளிதில் கடக்க இயலாத வகையில் பக்காவாய் அரண் உருவானது. அகழிக்கு அடுத்தத் தடுப்பாகப் பாரசீகத்தின் மிகச் சிறந்த படை வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.

இவ்விதம் இங்குத் தற்காப்பு தயாராகி முடிந்த வேளையில் வந்து சேர்ந்தது முஸ்லிம்களின் ஒன்றிணைந்த படை ஒன்று. ஒன்றிணைந்த முஸ்லிம் படைகளுக்கு, கலீஃபாவின் கட்டளைப்படி அபூஸப்ரா இப்னு அபி ருஹ்ம் தலைமை ஏற்றுக்கொண்டார். நிலைமையை ஆராய்ந்தவர் எதிரியின் தற்காப்பையும் அரணையும் வலுவையும் கவனித்து கலீஃபா உமருக்குத் தகவல் அனுப்பினார். “கூடுதல் படை வேண்டும்!”

கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவிடமிருந்து பஸ்ராவிலிருந்து அபூமூஸா அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹுவுக்குத் தகவல் பறந்தது. “தாங்கள் ஒரு படை திரட்டிக் கிளம்பிச் சென்று தஸ்தரில் தங்கியுள்ள படையுடன் இணைந்து கொள்ளுங்கள். பஸ்ராவின் வீரர்களுக்கு நீங்கள் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். அபூஸப்ரா அனைத்துப் படைகளுக்கும் தலைமை வகிக்கட்டும்.”

அதனுடன் சேர்த்து மற்றொரு முக்கியத் தகவலும் இருந்தது. “முக்கியமாய் முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ தங்களது படையில் இடம்பெற வேண்டும்”

தன் ஆளுநர்களை எப்படி தேடித் தேடி நிர்ணயிப்பதில் திறமை இருந்ததோ அதைப்போல் ஒவ்வொரு படைக்கும் தலைமையையும் தகுந்த வீரர்களையும் நிர்ணயிப்பதிலும் உமருக்கு அசாத்தியத் திறமை இருந்தது. அந்த திறன்தான் இந்தப் போரில் முஜ்ஸாவை முக்கிய வீரராய் இணைத்துக் கொள்ள உமரின் உள்ளுணர்வைத் தூண்டியது.

முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ ரலியல்லாஹு அன்ஹு, பக்ரு கோத்திரத்தைச் சேர்ந்தவர். நிகரற்ற படைத் தலைவர்; படு துணிவான வீரர்.
கலீஃபா உமரின் கட்டளைப்படி அபூமூஸாவின் படையில் முஜ்ஸா இடப்புறமுள்ள அணியில் இடம்பெற, கிளம்பியது படை.

தஸ்தர் நகரைச் சுற்றிவளைத்த முஸ்லிம் படைகளை அகழியும் வீரர்களின் அரணும் கோட்டையும் படுபாதுகாப்பாய் ஹுர்முஸானை உள்ளே வைத்துப் பொத்திக்கொண்டு வரவேற்றன. நேரடிப் போருக்கு ஏதும் வழியில்லை என்று தெரிந்தது முஸ்லிம்களுக்கு. “கூடாரம் அமையுங்கள். முற்றுகை
தொடங்கட்டும்!” என்று கட்டளையிடப்பட, தொடங்கியது முற்றுகை.

ஒருநாள் அல்ல, ஒரு மாதம் அல்ல, ஏறக்குறைய பதினெட்டு மாதங்கள் நீடித்தது இந்த முற்றுகை. முஸ்லிம்களின் பொறுமைக்கும் வீரத்திற்கும் பெரியதொரு சவால் அது!

இந்தப் பதினெட்டு மாதகாலமும் அமைதியாய் ஏதும் கழியவில்லை. பாரசீகப் படைக் குழுக்களுடன் எண்பது சிறு சிறு யுத்தங்கள் நிகழ்ந்தன. இந்தச் சிறுயுத்தம் எப்படி நிகழும் என்றால் ஆரம்பத்தில் “ஒத்தைக்கு ஒத்தை வர்ரியா?“ என்று சண்டை ஆரம்பிக்கும். இரு தரப்பிலிருந்தும் ஒரு முக்கிய வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டு நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள். அதில் ஒருவர் கொல்லப்பட, அதற்கு அடுத்து இருதரப்பிற்கும் இடையே கடுமையான சண்டை நிகழ்வுறும்.

