நூல்: சுன்னத்தான இல்லறம் - பகுதி 1

சுன்னத்தான இல்லறம்!

ஆசிரியர் S A மன்சூர் அலி 


மனைவியே உங்கள் மையப்புள்ளி!

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே  அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)


இவ்வசனத்தில் நாம் கவனித்திட வேண்டிய மிக முக்கியமான சொற்கள் மூன்று:

அவை: சகீனத், மவத்தத், மற்றும் ரஹ்மத்.

இக்கட்டுரையில் நாம் சகீனத் பற்றி மட்டும் பார்ப்போம்.

லி தஸ்குனூ இலைஹா – என்பது இவ்வசனத்தில் உள்ள ஒரு சிறு சொற்றொடர்.

இதன் பொருள் என்ன?

So that you might find contentment (sukoon) with them,

அவர்களிடத்தில் நீங்கள் ஆறுதல் பெறுவதற்காக – என்பது ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு.

அவர்களிடத்தில் மன நிம்மதி பெறுவதற்காக என்பது இன்னொரு மொழிபெயர்ப்பு.

அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக என்பது இன்னுமொரு மொழிபெயர்ப்பு.

சகீனத் என்ற அரபிச் சொல்லுக்கு நாம் இன்னும் ஆழமாக பொருள் காண வேண்டியிருக்கின்றது.

சகீனத் என்பதன் பொருள் என்ன?

சகீனத் என்பதன் மூலச்சொல் – சுகூன்.

சுகூன் என்பது நாம் அடிக்கடி கேள்விப்பட்ட சொல் தான். நாம் அரபி பாடசாலையில் குர் ஆன் ஓதக் கற்றுக் கொள்ளும்போது – முதலில் அரபி எழுத்துக்களைக் கற்றுத் தருவார்கள் அல்லவா?

அப்போது எந்த ஒரு எழுத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த எழுத்துக்கு மேலேயோ அல்லது கீழேயோ ஜபர் / ஜேர் / பேஷ்/ சுகுன் போன்ற ஏதாவது சிறு குறியீடு ஒன்றை எழுதும் போது – அந்த எழுத்தை எப்படி உச்சரிப்பது என்று சொல்லிக் கொடுப்பார்கள்.

சான்றாக “தே” என்ற எழுத்தின் மேலே ஜபர் எனும் குறியைப் போட்டால் “த” என்றும்; எழுத்தின் கீழே ஜேர் எனும் குறியைப் போட்டால் “தி” என்றும் உச்சரிக்க வேண்டும். ஆனால் அதே “தே” எழுத்துக்கு மேலே சுகூன் எனும் குறியைப் போட்டால் அந்த எழுத்தை அசைத்திடாமல் “த்” என்றே உச்சரித்திட வேண்டும்.

இங்கே நாம் கவனித்திட வேண்டியது என்னவெனில் இந்த ஜபர், ஜேர் அல்லது பேஷ் போன்ற குறியீடுகளுக்கு “ஹரகத்” என்று பெயர். ஹரகத் என்றால் அசைத்தல் என்று பொருள். ஹரகத் எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் தான் சுகூன். அதாவது அசைக்காமல் இருத்தல்!

இப்போது ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்குச் செல்வோம்.

சகன என்பதன் பொருள்: to be still, to become still, peaceful, to calm down, repose, rest, to be vowel-less, to remain calm,

சுகூன் என்பதன் பொருள்: calm, tranquility, peace, silence, quiet.

இப்பொது உங்களுக்கு புரிந்திருக்கும் சுகூன் என்று அல்லாஹு தஆலா எதனைச் சொல்ல வருகிறான் என்று.

“அசையாமல் நிறுத்தப்படுதல்” என்ற பொருளை சகீனாவுக்கு நாம் எடுத்துக் கொண்டால் கணவன் மனைவி இருவருமே – திருமணத்துக்குப் பின்னர் எவ்வாறு நடந்து கொண்டால் அமைதியும் ஆறுதலும் கிடைக்கும் என்பதுவும் புரிந்து விடும்.

அதாவது -  திருமணத்துக்குப் பின் கணவனது கண்கள் வேறு எங்கும் அசைந்திடக் கூடாது! தனது கண்களால் மனைவியை மட்டுமே ரசித்திட வேண்டும். கண் பார்வையை வேறெங்கும் அசைய விட்டு விடக் கூடாது. மனைவியும் அப்படித்தான். தமது கண்களால் கணவனின் அழகை மட்டுமே ரசித்திட வேண்டும்.

அது போலவே, நமது கைகள், கால்கள், இதயம், இவை அனைத்துமே – நமது மனைவியை மட்டுமே முன்னிறுத்தி  செயல் பட வேண்டுமே தவிர வேறு எங்கும் அசைய விட்டு விடக் கூடாது. அலைய விட்டு விடக் கூடாது.

இந்த அடிப்படையைக் கருத்தில் கொண்டு கவனித்தால் பின்வரும் இறை வழிகாட்டுதல்களின் நுட்பம் தெள்ளென விளங்கும்.

உங்கள் கண் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் என்பது இறை வசனம்

நபியே! முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (24:30)

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; (24:31)

திருமணம் கண்பார்வையைத் தாழ்த்துகிறது என்பது நபிமொழி.

வெளியே நீங்கள் இருக்கும்போது காம உணர்வு தூண்டப்பட்டால் உடனே நீங்கள் உங்கள் மனைவியிடம் சென்று விடுங்கள் என்பதும் நபிமொழி.

ஒரு தடவை அண்ணல் நபியவர்களுக்கும் இந்நிலை ஏற்பட அவர்கள் உடனே தமது மனைவி சவ்தா (ரலி) அவர்களிடம் சென்றார்கள் என்பதும் நபிமொழி நூல்களில் காணக் கிடைக்கின்ற செய்தி தான்.

அதனால் தான் உங்கள் கணவன் உங்களை அழைத்தால் நீங்கள் என்ன நிலையில் இருந்தாலும் கணவனின் அழைப்பை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு விடுங்கள் என்பதும் நபிமொழி.

இந்த இறை வழிகாட்டுதலைக் கொச்சைப்படுத்தி சிலர் பேசுகின்றார்கள்! இது பெண்ணை அடிமைப்படுத்துவதாக   ஆகாதா? பெண்களுக்கு இதில் சுதந்திரமே கிடையாதா? – என்றெல்லாம் எழுதுகிறார்கள்.

