நூல்: இஸ்லாத்தின் பார்வையில் மனித வள மேம்பாடு - பகுதி 2

மனித வள மேம்பாடும் தலைமைத்துவமும்

தலைமைத்துவம் என்பது என்ன?

தலைமைத்துவம் என்பது பொறுப்புணர்ச்சியைக் குறிக்கும் (Responsibility).


தலைமைத்துவம் என்பது வழி காட்டும் திறனைக் குறிக்கும் என்பது திருமறைக் கருத்து.


தலைமைத்துவம் என்பது ஒருவர் தனது கருத்துக்களை முன் வைத்து மக்களுக்கு மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் (leadership is the capacity to influence) என்று சொல்லலாம்.

தலைமைத்துவம் என்பது இரண்டு திறன்களைக் கொண்டது என்பாரும் உண்டு:

முடிவெடுக்கும் திறன் (Decision making skill)

சிக்கல்களைத் தீர்க்கும் திறன் (Problem solving skill)

தலைமைத்துவம் என்பது சில அடிப்படையான பண்புகளைக் கொண்டது என்றும் சொல்லலாம். இதனையே தலைமைத்துவப் பண்புகள் (leadership qualities) என்று சொல்கிறார்கள்.

இவ்வாறு – தலைமைத்துவத்தின் எல்லாவிதமான திறமைகளையும் பண்புகளையும் வளர்த்துக் கொள்வது எப்படி?

மனித வளங்களை நாம் ஐந்து விதங்களாக பிரித்து ஆய்வு செய்து வருகிறோம் அல்லவா?

அவை: அறிவு வளம் (intellectual resources); ஆன்மிக வளம் (spiritual resources); மன வளம் (psychological resources); ஒழுக்க வளம் (ethical resources); உடல் வளம் (physical resources).

இந்த ஐந்து விதமான வளங்களையும் எந்த அளவுக்கு ஒருவன் வளர்த்துக் கொள்கின்றானோ அந்த அளவுக்கே ஒரு மனிதனின் ஒட்டு மொத்தத் தலைமைத்துவத் திறன் (total leadership capacity) அமைந்திருக்கும் என்றால் அது மிகையில்லை.

நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து விதமான மனித வளங்களும் தலைமைத்துவத்திற்கு மிக அவசியம் என்பதை வல்லோன் இறைவனே தனது திருமறையில் அழகாகக் கோடிட்டுக் காட்டுகிறான்.

அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் – அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்” என்று கூறினார். (2:247)

இந்த இறைவசனம் – தலைமைப் பொறுப்புக்கு அறிவாற்றலும், உடல் வலிமையும் தேவை என்பதை உணர்த்துகின்றன.

அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் – இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள். (9:18)

சூரத்துத் தவ்பாவில் இடம் பெறும் இந்த இறைவசனம் தலைமைப் பொறுப்புக்கு ஆன்மிக வளம் மிக அவசியம் என்பதை உணர்த்துகிறது.

அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; “என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர்; பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.”(28:26)

ஹள்ரத் மூஸா (அலை) அவர்களை பணிக்கு அமர்த்திக் கொள்ள பரிந்துரைக்கும் ஷுஐப் (அலை) அவர்களின் மகள் மூஸா (அலை) அவர்களின் இரண்டு பண்புகளைக் கோடிட்டுக் காட்டுகிறார். அவருடைய உடல் வலிமை; மற்றொன்று: அவருடைய நம்பகத்தன்மை. அதாவது உடல் வலிமையும், ஒழுக்க வளமும் தலைமைக்கு (இங்கே ஒரு மேலாளருக்கு) அவசியம் என்பது இங்கே எடுத்துக்காட்டப்படுகின்றது.

“இன்னும் அவர்கள் பொறுமையுடனிருந்து, நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்ட போது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை – இமாம்களை – அவர்களில் நின்றும் உண்டாக்கினோம்.” (32: 24)

பனீ இஸ்ரவேலர்களின் தலைவர்களைக் குறிப்பிடும் இவ்வசனம் – தலைமைக்குத் தேவையென எடுத்துச் சொல்வது உறுதியான நம்பிக்கை (இது ஆன்மிக வளம்) மற்றும் பொறுமை (இது மன வளம் – psychological resource) ஆகிய இரண்டையும் தான்.

அற்புதம் என்னவென்றால் – இறுதி நபியாக வல்லோன் அல்லாஹு தஆலாவினால் தெரிவு செய்யப்பட்ட அண்ணல் நபியவர்கள் நாம் மேலே சொன்ன ஐந்து விதமான மனித வளங்களையும் மிகைபடவே பெற்றிருந்தார்கள் என்பது தான்!

வல்லோன் அல்லாஹ்வுக்கும் அண்ணல் நபியவர்களுக்கும் இருந்த நெருக்கம் ஆகட்டும், அவர்களுடைய உடல் வலிமை ஆகட்டும், அவர்களின் அறிவாற்றல் ஆகட்டும், உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் மன வளம் ஆகட்டும், நபியவர்களின் ஒழுக்க வலிமை ஆகட்டும் – இவை அனைத்தும் நபியவர்களைப் பொறுத்தவரை தன்னிகரற்றவை! மனித வளங்களில் எல்லா மனிதர்களையும் மிகைத்து நின்ற ஒருவரைத்தான் நமக்கு அழகிய முன்மாதிரியாக ஆக்கியுள்ளான் வல்லோன் அல்லாஹ்!

எனவே நாம் இங்கே சொல்ல வருவது என்னவெனில் – நல்ல தலைவர்களை நாம் காண வேண்டுமெனில் மனிதர்களின் மனித வள மேம்பாட்டில் நாம் கவனம் செலுத்திட வேண்டும் என்பது தான்!

நாம் இங்கே பேசுவது அரசியல் தலைவர்களைப் பற்றி அல்ல!

ஏனெனில் இஸ்லாத்தைப் பொறுத்தவரை – நம்மில் ஒவ்வொருவரும் பொறுப்பு மிக்கவர்களே – எனும் அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் தலைவர்களே!

கணவன் என்பவன் நல்லதொரு குடும்பத்தலைவன்!

மனைவி என்பவள் நல்லதொரு குடும்பத்தலைவி!

குழந்தைகளைப் பொறுருத்தவரை தந்தையும் தலைவன் தான்; தாயும் தலைவி தான்!

பள்ளியைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு தலைவர் தான்!

ஆசிரியருக்கு அறிவாற்றல் அவசியம் என்பதற்கு விவாதம் எதுவும் தேவையில்லை.

ஆனால் அதே ஆசிரியருக்கு மாணவனின் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்ற திறன் அவசியமா இல்லையா சொல்லுங்கள்? இது மிக அவசியமே என்பதை மேற்குலகம் உணரத் தலைப் பட்டு விட்டது. நம்மவர்களுக்கு இது சற்றே தாமதமாகலாம்.

ஆசிரியர் நற்பண்பு மிக்க முன்னுதாரணமாய் இல்லாவிட்டால், அந்தக் கெட்ட ஆசிரியரின் தாக்கம் நாற்பது ஆண்டுகளுக்கு மாணவர்களைத் தொடருமாம். அது போலவே தான் நல்லதொரு ஆசிரியரின் தாக்கமும்!

ஆசிரியருக்கு ஆன்மிக உணர்வு அவசியமா? அவசியமே! ஏனெனில் - இறை உணர்வு - ஒரு வித பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. இறைவனுக்கு நாம் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றோம் என்கின்ற accountability உணர்வை  வழங்கி விடுகிறது. எனவே அவரால் பொறுப்புணர்ச்சி மிக்க மாணவர்களை உருவாக்கிட முடியும்; இதற்கு இஸ்லாமிய வரலாற்றில் எண்ணற்ற சான்றுகள் உண்டு.

ஆசிரியருக்கு உடல் வலிமையும் அவசியமே! ஆசிரியர் நோஞ்சானாக இருந்து விட்டால் - சோம்பேறித் தனம் அவரை வாட்டும்; மாணவர்களும் சுறுசுறுப்பை இழந்து விட வாய்ப்புகள் உண்டு.

இவ்வாறே ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும்! ஒரு முதலாளி மட்டுமல்ல, ஒவ்வொரு தொழிலாளியும் தலைவன் தான்!

ஒரு நிறுவனத்தை வழி நடத்தும் மேலாளரும் தலைவர் தான்; மக்களை “வழி நடத்தும்” அறிவுடையோர் அனைவருமே தலைவர்கள் தான்!

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளின் மனித வள மேம்பாட்டில் கவனம் செலுத்துங்கள். சமூகத்துக்கு நல்ல தலைவர்கள் கிடைப்பது திண்ணம்!


மனித வளங்களே நமது செயல்களைத் தீர்மானிக்கின்றன!

மனித வளங்களை நாம் ஐந்து விதங்களாகப் பிரித்துப் பார்க்கலாம் என்பதை முன்னரேயே எடுத்துச் சொல்லியுள்ளோம்.

அவை: அறிவு வளம் (intellectual resources); ஆன்மிக வளம் (spiritual resources); மன வளம் (psychological resources); ஒழுக்க வளம் (ethical resources); உடல் வளம் (physical resources).

இந்த ஐந்து விதமான வளங்களையும் கண்டு பிடித்து, தூய்மைப் படுத்தி, மேம்படச் செய்வது தான் இஸ்லாத்தின் அடிப்படையில் செய்யப் படும் மனித வள மேம்பாடு ஆகும்.

நாம் மேற்சொன்ன ஐந்து விதமான மனித வளங்களும் எந்த அளவுக்கு ஒரு மனிதனிடத்தில் வளர்ந்திருக்கின்றதோ அதனைப் பொறுத்துத் தான் ஒரு மனிதனின் குண நலனும் செயல்பாடும் (character and behaviour) அமைந்திருக்கும்.

சான்றுக்காக ஒரு சூழலை எடுத்துக் கொள்வோம்:

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்ற ஒரு விபத்து. இரண்டு பேருந்துகளிலும் பயணிகளின் அலறல் சத்தம். மக்கள் ஓடோடி வருகின்றார்கள். அடுத்து என்ன நடக்கும்?

பலரும் பல விதமாக நடந்து கொள்வதைப் பார்க்கலாம்.

ஆனால் இங்கே ஒருவர்.

அறிவாற்றல் (intellectual strength); உடல் வலிமை (physical strength); அன்புடைமை (psychological strength); நற்குணம் (ethical strength); இறை உணர்வு (spiritual strength) - - இவை அனைத்தும் நிரம்பப் பெற்ற ஒருவர். இவர் என்ன செய்வார்?

உடனே – காவல் துறைக்கு தொலை பேசி அழைப்பு விடுப்பார்.

அவசரமாக ஆம்புலன்ஸுக்கும் அழைப்பு விடுப்பார்.

அடுத்து ஒரு சிலரை அழைத்துக் கொண்டு பேருந்துக்குள் நுழைந்து பயணிகளை வெளியேற்ற முயற்சி செய்வார்.

காயம் பட்ட பயணிகளை மருத்துவ மனைக்கு அனுப்பும் வழிகளைப் பார்ப்பார்.

இத்தனைக்கும் அவர் கூட ஒரு அவசர வேலையாக வீட்டை விட்டுப் புறப்பட்டவர் தான்.

தன் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு – விபத்து நடந்த இடத்திலேயே இருந்து கொண்டு தன்னால் இயன்றதையெல்லாம் பொறுமையாக ஒவ்வொன்றாகச் செய்து கொண்டிருப்பார்.

பயணிகளின் தொலைபேசி எண்களைக் கேட்டு, அவர்களின் வீட்டுக்கு நிதானமாக தகவல் தெரிவிப்பார்.

மருத்துவ மனைக்குச் செல்வார். தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்திடுவார்.

தனது பசியைப் பற்றிக் கவலைப் பட மாட்டார். தன் பாக்கெட்டிலிருந்து செலவு செய்திடவும் தயங்க மாட்டார்.

இப்படிப்பட்டவர் தான் மனித வளங்களைப் பெற்றவர் என்று சொல்கிறோம்.

ஆனால் மற்ற பெரும்பாலான மக்கள் என்ன செய்வார்கள்?

இது போன்ற தருணங்களில்கூட தான் உண்டு தன் வேலை உண்டு என்று செல்பவர்களை நாம் பார்க்கலாம்.

இவர்களைத் தான் நாம் “எல்லா விதமான மனித வளங்களையும் முறைப்படி வளர்த்துக் கொள்ளாதவர்கள்” என்று சொல்கிறோம்.

ஒரு மனிதனின் குணநலனும் செயல்பாடும் அவனது மனித வளங்களைப் பொறுத்ததே! சரிதானே?

எந்த ஒரு சூழலையும் செவ்வனே எதிர் கொண்டிட – நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து விதமான வளங்களும் ஒரு சேர அமையப் பெற்றிருத்தல் அவசியம்.