இத்தகைய ஒத்தைக்கு ஒத்தை சண்டைகளில் முஸ்லிம்கள் தரப்பில் களமிறங்கியவர் முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ. மட்டை ஆட்டத்தில் நூறு ஓட்டம் எடுப்பதுபோல் நூறு எதிரி வீரர்களை அவர் சர்வசாதாரணமாய்க் கொன்று தள்ள - அதகளம்! முஜ்ஸாவின் பலமும் பராக்கிரமும் எதிரிகளைத் திகைப்படையச் செய்தன. “முஜ்ஸா“ என்ற பெயரே பாரசீகர்கள் மத்தியில் பயத்தைத் தோற்றுவிக்க ஆரம்பித்தது. அதே பெயர் முஸ்லிம்கள் மத்தியில் பெருமையையும் மரியாதையையும் உற்சாகத்தையும் அதிகப்படுத்தியது. ரலியல்லாஹு அன்ஹு.

இந்தப் போருக்குமுன் முஜ்ஸாவை அதிகம்பேர் அறிந்திருக்கவில்லை. ஆனால், இப்பொழுது அவரது வீரத்தைக் கண்டபிறகுதான் முஸ்லிம்களுக்கு அது புரிந்தது, கலீஃபா உமர் ஏன் மிகக் குறிப்பாய் முஜ்ஸஅதிப்னி ஃதவ்ரைப் போரில் இணைத்துக் கொள்ள கட்டளை அனுப்பினார் என்று.

எண்பது சிறு சிறு யுத்தங்கள் நடைபெற்றதல்லவா? அவை அனைத்திலும் முஸ்லிம்களின் தாக்குதல் மிகக் கடுமையானதாக இருந்தது. அகழிக்குமேல் அமைந்திருந்த பாலங்களை விட்டுவிட்டு, கோட்டைச் சுவர்களுக்கு பின்னால் ஓடி மறைந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது எதிரிகளுக்கு.

போரும் பொறுமையும் தொழுகையும் பிரார்த்தனையுமாக முற்றுகை நீடித்துக் கொண்டிருந்தது. இறைவனிடம் முஸ்லிம்கள் கையேந்த ஒருநாள் அந்த விசித்திரம் நிகழ்ந்தது. உதவி புரிவோருள் எல்லாம் சிறந்த உதவி புரிவோன் அவன்தானே?

உடைக்க இயலாத பெரும் அரணாய் நின்று கொண்டிருந்த தஸ்தரின் அந்த நெடிய சுவரை ஒருநாள் அபூமூஸா கூர்ந்து பார்வையிட்டுக் கொண்டேயிருந்தார். எங்காவது, ஏதாவது ஒருவழி தென்படாதா என்று கவலையுடன் சுற்றிவர, விண்ணிலிருந்து வந்து விழுந்தது ஓர் அம்பு. அதன் நுனியில் செய்தி ஒன்று!

பிரித்துப் படித்தால், “முஸ்லிம்களை நம்பலாம் என்று எனக்கு உறுதியாகிவிட்டது. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் என்னைச் சேர்ந்த சிலருக்கும் நீங்கள் அபயம் அளிக்க வேண்டும். எனது உடமைகளுக்கு நீங்கள் பாதுகாவல் அளிக்கவேண்டும். அதற்கு என்னுடைய கைம்மாறு உண்டு. நகருக்குள் ஊடுருவும் ஓர் இரகசியப் பாதை எனக்குத் தெரியும். அதை நான் உங்களுக்குத் தெரிவிப்பேன்”

செய்தியைப் படித்த அபூமூஸா அவர்களுடைய பாதுகாவலுக்கு உறுதிமொழி அளிக்கும் பதிலொன்றை உடனே எழுதி, அதை ஓர் அம்பில் கட்டி உள்ளே எய்தார். அம்பஞ்சல் வேலை செய்தது. அன்றைய இரவின் இருட்டில் யாருக்கும் தெரியாமல் அந்த மனிதன் நகருக்கு வெளியே வந்து அபூமூஸாவைச் சந்தித்தான்.

