நூல்: இஸ்லாத்தின் பார்வையில் மனித வள மேம்பாடு! - பகுதி 1

நூல்: இஸ்லாத்தின் பார்வையில் மனித வள மேம்பாடு! 

ஆசிரியர்: S A மன்சூர் அலி

1. பரிதாபத்துக்குரியவனா மனிதன்?

இன்றைய உலகில் மிக மிகச் சிக்கலான கேள்வி ஒன்று இருக்கிறது என்று சொன்னால் அது இந்தக் கேள்வி தான்.


நவ யக மனிதன் - ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியாத கேள்வி இது. மனிதன் தன் வாழ்வில் குறுக்கிடுகின்ற பல சிக்கல்களையும், தடைகளையும் தகர்த்தெறிந்து 'முன்னேறிச்' சென்று கொண்டிருந்த போதிலும் - 'தான் யார்?' என்ற இந்த சிக்கலில் இருந்து இன்னும் அவனால் விடுபட முடியவில்லை.


எனவே தான் - அறிவியலும் தொழில்நுட்பமும் பொங்கி வழிகின்ற இந்தக் காலத்திலும் மனிதன் பரிதாபத்துக்குரியவனாகவே காட்சியளிக்கிறான்.

மனிதன் யார்? - என்ற கேள்வி பல முனைகளில் இருந்து எழுப்பப்பட்டாலும், ஆழ்ந்த சிந்தனைக்கு உட்படுத்தப் பட்டாலும், பல சித்தாந்தங்கள் உருவாக்கப் பட்டாலும் - இன்னும் அது விடுவிக்கப் படாத ஒரு புதிராகவே காட்சியளிக்கிறது.

தன்னைச் சுற்றியுள்ள சடப்பொருட்கள் அனைத்தையும் புரிந்து கொள்வதில் வெற்றி கண்ட மனிதன் - தன்னைப் புரிந்து கொள்வதில் தான் தோல்வியடைந்து விட்டான்.

ஒரு மனிதன் சிறுவனாகப் பள்ளிக்குள் நுழைகின்றான். பின்னர் இளைஞனாகக் கல்லூரிக்குள் ஏறி இறங்குகிறான். ஆனாலும் 'தான் யார்?' என்பதை அறிந்து கொள்ளாமலேயே தனது வாழ்வைத் தொடங்குகிறான். இந்தக் கல்வியினால் என்ன பயன்?

ஒரு தோட்டக்காரன். அவனுக்குத் தோட்டம் அமைத்திடத் தெரியும். உழுதல், விதைத்தல், களையெடுத்தல், மருந்திடுதல், அறுவடை செய்தல் - எல்லாம் அவனுக்குத் தெரியும். ஆனால் அவனுக்கு மக்களுக்கு எத்தகைய பழங்கள் தேவை, எதனை அவர்கள் விரும்புகிறார்கள் - என்பது மட்டும் தெரியாது! இப்படிப்பட்டவர்களைத் தான் நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு விஞ்ஞானக் கதை.

விண்வெளிப் பயணி ஒருவர் செவ்வாய் கிரகத்துக்குச் சென்றிருந்தாராம். செவ்வாய் கிரகத்தில் இறங்கியதும் அங்கே அவர் தமது ஆய்வினை மேற்கொண்டிருந்த போது ஒரு கல்லூரிச் சுவர் ஒன்றில் அறிவிப்பு ஒன்று காணப்பட்டதாம். அதில் சமீபத்தில் புமிக்குச் சென்று திரும்பிய செவ்வாய்க்கிரக அறிஞர் ஒருவர் புமியில் தாம் கண்டு விட்டு வந்த ஒரு வித்தியாசமான உயிரினம் பற்றி உரையாற்றிடப் போவதாக அறிவிக்கப் பட்டிருந்ததாம். நம்மைக் பற்றித் தான் ஏதோ பேசிடப் போகிறார்கள் என்பதை ஊகித்தறிந்து கொண்ட நமது விஞ்ஞானி ஆர்வத்துடன் அங்கே சென்றாராம்.

அந்த செவ்வாய்க் கிரக அறிஞர் முதலில் பூமியில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதைத் தக்க சான்றுகளுடன் செவ்வாய்க் கிரகவாசிகளிடம் விளக்கி விட்டு பின்பு இவ்வாறு கூறினாராம்:

'நாம் இது வரை அறிந்த உயிரினங்களிலேயே மிக மிக முன்னேறி விட்ட ஓர் இனம் தான் மனித இனம். மனிதனின் உருவம் எப்படி இருக்கும் என்பதைப் புரிய வைப்பது சற்று கடினமே. எனினும் புரிவதற்காகச் சொல்கிறேன். தலைகீழாகக் கவிழ்க்கப் பட்ட ஒரு மத்து. அதற்கு நான்கு கைப்பிடிகளை மாட்டி விட்டது போல் தான் இருக்கிறான் மனிதன்.

இவர்கள் பூமியில் அங்கும் இங்குமாக ஓடித் திரிகின்றார்கள். இவர்கள் அதி வேகமாக ஓடுகிறார்கள். இவர்களுக்கு கோப உணர்ச்சி அதிகம். கோப வெறி தலைக்கேறியவர்களாக அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். மற்ற மனிதர்களைக் கொன்று விடுவதில் இவர்களுக்கு அலாதியான இன்பம்.

நான் பூமியில் பல பகுதிகளுக்கும் சென்று பார்த்தேன். ஆயிரக்கணக்கான மனிதர்கள் அணி வகுத்துக் கொண்டு ஒருவரையொருவர் அழித்துக் கொள்வதற்காக ஒன்று சேர்கிறார்கள். நவீனமான ஆயுதங்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். மற்றவர்களை சித்திரவதை செய்கிறார்கள். அவர்களுடைய போர்க்களம் கொடூரமாகக் காட்சியளிக்கிறது.

அவர்கள் தங்களின் பசியைத் தணித்துக் கொள்வதற்காகத் தான் இவ்வாறு மற்றவர்களைக் கொன்று போடுகிறார்களோ என்று தான் முதலில் நினைத்தேன். இறந்த மனித உடல்களை அவர்கள் உண்பதில்லை! எனவே, அவர்களுக்கு மனிதர்களைக் கொலை செய்கின்ற அந்தச் செயலே அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது என்று நான் புரிந்து கொண்டேன்.

தக்கக் காரணங்கள் எதுவுமின்றியே, மனிதர்களை அழிக்கின்ற அந்த மக்கள் தங்களுடைய அதிகமான நேரத்தையும், ஆற்றலையும், திறமையையும் கொலை ஆயுதங்களை உருவாக்குவதிலேயே செலவழிக்கிறார்கள். மற்றவர்களைக் கொன்று போட்டு அவர்களின் சொத்துக்களை அழித்த பின்பு தங்களுடைய 'வெற்றியை' பெருமையோடும் உணர்ச்சி பொங்கிடவும் கொண்டாடுகிறார்கள். தங்களுடைய மக்களின் வீரத்தைக் குறித்துக் கவி பாடி மகிழ்கிறார்கள்.

மேலும் இவர்களின் உணவுப் பழக்கங்கள் மிகவும் வேடிக்கையானவை. பழங்கள், காய்கறிகள், மாமிசம் - போன்றவற்றை இவர்கள் வீட்டுக்கு வாங்கிச் செல்கிறார்கள். மிகவும் காரமான பல பொருட்களை அவற்றில் கலந்து வேக வைக்கிறார்கள். பின்பு மிகுந்த ஆவலுடன் அவற்றை விழுங்குகிறார்கள். சத்தான பல உணவு வகைகளை அவர்கள் உண்டாலும் அடிக்கடி அவர்களுக்கு மருத்துவர்கள் தேவைப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மருத்துவர்களுக்கு அந்த சமூகத்தில் அவ்வளவு மதிப்பு. இருந்த போதிலும் மனிதர்கள் பல விதமான நோய்களால் அவதிப் படுகிறார்கள்.

மிக முன்னேறி விட்ட ஓர் உயிரினமாகக் காட்சியளித்தாலும் மனிதர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்களாகவே காணப்படுகிறார்கள்.'

பாவம்! இவன் தான் இன்றைய நவீன மனிதன்! பரிதாபத்துக்குரியவன்! ஏன் இந்த நிலை அவனுக்கு? சிந்தியுங்கள்!

எனவே மனிதனை அறிவோம் வருகிறீர்களா?



இஸ்லாத்தின் பார்வையில் - "மனிதர்கள் சுரங்கங்கள்!"

இஸ்லாத்தின் பார்வையில் -  மனிதப் படைப்பு மிக உயர்ந்த படைப்பு! அழகிய படைப்பு! அவன் கண்ணியமானவன்! அவன் இறைவனால் இந்தப் பூமிக்கென நியமிக்கப்பட்ட பிரதிநிதி!

முஹம்மது நபி(சல்) அவர்கள் சுமார் 1430 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன ஒரு மிகச்சிறிய பொன்மொழியை சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போமா?

'மனிதர்கள் சுரங்கங்கள்' - என்றார்கள் இறைவனின் தூதர் முஹம்மது நபி(சல்) அவர்கள்.

எவ்வளவு ஆழமானதொரு ஒப்பீடு இது! சுரங்கம் என்றால் என்ன? தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்பிற்கரிய பொருட்கள் கனிமங்களாக, தாதுப் பொருட்களாக தோண்டத் தோண்டக் கிடைத்துக் கொண்டே இருக்கும் இடம் தானே சுரங்கம் எனப்படுவது. சுரங்கங்களில் பல வகைகள் உண்டு. தங்கச் சுரங்கம், வெள்ளிச் சுரங்கம், நிலக்கரிச் சுரங்கம் - அவற்றுள் சிலவாகும்.

சுரங்கங்களிலுள்ள தாதுப் பொருட்களைத் தோண்டி எடுத்துத் தூய்மைப் படுத்தினால் நமக்குச் சுத்தமான தங்கம் கிடைக்கும், வெள்ளி கிடைக்கும், நிலக்கரி கிடைக்கும். அவை மக்களுக்குப் பயன் படும்.

