தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்! திட்டித் தீர்க்க வேண்டாம்! – பகுதி 3

கணவன் (அல்லது மனைவி) ஏதாவது ஒரு தவறைச் செய்து, அதனால்   நினைத்த ஒன்று நடக்காமல் போய் விட்டால், மனைவி (அல்லது கணவன்) உடனே உணர்ச்சி வசப்பட்டு அதற்கு சட்டென்று எதிர்வினையாக (react) திட்டத் தொடங்கி விடுகிறார். "உன்னால் தான் இந்த நிலை!" என்று!!

இந்தச் சட்டென்ற எதிர்வினை அறிவுபூர்வமானதாக இருக்காது. உணர்ச்சியால் உந்தப்பட்டு சட்டெனப் பேசி விடுவோம்! வரம்பு மீறி வார்த்தைகளைக் கொட்டி விடுவோம்!

எனவே நாம் என்ன செய்திட வேண்டும்? பிரவாகம் எடுத்துப் பொங்கி எழுகின்ற உணர்ச்சியை நாம் சற்றே அடக்கிக் கொள்ள முயல வேண்டும்.


கோப உணர்ச்சியை விழுங்கிட வேண்டும். (இதற்குப் பயிற்சி தேவை. அனால் முடியாதது ஒன்றும் இல்லை). வாய்க்குப் பூட்டு போட்டு விட வேண்டும்.
நின்று கொண்டிருந்தால் அப்படியே உட்கார்ந்து விட வேண்டும். நன்றாக மூச்சை இழுத்து ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டும்.


நிதானத்துக்கு வந்த பிறகு, என்ன நடந்ததோ அதனை வேறு கோணத்தில் சிந்தித்துப் பார்த்திட முயற்சிக்க வேண்டும்.

நாம் முன்பு காட்டிய உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். கணவன் வீட்டுக்குத் திரும்பும்போது, nuts வாங்கி வர மறந்து விட்டார் அல்லவா? இதனை மனைவி எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்?

"அவர் வேண்டுமென்று மறந்திருக்க மாட்டார்! அலுவலக வேலை அவருக்கு மறதியைத் தந்திருக்க வேண்டும்!"

"எத்தனையோ தடவை நாம் சொல்வதை அப்படியே வாங்கிக் கொடுப்பவர் தானே இவர்?

"நாம் அவரைத் திட்டி விட்டால், அவர் மனம் என்ன பாடுபடும்? அவர் மனத்தை புண்படுத்தி நமக்கு என்ன ஆகப்போகின்றது!"

"நாம் இடையே ஒரு போன் செய்து நினைவூட்டி யிருக்கலாம் தானே! தவறு அவர் மீது மட்டும் அல்லவே!"

"மாதத்துவக்கத்திலேயே மளிகைப்பொருட்களை வாங்கும்போதே இந்த nuts வகைகளையும் சேர்த்து வாங்கிக் கொள்!" - என்று பல தடவை அவர் என்னிடம் சொல்லியிருக்கும்போது அப்படி வாங்கி வைக்காதது என் தவறு தானே!

இந்தக் கோணத்தில் நீங்கள் சிந்தித்தால், கணவன் மேல் உள்ள கோபம் பறந்து போய் விடும்! மாறாக அவர் மீது இரக்கப் படத் துவங்கி விடுவீர்கள்!

அதோடு விட்டு விடாமல், இனி அடுத்து இது போன்று நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை இருவரும் சேர்ந்தே யோசிக்கலாம் தானே!

இந்த அணுகு முறையில் கணவன் மனைவி நல்லுறவு, நேசம், கருணை, எல்லாம் பாதுகாக்கப்படுகிறது!

முயற்சி செய்து பாருங்கள்! அதிசயங்கள் நடந்தேரும் உங்கள் குடும்பத்தில்!

Comments