இப்படிப்பட்ட ஆபத்தான தருணங்களிலிருந்து மக்களைக் காத்திட வேண்டுமெனில் – ஒருவருக்கு இறை உணர்வு மிக அவசியம்.

ஒரு உயிரைக் காப்பாற்றுவது என்பது ஒரு சமுதாயத்தையே காப்பதற்குச் சமம் என்பதை இறை உணர்வு மிக்கவர்கள் அறிவார்கள்.

“எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (திருக்குர்ஆன் 5:32)

இந்த ஆன்மிக உணர்வு தான் ஒரு மனிதனின் குண நலனைத் தீர்மானிக்கிறது.

அது போலவே விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவது எப்படி என்ற அறிவாற்றலும் ஒருவருக்கு அவசியம். (பள்ளிக் கூடங்களில் இதைப் பற்றிய அறிவை ஊட்டாமல் தென் அமெரிக்காவின் தலை தட்ப வெப்ப சூழ்நிலை பற்றியும், ஆஸ்திரேலியாவின் தலை நகரத்தையும் சொல்லிக் கொடுத்து என்ன பயன்?).

அது போலவே இந்தச் சூழ்நிலைகளில் உடல் வலிமையும் அவசியம் ஆகிறது. விபத்தில் சிக்குண்டவரை அப்படியே தூக்கிக் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படலாம். சுறுசுறுப்பான செயல்பாட்டுக்கும் உடல் வலிமை அவசியம்.

அது போலவே தான் – இந்தச் சூழ்நிலைகளில் ஒருவனைக் களத்தில் இறக்கி விடுவதற்குத் தேவை – அன்பு, இரக்கம், கருணை, பற்று, பாசம் – போன்ற மனித உணர்வுகளும் தான்.

ஆக – இவ்வாறு அனைத்து விதமான மனித வளங்களையும் வளர்த்தெடுப்பதின் மூலமே மனித நேயமிக்க மனிதர்களைக் கொண்ட ஒரு புதிய தலை முறையை நாம் உருவாக்க முடியும்.

ஆனால் நமக்குக் கவலை அளித்திடும் நிலை என்னவென்றால் – விபத்தொன்று நடந்து விட்டால் – குற்றுயிரும் குலை உயிருமாக பயணிகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, அவர்களது பணத்தை, நகைகளை, மற்ற உடைமைகளைக் கவர்ந்து செல்கிறார்களே!

இந்தக் கொடுமையை நினைக்கும்போது – நெஞ்சம் பொறுக்குதில்லையே!




மனித வள மேம்பாட்டுப் பாடத் திட்டம்!

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனித வள மேம்பாட்டுப் பாடத்திட்டம் ஒன்றை நாம் வகுத்துள்ளோம். அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

இது இறைவனின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருவர் தனது தனிப்பட்ட, குடும்ப, பொருளாதார, மற்றும் பொது வாழ்வு ஆகிய அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காண்பதற்கான அடிப்படைப் பாடத்திட்டம் ஆகும்.

இதில் பதினெட்டு தலைப்புகள் உள்ளன, அவை:

1. நம்பிக்கையில் உறுதி (Conviction in Faith)

2. பெரும் பாவங்களில் இருந்து விலகல் (Keep away from Major sins)

3. வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு (Worship with commitment)

4. ஒழுக்க மாண்புகள் (Core Values of Islam)

5. மனித உறவுகள் (Human Relations)

6. நற் பழக்கங்கள் (Etiquettes, Manners and Personal Organization)

7. அறிவைத் தேடும் ஆர்வம் (Pursuit of Knowledge)

8. இறை நெருக்கம் (Closeness to Allah)

9. மனித வள மேம்பாடு (Human Resource Development)

10. உன்னை அறிவாய்! (Self Discovery)

11. தலைமைத்துவம் (Leadership)

12. கருத்துப் பரிமாறும் திறன் (Communication Skills)

13. உணர்ச்சித் திறன் (Emotional Wisdom)

14. இலட்சிய வாழ்வும் வெற்றியும் (Life Goal – Success)

15. திருமண வாழ்க்கை (Marital Life)

16. குழந்தை வளர்ப்பு (Parenting)

17. சமூகப் பொறுப்பு (Social Responsibility)

18. உன் பங்களிப்பு (Legacy and Contribution)



அறிவு வளத்தை வளர்த்துக் கொள்வது எப்படி?

மனிதனின் அறிவு வளத்தை நாம் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்.

ஒன்று – புலன்களின் மூலமாகப் பெறப் படும் அறிவு.

இரண்டு – புலன்களுக்கு அப்பாற்பட்டவை பற்றிய அறிவு,

மனிதன் – தன்னிடம் இருக்கின்ற ஐந்து புலன்களின் வழியாகத் தான் அறிவைப் பெறுகின்றான். வளர்த்துக் கொள்கின்றான். இவ்வாறு தனது ஐந்து புலன்களின் வழியாகப் பெறுகின்ற அறிவைத் தான் நாம் ‘அறிவியல்’ என்று சொல்கிறோம்.

இந்த அறிவியல் அறிவு மனிதனின் துவக்க கால வரலாற்றிலிருந்து இன்று வரை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக – இப்போது அதி விரைவாக – வளர்ந்து கொண்டிருக்கிறது!

அதே நேரத்தில் – மனிதனின் அறிவு வளத்தை முழுமையாக வளர்த்துக் கொள்வதற்கு இந்த அறிவியல் அறிவு மட்டும் போதாது!

மனிதனுக்கு - நாம் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றோம்; நமது படைப்பின் நோக்கம் என்ன; நாம் எவ்வாறு இப்பூவுலகில் வாழ்ந்திட வேண்டும்; மரணத்துக்குப்பின் நமது நிலை என்ன; – என்பன போன்ற நமது வாழ்க்கைக் குறித்த கேள்விகளுக்கு புலன் உணர்வுகள் மூலமாக நாம் பெறுகின்ற அறிவியல் அறிவைக்கொண்டு தக்க பதில்களை நாம் பெற்றுக் கொண்டு விட முடியாது!

அப்படியானால் புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட நமது வாழ்க்கை சம்பத்தப்பட்ட அறிவை நாம் பெறுவது எங்ஙனம்?

நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்வது எப்படி? அந்த விஷயத்தை யார் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றாரோ அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது தான் அதற்குரிய வழி! ஆம், அறிந்தவனிடமிருந்து தான் ஒன்றை நாம் தெரிந்து கொள்ள முடியும்!

புலன் உணர்வுகளுக்கு உட்பட்ட மற்றும் உட்படாத எல்லா அறிவுக்கும் ஆற்றலுக்கும் சொந்தக்காரன் நம்மைப் படைத்த இறைவனே! ஆம்! எல்லா அறிவுக்கும் சொந்தக் காரனான அந்த ஆண்டவனிடத்தில் இருந்து தான் நாம் வாழ்க்கைக்கான மிகச் சரியான அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்!

எனவே முழுமையான அறிவு வளத்தை நாம் வளர்த்துக் கொள்ள நமக்கு இரண்டு வழிமுறைகள் உண்டு:

ஒன்று: இறை வழிகாட்டுதல்

மற்றொன்று: அறிவியல்

இக்கட்டுரையில் மனிதன் – தன் புலன்களின் வழியே பெற்றுக் கொள்கின்ற அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்வது என்பதை மட்டும் என்று பார்ப்போம்.

இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; (2:31)

அறிவு என்பது மனிதனின் முதன்மையான மனித வளம் ஆகும்.

ஆனால் பிறக்கும்போதெ மனிதன் அறிவாற்றல் மிக்கவனாகப் பிறப்பதில்லை. தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் எந்த ஒரு குழந்தையும் எந்த ஒன்றையுமே அறியாத நிலையிலேயே பிறக்கின்றது.

உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் – நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு – அவனே அமைத்தான். (16:78)

மனிதர்கள் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் ஐந்து புலன்களையும், சிந்திகின்ற இதயத்தையும் வழங்கியிருக்கின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா. ஆதிபிதா ஆதம் (அலை) அவர்கள் காலம் தொடங்கி, இன்றைய நவீன அறிவியல் யுகம் வரை மனிதனின் அறிவு எப்படி வளர்ந்தது? நாம் மேலே குறிப்பிட்ட படி ஐந்து புலன்களின் வழியே தான் தன் அறிவை வளர்த்துக் கொள்கிறான் மனிதன். உதாரணமாக கண்களால் உற்று நோக்கி (observation) மனிதன் கற்றுக் கொண்ட ஒரு சம்பவம் பற்றி திருமறை குர்ஆன் நமக்குச் சொல்லிக்காட்டுகிறது.

ஆதத்தின் இரு மகன்கள் வரலாறு நமக்குத் தெரியும். ஆபில் அவர்களை அவருடைய சகோதரர் காபில் கொன்று விட்டார். இச்சம்பவம் திருமறையிலே விளக்கப் பட்டுள்ளது.

(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார். (5:30)

இது உலகில் நடந்த முதல் கொலை. சரி, பிரேதத்தை என்ன செய்வது?

பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார். (5: 31)

மனித இனம் இப்படித் தான் தனது அறிவை வளர்த்துக் கொண்டு வருகிறது – ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்திலிருந்து.. இன்று வரை!

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்பதும் உண்மையே!

மண்டை ஓட்டினை உதைத்து விளையாடியத் துவங்கிய மனிதன் தான் பின்னர் அதனை கால் பந்தாக மாற்றியிருக்கிறான்.

மாதிரிக் கணக்கு ஒன்றை விளக்கிக் காட்டித்தான் மற்ற கணக்குகளைப் போடச் சொல்கிறார் கணித ஆசிரியர்.

வல்லோன் இறைவன் உதாரணங்கள், உவமைகளைக் கூறுவதன் நோக்கமும் – மனிதனின் இயல்பு அறிந்து தான்! நாம் கண்களால் பார்த்து ரசிக்கின்ற தோட்டம் எனும் சொல் மூலமாகத் தான் நாம் பார்க்காத சுவனத்தை அறிமுகப்படுத்துகிறான் வல்லோன் அல்லாஹ்!

நபியவர்களை அழகிய முன்மாதிரியாக நமக்கு ஆக்கியிருப்பதுவும், நபியவர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்கள் தொழுங்கள் என்பதுவும் நபிமொழி. ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதும் இதே வழிமுறையைப் பின்பற்றித்தான்.

குழந்தைகளும் அப்படித்தான் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்கின்றன.

எங்கள் ஊரில் ஒரு ஆசிரியர். ஒரு முறை அவர் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைச் சொன்னார். அவரது சிறிய மழலைக் குழந்தைக்கு ஒவ்வொன்றாக இது என்ன, அது என்ன – என்று ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுத்து வந்தாராம்.

“கைக்குழந்தைக்கு” ஆங்கிலச் சொல் இலகுவாக இருக்கும் என்று BABY என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். வீட்டில் வளர்க்கப் பட்டு வந்த கோழிகளை “BO-BO” என்றும் சொல்லிக் கொடுத்தாராம். ஒரு நாள் அவர் வீட்டுக் கோழி குஞ்சு பொரித்த போது கோழிக் குஞ்சுகளைப் பார்த்த அந்த மழலை எப்படி அழைத்திருக்கும் என்கிறீர்கள்?

“BABY-BOBO” என்று அழைத்ததாம்!

ஒரு உணவுப் பண்டத்தைத் தயாரிக்கிறான் ஒருவன். இன்னொருவன் வந்து அதில் புதிதாக ஒன்றை சேர்த்து அல்லது ஒன்றுக்கு பதிலாக இன்னொன்றைப் போட்டு புதியதொரு உணவுப் பண்டத்தை செய்து தருகிறான்.

நவின் கிருஷ்ணா என்ற மாணவன் ஒருவன் – பூச்சிகளைக் கொல்லும் பூச்சிக் கொல்லி மருந்து மனிதனையும் கொல்லும் என்றால் மனிதனுக்கு விஷமான நிகோடினை வைத்து பூச்சிகளைக் கொல்ல முடியுமா என்று சிந்தித்தான். விளைவு – நமக்கு அவ்வளவாகத் தீங்கு விளைவிக்காத தாவர-பூச்சிக் கொல்லி மருந்து தயார்!

இப்படித்தான் மனிதனின் அறிவு வளம் வளர்ந்து கொண்டே செல்கிறது. நம்மைப் போன்ற சாமானியர்களுக்கும், இது போன்று பல சிந்தனைகள் உதிக்கத் தான் செய்யும். நமக்கும் கண்டுபிடிப்பாளர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, நாம் சிந்திப்பதோடு நிறுத்திக் கொள்வோம். அவர்கள் செய்து பார்த்து விடுவார்கள். அவ்வளவு தான்!

இன்ஷா அல்லாஹ் இது குறித்து மேலும் எழுதுவோம்.



மொழியாற்றலுக்கு ஒரு ஸைத் பின் தாபித்!