அது போலவே மனிதனும் ஒரு சுரங்கம் தான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் பொதிந்து கிடக்கின்ற கருவூலங்கள் - மனித வளங்கள் - ஏராளம். அந்த மனித வளங்களைத் தோண்டித் தோண்டி, அள்ளி அள்ளி எடுக்கலாம். தூய்மைப் படுத்தலாம். பத்தரை மாற்றுத் தங்கங்களாக மிளிரச் செய்யலாம். அப்படிச் செய்திடும்போது மனிதன் உண்மை மனிதனாக மாற்றப் படுகின்றான். அப்படி என்ன வளங்கள் தான் மனிதனுக்குள் பொதித்து வைக்கப் பட்டிருக்கின்றன?

மனிதன் பல வளங்களுக்குச் சொந்தக்காரன். பல சிறப்பியல்புகளைத் தன்னகத்தே கொண்டவன். அளவிட முடியாத ஆற்றல்கள் உள்ளே பொதிக்கப்பட்டிருப்பவன் தான் மனிதன்.

அவனுக்கு சிந்திக்கும் ஆற்றல் உண்டு. இதுவே மனிதனின் அடிப்படை வளம் ஆகும். விழித்திருக்கும் நேரமெல்லாம் சிந்திப்பவன் அவன். நடந்தது, நடந்து கொண்டிருப்பது, நடக்க இருப்பது - அனைத்தையும் பற்றி சிந்திப்பவன் அவன். எனவே அவன் அறிவு வளம் (intellectual resources) நிரம்பப் பெற்றவன். ஒன்றை ஆய்வுக்கு உட்படுத்தி மறைந்திருக்கும் உண்மைகளை வெளிக் கொண்டு வருகின்ற ஆற்றல் அவனுக்கு உண்டு.

ஒன்றிலிருந்து மற்றொன்று, அதிலிருந்து பிறிதொன்று என்று அறிவில் முன்னேறிக் கொண்டே செல்பவன். அவன் கற்பனை வளம் நிரம்பியவன். கனவு காண்பவன் அவன். எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வை அவனுக்கு உண்டு. அவனால் பெரும்பெரும் திட்டங்களையெல்லாம் தீட்டிட முடியும். அவனது கற்பனைக்கு எல்லையே கிடையாது. எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து பார்ப்பவன் அவன்.

அவன் தனது இயல்பிலேயே ஆன்மிக வளத்தைப் (spiritual resources) பெற்றிருப்பவன். (இதனை மேற்குலகு வன்மையாக மறுத்திட்ட போதும் சரியே!) உண்மை இதுவே!

அது போலவே பல நற்பண்புகளை, குண நலங்களைப் (ethical resources) பெற்றிருப்பவன் மனிதன். உண்மை, நேர்மை, வெட்கம், வீரம், கற்பு, நீதி - போன்ற அழகிய பண்புகளுக்குச் சொந்தக்காரன் அவன். அவனுக்கு மனசாட்சி ஒன்று உண்டு. தீய ஒன்றைச் செய்ய முற்படும்போது அவனை 'இடித்துக் காட்டுகின்ற மனம்' ஒன்று அவனுக்கு உண்டு. தவறொன்றைச் செய்து விட்டு நிம்மதியாக இருத்தல் அவனுக்குச் சாத்தியம் இல்லை.

அவன் பொலிவுடன் திகழ வல்ல உடல் வளத்தைக் (physical resources) கொண்டவன். ஐந்து புலன்கள், எலும்பு மண்டலம், உணவு மண்டலம், இரத்த ஓட்டம், தசை மண்டலம், நரம்பு மண்டலம், நோய் எதிர்ப்பு மண்டலம், இன விருத்தி மண்டலம் - ஆகிய அனைத்தும் செவ்வனே அமைந்திருக்கும் அற்புத உடலமைப்பு அவனுக்குரியது. மிக மிகக் கடினமான வேலைகளையும் தனது உடல் உழைப்பால் செய்து முடிப்பவன்.

அவன் பல உணர்வுகளுக்குச் (psychological resources) சொந்தக்காரன். யாரோ ஒருவருக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு சோக நிகழ்ச்சியைக் கேள்வியுற்றால் இரக்க உணர்வு ஏற்படுகின்றது அவனுக்கு. தவறு செய்பவர்கள் மீது கோப உணர்ச்சி ஏற்படுகின்றது. இவ்வாறு மகிழ்ச்சி, ஏமாற்றம், கவலை போன்ற பல உணர்வுகளைப் பெற்றவன் மனிதன். அவன் தனக்கென்று பல விருப்பங்களை வைத்திருப்பவன். ஆர்வம் மிக்கவன். இவை எல்லாவற்றையும் விட மற்ற எந்த ஒரு படைப்பினத்துக்கும் இல்லாத தாமே ஒன்றைத் தெரிவு செய்து செயல்படுகின்ற சுய அதிகாரம் கொண்டவன்.

இவ்வளவு வளங்களையும் தன்னகத்தே கொண்டவன் தான் மனிதன்.

சிந்தனைக்கு:

கேள்வி 1: மேலே சொல்லப்பட்ட வளங்களையெல்லாம் மனிதனுக்குத் தந்தது யார்? இறைவனா? அல்லது - இறைவனை மறுப்பவர்கள் சொல்வது போல், இந்த வளங்கள் அனைத்தும் தற்செயலாக மனிதனுக்கு அமைந்து விட்டனவா?

கேள்வி 2: இவ்வளவு வளங்களையும் பெற்றிருக்கும் மனிதன் - இவ்வுலகில் வாழ்ந்திட வாய்ப்பளிக்கப் பட்டிருப்பது எதற்காக? உண்டு, வளர்ந்து, செத்து மடிந்திடவா? அல்லது மனித வாழ்க்கைக்கு உயர்ந்த நோக்கம் ஒன்று இருந்திட வேண்டுமா?


அப்படியே கிடைத்து விடுமா தங்கமும், வெள்ளியும்?

'மக்கள் சுரங்கங்கள்! தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!' - இந்த நபி மொழியில் இன்னும் ஒரு பாடமும் உண்டு!

தங்கமாக இருந்தாலும் சரி, அல்லது வெள்ளியாக இருந்தாலும் சரி - அவற்றின் சுரங்கங்களில் இருந்து அப்படியே கிடைத்து விடுவதில்லை தங்கமும் வெள்ளியும்!

அவை - கனிமங்களாகவும், தாதுப் பொருட்களாகவும் (ores and minerals) - அதாவது மண்ணோடு மண்ணாக, பல தூய்மையற்ற பொருட்களுடன் கலந்த நிலையிலேயே நமக்குக் கிடைக்கின்றன!

தோண்டி எடுக்கப் படுகின்ற அந்த உலோகக் கலவையிலிருந்து தான் - தூய்மையான தங்கமும் அல்லது வெள்ளியும் பிரித்து எடுக்கப் படுகின்றன.

அது போலவே ஒவ்வொரு மனிதனும் 'இயல்பிலேயே' பல அற்புதமான வளங்களுடன் பிறந்தாலும் மனிதனுக்கு உள்ளே பொதிந்திருக்கின்ற வளங்கள் அனைத்தும் உடனடியாக பயன்பாட்டுக்கு வந்து விடுவதில்லை.

சுரங்கத்தின் தாதுப் பொருட்களிலிருந்து ''தங்கத்தை'' வெளிக் கொணர்வது போன்றுதான் மனித வளங்களும் கண்டுபிடிக்கப்பட்டு (identification) தூய்மைப்படுத்தப்பட்டு (purification) பின்பு மெருகேற்றப்பட (development) வேண்டும். அதன் பின்னரே மனித வளங்கள் அனைத்தையும் முறையான பயன்பாட்டுக்குக் கொண்டு வர இயலும்.

மனிதன் தூய்மைப் படுத்தப் பட வேண்டியவனா என்றால், ஆமாம்! அவன் தூய்மைப் படுத்தப் பட வேண்டியவனே! ஏனெனில், மனிதன் இயல்பிலேயே ஒரு சில 'பலவீனங்களுடன்' தான் பிறக்கின்றான். ஏனெனில் அவன் 'மண்ணிலிருந்து' படைக்கப்பட்டவன்!

மனிதனிடத்திலே காணப் படும் அந்த பலவீனங்கள் என்னென்ன?

மனிதன் தனது இயல்பிலேயே பலவீனமானவன்.

'மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.' (4:28)

அவன் அவசரப் படுபவன். பொறுமையற்றவன். மறந்து விடுபவன்.

மனிதன் கோபக்காரன்; பொறாமைப் படுபவன். பயந்து நடுங்குபவன்; பதற்றப் படுபவன்; படபடப்பவன்;

கவலைப்படுபவன்; சோம்பல் உடையவன்; பேராசை மிக்கவன்; தன்னையே தாழ்த்திக் கொள்பவன்; ஆணவம் மிக்கவன்; பெருமைப் படுபவன்;

மனிதன் மனோ இச்சைகளுக்கு அடிமையாகி விடுபவன்;

இவைகளையே நாம் மனித 'பலவீனங்கள்' என்று அழைக்கிறோம்.

இப்படிப் பட்ட பல விதமான 'பலவீனங்களிலிருந்து' மனிதன் தூய்மைப்படுத்தப்பட்டு - படைப்பு அளவில் மனிதனாகப் பிறக்கும் அவன் ''மனிதத்தன்மை'' உடையவனாக மாற்றப்பட வேண்டும்.

இறைவேதம் திருக்குர்ஆனிலே மனிதனைக் குறித்திட இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் ஒன்று – பஷர் (bashar); மற்றொன்று – இன்சான்(insaan). பஷர் என்பது மனிதனின் உடலமைப்பை வைத்துச் சொல்லப்படுவது.