“நாங்கள் உயர்குடியைச் சேர்ந்த மக்கள். ஆனால் ஹுர்முஸான் என் அண்ணனை அநியாயமாகக் கொலை செய்துவிட்டு என் அண்ணனின் குடும்பத்தையும் உடமைகளையும் தனதாக்கிக் கொண்டான். அவனிடமிருந்து எந்த நொடியும் ஆபத்து வரலாம் என்ற பயத்திலேயே நானும் என் குடும்பமும் உள்ளோம். அவனது அநீதியை மிகக் கடுமையாய் வெறுக்கிறோம். முஸ்லிம்களான உங்களது நேர்மை எங்களுக்கு மிகவும் உவப்பானதாய் இருக்கிறது. தஸ்தர் நகரினுள் ஊடுருவும் ரகசியப் பாதை ஒன்றை உங்களுக்குக் காட்ட நான் முடிவெடுத்துவிட்டேன். அதன் வழியே நீங்கள் நகருக்குள் புகுந்துவிட முடியும். உங்களுள் சிறந்த வீரரும் மதிநுட்பம் வாய்ந்தவரும் நன்றாக நீச்சல் அறிந்தவருமான ஒருவரை என்னுடன் அனுப்புங்கள். நான் அவருக்கு வழி காண்பிக்கிறேன்”

அபூமூஸா, முஜ்ஸாவை தனியே அழைத்துப் பேசினார். பதினெட்டு மாதகாலப் பொறுமைக்குப் பயனாய் திடீரென ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றத்தை விவரித்து, “உமது குழுவிலிருந்து அந்த மனிதன் கேட்கும் தகுதியுடைய ஒருவரை எனக்குத் தந்து உதவவும்”

“வேறொருவர் எதற்கு? நானே செல்கிறேனே! தாங்கள் அனுமதியுங்கள்”

இதற்குப் பெயர் தான் Leadership Initiative!

யோசித்தார் அபூமூஸா. “அதுதான் உமது விருப்பமெனில், நீரே செல்லவும். அல்லாஹ்வின் அருள் உமக்குண்டு”

அடுத்து என்ன நடந்தது என்பதெல்லாம் இஸ்லாமிய வரலாற்றின் சாகசங்கள் நிறைந்த பக்கங்கள்!

அறிந்திட ஆவலா? தொடர்ந்து படியுங்கள்!

...... அடுத்து முக்கிய ஆலோசனைகளை அவருக்கு வழங்கினார் அபூமூஸா. “கவனமாய்ப் பாதையை மனதில் குறித்துக் கொள்ளுங்கள். நகரின் வாயில் எங்கு அமைந்திருக்கிறது என்பதை அறிய வேண்டியது முக்கியம். ஹுர்முஸான் எப்படி இருப்பான், எங்கு இருக்கிறான் என்பதை அறிய வேண்டும். அடுத்து இந்தப் பணியில் மிகவும் கவனம் தேவை. யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாமல் காரியமாற்றித் திரும்ப வேண்டும்”

“அப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டு இரவின் இருளில் அந்தப் பாரசீக மனிதனுடன் கிளம்பினார் முஜ்ஸா.

மலையைக் குடைந்து அமைத்த சுரங்கவழி ஒன்று இருந்தது. அது தஸ்தர் நகரையும் ஆறு ஒன்றையும் இணைத்தது. அதன் வழியே தொடங்கியது பயணம். சில இடங்களில் அந்தச் சுரங்கவழி அகலமாய் இருக்க நீரினுள் நடந்தே செல்ல முடிந்தது. வேறு சில இடங்களில் மிகக் குறுகலாய் நீந்தி மட்டுமே செல்ல வேண்டிய நிலை. சில இடங்கள் வளைந்து நெளிந்து இருந்தன. நெடுஞ்சாலையிலிருந்து கிளைச் சாலைகள் பிரிவதைபோல் அங்கெல்லாம் இவர்கள் சென்று கொண்டிருந்த சுரங்கவழிப் பாதையிலிருந்து கிளைகள் பிரிந்திருந்தன. வேறு சில இடங்களில் வெகு நேராய் எளிதாய்க் கடக்கும் வகையில் அமைந்திருந்தது பாதை.

