நூல்: திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை - பகுதி 3

வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்வது எப்படி?

ஒருவர் தனது வாழ்க்கைத்துணையைத் (கணவன் அல்லது மனைவி) தேர்வு செய்திடும் போது கவனித்திட வேண்டிய விஷயங்கள் என்னென்ன? -

1. இஸ்லாம்:

“ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணம் முடிக்கப்படுகிறாள். அவளின் செலவத்திற்காக, அவளது குடும்ப கௌரவத்திற்காக, அவளது அழகிற்காக, அவளது மார்க்க விழுமியங்களுக்காக. நீர் மார்க்கமுடையவளைப் பற்றிக் கொள். உன் கரத்தை அழிவிலிருந்து பாது காத்துக்கொள்வாய்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள நபி மொழி அறிவுறுத்துவது போல = மார்க்கப்பற்றுள்ள ஒரு பெண்ணையே தேர்வு செய்யுங்கள். அது போல - மார்க்கப்பற்றுள்ள ஆண்மகனையே பெண்கள் தேர்வு செய்திடட்டும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்னென்ன?


A . ஐந்து வேளை தொழுபவரா அவர்? நோன்பு வைப்பவரா? தர்மம் செய்பவரா? (இது பற்றிக் கேட்டு விடுங்கள் அவரையே!). குர்ஆன் அவருக்கு ஓதத் தெரிகிறதா? (தங்கு தடை இல்லாமல் ஓத வேண்டிய - தஜ்வீத் - முறைப்படி).

B. தோற்றம்: ஹிஜாப் அணியும் பெண், தாடி வைத்திருக்கும் ஆண் (பெண்கள் இதனை வலியுருத்தட்டும் - ஏன் ஒரு பெண்ணைப் போல் தோற்றமுடையவரை மணக்கிறீர்கள்?). இவை தவிர்த்த "ஸ்டைல்"களில் மயங்கி விட வேண்டாம்!

C. நற்குணங்கள்: உண்மையைப் பேசுவதற்கு தைரியம், கண்ணியம், தன்னம்பிக்கை, கம்பீரம் (ஆண்களிடத்தில்), நாணம் (பெண்களிடத்தில்), வெட்க உணர்ச்சி (இருவருக்கும்), பதற்றமடையாத நிதானம், அமைதியில் அழகு காணும் நேர்த்தி, மடை திறந்த வெள்ளம் போல் பேசாமை.

எச்சரிக்கை:   

ஆணோ அல்லது பெண்ணோ - அல்லாஹு தஆலா என்ன சொல்கிறான் என்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை என்றால் - அவர்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது பற்றிக் கவலைப் படுவார்கள் என்றா எண்ணுகிறீர்கள்?  ம்ஹூம்!

இறையச்சம் என்ற ஒன்று இருந்து விட்டால் அது போதும் - உங்கள் திருமணத்தை இனிமையாக்கிட! பாதுகாத்திட! பிரச்னை என்று ஒன்று வந்து விட்டால் தீர்வு ஒன்றைக் கண்டிட!

இந்த ஒன்று மட்டும் இல்லாவிட்டால் - என்னவாகும்? திருமண வாழ்வில் ஒரு பிரச்னை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். எதனை வைத்துக் கொண்டு அதனைத் தீர்த்துக் கொள்வீர்கள்? இறையச்சம் இருப்பவர்களுக்கு - குர்ஆன் மற்றும் ஹதீஸ் - இவைகளே "அடைக்கலம்"! வேறு எதுவுமே தேவையில்லை! ஆனால் திருமண வாழ்வுக்கு இது அவசியம் இல்லை என்போரின் நிலை என்ன தெரியுமா? துடுப்பு இல்லாமல் படகு சவாரி செய்பவர்களின் நிலை தான்!

திருமணம் ஆன புதிதில் இருக்கும் அழகு, ஈர்ப்பு, கவர்ச்சி - இவைகளெல்லாம் சில மாதங்களுக்குத் தான்! அதன் பிறகு, உங்கள் வாழ்க்கைக்கு அழகு கூட்டிட உதவிக்கு வருவது தக்வா எனும் இறையச்சமே!

அழகு இருக்கட்டும்! இறையச்சம் இல்லை எனில், உங்களின் குழந்தைகளை எதன் அடிப்படையில் வளர்ப்பீர்கள்?

இந்தக் குழந்தைகளைக் கொண்டு தானே உங்களின் எதிர்காலம்? சுவர்க்கம் வேண்டுமா? அல்லது நரகம் வேண்டுமா?