ஆனால் இன்சான் எனப்படுவது ”மனிதத்தன்மை”யை வைத்துச் சொல்லப்படுவது. தாதுப் பொருளில் இருந்து தங்கத்தை வெளிக் கொணர்வது போல பஷர் எனும் நிலையிலுள்ள மனிதனை இன்சான் எனும் நிலைக்கு உயர்த்தப் பட வேண்டும்.

இன்னொரு எடுத்துக்காட்டு. ஒரு விதை. அந்த விதைக்குள்ளே – நிழல் தருகின்ற சுவை மிகு கனிகளை வழங்குகின்ற, ஒரு அழகான மரத்தை உருவாக்கிட வல்ல சத்துக்கள் அனைத்தும் – அடங்கியுள்ளன. இந்த விதை ஒரு முழுமையான மரமாக மாற்றப்பட வேண்டும். (பார்க்க 14: 24-25)

மற்றொரு எடுத்துக்காட்டையும் திருமறை எடுத்தியம்புகிறது. மனிதன் இருளில் இருக்கின்றான். அவன் ஒளியின் பக்கம் கொண்டு சேர்க்கப் படல் வேண்டும். (பார்க்க 14: 1)

இப்போது ஒரு கேள்வி:

தங்கத்தைச் சுத்திகரித்திட ஒரு முறை உண்டு. வெள்ளிக்கு ஒரு முறை உண்டு.அந்தந்த முறையை - முறையாகப் பின்பற்றினால் தான் தூய்மையான தங்கத்தை அல்லது வெள்ளியை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

சரி அப்படியானால் ''மனிதனை'' உருவாக்கிட என்ன வழி முறை? இந்த அரும்பணியைச் செய்வது எப்படி? இந்த வழி முறையை நமக்குக் கற்றுத் தருபவன் நமது இறைவன். இந்தப் பணியைச் செய்வதற்கென்றே இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் தாம் இறைத்தூதர்கள்!

'இது வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; (14:1)

''நாம் உங்களிடையே உங்களில் இருந்தே ஒரு தூதரை நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும் உங்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவும் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காகவும் இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்''. (2: 151)

மேலே சொல்லப்பட்ட இறை வசனத்தில் தூய்மைப் படுத்தலைக் குறித்திட ''தஸ்கியா'' (tazkiya) என்றொரு சொல் இடம் பெற்றுள்ளது. இச்சொல்லுக்கு இரண்டு பொருட்கள் உண்டு. ஒன்று - வளரச் செய்தல். மற்றது - தூய்மைப் படுத்துதல். அதாவது மனிதர்களைத் தூய்மைப் படுத்தி அவர்களுடைய எல்லா ஆற்றல்களையும் வளர்ப்பது என்பது இறைத்தூதர் அனுப்பப்பட்ட நோக்கங்களுள் ஒன்று.

ஏன் இறைவன்? ஏன் இறைத்தூதர்கள்? இறைநம்பிக்கை இல்லாமலேயே நல்ல மனிதர்களை உருவாக்கிட முடியாதா? – என்று கேட்கப்படலாம்.

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவு பிரிக்கவே முடியாதது. இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு அறுபட்டால் – மனிதன் தான் மனிதன் என்பதையே மறந்து விடுகிறான்.

அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகி விடாதீர்கள். ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி – அல்லாஹ் செய்து விட்டான். (59: 19)

மனிதன் தனக்குள்ளே உள்ள “மனிதனை” மறந்து விட்டால் மனிதனிடம் எஞ்சியிருப்பது “மிருகம்” தானே!

சரி! இறைவனால் மனிதர்களில் இருந்தே தேர்வு செய்யப் பட்ட அந்த இறைத்தூதர்கள் – மனிதனை மனிதனாக மாற்றிட அப்படி என்ன தான் செய்தார்கள்?

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்ப்போமே!

எப்படி இருந்தவர்கள் இப்படி ஆனார்கள்?

சரி! இறைவனால் மனிதர்களில் இருந்தே தேர்வு செய்யப் பட்ட அந்த இறைத்தூதர்கள் – மனிதனை மனிதனாக மாற்றிட அப்படி என்ன தான் செய்தார்கள்?

சிந்தனை, அறிவு, நம்பிக்கை – இம்மூன்றுமே மனிதனின் அடிப்படை வளங்களாகும். இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இம்மூன்றிலும் முதலிடம் வகிப்பது சிந்தனையே. தெளிவான சிந்தனை அறிவுக்கு வழி வகுக்கிறது. அறிவின் அடிப்படையிலேயே நம்பிக்கை பிறக்கிறது. சிந்தனையின்றி அறிவு பிறப்பதில்லை. அறிவு அற்ற நம்பிக்கை மூட நம்பிக்கையாகி விடுகின்றது.

எனவே முதலில் இறைத்தூதர்கள் மக்களை சிந்திக்க வைத்தார்கள். தன்னைப் பற்றியும், தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றியும் சிந்தியுங்கள் என்று அவர்களின் சிந்தனையைத் தூண்டி விட்டார்கள். அந்த சிந்தனையின் அடிப்படையில் அவர்களின் அறிவுக்கண்களைத் திறந்து விட்டார்கள். தெளிவான அறிவு நம்பிக்கையாக மலர்ந்தது.

வானம்-பூமி அமைந்திருப்பதிலும் இந்த பூமியில் மனிதனின் வாழ்க்கை அமைந்திருப்பதிலும் – இதன் பின்னணியில் இறைவனின் உள்ளமையும், அவன் வல்லமையும் பொதிந்துள்ளமையைப் புரிய வைப்பதையே தங்கள் முழு முதற்பணியாக அந்த இறைத்தூதர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஆம். இறைத்தூதர்கள் அனைவரும் – தங்கள் பணியில் முதன் முதலில் எடுத்துக் கொண்ட விஷயமே – மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவுப் பாலத்தைச் சரி செய்வதைத்தான். இறைவன் இருக்கின்றான் என்ற யதார்த்தத்தை – உண்மை நிலையை – ஒதுக்கி விட்டு மனிதன் எப்படி மனிதனாக முடியும்?

அடுத்து இறைவன் யார்? அவன் எப்படிப் பட்டவன்? மனிதன் யார்? மனிதன் எங்கிருந்து வந்தான்? மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன? – என்பதைப் புரிய வைத்தார்கள் இறைத்தூதர்கள். அடுத்து மனிதனுக்கு இறைவன் வழங்கியுள்ள “வளங்களை” நினைவூட்டினார்கள். மனிதன் படைக்கப் பட்டதன் நோக்கத்தைப் புரிய வைத்தார்கள். இந்த பூமியில் மனிதன் வாழ்ந்து பின் அவன் சென்றடைய வேண்டிய இலக்கினைச் சுட்டிக் காட்டினார்கள். இவை அனைத்துமே சிந்தனை-அறிவு-நம்பிக்கை – இம்மூன்றின் அடிப்படையில் அமைந்து இறுதியில் அது அசைக்க முடியாத நம்பிக்கையாக (conviction) அவர்களுக்குள் பரிணமித்தது.

அடுத்து செயற்களம். இந்த செயற்களத்துக்கு இறைவன் இட்ட பெயர் – “நற்செயல்”. ஆங்கிலத்தில் good deeds. அரபியில் “அமலன் – ஸாலிஹ்”. இந்த செயற்களத்தில் தான் இறைத்தூதர்கள் – ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளூம் பொதிந்திருக்கின்ற “ஆற்றல்களைக்” கண்டுபிடித்தார்கள். அவற்றை வெளிக் கொணர்ந்தார்கள். இந்த செயற்களத்தின் சிறந்த முன்மாதிரியாகத் தாங்களே திகழ்ந்தார்கள். ஒவ்வொரு மனிதரையும் மனிதப்புனிதராக மாற்றிக் காட்டினார்கள்.

அதாவது தாதுப்பொருட்களிலிருந்து தங்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களை இருளிலிருந்து ஒளியின் பால் கொண்டு வந்து சேர்த்தார்கள். பஷர் ஆக இருந்தவனை இன்ஸான் ஆக மாற்றினார்கள். அதாவது விதை மரமானது. மரம் நிழலையும் தந்தது. கனிகளையும் தந்தது. மற்ற மக்கள் அந்த மரத்தடியில் வந்து இளைப்பாறினார்கள். கனிகளைப் புசித்தார்கள். அதாவது அந்த நம்பிக்கையாளர்களால் உலகம் பயனடைந்தது. இது ஒன்றே மனிதனை மனிதனாக்குகின்ற வழியாகும். இறைத்தூதர்கள் அனைவரையும் இறைவனே வழி நடத்திச் சென்றதால் இந்த ஒரே ஒரு வழி முறை (Divine Methodology) மட்டுமே வெற்றிகரமான வழி என்றும் நாம் துணிந்து சொல்லலாம்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் இறைவனின் இறுதித் தூதர். தங்களின் 23 ஆண்டு கால இறைத்தூது வாழ்வில் ஆயிரக் கணக்கான மனிதர்களைத் தலை சிறந்த மனிதர்களாக மாற்றிக் காட்டினார்கள். சிந்தனையில், அறிவில், உணர்வில், தொலை நோக்குப் பார்வையில், நிர்வாகத் திறனில், பண்பில், பழகுவதில், ஒழுக்கத்தில், திறமைகளில் – என்று தம் தோழர்களின் எல்லா உள்ளாற்றல்களையும் வெளிக் கொணர்ந்தார்கள்.

அது எப்படி? சான்றுகளுடன் பார்ப்போமா?

ஒவ்வொரு மனிதனும் ஒரு சூழ்நிலையுடன் தான் பிறக்கின்றான். ஒரு மனிதனின் சூழ்நிலைகள் சில வேளைகளில் அவனது உள்ளாற்றல்களைப் பயன் படுத்திடத் தடையாக அமைந்து விடுவதுண்டு. குறிப்பாக ஏழைகள், அனாதைகள், அடிமைகள், பெண்கள், கறுப்பர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் – இத்தகையவர்களின் உள்ளாற்றல்கள் கண்டுபிடிக்கப் படாமலேயே போய்விட வாய்ப்புண்டு. அவர்கள் தங்களின் மதிப்பை உணர்ந்திருக்க மாட்டார்கள்.

