கற்புக்கு சோதனை வந்தால்?

சோதனை ஒன்று:

உங்கள் குடும்பத்தினரிடமிருந்து நீங்கள் திடீரென்று பிரிக்கப்படுகிறீர்கள். உங்கள் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டிட எவ்வித வாய்ப்பும் இல்லை. எப்போது மீண்டும் உங்கள் குடும்பத்தினருடன் போய் சேர்வீர்கள் என்றும் தெரியாது. குடும்பத்தினரை மீண்டும் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதே சந்தேகம் தான். எதிர்காலம் என்ன என்பதுவும் மிகப்பெரியதொரு கேள்விக்குறி!


சோதனை இரண்டு:

நீங்கள் ஒரு வரண்ட பாலைவனத்தின் நடுவில் திடுதிப்பென்று இறக்கி விடப்படுகிறீர்கள். அடுத்த வேளைக்கு உண்ண உணவோ, குடிக்கத் தண்ணீரோ இல்லை. உயிர் பிழைப்போமா என்பதே சந்தேகம் தான்.

இப்படிப்பட்ட சோதனைகளின் போது அடுத்து நாம் என்ன செய்வோம் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இச்சூழ்நிலைகளை நாம் எப்படி எடுத்துக்கொள்வோம் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

நம்மில் பலருடைய நிலை என்னவாக இருக்கும்?


ஒன்று: நம்மை நாமே நொந்து கொள்வோம். நமக்கு இந்நிலையை ஏற்படுத்தியவர்களை வசை பாடுவோம். அல்லது நம்மைப் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவனையே குறை சொல்லத் தொடங்கி விடுவோம்.
ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா? பொறுமை! அழகிய பொறுமை!

கிட்டத்தட்ட - இதே போன்ற இரண்டு சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு ஏற்பட்டது. நபி யூசுஃப் (அலை) அவர்கள், அவர்களுடன் கூடப்பிறந்த சகோதரர்களாலேயே குடும்பத்தை விட்டுப் பிரிக்கப்படுகின்றார்கள். பாழும் கிணற்றில் தள்ளப்படுகின்றார்கள்.

நபி யூசுஃப் (அலை) அவர்கள், இச்சூழ்நிலைகளில் மிக அழகாக பொறுமையைக் கடைபிடிக்கின்றார்கள்.

நாமும் பாடம் படித்துக் கொள்வோம்.

அடுத்து பின்வரும் சோதனையான சூழல் ஒன்றை சற்று ஆழமாக சிந்தியுங்கள்:

சோதனை மூன்று:

நீங்கள் திருமணம் ஆகாத ஒரு கட்டிளம்காளை. நீங்கள் வந்து சேர்ந்திருப்பதோ உங்களுக்கு முற்றிலும் அந்நியமானதொரு நகரம்; உங்களை ஆதரிப்பார் அங்கு யாருமில்லை; உங்கள் மீது இரக்கப்பட்டு உங்களுக்கு ஒரு வேலை தருகிறார் ஒரு பணக்காரர்; உங்கள் முதலாளியின் மனைவியோ கொள்ளை அழகு; கணவன் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து அவருடைய இளமை ததும்பும் மனைவி தன்னை முழுமையாக அலங்கரித்துக் கொண்டு உங்களை உல்லாசத்துக்கு அழைக்கிறார்; வற்புறுத்துகிறார்.
இந்த சோதனையை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?

அல்லாஹு த ஆலா நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு இந்த மூன்றாவது சோதனையையும் முன் வைத்தான்!

இச்சோதனையின்போதும் நபி யூசுஃப் (அலை) அவர்கள் பொறுமை காக்கின்றார்கள்; தன்னையும் தன் கற்பையும் காத்துக் கொள்கின்றார்கள்.

நபி யூசுஃப் (அலை) அவர்களின் மிக அழகான வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள திருக்குர்ஆனின் - 12- வது அத்தியாயத்தைப் பொறுமையாகப் படித்துப்பாருங்கள்.

இப்போது கேள்வி என்னவெனில் - மேற்கண்ட மூன்று சோதனைகளிலே, எந்த சோதனையை எதிர்கொள்வதற்கு மிக அதிக பொறுமை தேவை?

குடும்பத்தை, நம் மீது அளவு கடந்த பாசத்தைக் கொட்டி வளர்த்து வந்த தந்தையைப் பிரிந்து விட்டதற்காகவா?

