நூல்: சுன்னத்தான இல்லறம் - பகுதி 2

ஆண் – பெண் உளவியல் வேறுபாடுகள்!

உடலளவில் மட்டுமல்ல, மனத்தளவிலும் கூட பெண்கள் ஆண்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களே என்பது ஒரு மகத்தான உளவியல் உண்மை ஆகும்!


அறிவாற்றலில், சிந்திக்கும் முறையில், உணர்வுகளைப் புரிந்து கொள்வதில்  ஆண்களும் பெண்களும் முற்றிலும் வேறுபட்டவர்கள்!

ஒரு பெண்ணின் ஒவ்வொரு செல்லும் (cell) பெண்மையின் முத்திரையைத் தாங்கித்தான் நிற்கிறது! அது போலவே ஒரு பெண்ணின் ஒவ்வொரு உறுப்பும் கூட ஆண்களிடமிருந்து வேறுபட்டே காணப்படுகின்றது. ஏன்? பெண்களின் நரம்பு மண்டலத்துக்குக் கூட பெண்மையின் சின்னம் உண்டு!

இதனைத் திருமணம் முடிக்கின்ற ஆண்களும் பெண்களும் தெளிவாக விளங்கியிருக்க வேண்டும்.

இது குறித்த அறிவு ஒன்றே கூட பல இல்லற சிக்கல்களை எழ விடாமல் தடுத்து விடும்! தவறான புரிதல்கள் (misunderstanding) குறைந்து விடும்.

எனவே அந்த வேறுபாடுகளைக் குறித்த சில கருத்துக்களை மட்டும் இங்கே பார்ப்போம்.

ஆண்களின் அறிவாற்றல் வேறு; பெண்களின் அறிவாற்றல் வேறு! பெண்கள், ஆண்களின் வளைந்த விலா எலும்பினால் படைக்கப்பட்டவர்கள் என்பதாலும், அதுவும் அந்த வளைவு என்பது அதன் மேல் பகுதியில் என்பதால் அவர்கள் ஆண்களை விட அறிவில் சற்றே குறைந்தவர்கள் என்பதும் இஸ்லாத்தின் கருத்தோட்டமாகும்.

இது பெண்களைக் குறைத்து மதிப்பிடுவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது!

ஏனெனில் பெண்களுக்கென்று வேறு சில சிறப்பம்சங்களை அமைத்துக் கொடுத்திருக்கின்றான் வல்லோன் அல்லாஹ்!

அவைகளுள் ஒன்று தான் – உணர்வுகளும் உணர்ச்சிகளும்! பெண்கள் ஆண்களை விட உணர்வுகளைப் புரிந்து கொள்வதில் வல்லவர்கள். உணர்வுகளை மிகச் சரியாக வெளிப்படுத்தக் கூடியவர்கள். எந்த ஒரு உணர்வையும் வார்த்தைகளால் வடித்துக் காட்டுவதில் மிகுந்த திறன் படைத்தவர்கள்!

கணவனின் முக பாவனைகளை கவனித்தே, மனைவி கணவனின் மனநிலையை அப்படியே புரிந்து கொள்கிறார். ஆனால் மனைவியின் முக பாவனைகளை கணவன் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறான். எனவே கணவன் தானாகவே புரிந்து கொண்டு செயல்படுவார் என்று விட்டு விடாமல், மனைவியே தனது மன நிலையை வார்த்தைகளால் கணவனுக்கு விளக்கிட வேண்டும்.

அது போலவே – ஆண்கள் எந்த ஒரு சாதனையையும் தனித்தே செய்து காட்ட விரும்புபவர்கள்; தனித்தன்மை (independance) அவர்களுக்கு முக்கியம். ஆனால் பெண்கள் ஒரு குழுவாக இருந்து சாதிக்க விரும்புபவர்கள். கூட்டு உறவு (relationship) அவர்களுக்கு முக்கியம்!

