ஈமான் தரும் பாதுகாப்பு!

ஈமான் என்ற சொல்லை அறியாத முஸ்லிம் எவரும் இருக்க மாட்டார்கள்.

பொதுவாக ஈமான் என்பதற்கு நம்பிக்கை என்று மொழிபெயர்க்கப்படுகிறது.


முஃமின் என்றால் நம்பிக்கையாளன் என்றும் திருக்குர்ஆனில் அடிக்கடி வருகின்ற "யா அய்யுஹல்லதீன ஆமனூ" என்பதற்கு - இறை நம்பிக்கையாளர்களே! - என்றும் பொருள் கொள்கிறோம்.

ஆனாலும் ஈமான் என்பதன் ஆழமான பொருளை நாம் புரிந்து கொள்ளாததால் - "ஈமான்" குறித்தே நாம் அலட்சியமாக இருக்கின்றோம்.

ஈமான் என்பதன் வேர்ச்சொல் "அமுன" அல்லது "அமின" வாகும்.

அமுன என்ற வேர்ச்சொல்லுக்கு பொருள்: to be faithful, reliable - என்றும்
தமிழில் "நம்பிக்கையான" அல்லது "நம்பத்தகுந்த" என்றும் பொருள் கொள்ளலாம்.

அமுன எனும் வேர்ச்சொல்லிலிருந்து தான் "அமானத்", அமீன் போன்ற சொற்கள் எடுக்கப்படுகின்றன.

அமின என்ற வேர்ச்சொல்லுக்கு - to be safe, feel safe  - என்று பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது "பாதுகாப்பான" என்றும் "பாதுகாப்பான உணர்வுள்ள" என்றும் தமிழில் மொழி பெயர்க்கலாம்.

இந்த அமின எனும் சொல்லுக்கு பல பொருள்கள் தரப்படுகின்றன.
To reassure, Set someone's mind at rest, to assure, to ensure, safeguard, guarantee, warrant, confirm, to entrust, to believe, to trust, have confidence, have faith, to ask for protection, for a promise of security...

இந்த வேர்ச்சொல்லிலிருந்து "அம்ன்" என்ற பெயர்ச்சொல் எடுக்கப்படுகிறது.

அம்ன் என்றால் - safety, peace, security, protection என்று பொருள்.

"அமான்" என்று ஒரு சொல்: இதன் பொருள்:  security, protection, shelter. இதிலிருந்து தான் ""ஃபீ அமானில்லாஹ்" என்ற துஆ வருகிறது. இதனுடைய பொருள்: "அல்லாஹ்வின் பாதுகாவலில்!"

இவ்வாறு சற்றே ஆழமாக நாம் ஈமான் என்ற சொல்லை ஆய்ந்தாலே - நமக்கு இரண்டு மிக முக்கியமான பொருள்கள் கிடைக்கின்றன.

ஒன்று - நம்பிக்கை; இன்னொன்று - பாதுகாப்பு!

அப்படியானால் ஈமான் கொண்டவன் என்றால் என்ன? ஒன்று - அவன் நம்பிக்கையாளன்; இன்னொன்று - அவன் பாதுகாக்கப்பட்டவன்!!

மேலும் ஈமான் என்பதன் பொருளைப் புரிந்து கொள்ள சில திருமறை வசனங்களை ஆய்வோம்:

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (24:55)

இவ்வசனத்தின் ஒரு பகுதி: மின் பஃதி ஃகவ்ஃபிஹிம் அம்னா!

இதற்கு - அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், (அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்) - என்று பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது இங்கே அம்ன் என்பதற்கு அமைதி என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.

நாம் மேலே குறிப்பிட்டுள்ள பொருள்களை சேர்த்துக் கொண்டால் (safety, peace, security, protection) - அச்சத்துக்குப் பிறகு பாதுகாப்புடன் கூடிய அமைதியைத் தருகின்றான் அல்லாஹ் - என்று விளக்கப்படுத்தலாம்.

இன்னொரு வசனம்:

(பிறகு தம் தந்தையிடம் வந்து,) “எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.(12:11)

இவ்வசனத்தின் - " மா லக லா தஃமன்னா 'அலா யூசுஃப - என்ற பகுதிக்கு - யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? = என்று பொருள்.

அதே நேரத்தில் இதனை - யூஸுஃபுடைய விஷயத்தில் நாங்கள் அவரைப் பாதுகாத்திடுவோம் என்று ஏன் நீங்கள் எங்களை நம்ப மறுக்கின்றீர்கள் என்றும் இதனை விரிவு படுத்திப் பார்க்கலாம்.