மெதுமெதுவே முன்னேறிச் சென்று கொண்டிருந்தார்கள் முஜ்ஸாவும் அந்த மனிதனும். ஒருவழியாய் சுரங்கப்பாதை தஸ்தர் நகரினுள் வந்து முடிய, நகருக்குள் அடியெடுத்து வைத்தார் முஜ்ஸா. தேர்ந்த சுற்றுலா வழிகாட்டிபோல் ரகசியமாய் முஜ்ஸாவை நகரினுள் கூட்டிவந்த அந்தப் பாரசீக மனிதன், ஹுர்முஸான் இருக்கும் இடத்திற்கு அருகில் அழைத்துச் சென்று மிகத் தெளிவாக அடையாளம் காட்டினான். “அதோ அவன்தான் ஹுர்முஸான். இதுதான் அவன் இருக்கும் இடம், நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்,” என்று தெரிவித்துவிட்டான்.

அந்த மனிதனுக்கு நன்றி நவின்றுவிட்டு விடிவதற்குள் வந்து வழியே தனது இருப்பிடத்திற்குத் திரும்பினார் முஜ்ஸா.

அபூமூஸாவைச் சந்தித்து நடந்த அனைத்தையும் விவரிக்க, அடுத்து பரபரவென காரியம் துவங்கியது. சிறப்பான முந்நூறு வீரர்களைத் தேர்ந்தெடுத்தார் அபூமூஸா. அவர்களுக்கு முஜ்ஸஅதிப்னி ஃதவ்ர் தலைவர்.

“வெற்றிகரமாய் ஊடுருவி நகரின் உள்ளே நுழைந்ததும் ‘அல்லாஹு அக்பர்’ என்று உரத்து ஒலியெழுப்புங்கள். வெளியில் உள்ளவர்களுக்கு அதுவே சங்கேதக் குறியீடு. அதைக் கேட்டதும் வெளியில் உள்ள படை நகரைத் தாக்கத் துவங்கும்.”

அடுத்த நாள் -

முன்னிரவில் கிளம்பியது அந்தப் படை.

மிகவும் கடினமான, ஆபத்தான அந்த சுரங்கவழியை சில மணி நேரங்கள் போராடிக் கடந்தனர் அவர்கள். நகரினுள் முடிந்த அந்த சுரங்க வாயிலை அடையும்போது இருநூற்று இருபது வீரர்கள் அந்தக் கொடிய பயணத்தில் இறந்துவிட்டதை அறிந்தார் முஜ்ஸா. முந்நூறில் எண்பது பேர் மட்டுமே மீந்திருந்தனர்! இந்த எண்பது பேரும் புயலாய் நுழைந்தனர் தஸ்தருக்குள்!

நகரினுள் நுழைந்த அந்தச் சிறிய எண்பதுபேர் படை வீர விளையாட்டு நிகழ்த்தியது. வாளை உருவிக் கொண்டு அரணுக்குப் பாதுகாவலாய் இருந்த வீரர்களை சப்தமேயின்றி வீழ்த்தி விட்டு அரணின் கதவுகளைத் திறந்து “அல்லாஹு அக்பர்” என்று அவர்கள் உரத்து ஒலியெழுப்ப, அவ்வளவுதான் ... வெளியில் காத்துக் கொண்டிருந்த முஸ்லிம்களின் படை பதிலுக்கு “அல்லாஹு அக்பர்” என்று சொல்லி நகருக்குள் காட்டாற்று வெள்ளமாய்ப் புகுந்தது.

விடிந்தது பொழுது!

இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமானதொரு போர் அது.  பதினெட்டு மாதகால முற்றுகையை எதிர்த்துக் கொண்டிருந்த பாரசீகர்கள் அன்று நிலைகுலைந்து போயினர். ஈட்டியும் அம்பும் வாளும் பறந்து சுழன்றுகொண்டிருக்க படுஆக்ரோஷமாய் நிகழ்ந்து கொண்டிருந்தது போர். அவ்வளவு அமளியின் நடுவே ஹுர்முஸானையே முஜ்ஸாவின் கண்கள் தேடிக் கொண்டிருந்தன. ஒருவழியாய் அவனைக் கண்டதும் தனது வாளை உருவி ஏந்தி கிடுகிடுவென முன்னேறினார் முஜ்ஸா. ஆனால் தனது படை வீரர்களின் குழுவில் மறைந்து போனான் ஹுர்முஸான். ஏமாற்றமடைந்த முஜ்ஸா அவனைத்தேட சிறிது நேரத்தில் மீண்டும் அவனைக் கண்டுவிட்டார்.