ஆண்களுக்கு முடிவே (result) முக்கியம். பெண்களுக்கோ செய்முறை (process) மிக முக்கியம். ஆண்கள் தொலைபேசியில் முடிவைப் பற்றி மட்டும் பேசுவதால் சுருக்கமாகப் பேசுவார்கள். பெண்கள் விலாவாரியாக நடந்தவைகளை விளக்கிட விரும்புவதால் அவர்கள் அதிகமாகப் பேசிட வேண்டியுள்ளது. தாம்பத்திய உறவிலும் இந்தத் தன்மை பிரதிபலிக்கிறது. கணவன்மார்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.

ஆண்களுக்கு காதால் கேட்கும் ஆற்றல் குறைவு. பெண்களுக்கு இந்த ஆற்றல் (சம வயதுடைய) ஆண்களை விட நான்கு மடங்கு அதிகம். அதனால் தான், “ஏன் கத்துகிறீர்கள்?” என்பது மனைவிமார்களின் சொல்லாடல்களுள் ஒன்று! கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் மெதுவாகவே பேசலாம்!

ஆண்களுக்குப் “பார்த்தல்” பிடிக்கும். பெண்களுக்கு “நுகர்தல்” அதிகம் பிடிக்கும். மனைவியர் தோற்றத்தால் கணவனைக் கவரலாம். கணவன் மனைவிக்குப் பிடித்த வாசனை திரவியத்தை பயன்படுத்தி மனைவியைக் கவரலாம்.

ஆண்கள் தங்களுக்கு வரும் சவால்களை நேருக்கு நேர் நின்று எதிர்நோக்குபவர்கள். பெண்களோ சற்றே பின்வாங்கி மறைந்திருந்து மறைமுகமாக தாக்குதல் தொடுப்பதில் வல்லவர்கள்! வேண்டாதவர்களை ஒதுக்கி வைத்தல், அவர்கள் மீது பொய்யான வதந்திகளைப் பரப்புதல், மறைமுகமாகப் பழி வாங்குதல் எல்லாவற்றையும் பருவ வயதிலேயே கற்றுக்கொண்டு விடுகிறார்கள் இளைஞிகள்! (இறையச்சம் ஒன்றே இவர்களை இது போன்ற தீய பழக்கங்களில் இருந்து பாதுகாத்திட வல்லது).

ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதிலும், அதனைப் பயன்படுத்துவதிலும் பெண்களே சம வயதுடைய ஆண்களை விட ஆறு ஆண்டுகள் முன்னணியில் நிற்கிறார்கள். எனவே பெண்கள் தங்கள் கருத்துக்களுக்கு மொழி வடிவம் கொடுத்து தங்கள் கணவன்மார்களிடம் பேசிடுவதில் வல்லவர்களாக விளங்குகிறார்கள். ஆண்களுக்கு இது வியப்பாக இருக்கலாம்!

ஆண்களுக்கு – நடந்த ஒன்றை நினைவுபடுத்தி அப்படியே விவரிக்கின்ற (spatial memory) ஆற்றல் அதிகம். பெண்கள் மறந்து விடுவார்கள் – குறிப்பாக பண விஷயங்களிலும், பயண விஷயங்களிலும் பெண்களுக்கு நினைவாற்றல் குறைவே!

புதிதாகத் திருமணம் முடிக்கும் ஆண்களும் பெண்களும் இத்தகைய ஆண்-பெண் உளவியல் வேறுபாடுகளை அறிந்து கொள்தல் மிக அவசியம்.




உங்கள் மனைவியும் ஒரு சுரங்கமே!

நம்மில் ஒவ்வொருவருக்கும் தனித்தனிச் சிறப்பியல்புகள் இருக்கின்றன. அது போலவே நம் ஒவ்வொருவரிடத்திலும் சில பல குறைபாடுகளும் இருக்கின்றன.