எனவே தான் சொல்கிறோம்! துவக்கத்திலேயே இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்! மார்க்கத்தைப் பற்றிக் கவலைப்படாத பெண்ணும் வேண்டாம் / மாப்பிள்ளையும் வேண்டாம்! விலகி ஓடி விடுங்கள்! அவர்கள் எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் சரியே!

"நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் தகுதியானவர்கள்".(24:26)

நாம் இக்கட்டுரையில் மிகவும் வலியுறுத்திச் சொல்லி இருக்கும் இந்த ஒன்றில் உங்களுக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லையென்றால் - இத்தொடரைப் படிப்பதை நிறுத்தி விடுங்கள்! இதன் பிறகு நாம் இங்கே எழுதுவது எதுவும் உங்களுக்குப் பொருந்தாது!

2. பிறரிடம் நல்லுறவு:

மார்க்கப் பற்று என்பதனைத் தொடர்ந்து - நீங்கள் அடுத்து கவனித்திட வேண்டிய விஷயம் - அவர் மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறார் - என்பதனைத் தான்.

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ - ஒருவரை "நல்லவர் இவர்" என்று அறிவது எப்படி? அவருடைய தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல், அவருடைய தோற்றம் - இவைகளை வைத்தா என்றால் நிச்சயம் இல்லை! பின் எதனை வைத்து? அவர் பிறருடன் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத் தான்!

உமர் (ரலி) அவர்கள் கேட்கும் நிபந்தனைகள்:

"நீ அவர் பக்கத்து வீட்டுக்காரரா?" அல்லது " நீ அவருடன் பயணம் செய்திருக்கிறீர்களா?" அல்லது "நீ அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்ததுண்டா?"

இம்மூன்று கேள்விகளிலும் காணப்படும் பொதுவான ஒரே அம்சம் - "நீ மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறாய்?" - என்பது தான்!

நீங்கள் தேர்வு செய்திடும் வாழ்க்கைத் துணைவர் / துணைவி - அவர்களுடைய பணியாளர்களுடன், பெற்றோர்களுடன், உடன் பிறந்தவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.

மற்றவர்களுடன் பழகும் போது, மென்மையாக நடக்கிறார்களா (குறிப்பாக அவர்களுக்குக் கீழே பணியாற்றுகின்ற வேலையாட்கள், கார் டிரைவர்) என்பதை நன்கு கவனியுங்கள்; அவர்களுக்கு இரக்க உணர்வு இருக்கிறதா?

மற்றவர் நிலை குறித்து (empathic) அக்கரைப் படுகிறாரா? கண்ணியமாக மற்றவர்களிடம் பேசுகின்றாரா? நன்றி சொல்கின்றாரா? சிறிய தவறுகள் ஏதாவது நிகழ்ந்தால் "மன்னிக்கவும்" என்று சொல்கிறாரா? புன்முறுவல் முகம் காட்டுகின்றாரா? சிடுசிடுவென்று பேசுகின்றாரா? நகைச்சுவை உணர்வு இருக்கின்றதா?- என்பதையெல்லாம் அவசியம் கவனியுங்கள்!

எச்சரிக்கை:

பிறருடன் பழகுதல் எனும் விஷயம் மிக முக்கியம். ஏனெனில் ஒருவருடைய தொழுகை, தொப்பி, தாடி (அல்லது ஹிஜாப்) - இவற்றையெல்லாம் பார்த்து ஏமாந்து விட வேண்டாம். வேடதாரிகள் அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்து காணப்படுகின்றார்கள்!

உங்கள் எதிர்காலத் துணைவர் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பார்ப்பது மிகவும் அவசியம், ஏனெனில் - பிறரிடம் அவர் எவ்வாறு நடந்து கொள்கிறாரோ exactly அவ்வாறே தான் அவர் உங்களிடமும் நடக்க இருக்கின்றார் என்பதனை மறந்து விட வேண்டாம்!

கண்ணியம் காதலாய் மலரட்டும்!

இன்று வழக்கத்தில் நாம் பார்க்கின்ற திருமண முறைகள் இரண்டு:

1. பெற்றோர் செய்து வைக்கின்ற பாரம்பரியத் திருமணம் (arranged marriage)

2. காதல் திருமணம் (love marriage)

இந்த இரண்டு முறைகளுமே மிகத் தவறானவை!


பெற்றவர்கள் ஒரு மாப்பிள்ளையைப் (அல்லது பெண்ணை) பார்த்திட - ஒருவரைப் பற்றி மற்றவர் அறிந்து கொள்ளாமலே - "என் பெற்றோர் யாரைத்திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்களோ அவரே என் துணைவர்!" என்று கண்ணை மூடிக்கொண்டு செய்யப் படுகின்ற பாரம்பரியத் திருமண முறையில் - அடிப்படையில் ஒரு மிகப்பெரிய கோளாறு இருந்து வந்துள்ளதை - நமது புதிய தலைமுறையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமும், அவசரமும் இப்போது ஏற்பட்டுள்ளது என்றால் அதில் மிகை இல்லை!

