சாதிக்கப் பிறந்தவனை சாக விடலாமா?

ரூபாய் 1000 தொலைத்ததால் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை. இது அண்மையில் நடந்த ஒரு சம்பவம்.


திருச்சிக்கு அருகில் உள்ள ஓர் கிராமம். அங்கே விவசாயி ஒருவரின் மகன் மாரிமுத்து (17). அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு, குடும்ப செலவிற்காக இவரது தந்தை நகையை அடகு வைத்தார். அதில் ரூ. ஆயிரத்தை, கடை வீதியில் நின்றிருந்த மகன் மாரிமுத்துவிடம் கொடுத்து வீட்டில் ஒப்படைக்கும் படி கூறியிருக்கிறார்.

தந்தையிடம் பணத்தைக் பெற்றுக் கொண்டு வீட்டுக்கு செல்லும் வழியில் பணத்தை தொலைத்து விட்டார். தந்தை அடிப்பார் என பயந்து மாரிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெற்ற மகனை பரி கொடுத்து வாடும் அந்தப் பெற்றோருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

சில வருடங்களுக்கு முன்பு - இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது. 19 வயது இளைஞன் ஒருவன். அவனது தந்தை புதிதாக கைபேசி ஒன்றை வாங்கித் தருகிறார். ஒரே வாரத்தில் அதனைத் தொலைத்து விட்டான் மகன். தந்தை திட்டுவாரே என பயந்த அந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டான்.


அது போலவே - சென்னையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி. பாண்டிச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல மகளை அழைத்தார் தந்தை. மகள் மறுத்து விட்டார். "என்னடி நீ குழந்தை வளர்த்த லட்சணம்", என்று மனைவியைத் திட்டினார் தந்தை. அவ்வளவு தான். அந்த மாணவி செய்து கொண்டதும் தற்கொலையே!

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. படிக்கின்றோம். மறந்து விடுகின்றோம். அவ்வளவு தானா? இது போன்ற தற்கொலைகளை நிகழ விடாமல் தடுத்திட நம்மால்முடியாதா? முடியும். முயற்சிக்க வேண்டும். தற்கொலைகளைத் தடுக்க வழி வகைகளைக் காண வேண்டியது அனைத்து சமூக ஆர்வலர்களின் கடமை என்பதை இங்கே நினைவு படுத்த விரும்புகிறோம்.

என்ன செய்யலாம்?

முதலில் மாணவர்களுக்கு சில ஆலோசனைகள்:

ஒரு பொருள் தொலைந்து விட்டது. தந்தை திட்டுவார் அல்லது அடிப்பார். அவ்வளவு தானே. நிலைமையைச் சந்திப்பது எப்படி என்று யோசிப்பதை விட்டு விட்டு தற்கொலையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டுமா? வேறு வழிகளே இல்லையா?

தம்பி! ஒரு பொருளைக் காணாமல் அடித்து வீட்டீர்கள். தந்தை திட்டுவார். என்ன செய்யலாம்? ஒன்று உங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்று அவர்கள் மூலம் பிரச்னையைத் தீர்க்க முயற்சி செய்யலாம். அல்லது - உங்கள் சக மாணவனின் பெற்றோர் வீட்டுக்குச் சென்று இது விஷயத்தில் உங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளலாம்.

அல்லது - உங்கள் மனம் கவர்ந்த ஆசிரியர் வீட்டுக்குச் சென்று அடைக்கலம் தேடலாம். இதுவெல்லாம் சரிப்பட்டு வராதா? வேண்டாம். ஒரு கடைக்குச் சென்று பகுதி நேர வேலை ஒன்றைத் தேடுங்கள். நான்கைந்து நாட்கள் வேலை செய்து இழந்த தொகையைச் சம்பாதித்து தந்தையிடம் ஒப்படைக்கலாமே.

அதற்கிடையில் தொலைபேசி மூலம் உங்கள் நிலையை உறவினர்/ நண்பர் மூலமாக உங்கள் பெற்றோருக்கு"என்னைத் தேட வேண்டாம் சில தினங்களில் வீட்டுக்கு வந்து விடுவேன்" என்று தெரியப் படுத்தலாம் தானே! இது போன்ற எத்தனையோ வழிகள் இருக்கத் தானே செய்கின்றன!

அடுத்து பெற்றோருக்கு சில ஆலோசனைகள்: ஒரு பொருளைத் தொலைப்பது என்பது எல்லோர் வாழ்விலும் நடக்கக் கூடியது தானே! அது ஒன்றும் ஹிமாலயத் தவறு கிடையாதே! இதற்குப் போய் உங்கள் பிள்ளைகள் ஏன் உங்களைக் கண்டு இப்படி பயந்து நடுங்குகிறார்கள்?
காரணம் இருக்கிறது.

அது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு பெரிய "இடைவெளி" இருக்கிறது. அதனை உருவாக்கியது நீங்கள் தான்! எந்த ஒன்றையும் குறித்து உங்களிடம் அவர்கள் நேரடியாகப் பேசி விட முடியாது. அவ்வளவு பயம்! அதனால் தான் சொல்கிறோம். இந்த இடைவெளியை நீங்கள் தகர்த்திட வேண்டும். உங்கள் பிள்ளைகள் எந்தச் சூழ்நிலையிலும் உங்களிடம் ஓடி வந்து "அடைக்கலம்" தேடிட வேண்டும். அதற்கு நீங்கள் நேரம் ஒதுக்கிட வேண்டும். மனம் திறந்து அவர்களிடம் பேசிட வேண்டும்.

வாழ்க்கையின் சவால்களை சந்திப்பது எப்படி என்று அவர்களுக்கு நீங்கள் சொல்லித் தர வேண்டும். உங்கள் பேச்சில் "பாசம்" பொங்கி வழிய வேண்டும். "அதிகாரம்" தலையெடுக்கக் கூடாது. உங்கள் பிள்ளைகள் தவறு செய்திடும்போது அந்தத் தவறையே ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்வது எப்படி என்று நீங்கள் கற்றுக் கொடுத்திட வேண்டும்.

அடுத்து ஆசிரியர்களுக்கு:ஆசிரியர்களே! நீங்கள் ஆங்கிலம், தமிழ், இயற்பியல், வரலாறு எந்தப் பாடத்தை மாணவர்களுக்கு எடுத்தாலும், அத்துடன் அவர்களுக்கென்று ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி வாழ்க்கைக் கலையைக் கற்றுக்கொடுங்கள். அதில் உங்கள் கரிசனம் தென்படட்டும்.

சினிமா இயக்குனர்களுக்கு:

மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை அடியோடு தகர்க்கும் விதத்தில் ஒன்றிரண்டு படங்கள் எடுங்களேன்.

தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு:

குழந்தை வளர்ப்பு குறித்த நிகழ்ச்சிகளை சுவாரசியமாகத் தயாரித்து ஒளிபரப்புங்களேன்.

பள்ளி நிர்வாகிகளுக்கு:

மாணவர்களுக்கு நீங்கள் soft skill வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். உணர்ச்சி வசப் படும் நேரங்களில் அறிவு பூர்வமாக செயல்படுவது எப்படி என்று அந்த வகுப்புகளில் மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். இவ்வகுப்புகளை உங்கள் பள்ளியில் தொடர்ந்து நடத்திட ஆவன செய்யுங்கள்.

மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை அகற்றி அவர்களைத் தன்னம்பிக்கையாளர்களாக மாற்றிட வேண்டிய விஷயத்தில் மத்திய மாநில அரசுகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஏனெனில் நமது மாணவர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். அவர்களை நாம் சாக விடக் கூடாது!

Comments