இன்னொரு கண்ணோட்டத்திலும் ஈமானை நாம் ஆய்வு செய்திடலாம்.
பொதுவாக ஈமானுக்கு எதிர்ப்பதம் - குஃப்ர் (kufr) - என்றே நாம் சொல்வோம்.
ஆனால் குர் ஆனிலே "அம்ன்" என்பதன் எதிர்ப்பதம்: "ஃகவ்ஃப்" (khawf). ஃகவ்ஃப் - என்றால் அச்சம் அல்லது பயம் என்று பொருள்.

நாம் மேலே காட்டியுள்ள அதே வசனத்தில் இருந்தும் இதனை நாம் புரிந்து கொள்ளலாம்.

மின் பஃதி ஃகவ்ஃபிஹிம் அம்னா!

அதாவது அச்சத்துக்குப் பிறகு அமைதியை வாக்களிக்கிறான் அல்லாஹு தஆலா!

அதாவது அச்சத்துக்கு எதிர்ப்பதமாக அமைதி அமைந்துள்ளது. அப்படியெனில் அது எப்படிப்பட்ட அமைதி? வல்லோன் அல்லாஹ்வின் - பாதுகாவலில் கிடைக்கின்ற அமைதி அது என்று சற்றே விரிவாக நாம் புரிந்து கொள்ள முடியும்!

இந்தக் கருத்தை இன்னொரு வசனமும் உறுதிப்படுத்துகிறது:

மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான். (16:112)

அதாவது அந்த ஊர்க்காரர்கள் அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தார்கள் என்று இறைவசனம் சொல்கிறது. ஆனால் இந்த அச்சமற்ற தன்மைக்கு - "ஆமினதன்" என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது!

இந்த அடிப்படையில் பார்த்தால் ஈமான் கொண்டவன் - அச்சத்திலிருந்து பாதுகாப்பு பெற்றவன் ஆகி விடுகிறான் என்பதை கவனியுங்கள்!

இவ்வசனத்தின் பின் பகுதியிலும் - "அம்னுக்கு" நேர் மாற்றமாக "ஃகவ்ஃப்" என்ற சொல்லையே அல்லாஹு தஆலா  பயன்படுத்தியுள்ளான். அதாவது அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக அனுபவிக்குமாறு செய்தான்!

இப்போது ஈமான் என்ற சொல்லின் ஆழத்தைப் புரிந்து கொள்ள அதன் எதிர்ப்பதமான "ஃகவ்ஃப்" என்ற சொல்லின் விரிவான பொருளையும் பார்ப்போம்:

to be frightened, scared, to be afraid, dread, fill with fear.....

தமிழில் அச்சம், பயம் மற்றும் பீதி என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்.
அப்படியானால் ஈமான் கொண்டவனுக்கு அச்சமில்லை; பயமும் இல்லை!

ஈமான் கொள்ளாதவன் அச்சத்திலும் பயத்திலுமே உழல்பவன்!

சான்றாக சில இறை வசனங்கள்:

நிச்சயமாக எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(46:13)

யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(2:277)

அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன்! (2: 257)

முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(10:62)

அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன். (22:78)

இந்த வசனத்தில் - வஃதஸிமூ பில்லாஹ் -  ஹுவ மவ்லாகும் - அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்! என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வைப் பற்றிக்கொள்ளுங்கள் என்பதனை ஒரு அறிஞர் ஒரு உதாரணத்துடன் விளக்கினார்:

ஒரு தாய் தனது மூன்று வயதே ஆன மகளை அழைத்துக் கொண்டு தெருவில் நடந்து செல்கிறார்; தாய் மெதுவாக நடந்திட மகள் சற்றே ஆர்வத்துடன் வேகமாக நடந்து முன்னே சென்றிட - நாய் ஒன்று திடீரென்று எதிர்பாராதவிதமாக மகளை நோக்கி ஓடி வந்து குரைத்திட - அந்தச் சிறுமி என்ன செய்வாள்?

வேகமாக ஓடிப்போய் அம்மாவைக்கட்டிப்பிடித்துக் கொள்வாள் அல்லவா? அது தான் பயத்திலிருந்து பாதுகாப்பு அச்சிறுமிக்கு!

அது போல எல்லாவிதமான அச்ச உணர்வுகளிலிருந்தும் பாதுகாப்பு பெற்றிட அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள்! அதுவே உண்மையான ஈமான்!

Comments