ஏனெனில் இன்றைய நமது முஸ்லிம்களின் இல்லற வாழ்க்கை முறையில்.....

பல குளறுபடிகள் காணப்படுகின்றன.  ஒரு நெருக்கடியின் நிமித்தமாகவே கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்கிறார்கள்! அவர்களுக்குள் அன்பு, காதல், நேசம், பரிவு, இரக்கம், கருணை, அனுசரித்துப் போகும் பண்பு (adjustment),  மன்னிக்கும் பண்பு - இவைகளெல்லாம் அரிதாகி விட்டன!

அது போலவே பெற்றோர் ஆலோசனைகள் ஏதுமின்றி நடக்கின்ற காதல் திருமணமும் வெற்றி பெறுவதில்லை!  உடற் கவர்ச்சியினால் காதலில் விழுந்து தனது வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டதாய் இருந்திட வேண்டும் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாமல் திருமணம் செய்து கொண்டு பின்னர் வருந்துகின்ற இல்லற ஜோடிகளையும் நாம் பார்த்தே வருகின்றோம்.

எனவே தான் சொல்கிறோம்:

உடற்கவர்ச்சியினால் உருவாகின்ற காதல் திருமணமும் வேண்டாம்! குடும்பத்தில் பெண் / மாப்பிள்ளை பார்த்து பெற்றோர் செய்து வைக்கின்ற பாரம்பரியத் திருமணமும் (arranged marriage) வேண்டாம்!

பின் எப்படித் தான் வாழ்க்கைத் துணையைத் தேடுவது?

மூன்று உதாரணங்கள் தருகிறோம்:

1. நபியவர்கள் அன்னை கதீஜாவை எவ்வாறு மணம் முடித்தார்கள்?

அன்னை கதீஜா அவர்கள் நபியவர்களை ஒரு மேலாளராகத் தான் சிரியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இன்னொரு பணியாளரும் நபியவர்கள் கூடவே சிரியாவுக்குச் செல்கிறார். மக்காவுக்குத் திரும்பியதும் - அந்தப் பணியாளர் நபியவர்களின் குண நலன்களை அன்னை கதீஜாவுக்கு எடுத்து விளக்குகின்றார்.

அத்துடன் மக்காவிலே நபியவர்களுக்கு அல் அமீன், அஸ் ஸாதிக் என்ற நற்பெயர்களெல்லாம் ஏற்கனவே உண்டு. அண்ணலார் வணிகப் பயணம் முடிந்து திரும்பியதும், நபியவர்களின் குணநலன் பற்றி (அந்தப் பணியாளர் மூலம்) அறிந்ததும் மேலும் ஒரு மதிப்பு வருகிறது.

தாமும் நபியவர்களின் நடைமுறைகளை உற்று நோக்குகிறார்கள். கண்ணியம் அதிகரிக்கிறது. அந்தக் கண்ணியமே காதலாய் மாறிட நாம் ஏன் இவர்களைத் திருமணம் முடித்திடக் கூடாது என்று எண்ணுகிறார்கள்!  தூது அனுப்புகிறார்கள். எல்லாம் நல்லபடியாய் முடிகிறது!

2. நபியவர்கள தன் அன்பு மகள் பாத்திமாவுக்கு அலீ அவர்களை மணம் முடித்துக் கொடுத்தது எப்படி?

அண்ணல் நபியவர்கள் தன் அன்பு மகளுக்கு ஹள்ரத் அலீ அவர்களைத் திருமணம் முடித்திட விரும்புகிறார்கள். தன் விருப்பத்தை தன் மகளிடம் தெரிவிக்கிறார்கள். அன்னை பாத்திமா (ரலி) அவர்களின் கண்களில் கண்ணீர். அது அவர்களின் தயக்கமா? அல்லது அலீ அவர்கள் குறித்து அச்சமா? என்றெல்லாம் தெரியவில்லை. அப்போது நபியவர்கள் மகள் பாத்திமாவிடம் அலீ அவர்களின் குண நலன் பற்றி எடுத்துச் சொல்கிறார்கள்:

அலீ அவர்கள் அறிவில் சிறந்தவர் என்றும், பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை நிறைந்தவர் என்றும், வீரம் மிக்கவர் என்றும் எடுத்துரைக்கிறார்கள்; பாத்திமா (ரலி) அவர்கள் சம்மதித்திட திருமணம் நடந்தேறுகிறது!

