அப்படியானால் நீங்கள் காதல் திருமணத்தை ஆதரிக்கின்றீர்களா?”

திருமணம் என்பது ஒரு நீண்ட கால உறவு! அதாவது - long term relationship ஆகும்! நமது இல்லற உறவுகள் நீடித்து நிலைத்திருப்பதையே அல்லாஹு தஆலா பெரிதும் விரும்புகின்றான்.

திருமணம் என்ற அந்த நீண்ட கால உறவைப் பாதுகாப்பதற்கு அல்லாஹ் அமைத்துக் கொடுத்துள்ள மிக மிக அடிப்படையான அத்திவாரம் (foundation) தான் மவத்தத் எனும் "அபரிமிதமான காதல்!  அன்பு! நேசம்! அதாவது LOVE!
இதுவே அல்லாஹ் கற்றுத் தரும் காதல்!


இந்தக் காதல் இனக் கவர்ச்சிக் காதல் அன்று! இனக் கவர்ச்சியினால் ஏற்படும் காதலுக்கு அற்ப ஆயுள்! இந்தக் காதல் 36-24-36 ஏற்படுத்தும் காதல்! இதனை "மவத்தத்" என்று குறிப்பிட முடியாது!

அப்படியானால் மவத்தத் கொண்டு வருகின்ற காதல் என்பது எது?
மவத்தத் என்ற நேசம் என்பது உடலாலும் உள்ளத்தாலும் நேசிப்பதைக் குறிக்கும்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வோம் இங்கே.

நமக்கு ஏதாவது ஒன்று பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் மற்றவர்கள் நம்மிடம் வந்து நீங்கள் விரும்புகின்ற அந்த ஒன்றின் குறைகளை எடுத்துச் சொன்னால் நாம் என்ன சொல்வோம்?

அந்தக் குறைகளை மறுப்போம்! அதாவது அந்தக் குறை அதற்குக் கிடையாது என்று மறுத்து விடுவோம்.

அல்லது அவைகளைக் குறையெனவே எடுத்துக் கொள்ள மாட்டோம். "இதுவெல்லாம் ஒரு குறையா?" என்று ஒதுக்கித் தள்ளி விடுவோம்.

அல்லது அந்தக் குறையைப் பொருட்படுத்திட மாட்டோம். "அப்படியா! இருந்து விட்டுப் போகட்டுமே1" என்று மற்றவர்கள் வாயை அடைத்து விடுவோம்.
இது ஏன்?

ஏனெனில் நமக்கு "அது" பிடித்துப்போய் விட்டது! அது தான் காதல்! காதலுக்குக் கண்ணில்லை என்பது இதனால் தான்!

இதைத்தான் நாமும் சொல்கிறோம்! இதே நிலையை அப்படியே கணவன் மனைவி உறவில் பிரதிபலித்துக் காட்டிட வேண்டியது தானே! .

உங்கள் மனைவியின் மீது உனக்கு அன்பிருக்கின்றதா? காதல் இருக்கின்றதா? நேசம் இருக்கின்றதா? இருக்கிறது தானே!

காதல் இருந்து விட்டால் போதுமே! உங்கள் மனைவியின் குறைகள் உங்களுக்குக் குறைகளாகவே தெரியாதே!

அதாவது மவத்தத் எனும் காதல் எதிர்பார்ப்பது குறைகளைக் கண்டுகொள்ளாத தன்மையைத் தான்!

இதனை ஒரு நற்குணமாகவே ஆக்கியிருக்கின்றான் வல்லோன் அல்லாஹ்! இந்த நற்பண்புக்கு "அஃப்வுன்" - 'afwun' - என்று பெயர்.

அதாவது குறைகளைப் பொருட்படுத்தாமல் விட்டு விடும் தன்மை!
ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு எழுபது தடவை மன்னிக்கச் சொல்கிறது மார்க்கம். பணியாளரை மன்னிப்பீர்கள். மனைவியை மன்னிக்க மாட்டீர்களா? கணவரை மன்னிக்க மாட்டீர்களா?

எனவே கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவரின் நல்லவைகளையே, நற்பண்புகளையே கவனத்தில் கொள்ள வேண்டும். குறைகளை பொருட்படுத்தாது புறக்கணித்து விட்டு விட வேண்டும்.