இவர்களுக்கு நாம் சொல்லும் பதில் இது தான்:

இல்லறம் என்பது கணவன் மனைவி இருவரின் அந்தரங்கம். மனைவியின் உணர்வுகளை மிதித்துப்போட்டு விட்டு அவர்களிடம் இல்லற சுகம் அனுபவியுங்கள் என்று மார்க்கம் கட்டளையிடவில்லை.

கணவனின் நியாயமான அழைப்புக்கு பதில் அளிக்கச் சொல்லும்போது மனைவி அதனை மறுத்துக் கொண்டே  வந்தால் என்னவாகும்?  கணவனின் கண்கள் அலைய ஆரம்பித்து விடுமா? விடாதா? அப்படிப்பட்ட கணவன்மார்கள் வீட்டுக்கு வெளியே சுகம் தேடிட விபச்சாரத்தின் பக்கம் திரும்பினால் அது உங்களுக்குத் தவறாகப் படவில்லையா?

விபச்சாரத்தின் மூலம் ஒருவனுக்கு மன அமைதி கிட்டுமா?

திருமணம் தரும் மன நிம்மதியை வேறு எதன் மூலமாகவும் நாம் அடைந்து விட முடியாது! திருமணம் எனது வழிமுறை; அதனை வெறுப்பவன் என்னைச் சேர்ந்தவன் இல்லை என்ற நபிமொழியின் நுட்பமான கருத்தை மனதில் இருத்துங்கள்.

அடுத்து இங்கே நாம் பெற்றோர்களுக்கும் சில செய்திகளைச் சொல்ல வேண்டியுள்ளது.

நீங்கள் மாமியாரா? உங்கள் மகனின் இல்லற விஷயங்களில் தலையிடாதீர்கள்.

“இவர்கள் என்ன, தினமும் குளிக்கிறார்கள்! உடம்பு என்னத்துக்கு ஆகும்?” – இது ஒரு மாமியார். அதுவும் தம் மகள்களிடம்!! அந்த புதுமணப்பெண் கூனிக்குறுகுகிறாள்.

ஆனால் இதே மாமியார் தனது மகள்-மருமகன் இருவரும் வீட்டில் தங்கினால், “ஏன், இன்னைக்குக் குளிக்கவில்லை?” என்று குசலம் விசாரிப்பு!

எனவே தான் சொல்கிறோம். கணவன் மனைவி மன நிம்மதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் ஒதுங்கியே இருங்கள்.

பெற்றோர்களே! உங்களுக்கு வயதுக்கு வந்து விட்ட ஆண் மகன்கள் இருக்கிறார்களா? அவர்களின் திருமணத்தை ஒத்திப்போட்டுக் கொண்டே இருக்காதீர்கள்.

தங்கையின் திருமணத்தை முடித்து விட்டுத் தான் அண்ணன் திருமணம் என்பது எழுதப்படாத சட்டம் இங்கே!

நாம் கேட்பது என்னவெனில் உங்கள் மகன்கள் வெளியே செல்லும் சமயங்களில் அவர்கள் தூண்டப்படுகிறார்கள். மனைவி இருந்தால் மனைவியிடம் செல்லலாம். இல்லாவிட்டால் நோன்பு வைக்கவும் மார்க்கம் வழி காட்டுகிறது. ஆனால் இப்படி எத்தனை ஆண்டுகள் இருக்கச் சொல்வீர்கள்?

பருவம் அடைந்து விட்ட ஒரு ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி; அவர்கள் ஒரு விதமான – கொதிக்கின்ற மன நிலையில் தான் agitated state  of mind – இருக்கின்றார்கள். அவர்களுக்கு திருமணம் ஆகின்ற வரை இந்த நிலை தொடரும். திருமணத்திற்குப் பின்னரே மன அமைதி கிடைக்கின்றது! அது தான் “சகீனா!”

செய்திட வேண்டியது என்னவெனில் அவர்களுக்குத் திருமணம் செய்து விடுவது ஒன்று தான்! இல்லாவிட்டால் பூமியில் குழப்பம் ஏற்பட்டு விடும் என்பது நபிமொழி எச்சரிக்கை!

குடும்ப சூழ்நிலை, வரதட்சனைப்பிரச்சனை, என்று திருமணத்தை ஒத்திப்போடுவார்களானால் – விளைவுகள் நம்மை விட்டு ஒதுங்கிக் கொண்டு விடாது!

அடுத்து, உங்கள் மகன்களை (மனைவியை பிரிந்து) வெளி நாட்டுக்கு அனுப்பி வைப்பதில் அவ்வளவு பிடிவாதம் வேண்டாம். உங்கள் பிள்ளைகளின் மன நிம்மதியைக் கருத்தில் கொண்டு மகன் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வழி சொல்லுங்கள்!

இறுதியாக நாம் இங்கே சொல்ல வருவ்து:

திருமணம் ஆனவரா நீங்கள்?

உங்கள் மனைவியே உங்கள் மையப்புள்ளி (focal point)!

அது போலவே உங்கள் கணவனே உங்கள் மையப்புள்ளி!

அதனைச் சுற்றியே உங்கள் வாழ்க்கையை சுழல விடுங்கள்!




மனைவியைக் காதலிப்பது எப்படி?

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

“And among His wonders is this: He creates for you mates out of your own kind, so that you might incline towards them, and He engenders love and tenderness between you: in this, behold, there are messages indeed for people who think! ” (30:21)

இக்கட்டுரையில் மேற்கண்ட இறைவசனத்தில் இடம் பெற்றிருக்கும் “மவத்தத்” என்ற சொல்லை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

மவத்தத் என்பதற்கு தமிழில் “அன்பு”, “உவப்பு”, “நேசம்” என்று மொழிபெயர்த்திருக்கின்றார்கள்.

ஆங்கிலத்தில் மவத்தத் என்பதற்கு “Love” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மேலும் அகராதியில் “wadda” என்ற மூலச்சொல்லுக்கு

- to love, to like, be fond, to make friends, to show love or affection, to attract, to love each other, be on friendly terms etc.,

என்றெல்லாம் பொருள் தருகிறார்கள்.

wadud என்ற பெயர்ச்சொல்லுக்கு – favourably disposed, attached, devoted, fond, friendly என்றெல்லாம் பொருள் படுகிறது.

அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் ஒன்று தான் – அல் வதூத் – the Loving One என்பதுவும் இங்கே நினைவு கூறத் தக்கது.

சற்று ஆழமாக இச்சொல் தரும் கருத்தை நாம் ஆய்வோம்.

ஆணாகவும் பெண்ணாகவும் மனித இனத்தைப் படைத்த இறைவன் அவர்களுக்குள் இயல்பாகவே ஒரு ஈர்ப்புத் தன்மையை உண்டாக்கியிருக்கிறான்.

அந்த ஈர்ப்புத் தன்மை ஒரு ஆழமான நட்புக்கும், உறவுக்கும் வழி வகுக்கிறது. அந்த ஈர்ப்புத்தன்மை வெறும் உடலளவில் என்று மட்டும் இல்லாமல், இருவரின் அறிவிலும், இருவரின் இதயத்திலும், இருவரின் ஆன்மாக்களிலும் – ஒரு நெருக்கத்தை, ஒரு நட்பை, ஒரு காதலை உண்டாக்கி விடுகிறது. அந்த இருவரும் நீண்ட கால நண்பர்களாக ஆகி விடுகிறார்கள். இந்த நீண்ட கால உறவுக்கு (long term relationship) வழி வகை செய்வதே திருமணம்,

நமது இல்லற உறவுகள் நீடித்து நிலைத்திருப்பதையே அல்லாஹு தஆலா பெரிதும் விரும்புகின்றான்.

திருமணம் என்ற அந்த நீண்ட கால உறவைப் பாதுகாப்பதற்கு அல்லாஹ் அமைத்துக் கொடுத்துள்ள மிக மிக அடிப்படையான அத்திவாரம் (foundation) தான் மவத்தத் எனும் “அபரிமிதமான காதல்! அன்பு! நேசம்! அதாவது LOVE!

இதுவே அல்லாஹ் கற்றுத் தரும் காதல்!

இந்தக் காதல் இனக் கவர்ச்சிக் காதல் அன்று! இனக் கவர்ச்சியினால் ஏற்படும் காதலுக்கு அற்ப ஆயுள்! இந்தக் காதல் 36-24-36 ஏற்படுத்தும் காதல்! இதனை “மவத்தத்” என்று குறிப்பிட முடியாது!

அப்படியானால் மவத்தத் கொண்டு வருகின்ற காதல் என்பது எது?

மவத்தத் என்ற நேசம் என்பது உடலாலும் உள்ளத்தாலும் நேசிப்பதைக் குறிக்கும்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வோம் இங்கே.

நமக்கு ஏதாவது ஒன்று பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் மற்றவர்கள் நம்மிடம் வந்து நீங்கள் விரும்புகின்ற அந்த ஒன்றின் குறைகளை எடுத்துச் சொன்னால் நாம் என்ன சொல்வோம்?

அந்தக் குறைகளை மறுப்போம்! அதாவது அந்தக் குறை அதற்குக் கிடையாது என்று மறுத்து விடுவோம்.

அல்லது அவைகளைக் குறையெனவே எடுத்துக் கொள்ள மாட்டோம். “இதுவெல்லாம் ஒரு குறையா?” என்று ஒதுக்கித் தள்ளி விடுவோம்.

அல்லது அந்தக் குறையைப் பொருட்படுத்திட மாட்டோம். “அப்படியா! இருந்து விட்டுப் போகட்டுமே!” என்று மற்றவர்கள் வாயை அடைத்து விடுவோம்.

இது ஏன்?

ஏனெனில் நமக்கு “அது” பிடித்துப்போய் விட்டது! அது தான் காதல்! காதலுக்குக் கண்ணில்லை என்பது இதனால் தான்!

இதைத்தான் நாமும் சொல்கிறோம்! இதே நிலையை அப்படியே கணவன் மனைவி உறவில் பிரதிபலித்துக் காட்டிட வேண்டியது தானே! .

உங்கள் மனைவியின் மீது உனக்கு அன்பிருக்கின்றதா? காதல் இருக்கின்றதா? நேசம் இருக்கின்றதா? இருக்கிறது தானே!

காதல் இருந்து விட்டால் போதுமே! உங்கள் மனைவியின் குறைகள் உங்களுக்குக் குறைகளாகவே தெரியாதே!

அதாவது மவத்தத் எனும் காதல் எதிர்பார்ப்பது குறைகளைக் கண்டுகொள்ளாத தன்மையைத் தான்!

இதனை ஒரு நற்குணமாகவே ஆக்கியிருக்கின்றான் வல்லோன் அல்லாஹ்! இந்த நற்பண்புக்கு “அஃப்வுன்” – ‘afwun’ – என்று பெயர்.

அதாவது குறைகளைப் பொருட்படுத்தாமல் விட்டு விடும் தன்மை!
ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு எழுபது தடவை மன்னிக்கச் சொல்கிறது மார்க்கம். பணியாளரை மன்னிப்பீர்கள். மனைவியை மன்னிக்க மாட்டீர்களா? கணவரை மன்னிக்க மாட்டீர்களா?

எனவே கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவரின் நல்லவைகளையே, நற்பண்புகளையே கவனத்தில் கொள்ள வேண்டும். குறைகளை பொருட்படுத்தாது புறக்கணித்து விட்டு விட வேண்டும்.

நமது வாழ்க்கைத்துணை செய்திடுகின்ற நல்லவைகளை கல்லில் பொறித்தது போல் ஆழமாக நம் நினைவில் வைத்திட வேண்டும். கசப்பானவைகளை நீரில் எழுதியது போல் மறந்து விட வேண்டும்.

ஆனால் பலர் – இதற்கு நேர் மாற்றமாக நடந்து கொள்கின்றனர். இதுவே இல்லறத்தின் எல்லாப் பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம் ஆகும்.
கணவன் அல்லது மனைவி ஏதாவது நல்லதைச் செய்தால் – “அது என் உரிமை; எனக்கு அவர் இதனைச் செய்து தானே ஆக வேண்டும்” என்று எடுத்துக்கொள்கிறார்கள்.

ஆனால் ஒரு தவறைச் செய்து விட்டால், அது ஏதோ திட்டம் போட்டு செய்யப்பட்ட கிரிமினல் குற்றம் போல் எடுத்துக் கொண்டு விடுகிறார்கள்.