3. உ,மர் (ரலி) அவர்கள் தன் மகன்களில் ஒருவருக்குத்  திருமணம் செய்து வைத்தது எப்படி?

ஒரு தாய் மற்றும் அவருடைய மகள். பாலில் தண்ணீர் கலப்பதைக் கூட அனுமதித்திடாத இறையச்சம் அந்த மகளுக்கு. உமர் (ரலி) அவர்கள் இதனை நேரிடையாகவே அறிந்து கொண்ட பின் தன் மகன்களை அழைத்து அந்தப் பெண்மணியின் இறையச்ச உணர்வை எடுத்துச் சொல்லி "அறிமுகம்" செய்து வைக்கிறார்கள். ஒரு மகன் முன் வர திருமணம் நடந்தேறுகிறது!

இம்மூன்று திருமணங்களிலும் - தான் யாரைத் திருமணம் முடிக்க விரும்புகிறாரோ அவருடைய குணநலன்கள் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன என்பதை உன்னிப்பாக கவனியுங்கள்:
படித்துக் கொள்ள வேண்டிய படிப்பினைகள்:

திருமணத்துக்கு முன்னரேயே - பெண் அல்லது மாப்பிள்ளை - இவர்களின் குண நலன்கள்  (character) எப்படிப் பட்டது என்பது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். தான் மணக்க இருக்கும் துணைவர் எப்படிப்பட்ட குணமுடையவர் என்பது இருவருக்குமே தெரிதல் நலம். அதுவே கண்ணியமாய் மாறும்.

காதலாய் மாறும். இதுவே திருமணத்துக்கு இட்டுச் செல்லும். இதுவே வெற்றித் திருமணத்தின் இலக்கணமும் ஆகும்!


வாழ்க்கைத்துணையாக வர இருப்பவருடன் பேசுங்கள்! 

வாழ்க்கைத்துணையாக வர இருப்பவருடன் பேசிப் பார்க்கிறீர்களா?

பெற்றோர் முன்னிலையில் உங்கள் வாழ்க்கைத் துணையாவதற்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டவருடன் பேசுதல் அவசியம்.


அப்படி ஒரு வாய்ப்பை வலியுறுத்தி ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு அவர்களுடன் பேசுங்கள்; அவர்கள் பேசுவதைக் கேளுங்கள். நீங்கள் பேசுவதை விட அவரைப் பேச விட்டுக் கேளுங்கள். இந்தப் பேச்சை வைத்துத் தான் "இவர் நமக்குப் பொருத்தமானவர் தானா?" என்று பார்த்திட வேண்டியுள்ளது.

எந்த விஷயங்களை எல்லாம் அவர் அறிந்து வைத்திருக்கிறார்; அவருடைய கண்ணோட்டங்கள் எப்படி இருக்கின்றன; அவருடைய சிந்திக்கும் பாங்கு; சூழ்நிலைகளை சரியாக எடைபோடும் ஆற்றல்... இவைகளை கவனியுங்கள்.

.அவர் சொந்தமாக சிந்திக்கக்கூடியவரா......

அல்லது பிறரைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுபவரா என்பதையும் பாருங்கள்!

என்ன அவர்கள் படிக்கிறார்கள் என்று கேளுங்கள்; எந்த நூலாசிரியரைப் பிடிக்கும் என்று கேளுங்கள்;

பிரச்னைகளைப் பற்றி அதிகம் பேசுபவரா அல்லது தீர்வுகளை முன் வைத்துப் பேசுபவரா என்று கவனியுங்கள்!

எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிப்பவரா என்று பாருங்கள்; மன்னிக்கும் மனப்பான்மை இருக்கிறதா என்று பாருங்கள்!

அவருடைய மார்க்கப் பற்று எப்படிப்பட்டது என்பதனையும் பாருங்கள். பொருளாசை மிக்கவரா அல்லது மறுமைச் சிந்தனை மிக்கவரா என்றும் எடை போடுங்கள்.

மற்றவர்களை அதிகமாக விமர்சிக்கின்றாரா அல்லது தன்னை திருத்திக் கொள்வது பற்றிப் பேசுகின்றாரா என்றும் பாருங்கள்!

குறிப்பாக அவர் பேசும்போது, பிறர் நலன் (concern for others)  பேணுபவரா அல்லது  சுயநலம் தென்படுகிறதா என்பதை அவசியம் கண்டுணருங்கள். மேலும் பிறர் பேசும்போது பொறுமையாக (active listening) காது கொடுத்துக் கேட்கக் கூடியவரா அல்லது அடிக்கடி குறுக்கிட்டு மற்றவர் பேசுவதை அலட்சியம் செய்பவரா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்

எச்சரிக்கை:

ஏன் இப்படிப்பட்ட உரையாடலை நாம் வலியுறுத்துகிறோம் என்றால் - திருமண வாழ்வின் மிக முக்கியமான பகுதிகளுள் ஒன்று மனம் விட்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்தல் தான்!

