தோல்வி அடைந்தால்!

தோல்வி அடைந்தால் - மனிதர்கள் உணர்ச்சி வசப் படுகிறார்கள்! அப்போது எப்படி செயல்படுகிறார்கள்?

சான்றுக்கு ஒன்று.  பத்ர் போரில் குறைஷிகள் தோற்றார்கள். மக்காவுக்குத் திரும்பியதும் - அங்கே ஒரே குரல் - பழிக்குப் பழி என்பது தான்!

ஆனால் - அன்றைய முஸ்லிம்களும்
சில கட்டங்களில் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

அப்போது அவர்கள் எப்படி செயல் பட்டிருக்கிறார்கள் தெரியுமா?
இங்கே அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை எதிர்நோக்கினார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு எவ்வாறு வழிகாட்டுகிறான் தெரியுமா?

ஏன் தோல்வி என்று அறிவுப் பூர்வமான
ஆய்வு ஒன்று அங்கே நடத்தப் படுகிறது.

உணர்ச்சிகள் அங்கே தூண்டப் படுவதில்லை!
இவ்வாறு தான் உஹத் ஆய்வு செய்யப் பட்டது.
ஹூனைன் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டது.

ஏன் தோற்றார்கள் என்று அவர்களுக்கு உணர்த்தப் பட்டது.
பாடம் படித்துக் கொண்டார்கள் நபித்தோழர்கள்.

தோல்வி என்பது மனித வாழ்வின் ஒரு அங்கம்.
வெற்றிகளில் மனிதன் பாடம் படித்துக் கொள்தை விட
தோல்விகளின் போது தான் பாடம் படித்துக் கொள்கிறான்.
பாடம் படித்துக் கொள்ள வேண்டும்.

இதனைத்தான் இந்த நபிமொழி உணர்த்துகிறது:

ஒரு நம்பிக்கையாளன் ஒரே புற்றிலிருந்து இரு முறை கொட்டப்பட மாட்டான்.

இந்த இரு வேறு அணுகுமுறைகளின் விளைவுகளையும்
நாம் ஆய்வு செய்வோமா?

உஹதில் தோல்வியடைந்த குறைஷிகள்
உணர்ச்சியின் வழியில்

எந்த அளவுக்குத் தரம் கெட்டுப் போனார்கள் தெரியுமா?
ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலைக் கிழித்து
ஈரலை சுவைத்துப் பார்த்திடும் அளவுக்கு!

ஆனால் உஹதில் தோல்வி அடைந்த முஸ்லிம்கள்
பழிக்குப் பழி வாங்கிடவில்லை!

 அப்படி நினைத்திருந்தால் அபு சுப்யானை
அகழ்ப் போரின் போதே கொன்றிருக்கலாம்.

அப்படி ஒரு வாய்ப்பும் கிடைக்கத் தான் செய்தது.
ஆனால் மக்கத்து வெற்றியின் போது அவர் இஸ்லாத்தில்!

இதுவே நமது அணுகுமுறை!

எனவே - தோல்வி அடைந்தால் -
உணர்ச்சி வழி செயல்படாதே!

பொறுமையுடன் அமர்ந்து சிந்தித்துப் பார்.
தோல்விக்கான காரணம் புரியும்.
பாடம் படித்துக் கொள்.

திரும்பவும் பழைய தவறைச் செய்வதைத் தவிர்.
அறிவு வழி செயல்படு.
இன்ஷா அல்லாஹ் - வெற்றி உனதே!

Comments