நூல்: சுன்னத்தான இல்லறம் - பகுதி 3

கருத்து வேறுபாடுகள் தலை தூக்கும்போது!

கணவன்-மனைவி இருவர். என்னதான் எல்லாப் பொருத்தங்களையும் பார்த்துப் பார்த்துத் திருமணம் முடித்தாலும் ஆண் என்பவன் வேறு, பெண் என்பவள் வேறு என்பதால், இருவரும் வளர்ந்து வந்த சூழல்கள் வேறு வேறு என்பதால் இருவரின் ஆளுமையும் வேறு வேறு என்பதால் இல்லற வாழ்வில் கருத்து வேறுபாடுகள் வரத் தான் செய்யும்.



அது ஏன் இப்படி என்று கேட்க வேண்டியதில்லை. அது அப்படித்தான்!

கருத்து வேறுபாடுகள் எந்தெந்த விஷயங்களில் தலையெடுக்கலாம்?

பொருளாதாரம் காரணமாக இருக்கலாம். அல்லது மாமியார்-நாத்தனார் காரணமாக இருக்கலாம். குழந்தை வளர்ப்பு குறித்ததாக இருக்கலாம். இஸ்லாமிய மரபுகளைப் பேணுவதில் இருக்கலாம். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் இருக்கலாம். அது சிறியதாகவும் இருக்கலாம். பெரியதாகவும் இருக்கலாம்.

ஆனால் கருத்து வேறுபாடு தோன்றி விட்டால் அடுத்து கணவன் மனைவியர் என்ன செய்திட வேண்டும். அது குறித்து மனம் திறந்து பேசிட வேண்டும்.

ஆனால், பல கணவன் மனைவியர் அவ்வாறு பேசிடுவதில்லை. மனதுக்குள் போட்டு அடக்கி வைத்திருப்பார்கள். கோபம் வரும். சோகம் தலையெடுக்கும். அநியாயம் இழைக்கப்பட்டதாக, அவமானப்படுத்தப் பட்டதாக, காயப்படுத்தப்பட்டதாக எண்ணுவார்கள். ஆனால் வாயைத் திறக்க மாட்டார்கள்.

இதற்குப் பெயர் தான் ஆங்கிலத்தில் Resentment என்கிறார்கள். இதனை “அடக்கி வைக்கப்பட்ட கோபம்” எனலாம். இது பாட்டிலில் அடைக்கப்பட்ட உணர்வு ஆகும். இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அழுத்தம் கொடுக்கத் தொடங்கும்.

கணவன் மனைவியரிடையே இந்த கோபம் உருவாகி வளர்ந்தால் என்ன விளைவுகளை இது ஏற்படுத்திடும்?

முதலில் தனது கணவனைப் பற்றிய அல்லது மனைவியைப் பற்றிய “உயர்ந்த எண்ணம்” அடி பட்டுப்போகும். நம்பிக்கை குறைந்து விடும். முன்னர் எவ்வாறு தமக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று அவர் எண்ணிக் கொண்டாரோ  அதே கோணத்திலேயே அடுத்து நிகழும் அனைத்து சம்பவங்களையும் கற்பனை செய்யத் தொடங்கி விடுவார்.

இங்கே ஒரு கணவன் மனைவி கதையை எடுத்துக் கொள்வோம்.

இருவருக்கும் திருமணம் ஆன போது மனைவியின் நெருங்கிய உறவினர் ஒருவர் திருமண நன்கொடையாக ஒரு தொகையை அந்தப் பெண்ணிடம் கொடுக்கிறார். ஆனால் மனைவியிடம் பணம் இருப்பது தெரிந்த கணவன் அந்தப் பணத்தை மனைவியிடம் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டு வாங்கி முழுவதையும் செலவு செய்து விடுகிறார்.

அந்தப் பெண்ணுக்குக் கோபமோ கோபம்!

“அந்தப் பணம் என்னுடையது! அதனை இவர் எடுத்து எப்படி செலவு செய்யலாம்?” என்று தனக்குள்ளேயே அடிக்கடிக் கேட்டுக் கொள்கிறார்.