ஒரு அறிஞர் சொல்கிறார்: "Conversation is the lifeblood of a marriage."

அதாவது: " கலந்துரையாடுதல் என்பது திருமண வாழ்க்கைக்கு உயிரூட்டும் இரத்தம்!"

உரையாடலைத் தவிர்த்து விட்டால் திருமண வாழ்வு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!

ஆனால் - பெரும்பாலான கணவன் மனைவியர் - திருமணமான ஆறு மாதங்களிலேயே தங்களுக்குள் பேசுவதையே நிறுத்திக் கொள்கிறார்கள்.

உங்களுக்கு அந்த நிலை வேண்டுமா?

வாழ்க்கைத்துணை என்பது - ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவதற்காக; தமது ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக; ஒன்றை மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்காக; இந்தப் பரிமாற்றம் இருவருக்குள் ஒரு நெருக்கத்தை உண்டாக்கி விடும்! இந்த நெருக்கத்தினை ஆங்கிலத்தில் intellectual intimacy என்கிறார்கள்.

இது இல்லாவிட்டால் - திருமணம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் வந்து நின்று விடும்!!
"
ஆமாம்......? இதெல்லாம் யாருக்காக இப்படி எழுதிக்கிட்டு இருக்கீங்க? இதெல்லாம் நடக்கற காரியமாங்க?" - என்று கேட்கிறீர்களா?

நிலைமை மாறித்தான் ஆக வேண்டும்! முயற்சி செய்யுங்கள்!

வல்லோன் உதவி நிச்சயம் உங்களுக்கு உண்டு!


திருமணம் ஒரு திருப்பு முனை!;

உங்களுக்கு நீண்ட கால இலட்சியம் எதுவும் இருக்கின்றதா? குறிப்பாக உங்களுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் மிகுந்த ஆர்வம் (passionate about) உண்டா?


அப்படியெனில் அதே விஷயத்தில் ஆர்வமும், இலட்சியமும் உள்ளவராக உங்கள் வாழ்க்கைத்துணை அமைந்திட்டால் - உங்கள் இலட்சியத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் உங்களால் செயல்பட முடியும்!

அப்படி அமைந்திடாவிட்டால் உங்கள் இலட்சியப் பயணத்தில் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்; போதாததற்கு நிறைய நேரம் உங்கள் துணையுடன் சண்டை போட வேண்டியிருக்கும்!

உங்கள் வாழ்வின் இலட்சியம் - அது உலகத்தையே "மாற்றிக் காட்டுவதாக" இருந்தாலும் சரி அல்லது.......
உங்கள் குழந்தைகளை வல்லவர்களாக வளர்த்தெடுப்பதாக இருந்தாலும் சரி (இரண்டுமே ஒன்று தானாமே!) -

எந்நேரத்திலும் ஆதரவுக்கரம் நீட்டுபவரே உங்களுக்குத் தேவை!

உங்கள் இலட்சியத்தில் உங்கள் மகிழ்ச்சியையும், அல்லது வலியையும், பகிர்ந்து கொள்ள ஒரு துணை தேவை! உங்களுக்கு ஆலோசனை வழங்கிடவும், நீங்கள் சொல்ல வருவதை ஆவலுடன் கேட்டிடவும், ஒரு துணை அவசியம்!  "இதுவெல்லாம் ஒரு இலட்சியமா?" என்று அலட்சியம் செய்து அதற்கு முட்டுக்கட்டை போட்டு விடாமல் இருப்பவர்களே உங்களுக்குத் தேவை!

திருமணத்துக்கு முன்  இளம் வயதில் சாதித்துக் காட்டிய ஒரு சிலர் - திருமணத்திற்குப் பின் சிகரம் தொட்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மை!

அதற்கு நேர் மாற்றமாக - இளம் வயதில் சாதித்துக் காட்டிய இன்னும் பலர் - திருமணத்திற்குப் பின் காணாமல் போயிருக்கின்றார்கள் என்பதும் கசப்பானதொரு உண்மை!

எனவே தான் சொன்னார் எகிப்தில் உள்ள ஓர் இஸ்லாமிய அறிஞர்:

"திருமணம் ஒரு திருப்பு முனை!"