அவர்களுக்கு யாரும் கண்ணியம் அளிப்பதுமில்லை. அவர்களுக்கு வாய்ப்புகளும் தரப்படுவதில்லை. இந்நிலையில் அவர்களுக்குள் பொதிந்துள்ள உள்ளாற்றல்களின் நிலை என்ன? இவர்கள் – யாரும் கேட்பாரற்ற நிலையில் கிடக்கின்ற பட்டை தீட்டப் படாத இரத்தினக் கற்களுக்குச் சமம்.

ஆனால் இத்தகையவர்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தர்கள் தெரியுமா? அத்தகைய இரத்தினக் கற்களைப் பட்டை தீட்டி உலகோர் முன் சமர்ப்பித்தார்கள். ஆயிரக் கணக்கான சான்றுகள் இருக்கின்றன. ஒரு சில சான்றுகளை மட்டும் பார்ப்போம்.

பிலால்.

பிலால். ஓர் அடிமை. கறுப்பு நிறத்தவர். தனக்கென்று எந்த ஒரு சுய மதிப்பும் இல்லாதவர். அவர் இஸ்லாத்தினை ஏற்கிறார். அதற்காக பல இன்னல்களைச் சந்திக்கிறார். இஸ்லாம் அவருக்கு கண்ணியம் வழங்குகிறது. உயர் குலத்தைச் சேர்ந்த்தவர்களெல்லாம் அவரை 'எங்கள் தலைவரே' என்றழைக்கிறார்கள். அவருக்கு அப்படி ஒரு குரல் வளம்.அவர் குரலில் 'பாங்கொலி' கேட்டு மெய் சிலிர்க்காதவர் யாருமில்லை. அதன் பின் அவர் எந்த நிலைக்கு உயர்த்தப் படுகிறார் தெரியுமா? அவரே, முதல் இறை ஆலயமாம் கஅபாவின் (மக்களை தொழுகைக்கு அழைக்கின்ற) முதல் அழைப்பாளராக நியமிக்கப் படுகிறார்.

ஜுலைபீப். இவரும் முன்னால் அடிமையே. மிக மிகக் குள்ளமானவர் (னறயசக). முகத்தில் எந்த ஒரு அழகையும் பெற்றிடாதவர். யாரும் இவரை விரும்புவதில்லை. எந்த ஒரு சமூக நிகழ்ச்சிக்கும் இவரை அழைப்பாரில்லை. இவர் வந்து விட்டாலோ – முகம் சுளிப்பு. எனவே அவரும் ஒதுங்கிக் கொண்டார் – கூண்டிலடைபட்டவரைப் போல். இஸ்லாம் அவரைக் கண்டெடுத்தது. அவரை வெளிக் கொணர்ந்தது. மதினாவிலேயே மிகச் சிறந்த ஒரு பெண்ணை அவருக்கு மணமுடித்துத் தருகின்றார்கள் நபியவர்கள். அவருடைய உள்ளாற்றல்கள் எப்படி வெளிப் படுகிறது தெரியுமா? அவர் போர்க்களம் செல்கிறார். வீர சாகசங்கள் புரிகிறார்! எதிரிகளில் எழுவரைக் கொண்று விட்டு உயிர்த்தியாகியாக இறைவனிடம் போய்ச் சேர்கிறார்.

சலீம். இவரும் ஓர் அடிமையே. தந்தை பெயர் அறியாதவர். இஸ்லாத்தை ஏற்கிறார். இவரிடம் இருந்த 'அறிவு நுட்பம்' எனும் உள்ளாற்றலை வெளிப் படுத்திக் காட்டியது இஸ்லாம். 'நீங்கள் திருக்குர்ஆனை இந்த நால்வரிடம் கற்றுக் கொள்ளுங்கள்' என்று நபியவர்களால் நற்சான்று வழங்கப் பட்டவர்களுள் இவரும் ஒருவர். துணிவு – இவரிடம் காணப்ப்ட்ட இன்னொரு உள்ளாற்றல். காலித் பின் வலித். முஸ்லிம்களின் ஒப்பற்ற தளபதிகளுள் ஒருவர். உயர்குலத்தைச் சேர்ந்தவர். இவர் தனிப்பட்ட ஒரு விவகாரத்தில் நியாயமின்றி ஒருவரைக் கொன்று விடுகிறார். அந்தச் சமயத்திலேயே அவரைத் தட்டிக் கேட்கும் துணிவு இந்த முன்னால் அடிமை சலீமுக்கு மட்டுமே இருந்த்து. இவரும் உயிர்த்தியாகியாகவே மரணத்தைத் தழுவுகிறார். இவரின் அந்தஸ்து எந்த அளவுக்கு உயர்ந்தது எனில் – இரண்டாம் கலீஃபா உமர் அவர்கள் தமது மரணத் தருவாயில் சொன்னார்கள்: சலீம் மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால் நான் அவரையே அடுத்த கலீஃபாவாக தெரிவு செய்திருப்பேன்.

சரி,அப்படியானால் உயர்குலத்தில் பிறந்தவர்கள், செல்வந்தர்கள், அதிகாரம் கை வரப்பெற்றவர்கள், 'வெள்ளை' நிறத்தவர்கள், – இவர்களின் நிலை? இவர்கள் எல்லா வாய்ப்புகளும் கை வரப்பெற்றவர்கள். இவர்களுக்குள்ளும் ஏராளமான உள்ளாற்றல்கள். இவர்களின் உள்ளாற்றல்கள் தூய்மைப் படுத்தப் படாவிட்டால் நிலைமை என்ன ஆகும் என்று சற்று சிந்தியுங்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மனிதர்களின் உள்ளாற்றல்கள் தவறாகப் பயன்படுத்தப் பட்டு விடும். இவர்களின் சிந்தனை வளம் தந்திரம் செய்யப்படும். இவர்களின் அறிவாற்றல் அழிவுப் பணிக்குப் பயன்படுத்தப்பட்டு விடும். ஹிரோஷிமா என்ற சான்று போதும் தானே. உணர்வு என்பது மனிதனின் வலிமை மிக்க ஒரு உள்ளாற்றல். அது வெறியாக மாற்றப் பட்டு விடும். நிர்வாகத் திறன் இராஜ தந்திரமாக மாறி விடும். தொலைநோக்குப் பார்வை சதித் திட்டங்கள் தீட்டவே பயன்படும்.

ஆனால் இஸ்லாம் உயர்குலத்துச் செல்லப் பிள்ளைகளை எப்படி மாற்றியது தெரியுமா? சில சான்றுகளை மட்டும் பார்ப்போம்.

உமர். சிறு வயதில் தந்தையின் ஒட்டகங்களை மேய்த்து வந்தவர். முஹம்மது நபியைக் கொல்லத் துணியும் அளவுக்கு உணர்ச்சிப் பிழம்பானவர். இஸ்லாம் அவரைத் தூய்மைப் படுத்தியது. அவருக்கு வாய்ப்பையும் கொடுத்தது. இரண்டாம் கலீஃபாவாக உயர்கிறார். பதவி சுகம் காணவா? இல்லை. மரத்தடியில் படுத்து உறங்குகிறார். ஏழைத் தாய்க்காக உணவு சுமந்து செல்கிறார். நீதிக்கு ஓர் உமர் என்று பெயர் பெறுகிறார்.

முஸ்அப். பெரும்பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளை. இஸ்லாம் இவரைக் கண்டெடுத்தது. அறிவுக் கூர்மை என்றால் அப்படி ஓர் அறிவுக் கூர்மை. நபியவர்கள் மதினா வந்து சேர்வதற்கு முன்பு முதல் அயலகத் தூதராக அங்கு அனுப்பப்பட்டவர். அங்கே இஸ்லாத்துக்கு நல்லதொரு தளம் அமைப்பதில் வெற்றி கண்டவர். இவர் அமர்ந்து பேசினால் எதிரியும் நண்பனாகி விடுவார். இஸ்லாத்தையும் தழுவி விடுவார். அப்படிப்பட்ட ஒரு கருத்துப் பரிமாற்றத் திறமை (communication skill) அவருக்கு. ஆனால் அவர் மரணித்த போது அவரது நிலை என்ன தெரியுமா? அவர் அணிந்திருந்த ஆடை அவரது உடலைக் கூடப் போர்த்திடப் போதுமானதாக இல்லை.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப். வியாபாரத் திறமை மிக்கவர். இவர் மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது – வெறுங்கையுடன் தான் வந்தார். மிகக் குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய வியாபாரியாகி விட்டார். செல்வத்தை சேர்த்து வைத்துக் கொண்டாரா? தனக்கென செலவழித்துக் கொண்டாரா? அள்ளிக் கொடுத்தார் ஏழைகளுக்காகவும், இஸ்லாமியப் பணிகளுக்காகவும். தங்கத்தை கிலோ கணக்கில் தர்மம் செய்தவர் இவர். ஒரு தடவை இவர் செய்த தர்மத்தின் அளவு என்ன தெரியுமா? 600 ஒட்டகங்கள் சுமந்து வந்த இவரது வியாபாரப் பொருட்கள் முழுவதும்!

அன்றைய ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று ஒதுக்கி வைத்திருந்த அந்த அரேபிய மக்களை இஸ்லாம், பேரரசுகளை நிர்மாணிப்பவர்களாக (empire builders) மாற்றிக் காட்டியது. இஸ்லாம் மட்டும் இவர்களைக் கண்டெடுக்கவில்லை என்றால், இவர்களெல்லாம் அரபு நாடோடிகளாக வாழ்ந்து மறைந்து போயிருப்பர்.

இது ஒரு மிகப்பெரிய புரட்சி. தாம் உருவாக்கிய தலைமுறை குறித்து நபியவர்கள் இவ்வாறு சொன்னார்கள்:

'எனது சமுதாயத்தினரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே!' இவ்வாறு நற்சான்று வழங்கிட யாரால் முடியும்?