ஆனால், வேறு சில தருணங்களில், “சே! இது ஒரு பெரிய தொகையா? இவர் எனக்கு செய்கின்ற செலவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது ஒரு சாதாரண தொகை தானே! இதற்கு ஏன் போய் நான் இப்படி அலட்டிக் கொள்கிறேன்?” – என்றும் எண்ணிக் கொள்கிறார்.

இந்த சிந்தனை வட்டத்தில் சிக்கிக் கொண்ட அந்தப் பெண்மணிக்கு இது குறித்து கணவனிடம் பேசிட இயலவில்லை!

அடுத்து என்ன நடந்தது?

“நீ ஏன் பகுதி நேர வேலை ஒன்றில் சேர்ந்திடக் கூடாது?” என்று கணவன் ஆலோசனை சொல்கிறார். ஆனால் மனைவி அவரது நோக்கத்தையே சந்தேகிக்கிறார்.

கணவன், மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு மனைவியையும் அழைத்துச் செல்கிறார். போகும்போது சில பரிசுப் பொருட்களையும் வாங்கிச் செல்கிறார். மனைவி இதனையும் சந்தேகிக்கிறார். “எதற்காக இவர் இப்படி ஐஸ் வைக்கிறார்?”

மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறார். மனைவிக்காக செலவுகள் செய்கிறார். “இதுவெல்லாம் வெறும் நடிப்பு” என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறார்.

ஆனால் வாயைத்திறந்து பேசி விட அச்சம்!

இவ்வாறு மவுனமானதொரு கோபம் ஏற்பட்டு, அது அடக்கப்பட்டு, அதற்கு அழுத்தம் தரப்பட்டு பின்னர் வெடித்திட ஏன் அனுமதித்திட வேண்டும்?

இந்த நிலை ஏன் ஏற்படுகின்றது என்பதை அறிந்து கொண்டால் தான் இந்நிலையிலிருந்து கணவன் மனைவியர் தம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

காரணங்கள்:

1. வெளிப்படையாகப் பேசிடத் தயக்கம். தனது கருத்துக்களில் உண்மை இருக்கின்றது என்று தெரிந்தால் பேசிவிட வேண்டியது தானே?

2. தம்மை ஒரு பலிகடாவாக (victim) கற்பனை செய்து கொள்தல்.

3. மற்றவர்களுடைய சின்னச் சின்ன சொற்களுக்கும் செயல்களுக்கும் கூட பெரிதாக அலட்டிக் கொள்தல்; தப்பர்த்தம் செய்தல்.

4. தன்னைப் பாதுகாக்க யாரும் இல்லை என்ற கழிவிரக்க உணர்வு.

5. எல்லாவற்றையும்  “தீய கண்ணோட்டத்துடனேயே” பார்த்துக் கொண்டு மற்றவர் செய்கின்ற நன்மைகளுக்குக் கூட  நன்றி செலுத்தத் தவறுவது.

இதற்குத் தீர்வு என்ன?

1 உங்கள் துணைவரின் எல்லா சொல் செயல்களையும் “தவறான கண்ணோட்டத்தில்” துருவிக் கொண்டிருக்காதீர்கள்.

2. உங்கள் எல்லாவிதமான் உணர்வுகளையும் உங்கள் துணைவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்- இதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.

3. துணைவரின் குறைகளை மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

4. உங்களை நீங்களே – “நான் கண்ணியமானவன்!” என்று சொல்லிக் கொள்ளுங்கள். உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள்.

5. அல்லாஹ்வின் அருளை நாடி துஆ செய்து கொண்டே இருங்கள்.

இனிக்கட்டும் இல்லறம்!



தேவை: குடும்ப நல ஆலோசகர்கள்!

ஆமாம்! திருமணமான புதிதில் எல்லா ஜோடிகளும் மகிழ்ச்சிக் கடலில் தான் மிதப்பார்கள். தனக்கு ஒரு பொக்கிஷமே கிடைத்து விட்டதாகத் தான் பூரிப்படைந்து விடுவார்கள். (எடை கூட அதிகரிக்கும்!)