ஒரு சில குறிப்பிட்ட சிறப்பியல்புகளுடனும் சில குறைகளையும் கொண்ட ஒரு ஆண்மகனும் அதே போல சில சிறப்பியல்புகளுடன் சில குறைகளையும் கொண்ட ஒரு பெண்மணியும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் ஒன்றை அமைக்கின்றனர்.

அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கின்றன. அது போலவே ஒவ்வொரு குழந்தைக்கும் சில சிறப்பியல்புகளும் உண்டு. சில குறைபாடுகளும் உண்டு.

இப்படிப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் ஒரு டீம்!

இக்குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒவ்வொருவரின் தனித்தனிச்  சிறப்பியல்புகளைக் கொண்டு அவரவரும் முன்னேறிச் சென்று வெற்றி பெற்று சாதனைகள் புரிந்திட அக்குடும்பத்தின் மற்ற  உறுப்பினர்கள் அனைவரும் உதவியாக ஒத்தாசையாக இருக்கின்றார்கள் எனில் அக்குடும்பத்தில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமே இருக்காது.

குறிப்பாக கணவனின் சிறப்பியல்புகளை மனைவி அங்கீகரிக்கின்றார், பாராட்டுகின்றார், அவருக்கு உதவி செய்கின்றார், உறுதுணையாக விளங்குகிறார் எனில் கணவன் மகிழ்ச்சி அடைகின்றான். கணவன் மனைவி உறவு மிகச்சிறப்பாக அமைகின்றது.

அது போலவே மனைவியின் சிறப்பியல்புகளை கணவர் அங்கீகரிக்கின்றார், பாராட்டுகின்றார், அவருக்கு உதவி செய்கின்றார், உறுதுணையாக விளங்குகிறார் எனில் மனைவி மகிழ்ச்சி அடைகின்றாள். இங்கேயும் கணவன் மனைவி உறவு மிகச்சிறப்பாக அமைகின்றது.

இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவெனில் கணவனும் மனைவியும் தனது துணையின் சிறப்பியல்புகளை மட்டுமே பார்த்திடும் போது மகிழ்ச்சியான குடும்பம் அமைகின்றது.

ஆனால் இங்கே பெரும்பாலான கணவன்மார்களும் மனைவிமார்களும் தத்தமது துணையின் குறைகளை அல்லவா பார்த்துக் கொண்டிருக்கின்றோம். பின் எப்படி வரும் மகிழ்ச்சி?

எனவே கணவன்மார்களே! மனைவிமார்களே! உங்கள் துணைவரின் சிறப்பியல்புகளை, அறிவுத்திறனை, குணநலன்களை, திறமைகளை முதலில் அங்கீகரியுங்கள்! அவர்களை மனம் திறந்து பாராட்டுங்கள். அவர்களை ஊக்கப்படுத்துங்கள்! உறுதுணையாக விளங்குங்கள்!

சுருங்கச் சொல்லின் உங்கள் துணைவர் ஒரு சுரங்கம். ஒரு பொக்கிஷம்! அந்தச் சுரங்கத்திலிருந்து பொன்னையும் வெள்ளியையும் இன்னும் அவைகளைவிடவும் சிறந்தவற்றை வெளியே கொண்டு வர வேண்டியது உங்கள் கரங்களில் தான் இருக்கிறது! அதில் தான் உங்கள் மகிழ்ச்சி அடங்கியுள்ளது! அதில் தான் உங்கள் உறவின் பலமும் அடங்கியுள்ளது!

இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கின்றது. அது – பொதுவாக கணவனின் திறமைகளுக்கு மனைவி ஊக்கமளிக்கும் நிலையை நாம் பரவலாகக் காண முடியும். ஆனால் மனைவியின் திறமைகளை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் கணவன்மார்களைக் காண்பது தான் அரிதினும் அரிதாக இருக்கின்றது!