நமது வாழ்க்கைத்துணை செய்திடுகின்ற நல்லவைகளை கல்லில் பொறித்தது போல் ஆழமாக நம் நினைவில் வைத்திட வேண்டும். கசப்பானவைகளை நீரில் எழுதியது போல் மறந்து விட வேண்டும்.

ஆனால் பலர் - இதற்கு நேர் மாற்றமாக நடந்து கொள்கின்றனர். இதுவே இல்லறத்தின் எல்லாப் பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம் ஆகும்.
கணவன் அல்லது மனைவி ஏதாவது நல்லதைச் செய்தால் - "அது என் உரிமை; எனக்கு அவர் இதனைச் செய்து தானே ஆக வேண்டும்" என்று எடுத்துக்கொள்கிறார்கள்.

ஆனால் ஒரு தவறைச் செய்து விட்டால், அது ஏதோ திட்டம் போட்டு செய்யப்பட்ட கிரிமினல் குற்றம் போல் எடுத்துக் கொண்டு விடுகிறார்கள்.

ஆனால் அல்லாஹ் சொல்லித் தருவதோ இதற்கு நேர் மாற்றமானதை!
அடுத்து மவத்தத் எதிர்பார்க்கும் இன்னொரு தன்மை - "மரியாதை". அதாவது Respect.  நேசம் என்பது ஒருவர் மீது நாம் வைத்திருக்கின்ற மதிப்பின் (respect)  வெளிப்பாடு .ஆகும். யார் மீது நமக்கு மதிப்பு இல்லையோ, அவரை நாம் நேசித்திட முடியாது.

ஆனால் நாம் அன்பு செலுத்துகின்ற மனைவியை நாம் எப்படி மரியாதைக் குறைவாக நடத்திட முடியும்?  அதுவும் மற்றவர்கள் முன்னிலையில்? வீட்டுக்கு வெளியில்?

உன் மனைவியை வீட்டிலே தவிர கண்டிக்காதீர்கள் என்பது நபிமொழி!
கணவன் மனைவிக்கிடையேயான இந்த நேசத்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக "ஊட்டி வளர்த்திட வேண்டும்"! இது தானாக வளர்ந்திடாது! எந்த அளவுக்கு ஊட்டி வளர்க்கின்றோமோ அந்த அளவு அறுவடை செய்யலாம்!

கணவன் மனைவி நேசத்தை எவ்வாறு ஊட்டி வளப்பது?

இருவரும் ஒன்று சேர்ந்து நேரத்தைச் செலவிடுங்கள். உங்கள் நண்பர்களுடன் வெளியே நீங்கள் அதிக நேரம் செலவிடுவதை விட இது சிறந்தது!

ஒருவர் ஆர்வத்துடன் ஒன்றில் ஈடுபட்டால், மற்றவர் அதற்கு துணை செய்யட்டும். ஒத்துழைக்கட்டும். பாராட்டட்டும்.

காதலை வளர்ப்பதற்கு ஒருவர் மீது ஒருவர் "நம்பிக்கை" (trust) வைப்பது மிக அவசியம். இந்த நம்பிக்கை தொலைந்தால் நேசம் குழிதோண்டி புதைக்கப்படும்!

காதலை வளர்ப்பதற்கு இன்னொரு மிக முக்கியமான வழி - ஒருவரின் உணர்வுகளை மற்றவர் புரிந்து கொள்வதும், அதற்கு மதிப்பளிப்பதுவும் தான். துணைவரின் பார்வைக்கு என்ன பொருள், சமிக்ஞைக்கு என்ன பொருள், முக பாவனைக்கு என்ன பொருள் என்பதெல்லாம் மற்றவர் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்தக் காதல் அதிகரித்திடும் இன்னொரு வழி துணைவருக்கு ஒரு சோதனை; ஒரு காய்ச்சல், மனரீதியான ஒரு பிரச்சனை என்றால், அதனை புரிந்து கொண்டு துணைவருக்கு ஆறுதலாக நடந்து கொள்வது தான் அது.

இவ்வாறு மவத்தத் எனும் கணவன் மனைவி காதல் பற்றி ஒரு பயிலரங்கத்தில் பேசப்பட்டது.

கலந்து கொண்ட பெண்மணி ஒருவர் எழுதிக் கேட்டார்:

"அப்படியானால் நீங்கள் காதல் திருமணத்தை ஆதரிக்கின்றீர்களா?"

பதிலை நீங்களே சொல்லுங்கள்!

Comments