ஆனால் இதுவெல்லாம் எவ்வளவு காலத்துக்கு? ஒரு ஆண்டு? அல்லது இரண்டு ஆண்டுகள்? அதே நேரத்தில் வேறு சிலருக்கோ துவக்க கால மகிழ்ச்சியெல்லாம் ஒரு சில மாதங்கள் தான்!

பின்னர் கருத்து வேறுபாடுகள் தலை தூக்கும். ஒருவருடைய குறைகள் மற்றவருக்குத் தெரியத் துவங்கும். இல்லறம் அதற்கே உரித்தான சவால்களை இருவருக்கும் முன் வைத்திடும். பிரச்சனைகள் பூதாகாரமாக் உருவெடுப்பதாக எண்ணிக் கொள்வார்கள் இளம் கணவன் மனைவியர்.

கருத்து வேறுபாடுகள் எதற்காகவெல்லாம் ஏற்படும்?

ஒன்றுமில்லாத சிறு விஷயத்திலும் ஏற்படலாம். பெரிய விஷயங்களிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.

விவரம் அறியாத அந்த இளம் கணவனும் மனைவியும் செய்வதறியாது தவிப்பார்கள். பிரச்சனைகளை வெளியில் சொல்ல மாட்டார்கள். “எல்லாம் தானாகவே சரியாகி விடும்” என்று நினைப்பார்கள். ஆனால் சரியாகாது!

யாரிடமாவது சொல்லலாமா என்று எண்ணுவார்கள்.

பெரும்பாலான கணவன்மார்கள் யாரிடமும் போய் தங்களின் பிரச்சனைக்கு தீர்வு கேட்க மாட்டார்கள். வெகு சிலர் தங்களின் (சற்று விபரமுள்ள) தந்தையிடம் போய் பேசுவார்கள். இன்னும் சிலர் மார்க்க அறிஞர்களின் உதவியை நாடுவார்கள்.

மனைவிமார்கள் தங்கள் தாயிடமோ, சகோதரியிடமோ போய் அடைக்கலம் தேடுவார்கள்.

பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் – அல்ஹம்து லில்லாஹ்! ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பிரச்சனைகள் தீர்வதில்லை!

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கணவன் மனைவியர் எவ்வாறு இல்லறத்தை வழிநடத்துகிறார்கள்?

ஒன்று: ஒருவர் மீது ஒருவர் கோபத்தை அள்ளிக் கொட்டுகிறார்கள். (emotional outburst)

அல்லது: கோபத்தை அடக்கிக் கொள்கிறார்கள். (resentment)

அல்லது: ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொள்கிறார்கள் (blaming). இது அனுதினமும் தொடர்கிறது.

அல்லது: “மவுனமே” சிறந்தது என்று வாயைப் பொத்திக் கொண்டு (stone walling) “தேமே” என்று வாழ்ந்து விட்டுப் போய் விடலாம் என்று முடிவு கட்டி விடுகின்றார்கள்.

ஆனால் இவை அனைத்துமே தீர்வுகள் அல்ல! இது அவர்களுக்குத் தெரிவதும் இல்லை!

இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து கணவன் – மனைவியரைக் காப்பாற்றுவதற்காக உண்டாக்கப்பட்டதே – marital counselling – அதாவது “குடும்ப நல ஆலோசனை”.

இது குறித்த விழிப்புணர்ச்சி இன்னும் மக்களுக்குச் சென்றடையவில்லை!

குடும்ப நல ஆலோசனைக்கு என்ன தகுதிகள் தேவை?

ஒன்று: ஏழாண்டு/ ஐந்தாண்டு மதரஸா மார்க்கக் கல்வி அல்லது இஸ்லாமியக் கல்வியில் ஒரு முதுகலைப்பட்டம் (M.A. Islamic Studies).

இரண்டு: உளவியலில் ஒரு முதுகலைப்பட்டம். (M.Sc., Psychology / Clinical Psychology / Counseling Psychology)

இந்த இரண்டு தகுதிகளையும் பெற்றுக் கொண்டு கணவன் மனைவியருக்கு ஆலோசனை சொல்லக் கூடியவர்கள் நமக்கு நூற்றுக் கணக்கில் தேவைப்படும் காலம் இது!