எனவே கணவன்மார்களே! உங்கள் மனைவியின் சிறப்பியல்புகளை, திறமைகளை, நற்குணங்களை – இன்றே உட்கார்ந்து பட்டியலிடுங்கள். உங்கள் மனைவி எப்படிப்பட்ட ஒரு பொக்கிஷம் என்பது உங்களுக்குப் புரியும்.

நல்லதொரு மனைவியை  “பொக்கிஷம்” என்றார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்!

“மனிதர்கள் சுரங்கங்கள், தங்கத்தைப்போல, வெள்ளியைபோல!” என்பதும் நபிமொழியே!

அப்படியானால் உங்கள் மனைவியும் ஒரு சுரங்கம் தானே? அதிலிருந்து  “பொக்கிஷங்களை” வெளியே கொண்டு வந்து தூய்மைப்படுத்தி மெருகேற்றி உங்கள் மனைவியை வெற்றிபெறச் செய்திட வேண்டியது உங்கள் கடமை தானே? ” இது அப்படியே மனைவிக்கும் பொருந்தும்!

இதனைத் தான் ஆங்கிலத்தில் இப்படிச் சொல்கிறார்கள்:

“BRING OUT THE BEST IN EACH OTHER”

அண்ணலாரின் நபித்துவ ஆளுமைக்குப் பின்புலமாக நின்றவர்கள் அன்னை கதீஜா (ரலி) அவர்களே!

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவாற்றலை அங்கீகரித்து அவ்வறிவை முஸ்லிம் சமூகம் அள்ளிப்பருகிட வழியமைத்துத் தந்தவர்கள் அண்ணலார் அவர்களே!



கணவன் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்திருக்கும் நபி மொழி ஒன்றை இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்:

(முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்து கொண்டு ஒவ்வொருவரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடி மறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) எடுத்துரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக்கொண்டனர்.

பின்பு – ஒவ்வொரு பெண்ணும் தத்தம் கணவர் குறித்து சொல்லிக் கொண்டே வந்தனர்.

இறுதியாக பதினொன்றாவது பெண் கூறினார்:

என் கணவர் (பெயர்) அபூ ஸர்உ. அபூ ஸர்உ எத்தகையவர் தெரியுமா?
ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார்.
(ஆசையாசையாக உணவளித்து) என் கொடுங்கைகளை கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது.

ஒரு மலைக் குகையில் (அல்லது) ‘ஷிக்’ எனுமிடத்தில்) சிறிது ஆடுகளுடன் (திரிந்துகொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரின் பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார்.

நான் அவரிடம் எதையும் பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப்பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரைத் தூங்குகிறேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பருகினாலும் பெருமிதப்படும் அளவிற்கு (உண்ணுகிறேன்) பருகுகிறேன்.

எனது குறைகள் எல்லாவற்றையும் அவர் மறைத்து விடுவார். அவர் உளப்பூர்வமாக எனக்கு முற்றிலும் கட்டுப்பட்டு விட்டார்! எந்த அளவுக்கு எனில், நான் (அவ்வளவு சிறப்பானவளா என்று) என்னையே நான் விரும்பத் தொடங்கி விட்டேன்! ( ”I LOVE MYSELF!”)

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(என்னருமைக் கணவரான) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘(ஆயிஷாவே!) உம்மு ஸர்விற்கு அபூ ஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (அன்பாளனாக) இருப்பேன்’ என்றார்கள்.

இந்த நபிமொழியிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள்:

1. மனைவிக்கு இயன்ற வரையில் தாராளமாகச் செலவு செய்யுங்கள்.

2. வசதிக்குத் தகுந்தவாறு மனைவிக்கு நன்றாக உணவளியுங்கள்.(எல்லாரும் உண்ட பின்பு மீதம் இருக்கும் உணவை சாப்பிடும் மனைவியா உங்கள் மனைவி?)