உங்கள் மதிப்பை யாரும் குறைத்துப் போட்டு விட முடியாது!

'மக்கள் சுரங்கங்கள்' - எனும் இந்த நபி மொழியை நாம் திரும்பவும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.

இந்த அத்தியாயத்தில் இன்னும் ஒரு பாடத்தைப் படித்துக் கொள்வோம்.

மனிதர்கள் அனைவருமே தங்கத்தைப் போல வெள்ளியைப் போல் எனும் போது

நானும் விலை உயர்ந்தவன் தானே! நானும் விலை மதிப்பற்றவன் தானே!

நான் ஏழையாக இருக்கிறேன். அதனால் என்ன? நான் ஒரு சுரங்கம் அல்லவா?

நான் கருப்பாக இருக்கின்றேன். அதனால் என்ன? நானும் தங்கத்தைப் போன்றவன் தானே!

நான் 'தாழ்த்தப் பட்ட' (கவனியுங்கள்.... தாழ்ந்த அல்ல!) வகுப்பில் பிறந்தவன். அதனால் என்ன? நானும் ஆதத்தின் மகனே... எனவே இறைவனால் கண்ணியப் படுத்தப் பட்டவன் தானே!

ஆங்கிலத்தில் ஒரு சொற் பிரயோகம் உண்டு: அதனை self esteem என்று சொல்கிறார்கள். இதற்கு 'சுய மதிப்பு' என்று பொருள் கொள்ளலாம். அதாவது - நமக்கு நாமே போட்டுக் கொள்கின்ற மதிப்பு!! அதாவது நமது மதிப்பை நாம் தான் நிர்ணயம் செய்து கொள்கிறோம்.

இந்த self esteem நமது வாழ்க்கையின் வெற்றிக்கு மிக அவசியம்.

நம்மைப் பற்றிய நமது மதிப்பீடு குறைவாக இருக்கிறது என்றால் இதனை low self esteem என்கிறார்கள். இப்படி குறைவாக தங்களை மதிப்பிட்டுக்கொள்பவர்கள் வாழ்வில் எதனையும் சாதித்திட இயலாது.

எனவே நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் நமது சுய மதிப்பீட்டை 'கட்டி எழுப்பிட வேண்டும்'. (to build a strong self esteem).

எப்படி கட்டி எழுப்புவது நமது மதிப்பீட்டை? இதற்கு இரண்டு வழிகள் தான் உண்டு?

ஒன்று - உங்களுக்கும் உங்களைப் படைத்த இறைவனுக்கும் ஒரு உறவுப் பாலத்தை அமைத்துக் கொள்வது.

இரண்டு - 'என்னால் இவ்வுலகுக்கு 'எனது திறமைகளைக் கொண்டு நல்லதொரு பங்களிப்பைச் செய்திட முடியும் என்ற தன்னம்பிக்கை' ஒருவருக்கு வரும்போது!

முதல் வழியை இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்:

என்னைப் படைத்த இறைவனை நான் ஏற்றுக் கொள்ளும் போது - எனக்கு இரண்டு 'பதவிகள்' கிடைத்து விடுகின்றன.

பதவி ஒன்று: நான் இறைவனின் அடிமை! நான் இறைவனின் அடிமை ஆகின்றேன் என்றால் எனது மதிப்பீடு எப்படி உயரும்?

'என் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் நான் அடிமை அல்ல!' - என்ற அழுத்தமான நம்பிக்கை நமது மதிப்பை பன்மடங்கு உயர்த்தி விடும்!

பதவி இரண்டு: நான் இந்தப் பூமியில் இறைவனால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி. இறைவனுக்கே நான் பிரதிநிதியா - என்று வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம்! நாம் அனைவருமே இறைவனின் பிரதிநிதிகள் தாம் இந்தப் பூமியிலே!

நீங்கள் உங்களுக்குள்ளேயே - 'நான் இறைவனின் அடிமை; நான் இறைவனின் பிரதிநிதி' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருங்கள் - மனதுக்குள் உங்களைப் பற்றிய உயர்வான ஒரு எண்ணம் தோன்றுவதை உணர்வீர்கள்.

எனவே தான் - இறை நம்பிக்கையாளன் ஒருவன் யாருக்கும் முன்னால் சிரம் பணிந்திடுவதில்லை!

பணிவு அவனிடம் குடி கொண்டிருக்கும். ஆனால் தலை நிமிர்ந்து வாழ்கின்ற வாழ்க்கைக்கு அவன் சொந்தக் காரனாக அவன் இருப்பான். தன்னைப் பற்றிய உயர்வான எண்ணம் அவனிடம் இருக்கும். ஆனால் மற்ற எவரையும் அவன் இழிவு படுத்திடுவதில்லை.

இரண்டாவது வழியை இப்போது பார்ப்போம்:

'எனது திறமைகளைக் கொண்டு நல்லதொரு பங்களிப்பை என்னால் இவ்வுலகுக்குச் செய்திட முடியும்' - என்று எண்ணும் போது ஒருவனின் சுய மதிப்பு உயர்கிறது என்று சொன்னோம் அல்லவா!

அதாவது - இது எப்போது சாத்தியம் என்றால் - ஒருவன் தனது உள்ளாற்றல்களைக் கண்டு பிடித்திடும் போது தான். இதனை ஆங்கிலத்தில் self discovery என்கிறார்கள். இது தான் மனித வள மேம்பாட்டின் நோக்கமுமாகும்.

Faith in God builds our Self Esteem!

Self discovery also builds our Self esteem!!

அதாவது - இறை நம்பிக்கை ஒருவனின் சுய மதிப்பை உயர்த்துகிறது1

ஒருவன் தனது ஆற்றல்களைக் கண்டு பிடிக்கும் போதும் அவனது சுய மதிப்பு உயர்கிறது.

உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வது உங்கள் கரத்தில் தான் இருக்கிறது.

உங்கள் மதிப்பை யாரும் குறைத்துப் போட்டு விட முடியாது - நீங்களே உங்கள் மதிப்பை குறைத்துக் கொண்டாலே தவிர!




மறைந்து கிடக்கின்றன - மனித வளங்கள்!

'மக்கள் சுரங்கங்கள்! தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!' - இந்த நபி மொழியில் இன்னும் ஒரு பாடமும் உண்டு!

அது தங்கச் சுரங்கமோ அல்லது வெள்ளிச் சுரங்கமோ அல்லது பெட்ரோலியச் சுரங்கமோ - இவை அனைத்தும் மறைந்தே கிடக்கின்றன! அவை ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப் படுகின்றன! பின்னரே அங்கிருந்து அவை அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டி எடுக்கப் படுகின்றன.

அது போலத் தான் மனித வளங்களும். நமது எல்லா வளங்களும் மறைந்தே கிடக்கின்றன. அதாவது - குழந்தையாக நாம் பிறக்கும் போது - உடலளவில் மிகவும் பலவீனமாகவும், அறிவைப் பொறுத்தவரை ஒன்றுமே அறியாத நிலையிலும் தான் பிறக்கின்றோம். என்னென்ன குணங்களுடன் நாம் பிறக்கின்றோம், என்னென்ன திறமைகள் நம்மிடம் ஒளிந்திருக்கின்றன - ஒன்றுமே நமக்குத் தெரியாது!

'உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான். (16:78)

அப்படியானால் அவை அனைத்தும் கண்டுபிடிக்கப் பட்டாக வேண்டும். எப்படி?

முதலில் பெற்றோர்களிடத்திலிருந்து தொடங்குவோம்.

பெற்றோர்களே! குழந்தை வளர்ப்பில் உங்களுக்கு மகத்தான பொறுப்பு ஒன்று இருக்கிறது. அது உங்கள் குழந்தைகளின் மனித வளங்கள் என்னென்ன என்று நீங்களே கண்டு பிடிப்பது தான்!

அதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் - அவர்களை நீங்கள் சற்றே உற்று கவனியுங்கள்! அவ்வளவு தான்! Observe your children!

இங்கே மூன்று சம்பவங்கள் உங்கள் சிந்தனைக்காகத் தரப் படுகின்றன:

ஒன்று:

நபி ஸல் அவர்கள் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். அவர் சிறு வயதாக இருக்கும்போது, அண்ணலார் வீட்டில் இரவுத் தங்குவார்கள். அவர்களின் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களை அண்ணலார் மண முடித்திருந்தார்கள்.

ஒரு நாள் பின் இரவில் அண்ணலார் தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்த போது, சிறு நீர் தேவைக்காக சென்றார்கள். அப்போது வெளியில் உளூ செய்ய தண்ணீர் தயாராக எடுத்து வைக்கப் பட்டிருந்தது. அவ்வாறு தண்ணீர் எடுத்து வைத்தது யார் என்று பார்த்த போது, சிறுவர் இப்னு அப்பாஸ் தான் எனத் தெரிய வந்தது.

இரவில் தான் கண் விழிப்பதை எதிர்பார்த்து, தமக்குத் தெரியாமல் பணிவிடை செய்வதைப் பார்த்த பெருமானார் மன மகிழ்வடைந்தார்கள். அதற்காக சிறுவர் இப்னு அப்பாஸை பாராட்டி, 'அல்லாஹும்ம ஃபக்கிஹ்- ஹூ - ஃபித்தீனி – வ - 'அல்லிம்- ஹுத் - தஃவீல் - யா அல்லாஹ்! இவருக்கு மார்க்க சட்ட விளக்கத்தைத் தருவாயாக! திருக் குர் ஆனின் விரிவுரையை இவருக்குக் கற்றுத் தருவாயாக! - என்று பிரார்த்தனையும் செய்தார்கள்.