எனினும் தகுதிமிக்க ஆலோசகர்கள் நமக்குக் கிடைக்கும் வரை நாம் செய்திட வேண்டியதெல்லாம் -

ஒன்று: இது குறித்த விழிப்புணர்ச்சியை மக்களிடத்தில் ஏற்படுத்துதல்

இரண்டு: குடும்ப உறவுகளை மேம்படுத்துவது குறித்த இஸ்லாமிய நூல்களை வாங்கிப் படித்தல், இணைய தளங்களில் இருந்து கருத்துக்களை சேகரித்தல், அக்கருத்துக்களை முன் வைத்து கலந்துரையாடுதல்

மூன்று: குடும்ப உறவுகளை மேம்படுத்திட வழிகாட்டும் பயிலரங்கங்களை கணவன் மனைவியருக்கு நடத்துதல்.

நமது இணைய தளம் இதற்காக அயராது பாடுபடும் – இன்ஷா அல்லாஹ்!

அத்துடன் – கணவன் மனைவியர் தங்களது கருத்து வேறுபாடுகளை அழகாகத் தீர்த்துக் கொண்டு மன நிம்மதியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி என்று வழிகாட்டுகின்ற இஸ்லாமிய- உளவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதுவோம் – நமது இணைய தளத்தில்.



தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்! திட்டித் தீர்க்க வேண்டாம்! – பகுதி 1

இல்லறச் சிக்கல்கள் எதுவாயினும், அவற்றுக்கு அழகிய தீர்வுகள் இருக்கின்றன! இன்ஷா அல்லாஹ் இது நூறு சதவிகிதம் சாத்தியம்!

பல கணவன் மனைவியர் தங்களது இல்லறத்தில் பிரச்னைகள் தோன்றி அவை மேலும் சிக்கலாகி விட்டால், அவை தீர்க்கப்படவே முடியாது என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

“அவர் திருந்தவே மாட்டார் – அவர் திருந்துவதற்கு சாத்தியமே கிடையாது; நான் எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பார்த்து விட்டேன்! “ம்ஹூம்! சாத்தியமே கிடையாது!” – இது மனைவியரின் புலம்பல்!

“அவளாவது திருந்துவதாவது! அவள் திருந்துவதற்கு வாய்ப்பே கிடையாது; நானும் எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பார்த்து விட்டேன்! “ம்ஹூம்! சாத்தியமில்லை!” – இது கணவனின் புலம்பல்!

நமது கேள்வி என்னவென்றால் – எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பார்த்து விட்டோம்” என்று சொல்கிறார்களே, அப்படி என்ன முயற்சியெல்லாம் இவர்கள் செய்து பார்த்து விட்டு இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள்?

இவர்கள் செய்த முயற்சிகளெல்லாமே தவறான வழியில் செய்யப்பட்ட முயற்சிகள்! இன்னும் சொல்லப்போனால், இவர்களது இல்லறம் சிக்கலாகிப் போனதற்குக் காரணமே இவர்களது தப்பும் தவறுமான அணுகுமுறைகள் தாம்!

இவர்களது தவறான அணுகுமுறைகளுள் ஒன்று தான் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சுமத்திக் கொண்டே இருப்பது!  இதனை ஆங்கிலத்தில் Blaming என்கிறார்கள்.

“நான் எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்து விட்டேன்! அவள் கேட்கவே இல்லை!” என்பார்கள். ஆனால் “எப்படிச் சொன்னீர்கள்?” என்று கேட்டால் – விழிப்பார்கள்.

அவர்கள் பயன் படுத்துகின்ற “கருத்துப் பரிமாற்றத்தை” அப்படியே தருகிறோம். நீங்களே சொல்லுங்கள் இந்த அணுகுமுறை குறித்து!

- “உளராதே!” / “உளராதீங்க!”

- “வாள் வாள் என்று கத்தாதீர்கள்!” / “வாள் வாள் என்று கத்தாதே!”

- “உயிரை வாங்காதீங்க!” / “உயிரை வாங்காதே!”

- “கழுத்தை அறுக்காதீங்க!”  / கழுத்தை அறுக்காதே!

- “உங்களுக்கென்ன, வச்சா குடுமி, சிறைச்சா மொட்டை!”