இம்முறை தாமதியாமல் பாய்ந்து முன்னேறினார் முஜ்ஸா. அவனை நெருங்கி, தாக்கத் தொடங்க இருவர் மத்தியிலும் பொறி பறக்கும் வாள் சண்டை உருவானது. மணல் புழுதி கிளம்பி எழ, வாட்களின் உரசலில் தீப்பொறி பறந்தது. கடுமையான அந்தச் சண்டையின் இறுதியில் தனது வாளால் ஹுர்முஸானைத் தீர்த்துக் கட்ட முஜ்ஸா பாய்ந்த வேகத்தில் அவர் இலக்குத் தப்பியது. ஆனால் ஹுர்முஸான் அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டான். தனது வாளை அவர்மேல் அவன் பாய்ச்ச, வீர மரணம் எய்தினார் முஜ்ஸா.

தொடர்ந்து நடைபெற்ற போரில் முஸ்லிம் படையினர் வென்று ஹுர்முஸானை உயிருடன் சிறைப் பிடித்ததும், அவனை அவனுடைய ராஜ அலங்காரத்துடன் இரத்தினக்கல் பதித்த மகுடம், தங்க இழையிலான ஆடை ஆகியனவற்றுடன் மதீனாவிற்கு கலீஃபா உமரிடம் அழைத்துச் சென்றதும், ஹுர்முஸானுக்கும் உமருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலும், இறுதியில் ஹுர்முஸான் இஸ்லாத்தை ஏற்றதும் சுவையான தனிக் கதை!!

அறியப்பட்ட உலகின் இரு பெரும் வல்லரசுகளாகத் திகழ்ந்த ரோம், பாரசீகம் ஆகிய இரு அரசுகளில் வாழ்ந்த மக்கள் பகட்டான ஆடம்பர வாழ்வில் மூழ்கித் திளைத்திருந்தனர் என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

அஹ்வாஸ் என்ற பகுதியினுடைய மன்னராகத் திகழ்ந்த இந்த ஹுர்முசான் முஸ்லிம்களால் கைது செய்யப்பட்டு உமர் ரலி அவர்கள் முன்னால் நிறுத்தப்பட்ட சமயத்தில் நடந்த ஒரு சம்பவம் இதோ:

அப்போது கடும் தாகம் ஹுர்முசானுக்கு. தண்ணீர் கேட்டார் கலீபா உமர் (ரலி) அவர்களிடம். எளியதொரு பாத்திரத்தில் தண்ணீர் தரப்பட்டது அவருக்கு. இது போன்ற பாத்திரங்களில் தான் தண்ணீர் அருந்துவார்கள் முஸ்லிம்கள். எளிய பாத்திரத்தைப் பார்த்த மாத்திரத்தில் "தாகத்தில் தவித்து செத்தாலும் சாவேனேயன்றி இது போன்ற பாத்திரத்தில் நீர் அருந்த மாட்டேன்" என்று அகம்பாவமாகக் கத்தினார் ஹுர்முசான். பின்னர் அவர் விரும்பும் பாத்திரத்தில் நீர் தரப்பட்டது. (நூல்: தாரீஹ் தபரி)

கற்க வேண்டிய பாடங்கள்:

1. எடுத்துக் கொள்கின்ற பொறுப்பில் - அளவு கடந்த ஆர்வம்

2. பொறுப்பை செவ்வனே நிறைவேற்றிடத் தேவையான அனைத்துத் திறமைகளையும் பெற்றிருத்தல் (intellectual, technical and human relations skills)

3. உறுதி தரும் பொறுமை (தங்களின் அருமைத்தோழர்கள் 220 பேர் வழியில் இறந்த பின்னரும் துக்கத்தை உள்ளடக்கிக் கொண்டு பணியைத் தொடர்ந்த சுயக்கட்டுப்பாடு - self management)

4. நாம் மேலே குறிப்பிட்ட Leadership Initiative  அதாவது ஒரு பொறுப்பைத் தாமே முன் வந்து ஏற்றுக்கொண்டு செயலாற்ற முன் வருதல்

***

Traits Approach to Leadership ...

தலைமைத்துவ வெற்றிடம்!


