நூல்: வாழ்வின் இலட்சியம்!

முதல் அடியை நாம் தான் எடுத்து வைக்க வேண்டும்!

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள்/ மக்களிலேயே அழகானவர்களாக - வீரமிக்கவர்களாக இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓரிரவு...

(எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி) பீதிக்குள்ளானார்கள். ஆகவே - அவர்கள் சத்தம் வரும் திசையை நோக்கிப் புறப்பட்டார்கள்.


நபி (ஸல்) அவர்கள் அதற்குள் செய்தியைத் தீர விசாரித்து விட்டு அபூதல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டப்படாத குதிரை மீது சவாரி செய்தவர்களாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கழுத்தில் வாள் (மாட்டப்பட்டுத்) தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் - பயப்படாதீர்கள். பயப்படாதீர்கள் - என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

மதீனத்து மக்கள் ஏதோ ஒரு ஆபத்து என்று பயந்து நடுங்கிய வேளையில் மற்றெவரைக்காட்டிலும் நபியவர்கள் முந்திக் கொண்டு அது என்ன என்று ஆய்ந்திடப் புறப்பட்டுப் போய் - பயப்பட ஒன்றுமில்லை என்று மக்களுக்கு ஆறுதல் கூறுகின்ற இந்த தன்மையைத் தான் - ஆங்கிலத்தில் Leadership initiative என்கிறார்கள்.

இதற்குப் பொருத்தமான குர் ஆனில் இடம் பெற்றுள்ள அரபிச்சொல்....

SABAQA!

இச்சொல் திருமறை குர் ஆனில் பல தடவை பயன்படுத்தப் பட்டுள்ளது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை சற்று நோக்குவோம்.

SABAQA (verbal form) means: to act before or ahead of someone or something, precede, to outstrip, to forestall, to turn spontaneously, to surpass…

SABQ (noun form) means – antecedence, precedence, priority, initiative…..

நம்பிக்கையாளர்களில் மூன்று வகையினர் என்று அல்லாஹு தஆலா பட்டியல் இட்டுக்காட்டுகிறான்:

பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை  அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையாக நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும். (35:32)

இவர்களில் மிகவும் பாக்கியம் பெற்றவர்கள் நன்மைகள் செய்வதில் முந்திக் கொள்பவர்களே!

நற்செயல்களில் முந்திக் கொள்பவர்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகி விடுகிறார்கள்.

( நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள். இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள். (56: 10-11)

நற்செயல்களில் முந்திக் கொள்வது ஒன்றும் கடினமான கடுமையான விஷயம் கிடையாது. பின் வரும் வசனமே சான்று:

இ(த்தகைய)வர்கள் தாம் நன்மைகளின் பக்கம் விரைகின்றனர்; இன்னும் அவற்றை (நிறைவேற்றி வைப்பதில்) முந்துபவர்களாகவும் இருப்பார்கள். நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது; இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (23: 61-62)

நற்செயலில் முந்திக்கொண்டு நாம் செய்யும் காரியம் மிகச்சிறியது போல் தோன்றலாம். ஆனால் அல்லாஹு த ஆலா அதனை பன்மடங்கு பெரிதாக ஆக்கிக்காட்டி விடுவான்!

நான் எனது அடியான் என்னைப் பற்றி எண்ணுவதுபோலவே நடந்து கொள்கிறேன், அவன் என்னை நினைக்கும்-திக்ர் செய்யும்- போது நான் அவனுடனேயே இருக்கிறேன், அவன் என்னை தனக்குள்ளேயே நினைத்தால் நானும் அவனை என்னுள்ளே நினைப்பேன், கூட்டத்தில் நினைத்தால் அந்த கூட்டத்தை விட சிறந்த கூட்டத்தில் அவனை நினைப்பேன், அவன் என்னை ஒரு ஜாண் நெருங்கினால் நான் ஒரு முழம் நெருங்குவேன், அவன் ஒரு முழம் நெருங்கி வந்தால் ஒரு பாகம் நான் நெருங்குவேன், அவன் என்னிடம் நடந்து வந்து நெருங்க நினைத்தால் அவனிடம் நான் ஓடி வந்து நெருங்குவேன் என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)கூறினார்கள். அஹ்மத் 9340,

அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் சஃபா மலைக்கும் மர்வா மலைக்கும் இடையே ஓடிய அந்த ஓட்டம் ஒரு சிறிய முயற்சி தான். ஆனால் அதனை எவ்வளவு பெரிய விஷயமாக மாற்றித் தந்து விட்டான் அல்லாஹு தஆலா என்பதை இன்றும் நாம் அனுபவித்துக் கொண்டு தானே இருக்கின்றோம் - இன்றளவும் நமக்கு ஜம்ஜம் தண்ணீர் கிடைத்துக் கொண்டிருப்பதற்குக் காரணியாக அமைந்தது அந்தத் தொங்கோட்டம் தானே!

முந்திக் கொண்டு நற்செயல் புரிவதற்கு நமக்கு முன்மாதிரி - அன்சாரிகளும் முஹாஜிரீன்களும் தான்!

இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (9:100)

அந்த நபித்தோழர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால் நமக்கு ஆயிரம் ஆயிரம் வரலாற்றுச்சான்றுகள் கிடைக்கும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் - அல்லாஹு த ஆலா நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் - நமது முதல் முயற்சியைத்தான் - first step.

ஆனால் நாம் தான் அந்த ஒரு சிறு முதல் முயற்சியைக்கூட செய்வதற்குத் தயங்குகிறோம் - பல சாக்கு போக்குகளைச் சொல்லிக் கொண்டு!

Comments