குற்றம் நிரூபிக்கப்படும் வரை யாரையும் குற்றவாளியாக்கிட வேண்டாம்!

மதீனாவில் கதாதா பின் நுஃமான் என்பவரின் உருக்குச் சட்டை திருடப்பட்டு விட்டது. அவரும் அவரின் நண்பரும் அத்திருட்டைக் கண்டுபிடிக்க முயற்சித்தனர்.


அப்பொழுது நுஃமானின் வீட்டிலிருந்து மாவு சிந்தியிருப்பதைக் கண்டனர். மாவு சிந்திய சுவட்டைப் பின்பற்றி சென்று தஃமா பின் இப்ரீக் வீட்டில் விசாரித்தனர்.

தஃமா தனக்கு தெரியாது என்று சத்தியம் செய்தான். தஃமாவின் வீட்டிலிருந்து சிந்திய மாவின் சுவடு செல்லும் திசையில் சென்றனர். அச்சுவட்டையும் தொடர்ந்து ஜைது பின் சலீம் என்ற யூதரின் வீட்டை அடைந்து விசாரித்தனர். அந்த உருக்குச் சட்டையை தஃமா தந்ததாக அந்த யூதர் கூறினார். அவரின் கூற்றைச் சில யூதர்களும் ஆமோதித்தனர்.

இவ்வழக்கு முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்தது.

தஃமா பின் இப்ரீக், நபிகளார் முன்னும் சத்தியம் செய்தான். எம்பெருமானாரும் அவர்களின் தோழர்களும் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் யூதர் திருடியிருப்பார் என்று எண்ணினர்.

அப்பொழுது - "(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு மனிதர்களுக்கு இடையில் தீர்ப்பு வழங்குவதற்காகவே உண்மையான இவ்வேதம் இறக்கப்பட்டது. சதி மோசடிக்காரர்களுக்கு வழக்காடுபவராக ஆக வேண்டாம்'' என்ற திருக்குர்ஆனின் 4-105வது வசனம் இறக்கியருளப்பட்டது.

இவ்வசனம் வந்ததும் விசாரணை விரிவானது. தஃமா பின் இப்ரீக் தோற்றத்தில் முஸ்லீமாகவும், ஆனால் உள்ளத்தில் கள்ளமானவன். இறையச்சம் இல்லாதவன் என்றும் தெரிய வந்தன.

தஃமா, மாவு வாங்கி வரும்பொழுது பக்கத்து வீட்டில் புகுந்து கதாதாவின் உருக்குச் சட்டையைத் திருடி மாவு பையில் மறைத்து வைத்தான். அதனால் மாவு சிந்தியது. உருக்குச் சட்டையை அவனது வீட்டில் வைத்தால் கண்டுபிடித்து விடுவார்கள் என்று சாமர்த்தியமாக ஜைது பின் சலீமிடம் கொடுத்தான். திருட்டு கண்டுபிடிக்கப்பட்டதும் யூதரைச் சிக்க வைத்து விட்டான்.

ஆய்வில் குற்றம் நிரூபிக்கப்பட்டதும் தஃமா மக்காவிற்கு ஓடி நபிகளாரின் ஏகத்துவ கொள்கையை எதிர்ப்போருடன் சேர்ந்து கொண்டான். தொடர்ந்து திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்தான். இறுதியில் கல்லடியால் கொல்லப்பட்டான்.

""எவர் ஒரு தவறை அல்லது குற்றத்தைச் செய்துவிட்டு நிரபராதியின் மீது பழி சுமத்துகிறாரோ அவரே அந்த அவதூறையும் தெளிவான பாபத்தையும் நிச்சயமாக சுமந்து கொள்கிறார்'' (4:112).

படிப்பினை:

குற்றம் நிரூபிக்கப்படும் வரை வெறும் அனுமானத்தின் பெயரில் யாரையும் குற்றவாளியாக்கிட வேண்டாம்!

எளிதில் ஒருவர் மீது குற்றம் சுமத்தி விடலாம். பின்னர் அது தவறு என்று அறிய வரும்போது நாம் வருத்தம் அடையவும் செய்யலாம். ஆனால் மனித உறவுகள் அறுந்தது அறுந்தது தானே! அதனை சீர் செய்திட முடியுமா?

Comments