ஆனால் அல்லாஹ் சொல்லித் தருவதோ இதற்கு நேர் மாற்றமானதை!

அடுத்து மவத்தத் எதிர்பார்க்கும் இன்னொரு தன்மை – “மரியாதை”. அதாவது Respect. நேசம் என்பது ஒருவர் மீது நாம் வைத்திருக்கின்ற மதிப்பின் (respect) வெளிப்பாடு .ஆகும். யார் மீது நமக்கு மதிப்பு இல்லையோ, அவரை நாம் நேசித்திட முடியாது.

ஆனால் நாம் அன்பு செலுத்துகின்ற மனைவியை நாம் எப்படி மரியாதைக் குறைவாக நடத்திட முடியும்? அதுவும் மற்றவர்கள் முன்னிலையில்? வீட்டுக்கு வெளியில்?

உன் மனைவியை வீட்டிலே தவிர கண்டிக்காதீர்கள் என்பது நபிமொழி!

கணவன் மனைவிக்கிடையேயான இந்த நேசத்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக “ஊட்டி வளர்த்திட வேண்டும்”! இது தானாக வளர்ந்திடாது! எந்த அளவுக்கு ஊட்டி வளர்க்கின்றோமோ அந்த அளவு அறுவடை செய்யலாம்!

கணவன் மனைவி நேசத்தை எவ்வாறு ஊட்டி வளப்பது?

இருவரும் ஒன்று சேர்ந்து நேரத்தைச் செலவிடுங்கள். உங்கள் நண்பர்களுடன் வெளியே நீங்கள் அதிக நேரம் செலவிடுவதை விட இது சிறந்தது!

ஒருவர் ஆர்வத்துடன் ஒன்றில் ஈடுபட்டால், மற்றவர் அதற்கு துணை செய்யட்டும். ஒத்துழைக்கட்டும். பாராட்டட்டும்.

காதலை வளர்ப்பதற்கு ஒருவர் மீது ஒருவர் “நம்பிக்கை” (trust) வைப்பது மிக அவசியம். இந்த நம்பிக்கை தொலைந்தால் நேசம் குழிதோண்டி புதைக்கப்படும்!

காதலை வளர்ப்பதற்கு இன்னொரு மிக முக்கியமான வழி – ஒருவரின் உணர்வுகளை மற்றவர் புரிந்து கொள்வதும், அதற்கு மதிப்பளிப்பதுவும் தான். துணைவரின் பார்வைக்கு என்ன பொருள், சமிக்ஞைக்கு என்ன பொருள், முக பாவனைக்கு என்ன பொருள் என்பதெல்லாம் மற்றவர் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்தக் காதல் அதிகரித்திடும் இன்னொரு வழி துணைவருக்கு ஒரு சோதனை; ஒரு காய்ச்சல், மனரீதியான ஒரு பிரச்சனை என்றால், அதனை புரிந்து கொண்டு துணைவருக்கு ஆறுதலாக நடந்து கொள்வது தான் அது.

இந்தக் காதல் குறித்து நாம் இன்னும் ஆய்வு செய்திட வேண்டியுள்ளது. இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்.



கணவன்-மனைவியரே! நெருங்கி வாழுங்கள்!!

திருக் குர் ஆனை நாம் ஆழமாக புரிந்து கொள்ள – அதன் மொழிபெயர்ப்புகள் போதாது என்பது ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். ஒரு எடுத்துக் காட்டு: வ ஆஷிரூஹுன்ன பில் ம’-ரூஃப்! – இது சூரத்துன் நிஸாவின் 19 வது வசனத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே. இதற்கு எப்படி மொழிபெயர்க்கப் படுகிறது என்று பார்ப்போமா?

“இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் – இது தமிழில் குர் ஆன் வலை தளத்தின் மொழிபெயர்ப்பு. ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பும் இதுவே.

“மேலும் அவர்களுடன் அழகான முறையிலும் நடந்து கொள்ளுங்கள்” – இது சவூதி அரசால் வெளியிடப்பட்டுள்ள சங்கைமிக்க குர் ஆன் மொழிபெயர்ப்பில் இருந்து.

“அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள்.” – இது IFT – யின் திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பிலிருந்து.

“மேலும் அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத்தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள்” – இது அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பு.

ஆனால் அரபி மூலத்தில் உள்ள இரண்டு சொற்களையும் நாம் சற்று ஆழமாக இங்கே பார்ப்போம்.

ஒன்று: ஆஷிர் (அய்ன் – ஷீன் – ரா)

இம்மூலச் சொல்லிலிருந்து பிரிகின்ற பல சொற்களுடன் திருமறை வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

முதலில் ஆங்கில அகராதி மொழிபெயர்ப்பை எடுத்துக் கொள்வோம்.

‘Ashara – to divide into tenths; to be on intimate terms, associate (closely with someone). associate with one another

‘Ishrah – (intimate) association, intimacy, companionship, relations, (social) intercourse. company. conjugal community, community of husband and wife

‘Ishaar – with young, pregnant(animal)

‘Asheer – companion, fellow, associate, friend, comrade

‘Asheerah – clan, kinsfolk, closest relatives, tribe

அகராதியில் காணப்படும் அனைத்து பொருள்களையும் நாம் உற்று நோக்கினால் – ஆஷிர் என்ற சொல்லின் பொருள் – நெருக்கம், நெருங்கியிருப்பவை, நெருங்கிய தோழமை ஆகியவற்றைச் சுற்றியே இருக்கின்றன என்றே புரிகிறது.

இது ஏன் மொழிபெயர்ப்ப்புகளில் பிரதிபலித்திடவில்லை என்பதே எம் கேள்வி.

அடுத்து இச்சொல் இடம் பெறுகின்ற சில திருமறை வசனங்களைப் பார்ப்போம்.

“எவனது தீமை, அவனது நன்மையை விட மிக நெருங்கியிருக்கிறதோ அவனையே அவன் பிரார்த்திக்கிறான் – திடமாக (அவன் தேடும்) பாதுகாவலனும் கெட்டவன்; (அப்பாதுகாவலனை அண்டி நிற்பவனும்) கெட்ட தோழனே. (22: 13)

கெட்ட தோழனைக் குறித்திட அஷீர் என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது.

“இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!” (26: 214)

நெருங்கிய உறவினர்களைக் குறித்திட – அஷீரதக – என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 58: 22 வசனத்தில் இதே போன்று அஷீரதஹும் என்று வருகிறது.

“சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-” (81: 4)

இங்கே கருவுற்றிருக்கும் ஒட்டகங்களைக் குறித்திட – இஷார் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாயும் சேயும் நெருங்கியிருப்பதால் இச்சொல் பயன்படுத்தப் படுகிறதோ என்று தோன்றுகிறது.

அடுத்து இச்சொற்றொடரில் இடம் பெற்றுள்ள இன்னொரு சொல்: ம’-ரூஃப்!
ம’-ரூஃப் – என்ற இச்சொல்லுக்கு “அறியப்பட்டது” என்பதே சரியான பொருளாகும்.

அதாவது – இஸ்லாம் கட்டளையிட்டுள்ள எல்லாவிதமான நன்மைகளையும் குறிக்கும் சொல் இது என்கிறது ஜவாஹிருல் குர் ஆன்.

இவ்வாறு – இந்த இரு சொற்களின் விரிவான பொருள்களை கவனித்துப் பார்க்கும் போது

“அவர்களோடு கனிவோடு நடந்து கொள்ளுங்கள்” என்று பொத்தம் பொதுவாக மொழிபெயர்ப்பதை விடுத்து

” (மார்க்கம் அனுமதித்துள்ள) நன்மையான காரியங்கள் அனைத்திலும் அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்”

- என்று மொழிபெயர்க்கலாமோ என்று தோன்றுகிறது.

“behave with them as intimate companions in all the good things that are allowed in Islam “

- என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்றும் தெரியவில்லை.

ஆனால்  முஹம்மத் அஸத் அவர்கள் மட்டுமே ஆங்கிலத்தில் மிக அழகாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்:

“And consort with your wives in a goodly manner;”

Consort – என்பதற்கு companion என்று ஒரு பொருள் உண்டு.

இப்படி நாம் இந்த இறைவசனத்தை சற்று ஆழமாக புரிந்து கொண்டால் – பின் வரும் நபி மொழிகளின் முக்கியத்துவம் நமக்குப் பளிச்சென்று விளங்கும்.

நானும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களும் குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் போது ஒரே பாத்திரத்தில் சேர்ந்து குளிப்போம் என அன்னை ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள். (அபூதாவுது, முஸ்லிம், நஸயீ, அஹ்மது)

‘ஒரே பாத்திரத்தில் இருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் உலூச் செய்யும் போது எனது கையும் ரஸுல் (ஸல்) அவர்களின் கையும் போட்டி போட்டுக் கொள்ளும்’ என்று உம்மு சுமைய்யா (ரளி) அறிவிக்கிறார்கள். (அபூதாவுது)

“நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பலன் உங்களுக்கு அளிக்கப்பட்டே தீரும். உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: யூதர்கள் மாதவிடாய்க்காரியுடன் வீட்டில் சேர்ந்து அமர மாட்டார்கள், பருக மாட்டார்கள். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமும் கூறப்பட்டது. அப்போது, ‘மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அது தொல்லை தரும் தீட்டு ஆகும். எனவே மாதவிடாய் சமயத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்’ என்ற 2:222 வசனம் இறங்கியது. அதை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் போது, ‘உடலுறவைத் தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்’ என்றார்கள். (நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூது)

நாம் இங்கே வலியுருத்திச் சொல்ல விரும்புவது என்னவெனில் -
கணவன்மார்களே! உங்கள் மனைவியுடன் நெருங்கிய நண்பனைப் போல நடந்து கொள்ளுங்கள் என்ற இறைவனின் அறிவுரையை அப்படிக்கு அப்படியே செயல்படுத்துங்கள். அப்போது தான் உங்கள் மனைவிமார்கள் உங்களுக்கு “கண் குளிர்ச்சியாகத்” தெரிவார்கள்.

சரிதானே!

பாலியல் ஆய்வாளர்கள் ஒன்று சொல்கிறார்கள்: கணவன் மனைவி இருவரும் நெருங்கிய நண்பர்களாக விளங்கும்போது மட்டுமே அவர்கள் இருவரின் பாலியல் அனுபவங்கள் மிகச் சிறப்பாக அமைகின்றது!



மூன்று காதல் மொழிகள்!

திருமணம் என்பது ஒரு நீண்ட கால உறவு என்பதை நாம் முன்னரே விளக்கியிருந்தோம்.

திருமண வாழ்வை ஒரு கப்பலுக்கு ஒப்பிட்டால், கணவன் மனைவியரின் இல்லற வாழ்க்கைப் பயணம் சுமுகமாக சென்றிட இருவருக்குமிடையிலான “மவத்தத்” எனும் அபரிமிதமான காதல் என்பது கடல் நீர் அளவுக்கு இருந்திட வேண்டும்!

இந்தக் காதலுக்கு என்னென்ன பொருள்கள் எல்லாம் உண்டு தெரியுமா?

affection – இதயபூர்வமான அன்பு
appreciation -  உயர்வாக மதித்தல்
attention – கவனம் (எந்நேரத்திலும்)
commitment – அர்ப்பணிப்பு
joy – மகிழ்ச்சி
respect – கண்ணியம்
responsibility – பொறுப்பு
sacrifice – தியாகம்,
security – பாதுகாவல்
trust – நம்பிக்கை
intimacy – நெருக்கம்

இந்தக் காதலை நாம் ஒரு அழகிய பூஞ்செடிக்கு ஒப்பிட்டால், எவ்வாறு ஒரு செடி வளர்ந்து பூத்துக் குலுங்குவதறகு தினமும் நாம் நீரூற்றி வளர்க்கிறோமோ அது போலவே, கணவன் மனைவி காதலையும் அனுதினமும் அவர்கள் புதுப்பித்துக் கொண்டே இருந்திட வேண்டும்!

நீரூற்றுவது நிறுத்தப்பட்டால், எவ்வாறு அந்தச் செடி வாடி வதங்கி விழுந்து விடுமோ, அது போலவே கணவன் மனைவி காதலுக்குப் புத்துயிர் ஊட்டுதல் நிறுத்தப்பட்டால், இல்லற வாழ்வும் வாடி வதங்கி வெறுமையானதாக ஆகி விடும்.