ஒரு திறமை ஒருவருக்குள் மொட்டு விட்டு மலர்ந்திட இரண்டு விஷயங்கள் அமைந்திட வேண்டும். ஒன்று: குறிப்பிட்ட ஒரு திறமையை வளர்த்துக் கொள்ள அதில் அளவு கடந்த ஆர்வம் ஒருவருக்கு இருந்திட வேண்டும். இரண்டு: அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை அவர் வாழ்கின்ற சமூகம் அபரிமிதமாக வழங்கிட வேண்டும்.

மனிதர்களுக்குள் புதைந்திருக்கின்ற பல விதமான திறமைகளுள் ஒன்று தான் மொழியாற்றல். ஒரு மொழியை மிக இலாகவமாகக் கையாள்வதற்கென்று ஒரு திறமை வேண்டும். இதனை ஆங்கிலத்தில் linguistic intelligence என்று அழைக்கிறார்கள். இப்படிப்பட்ட திறமைக்கு நாம் ஸைத் பின் தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் காட்டலாம்.

அவருடைய வரலாற்றிலிருந்து சில முக்கியப் பக்கங்களை சுருக்கித் தருகின்றோம். பாருங்கள்:


பத்ர் போரில் கைதிகளாக 70 காஃபிர்கள் பிடிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் 3 அல்லது 4 ஆயிரம் திர்கங்களை ஈட்டுத் தொகையாகக் கொடுத்து அல்லது பத்து முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்து விட்டு விடுதலை பெறலாம் என்று நபி (ஸல்) அறிவித்தார்கள். இவ்வாறு எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டவர்களில் ஒருவர் தான் ஸைத் பின் தாபித் (ரலி) அவர்களாவார்கள்!

ஒரு தடவை அவருடைய தாயார் அந்நவ்வார் பின்த் மாலிக் அவர்கள் தனது உறவினர்களிடம் சென்று என் மகன் அல்லாஹ்வின் வேதம் கற்றவனாய் ஆக விரும்புகிறான். உதவி செய்யுங்கள் - என்று கேட்டுக் கொண்டார்கள். அந்த உறவினர்கள் சிறுவர் ஸைது இப்னு தாபித்தை நபியவர்களிடம் அழைத்துச் சென்று சிபாரிசு செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! இந்தச் சிறுவன் ஸைது இப்னு தாபித் நன்றாய் எழுதப் படிக்கத் தெரிந்தவன், புத்திக்கூர்மையுள்ளவன். குர்ஆனின் பதினேழு அத்தியாயங்களை மனனம் செய்து வைத்துள்ளான். தங்களுக்கு அருளப்பட்ட அதே நேர்த்தியுடன் அதை ஓதக்கூடியவனாகவும் இருக்கிறான். தங்களுடனிருந்து மேலும் மேலும் ஞானம் பெருக்கிக் கொள்ள விழைகிறான் என்றார்கள்.

எங்கே நீ மனனம் செய்து வைத்துள்ளதை ஓது! நான் கேட்கிறேன் - என்றார்கள் நபியவர்கள். ஓதிக்காட்டினார் ஸைது இப்னு தாபித் (ரலி). அழகாய், தெளிவாய், நேர்த்தியுடன் அவரது நாவிலிருந்து வெளிவந்தன குர்ஆன் வசனங்கள். ஸைது அவர்களின் மொழியாற்றல் புரிந்துவிட்டது நபியவர்களுக்கு. அதையும் தாண்டி நபியவர்களை உவகையில் ஆழ்த்திய விஷயம் ஒன்றிருந்தது - ஸைது சிறப்பாய் எழுத, படிக்கக் கூடியவர் என்பது.

யாருக்கு என்ன திறமை இருக்கிறதோ அதை முற்றிலும் பயன்படுத்திக் கொள்ளும் தேர்ச்சி முஹம்மது நபியவர்களிடம் இருந்தது. எனவே ஸைதை எப்படி இஸ்லாத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது அவர்களுக்கு அக்கணமே உறுதியாகிவிட்டது.

ஸைது! யூத கோத்திரத்தினர் நான் கூறுவதை சரியாகத்தான் எழுதிக் கொள்கிறார்களா என்பதை அறியும் வாய்ப்பு எனக்கில்லை. எனவே நீ உடனே ஹீப்ரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் - எனக் கேட்டுக் கொண்டார்கள் நபியவர்கள்.

அவ்வளவுதானே, இதோ - தங்களது உத்தரவிற்கு அடிபணிந்தேன் நபியவர்களே! என்று உடனே, வெகு உடனே காரியத்தில் இறங்கினார் ஸைது. வெகு குறுகியகாலத்தில் இரண்டே வாரத்தில் ஹீப்ரு மொழி கற்றுத் தேர்ந்தார் அவர்.

அதைத் தொடர்ந்து, 'உனக்கு சிரியாக் மொழி தெரியுமா?' என்று கேட்டார்கள் நபியவர்கள். தெரியாது என்றார் - ஸைது. சென்று அதனையும் கற்று வா என்றார்கள் நபியவர்கள்.

அதையும் உடனே பயின்றார். அதுவும் எத்தனை நாட்களில்?

பதினேழே நாட்களில்!

நபியவர்கள் இட்ட கட்டளைக்காக மிக இளவயதினர் ஒருவர் இரு வாரங்களில் ஒரு மொழியினைக் கற்றுத்  தயாராய் வந்து நிற்கிறார்.

இளைஞர் ஸைது இப்னு தாபித் ஆழ்ந்த அறிவுள்ள ஒரு மொழி வல்லுநராய் வளர்ந்து வரலானார். நபியவர்களுக்கு அவரே அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பாளராக ஆகிப்போனார். அவ்வப்போது அருளப்பெறும் இறைவசனங்களை எழுதிவைத்துக் கொள்வதற்காகவே சிலரை நியமித்து வைத்திருந்தார்கள் நபியவர்கள். அவர்களுள் ஸைத் பிரதானமான ஒருவராய் ஆனார்.

அது மட்டுமல்லாமல் மன்னர்களுக்கு நபியவர்கள் அனுப்பிவைத்த கடிதங்களை எழுதும் பணியும் ஸைதிற்கு அமைந்தது. இவ்வளவும் ஸைதின் மிக இளமைப் பருவத்தில் - பதினாலு பதினைந்து வயதிலிருந்தே - நிகழ ஆரம்பித்தன. இளைஞர் இளவயதிலேயே அறிஞராகிப் போனார்.

ஸைத் பின் தாபித் அவர்களின் வாழ்விலிருந்து நாம் பெற வேண்டிய பாடங்கள்:

1. ஸைத் அவர்கள் தனது மொழித்திறமையைக் கண்டுணர்ந்து அதனை வளர்த்துக் கொள்ளத் துவங்கிய காலம் அவரது மிக இளமைப் பருவம் ஆகும் (adolescence). அதாவது அவரது – பதினாலு பதினைந்து வயதிலிருந்தே – அவரது திறமைகள் வெளிப்படத் துவங்கி விட்டன. இதனைத் தான் இன்றைய இளைஞர்கள் நன்கு கவனித்திட வேண்டும்.

2. இன்றைய தாய்மார்களுக்கெல்லாம் ஒரு அழகிய முன்மாதிரியாக இங்கே ஸைத் அவர்களின் தாயார் – அந்நவ்வார் பின்த் மாலிக் அவர்களைப் பார்க்க முடிகிறது. மகன் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தும் போதெல்லாம் – உடனே களத்தில் இறங்கி ஆவன செய்யத் தொடங்கி விடுகிறார் அவர். இப்படித் தான் ஒவ்வொரு தாயும் தான் பெற்ற செல்வங்களின் திறமைகளுக்கு வழி அமைத்துக் கொடுத்திட ஆர்வத்துடன் முயற்சிகள் மேற்கொண்டிட வேண்டும்,

3. ஸைத் அவர்களின் உறவினர்களையும் நாம் பாராட்டித் தான் ஆக வேண்டும். அவர்கள் என்ன செய்தார்கள். சிறுவரை அழைத்துச் சென்று நபியவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். இதில் நாம் படித்துக் கொள்ள வேண்டிய இன்னொரு படிப்பினை – நமது எல்லா விதமான 'தலைமை' (Leadership) களுக்கும் இருக்கிறது. இளைஞர்களின் ஆற்றல்களை சரியான தருணத்தில் கண்டுணர்ந்து அவர்களின் ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திட வேண்டும்.

வயது முதிர்ந்தவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கச் சொல்லும் இஸ்லாம் அதே நேரத்தில் வயதில் சிறிய இளைஞர்களின் எந்தவொரு திறமையையும் அவர்களின் வயதின் காரணத்தால் நிராகரிக்கவுமில்லை, உதாசீனப்படுத்தவுமில்லை. மாறாய், போற்றி ஊக்கப்படுத்தி நல்வடிவம் அளித்தது. அற்புதமாக அதை நிகழ்த்திக் காட்டினார்கள் நபியவர்கள். நமது இளைய தலைமுறையினருக்கு இதில் நிறைய பாடம் இருக்கிறது; முதிய தலைமுறையினருக்கு அறிவுரை இருக்கிறது.

4. இளைஞர்களே! உங்கள் திறமைகளில் நீங்கள் மேன்மேலும் முன்னேறிச் சென்று கொண்டே இருந்திட வேண்டும். தொய்வு ஏற்பட்டிடக் கூடாது. அரைகுறை சாதனைகளில் திருப்தி அடைந்து விடக் கூடாது . கவனச் சிதறல் (distractions) கூடாது. ஸைது அவர்களின் வாழ்வில் உங்களுக்குப் படிப்பினை என்னவென்றால் – அபரிமிதமான திறமை உன்னிடம் இருந்தால் வாய்ப்புகள் தானாக உன்னைத் தேடி வரும் என்பது தான். இப்படித் தான் திருக்குர்ஆனைத் தொகுக்கும் அருமையான வாய்ப்பு ஸைது அவர்களை வந்தடைந்தது என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.



விவாதத் திறனுக்கு ஒரு அழகிய முன்மாதிரி நபி இப்ராஹிம் (அலை)!

அறிவுக்குப் பொறுத்தமான எந்த ஒரு விஷயத்தையும் மனிதன் ஏற்றுக் கொள்கிறான். அது அவன் இயல்பு. அறிவுக்குப் பொருந்தி வராத ஒரு விஷயம் அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் அது யாரிடம் இருந்து வந்தாலும் – அதனை மனித அறிவு நிராகரித்து விடுகிறது. எனவே நீங்கள் ஒரு விஷயத்தை அது உண்மை என்று உணர்ந்த நிலையில் மக்களுக்கு முன் சமர்ப்பிக்கும் போது – அந்த விஷயம் மனித அறிவுக்கு எப்படிப் பொருந்தி வருகிறது என்பதனை விளக்கிட வேண்டியுள்ளது.

நீங்கள் சமர்ப்பிக்கும் 'உண்மையான' ஒரு விஷயத்தை ஒருவர் ஏற்க மறுக்கிறார்; விவாதம் புரிகிறார்; கேள்வி கேட்கிறார்; சந்தேகம் எழுப்புகிறார் எனில் – உங்கள் கருத்தை அவர் ஏற்கச் செய்திட, அல்லது உங்கள் கருத்துக்கு அவர் மறுப்புக்கூறிட இயலாமல் செய்து விட உங்களுக்கு இரண்டு விதமான ததிறமைகள் வேண்டும்.

ஒன்று: விவாதத் திறன் –  argumentation skill

இரண்டு: மறுத்துரைக்கும் திறன்: refutation skill

இந்த இரண்டு திறன்களையும் ஒரு சேரக் குறிக்கும் திறனை – logical intelligence என்று குறிக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட திறமையின் உச்சக்கட்ட முன்மாதிரி தான் நபி இப்ராஹிம் (அலை)!

இதற்கு பின் வரும் இரண்டு வரலாற்றுச் சம்பவங்களே போதுமான சான்று:

ஒன்று:

அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: 'எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு (இறைவன்)' என்று; அதற்கவன், 'நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்' என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: 'திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!' என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை. (2: 258)

இரண்டு:

இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் – அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் 'நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?' என்று கேட்ட போது: அவர்கள், 'எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.

(அதற்கு) அவர், 'நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையரும் – பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள்' என்று கூறினார். (அதற்கு) அவர்கள் 'நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?' என்று கேட்டார்கள்.'அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்' என்று (இப்ராஹீம்) கூறினார்.

'இன்னும்: நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!' (என்றும் கூறினார்.) அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்).'எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருப்பான்' என்று கூறினார்கள்.

அதற்கு (அவர்களில் சிலர்) 'இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது' என்று கூறினார்கள். 'அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு' என்று சொன்னார்கள்.

'இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?' என்று (அவர் வந்ததும்) கேட்டனர். அதற்கு அவர் 'அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்' என்று கூறினார்.

(இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) 'நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்' என்று பேசிக் கொண்டார்கள். பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; 'இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!' (என்று கூறினர்).

'(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்' என்று கேட்டார். 'சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?' (என்று இப்ராஹீம் கூறினார்). (21: 51- 67)

இப்படிப்பட்ட விவாதத் திறமைக்கு அண்ணல் நபியவர்களும் ஒரு அழகிய முன்மாதிரி என்பதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன என்பதை நாம் அறிவோம்.

நமது பொறுப்பு என்னவெனில் – இப்படிப்பட்ட திறன் சில குழந்தைகளிடம் இயல்பாகவே மிகுந்து காணப்படும். அந்தத் திறமையை அவர்கள் வளர்த்துக் கொள்ள நாம் உருதுணையாக இருந்திட வேண்டும். அவர்கள் அழகிய விவாதம் ஒன்றை முன் வைத்தால் அதனை நாம் பாராட்டிட வேண்டும்.

இப்படிப்பட்ட திறன் உள்ளவர்கள் – திறன் மிக்க ஆசிரியர்களாக வரலாம்; சிறந்த வழக்குறைஞர்களாக ஆகலாம். எல்லா மட்டங்களிலும் உள்ள தலைவர்களுக்கும் இந்தத் திறன் அவசியம். அழைப்பாளர்களுக்கும் இந்தத் திறன் அவசியம்.

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! (16: 125)

மேலும் – பிரச்னைகளைத் தீர்க்கும் குழுவில் இடம் பெறுபவர்களுக்கும், நிர்வாக முடிவுகள் எடுப்பவர்களுக்கும் இந்தத் திறன் மிக அவசியம்.



உயிரியல் ஆர்வத்துக்கு ஒரு உமர் கனி!

குழந்தைப் பருவத்திலேயே சிலருக்கு உயிர்ப்பிராணிகளிடத்தில் ஆர்வம் மிகுந்து காணப்படும். சில குழந்தைகள் பூனைகளுடன் பயமின்றி விளையாடும்;

சில குழந்தைகளுக்கு மீன்கள் என்றால் ஆர்வம் அதிகம். சில குழந்தைகள் கோழிக்குஞ்சுகளுடன் கொஞ்சிக் குலவுவர். வேறு சில குழந்தைகளுக்கு இலைகள், பூக்கள் என்றால் பிரியம் அதிகம்.

இவ்வாறு உயிரியல் துறையில் உள்ள ஆர்வத்தை biological intelligence என்று குறிப்பிடுகின்றார்கள்.

இவ்வாறு உயிரியலில் அளவு கடந்த ஆர்வம் மிக்க இளைஞி ஒருவர் தான் - உமர் கனி அவர்கள். "ஊனத்தை வென்ற உமர் கனி" என்ற தலைப்பில் முஸ்லிம் முரசு மாத இதழில் சில ஆண்டுகளுக்கு முன் வந்த கட்டுரையை அப்படியே தருகின்றோம்:

"போலியோவால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட ஊனமுற்ற பெண் ஒருவர், விஞ்ஞானி ஆகும் ஆசையோடு சாதனைகளைப் படைத்து வருகிறார்.

தஞ்சை மாவட்டம் சுவாமி மலையை அடுத்த கங்காதரபுரம் கிராமத்தில் வசிப்பவர் 26 வயது உமர் கனி. 2 வயதிலேயே போலியோ தாக்கி இவரது இரண்டு கால்களும் செயலிழந்து போனது. ஊனத்தை வெல்ல வேண்டும் என்ற வேகத்தில் படிப்பை தீவிரப் படுத்தினார் அவர். பி.எஸ்.சி விலங்கியல் படித்து விட்டு தஞ்சை சென்று எம்.எஸ்.சி பயோ டெக்னாலஜி படித்தார்.

எம்.எஸ்.சி படிக்கும்போது, மண்ணில் பெட்ரோலியம் கலந்தால் அதை பிரித்தெடுக்கும் முறை பற்றி இவர் சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரை பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் சிறப்பான ஆராய்ச்சி என்ற பாராட்டைப் பெற்றது. இதையடுத்து பி.எச். டி ஆராய்ச்சிக்கு அனுமதி கிடைத்தது.

இதைத் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார். குறிப்பாக தென்னை, பாக்கு, கொய்யா மரங்களின் இலைகளைக் கொண்டு, அதன் திசுக்கள் மூலம் அதே வகையில் செடிகளை உருவாக்கி தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார். எதிர்பார்த்தது போல் கொய்யா அதிக அளவிலும், பெரிய சைஸிலும் காய்க்கத் தொடங்கியது.

அதே போல் மருத்துவத் துறையிலும் இவருக்கு ஆராய்ச்சி ஆர்வம் உண்டு. மனித உறுப்புகளை செயற்கையோடு கூடிய இயற்கையாக வளர்க்கும் முறை பற்றியும் ஆய்வு செய்து வருகிறார். இவர் ஆராய்ச்சியில் மனித உறுப்புகளில் எந்த பகுதி தேவையோ அதை மட்டும் தனியாக வளர்த்து தேவையானவருக்குப் பொறுத்த முடியும். கண் பார்வை இழந்தவர்களுக்கு கழுகின் பார்வையில் உள்ள செல்களை எடுத்து மனிதனின் கண்ணுக்குள் வைத்து பார்வையை மீண்டும் கொண்டு வர முடியும். இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளிலும் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இவருடைய ஆர்வத்தையும் ஆராய்ச்சியையும் பாராட்டிய பலர், இது தொடர்பாக மேற்கொண்டு ஆராய்ச்சிகளை வெளி நாடுகளில் தான் செய்ய முடியும் என்று சொல்லி, இவரை வெளி நாடு செல்லுமாறு கூறினர். ரஷ்யாவில் இருக்கும் ரஷ்யோ மெடிக்கல் அகாடமிக்கு விண்ணப்பித்து, இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்குறிய ஆராய்ச்சி படிப்பு படிக்க வேண்டும். ரூபாய் 12 லட்சம் வரை செலவாகும். ஆனால் இவரது குடும்பத்துக்கு அவ்வளவு வசதி இல்லை. வாய்ப்பு கிடைத்து, தான் வெளி நாடு சென்று ஆராய்ச்சி மேற்கொண்டாலும் இந்தியாவுக்குத் தான் அதை பயன் படுத்துவேன் என்று கூறுகிறார் உமர்கனி.
தான் ஊனமாக இருக்கிறோம் என்று அவர் ஒரு நாளும் கவலைப்பட்டது கிடையாதாம். 

ஊனமுற்றவர்களுக்காக அரசு தரும் சலுகைகள் எதையும் அவர் இன்று வரை பெறவில்லை. அரசிடம் ஊனத்துக்கான சலுகையைப் பெறுவதை விட ஆராய்ச்சிக்கான உதவியையே எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஆராய்ச்சியை மேலும் தொடர கும்பகோணத்துக்கு பேருந்தில் சென்று நாளொன்றுக்கு குறைந்தது ஐந்து மணி நேரம் இன்டர்நெட்டில் தகவல்களை திரட்டி வருகிறார் வருங்கால விஞ்ஞானி உமர்கனி.

செய்தி: தினகரன் நாளிதழ்
தகவல்: S.K.J. சாகுல் ஹமீது

இங்கே நாம் படித்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், குழந்தைப் பருவத்திலேயே ஒரு குழந்தைக்கு உயிரியல் ஆர்வம் இருக்கிறதா என்று அறிதல் சுலபம். இப்படிப்பட்ட குழந்தைகள் தான் நாளைக்கு மருத்துவராக பரிணமிக்க வேண்டும். உயிரியல் ஆர்வம் அற்ற குழந்தைகளைப் பெற்றுள்ள பெற்றோர்கள் அவர்களை நான் டாக்டர் ஆக்குவேன் என்று அடம் பிடிப்பது முயலுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க முயல்வது போல் தான்!

அடுத்து - உயிரியல் ஆர்வம் உள்ள குழந்தைகளை நாம் உயிரியல் பூங்காக்களுக்கு அடிக்கடி அழைத்துச் சென்றிட வேண்டும். அவர்களை தாவரவியல் பூங்காக்களுக்கும் (botanical gardens),

நீர் வாழ் பிராணிகள் காட்சியகங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். வன விலங்குகள் சரணாலயங்கள், பறவைகளின் சரணாலயங்கள் ஆகிய இடங்களுக்கும் அழைத்துச் சென்றிட வேண்டும்.

அவர்களுக்கு அத்துறையில் ஊக்கமளித்திட வேண்டும். அவர்களின் சிறிய "சாதனைகளைக்கூட" பெரிது படுத்திப் பாராட்டிட வேண்டும்.

இன்று உயிரியல் துறை பன்மடங்கு விரிவடைந்துள்ளது. பொதுவாக உயிரியல் (Biology) என்று அழைக்கபட்டு வந்த இத்துறை - இன்று micro biology, bio technology, genetic engineering, bio informatics என்று விரிவடைந்து கொண்டே செல்கின்றது.

அது போலவே மருத்துவத் துறையும் பல்வேறு பிரிவுகளாக (specialization) விரிவடைந்து செல்கின்றது என்பதை நாம் அறிவோம்.

இத்துறையில் சாதனை படைப்பவர்களை நாம் உருவாக்கிட உயிரயல் ஆர்வம் உள்ள குழந்தைகளை நாம் கண்டெடுக்க வேண்டும். இதுவே அவர்களுக்கும் நல்லது. மற்ற எல்லா உயிரினங்களுக்கும் நல்லது.

எல்லாத் திறமைகளும் உண்டு...ஒன்றைத் தவிர... என்ன செய்ய?

தலைமைத்துவம் என்பது ஒரு பெரிய பொறுப்பு. ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்றிட அவரிடம் பல விதமான திறமைகள் இருந்திட வேண்டும்.

நாம் முன்னர் சொல்லிக் காட்டிய LAZER PROFILE - அதாவது - ஒன்று அல்லது இரண்டு திறமைகளை மட்டுமே கொண்டிருப்பவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வர இயலாது.

தலைமைக்குத் தேவையான பல திறமைகளை உடையவர்களை SEARCH LIGHT PROFILE உடையவர்கள் என்று அழைக்கிறார்கள் உளவியலாளர்கள்.

தலைமைப் பொறுப்பு என்பது மனித வாழ்வின் பரந்து விரிந்த ஒரு தளம். வாழ்வின் எல்லா மட்டங்களிலும் இந்தப் பொறுப்பு பின்னிப் பிணைந்திருக்கின்றது.

 ஒரு நிறுவனத்தின் உயர் மட்டத்தலைவர் (CEO) என்பதில் துவங்கி, போர்ப்படைத் தளபதிகள் (commanders), அரசியல் தலைவர்கள் (politicians), சமூகத்தை வழி நடத்தும் இமாம்கள் வரை தலைமைப் பொறுப்பு என்பது நம் வாழ்வின் பிரிக்க முடியாத அம்சமாக விளங்குகின்றது

இக்கட்டுரையில் மிகப் பெரும் பொறுப்புகளைச் சுமக்கின்ற தலைவர்களுக்குத் தேவையான அவசியத் திறமைகள் பற்றி பார்ப்போம்:

அறிவு நுட்பம் சார்ந்த திறமைகள் (intellectual skills)

தொழில் நுட்பம் சார்ந்த திறமைகள் (technical skills)

மனித உணர்வுகள் சார்ந்த திறமைகள் (emotional skills or soft skills)

மனித உறவுகள் சார்ந்த திறமைகள் (inter personal skills)

கருத்துப் பரிமாற்றத் திறன் (communication skill)

அப்படிப்பட்ட ஒரு பெரிய தலைமைப் பொறுப்பு ஒன்று நமக்கு வந்து சேர்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தலைமைக்குத் தேவையான எல்லாவிதமான திறமைகள் நம்மிடம் இருந்தாலும், இன்னும் ஒரே ஒரு திறமை மட்டும் நம்மிடம் இல்லை என்றால் என்ன செய்வது?

அப்படிப்பட்ட அந்த ஒரே ஒரு திறமையில் சிறந்து விளங்குகின்ற இன்னொருவரை நமது பொறுப்புக்குக் கூட்டாளியாக ஆக்கிக் கொள்வது புத்திசாலித்தனம்.

இதனை நபி மூஸா (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ளலாம்.

ஃபிர்அவ்ன் ஒரு கொடுங்கோல் ஆட்சியாளன். பனீ இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தவன். அடிமைபடுத்தப்பட்டிருந்த பனீ இஸ்ரவேலர்களை விடுவிக்கும் மா பெரும் பணிக்கு வல்லோன் அல்லாஹு தஆலா மூஸா (அலை) அவர்களைத் தேர்ந்தெடுக்கின்றான்.

பின் வரும் திருக்குர் ஆனின் வசனங்களை சற்றே ஆய்வு செய்வோம்.

ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் (வரம்பு) மீறி விட்டான்” (என்றும் அல்லாஹ் கூறினான்).

(அதற்கு மூஸா) கூறினார்: “இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!

“என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!

“என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!

“என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!

“என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக!

“என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)!

“அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக!

“என் காரியத்தில் அவரைக் கூட்டாக்கி வைப்பாயாக!

“நாங்கள் உன்னை அதிகமதிகம் (தஸ்பீஹு செய்து) துதிப்பதற்காகவும்;
“உன்னை அதிகமதிகம் நினைவு கூர்வதற்காகவும் (இவற்றையெல்லாம் அருள்வாயாக!)

“நிச்சயமாக, நீ எங்களை நோக்கியவனாகவே இருக்கிறாய்” (என்றார்)
“மூஸாவே! நீர் கேட்டவை, நிச்சயமாக உமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன” என்று (அல்லாஹ்) கூறினான்.( குர் ஆன் 20: 24-36)

புரிகிறதல்லவா?

அவ்வாறு நாம் இன்னொருவரையும் நமது பொறுப்புக்குக் கூட்டாளீயாக ஆக்கிக் கொள்ளும் போது நாம் கவனிக்க வேண்டியவை:

1. நமக்கு ஆணவம் எனும் ego தலையெடுத்து விட அனுமதிக்கக்கூடாது.

2. நமது கூட்டாளியை கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொள்ள விழைதல் கூடாது.

3. நமது கூட்டாளியின் திறமைகளை நாமே அங்கீகரித்திட வேண்டும். பொறாமை கூடாது.

4. நமக்கும் நமது கூட்டாளிக்கும் இடையே உள்ள உறவில் நேர்மை தவழ்ந்திட வேண்டும்.

5. நமது கூட்டாளியை இன்னொரு தலைவனாக ஆக்கிப் பார்த்திட அவரை வளர்த்திடவும் வேண்டும். அவர் வளர்ச்சியில் நாம் மகிழ்ச்சி அடைந்திட வேண்டும்.

இவைகளையே நாம் ஹள்ரத் மூஸா (அலை) அவர்கள் வாழ்விலிருந்து கற்றுக் கொள்கிறோம்.


உங்களிடம் ஒரே ஒரு திறமைதானா? கவலை வேண்டாமே!

ஒரு சிலருக்கு ஒரே ஒரு திறமை மட்டுமே இருக்கும். அதனை மட்டுமே அவர்களால் திறம்பட செய்திட முடியும். வேறு எந்த ஒரு வேலையையும் அவர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஆர்வம் காட்டிட மாட்டார்கள்.

இப்படிப்பட்டவர்கள் – சாதாரணப் பணியாளர்களாகவும் இருப்பார்கள். தலைசிறந்த அறிவியலாளர்களாகவும் திகழ்ந்திட வாய்ப்புண்டு,

இப்படிப்பட்ட சிலரை நீங்கள் உங்கள் அனுபவத்திலேயே பார்த்திருப்பீர்கள்:

இப்போது கேள்வி என்னவெனில் நீங்கள் இப்படிப்பட்டவர்களில் ஒருவர்தானா?உங்களுடைய தன்னம்பிக்கையை உயர்த்திடவே இக்கட்டுரை.

சில குழந்தைகளைப் பற்றி அவர்களின் பெற்றோர்களே இப்படி அலுத்துக் கொள்வது உண்டு:”ஒரு தடவை கூட இவன் ராங்க் Rank எடுத்தது கிடையாது; ஆனால் கணக்குப் பாடத்தில் மட்டும் 90- க்குக் கீழே மார்க் வாங்கியதே கிடையாது.”" இவன் ஒரு பாடத்தில் கூட பாஸ் மார்க் வாங்கியதில்லை. ஆனால் படங்கள் மட்டும் நன்றாக வரைகிறான். படம் வரைஞ்சி என்ன பண்றது?”

கல்லூரி முதல்வர் ஒருவர் என்னிடம் சொன்னார்: “நான் எத்தனையோ பேரை படிக்க வைத்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறேன்; ஆனால் என் மகனுக்கு படிப்பே வரவில்லை. பல கல்வி நிலையங்களுக்கு மாற்றி மாற்றி அனுப்பிப்பார்த்து விட்டேன். ஒரு முன்னேற்றமும் இல்லை; ஆனால் எங்கே சேர்த்து விட்டாலும், ஒரு பத்து பேரையாவது நண்பர்களாக ஆக்கிக் கொண்டு விடுகிறான்.” (இந்த மாணவனின் திறமை எது என்று தெரிகிறதா?)

இப்படிப்பட்ட ஒரே ஒரு திறமையை மட்டுமே உடையவர்கள் தான் – LAZER PROFILE உடையவர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள்.

இவர்கள் வாழ்வில் வெற்றி பெற சாத்தியங்கள் உண்டா எனில் நூறு சதவிகிதம் உண்டு என்பதே மகத்தான உண்மை!

இப்படிப்பட்டவர்கள் என்ன செய்திட வேண்டும்.

முதலில் – இவர்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்.

அடுத்து – மற்றவர்களை ஒருக்காலும் தங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திடக் கூடாது. எனக்கு அந்தத் திறமை இல்லையே, இந்தத் திறமை இல்லையே என்று கவலைப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

உங்களுக்குத் திறமை இல்லாத ஒன்று. ஆனால் அதில் உங்களுக்கு “ஆர்வம்” (interest) மட்டும் இருக்கிறது எனில் – என்ன செய்திட வேண்டும்? முழுமையாக முயற்சி செய்து பார்த்திட வேண்டும். முயற்சி செய்திடாமல் “எனக்கு இது வராது” என்று முயற்சி செய்வதை விட்டு விடக் கூடாது;

போதுமான அளவு முயற்சி செய்த பின்பும் அந்த திறன் நமக்கு வசப்படவில்லை எனில் கவலை வேண்டாம். அதனை அல்லாஹ் நமக்கு நாடவில்லை என்று எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து நீங்கள் செய்திட வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவெனில் உங்களின் அந்த ஒரே திறமையின் மீது உங்கள் கவனத்தை முழுவதும் திருப்புங்கள். அதாவது FOCUS செய்திடுங்கள். உங்களின் பொன்னான எல்லா நேரங்களையும் அதில் ஈடுபடுத்துங்கள். ஒரு நாளைக்கு 12 முதல் 14 மணி நேரம் வரை அதில் நீங்கள் செலவழித்திட வழி காட்டுகிறார் ஒரு Management Consultant.

அந்தத் திறமையில் நீங்கள் தலை சிறந்து விளங்கிட எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். அந்த ஒரு விஷயத்தில் உங்களைத் தட்டிக் கொள்ள வேறு யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேறிச் சென்றிடுங்கள்.இவர் ஒரு மெக்கானிக்; ஒரு மிஷின் பழுதடைந்து விட்டால் அது எப்படிப் பழுதடைந்தது என்பதைக் கண்டு பிடித்திடுவதில் இவர் ஒரு கில்லாடி! ஒரு மிஷினுக்குள் அவர் “புகுந்து விட்டால்” அவர் தன்னையே மறந்து விடுவாராம். இவரைப் பற்றி இவரது முதலாளி சொன்னாராம்: இவரைப் போன்று ஒரு ஐந்து பேர் என்னிடம் இருந்தார்களென்றால் அமெரிக்காவிலேயெ மிகப் பெரிய பணக்காரர்களில் நானும் ஒருவனாகி விடுவேன்!”

வல்ல இறைவன் தனது திருமறை குர் ஆனில் சொல்கிறான்:

மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும். நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம். பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து- பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம். திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்- ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் – அடர்ந்த தோட்டங்களையும், பழங்களையும், தீவனங்களையும் (புற்பூண்டுகளையும் )- (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக, (80: 24 – 32)

மழையைக் கொண்டு – இறைவன் முளைப்பிக்கச் செய்த பல்வேறு தாவரங்களைக் குறிப்பிட்ட இறைவன் “புற்பூண்டுகளையும்” முளைப்பிக்கச் செய்ததாகக் குறிப்பிடுகின்றான்.

புற்பூண்டுகளின் பயன் என்ன? நமது கால்நடை பிராணிகளுக்கு அவை உணவாகின்றன! அவ்வளவுதான்! ஒரே ஒரு பயன் தான்! பல்வேறு விதங்களில் பயனளிக்கக்கூடிய தாவரங்களுடன் ஏன் தீவனங்களையும் படைக்கிறான் இறைவன்.

நமது கால் நடைகளுக்கு உணவாகிடுகின்ற புற்பூண்டுகள் இறைவனால் படைக்கப்படவில்லை எனில் என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். கால் நடைகள் என்னவாகும்? பால் உற்பத்தி என்னவாகும்? இந்த ஒரே ஒரு விஷயம் கூட மனித வாழ்வை எப்படியெல்லாம் பாதிக்கும் என்று ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.

ஒரு சுவாரஸியமான விஷயம்:

தொழிற்சாலைகளில் மிகச் சாதாரண வேலைகளுக்கு அமர்த்தப் படுபவர்கள் factory fodders என்று தான் அழைக்கப்படுகின்றார்கள். Fodders என்றால் தீவனம் என்று தான் பொருள்.

அது போலத் தான் – மனித இனத்தின் வாழ்க்கை அமைப்பும். பல திறமைகளை உள்ளடக்கிய மனிதர்களுடன் ஒரே ஒரு திறமை கொண்டவர்களையும் சேர்த்தே இறைவன் படைத்திருகின்றான். ஏன்? மனித வாழ்க்கை சீராக நடை பெற்றிடத்தான்!

பல திறன் படைத்தவர்களை நாம் கேட்டுக் கொள்வதெல்லாம்

- யாரையும் திறமையற்றவர்கள் என்று ஒதுக்கித் தள்ளாதீர்கள். ஒரே ஒரு சிறிய திறமையை கொண்டே கூட ஒருவர் உலகுக்கு தனது பங்கைத் திறம்பட ஆற்றிட முடியும்.

எனவே அத்தகையவர்களை மட்டம் தட்டாதீர்கள். ஏனெனில் உங்களைப் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைத்த அந்த அல்லாஹு தஆலா தான் அவர்களையும் படைத்து உலகுக்கு அனுப்பி வைத்திருக்கின்றான் என்பதை மறந்து விட வேண்டாம்.

அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களின் முன்மாதிரியும் அப்படித்தான் இருக்கிறது. நபித்தோழர்களின் வரலாறுகளே இதற்குச் சான்று!


மனித வளங்களும் நற்பண்புகளும்!



திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.(95:4)


வல்ல இறைவன் மனிதனை மிக அழகிய அமைப்பில் தான் படைத்துள்ளான் என்பதன் பொருள் - அவன் அடிப்படையிலேயே மிக நல்லவன் என்பதாகும்.

இதனையே பொதுவாக the essential goodness of mankind என்று அழைக்கிறார்கள்.

நபிமொழி ஒன்றின் பகுதி இது:

நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கிடையே (ரிஸ்கை) வாழ்வாதாரங்களை பங்கிட்டது போல நற்குணங்களையும் உங்களுக்கிடையே பங்கிட்டுள்ளான்.
நூல்: அஹ்மது, அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


பொதுவாக – மனிதன் நற்பண்பு உடையவனாகத் திகழ்வதற்கு அவனுக்கு வழங்கப் பட்டுள்ள மனித வளங்கள் மூன்று.

1. இயற்கையான வெட்க உணர்ச்சி (Natural modesty):

மனிதனுக்கு இயற்கையிலேயே வெட்க உணர்ச்சியை வைத்து அல்லாஹ் படைத்துள்ளான்.

பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.(20:121)

வெட்கத்தலங்களை மறைத்துக் கொள்ள ஆதம் மற்றும் அவர்கள் மனைவி இருவரையும் தூண்டியது எது? அவர்களிடம் இருந்த வெட்க உணர்ச்சி தான்.

இந்த வெட்க உணர்ச்சி மனிதனைத் தவறுகளில் இருந்து பாது காக்கும் ஒரு கேடயம் என்றால் அது மிகையாகாது.

2. இடித்துரைக்கும் ஆன்மா (Self Reproaching Soul):

நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.(75:2)

மனிதனுக்கு இதுவும் இறைவன் அளித்த மாபெரும் அருட்கொடை!
இந்த இடித்துரைக்கும் ஆன்மா மனிதனிடத்தில் இருப்பதனால் தான் – மனிதன் தவறு ஒன்றைச் செய்து விட்டு “நிம்மதியாக” இருந்து விட முடிவதில்லை. தன் ஆன்மா தவறு செய்து விட்ட ஒரு மனிதனை இடித்துக்கொண்டே இருக்கும்.

ஆங்கிலத்தில் இதனை conscience என்றும் தமிழில் இதனை மனசாட்சி என்றும் சொல்கிறார்கள்.

