நூல்: திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை - பகுதி 2

தொடர்ந்து படிப்பதா? அல்லது திருமணம் முடிப்பதா?

கேள்வி:

இந்தக் காலத்தில் படித்த பெண்களைத் தான் திருமணத்தின் போது விரும்புகிறார்கள். இந்த நிலையில் படித்து பட்டம் வாங்க விரும்பினால் திருமணம் தாமதமாகிறது. இந்த சூழ்நிலையில் தொடர்ந்து படிப்பதா? அல்லது திருமணம் முடிப்பதா? இவற்றில் எது சிறந்தது?


பதில்:

இக்கேள்விக்கு எல்லோருக்கும் பொருந்தி வரக்கூடிய பொதுவான ஒரு பதிலைத் தர இயலாது.

பருவ வயதை எட்டுகின்ற ஒவ்வொரு பெண்ணும் - இக்கால சூழ்நிலையையும், நமது மார்க்கத்தின் எதிர்பார்ப்புகளையும் கவனத்தில் கொண்டு தன் திருமணம் மற்றும் தனது மேற்படிப்பு குறித்து தன் குடும்பத்தினருடன் மனம் திறந்து பேசி, அவர்களுடன் கலந்தாலோசித்து நல்லதொரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.
திருமணம் ஆகாத ஒரு பெண்ணைப் பொறுத்தவரை மார்க்கம் எதிர்பார்ப்பதென்ன? உங்களில் திருமணம் ஆகாதவருக்கு திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்பதே நபிமொழி.

ஆனால் இக்கால சூழ்நிலைகள் ஒரு பெண்ணை எவ்விதங்களில் பாதிக்கின்றன?



படித்து பட்டம் வாங்கினால் தான் நல்ல மாப்பிளை கிடைப்பார்கள் என்கின்ற ஒரு கருத்தோட்டம் நிலவுகின்ற ஒரு காலம்.

மார்க்கத்தை பின்பற்றி வாழத் துடிக்கும் பெண்ணுக்குக் கூட, மார்க்கத்தைப் பின்பற்றி நடக்கும் மாப்பிள்ளை கிடைப்பது அரிதான ஒரு காலகட்டம்.

என்ன படித்திருந்தாலும் ஒரு பெண்ணின் திருமணச் செலவுக்காக பொருள் சேர்த்தாக வேண்டியிருப்பதால் திருமணம் தாமதமாகும் நிலை.

திருமணம் தாமதமாவதால், திருமண உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு நிலை.

ஒரு பெண் இவ்வாறு முடிவு செய்தால் அது நல்லதே:

"எனக்குப் படிப்பில் மிகுந்த ஆர்வம் இருக்கின்றது. நான் மேற்படிப்பு படிக்கவே ஆசைப்படுகின்றேன். எனது படிப்பு என் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியம் எனக் கருதுகிறேன்".

ஆனால் குடும்பத்தினர், தங்கள் பெண்ணுக்கு உடன் திருமணம் செய்து விட விரும்புகிறார்கள். மார்க்கத்தின் விருப்பமும் அது தான். இந்தச் சூழலில் அந்தப் பெண் என்ன செய்யலாம்?

திருமண ஏற்பாடுகளைத் தொடங்கி விடலாம். பெண் கேட்டு வருகின்ற மாப்பிள்ளை வீட்டாரிடம் - திருமணத்திற்குப் பிறகு, தங்கள் மகள் படிப்பைத் தொடர்ந்திட அனுமதி அளித்திட வேண்டும் என்பதை திருமண ஒப்பந்தத்திலே எழுதிக் கொண்டு விடலாம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

ஆனால் - இன்னொரு குடும்பத்தின் நிலை வேறு:

பெண் படிக்க ஆசைப் படுகிறாள். குடும்பமோ போதுமான வசதி இல்லாத குடும்பம். தங்கள் பெண்ணுக்கு உடன் திருமணம் செய்து வைக்க இயலாது.
இந்தச் சூழலில் ஒரு பெண் மேற்படிப்பைத் தேர்வு செய்திடலாம்.