3. ஒரு பெண்ணை உங்களுக்குப் பிடித்து விட்டால் , அவள் பொருளாதாரத்தில் உங்களை விட மிகவும் குறைந்த நிலையில் இருந்தாலும் அதனைப் பொருட்படுத்த வேண்டாம்.

4. உங்கள் வீட்டினிலே முழுமையான சுதந்திரம் கொடுங்கள் உங்கள் மனைவிக்கு . அந்த சுதந்திரத்தில் உங்கள் பெற்றோர் மற்றும் சகோதரிகள் தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

5. மனைவியைப் பேச விட்டுக் கேளுங்கள்; காது கொடுத்துக் கேளுங்கள்; முகம் பார்த்துக் கேளுங்கள்; கேட்டுக் கொண்டே இருங்கள். நீங்கள் பேசுவதை விட அவரைப் பேச விடுங்கள்.

6. உங்கள் மனைவியின் குறைகளையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள்.

7. உங்கள் மனைவியிடம் உங்களை முழுமையாக ஒப்படைத்து விடுங்கள்.

8. உங்கள் மனைவியை நீங்கள் ஒரு பொக்கிஷமாக மதிப்பதை அவர் உணரும்படி நடந்து கொள்ளுங்கள்.

இனிக்கும் இல்லறம்!



ஆண்கள் என்ன உயர்ந்தவர்களா?

ஒரு கணவன்-மனைவி. திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் தான் ஆகின்றன. ஆனாலும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திடவில்லை. மனைவி சொல்கிறாள்: என் கணவன் என்னிடத்தில் ஒரு “அதிகாரியைப் போல் நடந்து கொள்கிறார்; என்னை அவமானப்படுத்துகிறார். என்னை மதிப்பதே இல்லை. கேட்டால் தான் ஒரு ஆண் மகன் என்றும் ஆண்களுக்கே இஸ்லாம் உயர்வைத் தந்துள்ளது என்றும் அதற்கேற்பவே தான் நடந்து கொள்வதாகவும் சொல்கிறார்.”

முஸ்லிம் கணவன்மார்களில் பெரும்பாலோரும் இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்:

“நாம் தான் குடும்பத்தின் தலைவர்கள். நாம் சொல்வதைத் தான் மனைவி கேட்க வேண்டும். ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்டிட அவர்களுக்கு அனுமதி இல்லை. மார்க்கமும் இவ்வாறு தான் கணவன்மார்களுக்கு இந்த உயர்வையும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.”

ஆனால் – இது மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம்!

பெண்களை விட ஆண்களே உயர்ந்தவர்கள் என்றால், ஆண்களுக்கே எல்லா உரிமைகளும் சலுகைகளும் என்றால், குடும்பத்தில் எல்லா விஷயங்களிலும் எதேச்சையாக முடிவெடுப்பவர்கள் ஆண்கள் தாம் என்றால், அவர்கள் தாங்கள் வைத்ததே சட்டம் என்று கருதிக் கொண்டால், கணவனும் மனைவியும் எவ்வாறு “உற்ற நண்பர்களாக” விளங்க முடியும்? உற்ற துணைவர்களாக விளங்கிட முடியும்?

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; (9:71)

இவ்வசனம் முஃமினான கணவன்-மனைவி இருவருக்கும் பொருந்தும் தானே?

“அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்”(4:19)

கணவனும் மனைவியும் நெருங்கிய நண்பர்களே எனும்போது ஆண்கள் தங்களை உயர்ந்தவர்களாக எப்படிக் காட்டிக்கொள்ள முடியும்?

“அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; (2: 187)

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடையாக விளங்கிட வேண்டும் எனும்போது – இருவருக்கும் இங்கே சம அந்தஸ்தினை உயர்ந்தோன் அல்லாஹ் வழங்கிடவில்லையா?