வெட்க உணர்ச்சியைப் போலவே நமது இடித்துரைக்கும் ஆன்மாவும் மனிதனைத் தவறுகளில் இருந்து பாதுகாத்திடும் அரண் தான். அது மட்டுமல்ல, ஒரு முறை தவறு செய்து விட்டால்கூட அது குறித்து “இப்படி ஒரு காரியம் செய்து விட்டோமே” என்று தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டு மீண்டும் அந்தத் தீமையின் பக்கம் செல்ல விடாமல் தடுக்கும் அரணாகவும் இது விளங்குகிறது.

3. இறையச்சம் (God consciousness):

இறைவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் எனும் உணர்வு ஒருவனுக்கு இறையச்சத்தை வழங்குகிறது. மனிதனை எல்லாவிதமான தீமைகளில் இருந்தும் தடுத்திட வல்லது இந்த இறையச்சம். இது ஒரு ஆன்மிகக் கேடயம் ஆகும்.

மேலே நாம் குறிப்பிட்டுள்ள இரண்டையும் விட மிக அதிக வலிமை வாய்ந்தது ஒரு மனிதனின் இறையச்சம்.

இந்த மூன்று மனித வளங்களை வளர்ப்பதன் மூலமே – மனித சமூகத்தை பண்பட்ட சமூகமாக மாற்றிக் காட்ட முடியும்.

Bottomline:

இறைவனை நம்பாதவர்களில் பலர் “நல்லவர்களாக” இருப்பதற்குக் காரணம் என்ன?

நாம் மேலே குறிப்பிட்ட மூன்று மனித வளங்களில் முதல் இரண்டும் எல்லாருக்கும் பொதுவானவை. இறைவனை நம்பாதவர்கள் கூட நல்லவர்களாக இருப்பதற்குக் காரணம் – அவர்களது வெட்க உணர்ச்சியும், இன்னும் அவர்களது இடித்துரைக்கும் ஆன்மாவும் தான்!

ஆனால் இறை நம்பிக்கையாளர்கள் நற்பண்புடையோராக விளங்குவதற்கு – மூன்று வளங்களை அவர்கள் பெற்றுள்ளார்கள். இந்த அடிப்படையில் இறை நம்பிக்கையாளர்கள், இறை நம்பிக்கை இல்லாதவர்களை விட “கொடுத்து வைத்தவர்கள்”. அவ்வளவு தான்!!



மனிதர்கள் எந்த ஒன்றுக்கும் இலாயக்கில்லாதவர்களாக ஆவது எப்படி?

ஒன்று கூட வாகனத்துக்குரிய தகுதி இல்லாத நூறு ஒட்டகங்கள் இருப்பது போல மனிதர்கள் உள்ளனர் ' என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

இந்த நபிமொழியின் கருத்து என்ன?

மனிதர்கள் சுரங்கங்களைப் போன்றவர்கள் – தங்கத்தைப் போல, வெள்ளியைப்போல! (நூல்: புஹாரி)

மனிதர்கள் அனைவரும் சுரங்கங்கள் என்ற நபியவர்கள், ஏன் அவர்களில் பலரை – ஒன்றுக்கும் உதவாத ஒட்டகங்களோடு ஒப்பிட வேண்டும்?

சற்றே ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயம் இது!

கீழே தரப்பட்டிருக்கின்ற இறை வசனங்களை சற்று ஆய்வு செய்திடுங்கள்:

அவர்களில் பெரும்பாலோர் சிந்தனைத் திறன் அற்றவர்கள் (29: 63)

எனினும் மனிதர்களில் பெரும்பாலும் அறிவற்றவர்கள்! (7:187)

எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை இல்லாதவர்கள்! (11:17)

ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை! (2: 243)

ஏன் மனிதர்களில் பெரும்பாலோர் இப்படி இருக்கிறார்கள்?

ஒரு சிலர் மட்டுமே நல்லவர்களாக விளங்குவது ஏன்?

'நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் – அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள்
செய்பவர்களைத் தவிர் இத்தகையவர் சிலரே' என்று தாவூது (அலை) கூறினார்.' (38:24)

'என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே!' (34: 13)

'நீங்கள் பூமியில் (மக்காவில்) பலவீனர்களாகவும் குறைந்த எண்ணிக்கையுடையோராகவும் இருந்ததை எண்ணிப்பாருங்கள். (8:26)

மேலோட்டமாக இவ்வசனங்களையும், நாம் மேலே சுட்டிகாட்டிய நபி மொழிகளையும் பார்க்கும்போது இயற்கையிலேயே பெரும்பாலான மனிதர்கள் பண்பாடற்றவர்களாகவும் தீயவர்களாகவும் எதற்குமே பயன்படாதவர்களாகவும் தான் படைக்கப்பட்டிருக்கின்றார்களோ என்று நாம் தவறாக விளங்கிக் கொண்டு விடக் கூடாது!

ஏனெனில் – மனிதனுக்கு எல்லா வளங்களும் கொடுக்கப்பட்ட நிலையிலேயே தான் அவன் பிறக்கின்றான்! அவை அனைத்தும் மறைந்து கிடக்கின்றன – சுரங்கங்களில் மறைந்து கிடக்கின்ற தங்கத்தைப் போல வெள்ளியைப்போல!

ஆனால் அவற்றை அகழ்ந்தெடுத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருபவர்கள் மிகக் குறைவு என்பதனையே நாம் மேலே சுட்டிக்காட்டிய நபி மொழி உணர்த்துகிறது.

எல்லா மனிதர்களுக்கும் பார்க்கின்ற கண்களையும், கேட்கின்ற காதுகளையும், .சிந்திக்கும் இதயங்களையும் கொடுத்திருக்கின்றான் அல்லாஹு தஆலா. ஆனால் அவைகளை முறையாகப் பயன்படுத்தாதது யார் தவறு?

பின் வரும் வசனம் இதனையே சாட்டையடியாக நமக்கு உணர்த்துகிறது:

நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன – ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் – இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (7: 179)

ஒட்டகம் ஒன்று வாகனமாகவும் பயன்படவில்லை; பொதி சுமந்திடவும் பயன்படவில்லை என்றால் என்ன பொருள்? அல்லாஹு  தஆலா எதற்கும் பயன்படாத நூற்றுக் கணக்கான ஒட்டகங்களைப் படைத்து விட்டான் என்றா பொருள்?

அந்த ஒட்டகங்கள் அவை செய்திட வேண்டிய பணிகளுக்காக முறைப்படி பயிற்றுவிக்கப்படவில்லை என்றே பொருள்!

மனிதனின் நிலையும் இதே தான்! மனிதன் பிறக்கும்போதே எல்லாவிதமான வளங்களையும் தன்னகத்தே (hidden) பொதிந்துள்ள நிலையில் தான் உலகுக்கு வந்து சேர்கிறான்; அவனை வளர்த்தெடுக்க வேண்டியது சமூகத்தின் கடமை! அப்படி வளர்த்தெடுக்கத் தவறினால் – என்ன விளைவுகள் ஏற்படும்?

அல்லாஹு தஆலா சொல்வது போல கால்நடைகளை விடக் கேடு கெட்டவர்களைத்தான் எண்ணிக்கையில் மிக அதிகமாக ஒரு சமூகத்தில் பார்க்க இயலும்!

அதனால் தான் – சின்னஞ்சிறுமிகள் பலர் கற்பழிக்கப்படுகின்றார்கள்!

அதனால் தான் – வயிற்றில் உள்ள குழந்தையைக் குத்திக் கிழித்து தூக்கி வீசுகின்ற கொடும்பாவிகளை நாம் காண முடிகின்றது!

அதனால் தான் – பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்படுவதைப் பார்க்கின்றோம்.

அதனால் தான் – 'இனப்படுகொலை' என்ற பெயரில் பலவீனமான மனித இனங்கள் அழித்தொழிக்கப்படுகின்றன!

அதனால் தான் – பலவீனமான மனித குழுக்கள் அடிமைப்படுத்தப் படுகின்றார்கள்!

தீர்வு எங்கே இருக்கிறது? அது மனித வள மேம்பாட்டில் தான் இருக்கின்றது என்றால் அது மிகையாகாது!

எந்தப் பொருளும் தன்னைப்போன்ற ஆயிரம் பொருள்களை விட சிறந்ததாக இருப்பதில்லை – மனிதனைத் தவிர! என்றொரு நபிமொழி உண்டு. (நூல்: தபரானி)

அதாவது உருவத்திலும் வயதிலும் தன்னைப்போன்ற ஆயிரம் மனிதர்களை விட ஒரே ஒரு மனிதன் தன் உயர்ந்த பண்புகளால் சிறந்தவனாகிறான் என்று பொருள்.

மனித வளங்கள் மேம்படுத்தப்படும் போது ஒரு மனிதன் ஆயிரம் பேர்களை விடச் சிறந்தவன் ஆகின்றான்!

மனித வளங்கள் பண்படுத்தப்படாத நிலையில் – ஒன்றுக்கும் பயன்படாத நூறு ஒட்டகங்களைப் போன்றவனாகி விடுகின்றான் மனிதன்!

மேலும் நமது சிந்தனைக்கு....

மிஸ்ர் எனும் எகிப்து நாட்டை வெற்றி கொள்வதற்காக அம்ரு பின் ஆஸ் (ரலி) தலைமையில் நான்காயிரம் பேர் கொண்ட ஒரு படையை உமர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இந்தப் படை போதாது என்று படைத்தலைவர் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

உடனே உமர் (ரலி) அவர்கள் இன்னும் நான்காயிரம் பேரை அனுப்பினார்கள். இவர்களில் தரம் வாய்ந்த நான்கு பேர் உள்ளனர். இந்த நால்வரில் ஒவ்வொருவரும் ஆயிரம் பேருக்குச் சமமானவர்கள். எனவே நம் படையினர் எண்ணிக்கை இப்போது பனிரெண்டாயிரமாகி விட்டது. எனவே வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று இனி கூற முடியாது. எனவே நாம் தோற்று விட மாட்டோம் என்று கலீஃபா உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இன்னொரு சமயம் இதே உமர் (ரலி) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் ஒரு வீட்டிலிருந்தார்கள். அது ஒரு விசாலமான பெரிய வீடு. அப்போது உமர் (ரலி) அவர்கள் தம் தோழர்களிடம் இப்போது உங்களுக்கு மனதில் தோன்றும் கற்பனைகளை ஆசைகளைச் சொல்லுங்கள் என்றார்கள்.

உடனே அங்கிருந்த தோழர்களில் ஒருவர் இந்த பெரிய வீடு முழுக்க எனக்கு வெள்ளிக்காசுகள் கிடைக்க வேண்டும். அவற்றை நான் அல்லாஹ்வின் பாதையில் செலவிட வேண்டும். இதுவே என் ஆசை கற்பனை என்றார்.

இன்னொருவர் இந்த வீடு முழுக்க எனக்கு தங்கம் கிடைத்தால் அவற்றை நான் அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவேன் என்றார்.

பிறகு தோழர்கள் நீங்கள் உங்கள் ஆசையைச் சொல்லுங்கள் என்று கலீஃபா உமர் அவர்களிடம் கேட்டனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் இந்த வீடு முழுக்க எனக்குச்சில மனிதர்கள் வேண்டும். அபூ உபைதா, முஆது பின் ஜபல், அபூ{ஹதைபாவின் முன்னாள் அடிமை ஸாலிம் (அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக) போன்ற மனிதர்கள் எனக்கு வேண்டும். அவர்களை அல்லாஹ்வின் பாதையில் நான் பயன்படுத்த வேண்டும்.இதுவே என் ஆசை, கற்பனை என்று கூறினார்கள்.

இப்படி தரம் வாய்ந்த மனிதர்களாகத் திகழ்ந்தவர்கள் நபித்தோழர்கள். இவர்கள் ஒவ்வொருவருமே ஆயிரம் பேருக்குச் சமமானவர்கள்.

ஆனால் நமது நிலை என்ன?

பல கோடி முஸ்லிம்கள் நாங்கள்! நம்மில் நூறு பேர்களைத் தேர்வு செய்தாலும் ஒருவர் கூட தகுதி மிக்கவராக இல்லையே! அது ஏன்?

அண்ணல் நபி ஸல்லல்லா{ஹ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் சௌபான் ரலியல்லா{ஹ அன்{ஹ அவர்கள் அறிவிக்கிறார்கள்:

:ஒரு நேரம் வரும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உங்களுக்கு எதிராக ஒன்று கூடுவார்கள். இன்னும் உங்களுக்கு எதிராக செயல்பட மற்றவர்களையும் அழைப்பு கொடுப்பார்கள் அந்த அழைப்பு எப்படி இருக்கும் என்றால் பசியோடுள்ளவன் உணவுத்தட்டின் பக்கம் மற்றவர்களை அழைப்புகொடுப்பது போன்றிருக்கும்.