இரண்டு:

நபிகள் (ஸல்) அவர்கள் ஒரு சமயம் கடைத்தெருவுக்குச் சென்றார்கள். அங்கு அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) என்ற சிறுவர் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள் விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து அவரை அண்ணலார் பாராட்டினார்கள். 'அல்லாஹும்ம பாரிக் - லஹூ - ஃபீ – பை – இ - ஹீ!' - யா அல்லாஹ்! இவரின் வியாபாரத்தில் பரக்கத் செய்வாயாக! - என்று பிரார்த்தனையும் செய்தார்கள். (நூல்: அபூ தாவூத்)

மூன்று:

உமைர் (ரலி) என்ற சிறுவர் குருவி ஒன்றை வளர்த்து வந்தார். அவர் வீட்டு வழியாக அண்ணலார் செல்ல நேர்ந்தால், ' யா உமைர்! மா ஃபஅலன் நுஃகைர் - உமைரே! உனது சின்னக் குருவி என்ன செய்கிறது? என்று அக்கரையுடன் விசாரிப்பார்கள்.

இந்த மூன்று சம்பவங்களில் இருந்து நாம் பெற வேண்டிய பாடங்கள்:

ஒன்று: குழந்தைகளை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று சற்றே கவனியுங்கள்.

இரண்டு: அவர்களை மனம் திறந்து பாராட்டுங்கள். அவர்களுக்காக துஆவும் செய்யுங்கள்.

மூன்று: அவர்கள் செய்யும் செயல் மிகச் சாதாரணமானது தானே என்று விட்டு விடாதீர்கள். அவற்றில் தான் உங்கள் குழந்தைகளின் மனித வளங்கள் பொதிந்து கிடக்கின்றன!



ஒவ்வொரு மனிதனும் ஒரு தனிப்பிறவியே!

'மக்கள் சுரங்கங்கள்! தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!' - இந்த நபி மொழியில் நாம் இன்னும் ஒரு பாடத்தையும் படித்துக் கொள்ள வேண்டியுள்ளது!

தங்கச் சுரங்கத்தில் நமக்குத் தங்கம் தான் கிடைக்கும்.

வெள்ளிச் சுரங்கத்தில் நமக்கு வெள்ளி மட்டும் தான் கிடைக்கும்.

வெள்ளிச் சுரங்கத்தில் தங்கம் கிடைப்பது அரிது!

தங்கச் சுரங்கத்தில் பெட்ரோலியம் கிடைப்பது அரிது!

இப்படித் தான் ஒவ்வொன்றும்.

அது போலத் தான் மனிதனும் அவன் வளங்களும்!

இறைவனின் படைப்பில் மனிதம் ஒரு அற்புதமான படைப்பு!

மனிதப் படைப்பில் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான அம்சங்கள் பல இருந்தாலும்,

இரண்டு மனிதர்கள் கூட வௌ;வேறானவர்களே!

ஒருவர் முகம் போன்று இன்னொருவர் முகம் இருப்பதில்லை! ஒருவர் குரல் போன்று இன்னொருவர் குரல் அமைவதில்லை.

அது போலவே அறிவாற்றலில் மனிதர்கள் வெவ்வேறானவர்களே!

அழகிய பண்புகளைப் பெற்றிருப்பதில் மனிதர்கள் வெவ்வேறானவர்களே!

ஆன்மிக உணர்வுகளிலும் இரண்டு மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள் அன்று!

மன வலிமை சார்ந்த அம்சங்களிலும், இரண்டு மனிதர்கள் ஒன்று படுவதில்லை!

அப்படியானால் என்ன பொருள்?

ஒவ்வொரு மனிதனும் ஒரு தனிப்பிறவியே!

இந்த முடிவுக்கு நாம் வந்தால், நம்மில் பல மாற்றங்கள் தானாகவே ஏற்படும்.

'எதிர் வீட்டுக் குழந்தை அடம் பிடிக்காமல் ஐந்து நிமிடங்களில் சாப்பிட்டு விடுகிறது; ஆனால் எனது குழந்தை மட்டும் பாடாய்ப் படுத்துகிறது' - என்று பேசுவது அறிவீனம்.

'பக்கத்து வீட்டுப் பையன் ஓடி ஓடி வேலை பார்ப்பதில் படு சுறுசுறுப்பு; ஆனால் என் பையன் மட்டும் வீட்டை விட்டு அசையவே மாட்டேன்கிறான்' - என்று ஒப்பிடுவது மிகத் தவறு.

'கணக்கில் உன் நண்பன் நூற்றுக்கு நூறு வாங்கும் போது உனக்கென்ன கேடு' - என்று மகனைத் திட்டுவதும் சரியன்று.

அவனைப் போல் நீ ஏன் இல்லை என்று கேட்பது எவ்வளவு பெரிய அறிவீனம்.

அது போலவே - மனிதர்கள் குணங்களிலும் வேறு பட்டு நிற்கிறார்கள்.

நபி மொழி உணர்த்தும் செய்தி:

'அல்லாஹ் எப்படி உணவு ஆதாரங்களை மனிதர்களுக்கிடையில் பங்கு வைக்கின்றானோ, அது போலவே குணங்களையும் பங்கு வைக்கின்றான்.'

ஆம்! நபித் தோழர்களின் குண நலன்களை நாம் ஆய்ந்தோம் என்றாலே தெள்ளென இது விளங்கும்.

அபூ பக்ர் சித்தீக் (ரலி) - உண்மையாளராகிறார்.

உமர் (ரலி) - நீதிக்கு ஒரு உமர் என்று பெயர் எடுக்கிறார்.

உத்மான் (ரலி) - வெட்க உணர்வை முழுமைப் படுத்தியவர் எனப் பெயர் பெறுகிறார்.

அலீ (ரலி) - வீரத்துக்கு முன்னுதாரணமாய்த் திகழ்கிறார்.

வணிகத் திறமையில் அப்துர் ரஹ்மான் பின் அஃவ்ப் (ரலி) முன்னிலையில் நிற்கிறார்.

இனிய குரலுக்குச் சொந்தக் காரராக பிலால் (ரலி) - இடம் பெற்றுக் கொள்கிறார்.

பறவைகளைக் கொஞ்சி வளர்க்க நுஃகைர் (ரலி) என்ற ஒரு நபித் தோழர் முன் வருகிறார்.

உடல் வலிமையை வெளிப் படுத்திக் காட்டுவதில் சில நபித் தோழர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

இந்த ஒரு பாடத்தை இன்று உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது; எனவே இப்போது கேள்விகள் பல எழுந்துள்ளன:

ஒரே ஒரு திறமையை வைத்து அளவிடப் படுகின்ற IQ Test , எல்லாருடைய அறிவுத் திறனையும் கணித்துச் சொல்வது எப்படி சரியான அளவீடாக இருக்கும் என்ற கேள்வி இப்போது Multiple Intelligence எனும் புதிய கோட்பாட்டை முன்னிருத்தி யிருக்கின்றது.

மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் எனும்போது - அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம் என்பது எப்படி சரியாகும் என்று கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார்கள் நவீன கல்வியாளர்கள். ஒரே விதமான தேர்வு முறையில் (examination) மாணவர்களின் வெற்றி தோல்வியை எப்படி தீர்மானிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

குழந்தை வளர்ப்பில் - குழந்தைகளின் ஏதாவது ஒரே ஒரு பிரச்னைக்குக் கூட பொதுவான ஒரு தீர்வை (solution) முன் வைத்து விட முடியாது; ஏனெனில் ஒரு குழந்தைக்கு அது சரி வரலாம்; இன்னொரு குழந்தைக்கும் அதே வழி முறை சரி வரும் என்று எதிர்பார்க்க முடியாது.

இதில் இன்னொரு முக்கியமான பாடத்தையும் மாணவர்களுக்கு நாம் முன் வைக்கலாம்:

இன்னொரு மாணவனோடு ஒருகாலமும் உங்களை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டாம். 'அவனைப் போல் என்னால் படிக்க முடியவில்லையே, அவன் அரை மணி நேரம் படித்து விட்டு, எண்பது மதிப்பெண் பெறுகிறான்; ஆனால் நான் இரண்டு மணி நேரம் படிக்கிறேன், எனக்கு மதிப்பெண் ஐம்பதைத் தாண்ட மாட்டேன் என்கிறதே!' - என்றெல்லாம் ஒப்பிடும் போது விளைவு தாழ்வு மனப்பான்மையே!

இது குறித்து இன்னும் நாம் இன்ஷா அல்லாஹ் விரிவாக எழுதுவோம்.

மனிதனுக்கு மனிதன் வேறுபட்டவன் எனும் போது - ஒவ்வொரு மனிதனுக்கு இறைவன் வைக்கின்ற சோதனைகளும் வெவ்வேறானவையே!

எனக்கு ஏற்பட்ட துன்பம் என் எதிரிக்குக் கூட வரக் கூடாது என்று ஒருவர் எண்ணலாம். ஆனால் ஒருவருக்கு ஏற்படும் சோதனை இன்னொருவருக்கு நிச்சயம் ஏற்படுவதில்லை!



யாரும் யாரையும் விட தாழ்ந்தவர்கள் கிடையாது!

'மக்கள் சுரங்கங்களைப் போன்றவர்கள் – தங்கத்தைப் போல, வெள்ளியைப் போல.' – என்றார்கள் இறைவனின் தூதர் முஹம்மது நபி(சல்) அவர்கள்.

இந்த நபி மொழியை நாம் திரும்பவும் திரும்பவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம். ஏனெனில் இந்த மிகச் சிறிய நபி மொழியில் பல ஆழமான அற்புதமான கருத்துக்கள் அடங்கியுள்ளன. எனவே பல கண்ணோட்டங்களிலும் இந்த நபி மொழி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படும்.

மக்களையும் சுரங்கத்தையும் ஒப்பிட்டு நபியவர்கள் கூறியதில் நமக்கென்ன பாடங்கள்? இக்கட்டுரையில் ஒரே ஒரு பாடத்தைப் படித்துக் கொள்வோம்.

இந்த ஒப்பீட்டின் படி – மனிதர்கள் தங்கத்தைப் போல வெள்ளியைப் போல விலை உயர்ந்தவர்கள். விலை மதிப்பற்றவர்கள்! இஸ்லாத்தின் பார்வையிலே மனிதப் படைப்பு என்பது மிக உயர்ந்த படைப்பு! He is precious!