ஆனால் ஒரே ஒரு பிரச்னை தான்.

அது என்ன? திருமண உணர்வுகள் தலை தூக்கினால் என்ன செய்வது?

கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின் பற்றலாம்:

1. உள்ளச்சத்துடன் தொழுதிட வேண்டும். ஆனால் தொழுகை சடங்காகிப் போய்விடக் கூடாது.

2. உபரியான நோன்புகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

3. வெளியே செல்லும்போது - கண் பார்வையைத் தாழ்த்திக்கொண்டு செல்ல வேண்டும்.

4. ஹிஜாப் - முழுமையாகப் பேணிட வேண்டும்.

5. ஆண்கள் கூடுகின்ற பகுதிக்கு செல்வதைத் தவிர்த்திட வேண்டும். குறிப்பாக இருபாலர் படிக்கின்ற கல்லூரியில் சேர்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

6. பாலியல் சம்பந்தப்பட்ட பேச்சுக்களைப் பேசுகின்ற இடங்களைத் தவிர்க்க வேண்டும்.

7. பாலியல் சம்பந்தப்பட்ட வார மாத இதழ்கள், வலைதளங்கள் இவற்றை முற்றாகத் தவிர்த்திட வேண்டும்.

8. உடற்பயிற்சி அவசியம்.

9. திருமணம் ஆகும் வரையிலான கால கட்டம் வரை - ஒரு குறிப்பிட்ட லட்சியத்தை நிறைவேற்றிட தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

10. இறைவனைப் பற்றி அதிகம் அதிகம் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். எப்போதும் திருக்குர்ஆனும் கையுமாக இருந்திட வேண்டும்.


திருமணம் என் இலட்சியத்துக்குத் தடையானால்?

கேள்வி:

என் இலட்சியம் நிறைவேறுகின்ற வரை திருமணத்தை ஒத்திப் போடலாமா? (ஒரு இளைஞி)

பதில்:


திருமணத்தை ஒத்திப் போடத் தேவையில்லை. உங்கள் கணவரே உங்கள் இலட்சியத்துக்கும் துணை நிற்கலாம் அல்லவா?

ஆனால் திருமணத்துக்கு முன்னரே நீங்கள் மணம் செய்து கொள்ள விரும்புபவரிடம் உங்கள் இலட்சியம் குறித்து உங்கள் நிலை என்ன என்பதை பேசிக் கொள்வது நல்லது.

திருமணம் முடிந்ததும் பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டால்.....

பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக உள ரீதியாகத் துன்பப்பட வேண்டியிருக்கும்.

புதிதாக திருமணம் முடித்த ஒரு பெண்மணியின் தாயார் சொன்னார்:

"மகள் படிக்கிறாள்; எனவே படிப்பு முடிந்ததும் தான் திருமணம் என்று சொன்னோம். திருமணம் முடித்துக் கொண்டு படிப்பையும் தொடரட்டுமே என்று சொல்லி எங்களைத் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தார்கள். ஆனால் திருமணம் முடிந்ததும் படிப்பைத் தொடர அனுமதிக்கவில்லை."

இப்படிப்பட்ட பிரச்னைகள் வராமல் இருக்க, திருமண ஒப்பந்தத்திலேயே மணமகளின் எதிர்பார்ப்புகளை எழுதி மணமகன் வீட்டாரின் சம்மதத்தைப் பெற்றுக்கொண்டு மணம் முடித்தல் நலம் என்கிறார் இஸ்லாமிய திருமண ஆலோசகர் ஒருவர்.

கணவனின் இலட்சியத்துக்கு மனைவி துணை நிற்பதும், மனைவியின் இலட்சியத்துக்கு கணவன் துணை நிற்பதும் தான் இனிக்கும் இல்லறத்தின் மிக முக்கியமான தேவைகளுள் ஒன்று ஆகும்.