நபித்தோழர்கள் கேட்டார்கள் அந்த நாளில் நாம் சிறுபான்மையினராக இருப்போமா? இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள் : இல்லை நீங்கள் எண்ணிக்கையில் மிகுந்து இருப்பீர்கள் ஆனால்,வெள்ளத்தின் நுரையைப்போன்று இருப்பீர்கள். இறைவன் உங்களைப்பற்றிய பயத்தை உங்கள் எதிரிகளின் மனதிலிருந்து எடுத்துவிடுவான். உங்களின் உள்ளத்தில் வஹன் வந்து விடும்.

வஹன் என்றால் என்ன? – என்று தோழர்கள் கேட்டனர்.

நபி (ஸல்) கூறினார்கள்: ' உலக ஆசையும், மரணத்தைப்பற்றிய பயமும் தான். (அபூதாவூத்)

கூட்டத்தைக் கூட்டிக்காட்டுவது என்பது உதவாக்கரைகளின் பார்முலா.

மனிதர்களின் தரத்தைக் கூட்டுவது என்பதே உருப்படியான பார்முலா!


1: நான் யார்? நான் யார்? நான் யார்?

மனித வள மேம்பாட்டுக் கட்டுரைகளைத் தொடர்ந்து இனி நாம் கவனம் செலுத்திட இருப்பது - நம்மை நாமே கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்துத் தான் (self discovery).


இது சற்றே பெரிய வேலை தான். இதை விட பெரிய வேலை நமக்கென்ன இருக்கிறது? வாருங்கள் உங்களையே கண்டு கொள்ள!

முதலில் நோட்புக் அல்லது டைரி ஒன்றை இதற்கென எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

STEP 1:

உங்களது பலங்கள் (Strenghts) என்னென்ன என்பதைப் பட்டியலிடுவது தான் உங்களின் முதல் வேலை:

பொதுவாக ஒருவரிடம் உங்கள் பலம் என்னென்ன என்று கேட்டால் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைத் தான் குறிப்பிடுவார்கள். ஏனெனில் பலம் என்பது பெரிய விஷயங்கள் மட்டுமே என்று அவர்கள் எண்ணுவதால் தான். ஆனால் சின்னச் சின்ன விஷயங்களை நமது பலமாகக் கருதுவதில்லை.

"இதுவெல்லாம்" நமது பலமா? என்று கேட்டு விடுவோம். விஷயம் சிறியதாக இருப்பினும் நமது பலம் - பலம் தான்! இவ்வாறு சிறிய சிறிய நமது பலங்களை எண்ணிக் கொண்டே வந்தால் நமக்கு நிறைய பலங்கள் இருப்பது தெரிய வரும்.

அதனை விடுத்து நமது பலங்களை குறைத்து மதிப்பிட்டால் நம்மைப்பற்றிய நமது "மதிப்பும்" (self esteem) குறைந்து விடும்!

உண்மையிலேயே ஒவ்வொருவரிடமும் பலப்பல பலங்கள் இருக்கின்றன என்பதை இப்போதே நாம் பார்க்க இருக்கின்றோம்.

நம்மைப்பற்றி நாமே கணக்கிலெடுக்காத நமது பலங்களில் ஒரு பத்து விஷயங்களை இங்கே பட்டியல் இடுவோம். பின் வரும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் உங்கள் பதில் ஆம் எனில் அதுவும் உங்கள் பலம் (strength) தான்!

1. நீங்கள் அழகாகச் சாப்பிடுவீர்களா? (கீழே சிந்தாமல் சிதறாமல்)

2. நீங்கள் அழகாக முகச் சவரம் செய்து கொள்வீர்களா? (கத்தியுடன் ஆனால் இரத்தமின்றி!)

3. நீங்கள் அழகாகக் குளிப்பீர்களா?

4. நீங்கள் அழகாக நடப்பீர்களா? (நடுநிலையுடன்)

5. நீங்கள் மற்றவர்களைப் பார்க்கும்போது முகத்தில் புன்முறுவல் காட்டுவீர்களா?

6. நீங்கள் அழகாக எழுதுவீர்களா?

7 நீங்கள் அழகாக ஆடை அணிவீர்களா?

8. நீங்கள் அழகாக வாகனம் ஓட்டுவீர்களா?

9. நீங்கள் அழகாகப் பேசுவீர்களா?

10. நீங்கள் எடுத்துக் கொண்ட ஒரு வேலையை அழகாக முடிப்பீர்களா?

இப்போது நீங்கள் தொடருங்கள். இது போல் என்னும் எத்தனை "சிறிய"
விஷயங்களில் நீங்கள் அழகு காட்ட முடியும் என்பதை நீங்களே பட்டியலிடுங்கள். உங்களின் பலங்களுக்காக உங்களையே நீங்கள் தட்டிக் கொடுத்துக்கொள்ளுங்கள். This is just called "Celebrating small successes!"

இப்போது உங்களின் பலங்களின் ஒரு பகுதி உங்களுக்கு விளங்கி இருக்கும்.
ஆனால் உங்கள் பலங்கள் இவை மட்டும் அல்ல!

அவைகளையும் கண்டு பிடிப்போம் - இன்ஷா அல்லாஹ்!


2: நண்பர்களைக் கேட்போமா?

இதோ ஒரு சிறுவன். வயது பத்து தான் இருக்கும். படிப்பில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. எல்லா ஆசிரியர்களிடமும் கெட்ட பெயர்.

ஆனால் இச்சிறுவனைப் பற்றி அவனது நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போமா?

- சார், அவன் நல்லவன் சார்!

- சார், அவன் நல்லா விளையாடுவான் சார்!

- சார், இவன் கிளாஸ்ல அமைதியா இருப்பான் சார்!

- இவன் படம் நல்லா வரைவான் சார்!

- பேப்பரை வைத்து கைவினைப் பொருட்கள் நல்லா செய்வான் சார்!

- அட்டைய வச்சி விளையாட்டு செல்போன் செய்வான் சார்!

- அதே மாதிரி லேப்டாப் – மடிக்கணினி செய்வார் சார்!

- சார், இவன் ஃப்ரண்ட்ஸ்களுக்கு நல்லா உதவி செய்வான் சார்!

- நல்லா பழகுவான் சார்!

- சார், இவன் விஞ்ஞானியா வருவான் சார்!

- சார், இவன் ஃபேமஸ் ஆயிடுவான் சார்!

- கட்டுப்பாடா இருப்பான் சார்!

- இவன் கப்-போர்டில் எல்லாத்தையும் அழகாக அடுக்கி வைத்திருப்பான் சார்! (நான் சென்று போய் பார்வையிட்டேன். கண்ணில் வைத்து ஒத்திக் கொள்ளலாம் போல் இருந்தது)

- இவன் மற்றவர்களுடன் சண்டையே போட மாட்டான் சார்!

- இவன் சிரித்த முகத்தோடவே இருப்பான் சார்!

- இவன் டீச்சர் மாதிரி ஆக்ட் பண்ணுவான் சார்!

- சார், இவன் கெட்ட பசங்களை திருத்துவான் சார்!

- புதுசு புதுசா எதுனாச்சும் கண்டுபிடிப்பான் சார்!

- எல்லாத்தையும் பகிர்ந்துக்குவான் சார்! (shares things)

- இவனுக்கு வளர்ப்பு மிருகங்கள் மீது கொள்ளை ஆசை சார்! யாராவது அவைகளை தொந்தரவு செய்தால் இவனுக்கு ரொம்ப கோபம் வரும் சார்!

போதுமா?

இது போலவே – உங்களைப்பற்றி, உங்களின் தனித்திறமைகளைப் பற்றி, நீங்களே கண்டுகொள்ளாத உங்களின் ஆற்றல்கள் பற்றி – நீங்கள் அறிந்து கொள்ள – உங்களின் நண்பர்களைக் கேளுங்கள்!

உங்களை நன்கு அறிந்து வைத்திருக்கும் உறவினர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களை நீங்களே கண்டுபிடிக்கும் இம்முயற்சியின் இந்தக் கட்டத்தில் – உங்கள் நண்பர்கள் யாராவது உங்கள் குறைகளைப் பற்றி சொன்னால் அதனை இப்போதைக்கு கண்டு கொள்ளாதீர்கள். அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

ரெடியா?

முதலில் உங்களின் நண்பர்களின் பட்டியல் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள்.

ஒரு தாளில் இவ்வாறு எழுதி உங்கள் நண்பர் ஒவ்வொருவரிடமும் கொடுங்கள்:

'நண்பரே! நாம் ..... ஆண்டுகளாக பழகி வருகிறோம்.

என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

என்னிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?

என்னிடம் உள்ள திறமைகளாக நீங்கள் எவைகளைச் சொல்வீர்கள்?

என்னிடம் உள்ள நற்குணம் என்று நீங்கள் எதனைச் சொல்வீர்கள்?

எனது தனித்தன்மை என்று எதனை நீங்கள் சொல்வீர்கள்?

உங்களது கருத்து ஒவ்வொன்றையும் நான் மிகவும் மதிப்பவன் என்பது உங்களுக்கு மிகவும் தெரியும்.

நன்றி!

பின்பு உங்கள் நண்பர்கள் உங்களைப்பற்றி எழுதித் தந்த எல்லா குறிப்புகளையும் நாம் முன்பு குறிப்பிட்ட படி ஒரு டைரியில் தொகுத்து எழுதிக் கொள்ளுங்கள்.

இன்ஷா அல்லாஹ் - இன்னும் தொடருவோம் உங்களை நீங்களே இன்னும் ஆழமாக கண்டு கொள்ள...



வெற்றிக்குப் புதிய இலக்கணம்!

வெற்றி என்பது என்ன?

எடுத்துக் கொண்ட ஒரு காரியத்தில் முழுமையாக இறங்கி அதில் சாதனை (achievement) ஒன்றை நிகழ்த்திக் காட்டும் போது ஒருவன் வெற்றி பெற்று விட்டான் என்று சொல்கிறோம்.

ஒரு கேள்வி என்னவென்றால் – ஒருவனை ஒரு காரியத்தில் தொடர்ந்து ஈடுபாடு கொள்ளச் செய்திடுவது எது?

அளவு கடந்த ஆர்வம்! ஆங்கிலத்தில் இதனை passion என்று அழைக்கிறார்கள்.

எடுத்துக் கொண்ட ஒரு காரியத்தில் – இந்த 'கட்டுக்கடங்காத ஆர்வம்' மட்டும் ஒருவரிடம் இல்லை என்றால் – அவர் அந்தக் காரியத்தில் தொடர்ந்து நின்று சாதித்துக் காட்டுவாரா என்பது சந்தேகமே!

ஆர்வமே இல்லாமல் ஒன்றில் ஈடுபடும்போது என்ன நிகழும்?

ஒன்று – பாதியிலேயே அதனை விட்டு விட்டுச் சென்று விடுவார்

அல்லது – ஏனோ தானோ என்று காலம் கடத்துவார் – சாதனை நிகழாது!

அல்லது – ஏதோ வற்புறுத்தல் அல்லது நிர்ப்பந்தம் காரணமாக ஒரு காரியத்தில் இறங்குகிறார் என்றால் – அவர் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்துக்கு அவர் ஆளாகி விடுவார்.

அல்லது – அக்காரியத்தில் அவர் நிலைத்திருந்தால் கூட வாழ்க்கையில் ஏதோ ஒன்றை பறிகொடுத்தவர் போல் காணப்படுவார். அவருக்கு உண்மையான ஆர்வம் எதில் இருந்ததோ அதனைத் தொடர முடியாமல் போய்விட்டதே என்று அங்கலாய்த்துக் கொண்டே காலத்தைத் தள்ளுவார்!

எனவே தான் சொல்கிறோம். உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதிலேயே முழு மூச்சுடன் இறங்குங்கள். சாதிப்பீர்கள்! அதுவே உங்களுக்கு வெற்றி!

சில உண்மையான எடுத்துக்காட்டுகளை பெயர் மாற்றித் தருகிறோம் – உங்கள் சிந்தனைக்காக.

பலருடன் பழகுவது, புதிய இடங்களுக்குச் செல்வது, புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது இவற்றில் ஆர்வம் மிக்க ஒருவர். இவரை ஆங்கிலத்தில் enterprising personality ன்று அழைக்கிறார்கள். ஆனால், இவரது தந்தையோ ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முதலாளி. தனக்கு அடுத்து அந்நிறுவனத்தின் நிர்வாகத்தை தம் மகனிடம் ஒப்படைத்திட பெரிதும் விரும்புகிறார். கம்ப்யூட்டர் நிறுவனமா? அது எனக்கு வேண்டவே வேண்டாம் என மறுக்கிறார் மகன். ''how can I sit in front of dead machines for hours together?'  என்பது மகனின் வாதம். ஆனால் தந்தையின் வற்புறுத்தலை மீற முடியாத மகன் வேண்டா வெறுப்பாக பொறுப்பேற்கிறார். நல்ல வருமானம் தான்! ஆனால் என்ன செய்ய? அவர் மன நோய் பிடித்தவராக ஆகி விடுகிறார்!!

