“ஆமாம்! யாரைக் கல்யாணம் முடிக்கப் போறீங்க?”

திருமறை திருக்குர்ஆனின் பின் வரும் இறைவசனத்தில் ஒருவர் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்திட ஒரு அளவுகோளை நமக்கு வழங்கியுள்ளான் உயர்ந்தோன் அல்லாஹு தஆலா. .


அநாதைப் பெண்களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3)

பொதுவாகவே இவ்வசனத்துக்கு விளக்கம் அளித்திடும்போது மார்க்க அறிஞர்கள் சட்ட ரீதியான விளக்கங்களுக்குச் சென்று விடுகின்றார்கள்.

ஆனால் இவ்வசனத்தில் திருமணம் முடிக்க இருக்கின்ற ஆடவர்களுக்கு ஒரு அருமையான “வழிமுறையை” அல்லாஹ் காட்டித் தந்திருப்பதை கண்டுகொள்ளத் தவறி விடுகிறார்கள்.

அது என்ன?

“ஃபன்கிஹூ மா தாப லகும் மினன்-னிஸாஇ” என்பது வசனத்தின் ஒரு பகுதி.

இதன் பொருள்: “உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள்!”

இச்சொற்றொடரில் “பிடித்தமான” என்ற சொல்லுக்குரிய அரபிச்சொல் “தாப” என்பதாகும்.

ஆனால் இந்தத் “தாப” என்ற சொல் மிகவும் அருமையான ஒரு சொல் ஆகும். இம்மூலச்சொல்லிலிருந்து பிரிகின்ற வேறு சில சொற்களும் திருமறையில் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

தாப, தூபா, திப், தய்யிப், தய்யிபாத் – என்பன அவற்றுள் சிலவாகும்.

இந்தச்சொல்லுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு என்னென்ன பொருள்களைத் தருகிறது என்று பார்ப்போம்.

to be good, pleasant, agreeable, to be delightful, delicious, to please someone, be to someone’s liking, to make something sweet, to sweeten, to scent, to perfume, to spice, to set someone’s mind at rest, to joke, jest, make fun with someone.

இப்படிப்பட்ட பொருள்களையெல்லாம் நாம் இந்த சொற்றொடருக்குப் பயன்படுத்தினால் – என்னென்ன பொருள்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

“உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள்!”

“உங்கள் மனதிற்கு இன்பம் அளிக்கின்ற” / உங்கள் மனதிற்கு ஒத்துப்போகின்ற / உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற / உங்களுக்கு இனிப்பான/ உங்களுக்கு நறுமணம் அளிக்கின்ற / உங்கள் மனதிற்கு அமைதி அளிக்கின்ற / நகைச்சுவையால் உங்களை மகிழ்விக்கின்ற பெண்களை மணந்து கொள்ளுங்கள்!” -

என்றெல்லாம் பொருள்கள் விரிகின்றன.

இச்சொல்லில் இருந்து பிரிகின்ற இன்னொரு சொல் தய்யிப். இச்சொல்லும் திருமறையில் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தய்யிப் என்றால் பொதுவாக நல்லவர் என்று பொருள்.

ஆங்கிலத்தில் தய்யிப் என்பதற்கு = good, pleasant, agreeable, disposed, friendly, kindly, good-natured, cheerful -  என்று பொருள் செய்யப்படுகின்றன.

“கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.” (24:26)

இவ்வசனத்தில் வருகின்ற நல்ல தூய்மையுடைய ஆண்களைக் குறித்திட “தய்யிபூன” என்ற சொல்லும் நல்ல தூய்மையுடைய பெண்களைக் குறித்திட “தய்யிபாத்தி” என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இன்னும் ஆழமாக இதனை நாம் புரிந்து கொள்ள “தய்யிப்” என்பதன் எதிர்ச்சொல்லை நாம் ஆய்வு செய்தல் நல்லது,

இதே வசனத்தில் – கெட்ட ஆண்களையும், கெட்ட பெண்களையும் குறித்திட – ஃகபீஃதூன, ஃகபீஃதாத்தி – என்ற இரு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஃகபஃத என்ற இதன் மூலச்சொல்லுக்கு என்ன பொருள்?

to be bad, to be wicked, evil, malicious, vicious, malignant, to feel awkward, feel embarrassed – போன்ற பொருள்கள் எல்லாம் உண்டு.

ஃகபீஃத் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

bad, wicked, spiteful, noxious, injurious, harmful, offensive, repulsive, nauseating, disgusting (odour) -  என்றெல்லாம் பொருள்.

அதாவது கெட்ட ஆண்களும், கெட்ட பெண்களும் எப்படிப்பட்டவர்கள் என்றால் – அவர்கள் ஒழுக்கக் குறைவானவர்கள், வன்மம் பிடித்தவர்கள், நச்சுத் தன்மை கொண்டவர்கள், கெடுதல் செய்பவர்கள், தீங்கு விளைவிப்பவர்கள், குழப்புபவர்கள்,  மனதைப் புண்படுத்துபவர்கள், வெறுப்பூட்டுபவர்கள், குமட்டல் உண்டாக்குபவர்கள்!

தூபா என்றொரு சொல். இதுவும் தாப எனும் சொல்லிலிருந்து பெறப்படுகின்ற இன்னொரு கிளைச்சொல்லாகும்.

எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு.(13:29)

for those who believe and work righteousness is every blessedness and a beautiful place of final return.” (Qur’an 13:28-29)

தூபா என்பது தமிழில் நற்பாக்கியங்கள் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “every blessedness” என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தூபா என்பதன் ஆழமான பொருளை இஸ்லாமிய அறிஞர் ஒருவர் இப்படிச் சொல்கிறார்:

the word tubaa includes in its meaning an internal state of satisfaction and joy, peace of mind, tranquility of heart, and serenity of conscience.

“உங்களுக்குப் பிடித்தவரைத்” திருமணம் செய்யுங்கள் என்று அல்லாஹுத ஆலா சொல்வதன் ஆழமான கருத்து உங்களுக்கு இப்போது தெளிவாகப் புரிகிறதா?

திருமணம் முடிக்க விரும்பும் ஆண்கள் எப்படிப்பட்ட பெண்களைத் திருமணம் முடித்திட வேண்டும் என்று வல்லோன் அல்லாஹ் வழிகாட்டியிருக்கின்றானோ அவ்வழியைப் பின்பற்றி தங்களின் திருமண வாழ்வை வளமாக்கிக் கொள்வார்களாக!

சுருக்கமாகச் சொல்வதென்றால் – உங்களுக்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், குதூகலத்தையும், மன நிம்மதியையும், நறுமணத்தையும், தூய்மையான இல்லற வாழ்வையும் யார் தருவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அவர்களையே நீங்கள் திருமணம் முடியுங்கள்!

Comments