தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்! திட்டித் தீர்க்க வேண்டாம்! – பகுதி 1

இல்லறச் சிக்கல்கள் எதுவாயினும், அவற்றுக்கு அழகிய தீர்வுகள் இருக்கின்றன! இன்ஷா அல்லாஹ் இது நூறு சதவிகிதம் சாத்தியம்!

பல கணவன் மனைவியர் தங்களது இல்லறத்தில் பிரச்னைகள் தோன்றி அவை மேலும் சிக்கலாகி விட்டால், அவை தீர்க்கப்படவே முடியாது என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர்.


"அவர் திருந்தவே மாட்டார் - அவர் திருந்துவதற்கு சாத்தியமே கிடையாது; நான் எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பார்த்து விட்டேன்! "ம்ஹூம்! சாத்தியமே கிடையாது!" - இது மனைவியரின் புலம்பல்!

"அவளாவது திருந்துவதாவது! அவள் திருந்துவதற்கு வாய்ப்பே கிடையாது; நானும் எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பார்த்து விட்டேன்! "ம்ஹூம்! சாத்தியமில்லை!" - இது கணவனின் புலம்பல்!


நமது கேள்வி என்னவென்றால் - எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பார்த்து விட்டோம்" என்று சொல்கிறார்களே, அப்படி என்ன முயற்சியெல்லாம் இவர்கள் செய்து பார்த்து விட்டு இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள்?

இவர்கள் செய்த முயற்சிகளெல்லாமே தவறான வழியில் செய்யப்பட்ட முயற்சிகள்! இன்னும் சொல்லப்போனால், இவர்களது இல்லறம் சிக்கலாகிப் போனதற்குக் காரணமே இவர்களது தப்பும் தவறுமான அணுகுமுறைகள் தாம்!

இவர்களது தவறான அணுகுமுறைகளுள் ஒன்று தான் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சுமத்திக் கொண்டே இருப்பது!  இதனை ஆங்கிலத்தில் Blaming என்கிறார்கள்.

"நான் எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்து விட்டேன்! அவள் கேட்கவே இல்லை!" என்பார்கள். ஆனால் "எப்படிச் சொன்னீர்கள்?" என்று கேட்டால் - விழிப்பார்கள்.

அவர்கள் பயன் படுத்துகின்ற "கருத்துப் பரிமாற்றத்தை" அப்படியே தருகிறோம். நீங்களே சொல்லுங்கள் இந்த அணுகுமுறை குறித்து!

- "உளராதே!" / "உளராதீங்க!"

- "வாள் வாள் என்று கத்தாதீர்கள்!" / "வாள் வாள் என்று கத்தாதே!"

- "உயிரை வாங்காதீங்க!" / "உயிரை வாங்காதே!"

- "கழுத்தை அறுக்காதீங்க!"  / கழுத்தை அறுக்காதே!

- "உங்களுக்கென்ன, வச்சா குடுமி, சிறைச்சா மொட்டை!"

- "ஏய், நாக்க அளந்து பேசு! அப்புறம் மரியாதை கெட்டு விடும்!"

- "வாயைப் பொத்துன்னு சொல்றேன்ல!" / உங்க வாயைப் பொத்துங்க முதல்ல!"

- " டார்ச்சர் பண்ணாதீங்க! / டார்ச்சர் பண்ணாதே!

- "நீ எந்த வேலையையாவது உருப்படியா செஞ்சிருக்கியா?"

- "நீங்க எந்த வேலையையாவது ஒழுங்கா செஞ்சிருக்கீங்களா?"

போதுமா?

எனவே இந்த Blaming  குறித்து இன்ஷா அல்லாஹ் இன்னும் எழுதுவோம்.

குற்றம் சுமத்தும் வழிமுறையை நிறுத்தி கணவன் மனைவி உறவைச் சரி செய்வது எப்படி என்பது பற்றியும் எழுதுவோம்.

Blaming  என்றால் என்ன?

கடுமையான சொற்களால் ஒருவரை குற்றம் சுமத்துவதற்குப் பெயர் தான் Blaming!  இதில் வார்த்தைகளாலேயே ஒருவரை தண்டிப்பதும், மட்டம் தட்டுவதும், இழிவு படுத்துவதும் அடங்கும். பார்க்கின்ற பார்வையினாலும், முகம் காட்டும் கோணல்களாலும் ஒருவரைத் தண்டிப்பதும் அடங்கும்! -

ஏன் கணவனோ அல்லது மனைவியோ இவ்வாறு ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள வேண்டும்?