இன்னொரு ஒரு உண்மைக் கதை. எனினும் சற்று கற்பனை கலந்து மாற்றித் தருகிறோம்.

இவர் ஒரு விவசாயியின் மகன். பெயர் நாசர். (உண்மைப் பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் படிப்பில் மிகவும் கெட்டிக்காரர். முதல் தர (first rank) மாணவர். பள்ளிப் படிப்பை முடித்ததும், கல்லூரிப் படிப்பைத் தொடர மிகவும் ஆர்வம் மாணவனுக்கு. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கல்லூரிக்கு மிகவும் தாமதமாக விண்ணப்பிக்கிறார். அவர் எதிர்பார்த்த B.Sc (Chemistry) யில் சீட் அவருக்குக் கிடைக்கவில்லை. B.A. Economics – பிரிவில் தான் இடம் இருந்தது. அரை மனத்துடன் சேர்ந்து விட்டார்.

நாட்கள் உருண்டோடுகின்றன. அவர் தனது விருப்பத்தை கல்லூரிப் பேராசிரியர்களிடம் சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு வாய்ப்பு கிட்டியது. வேதியியல் மாணவன் ஒருவன் வேறொரு கல்லூரிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டதால், ஒரு சீட் காலியாக, அந்த சீட் நாசருக்குத் தரப்பட்டது.

நாசருக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! ஆர்வத்துடன் படித்து இளநிலைப் படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெறுகிறார். பின்னர் முதுகலைப் படிப்பிலும் (Bio Chemistry) தங்கப்பதக்கம் வெல்கிறார். ஆய்வுப்படிப்பையும் தொடர்ந்து முனைவர் பட்டம் பெறுகிறார். பின்னர் மேல்நாடு ஒன்றுக்குச் சென்று அங்கும் ஒரு முனைவர் பட்டம்.

அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட துறை 'வைரஸ்' பற்றியதாகும். எந்தக் கல்லூரியில் அவர் இளநிலைப் பட்டம் பெற்றாரோ அதே கல்லூரிக்கு ஒரு தடவை வந்து மாணவர்களுக்கு மத்தியில் உற்சாகமாக உரையாடுகிறார்!

இப்போது கேள்வி என்னவெனில் – அதே மாணவர் தனக்கு சற்று கூட விருப்பமில்லாத பொருளாதாரத் துறையிலேயே அவர் தொடர்ந்து படித்திருந்தால் கூட – மதிப்பெண்களைக் குவித்திருந்தால் கூட அவர் வாழ்க்கையில் ஒரு நிறைவைக் கண்டிருக்க மாட்டார்.

எனவே – இப்போது கேள்வி என்னவெனில் உங்களுடைய pயளளழைn என்ன? உங்களுக்கு எதிலே அளவு கடந்த ஆர்வம்? கட்டுக்கடங்காத ஆர்வம்?

உங்களுக்கு ஒரு பயிற்சி காத்திருக்கிறது! விரைவில்!!



உங்களின் ஆர்வங்களைப் பட்டியலிடுங்கள்!

சரி, இப்போது உங்கள் டைரியை எடுத்துக் கொள்ளுங்கள். சாகவாசமாக (சநடயஒநன) அமர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்ற காரியங்கள் அனைத்தையும் பட்டியலிடுங்கள். உங்களை ஆர்வப்படுத்துகின்ற அனைத்தையும் – அது பத்து அல்லது பதினைந்து அல்லது இருபது என்று இருந்தாலும் தவறில்லை – பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒருவருக்கு ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்கின்றது என்பதற்கு என்ன அளவுகோல்? அவர் அந்த ஒன்றில் எவ்வளவு நேரம் செலவிட்டாலும் அது அவருக்கு அலுத்துப் போகாது! வாயவ றடைட ழெவ டிந டிழசiபெ! அது அவரது சிந்தனையையும் செயல்பாட்டையும் ஆக்கிரமித்திருக்கும். அது தான் அளவுகோல்.

சரி, அனைத்தையும் பட்டியலிட்டு விட்டீர்களா?

அடுத்தது நீங்கள் செய்ய வேண்டியது:

உங்கள் பட்டியலில் – இறைவன் தடை செய்துள்ள ஏதாவது இடம் பெற்றுள்ளதா என்று பாருங்கள். உதாரணமாக – ஒருவர் எனக்கு னசரஅள வாசிக்கப்பிடிக்கும், பரவையச வாசிக்கப்பிடிக்கும் என்று அதனைப் பட்டியலில் சேர்த்திருந்தார் எனில் அதனை அவர் நீக்கி விடட்டும். இவ்வாறு மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் நீக்கி விட்டு – இரண்டாவது பட்டியல் ஒன்றை அதற்குக் கீழே தயாரித்துக் கொள்ளுங்கள்.

அடுத்தது -

உங்கள் பட்டியலில் – நீங்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்ற ஏதாவது விஷயம் ஒன்றில் உங்களுக்கு எந்த ஒரு பயனும் அளிக்காத காரியம் ஏதாவது இருந்தால் அதனையும் நீக்கி விடவும். சான்றாக எனக்கு தொலைக்காட்சியில் கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்கும்; நெடுந்தொடர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் பிடிக்கும் என்று எழுதியிருந்தால் இவைகளையும் பட்டியலிலிருந்து நீக்கி விடுங்கள். அதற்குக் கீழே மூன்றாவது பட்டியல் ஒன்றைத் தயாரியுங்கள். இப்பட்டியலில் உங்களை ஆர்வப்படுத்தும் விஷயங்களின் எண்ணிக்கை இப்போது மிகவும் குறைந்திருக்கும். பரவாயில்லை!

அடுத்தது -

இந்த மூன்றாவது பட்டியலில் நீங்கள் எழுதியிருப்பவற்றுள் – உங்களுக்கு எது மிக மிக அதிகமான விருப்பமாக இருக்குமோ அவைகளுக்கு முன்னுரிமை தந்து அதன் அடிப்படையில் அவைகளை வரிசைப்படுத்தும் நான்காவது பட்டியல் ஒன்றைத் தயாரியுங்கள். இது தான் உங்களுடைய இப்போதைய ஆர்வப் பட்டியல்!

அடுத்தது -

ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கழித்து மீண்டும் உங்கள் டைரியைப் புரட்டுங்கள். உங்களின் ஆர்வப்பட்டியலைப் பார்வையிடுங்கள். இப்போது அப்பட்டியலில் ஏதாவது புதிதாக சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களர் சேருங்கள். அதிலிருந்து ஏதாவது ஒன்றை நீக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா, நீக்கி விடுங்கள். புதிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு ஒரு வருடம் கழித்தும் புதிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து – நீங்கள் பட்டியலிட்ட விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து நேரம் செலவழித்து உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் களம் ஒன்றைப் பற்றி சிந்தியுங்கள். சிந்தித்துக் கொண்டே இருங்கள்.

இறைவன் உங்களுக்கு மகத்தான வாய்ப்புகளைத் திறந்து விடுவான் – இன்ஷா அல்லாஹ்!



சுரங்கங்கள் ஒன்றிணைந்தால் எப்படி இருக்கும்?

மக்கள் சுரங்கங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாக இருந்தவர்கள், இஸ்லாத்துக்கு வந்த பின்பும் சிறந்தவர்களாக இருப்பார்கள்; மார்க்க அறிவை அவர்கள் பெற்றுக் கொண்டால்.' (நூல்: ஸஹீ{ஹல் புகாரி)

இந்த நபி மொழியை நாம் திரும்பவும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் சில தனிப்பட்ட திறமைகள் ஒளிந்து கொண்டிருப்பது எப்படி உண்மையோ, அது போலவே ஒவ்வோர் இனம் அல்லது குலத்தவருக்கும் சில தனிப்பட்ட சிறப்பியல்புகளும், பண்புகளும், ஆற்றல்களும், திறமைகளும் – இறையருளால் அமைந்திருப்பது இயல்பே!

ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் அமைந்திருக்கின்ற தன்மைகள் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

"ஒட்டகங்களில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள், நல்ல குறைஷிக்குல பெண்களாவர். அவர்கள் குழந்தைகளின் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள்."  புகாரி - 5082.

'பெருமையும் கர்வமும் கிராம வாசிகளான நாடோடிகளிடையே காணப்படும். ஆடு மேய்ப்பவர்களிடையே அமைதியும் பணிவும் காணப்படும். இறை நம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்; மதி நுட்பமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.' (நூல்: ஸஹீ{ஹல் புகாரி)

இதே அடிப்படையில் தான் நிர்வாகத் திறமையில் தன்னிகரற்று விளங்கிய குறைஷிகளிடம் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், 'இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும். அவர்களுடன் (அது தொடர்பாகப்) பகைமை பாராட்டுவோர் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்த்தே தீருவான், மார்க்கத்தை அவர்கள் நிலைநாட்டி வரும் வரை இந்நிலை நீடிக்கும்' என்று கூற நான் கேட்டிருக்கிறேன் என்று முஆவியா (ரலி) அவர்கள் சொன்னார்கள். (நூல்: ஸஹீ{ஹல் புகாரி)

ஆனால் - இனத்தின் அடிப்படையிலோ, மொழி, நிறம், தேசம் போன்ற குறுகிய வாதங்களின் அடிப்படையிலோ இஸ்லாம் ஒருபோதும் மனிதர்களை உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ மதித்திட்டது கிடையாது.

இஸ்லாம் மனிதர்களை, அவர்களுக்குள் எங்கோ ஒரு மூலையில் அமிழ்ந்து கிடக்கின்ற மிருக இயல்புகளைக் கொண்டு பிணைத்திடாமல், அவர்களை மனித மாண்புகளைக் கொண்டு இறுகப் பிணைத்து, அவர்களின் பிணைப்புகளுக்கு இறைவனை நம்புவதை – ஈமானை – அடிப்படையாய் அமைத்துத் தந்தது.

மனிதர்களுக்குள் பிளவுகளை வளர்த்திடும் கீழான அடிப்படைகளாகிய குலம்,கோத்திரம், நிறம், நிலம், மொழி, தேசியம், வட்டாரம், பிராந்தியம், ஆகிய உணர்வுகளைக் கண்டித்து மறுத்தது.

இஸ்லாம் மனிதனுக்குள் இருக்கும் மிருகத் தன்மைகளை விடுத்து அவனுள் குடியிருக்கும் மனிதத் தன்மைகளைக் கூர்மைப் படுத்தியது. ஆளுமையை அழகு படுத்தியது. அவற்றை மற்ற அனைத்தையும் விட மேலோங்கச் செய்தது. இதனால் ஏற்பட்ட மிகப் பெரிய பலன் என்னவெனில், இஸ்லாமிய சமுதாயம் உலக மகா சமுதாயமாக ஆனது. உலக ஒருமைப்பாட்டு உணர்ச்சிக்கு வழி காட்டியது.

மொழி, இனம், குலம், நிறம், தேசியம் என்ற குறுகிய வாதங்களுக்கு அப்பால் சென்று மனிதர்களை மனிதர்களாக ஆக்கி ஒன்றிணைக்கும் ஒரே கொள்கையாக இஸ்லாமே நின்று நிலவுகிறது.

எல்லா நிறத்தவர்களுடைய, எல்லாக் குலத்தவர்களுடைய, எல்லா மொழிகள் மற்றும் தேசங்களையும் சேர்ந்தவர்களுடைய திறமைகளும் அறிவாற்றல்களும் ஒன்று சேர்ந்து சங்கமித்துச் சாதனை புரியும் மாபெரும் கடலாக இஸ்லாமிய சமுதாயம் உருவாயிற்று.

இஸ்லாமிய சமுதாயம் எனும் இந்த மாபெரும் கடலில் அரேபியா, பாரசீகம், சிரியா, எகிப்து, மொராக்கோ, துருக்கி, சீனா, இந்தியா, ரோமாபுரி, கிரேக்கம், இந்தோனேஷியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அத்தனைபேரும் ஒன்றாகக் கலந்து ஓரினம் 'மனித இனம்' என்றாயினர்.

இவர்கள் அத்தனை பேரும், அதாவது அத்தனை நிறத்தவரும், மொழியினரும், தேசத்தவர்களும், தங்கள் திறமைகளையும், உழைப்பையும், அறிவையும் இந்த 'உலகலாவிய நம்பிக்கையாளர்களின் சமுதாயம்' பெருகவும், பரவவும், வாழவும் முழுமையாகப் பயன் படுத்தினார்கள்.

'மனிதர்களே! நீங்கள் நிச்சயமாக ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவீர்! மேலும், நானே உங்கள் யாவருக்கும் ஒரே இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள்.' (21:92)

திருமறையின் இந்த வசனம் உலக மகா சகோதரத்துவத்தை பிரகடனப் படுத்திடும் அற்புதமான வசனமாகும்!

Comments