நூல்: இஸ்லாத்தின் பார்வையில் மனித வள மேம்பாடு - பகுதி 3

அறிவு வளம் கலக்காத ஆன்மிகத்தினால் என்ன பயன்?

நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் – ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். (35:28)

ஆம்! அறிவு வளம் என்பது நமது ஆன்மிக வளத்தை வளர்க்கும் ஆற்றல் மிக்கது! ஏனெனில் அறிவு இறையச்சத்துக்கு வழி வகுக்கிறது.


அது போலவே நமது ஆன்மிக உணர்வு – நமது அறிவை மேலும் பெருக்கிடத் தூண்டுகோளாய் விளங்குகிறது என்பதும் உண்மையே!

'அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றான்.' (2: 282)

இந்த இறை வசனங்களின் அடிப்படையிலிருந்து இஸ்லாத்தைப் பொறுத்தவரை அறிவும் ஆன்மிகமும் பின்னிப் பிணைந்தவை. ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்கவே முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் நம்மில் பலர் ஆன்மிக வளத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் அளவுக்கு அறிவு வளத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

நிறைய தொழுவார்கள். ஆனால் குர்ஆன் மொழிபெயர்ப்பைக் கூட இவர்கள் தொடுவதில்லை.

நிறைய நோன்புகள் வைப்பார்கள். ஆனால் மார்க்கக் கல்வியில் இவர்களுக்கு ஆர்வமே தோன்றுவதில்லை!

இவர்கள் வெளிப்புறத் தோற்றத்தால் மற்றவர்களை அசத்துவார்கள். ஆனால் கொஞ்சம் இவர்களிடம் பேசிப்பார்த்தால் – இவர்களின் 'அறிவுத்திறனின் அளவு' (intellectual capacity)  வெளிப்பட்டு விடும்.

இதன் விளைவுகள் என்ன?

நேர் வழி பெற்ற கலீஃபாக்களில் ஒருவரான உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் மிக அருமையாகச் சொன்னார்கள்:

'கல்வியின்றி செயல் படுகின்றவர்களால் சீர்திருத்தங்களை விட சீர்கேடுகளே அதிகம் ஏற்படும்.'

இத்தகையவர்களிடம் இறையச்சம், மனத்தூய்மை, மார்க்கப்பற்றுக்கெல்லாம் ஒரு குறையுமிருக்காது. ஆனால் மார்க்க அறிவு, மார்க்கத்தின் தேட்டம்  (the spirit ), மார்க்க சட்டங்களின் அடிப்படை நோக்கங்கள் – இவை குறித்த தெளிவு இவர்களிடத்தில் இருப்பதில்லை!

இதில் வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால் – இவர்கள் அறிவுத்திறன் மிக்க மற்றவர்களிடமிருந்து விலகிக் கொண்டு விடுவார்கள்!

தங்களின் அபரிமிதமான வழிபாடுகளைக் கணக்கில் கொண்டு தங்களுக்குத் மிக உயர்வான ஒரு அந்தஸ்தை – கற்பனையாக – ஏற்படுத்திக் கொள்வார்கள்.

விளவு? இத்தகையவர்களை வழி கெடுப்பது ஷைத்தானுக்கு மிகச் சுலபம்! காரணம் அவர்களின் கல்வி அறிவின்மை!

நபி மொழி ஒன்றைப் பாருங்கள்:

'அவர்களின் தொழுகை, நோன்பு இதர செயல்களை நீங்கள் கண்டால் உங்களுடைய நோன்பு தொழுகை நற்செயல்களெல்லாம் மிகக்குறைவானவை என்றே கருதுவீர்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். அது தொண்டையைக் கடந்து செல்லாது. சிலை வணங்கிகளை விட்டு விட்டு முஸ்லிம்களைக் கொல்வார்கள்' என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

இமாம் ஹஸன் அல் பசரீ (ரஹ்) சொல்வதைப் பார்ப்போமா?