அது போலவே - தனக்கென்று ஒரு இலட்சியம் வைத்திருக்கும் துணையே உங்களுக்குத் தேவை! உங்கள் துணையின் லட்சியத்தில் அவர் வெற்றி பெற, நீங்கள் உறுதுணையாக விளங்கிடவும்; உங்களின் நேரத்தையும், அறிவையும், ஆற்றலையும் அதற்கென செலவழித்து அவர் சாதிக்கும் போது தட்டிக் கொடுத்திடவும், சோதனைகள் வரும்போது - அவருக்கு ஆறுதல் அளித்திடவும் - ஒரு துணையாக நீங்கள் விளங்கினால் உங்கள் இல்லறவாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை! அது ஒரு மகிழ்ச்சிக் கடல்!!

இதனை எழுதிடும்போது - அன்னை கதீஜா (ரலி) அவர்களே நம் மனக்கண் முன்னால் தோன்றுகிறார்கள்!!

தேடுங்கள் - அப்படி ஒரு துணையை!சாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியம்!

திருமணத்துக்கு முன்பு – இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்திடும் முன்பு – ஆணுக்கும், பெண்ணுக்கும் பல பொருத்தங்கள் – பார்த்துத் தான் திருமணம் முடிவு செய்திட வேண்டும்.

அவை என்னென்ன?

மார்க்கப் பொருத்தம் (Religious Compatibility): மார்க்கத்தைப் பின் பற்றும் மணமகன், மார்க்கத்தைப் பின் பற்றாத மண மகள் – அல்லது மார்க்கத்தைப் பின் பற்றும் மணமகள், மார்க்கத்தைப் பின் பற்றாத மண மகன் – இவை சாதகமான பொருத்தம் அன்று. பாதகமே விளையும்.

எல்லாம் திருமணத்திற்குப் பின் “அவரை” நீ திருத்தி விடலாம்” என்பார்கள். ஆனால் அதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது

கல்விப் பொருத்தம் (Educational Compatibility): படித்த மணமகன், படிக்காத மண மகள், அல்லது படித்த பெண் படிக்காத பையன் – இதுவும் பொருந்தாத ஜோடியே!

“என்ன படித்த திமிரில் பேசுகிறாயா?” -என்று கணவன் பேசும் நிலை ஏற்படலாம்.

அல்லது அறிவு பூர்வமான கணவன் ஒன்றைச் சொல்லும் போது, படிக்காத மனைவி அதனை ஏற்காமல், ஊரில் உள்ளவர்கள் எல்லாம் இப்படியா இருக்கிறார்கள் என்று வாதாடும் நிலை ஏற்படலாம்.

பொருளாதாரப் பொருத்தம் (Economic Compatibility): பணக்காரப் பையன், ஏழைக் குடும்பத்துப் பெண் அல்லது பணக்கார வீட்டுப் பெண், ஏழை வீட்டு மாப்பிள்ளை – இதுவும் பொருந்தாது.

“என்னை மதிக்கவே இல்லை” எனும் பிரச்னை பூதாகாரமாக உருவெடுக்கும்.

கலாச்சாரப் பொருத்தம் (Cultural Compatibility): நமது சமூகம் உலகளாவிய சமூகம் எனினும் பல் வேறு கலாச்சார சூழலில் நமது வாழ்க்கை பின்னப் பட்டிருக்கின்றது எனபதை மறுக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில், மாறு பட்ட இரு கலாச்சாரங்களில் வளர்க்கப் பட்டவர்கள் திருமணம் செய்திடும் போது – பொருத்தமற்ற நிலையையே அது உருவாக்கிடும்.

குடும்பப் பொருத்தம் (Family Compatibility): மணமக்கள் எப்படிப் பட்ட குடும்ப சூழலில் வளர்க்கப் பட்டவர்கள் என்பதும் கவனிக்கப் பட வேண்டியதே.

ஆளுமைப் பொருத்தம் (Temperamental Compatibility): மணமக்கள் எப்படிப் பட்ட ஆளுமை கொண்டவர்கள் என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும். வேறு பட்ட ஆளுமை கொண்ட மண மக்கள் இல்லற வாழ்வில் நுழையும் போது அதுவும் பல சிக்கல்களைக் கொண்டு வரலாம்.

இவையே சாதகமான விளைவுகளை ஏற்படுத்த வல்ல நல்ல பொருத்தங்கள்.

திருமணத்துக்கு பெண் அல்லது மாப்பிள்ளை தேடுபவர்கள் இவைகளைக் கவனத்தில் கொண்டால் நல்லது“ஆமாம்! யாரைக் கல்யாணம் முடிக்கப் போறீங்க?”

திருமறை திருக்குர்ஆனின் பின் வரும் இறைவசனத்தில் ஒருவர் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்திட ஒரு அளவுகோளை நமக்கு வழங்கியுள்ளான் உயர்ந்தோன் அல்லாஹு தஆலா. .