பாழும் கிணற்றில் கிடக்கின்றோமே; அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது? உயிர் பிழைப்போமா, மாட்டோமா - என்ற சூழ்நிலைக்காகவா?

தம் எஜமானருக்கே துரோகம் செய்யத் தூண்டும் மிக இக்கட்டான சூழ்நிலைக்காகவா?

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் சொல்வார்களாம்:

இம்மூன்று சோதனைகளில் நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு மிக அதிக பொறுமை தேவைப்பட்ட சோதனை தம் எஜமானனின் மனைவி மூலமாக வந்த சோதனை தான்!

ஏன்?

தன் குடும்பத்தை விட்டுப் பிரிக்கப்பட்ட சோதனையில், நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு தம் சகோதரர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள எந்த ஒரு வாய்ப்பும் (Choice)  இல்லை!

அது போலவே கிணற்றில் தள்ளப்பட்ட போதும் நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு அதிலிருந்து வெளியேறி தம்மைக் காத்துக் கொள்ள எந்த ஒரு வாய்ப்பும் இல்லை!

ஆனால் - தமது கற்புக்கு ஒரு கடினமான சோதனை வந்த போது - அதனை எதிர்கொண்டிட அல்லாஹு த ஆலா நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருந்தான். அந்தப் பெண்ணின் இச்சைக்கு அடிபணிந்து விடலாம், அல்லது அப்பெண்ணின் இச்சைக்கு அடிபணிய மறுத்து தம்மைத் தாமே தற்காத்துக் கொள்ளவும் செய்யலாம்.

இச்சமயத்தில் தான் நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு மிக மிக மிக அதிகமான பொறுமை தேவைப்பட்டது!

ஏன்?

அந்த சூழ்நிலையை சற்று ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்:

1. நபி யூசுஃப் (அலை) அவர்கள் - ஒரு கட்டிளம் காளை! உணர்வுகள் கொப்பளிக்கும் இளமைப்பருவம். சற்றே வயதானவர்கள் கூட தடுமாறும் சூழ்நிலை; நபி யூசுஃப் (அலை) அவர்கள் திருமணம் ஆகாதவர் என்பதையும் கவனியுங்கள்; திருமணம் ஆன ஒருவர் கூட இன்னொரு பெண்ணால் தூண்டப்பட்டால், தம் இச்சையைத் தீர்த்துக்கொள்ள தம் மனைவியை நாட முடியும். ஆனால் நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லாத நிலை.

2. அழைப்பு விடுத்த பெண்ணோ - மிக அழகான பெண்மணி! அழகற்ற பெண் அழைத்திருந்தால் விலகி விடுவது சுலபம்; ஆனால் அழைப்பதோ மிக அழகான ஒரு இளம்பெண்!

3. அழைப்பு விடுக்கப்பட்ட சூழ்நிலை என்ன? நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு எகிப்து என்பது ஒரு அந்நிய தேசம். யாரையும் நபி யூசுஃப் அவர்கள் அறிந்திருக்கவில்லை; உறவினர்கள், நண்பர்கள் என்று யாருமே  கிடையாது அங்கே;  அவர்கள் தவறிழைத்தால் கூட மானம் பரிபோய்விட வாய்ப்பு இல்லை!

4. இன்னொரு சூழல் - தனிமை! நபி யூசுஃப் (அலை) அவர்களும் அப்பெண்மணியும் தான்! அந்தப் பெண்மணி எல்லாக் கதவுகளையும் மூடி விட்டாள்; யாருக்கும் தெரிந்து விட வாய்ப்பே இல்லை; மிக சுலபமாக மறைத்துக் கொண்டு விடலாம்!

ஆனாலும் தம்மைக் காத்துக் கொள்கின்றார்கள் நபி யூசுஃப் (அலை) அவர்கள்.
இளைஞர்களே! பாடம் படித்துக் கொள்வோம் நபி யூசுஃப் (அலை) அவர்களிடமிருந்து!

குறிப்பு: இக்கட்டுரையை எழுதும் சமயம் - டெல்லியில் கற்பு சிதைக்கப்பட்ட ஐந்து வயது சிறுமி பற்றிய செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நேரம் ஆகும்.

மனம் அழுகின்றது!

மத்திய மாநில அரசுகளே! நபி யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கையை பள்ளிக்கூட மாணவர்களுக்குப் பாடமாக்குங்கள்!

Comments