'அறிவுத்திறன் இன்றி செயற்களத்தில் குதிப்பவன் பாதையின்றி நடப்பவன் போலாவான். அறிவின்றி செயல்படுபவனால் விளையும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம். எனவே வணக்க வழிபாட்டுக்கு இடையூறு இன்றி கல்வியைத் தேடுங்கள். கல்விக்கு இடையூறு இல்லாமல் வணக்க வழிபாட்டில் ஈடுபடுங்கள்.' சிலர் கல்வியைக் கைவிட்டு வணக்க வழிபாட்டில் திளைத்தனர். இறுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகவே வாளேந்தும் அளவுக்கு வந்து விட்டார்கள். அவர்கள் கல்வியைப் பெற்றிருந்தால் அவர்கள் கற்ற கல்வி ஒருபோதும் அவர்களை அப்படிச் செய்ய விட்டிருக்காது!' (நூல்: இப்னுல் கைய்யும் எழுதிய மிஃப்தா{ஹ தாரிஸ் ஸஆதா)

எனவே தொலைநோக்குப்பார்வை உடைய நமது புதிய இளந்தலைமுறை சமூகப் பணிகளில் எதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது இங்கே உள்ளங்கை நெல்லிக்கனி போல மிகத் தெளிவாகி விட்டது.

ஆம்! நமது செயற்களம் 'இக்ரா' விலிருந்து தான் துவங்குகிறது என்பதை மறந்து விட வேண்டாம்!


அறிவில் அளவு கடந்த ஆர்வம்! ஆனால் ஆன்மிகத்தில் அலட்சியம்!!

நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் – ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். (35:28)


இதற்கு முந்தைய கட்டுரை ஒன்றில் இஸ்லாத்தைப் பொறுத்தவரை அறிவும் ஆன்மிகமும் பின்னிப் பிணைந்தவை என்பதையும்; அவற்றில் ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்கவே முடியாது என்பதையும் பார்த்தோம்.

அதன் அடிப்படையில் அறிவு வளத்தை வளர்த்துக் கொள்ளாமல் ஆன்மிகத்தில் அதீத ஈடுபாடு காட்டுபவர்களால் சீர்கேடுகளே அதிகம் விளைந்திட வாய்ப்புண்டு என்பதையும் பார்த்தோம்.

அதே நேரத்தில் அறிவைப் பெற்றுக் கொள்வதில் காட்டுகின்ற ஆர்வத்தில் ஒரு சிறு பகுதி கூட, ஆன்மிகம் குறித்து ஒருவர் கவலைப்படவில்லை எனில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அலசவே இக்கட்டுரை!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மிகச் சிறந்த மார்க்க அறிஞர். அவர் சொற்பொழிவுகள் மிகவும் அருமையாக இருக்கும். ஒரு தடவை அவருடைய சொற்பொழிவு ஒன்றை வீடியோ குறுந்தகடு ஒன்றில் போட்டுக் காட்டினேன் என் உறவினர் ஒருவருக்கு. அவர் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டுபவர். விடாமல் தஹஜ்ஜுத் தொழுபவர். அவர் வீடியோவைப் பார்க்கும்போதே தனது விமர்சனத்தைத் தொடங்கி விட்டார்:

'என்ன தான் சொல்லுங்க... அவர் மீசையைக் கத்தரிக்காமல் விட்டு வைத்திருக்கிறாரே... இப்படி வந்து நின்று கொண்டு பேசினால் யார் அவர் கருத்தைக் காதில் வாங்குவார்கள்?'

இதிலிருந்து தெரிய வருவது என்னவெனில் மக்கள் அறிஞர்களை இப்படித்தான் கவனிக்கிறார்கள்!

நாம் சொல்ல வருவது என்னவெனில் இப்படிப்பட்ட சின்ன சின்ன விஷயங்களில் கூட ஏன் நமது அறிஞர்கள் சுன்னத்தைப் பின் பற்றுவதில் அலட்சியம் காட்டிட வேண்டும்?