- “ஏய், நாக்க அளந்து பேசு! அப்புறம் மரியாதை கெட்டு விடும்!”

- “வாயைப் பொத்துன்னு சொல்றேன்ல!” / உங்க வாயைப் பொத்துங்க முதல்ல!”

- ” டார்ச்சர் பண்ணாதீங்க! / டார்ச்சர் பண்ணாதே!

- “நீ எந்த வேலையையாவது உருப்படியா செஞ்சிருக்கியா?”

- “நீங்க எந்த வேலையையாவது ஒழுங்கா செஞ்சிருக்கீங்களா?”

போதுமா?

எனவே இந்த Blaming  குறித்து இன்ஷா அல்லாஹ் இன்னும் எழுதுவோம்.

குற்றம் சுமத்தும் வழிமுறையை நிறுத்தி கணவன் மனைவி உறவைச் சரி செய்வது எப்படி என்பது பற்றியும் எழுதுவோம்.

Blaming  என்றால் என்ன?

கடுமையான சொற்களால் ஒருவரை குற்றம் சுமத்துவதற்குப் பெயர் தான் Blaming!  இதில் வார்த்தைகளாலேயே ஒருவரை தண்டிப்பதும், மட்டம் தட்டுவதும், இழிவு படுத்துவதும் அடங்கும். பார்க்கின்ற பார்வையினாலும், முகம் காட்டும் கோணல்களாலும் ஒருவரைத் தண்டிப்பதும் அடங்கும்! -

ஏன் கணவனோ அல்லது மனைவியோ இவ்வாறு ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள வேண்டும்?

ஒரு சான்று:

கணவன் அவசரமாக அலுவலகம் சென்றிட வேண்டும். மனைவியிடம் ஒரு சட்டை மற்றும் ஒரு பேண்ட்ஸ் அயர்ன் செய்து சீக்கிரம் ரெடி பண்ணி வைக்கச் சொல்கிறான்.

மனைவி அயர்ன் செய்வதற்குத் தயாராகும்போது, தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது. அது மனைவியின் நெருங்கிய தோழி ஒருவரிடமிருந்து வந்த வெளிநாட்டு அழைப்பு. அவர்கள் பேசி நீண்ட நாட்களாகி விட்டன. பல தடவை போன் செய்த போது இணைப்பு கிடைக்கவில்லை. இப்போது கிடைத்திருக்கிறது. “ஒரு பத்து நிமிடம் பேசி விட்டு விரைவில் பெட்டி போட்டுக் கொடுத்து விடுவோம்” என்று பேசுகிறார் தோழியிடம்.

பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனது தெரியவில்லை! அரை மணி நேரம் பேச்சு தொடர்கிறது. கணவன் குளித்து விட்டு ரெடியாகி வரும்போது, மனைவி கையில் செல் போன்! தோளில் சட்டை பேன்ட்ஸ்.

கோபம் வருமா வராதா கணவனுக்கு?

“உன்னைப் போய் அயர்ன் பண்ணிக் கேட்டேனே1 என்னை செருப்பால அடிச்சுக்கணும்!”

மனைவிக்கு இது எப்படி இருக்கும்?

சட்டை பேண்டை தானே எடுத்துப்போய் தானே அயர்ன் செய்து கொண்டு, அவசர அவசரமாகப் பசியாறி விட்டு, அவசர அவசரமாக அலுவலகம் சென்றால் முக்கியக் கோப்புகளை வீட்டிலேயே மறந்து விட்டு வந்தது நினைவுக்கு வர – அலுவலகத்தில் மேல் அதிகாரியிடம் திட்டு வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினால் தனது தோல்வி அனைத்துக்கும் மனைவியே காரணம் என்று நினைக்கும் கணவன்மார்களே குற்றம் சுமத்தும் கணவன்மார்கள்!

இதே போன்ற உதாரணத்தை மனைவிக்கும் நாம் சொல்லலாம். மனைவியின் உறவினர் அன்று மாலை வீட்டுக்கு வருவதனால், டின்னருக்காக, மனைவி சில nuts வகைகளை வாங்கிக் கொண்டு வரச்சொல்ல, மாலையில் அதனை வாங்க மறந்து விட்டுக் கணவன் வீட்டுக்கு வந்து நிற்க – மனைவி “எங்கே nuts?” என்று கேட்க, “அடடா, மறந்து விட்டேனே!” என்று கணவன் சொல்ல

- கோபம் வருமா வராதா மனைவிக்கு?