ஒரு சான்று:

கணவன் அவசரமாக அலுவலகம் சென்றிட வேண்டும். மனைவியிடம் ஒரு சட்டை மற்றும் ஒரு பேண்ட்ஸ் அயர்ன் செய்து சீக்கிரம் ரெடி பண்ணி வைக்கச் சொல்கிறான்.

மனைவி அயர்ன் செய்வதற்குத் தயாராகும்போது, தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது. அது மனைவியின் நெருங்கிய தோழி ஒருவரிடமிருந்து வந்த வெளிநாட்டு அழைப்பு. அவர்கள் பேசி நீண்ட நாட்களாகி விட்டன. பல தடவை போன் செய்த போது இணைப்பு கிடைக்கவில்லை. இப்போது கிடைத்திருக்கிறது. "ஒரு பத்து நிமிடம் பேசி விட்டு விரைவில் பெட்டி போட்டுக் கொடுத்து விடுவோம்" என்று பேசுகிறார் தோழியிடம்.
பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனது தெரியவில்லை! அரை மணி நேரம் பேச்சு தொடர்கிறது. கணவன் குளித்து விட்டு ரெடியாகி வரும்போது, மனைவி கையில் செல் போன்! தோளில் சட்டை பேன்ட்ஸ்.

கோபம் வருமா வராதா கணவனுக்கு?

"உன்னைப் போய் அயர்ன் பண்ணிக் கேட்டேனே1 என்னை செருப்பால அடிச்சுக்கணும்!"

மனைவிக்கு இது எப்படி இருக்கும்?

சட்டை பேண்டை தானே எடுத்துப்போய் தானே அயர்ன் செய்து கொண்டு, அவசர அவசரமாகப் பசியாறி விட்டு, அவசர அவசரமாக அலுவலகம் சென்றால் முக்கியக் கோப்புகளை வீட்டிலேயே மறந்து விட்டு வந்தது நினைவுக்கு வர - அலுவலகத்தில் மேல் அதிகாரியிடம் திட்டு வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினால் தனது தோல்வி அனைத்துக்கும் மனைவியே காரணம் என்று நினைக்கும் கணவன்மார்களே குற்றம் சுமத்தும் கணவன்மார்கள்!

இதே போன்ற உதாரணத்தை மனைவிக்கும் நாம் சொல்லலாம். மனைவியின் உறவினர் அன்று மாலை வீட்டுக்கு வருவதனால், டின்னருக்காக, மனைவி சில nuts வகைகளை வாங்கிக் கொண்டு வரச்சொல்ல, மாலையில் அதனை வாங்க மறந்து விட்டுக் கணவன் வீட்டுக்கு வந்து நிற்க - மனைவி "எங்கே nuts?" என்று கேட்க, "அடடா, மறந்து விட்டேனே!" என்று கணவன் சொல்ல

- கோபம் வருமா வராதா மனைவிக்கு?

"எந்த வேலையையாவது நீங்க ஒழுங்கா செஞ்சிருக்கீங்களா? உங்கள் கிட்ட போய் வாங்கிக் கேட்டேனே?"

கணவனுக்கு இது எப்படி இருக்கும்?

மனைவி nuts வகைகள் எதுவும் இல்லாமலேயே இனிப்பு செய்து சமாளிக்க அது திருப்தியில்லாமல் போக - ("அவர்கள் வீட்டுக்கு நான் போயிருந்த போது என்னமாய் என்னைக் கவனித்தார்கள்!) இந்த அவமானமான சூழ்நிலைக்குக் கணவனே முழுக் காரணம் என்று நினைக்கும் மனைவிமார்களே குற்றம் சுமத்தும் மனைவிமார்கள்!

எப்போதாவது தான் இது போன்று நடக்கிறது என்றால் மறந்து போகலாம். ஆனால் இரண்டு நாளைக்கு ஒரு முறை அல்லது ஒரு நாளிலேயே பல முறை என்று ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்துக்கும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருந்தால் என்னவாகும்?

கட்டுரையின் துவக்கத்தில் நாம் சொல்லிக்காட்டியது போல -
"இவரை இனி நாம் திருத்தவே முடியாது!" என்று முடிவு கட்டி விடுகிறார்கள் கணவனும் மனைவியும்!

இதிலிருந்து மீள்வது எப்படி என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
ஆனால் -  ஒன்றை இங்கே வலியுருத்திச் சொல்ல விரும்புவது என்னவென்றால் =

இது போன்ற குற்றம் சுமத்தும் கணவன் மனைவியர்கள் இரண்டு ஆண்டுகளிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் விவாக விலக்கை நாடி விடுகின்றார்கள்!

தொடர்ந்து குற்றம் சுமத்துதல் என்பது விவாக விலக்கு ஏற்படுவதற்கான ஒரு முன்னெச்சரிக்கை!

Comments