கணவனுக்கு மனைவி கண்குளிர்ச்சி என்பது போலவே மனைவிக்கும் கணவன் கண்குளிர்ச்சியாக விளங்கிட வேண்டும் என்று இருவருக்கும் இறைவன் துஆ கற்றுத்தந்திடவில்லையா?

பின்னர் எப்படி ஆண்கள் தங்களை உயர்த்திக் கொள்ள முடியும்?
உண்மைதான்! கணவன் தான் குடும்பத்தின் தலைவன் (அமீர்) என்பது உண்மையே!

“ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவார். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்…. ” (ஸஹீஹுல் புகாரி-  2558)

ஆனால் குடும்பத்தின் பொறுப்பு  (guardianship) ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் ஆண்களே உயர்ந்தவர்கள் (gender superiority) என்றாகி விடுமா? ஒரு போதும் ஆகாது!

உயர்வையும் சிறப்பையும் அல்லாஹு த ஆலா ஆண்-பெண் பாலைப் பொறுத்து வழங்குவதே இல்லை!

இதனை சற்று ஆழமாக நாம் பார்த்திட வேண்டியுள்ளது. பின் வரும் இறை வசனங்களை சற்று நிதானமாகப் படித்து சிந்தியுங்கள்:

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்……… (4:34).

மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; (4:32)

மேற்கண்ட இரண்டு இறை வசனங்களிலும் – “அல்லாஹ் சிலரை சிலரை விட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான்” என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. இந்த “மேன்மைப்படுத்துதல்” என்பது திருமறையில் வேறு சில இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எதனைக் குறிக்கின்றது என்றால் -

அல்லாஹு தஆலா ஒரு சிலருக்கு வேறு சிலரை விட சிலவற்றை சற்று அதிகமாக “வெகுமதியாக” (gifts)  வழங்கியிருக்கின்றான்.

இது எதற்காக என்றால் அல்லாஹு த ஆலா எவைகளை ஒருவருக்கு வெகுமதியாக வழங்கியிருக்கின்றானோ அவற்றை (திறமைகள், ஆற்றல்கள்) பயன்படுத்திட வேண்டிய முறையில் பயன்படுத்தி அல்லாஹு த ஆலாவின் திருப் பொருத்தத்தை அவர் “சம்பாதித்துக் கொள்ள வேண்டும்”! அவ்வளவு தான்!

இங்கே நாம் கவனித்திட வேண்டியது என்னவெனில்-

மனிதர்கள் என்ற அடிப்படையில் கணவனும் மனைவியும் ஒரே நேர்கோட்டில் தான் நிற்கிறார்கள்!

குடும்பத்தின் பொறுப்பாளர்கள் என்ற அடிப்படையிலும் கணவனும் மனைவியும் சம அந்தஸ்தில் தான் இருக்கின்றார்கள்!

இறைவனுக்கு முன்னால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் எனும் அடிப்படையிலும் அவர்கள் சமமானவர்களே!

இறைப் பொறுத்தத்தைச் சம்பாதித்திடும் இலக்கில் முன்னேறிச் சென்றிட வேண்டும் எனும் ஊக்கத்திலும் அவர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அன்று!

அல்லாஹு தஆலா  அவர்களுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட ஆற்றல்களில் மட்டுமே அவர்களுக்குள் வேறுபாடு! இந்த வேறுபாடு ஒருவரை விட ஒருவர் தம்மை உயர்த்திக் கொள்வதற்காக நிச்சயமாக அன்று!

உயர்வும் கண்ணியமும் எதனைப் பொறுத்தது?

உங்களில் எவர் மிகவும் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். (49:13)

மேலும் எழுதுவோம் இன்ஷா அல்லாஹ்…



ஆண்கள் என்ன அதிகாரிகளா?

காலாகாலமாகவோ அல்லது தலைமுறை தலைமுறையாகவோ ஒரு தவறை முஸ்லிம் கணவன்மார்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அது – உயர்ந்தோன் அல்லாஹ் – பெண்களுக்கு அளித்திருக்கும் கண்ணியத்தையும், உரிமைகளையும் அவர்களுக்குத் தர மறுப்பது தான்!