கணவனும் மனைவியும் தாம் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதாக உணர வேண்டும். தாங்கள் ஒருவருக்கொருவர் மதிக்கப்படுவதாக உணர வேண்டும். இதனை எப்படி சாதிப்பது?

மூன்று வழிமுறைகளை சொல்லித் தருவோம்: இம்மூன்றும் – “மூன்று காதல் மொழிகள்” three languages of love – என்று அழைக்கப்படுகின்றது.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

என்னிடம் சொல்!
(TELL ME!)

உங்கள் துணையிடம் நீங்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருங்கள்! நீங்கள் எந்த அளவுக்கு அவரை நேசிக்கிறீர்கள் என்பதை!

காதல் என்பது உங்கள் இதயத்தில் இருந்தால் மட்டும் போதாது! அது உங்கள் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்பட வேண்டியதும் அவசியம்.

உங்களில் யாராவது ஒருவர் தனது சகோதரரை நேசித்தால், அதனை அவரிடம் தெரிவித்து விடுங்கள்.” (அபூ தாவூத்)

ஆனால் நமது சமூகத்தில் இவ்வாறு கணவன் மனைவியரிடையே அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொள்வதற்கு நாம் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை! அதிலும் குறிப்பாக கணவன்மார்கள்!

நபியவர்களின் வாழ்க்கையில் இருந்தாவது பாடம் கற்போமே!

நபியவர்கள் தம் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் மீது தமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்திக் காட்டிட சிறப்பான பெயரொன்றைச் சூட்டி அவர்களை அழைப்பார்கள்.

நீங்கள் உங்கள் மனைவிக்கும், உங்கள் மனைவி உங்களுக்கும் இவ்வாறு அழகிய பெயர்களை சூட்டி அவர்களை அழைத்து உங்கள் அன்பை பரஸ்பரம் வெளிப்படுத்திக் கொள்ளலாம் தானே!

உங்கள் துணை உங்களுக்கு ஒரு உதவி செய்து விட்டாரா? “ஜஸாகல்லாஹ் க்ஹைர்” சொல்லலாம் தானே! அதுவும் உங்கள் உள்ளத்திலிருந்து! என்னது?

கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருப்பார்களா, என்ன?” என்று கேட்காதீர்கள்! நன்றி சொல்லிப்பாருங்கள்! காதல் வெளிப்படுகிறதா என்றும் சோதித்துப் பாருங்கள்! அதிசயம் நடக்கும் உங்கள் இல்லற வாழ்வில்!

உங்கள் துணைவர்/ துணைவி எங்காவது பயணம் புறப்படுகிறாரா? ஃபீ அமானில்லாஹ், அல்லது ஃபீ ஹிஃப்ஸில்லாஹ் என்று முகம் மலர்ந்து சொல்லி அனுப்புங்களேன்!

திடீரென்று ஒரு SMS அனுப்புங்களேன், உங்கள் துணைவரை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை அதன் மூலம் சொல்லுங்களேன்!

நீங்கள் வேலை நிமித்தம் வெளியே சென்றிருக்கும்போது தொலைபேசியில் அழைத்து விசாரியுங்களேன்! அவரை நீங்கள் பிரிந்திருப்பது உங்களை எவ்வளவு வாட்டுகிறது என்று அழகிய வார்த்தைகளால் தெரிவியுங்களேன்!

எனக்குப்புரிய வை!
(SHOW ME!)

ஒரு அன்பளிப்பை பரிசாக வழங்குங்கள் உங்கள் துணைக்கு! அது அப்படி ஒன்றும் பெரிதாக இருந்திட வேண்டும் என்ற அவசியம் இல்லை!

அவர்களுக்கு எது மகிழ்ச்சியூட்டுமோ அது போதும். ஒரு முழம் பூ, அல்லது அவர்களுக்குப் பிடித்த ஒரு இனிப்பு அல்லது பண்டம், அவர்களுக்குப் பிடித்த கலரில் ஒரு கைக்குட்டை, ஒரு புத்தகம்…..

“அன்பளிப்புகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள், அது அன்பை வளர்க்கும்” என்பது நபிமொழி

உங்கள் துணைவரை நீங்கள் பார்க்கும்போதெல்லாம் புன்சிரிப்பு ஒன்றைத் தவழ விடுங்களேன்!

“உங்கள் சகோதரரை புன்புறுவலுடன் சந்திப்பதும் ஒரு தர்மம்” என்பதும் நபிமொழி தானே!

“மிகச் சிறிய நற்செயல்தானே என்று குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம்; அது உங்கள் சகோதரரைப் புன்முறுவலுடன் பார்ப்பதாயினும் சரியே!” (ஸஹீஹ் முஸ்லிம்)

புன்புறுவல் காட்டுவது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது, நகைச்சுவை உணர்வுடன் நடந்து கொள்வது – இவையெல்லாம் வீட்டுக்கு வெளியே மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம் நாம்!

வீட்டில் கலந்துரையாடல்கள் எல்லாம் பெரிய சீரியஸ் சமாச்சரமாக ஆக்கி விட்டிருக்கின்றோம்!

மனைவி, வீட்டு வேலைகள் அனைத்தையும் தானே சுமந்து கொண்டு கஷ்டப்படுகின்றாரா? நீங்கள் அவற்றுள் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம் தானே?

பாத்திரங்களைக் கழுவுவது ஒன்று போதுமே!

உங்கள் துணைக்கு உடல் நலம் இல்லையா? உங்கள் அன்பை வெளிப்படுத்திடும் அருமையான வாய்ப்பு அது!

அருகில் அமர்ந்து கொண்டு ஆதரவாகக் கரம் பிடித்து, தலையைத் தடவிக்கொடுத்தால் உங்கள் துணை விரைவில் உடல் நலம் பெற்று விடுவார் தானே!

என்னைத் தொடு!
(TOUCH ME!)

உங்கள் கணவர் வேலைக்குப் புறப்படுமுன்பு, அவரை அப்படியே அணைத்து ஒரு முத்தம் கொடுத்து அனுப்புங்களேன்!

வேலையை விட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டால், கை கால்களைப் பிடித்து விட்டு, கழுத்துப் பகுதியிலும், முதுகிலும் மஸாஜ் (massage) செய்து விடுங்களேன். நாள் முழுவதும் ஏற்படுத்திய களைப்பு அடியோடு பறந்து போய் விடுமே!