“எந்த வேலையையாவது நீங்க ஒழுங்கா செஞ்சிருக்கீங்களா? உங்கள் கிட்ட போய் வாங்கிக் கேட்டேனே?”

கணவனுக்கு இது எப்படி இருக்கும்?

மனைவி nuts வகைகள் எதுவும் இல்லாமலேயே இனிப்பு செய்து சமாளிக்க அது திருப்தியில்லாமல் போக – (“அவர்கள் வீட்டுக்கு நான் போயிருந்த போது என்னமாய் என்னைக் கவனித்தார்கள்!) இந்த அவமானமான சூழ்நிலைக்குக் கணவனே முழுக் காரணம் என்று நினைக்கும் மனைவிமார்களே குற்றம் சுமத்தும் மனைவிமார்கள்!

எப்போதாவது தான் இது போன்று நடக்கிறது என்றால் மறந்து போகலாம். ஆனால் இரண்டு நாளைக்கு ஒரு முறை அல்லது ஒரு நாளிலேயே பல முறை என்று ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்துக்கும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருந்தால் என்னவாகும்?

கட்டுரையின் துவக்கத்தில் நாம் சொல்லிக்காட்டியது போல -
“இவரை இனி நாம் திருத்தவே முடியாது!” என்று முடிவு கட்டி விடுகிறார்கள் கணவனும் மனைவியும்!

இதிலிருந்து மீள்வது எப்படி என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
ஆனால் -  ஒன்றை இங்கே வலியுருத்திச் சொல்ல விரும்புவது என்னவென்றால் =

இது போன்ற குற்றம் சுமத்தும் கணவன் மனைவியர்கள் இரண்டு ஆண்டுகளிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் விவாக விலக்கை நாடி விடுகின்றார்கள்!

தொடர்ந்து குற்றம் சுமத்துதல் என்பது விவாக விலக்கு ஏற்படுவதற்கான ஒரு முன்னெச்சரிக்கை!



தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்! திட்டித் தீர்க்க வேண்டாம்! – பகுதி 2

எதற்கெடுத்தாலும் குற்றம் பிடிப்பவரின் மனநிலை என்ன தெரியுமா?

“எடுத்துக் கொண்ட காரியம் ஒன்றில் எனக்குத் தோல்வி ஒன்று ஏற்பட்டு விட்டால் அதன் பொருள் என்ன? அந்தக் காரியத்தை செய்வதற்கு நான் இலாயக்கானவன் இல்லை என்றல்லவா ஆகி விடும்?

அத்தோடு என்னுடைய தவறான நடைமுறைகள் தான் இந்தத் தோல்வியை எனக்குத் தேடித் தந்தது என்பதை நானே ஒத்துக் கொண்டால் என்னை யார் மதிப்பார்கள்? அப்படியானால் நான் என்ன செய்யலாம்? பழியை இன்னொருவர் மீது போட்டு விட்டால் நான் தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா?

Exactly -  இதனைத் தான் செய்கிறார்கள் – மற்றவர்கள் மீது குற்றம் பிடிப்பவர்கள்!

“நான் என் மேலதிகாரியிடம் திட்டு வாங்கியதற்குக் காரணமே என் மனைவி தான்! அவள் மட்டும் அன்றைக்கு சரியான நேரத்தில் என் சட்டையையும் பேண்டையும் அயர்ன் பண்ணிக் கொடுத்திருந்தால் எனக்குக் கோபம் வந்திருக்குமா?

கோபம் இல்லை என்றால் நான் எனது கோப்புகளை மறந்து விட்டுச் சென்றிருப்பேனா? ஆக எனக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு என் மனைவியே முழுக் காரணம்! எனவே என் மனைவி தான் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்; என் மீது எந்தத் தவறும்  இல்லை!”