ஏனோ தெரியவில்லை. முஸ்லிம் கணவன்மார்கள் தங்களின் மனைவியர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை!

தங்களின் உரிமைகளைப் பெறுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கணவன்மார்கள், தங்களின் மனைவியரின் உரிமைகளைக் காற்றில் பறக்க விட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

திருமணம் முடித்து கணவன் வீட்டுக்கு வந்த பிறகு கணவன் மனைவியிடம் என்ன எதிர்பார்க்கின்றான் தெரியுமா? தன் மனைவி தனது தாய்க்கும், சகோதரிகளுக்கும் (அதாவது அவளது மாமியாருக்கும், நாத்தனார்களுக்கும்) அடங்கிய பெட்டிப் பாம்பாக இருந்திட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கின்றார்.

இளம் மனைவி ஒருவர் சொல்கிறார்:

“நான் சொல்வதை என் கணவன் கேட்பதில்லை. அவரின் அக்காள், தங்கை, குடும்பத்தார் பேச்சை மட்டுமே கேட்கிறார். என்னுடைய பெற்றோரிடம் பேசுவதை வெறுக்கிறார். பெற்றோர் வேண்டுமா, கணவன் வேண்டுமா நீயே தீர்மானித்துக்கொள் என்று என் கணவன் கூறுகிறார். யாரைத் தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் நான் இருந்து வருகிறேன்.”

கணவனும் மனைவியும் இப்படித்தான் வாழ்ந்திட வேண்டும் என்று அல்லாஹ் கற்றுத் தந்திருக்கின்றானா?

இவ்வாறு குழப்பத்தில் இருக்கின்ற மனைவியிடம் கணவன் நடத்தும் இல்லறம் இனிக்குமா?

ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்……… (4:34).

ஆனால்  இந்தத் திருமறை வசனத்தை, புரிந்து கொள்ள வேண்டிய விதத்தில் புரிந்து கொள்ளாமல் நமது கணவன்மார்கள் காலா காலமாக தமது மனைவிமார்களுக்கு அநீதி இழைத்து வந்திருக்கிறார்கள். இந்த அநீதி இன்றும் தொடர்கிறது! அதுவும் மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம் என்ற பெயரிலேயே!?
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுவது என்ன?

ஆண்களே பெண்களை நிர்வகிப்போர் ஆவர். அவர்களில் சிலரை விட வேறு சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி இருப்பதும், ஆண்கள் தங்கள் செல்வங்களை பெண்களுக்காகச் செலவு செய்வதுமே இதற்குக் காரணம்.  (4: 34)

முஹம்மத் அஸத் என்ற அமெரிக்க இஸ்லாமிய அறிஞர் இவ்வசனத்தின் இப்பகுதிக்கு இவ்வாறு மொழி பெயர்த்துள்ளார்கள்:

MEN SHALL take full care of women with the bounties which God has bestowed more abundantly on the former than on the latter, and with what they may spend out of their possessions.

இதன் கருத்து என்னவெனில் அல்லாஹ் பெண்களை விட ஆண்களுக்கு எந்தெந்த விஷயங்களில் மேன்மையைத் தந்துள்ளானோ  அவைகளைக் கொண்டு பெண்களைஆண்கள் முழுமையாகப் பாதுகாத்திட வேண்டும்;

அது போலவே ஆண்கள் தங்கள் செல்வங்களை பெண்களுக்காகச் செலவு செய்வதைக் கொண்டும் பெண்களை  முழுமையாகப் பாதுகாப்பவர்களாக விளங்கிட வேண்டும்; இவற்றைத்தான் வல்லோன் அல்லாஹ் ஆண்களிடம் எதிர்பார்க்கின்றான்.