இங்கு நபியவர்கள் பொதுவாக மனிதர்கள் என்று குறித்துச் சொன்னது கவனிக்கத் தக்கது. அதாவது – மனிதர்கள் அனைவருமே விலை மதிப்பற்றவர்கள் தான்!

அதாவது – மேற்குலகம் மார் தட்டிக் கொள்வது போல, மனிதர்களில் சிறந்தவர்கள் வெள்ளையர்களே என்ற கருத்து ஒரு அப்பட்டமான பொய்யாகும்! இங்கே பிராமணர்களே சிறந்தவர்கள் என்று ஒரு சாரார் நெஞ்சு நிமிர்த்துவதும் பொய்யான வாதமே!

வெள்ளையனாக இருந்தாலும், கறுப்பினத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், உயர் குலத்தோனும், தாழ்த்தப் பட்டவனும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், பணக்கார வீட்டுக் குழந்தையானாலும், ஏழையாக ஒருவன் பிறந்தாலும் – இவர்கள் அனைவருமே விலை மதிப்பற்றவர்கள் தாம்!

யாரும் யாரையும் இழிவாகக் கருதிட வேண்டாம் என்பது நபிமொழி.

நபி (ஸல்) அவர்கள் வரலாற்றில் காணக் கிடைக்கின்ற ஒரு நிகழ்ச்சி இது:

மக்களால் அவ்வளவாக மதிக்கப்படாத அடிமை ஒருவர். இவர் நபி ஸல் அவர்களை சந்திக்க அவ்வப்போது மதினா வருவார். வரும்போதெல்லாம் தவறாமல் நபியவர்களுக்கு ஏதேனும் ஒரு அன்பளிப்பு ஒன்றை வாங்கி வரத் தவறுவதில்லை.

ஒரு முறை – அவர் நபியவர்களை சந்திக்க மதினா வந்து அன்பளிப்புப் பொருள் ஒன்றை வாங்க அங்காடி ஒன்றுக்கு சென்றிருந்தார். இவரைக் கண்ட மற்ற நபித்தோழர்கள், அவருடைய வருகை குறித்து நபியவர்களிடம் தெரிவித்து விட்டனர். உடனே நபியவர்கள் அந்த அங்காடிக்குச் சென்று, அவரை பின் பக்கமாகச் சென்று கட்டிப் பிடித்துக் கொண்டு, 'இவரை விலைக்கு வாங்குவார் யாரும் உண்டா?' – என்று கேட்டார்கள். தன்னைக் கட்டிப்பிடித்தது நபியவர்கள் என்று அறியாத அவர், தன்னை விடுவித்துக் கொண்டு திரும்பிப் பார்த்திட அது நபியவர்கள் தான் என்பதைக் கண்ட அவர், 'யார் இந்த அடிமையை விலை கொடுத்து வாங்குவார்கள் நபியே?' என்று கேட்க, அல்லாஹ்விடத்தில் உமது மதிப்பு மிக மிக அதிகமே' என்றார்களாம்.

இது தான் நமது மனப்பாங்காக இருந்திட வேண்டும்!

இன்னொரு நபிமொழியையும் கவனத்தில் வைப்போம்:

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவிக்கிறார்கள்: ஒரு (பணக்கார) மனிதர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), 'இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்'' என்று கூறினர்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் மெளனமாயிருந்தார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்'' என்று கூறினர்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்' எனக் கூறினார்கள்.  (புகாரி 5091)

வல்லோன் அல்லாஹ் கூறுகின்றான்:

'நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள பலவற்றையும் விட அவர்களை மேன்மைப் படுத்தினோம். (17:70)

இப்போது பாடங்களுக்கு வருவோம்.

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் அனைவருமே விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் தான் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். அப்படியே அவர்களை நடத்துங்கள்.

அது போலவே – உங்கள் குழந்தைகளுக்கு, மனிதர்கள் அனைவரையும் 'மதித்திட வேண்டும்' என்பதைக் கற்றுக் கொடுங்கள். யாரையும் அவர்கள் மட்டம் தட்டிப் பேசிட அனுமதிக்காதீர்கள். உங்கள் வீட்டு வேலைக்காரருக்குக் கூட உங்கள் குழந்தைகள் மதிப்பளிக்கக் கற்றுக் கொடுங்கள். நீங்களும் மதிப்பளியுங்கள்.

ஆசிரியர்களே! உங்கள் மாணவர்கள் அனைவருமே பொக்கிஷங்கள் தான். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களைப் பாராட்டுங்கள். ஆனால் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை அவமானப் படுத்தாதீர்கள். அவர்கள் வேறு விதமான சுரங்கங்களாக இருக்கலாம் என்பதை உணருங்கள்.

புதிய தலைமுறை முஸ்லிம்களே! உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது. உங்களுக்கு முந்தைய தலைமுறை முஸ்லிம்கள் செய்த தவறை நீங்கள் செய்து விடக் கூடாது. அவர்கள் மனிதர்களை வேறு படுத்தி நடத்துவதில் மற்றவர்களைப் போலவே நடந்து கொண்டார்கள். அவர்களில் ஒரு சிலர் தங்களின் வம்சப் பரம்பரைப் பெருமை பேசினார்கள். ஒரு சிலர் மற்ற சிலரை தாழ்த்தப் பட்டவர் போன்று நடத்தினர். (விரிவாக எழுதிட இது இடமல்ல.)

வேண்டப் படுவது என்னவெனில் – நீங்கள் மனிதர்கள் அனைவரையும் கண்ணியமாக நடத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு கேள்வி கேட்கப் படலாம். பாவம் செய்பவர்களை எவ்வாறு கண்ணியப் படுத்த முடியும் என்று.

ஆதத்தின் மக்கள் அனைவருமே பாவம் செய்திடும் சூழலோடு தான் படைக்கப் பட்டிருக்கின்றார்கள். ஏன், நமது கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால் நாம் கூட பாவங்கள் பல செய்தே இருப்போம்.

பாவம் செய்பவர்களிடத்தில் நமது அணுகு முறை எவ்வாறு இருக்க வேண்டும் எனில், ஒரு மருத்துவர் போன்று இருந்திட வேண்டும். ஏனெனில் அவர் பாவம் எனும் நோயில் வீழ்ந்திருக்கிறார். அவரைக் காத்திட வேண்டியது மருத்துவரின் பொறுப்பு. அல்லது தீயில் சிக்கிக் கொண்டவர்களைக் காக்க வருகின்ற தீயணைப்புப் படை வீரர்களைப் போன்று நீங்கள் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் பாவத் தீயில் சிக்கிக் கொண்டவர்கள் தான்.

நபியவர்கள் கூட தம்மை இவ்வாறு தான் ஒப்பிட்டுச் சொல்லியிருக்கின்றார்கள்:

'நான் தீயில் தானே வந்து விழுகின்ற விட்டில் பூச்சிகளை அந்தத் தீயில் விழாமல் தடுப்பவரை போன்றவன்' -என்று.

மக்கள் அனைவரையும் மதிக்கும் அணுகுமுறையே நமது நாகரிகம். உன்னதமான இந்த மனப்பாங்கு இஸ்லாமிய வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கங்கள் அளவிட முடியாதவை!




மனித வள மேம்பாடு எதற்காக?

மனித வளங்களை நாம் ஐந்து விதங்களாகப் பிரித்து நாம் ஆய்வு செய்திடலாம். அவை: அறிவு வளம் (intellectual resources); ஆன்மிக வளம் (spiritual resources); மன வளம் (psychological resources); ஒழுக்க வளம் (ethical resources); உடல் வளம் (physical resources).

இப்போது மனித வள மேம்பாட்டின் அவசியம் குறித்து நாம் சிறிது கவனம் செலுத்துவோம்.

1. மனிதன் பிறந்ததே அவன் வளர்வதற்காகத்தான்! ஒருவனின் மனித வளங்கள் வளர்க்கப்படவில்லை எனில் – அவன் ஒரு குறை மனிதன்! இதனை ஆங்கிலத்தில் – personality disorder என்று குறிப்பிடுகின்றார்கள்.

2. ஒரு மனிதனின் செயல்பாடுகளைத் (behavior) தீர்மானிப்பவை அவனது மனித வளங்களே! வாழ்க்கையில் – சிறப்பாகச் செயல்பட இயலாதவர்கள் சூழ்நிலைக் கைதிகளாகிறார்கள் (victims of situations).

3. மனித வாழ்வின் மிகப்பெரிய சவால்களைச் சந்திப்பதற்கு – வாழ்வின் முக்கியமான தருணங்களில் அவன் சிறப்பான முடிவுகளை எடுத்திட வேண்டிய அவசியம் ஏற்படும். ஒருவனது முடிவெடுக்கும் திறமை (decision making skill) என்பது அவனது மனித வளத்தைப் பொறுத்ததே!

4. ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றி பெறவே விரும்புகின்றான். ஒரு மனிதனின் மனித வளங்கள் எந்த அளவுக்கு வளர்க்கப் படுகின்றதோ, அந்த அளவுக்குத் தான் அவனது வாழ்க்கை வெற்றியின் (life success) ஆழ அகலம் அமைந்திருக்கும் என்றால் அது மிகையில்லை!

5. அது போலவே – மனிதன் தனது ஐந்து விதமான வளங்களையும் எந்த அளவுக்கு வளர்த்துக் கொள்கின்றானோ அந்த அளவை வைத்தே ஒரு மனிதனின் வாழ்க்கை இலக்கினை (life goal) தீர்மானிக்க இயலும்.

6. ஒரு மனிதன் இவ்வுலகுக்கு அளிக்கின்ற பங்களிப்பு (contribution) என்பதும் அவனது மனித வளங்கள் எந்த அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளதோ அந்த அளவைப் பொறுத்ததே.

7. தலைமைத்துவம் பற்றி நிறைய பேசுகிறாம். ஆனால் அந்தத் தலைமைத்துவத் திறன் (leadership skills) என்பது ஒருவனது மனித வளங்களைப் பொறுத்ததே!