அநாதைப் பெண்களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3)

பொதுவாகவே இவ்வசனத்துக்கு விளக்கம் அளித்திடும்போது மார்க்க அறிஞர்கள் சட்ட ரீதியான விளக்கங்களுக்குச் சென்று விடுகின்றார்கள்.

ஆனால் இவ்வசனத்தில் திருமணம் முடிக்க இருக்கின்ற ஆடவர்களுக்கு ஒரு அருமையான “வழிமுறையை” அல்லாஹ் காட்டித் தந்திருப்பதை கண்டுகொள்ளத் தவறி விடுகிறார்கள்.

அது என்ன?

“ஃபன்கிஹூ மா தாப லகும் மினன்-னிஸாஇ” என்பது வசனத்தின் ஒரு பகுதி.

இதன் பொருள்: “உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள்!”

இச்சொற்றொடரில் “பிடித்தமான” என்ற சொல்லுக்குரிய அரபிச்சொல் “தாப” என்பதாகும்.

ஆனால் இந்தத் “தாப” என்ற சொல் மிகவும் அருமையான ஒரு சொல் ஆகும். இம்மூலச்சொல்லிலிருந்து பிரிகின்ற வேறு சில சொற்களும் திருமறையில் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

தாப, தூபா, திப், தய்யிப், தய்யிபாத் – என்பன அவற்றுள் சிலவாகும்.

இந்தச்சொல்லுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு என்னென்ன பொருள்களைத் தருகிறது என்று பார்ப்போம்.

to be good, pleasant, agreeable, to be delightful, delicious, to please someone, be to someone’s liking, to make something sweet, to sweeten, to scent, to perfume, to spice, to set someone’s mind at rest, to joke, jest, make fun with someone.

இப்படிப்பட்ட பொருள்களையெல்லாம் நாம் இந்த சொற்றொடருக்குப் பயன்படுத்தினால் – என்னென்ன பொருள்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

“உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள்!”

“உங்கள் மனதிற்கு இன்பம் அளிக்கின்ற” / உங்கள் மனதிற்கு ஒத்துப்போகின்ற / உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற / உங்களுக்கு இனிப்பான/ உங்களுக்கு நறுமணம் அளிக்கின்ற / உங்கள் மனதிற்கு அமைதி அளிக்கின்ற / நகைச்சுவையால் உங்களை மகிழ்விக்கின்ற பெண்களை மணந்து கொள்ளுங்கள்!” -

என்றெல்லாம் பொருள்கள் விரிகின்றன.

இச்சொல்லில் இருந்து பிரிகின்ற இன்னொரு சொல் தய்யிப். இச்சொல்லும் திருமறையில் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தய்யிப் என்றால் பொதுவாக நல்லவர் என்று பொருள்.

ஆங்கிலத்தில் தய்யிப் என்பதற்கு = good, pleasant, agreeable, disposed, friendly, kindly, good-natured, cheerful – என்று பொருள் செய்யப்படுகின்றன.

“கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.” (24:26)

இவ்வசனத்தில் வருகின்ற நல்ல தூய்மையுடைய ஆண்களைக் குறித்திட “தய்யிபூன” என்ற சொல்லும் நல்ல தூய்மையுடைய பெண்களைக் குறித்திட “தய்யிபாத்தி” என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இன்னும் ஆழமாக இதனை நாம் புரிந்து கொள்ள “தய்யிப்” என்பதன் எதிர்ச்சொல்லை நாம் ஆய்வு செய்தல் நல்லது,

இதே வசனத்தில் – கெட்ட ஆண்களையும், கெட்ட பெண்களையும் குறித்திட – ஃகபீஃதூன, ஃகபீஃதாத்தி – என்ற இரு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஃகபஃத என்ற இதன் மூலச்சொல்லுக்கு என்ன பொருள்?

to be bad, to be wicked, evil, malicious, vicious, malignant, to feel awkward, feel embarrassed – போன்ற பொருள்கள் எல்லாம் உண்டு.

ஃகபீஃத் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

bad, wicked, spiteful, noxious, injurious, harmful, offensive, repulsive, nauseating, disgusting (odour) – என்றெல்லாம் பொருள்.

அதாவது கெட்ட ஆண்களும், கெட்ட பெண்களும் எப்படிப்பட்டவர்கள் என்றால் – அவர்கள் ஒழுக்கக் குறைவானவர்கள், வன்மம் பிடித்தவர்கள், நச்சுத் தன்மை கொண்டவர்கள், கெடுதல் செய்பவர்கள், தீங்கு விளைவிப்பவர்கள், குழப்புபவர்கள், மனதைப் புண்படுத்துபவர்கள், வெறுப்பூட்டுபவர்கள், குமட்டல் உண்டாக்குபவர்கள்!

