எல்லாத் திறமைகளும் உண்டு...ஒன்றைத் தவிர... என்ன செய்ய?

தலைமைத்துவம் என்பது ஒரு பெரிய பொறுப்பு. ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்றிட அவரிடம் பல விதமான திறமைகள் இருந்திட வேண்டும்.


நாம் முன்னர் சொல்லிக் காட்டிய LAZER PROFILE - அதாவது - ஒன்று அல்லது இரண்டு திறமைகளை மட்டுமே கொண்டிருப்பவர்கள்...


தலைமைப் பொறுப்புக்கு வர இயலாது. தலைமைக்குத் தேவையான பல திறமைகளை உடையவர்களை SEARCH LIGHT PROFILE உடையவர்கள் என்று அழைக்கிறார்கள் உளவியலாளர்கள்.


தலைமைப் பொறுப்பு என்பது மனித வாழ்வின் பரந்து விரிந்த ஒரு தளம். வாழ்வின் எல்லா மட்டங்களிலும் இந்தப் பொறுப்பு பிண்ணிப் பிணைந்திருக்கின்றது.

 ஒரு நிறுவனத்தின் உயர் மட்டத்தலைவர் (CEO) என்பதில் துவங்கி, போர்ப்படைத் தளபதிகள் (commanders), அரசியல் தலைவர்கள் (politicians), சமூகத்தை வழி நடத்தும் இமாம்கள் வரை தலைமைப் பொறுப்பு என்பது நம் வாழ்வின் பிரிக்க முடியாத அம்சமாக விளங்குகின்றது

இக்கட்டுரையில் மிகப் பெரும் பொறுப்புகளைச் சுமக்கின்ற தலைவர்களுக்குத் தேவையான அவசியத் திறமைகள் பற்றி பார்ப்போம்:

அறிவு நுட்பம் சார்ந்த திறமைகள் (intellectual skills)

தொழில் நுட்பம் சார்ந்த திறமைகள் (technical skills)

மனித உணர்வுகள் சார்ந்த திறமைகள் (emotional skills or soft skills)

மனித உறவுகள் சார்ந்த திறமைகள் (inter personal skills)

கருத்துப் பரிமாற்றத் திறன் (communication skill)

அப்படிப்பட்ட ஒரு பெரிய தலைமைப் பொறுப்பு ஒன்று நமக்கு வந்து சேர்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தலைமைக்குத் தேவையான எல்லாவிதமான திறமைகள் நம்மிடம் இருந்தாலும், இன்னும் ஒரே ஒரு திறமை மட்டும் நம்மிடம் இல்லை என்றால் என்ன செய்வது?

அப்படிப்பட்ட அந்த ஒரே ஒரு திறமையில் சிறந்து விளங்குகின்ற இன்னொருவரை நமது பொறுப்புக்குக் கூட்டாளியாக ஆக்கிக் கொள்வது புத்திசாலித்தனம்.

இதனை நபி மூஸா (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ளலாம்.

ஃபிர்அவ்ன் ஒரு கொடுங்கோல் ஆட்சியாளன். பனீ இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தவன். அடிமைபடுத்தப்பட்டிருந்த பனீ இஸ்ரவேலர்களை விடுவிக்கும் மா பெரும் பணிக்கு வல்லோன் அல்லாஹு தஆலா மூஸா (அலை) அவர்களைத் தேர்ந்தெடுக்கின்றான்.

பின் வரும் திருக்குர் ஆனின் வசனங்களை சற்றே ஆய்வு செய்வோம்.

ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் (வரம்பு) மீறி விட்டான்” (என்றும் அல்லாஹ் கூறினான்).

(அதற்கு மூஸா) கூறினார்: “இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!

“என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!

“என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!

“என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!

“என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக!

“என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)!

“அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக!

“என் காரியத்தில் அவரைக் கூட்டாக்கி வைப்பாயாக!

“நாங்கள் உன்னை அதிகமதிகம் (தஸ்பீஹு செய்து) துதிப்பதற்காகவும்;
“உன்னை அதிகமதிகம் நினைவு கூர்வதற்காகவும் (இவற்றையெல்லாம் அருள்வாயாக!)

“நிச்சயமாக, நீ எங்களை நோக்கியவனாகவே இருக்கிறாய்” (என்றார்)
“மூஸாவே! நீர் கேட்டவை, நிச்சயமாக உமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன” என்று (அல்லாஹ்) கூறினான்.( குர் ஆன் 20: 24-36)

புரிகிறதல்லவா?

அவ்வாறு நாம் இன்னொருவரையும் நமது பொறுப்புக்குக் கூட்டாளீயாக ஆக்கிக் கொள்ளும் போது நாம் கவனிக்க வேண்டியவை:

1. நமக்கு ஆணவம் எனும் ego தலையெடுத்து விட அனுமதிக்கக்கூடாது.

2. நமது கூட்டாளியை கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொள்ள விழைதல் கூடாது.

3. நமது கூட்டாளியின் திறமைகளை நாமே அங்கீகரித்திட வேண்டும். பொறாமை கூடாது.

4. நமக்கும் நமது கூட்டாளிக்கும் இடையே உள்ள உறவில் நேர்மை தவழ்ந்திட வேண்டும்.

5. நமது கூட்டாளியை இன்னொரு தலைவனாக ஆக்கிப் பார்த்திட அவரை வளர்த்திடவும் வேண்டும். அவர் வளர்ச்சியில் நாம் மகிழ்ச்சி அடைந்திட வேண்டும்.

இவைகளையே நாம் ஹள்ரத் மூஸா (அலை) அவர்கள் வாழ்விலிருந்து கற்றுக் கொள்கிறோம்.
கடை பிடிப்போமா?

Comments