இவ்வசனத்தில் – “ஆண்களே பெண்களை நிர்வகிப்போர் ஆவர். ” – என்ற சொற்றொடருக்கான அரபிச் சொற்றொடர் – “அர்ரிஜாலு கவ்வாமூன ‘அலன்-னிஸாஇ”.

இதில் உள்ள கவ்வாமூன என்ற அரபிச்சொல்லுக்கு என்ன பொருள்?

The expression qawwam is an intensive form of qa’im (“one who is responsible for” or “takes care of” a thing or a person).

அதாவது – கவ்வாமூன என்பதற்கு “பொறுப்பேற்றிட வேண்டிய ஒருவர்” என்றும் ” ஒன்றை அல்லது ஒருவரைப் பாதுகாப்பவர் என்றும் பொருள் படும்.

பொறுப்பேற்றுக் கொள்ளும் ஒருவரையே நாம் தலைவர் என்கிறோம். இவ்வாறு பெண்கள் விஷயத்தில்; அவர்களைப் பாதுகாத்திடும் பொறுப்பேற்றுக் கொண்ட ஆண்கள்  தாங்களே குடும்பத்தின் தலைவர்கள் என்று மட்டும் எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் அது ஒரு மகத்தான பொறுப்பு என்பதனை வசதியாக மறந்து விடுகிறார்கள்!!

சரி, அவ்வாறே எண்ணிக் கொள்ளட்டும்! தலைவன் என்பதால் தன்னை ஒரு “சர்வ அதிகாரி” என்று அவர் நினைத்துக் கொண்டால் அந்தக் குடும்பம் எப்படி இருக்கும்? அங்கே மனைவியின் கண்ணியம் என்னவாகும்? மனைவியின் கருத்துக்களுக்கு அங்கே என்ன மதிப்பு இருக்கும்?

ஒரு நபி மொழியை இங்கே நினைவூட்டுவது பொறுத்தமாக இருக்கும்.
“உங்களில் தலைவன் என்பவன் மக்களுக்கு சேவை செய்பவனே!” – இது அண்ணலார் வாக்கு அல்லவா?

அண்ணலார் அவர்கள் தமது குடும்பத்தாரிடம் வந்து விட்டால், ஒரு சர்வாதிகாரியைப் போலவா தங்கள் மனைவியரிடம் நடந்து கொண்டார்கள்?

உமர் (ரலி) அவர்கள் பற்றி அவரது குடும்பத்தார் சொல்வது என்ன தெரியுமா? உமர் (ரலி) அவர்கள் மிக உறுதியான மனிதர் தான்; ஆனால் அவர் எங்களிடம் வந்து விட்டால், அவர் ஒரு குழந்தையைப் போலவே நடந்து கொள்வார்!

கணவன்மார்களே! உடனே வீட்டுக்குச் செல்லுங்கள்! அண்ணலாரின் முன்மாதிரியைச் செயல்படுத்திப் பாருங்கள். சிரித்த முகத்துடன் மனைவியைச் சந்தியுங்கள். போகும்போது உங்கள் மனைவிக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொருளை பரிசாக வாங்கிச் செல்லுங்கள்.

மனைவி ஒரு பொக்கிஷம் என்றார்கள் நபியவர்கள். அந்தப் பொக்கிஷம் உங்களுக்காகக் காத்திருக்கும். உங்களை வரவேற்கும். அதன் அளப்பரிய செல்வங்களை உங்கள் காலடியில் கொண்டு வந்து கொட்டும்.

வீணடித்து விடாதீர்கள் உங்கள் பொக்கிஷத்தை!

உங்கள் தாயும் உங்கள் சகோதரிகளும் அந்தப் பொக்கிஷத்தை நீங்கள் அடைவதிலிருந்து உங்களைத் தடுத்திட அனுமதிக்காதீர்கள்!

இல்லறம் இனிக்கட்டும்!

Comments