மாப்பிள்ளையிடம் பேசுவது சரியா? தவறா?

கேள்வி:

பெற்றோர் பார்த்து முடிவு செய்ததற்குப் பிறகு தனக்குப் பார்த்த மாப்பிள்ளையிடம் பேசுவது சரியா? தவறா?

பதில்:

வருங்காலக் கணவன் என்பவன் – திருமணம் ஆகும் வரை ஒரு அன்னிய மனிதனே! பெற்றோர் பார்த்து முடிவு செய்ததற்குப் பிறகும் கூட திருமணம் நின்று போய் விட வாய்ப்புகளே இல்லை என்று சொல்லிட இயலாது! எனவே ஒரு மனைவி கணவனுடன் பேசுவது போல், திருமணத்துக்கு முன்னர் இருவரும் பேசிக்கொள்ள அனுமதி இல்லை.

எனினும் – திருமணத்துக்கு முன்னர் மணப்பெண், தான் மணக்க இருக்கும் மாப்பிள்ளையுடன் பேசுவதற்கு இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி உண்டு.



ஒன்று: பெற்றோர் முடிவு செய்திடுவதற்கு முன்னரேயே, ஒரு பெண் அல்லது ஆண் – தான் திருமணம் செய்து கொள்ள இவர் பொறுத்தமானவர் தானா என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், திருமணத்தின் வழியே இருவரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது பற்றியும் பேசிக் கொள்வதற்கு அவ்விருவருக்கும் அனுமதி உண்டு.

இரண்டு: அப்போதும் கூட அவ்விருவரும் தனிமையில் பேசிக் கொள்வதற்கு இறைவன் அனுமதிக்கவில்லை என்பதை இறையச்சம் உள்ள மணமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தன் குடும்பத்தார்கள் முன்னிலையில் தான் அப்படிப்பட்ட உரையாடலுக்கு அனுமதி உண்டு.

மற்ற படி – திருமணம் தான் நிச்சயமாகி விட்டதே என்று – இருவரும் – தனிமையில் சந்தித்துப் பேசிக் கொள்வது, காதல் பேச்சுக்களில் ஈடுபடுவது, அன்பளிப்புகள் பரிமாறிக் கொள்வது – இவை எல்லாம் – அறியாமைக்காலப் பண்பாட்டு வகையைச் சேர்ந்ததாகும்.

இன்னொரு கருத்தையும் இங்கே வலியுறுத்த வேண்டியுள்ளது. திருமணம் செய்வது என்று முடிவு செய்து விட்டால் திருமணத்தைச் செய்திட வேண்டியது தானே? ஏன் திருமணத்தை மாதக் கணக்கில் ஒத்திப் போட வேண்டும்? ஒரு சிலர் – ஆண்டுக் கணக்கில் கூட ஒத்திப் போடுகின்றனர்.

பேசி முடித்த பின்னர் – விரைவிலேயே – திருமணத்தை எளிமையாக முடித்துக் கொள்ளுங்கள். பிறகு யாரிடமும் எதற்கும் நீங்கள் அனுமதி கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது!


கற்புக்கு சோதனை வந்தால்? 

சோதனை ஒன்று:

உங்கள் குடும்பத்தினரிடமிருந்து நீங்கள் திடீரென்று பிரிக்கப்படுகிறீர்கள். உங்கள் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டிட எவ்வித வாய்ப்பும் இல்லை. எப்போது மீண்டும் உங்கள் குடும்பத்தினருடன் போய் சேர்வீர்கள் என்றும் தெரியாது. குடும்பத்தினரை மீண்டும் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதே சந்தேகம் தான். எதிர்காலம் என்ன என்பதுவும் மிகப்பெரியதொரு கேள்விக்குறி!


சோதனை இரண்டு:

நீங்கள் ஒரு வரண்ட பாலைவனத்தின் நடுவில் திடுதிப்பென்று இறக்கி விடப்படுகிறீர்கள். அடுத்த வேளைக்கு உண்ண உணவோ, குடிக்கத் தண்ணீரோ இல்லை. உயிர் பிழைப்போமா என்பதே சந்தேகம் தான்.