தூபா என்றொரு சொல். இதுவும் தாப எனும் சொல்லிலிருந்து பெறப்படுகின்ற இன்னொரு கிளைச்சொல்லாகும்.

எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு.(13:29)

for those who believe and work righteousness is every blessedness and a beautiful place of final return.” (Qur’an 13:28-29)

தூபா என்பது தமிழில் நற்பாக்கியங்கள் என்று மொழிபெயர்க்கப் – பட்டுள்ளது. “every blessedness” என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தூபா என்பதன் ஆழமான பொருளை இஸ்லாமிய அறிஞர் ஒருவர் இப்படிச் சொல்கிறார்:

the word tubaa includes in its meaning an internal state of satisfaction and joy, peace of mind, tranquility of heart, and serenity of conscience.

“உங்களுக்குப் பிடித்தவரைத்” திருமணம் செய்யுங்கள் என்று அல்லாஹுத ஆலா சொல்வதன் ஆழமான கருத்து உங்களுக்கு இப்போது தெளிவாகப் புரிகிறதா?

இப்போது ஒரு நபிமொழியை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

Imaam al-Bukhaari (may Allaah have mercy on him) reported in his Saheeh that ‘Aa’ishah (may Allaah be pleased with her) said: “I heard the Prophet (peace and blessings of Allaah be upon him) saying: ‘Souls are like conscripted soldiers; those whom they recognize, they get along with, and those whom they do not recognize, they will not get along with.’” (Saheeh al-Bukhaari).

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ” ஆன்மாக்கள் என்பவை பணிக்கு அமர்த்தப்பட்ட படை வீரர்களைப் போல. அவர்களில் யாரெல்லாம் ஒருவரை ஒருவர் இலகுவாக புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள் மிக இலகுவாக நண்பர்களாகி விடுகிறார்கள்; அவர்களில் யாரெல்லாம் முன்பின் தெரியாதவர்கள் போல் தெரிகிறாகளோ, அவர்கள் விலகிப்போய் விடுகின்றார்கள்.” (புகாரி, முஸ்லிம்)

இதிலிருந்து தெரிய வருவது என்னவெனில், நம்மில் சிலர், நம்மை ஒத்த சிலருடன் பழகுவதும், நண்பர்களாகி விடுவதும், வேறு சிலரிடமிருந்து நாம் விலகி விடுவதும் இவையெல்லாம் – வல்லோன் இறைவனின் இயல்பான படைப்பின் இரகசியங்களில் உள்ளவையாகும்.

இது திருமண உறவில் இணையும் ஆண்-பெண்ணுக்கும் பொருந்தும் தானே! அதனால் தானோ என்னவோ அண்ணல் நபியவர்கள் நீங்கள் திருமணம் முடிக்க விரும்பும் பெண்ணைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று நம்மை அறிவுறுத்தியிருக்கின்றார்கள்.

மாஷா அல்லாஹ்!

இவ்வாறு ஒருவரை ஒருவர் இலகுவாகப் புரிந்து கொண்டு, “இவர் நமக்குப் பொருத்தமானவர் தான்” என்று ஒருவர் முடிவுக்கு வந்து திருமணம் முடித்தலே சிறப்பான திருமண உறவுக்கு வழி வகுக்கும். அங்கு தான் அன்பு, நட்பு, காதல், ஈர்ப்பு, நேசம், நீண்ட கால உறவு – எல்லாம் மிக இயல்பாகவே நடந்தேறிவிடும்.

ஆனால் நமது நிலை என்ன? நமது திருமணங்கள் எல்லாம் எப்படி நிச்சயிக்கப்படுகின்றன? பொன்னும், பொருளும் தானே நமது அளவுகோள்கள்?

இயல்பான ஈர்ப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பே அளிக்கப்படாமல் நடக்கும் நம்முடைய திருமண வாழ்க்கையில் அன்பையும், காதலையும் எதிர்பார்க்க முடியுமா? இன்றைய பெரும்பாலான கணவன் மனைவியர் “பெயருக்குத் தான்” இல்லற வாழ்வை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

புதிய தலைமுறை பாடம் படித்துக் கொள்ளுமா?

சுருக்கமாகச் சொல்வதென்றால் – உங்களுக்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், குதூகலத்தையும், மன நிம்மதியையும், நறுமணத்தையும், தூய்மையான இல்லற வாழ்வையும் யார் தருவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அவர்களையே நீங்கள் திருமணம் முடியுங்கள்!

Comments