வாழ்க்கைத்துணையாக வர இருப்பவருடன் பேசுங்கள்!

வாழ்க்கைத்துணையாக வர இருப்பவருடன் பேசிப் பார்க்கிறீர்களா?

பெற்றோர் முன்னிலையில் உங்கள் வாழ்க்கைத் துணையாவதற்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டவருடன் பேசுதல் அவசியம்.

அப்படி ஒரு வாய்ப்பை வலியுறுத்தி ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு அவர்களுடன் பேசுங்கள்; அவர்கள் பேசுவதைக் கேளுங்கள். நீங்கள் பேசுவதை விட அவரைப் பேச விட்டுக் கேளுங்கள். இந்தப் பேச்சை வைத்துத் தான் "இவர் நமக்குப் பொருத்தமானவர் தானா?" என்று பார்த்திட வேண்டியுள்ளது.

எந்த விஷயங்களை எல்லாம் அவர் அறிந்து வைத்திருக்கிறார்; அவருடைய கண்ணோட்டங்கள் எப்படி இருக்கின்றன; அவருடைய சிந்திக்கும் பாங்கு; சூழ்நிலைகளை சரியாக எடைபோடும் ஆற்றல்... இவைகளை கவனியுங்கள்.

.அவர் சொந்தமாக சிந்திக்கக்கூடியவரா......

அல்லது பிறரைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுபவரா என்பதையும் பாருங்கள்!

என்ன அவர்கள் படிக்கிறார்கள் என்று கேளுங்கள்; எந்த நூலாசிரியரைப் பிடிக்கும் என்று கேளுங்கள்;

பிரச்னைகளைப் பற்றி அதிகம் பேசுபவரா அல்லது தீர்வுகளை முன் வைத்துப் பேசுபவரா என்று கவனியுங்கள்!

எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிப்பவரா என்று பாருங்கள்; மன்னிக்கும் மனப்பான்மை இருக்கிறதா என்று பாருங்கள்!

அவருடைய மார்க்கப் பற்று எப்படிப்பட்டது என்பதனையும் பாருங்கள். பொருளாசை மிக்கவரா அல்லது மறுமைச் சிந்தனை மிக்கவரா என்றும் எடை போடுங்கள்.

மற்றவர்களை அதிகமாக விமர்சிக்கின்றாரா அல்லது தன்னை திருத்திக் கொள்வது பற்றிப் பேசுகின்றாரா என்றும் பாருங்கள்!

குறிப்பாக அவர் பேசும்போது, பிறர் நலன் (concern for others)  பேணுபவரா அல்லது சுயநலம் தென்படுகிறதா என்பதை அவசியம் கண்டுணருங்கள். மேலும் பிறர் பேசும்போது பொறுமையாக (active listening) காது கொடுத்துக் கேட்கக் கூடியவரா அல்லது அடிக்கடி குறுக்கிட்டு மற்றவர் பேசுவதை அலட்சியம் செய்பவரா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்

எச்சரிக்கை:

ஏன் இப்படிப்பட்ட உரையாடலை நாம் வலியுறுத்துகிறோம் என்றால் - திருமண வாழ்வின் மிக முக்கியமான பகுதிகளுள் ஒன்று மனம் விட்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்தல் தான்!

ஒரு அறிஞர் சொல்கிறார்: "Conversation is the lifeblood of a marriage."

அதாவது: " கலந்துரையாடுதல் என்பது திருமண வாழ்க்கைக்கு உயிரூட்டும் இரத்தம்!"

உரையாடலைத் தவிர்த்து விட்டால் திருமண வாழ்வு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!

ஆனால் - பெரும்பாலான கணவன் மனைவியர் - திருமணமான ஆறு மாதங்களிலேயே தங்களுக்குள் பேசுவதையே நிறுத்திக் கொள்கிறார்கள்.

உங்களுக்கு அந்த நிலை வேண்டுமா?

வாழ்க்கைத்துணை என்பது - ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவதற்காக; தமது ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக; ஒன்றை மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்காக; இந்தப் பரிமாற்றம் இருவருக்குள் ஒரு நெருக்கத்தை உண்டாக்கி விடும்! இந்த நெருக்கத்தினை ஆங்கிலத்தில் intellectual intimacy என்கிறார்கள்.

இது இல்லாவிட்டால் - திருமணம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் வந்து நின்று விடும்!!
"
ஆமாம்......? இதெல்லாம் யாருக்காக இப்படி எழுதிக்கிட்டு இருக்கீங்க? இதெல்லாம் நடக்கற காரியமாங்க?" - என்று கேட்கிறீர்களா?

நிலைமை மாறித்தான் ஆக வேண்டும்! முயற்சி செய்யுங்கள்!

வல்லோன் உதவி நிச்சயம் உங்களுக்கு உண்டு!

Comments