இன்று நம்மிடையே, "தலைமைத்துவ வெற்றிடம்" ஒன்று காணப்படுகிறது. நல்லதொரு தலைவர் நமக்குக் கிடைக்க மாட்டாரா? - என்ற ஏக்கம் இங்கு எல்லாருக்கும் உண்டு. தலைவர்களை அல்லாஹ் நமக்கு வானத்திலிருந்து தொப்பென்று போட்டு விடுவதில்லை!

Leaders are born! - என்ற கருத்தை நாம் ஏற்பதற்கில்லை! மாறாக - Leaders are made! - என்ற கருத்தையே இங்கே நாம் முன் வைக்கிறோம். தலைவர்களை எப்படி நாம் உருவாக்கிட முடியும் என்று நாம் கேட்கலாம். அதனை - அண்ணல் நபியவர்களின் வாழ்க்கையிலிருந்தே - நாம் கற்றுக் கொள்ள முடியும்.

நபியவர்களின் நாற்பதாவது வயதில் தான் அவர்களுக்கு இறைத்தூதர் எனும் பொறுப்பு வழங்கப்படுகிறது. இறைத்தூதர் எனும் அந்தப் பொறுப்பின் பல்வேறு பரிமாணங்கள் என்னென்ன?

அவர் ஒரு தலைவர்! அவர் ஒரு வழிகாட்டி! அவர் - சமூகத்தைச் சீர்திருத்திட வந்த ஓர் உத்தமர்! அவர்- நல்லொழுக்கங்களை முழுமைப் படுத்த வந்தவர்! அவர் - அழகியதொரு முன்மாதிரி!

அவர் ஒரு ஆசிரியர்! இறைவன் அவருக்குக் கற்றுத் தந்த வசனங்களை மக்களுக்கு ஓதிக்காட்டி, அவர்களைத் தூய்மைப்படுத்தி, வேத அறிவையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்க வந்தவர்!

மக்களை பல்வேறு அடிமைத்தனங்களிலிருந்தும் விடுவிக்க வந்தவர்! குறுகிய உலக வாழ்வின் சுகபோகங்களிலிருந்து மக்களைத் திருப்பி, பரந்து விரிந்த மறு உலக வாழ்க்கைக்கு அவர்களைத் தயார்படுத்திடும் பொறுப்பைச் சுமந்தவர்!

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இப்படிப்பட்ட - சுமக்க முடியாத மிகப் பெரும் சுமை ஒன்று அவர்களது நாற்பதாவது வயதில் திடீரென்று அவர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறது!

அப்படியானால், நபித்துவப் பொறுப்பேற்பதற்கு முன்னர் அவர்கள் வாழ்ந்த அந்த நாற்பது ஆண்டு கால வாழ்க்கை எப்படி இருந்தது? நபித்துவப் பொறுப்பை சுமக்க இருக்கும் அண்ணலவர்களுக்கு, எப்படிப்பட்ட வாழ்க்கையை வழங்கியிருந்தான் இறைவன்? எப்படிப்பட்ட அனுபவங்களின் ஊடே அவர்களை வளர்ந்திடச் செய்தான் என்பதை நாம் ஆய்ந்து பார்த்தால், தலைமையைத் தேடும் நம்மவர்களுக்கு, அதில் பல பாடங்கள் கிடைக்கலாம் அல்லவா?

சான்றுக்கு இங்கே ஒரே ஒரு கண்ணோட்டத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

நபியவர்களுக்கு மக்காவில் இறக்கியருளப்ப்ட்ட அத்தியாயம் ஒன்றில் அல்லாஹ் இவ்வாறு விவரிக்கின்றான் நபியவர்களைப் பற்றி:

(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா? (93:6)

மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.(93:8)

நபியவர்களின் வாழ்வின் துவக்கத்தை சற்று கவனித்துப் பார்ப்போம். நபியவர்கள் பிறப்பதற்கு முன்னரேயே, தந்தை அப்துல்லாஹ் அவர்கள் இறந்து விடுகிறார்கள். நபியவர்களின் தாய் ஆமினா அவர்களும், நபியவர்களின் ஆறாவது வயதிலேயே, இறந்து விடுகிறார்கள்! அண்ணலவர்கள் அப்போது ஓர்அனாதை!

நாற்பதாவது வயதில், இறைத்தூதர் பொறுப்பை வழங்கிய இறைவன், நபியவர்களுக்கு ஓர் அனாதையின் அனுபவத்தை ஏன் வழங்கினான் என்பதை நாம் சிந்தித்துப் பார்த்திட வேண்டும்!