இப்படிப்பட்ட சோதனைகளின் போது அடுத்து நாம் என்ன செய்வோம் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இச்சூழ்நிலைகளை நாம் எப்படி எடுத்துக்கொள்வோம் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

நம்மில் பலருடைய நிலை என்னவாக இருக்கும்?


ஒன்று: நம்மை நாமே நொந்து கொள்வோம். நமக்கு இந்நிலையை ஏற்படுத்தியவர்களை வசை பாடுவோம். அல்லது நம்மைப் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவனையே குறை சொல்லத் தொடங்கி விடுவோம்.
ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா? பொறுமை! அழகிய பொறுமை!

கிட்டத்தட்ட - இதே போன்ற இரண்டு சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு ஏற்பட்டது. நபி யூசுஃப் (அலை) அவர்கள், அவர்களுடன் கூடப்பிறந்த சகோதரர்களாலேயே குடும்பத்தை விட்டுப் பிரிக்கப்படுகின்றார்கள். பாழும் கிணற்றில் தள்ளப்படுகின்றார்கள்.

நபி யூசுஃப் (அலை) அவர்கள், இச்சூழ்நிலைகளில் மிக அழகாக பொறுமையைக் கடைபிடிக்கின்றார்கள்.

நாமும் பாடம் படித்துக் கொள்வோம்.

அடுத்து பின்வரும் சோதனையான சூழல் ஒன்றை சற்று ஆழமாக சிந்தியுங்கள்:

சோதனை மூன்று:

நீங்கள் திருமணம் ஆகாத ஒரு கட்டிளம்காளை. நீங்கள் வந்து சேர்ந்திருப்பதோ உங்களுக்கு முற்றிலும் அந்நியமானதொரு நகரம்; உங்களை ஆதரிப்பார் அங்கு யாருமில்லை; உங்கள் மீது இரக்கப்பட்டு உங்களுக்கு ஒரு வேலை தருகிறார் ஒரு பணக்காரர்; உங்கள் முதலாளியின் மனைவியோ கொள்ளை அழகு; கணவன் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து அவருடைய இளமை ததும்பும் மனைவி தன்னை முழுமையாக அலங்கரித்துக் கொண்டு உங்களை உல்லாசத்துக்கு அழைக்கிறார்; வற்புறுத்துகிறார்.
இந்த சோதனையை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?

அல்லாஹு த ஆலா நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு இந்த மூன்றாவது சோதனையையும் முன் வைத்தான்!

இச்சோதனையின்போதும் நபி யூசுஃப் (அலை) அவர்கள் பொறுமை காக்கின்றார்கள்; தன்னையும் தன் கற்பையும் காத்துக் கொள்கின்றார்கள்.

நபி யூசுஃப் (அலை) அவர்களின் மிக அழகான வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள திருக்குர்ஆனின் - 12- வது அத்தியாயத்தைப் பொறுமையாகப் படித்துப்பாருங்கள்.

இப்போது கேள்வி என்னவெனில் - மேற்கண்ட மூன்று சோதனைகளிலே, எந்த சோதனையை எதிர்கொள்வதற்கு மிக அதிக பொறுமை தேவை?

குடும்பத்தை, நம் மீது அளவு கடந்த பாசத்தைக் கொட்டி வளர்த்து வந்த தந்தையைப் பிரிந்து விட்டதற்காகவா?

பாழும் கிணற்றில் கிடக்கின்றோமே; அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது? உயிர் பிழைப்போமா, மாட்டோமா - என்ற சூழ்நிலைக்காகவா?

தம் எஜமானருக்கே துரோகம் செய்யத் தூண்டும் மிக இக்கட்டான சூழ்நிலைக்காகவா?