இப்படிக் குற்றம் பிடித்தலில் ஒருவர் சுவை கண்டு விட்டார் எனில் அது ஒரு தொடர் கதையாகி விடும். தனக்கு எப்போது தோல்வி ஏற்பட்டாலும் இவர் பிறர் மீது பழியைப் போட்டுவிட்டு தான் குற்றமற்றவர் என்று காட்டிக் கொள்பவராக ஆகி விடுவார்!

இப்படிப்பட்டவர்கள் தங்களைத் திருத்திக் கொண்டு முன்னேறிச் சென்றிடும் வாய்ப்பை முற்றிலும் இழந்து விடுகிறார்கள்!

இந்த கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட ஒரு உதாரணம் சொல்லப்படுகின்றது.

ரு கொடிய விஷப்பாம்பு அது! வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அது மற்றவர்களைக் கொட்டி விடும்! அந்தப் பாம்பு கொட்டினால் எப்படி வலிக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும்; அது மரணத்துக்கும் வழி வகுக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும்; அப்படிப்பட்ட பாம்பு ஒன்றிடம் போய் நீங்கள் உங்கள் கையை நீட்டுவீர்களா?

நாம் சொல்வதெல்லாம் நாம் கொடிய பாம்பாகவும் இருந்திட வேண்டாம்!

அந்தப் பாம்பிடம் போய் கொட்டு வாங்குபவர்களாகவும் இருந்திட வேண்டாம்!

குற்றத்தை மற்றவர் மீது சுமத்திடும் கெட்ட பழக்கம் ஒரு தொற்று நோய் போல! கணவனிடமிருந்து மனைவிக்குத் தான் தொற்றும் என்பதில்லை!

குழந்தைகளுக்கும் இந்த நோய் தொற்றிக் கொண்டால் என்னவாகும் குடும்பத்தின் நிலைமை?

இந்தக் கெட்டப் பழக்கம் குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள்:

- குடும்பத்தினர் யாரும்  தங்களின் கருத்துக்களை வெளியே சொல்ல பயப்படுவார்கள்!

- ஒருவரும் தங்களின் தவறுகளை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்!

- எந்த ஒரு விஷயத்திற்கும் தாமாகவே நல்லதொரு முடிவை எடுத்திட அஞ்சுவார்கள்!

-  புதிதாத எந்த ஒன்றையும் சாதித்திட வேண்டும் என்ற ஊக்கம் மங்கிப்போய் விடும்!

- குற்றம் சுமத்தப்படுபவர் தனது கோபத்தை அடக்கிக் கொள்வார்; வாய் திறக்க முடியாது!

- மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள்! வீடே சோக மயமாகக் காணப்படும்!

- தங்களுக்கு எந்த ஒரு மதிப்புமில்லையே என்று கையறு நிலைக்கு ஆளாகுவர்!

- அங்கே தட்டிக் கொடுப்பார் யாரும் இருக்க மாட்டார்கள்! மட்டம் தட்டுதல் மட்டும் தவறாமல் நடந்து கொண்டிருக்கும்!

இப்படிப்பட்ட குடும்பத்தில் மன அமைதி இருக்குமா? கிஞ்சிற்றும் இருக்காது! ஏன்? அங்கே அன்பு, காதல், நேசம், இரக்க உணர்வு எதற்கும் இடமில்லை எனும்போது மன அமைதி எப்படி கிட்டும்!

இல்லற வாழ்வை இதற்காகவா தந்தான் வல்லோன் அல்லாஹ்?

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே  அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

குற்றம் சுமத்தும் குடும்ப வாழ்வில் – இம்மூன்று அருட்கொடைகளும் காணாமல் போய் விடுகின்றன! இந்த குடும்ப வாழ்க்கைக்கு அர்த்தம் ஏதாவது உண்டா?

எனவே – இன்றே அப்படிப்பட்ட கணவன் மனைவியர் ஒரு முடிவுக்கு வந்திட வேண்டும். அது என்ன?

“நம் குடும்பத்தில் இனி இந்தக் குற்றம் சுமத்தும் கெட்டப் பழக்கத்துக்கு இடமே கிடையாது!”

முடிவு எடுத்து விட்டீர்களா?

அப்படியானால் குடும்பத்தினர் தவறுகள் செய்திடும்போது எப்படி அவர்களைத் திருத்துவது என்று கேட்கிறீர்களா?