ஏன்? ஒரே பாத்திரத்தில் இருவரும் குளிக்கலாம் தானே! அடிக்கடி முத்தம் கொடுங்கள்! ஒரே குவளையில் வாய் வைத்து அருந்துங்கள்! இவைகளும் நபிவழிகள் தானே!

இறுதியாக இங்கே ஒரு விஷயத்தை நாம் அழுத்தமாக வலியுறுத்திச் சொல்லிட வேண்டியுள்ளது:

திருமணமான புதிதில் நாம் மேலே கோடிட்டுக்காட்டிய காதல் அனுபவங்கள் எல்லாம் கணவன் மனைவியருக்குள் நடக்கின்றன என்பது உண்மையே!

ஆனால் ஆண்டுகள் ஆக ஆக, இந்தக் காதல் அனுபவங்கள் எல்லாம் அவர்களுக்குள் வெகுவாகக் குறைந்து போய் விடுகின்றன!

எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கணவன் மனைவியருக்குள்  இவை குறைந்து போய் விடக்கூடாது என்பதற்கே இக்கட்டுரை!



இரக்க உணர்வும் இல்லற உறவும்!

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே  அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

இக்கட்டுரையில் நாம் “ரஹ்மத்” எனும் இரக்க உணர்வு குறித்து பார்ப்போம்.

ரஹ்மத் – இரக்கம் – என்பது அல்லாஹு தஆலாவுடைய அரும்பண்புகளுள் ஒன்று!

இதே கருணையை – திருமணத்தின் மூலம் கணவன் மனைவியருக்கிடையே பதிய வைத்திருக்கின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா!

இரக்க சிந்தனை வரும்போது மனிதனுக்கு பொறுப்புணர்ச்சி தானாக வந்து விடும்.

திருமண உறவைப் பொறுத்தவரை இந்த இரக்க உணர்ச்சி, கணவன்
மனைவியருக்குள் கொண்டு வருவது பொறுப்புணர்ச்சியைத் தான்!

கணவன்  மனைவிக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்!

மனைவி கணவனுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறாள்!

இரக்க உணர்வு ஏற்படுத்தும் இன்னொரு அதிசயம் – துணைவர் தனது துணைவிக்குச் செய்திட வேண்டிய கடமைகளைச் செய்திட இயலாத சூழ்நிலையில் கூட, துணைவர் மீது துணைவி இரக்கம் காட்டுகிறார்.

கருணை என்பது கொடுப்பது மட்டுமே! அது பதிலுக்கு திரும்பவும் எதனையும் எதிர்பார்க்காதது! ஏனெனில் கொடுப்பதில் கிடைக்கின்ற இன்பம் ஒன்றைத் திரும்பப் பெறுவதில் இல்லை!

கணவன் மனைவி உறவில் – இரக்கம் என்பது இன்னும் பல ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டது.

துணைவி அல்லது துணைவரின் தவறுகளையும் பலவீனங்களையும் மன்னித்து அவைகளை மற்றவர் பார்வையிலிருந்து மறைக்கவும் செய்கிறது இரக்க உணர்வு!

ரஹ்மத் எனும் சொல்லின் வேர்ச்சொல் “ரஹ்ம்” ஆகும். ரஹ்ம் என்பது தாயின் கருவறையைக் குறிக்கும் சொல்லாகும். இது கருணை என்பதன் பொருளை இன்னும் விரிவாக்கி விடுகிறது.

கருவறை பாதுகாப்பானது; அது குழந்தையைப் பாதுகாக்கிறது! அது குழந்தையை வளர்க்கிறது! அது போலவே கணவன் மனைவி – இருவரும் ஒருவருக்கொருவரைப் பாதுகாக்கிறார்கள்! ஒருவரின் வளர்ச்சிக்கு இன்னொருவர் பொறுப்பேற்கிறார்! கருவறையில் குழந்தைக்கு எந்த பயமும் இல்லை! அது போலவே துணையின் நெருக்கத்தில் இன்னொரு துணை பயமின்றி பாதுகாப்புடன் வளர்கிறது!

கணவனும் மனைவியும் அல்லும் பகலும் சேர்ந்தே வாழ்வதால், கணவனின் குறைகள் மனைவிக்கும், மனைவியின் குறைகள் கணவனுக்கும் வெள்ளிடை மலை! அதாவது அவை வெளிப்படையாகத் தெரிந்து விடுகிறது! அவைகளை ஒருவருக்கொருவர் மறைத்துக் கொண்டிடவும் முடியாது! மறைத்திடவும் தேவையில்லை! ஏனெனில் முகமூடி அணிந்து கொண்டு இருவரும் இல்லறத்தை இனிமையாகக் கொண்டு செல்ல இயலாது!

கருணை உணர்வு மட்டும் இருவரிடத்திலும் இல்லை என்றால் நிலைமை என்னவாகும்?

ஒருவரின் குறைகளை இன்னொருவர் ஆராய ஆரம்பித்தால், அதனை பெரிது படுத்தினால் நிலைமை என்னவாகும்?

திருமண வாழ்வு என்பது தினசரிப் போராட்டமாக வெடிக்கும்! சில நேரங்களில் அது சோகமயமாக (depression)  மாறும்! மன அழுத்தத்துக்கு (chronic stress) வழி வகுக்கும்! இன்னும் உடல் நலமும் பாதிக்கப்படும்!

வீட்டுக்குள்ளேயே பிரச்சனைகள் இப்படி என்றால், வீட்டுக்கு வெளியிலிருந்து வருகின்ற பிரச்சனைகள் வந்தால் நிலைமை என்னவாகும்?

கருணையில் குறை ஏற்பட்டால் – கணவன் மனைவி நல்லுறவே பாதிக்கப்பட்டு விடும். தனது குறைகள் பற்றி மனம் திறந்து இருவரும் பேசிட இயலாது! குறைகளை துணைவரிடமிருந்து மறைக்கத் தொடங்குவர்.

குறைகளைச் சுட்டிக்காட்டினால் அதனை ஒத்துக் கொள்ளாமல் மறுக்கின்ற நிலை ஏற்பட்டு விடும்.  பின்னர், எவ்வாறு ஒருவர்  குறையைக் களைந்திட இன்னொருவர் உதவி செய்திட முடியும்? பின்னர் அவர்களின் வளர்ச்சி என்னவாகும்?