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் சொல்வார்களாம்:

இம்மூன்று சோதனைகளில் நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு மிக அதிக பொறுமை தேவைப்பட்ட சோதனை தம் எஜமானனின் மனைவி மூலமாக வந்த சோதனை தான்!

ஏன்?

தன் குடும்பத்தை விட்டுப் பிரிக்கப்பட்ட சோதனையில், நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு தம் சகோதரர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள எந்த ஒரு  வாய்ப்பும் (Choice)  இல்லை!

அது போலவே கிணற்றில் தள்ளப்பட்ட போதும் நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு அதிலிருந்து வெளியேறி தம்மைக் காத்துக் கொள்ள எந்த ஒரு வாய்ப்பும் இல்லை!

ஆனால் - தமது கற்புக்கு ஒரு கடினமான சோதனை வந்த போது - அதனை எதிர்கொண்டிட அல்லாஹு த ஆலா நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருந்தான். அந்தப் பெண்ணின் இச்சைக்கு அடிபணிந்து விடலாம், அல்லது அப்பெண்ணின் இச்சைக்கு அடிபணிய மறுத்து தம்மைத் தாமே தற்காத்துக் கொள்ளவும் செய்யலாம்.

இச்சமயத்தில் தான் நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு மிக மிக மிக அதிகமான பொறுமை தேவைப்பட்டது!

ஏன்?

அந்த சூழ்நிலையை சற்று ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்:

1. நபி யூசுஃப் (அலை) அவர்கள் - ஒரு கட்டிளம் காளை! உணர்வுகள் கொப்பளிக்கும் இளமைப்பருவம். சற்றே வயதானவர்கள் கூட தடுமாறும் சூழ்நிலை; நபி யூசுஃப் (அலை) அவர்கள் திருமணம் ஆகாதவர் என்பதையும் கவனியுங்கள்; திருமணம் ஆன ஒருவர் கூட இன்னொரு பெண்ணால் தூண்டப்பட்டால், தம் இச்சையைத் தீர்த்துக்கொள்ள தம் மனைவியை நாட முடியும். ஆனால் நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லாத நிலை.

2. அழைப்பு விடுத்த பெண்ணோ - மிக அழகான பெண்மணி! அழகற்ற பெண் அழைத்திருந்தால் விலகி விடுவது சுலபம்; ஆனால் அழைப்பதோ மிக அழகான ஒரு இளம்பெண்!

3. அழைப்பு விடுக்கப்பட்ட சூழ்நிலை என்ன? நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு எகிப்து என்பது ஒரு அந்நிய தேசம். யாரையும் நபி யூசுஃப் அவர்கள் அறிந்திருக்கவில்லை; உறவினர்கள், நண்பர்கள் என்று யாருமே  கிடையாது அங்கே;  அவர்கள் தவறிழைத்தால் கூட மானம் பரிபோய்விட வாய்ப்பு இல்லை!

4. இன்னொரு சூழல் - தனிமை! நபி யூசுஃப் (அலை) அவர்களும் அப்பெண்மணியும் தான்! அந்தப் பெண்மணி எல்லாக் கதவுகளையும் மூடி விட்டாள்; யாருக்கும் தெரிந்து விட வாய்ப்பே இல்லை; மிக சுலபமாக மறைத்துக் கொண்டு விடலாம்!

ஆனாலும் தம்மைக் காத்துக் கொள்கின்றார்கள் நபி யூசுஃப் (அலை) அவர்கள்.
இளைஞர்களே! பாடம் படித்துக் கொள்வோம் நபி யூசுஃப் (அலை) அவர்களிடமிருந்து!

குறிப்பு: இக்கட்டுரையை எழுதும் சமயம் - டெல்லியில் கற்பு சிதைக்கப்பட்ட ஐந்து வயது சிறுமி பற்றிய செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நேரம் ஆகும்.

மனம் அழுகின்றது!

மத்திய மாநில அரசுகளே! நபி யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கையை பள்ளிக்கூட மாணவர்களுக்குப் பாடமாக்குங்கள்!

Comments