8. மனித வளங்கள் வளர்க்கப் பட்டால் தான் மனித உறவுகள் (human relations) சீரடையும். அது குடும்பத்துக்கு உள்ளே கணவன்-மனைவி உறவாக இருந்தாலும் சரி, பெற்றோர்- பிள்ளைகள் உறவாக இருந்தாலும் சரி, பணியிடங்களில், பொது வாழ்வில் நாம் மற்றவர்களுடன் பழகுகின்ற உறவாயினும் சரி – நமது மனித வள மேம்பாட்டைப் பொறுத்தே அவை சீர் பெறும்.

அடுத்து – நாம் மேலே குறிப்பிட்ட ஐந்து வளங்களையும் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், அப்படி வளர்த்துக் கொள்ளாவிட்டால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

ஆன்மிக வளம் மனிதனுக்கு மன அமைதியைத் (peace of mind) தருகிறது. ஆன்மிக வளம் மனிதர்களுக்கு நேர்வழியைக் (Guidance) கற்றுத் தருகின்றது. ஆன்மிக வளம் மனிதனைப் பொறுப்புள்ளவனாக (responsible and accountable) ஆக்குகின்றது. ஆன்மிக வளம் மனிதனைப் பண்பாளனாக (character) மாற்றிக் காட்டுகின்றது.

ஆனால் அதே நேரத்தில் முறைப்படியான ஆன்மிக வளம் வழங்கப்படவில்லால் ஏற்படும் விளைவுகள்: மூட நம்பிக்கை (superstitious); ஆணவம் (aggressiveness); பொறுப்பற்ற மனிதர்கள் (irresponsible); குறிக்கோள் அற்ற வாழ்க்கை (no worthwhile goal in life).

அறிவு வளம் மனிதனை தன்னம்பிக்கை (self confidentce) உடையவனாக மாற்றுகிறது. அறிவு வளம் மனிதனைத் திறமை உடையவனாக (skilled) ஆக்குகின்றது. அறிவு வளம் மனிதனின் பிரச்னைகளுக்குத் தீர்வைச் (problem solving) சொல்லித் தருகின்றது. அறிவு வளம் மனித வாழ்வை இலகுவாக ஆக்கித் தருகின்றது; மேம்படச் செய்கின்றது.

ஆனால் தூய்மைப்படுத்தப்படாத “அறிவு” மனிதனுக்கு கேட்டையே மிகுதியாக வழங்கி விடுகின்றது; தனக்கு எல்லாம் தெரியும் எனும் ஆணவம்; மற்றவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் மோசடித்தனம் (exploitation); மனித இனத்தையே கூண்டோடு காலி செய்கின்ற – weapons of mass destruction – ஆயுதங்களை உருவாக்கித் தந்தது மனிதனுக்குத் தூய்மையைக் கற்றுத் தராத நவீன கல்வி!

மன வளம் மற்றவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றது. மன வளம் தனது உணர்ச்சிக்களைக் கையாளக் கற்றுத் தருகின்றது. மன வளம் பொறுமையைக் கற்றுத் தருகின்றது. ஆனால் மன வளம் பண்படுத்தப் படாத போது அது மனிதனை மிருகமாக்கி விடுகின்றது. மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் – போன்ற மன நலப் பிரச்னைகளை உண்டாக்கி விடுகின்றது. மனிதனைத் தற்கொலைக்குத் தள்ளி விடுகின்றது.

ஒழுக்க வளம் (ethical resources) மனிதனை பண்புள்ள மனிதனாக (people of character)ஆக்குகின்றது. நேர்மையாளர்களை உருவாக்குகின்றது (people of integrity). கொள்கைப் பிடிப்புள்ளவர்களை (principled people) உருவாக்குகின்றது தீமைக்கெதிராக மனிதர்களைக் (people of courage) குரல் கொடுக்க வைக்கின்றது. ஏழைகள், அனாதைகள், பெண்கள் , முதியவர்களுக்காகப் பாடுபட வைக்கின்றது (culture of concern for others).

ஆனால் ஒழுக்க வளம் வளர்க்கப்படவில்லையெனில் – சமூகத்தில் எல்லாவிதமான தீமைகளும் அரங்கேறுகின்றன. குற்றவாளிகள் உருவாகின்றார்கள். நீதி நிலைநிறுத்தப் படுவதில்லை. படுகொலைகள் அதிகரிக்கின்றன. விபச்சாரம் பெருகுகின்றது.

உடல் வளம் மேம்படுத்தப் படும்போது மனிதன் உடல் வலிமையைப் பெறுகின்றான். ஆரோக்கியமாக வாழ்கின்றான். சுறுசுறுப்பாக இயங்குகின்றான். இல்லறம் சிறக்கின்றது.

உடல் வளம் மேம்படுத்தத் தவறும் போது பல விதமான நோய்கள் மனிதனைப் பீடிக்கின்றன. வளர்ச்சியற்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. குண்டு மனிதர்கள் (obesity) உருவாகின்றார்கள். சோம்பேறி மனிதர்கள் தோன்றுகின்றார்கள்.

அதே நேரத்தில் இன்னொன்றையும் நாம் சொல்லிட வேண்டும். அதாவது நாம் மேலே சொன்ன ஐந்து விதமான வளங்களும் ஒருங்கிணைந்த முறையில் வளர்க்கப்பட வேண்டும். ஒன்றை வளர்த்து இன்னொன்றை விட்டு விடக்கூடாது.




ஒருங்கிணைந்த மனித வள மேம்பாடு

இஸ்லாமிய மனித வள் மேம்பாடு என்பது மனிதனின் அனைத்து விதமான வளங்களையும் ஒருங்கிணைத்து வளர்த்திடும் (comprehensive) அற்புதமான வழிமுறையாகும். ஏனெனில் இது இறைவனின் வழிமுறை.

மனித வளங்களை நாம் ஐந்து விதங்களாக பிரித்து ஆய்வு செய்து வருகிறோம் அல்லவா?

அவை: அறிவு வளம் (intellectual resources); ஆன்மிக வளம் (spiritual resources); மன வளம் (psychological resources); ஒழுக்க வளம் (ethical resources); உடல் வளம் (physical resources).

இந்த ஐந்து விதமான வளங்களும் இஸ்லாத்தில் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதை பார்ப்போம்.

தொழுவது நம் ஆன்மிக வளம் சம்பத்தப் பட்டது. ஆனால் அதற்கு உடல் சுத்தம் அவசியம் என்பது வல்லோன் அல்லாஹ்வின் கட்டளை!

‘முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளைத் தடவிக் கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை (க் கழுவிக் கொள்ளுங்கள்) – நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்துக் கொள்ளுங்கள்.’ (5: 6)

ஆன்மிக வளம், ஒழுக்க வளத்தை வலிமையாக்கிடும் வல்லமை படைத்தது. ஒழுக்க மேம்பாட்டினை தொழுகை வழியே பெற்றிட வகை செய்கிறான் வல்லோன் அல்லாஹ்!

இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக் நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்.’ – (29: 45)

மனிதனின் அறிவாற்றல் அவனது ஆன்மிக வளத்தை வலிமையடையச் செய்திடும் என்பது வியப்பாக இல்லை?

நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.

இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன் நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் – ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (35:28)

அது போலவே ஆன்மிக வளம் மனிதனின் அறிவாற்றலை வளர்த்திடும் என்பதும் உண்மையே!

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

‘அலக்’ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (96: 1- 5)

அது போலவே நமது ஆன்மிக வளம் நம் மன வளத்தையும் மேம்படுத்திட வல்லது.

தொழுகை நமக்கு பொறுமையைக் கற்றுத்தருகிறது.

நோன்பு நமக்கு மன வலிமையை (will power) வழங்கிட வல்லது.

அது போலவே -

ஆன்மிக வளர்ச்சிக்கு அறிவு அவசியம். அறிவு வளத்தை வளர்த்துக் கொள்ளாமல் ஆன்மிகத்தில் ஒருவர் ஈடுபடுகிறார் என்றால், அவர் ஒன்று மூட நம்பிக்கைகளில் மூழ்கி விட வாய்ப்பு அதிகம்!

அல்லது – அவரது ஆன்மிக ஈடுபாடு என்பது வெறும் சடங்கு ரீதியில் மட்டுமே அமைந்திருக்கும்.

அல்லது – நடுநிலையற்ற ஒரு தீவிர போக்கு அவரிடம் காணப்படலாம்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை அறிவும் ஆன்மிகமும் கை கோர்த்துச் செல்பவை.இன்னொரு கண்ணோட்டத்தில் உடல் வளமும் ஆன்மிகமும் பின்னிப் பிணைந்தவை.

ஒருவர் தடை செய்யப் பட்ட வழி முறைகளில் ஈட்டிய உணவை உண்கிறார். இறைவனிடம் பிரார்த்திக்கவும் செய்கிறார் எனில் அவர் பிரார்த்தனை ஏற்கப் படாது என்பது நபிமொழி.

மது அருந்துகிறார் ஒருவர் எனில் – அது உடலை மட்டும் கெடுப்பதில்லை. அவரது ஒழுக்க வளம் கேள்விக்குறியாகி விடுகிறது. ‘குடிகாரன்’ பட்டம் வந்து விடுகிறது. மது அறிவு வளத்தையும் கெடுக்க வல்லது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி மனித வாழ்வு என்பது எல்லா வளங்களையும் ஒருங்கிணைத்தே செல்கிறது எனும்போது – ஒருங்கிணைந்த மனித வள மேம்பாடு மட்டுமே – மனிதனுக்குத் தேவை.

இந்த ஒருங்கிணைந்த மனித வள மேம்பாடு, இஸ்லாத்தைத் தவிர வேறு எதிலும் சாத்தியமில்லை. ஏனெனில் மற்ற அனைத்து வழிமுறைகளும் ‘மனிதர்களால்’ (man-made) உருவாக்கப் பட்டவைகளே!

Comments