கருணை உள்ளமே, வீட்டுக்குள் மன அமைதியைக் கொண்டு வரும் சாதனமாகும். நிம்மதியான (relaxed) இல்லற வாழ்வுக்கு இரக்க உணர்வு மிக அவசியம்.

என்னைப் புரிந்து கொள்ளும்போதும் என் பலவீனங்களை சகித்துக் கொள்ளும்போதும் தான் வீடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இது என் மனைவிக்கும் பொருந்தும்!

என்னை அப்படியே எனது நிறைகளுடனும் குறைகளுடனும் எனது துணை ஏற்றுக் கொண்டால் தான் நான் முழுமையாக வளர்வேன்! இது என் மனைவிக்கும் பொருந்தும்!

சரி! இந்தக் கருணை உணர்வை இல்லற வாழ்வில் கணவனும் மனைவியும் எவ்வாறு வெளிப்படுத்துவது?

சிறிய சிறிய குறைகளா? கண்களை மூடிக் கொண்டு விடுங்கள்! அவைகளைக் கண்டு கொள்ளாதீர்கள்!

மனைவிக்கு ஏதேனும் உடல் நல அல்லது மன நலக் குறைவா? அவர்களின் தேவைகளை நீங்கள் நிறைவேற்றுங்கள்! அவர்களின் வேலைகளை நீங்களே செய்து கொடுங்கள்! அது எதுவாயினும் சரியே. வேலைக்கு விடுப்பு எடுத்திட வேண்டுமா? தயங்காமல் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டுப் பணிகளில் நீங்களே இறங்கி விடுங்கள். உங்கள் மனைவியின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் செலுத்துவதும் கருணையே!

விட்டுக் கொடுத்து நெகிழ்ச்சியுடன் நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணை களைத்துப் போயிருக்கின்றாரா? புரோட்டாவும் சிக்கன் ரோஸ்ட்டும் தான் வேண்டும் என்று அடம் பிடிக்க வேண்டாம்! “மதியம் என்ன உணவம்மா? அதை நானே சூடு காட்டி சாப்பிட்டுக் கொள்கிறேன்; உனக்கென்ன வேண்டும் அதைச் சொல்!” என்று சொன்னால் அது தான் இரக்க உணர்ச்சியின் வெளிப்பாடு!

இந்த விட்டுக் கொடுக்கும் தன்மை உணவுக்கு மட்டுமல்ல! கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் எல்லாவிதமான கருத்து வேறுபாடுகளுக்கும் இதுவே அருமருந்து!

உங்கள் மனைவிக்கு ஒரு பிரச்சனை! ஆனால் அது குறித்து தாமே பேசுவதற்கு அவர் அஞ்சுகிறார் எனில் அவருக்காக நீங்களே குரல் கொடுங்கள்! குறிப்பாக உங்கள் தாய் மூலமாகவோ அல்லது உங்களின் சகோதரிகள் மூலமாகவோ உங்கள் மனைவி பாதிக்கப் பட்டிருந்தால் உங்கள் மனைவிக்காகக் குரல் கொடுப்பவர் யார்? அது நீங்கள் தான்! உங்கள் மனைவியை உங்களின் தாய்க்கோ உங்கள் சகோதரிகளுக்கோ அடிமையாக்கி  விடாதீர்கள்!

உங்கள் மனைவியின் குடும்ப விஷயங்களில் அக்கரை செலுத்துவதும் உங்களின் கருணைப் பண்புக்கு அடையாளமாகும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் கருணை என்ற ஒரே ஒரு நற்பண்பு இருந்தால் போதும். குடும்பத்தின் எல்லாப் பிரச்சனைகளையும் அதனைக் கொண்டே தீர்த்துக் கொண்டு விடலாம்!

இரக்க குணம் இருந்தால் போதும்! இல்லறம் தானே இனிக்கும்!


எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக் குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக!

நாம் அடிக்கடி கேட்கின்ற துஆக்களுள்  ஒன்று திருமறை – அத்தியாயம் 25 வசனம் 74 – ல் வரும் பின் வரும் துஆ தான்:

மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். (25: 74)

மேற்கண்ட திருமறை வசனத்தில் “மின் அஸ்வாஜினா” / min azwaajinaa / என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு என்ன?

அஸ்வாஜினா என்பதற்கு எங்களின் மனைவியர் என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. இது சரியா என்பதே நம் கேள்வி.

ஸவ்ஜ் என்பது ஒருமை. அஸ்வாஜ் என்பது பன்மை.

ஸவ்ஜ் என்பதன் முழுமையான பொருள் என்ன?

ஆங்கிலத்தில் ஸவ்ஜ் என்பதற்கு  one of a pair, partner, couple, mate, husband, wife என்றெல்லாம் மொழிபெயர்க்கப்படுகின்றது.

“ஜோடி” என்பது பொருத்தமான மொழிபெயர்ப்பாக தெரிகிறது.

தமிழில் இதற்கு – துணை, துணைவர், துணைவி – என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்.

மேற்கண்ட திருமறை வசனத்தை -

மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் துணைவர்களிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.” -

என்று மொழி பெயர்ப்பதே சரியானது.  (அல்லாஹ்வே மிக அறிந்தவன்.)

முஹம்மது அஸத் அவர்கள் தமது ஆங்கில மொழிபெயர்ப்பில் azwaaj என்பதற்கு spousesஎன்று மொழி பெயர்த்துள்ளார்கள்.

“and who pray: “O our Sustainer! Grant that our spouses and our offspring be a joy to our eyes, and cause us to be foremost among those who are conscious of Thee!”

Spouses  என்பதற்கு துணைவர்கள் என்பதே சரியான மொழிபெயர்ப்பு!
எனவே – கணவர்கள் துஆ செய்திடும்போது “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!”  – என்றும்,

அது போலவே – மனைவியர் துஆ செய்திடும்போது “எங்கள் இறைவா! எங்கள் கணவர்களிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!” – என்றும் பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

துணைவர்கள் என்ற மொழிபெயர்ப்பை நாம் வலியுறுத்துவதற்கு இன்னொரு காரணம்:

அல்லாஹு தஆலா கணவனையும் மனைவியையும் இங்கே ஒரே “அந்தஸ்தில்” வைத்து துஆ கேட்கச் சொல்லியிருக்கும் அழகினை நமது மனைவிமார்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்!

Comments