அது போலவே, நபியவர்கள் அன்னை கதீஜா அவர்களை மணம் முடிக்கின்ற வரை, பொருளாதாரத் தேவை உடைய "ஏழையாகத் தான்" அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்! இதுவும் ஏன் என்று நாம் சிந்தித்துப் பார்த்திட வேண்டியுள்ளது.

இதற்கான பதில், இஸ்லாத்தின் அடிப்படை வழிகாட்டுதலில் தான் பொதிந்திருக்கின்றது!

அதனை விரிவாக நாம் இங்கே சொல்ல வேண்டியதில்லை. எனினும் சுருக்கமாகச் சொல்வதென்றால், இம்மார்க்கம், அனாதைகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட மார்க்கம். ஏழைகளின் வறுமையைப் புரிந்து கொண்ட மார்க்கம்!

எனவே, இம்மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய இறைத்தூதருக்கு, இந்த அனுபவங்கள் அவசியம் என்று அவர்களை இவ்வாறு வளர்த்தெடுத்தான் போலும்!

இதிலே நமக்கென்ன படிப்பினை?

தலைவர்களை உருவாக்க விடும்பும் நாம், நம் குழந்தைகளையும், இளைஞர்களையும் - அனாதைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்பவர்களாக வளர்த்திட வேண்டும்! அது போலவே - ஏழ்மை என்றால் அது எப்படி இருக்கும் என்ற அனுபவத்தையும், அவர்களுக்குக் காட்டி வளர்த்திட வேண்டும்!

ஆங்கிலத்தில் Empathy - என்று சொல்வார்கள். அதாவது மற்றவர்களின் உணர்வுகளை, அவர்கள் நிலையில் இருந்து புரிந்து கொள்வதாகும் அது. இஸ்லாம் எப்படிப்பட்ட மார்க்கம் எனில், தாகித்த நாய் ஒன்றுக்கு தண்ணீர் புகட்டும் பெண்மணியை சுவனவாசியாக்கிப் பார்க்கும் மார்க்கம் இது! பேரித்தம் பழத்தின் ஒரு பகுதியையேனும் தர்மமாகக் கொடுத்து, நரக விடுதலை பெறச் சொல்லும் மார்க்கம் இது!

ஆனால், இன்றைய நம் "தலைவர்களின்" நிலை என்ன?

சவூதி மன்னர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் தெரியுமா, ஒரு அனாதையின் உணர்வுகள்? ஏழ்மை என்றால் என்ன என்று அவர்கள் அனுபவித்துப் பார்த்திருப்பார்களா? அந்த அனுபவம் கொஞ்சமாவது இருந்திருந்தால், இன்று - யமனிய மக்களை இன்னிலைக்கு ஆளாக்கியிருப்பார்களா? அனாதைகளின் வலியை அவர்கள் உணர்ந்திருந்தால், இஸ்ரேலை என் சகோதர நாடு என்று பின் சல்மான் சொல்வதற்கு அவருக்கு மனம் வந்திருக்குமா?

இந்த விதியை நாம் மாற்றி அமைக்க வேண்டுமெனில், அடுத்த தலைமுறைக்கு, ஏழ்மையின் அனுபவங்களை அவர்கள் உணர்ந்திடச் செய்ய வேண்டும். அப்போது தான், நாளைய தலைவர்களாக அவர்கள் உருவெடுக்கும்போது, அனாதைகளைப் பராமரிப்பார்கள். ஏழைகளுக்கு வாரி வழங்குவார்கள். அதோடு மட்டுமல்ல, உலகெங்கும் நடக்கும் அநியாயப் போர்களைத் தவிர்ப்பார்கள். அமைதியை நிலை நாட்டுவார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், ஏழைகளாக, அனாதைகளாக, அகதிகளாக அலைந்து திரிகின்ற அவலத்தைத் துடைப்பார்கள்!

அண்ணல் நபியவர்களின் நபித்துவத்துக்கு முன்னுள்ள வாழ்விலிருந்து ஒரே ஒரு கண்ணோட்டத்தை மட்டுமே இங்கே நாம் பார்த்தோம்.

(வாய்ப்பிருப்பின் இன்ஷா அல்லாஹ் பிறகு வேறு கண்ணோட்டங்களையும் எடுத்துக் கொள்வோம்)

Comments