ஒரு உண்மையை மீண்டும் இங்கே சொல்வோம்!

திருந்திட வேண்டியது நாம் தான்!  மற்றவர்கள் அல்ல!!

அது எப்படி என்கிறீர்களா? இன்ஷா அல்லாஹ் தொடர்வோமே!



தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்! திட்டித் தீர்க்க வேண்டாம்! – பகுதி 3

கணவன் (அல்லது மனைவி) ஏதாவது ஒரு தவறைச் செய்து, அதனால்   நினைத்த ஒன்று நடக்காமல் போய் விட்டால், மனைவி (அல்லது கணவன்) உடனே உணர்ச்சி வசப்பட்டு அதற்கு சட்டென்று எதிர்வினையாக (react) திட்டத் தொடங்கி விடுகிறார். “உன்னால் தான் இந்த நிலை!” என்று!!

இந்தச் சட்டென்ற எதிர்வினை அறிவுபூர்வமானதாக இருக்காது. உணர்ச்சியால் உந்தப்பட்டு சட்டெனப் பேசி விடுவோம்! வரம்பு மீறி வார்த்தைகளைக் கொட்டி விடுவோம்!

எனவே நாம் என்ன செய்திட வேண்டும்? பிரவாகம் எடுத்துப் பொங்கி எழுகின்ற உணர்ச்சியை நாம் சற்றே அடக்கிக் கொள்ள முயல வேண்டும்.

கோப உணர்ச்சியை விழுங்கிட வேண்டும். (இதற்குப் பயிற்சி தேவை. அனால் முடியாதது ஒன்றும் இல்லை). வாய்க்குப் பூட்டு போட்டு விட வேண்டும்.
நின்று கொண்டிருந்தால் அப்படியே உட்கார்ந்து விட வேண்டும். நன்றாக மூச்சை இழுத்து ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டும்.

நிதானத்துக்கு வந்த பிறகு, என்ன நடந்ததோ அதனை வேறு கோணத்தில் சிந்தித்துப் பார்த்திட முயற்சிக்க வேண்டும்.

நாம் முன்பு காட்டிய உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். கணவன் வீட்டுக்குத் திரும்பும்போது, nuts வாங்கி வர மறந்து விட்டார் அல்லவா? இதனை மனைவி எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்?

“அவர் வேண்டுமென்று மறந்திருக்க மாட்டார்! அலுவலக வேலை அவருக்கு மறதியைத் தந்திருக்க வேண்டும்!”

“எத்தனையோ தடவை நாம் சொல்வதை அப்படியே வாங்கிக் கொடுப்பவர் தானே இவர்?

“நாம் அவரைத் திட்டி விட்டால், அவர் மனம் என்ன பாடுபடும்? அவர் மனத்தை புண்படுத்தி நமக்கு என்ன ஆகப்போகின்றது!”

“நாம் இடையே ஒரு போன் செய்து நினைவூட்டி யிருக்கலாம் தானே! தவறு அவர் மீது மட்டும் அல்லவே!”

“மாதத்துவக்கத்திலேயே மளிகைப்பொருட்களை வாங்கும்போதே இந்த nuts வகைகளையும் சேர்த்து வாங்கிக் கொள்!” – என்று பல தடவை அவர் என்னிடம் சொல்லியிருக்கும்போது அப்படி வாங்கி வைக்காதது என் தவறு தானே!

இந்தக் கோணத்தில் நீங்கள் சிந்தித்தால், கணவன் மேல் உள்ள கோபம் பறந்து போய் விடும்! மாறாக அவர் மீது இரக்கப் படத் துவங்கி விடுவீர்கள்!

அதோடு விட்டு விடாமல், இனி அடுத்து இது போன்று நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை இருவரும் சேர்ந்தே யோசிக்கலாம் தானே!

இந்த அணுகு முறையில் கணவன் மனைவி நல்லுறவு, நேசம், கருணை, எல்லாம் பாதுகாக்கப்படுகிறது!

முயற்சி செய்து பாருங்கள்! அதிசயங்கள் நடந்தேரும் உங்கள் குடும்பத்தில்!

Comments