நமது சிறு சிறு அலட்சியங்கள் நாம் சொல்ல வருகின்ற பெரிய விஷயங்கள் குறித்து மக்கள் சிந்தனையைத் திருப்பிடத் தடையாக விளங்குகிறது என்பதை அறிஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தடவை இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் தலைவர் – மிக மிக சீரியஸான ஒரு விஷயத்தின் பக்கம் தமது தொண்டர்களின் கவனத்தைத் திருப்பிடும் சொற்பொழிவு ஒன்றை ஆற்றுகிறார். பேச்சின் முடிவில் ஒருவர் கேட்கிறார்: 'நமது தொண்டர்கள் தங்களின் தாடியைக் கத்தரித்துக் கொண்டு அதனை சிறியதாக வைத்துக் கொள்கிறார்கள்; எனவே தாங்கள் தங்களின் தொண்டர்களுக்கு அவர்கள் தாடியை சற்றே நீளமாக வைத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும்!'

ஒரு தடவை ஒரு இஸ்லாமியஅமைப்பின் அலுவலகம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அது பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த சமயம். மாலை அஸர் நேரம் அது. அலுவலகத்துக்கு எதிரே தான் பள்ளிவாசல். பாங்கு சத்தம் கேட்கிறது. ஆனால் யாரும் பள்ளிக்கு வருவதாகத் தெரியவில்லை! கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்:

'நடந்து முடிந்த தேர்வுகள் பற்றிய முக்கியமான கண்ணோட்டம் ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் நேரம் இது. அதனைப்பார்த்து விட்டு இங்கே தனியாக ஜமாஅத் வைத்துத் தொழுது கொள்ளலாம்!'

முதலில் இதற்கு அனுமதி இருக்கிறதா என்பதே நம் கேள்வி. அதே நேரத்தில் மக்கள் இதனை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையும் நாம் உணரத் தவறி விடுகின்றோம்!

ஒரு தடவை – இலங்கையிலுள்ள அரபிக்கல்லூரி ஒன்றின் முதல்வர் ஒருவர் தமிழகத்துக்கு வருகை தந்திருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அங்குள்ள முஸ்லிம் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து பேச்சு திரும்பியது. ஒரு அமைப்பினரைப் பற்றி அவர் சொன்னார்: எதிரே தான் பள்ளிவாசல். ஆனால் ஒரு நாய் கூட பள்ளிக்கு வந்து தொழ வருவதில்லை!' புரிகிறதா?

அறிவில் நாம் மிகச் சிறந்தவர்களாக விளங்கலாம். விவாதங்களில் நம்மை மிஞ்சுவோர் யார் என்று நாம் மார் தட்டலாம். எந்த ஒரு கேள்விக்கும் விலாவாரியாக நாம் விளக்கம் அளிப்பவர்களாக இருக்கலாம். ஆனால் எங்கே போனது நமது ஆன்மிகம்? ஏன் நாம் தொழுகையில் அசட்டையாக இருக்கின்றோம். ஏன் நாம் தொழுகைக்குப் பிறகு திக்ர் செய்வதில் அலட்சியம் காட்டுகிறோம்? ஏன் நாம் பிற சுன்னத்தான நடைமுறைகளில் கவனம் செலுத்துவதில்லை?

அறிவில் அளவு கடந்த ஆர்வம் – ஆனால் ஆன்மிகத்தில் அலட்சியம் என்ற நிலை ஒருவரிடத்தில் தொடர்ந்தால் என்னவாகும் தெரியுமா? அவர் சில சமயங்களில் மார்க்க வரம்புகளை மீறிட ஷைத்தான் தூண்டிகொண்டே இருப்பான். இவர் அவன் வலையில் விழுந்து விடுவார்!!

சில சமயம் அவர் பொய் சொல்லி விடுவதை ஷைத்தான் நியாயப் படுத்தி விடுவான். சில சமயம் ஒரு பாவமான காரியத்தைச் செய்திடத் தூண்டப்படும்போது, அவரது குறைவான இறையச்சம் – அவரை அப்பாவத்திலிருந்து தடுத்திடப் போதுமானதாக இருக்காது. விளைவு? அப்பாவத்தையே நியாயப்படுத்தத் தொடங்கி விடுவார்! இது மிகவும் ஆபத்தான நிலை அல்லவா?

எனவே தான் சொல்கிறோம். அறிவு பலம் மிக்கவர்களா நீங்கள்? வணக்க வழிபாடுகளில் சற்றே அதிகமாக கவனம் செலுத்திடுங்கள்! ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். சுன்னத்தான தொழுகைகளைத் தொடந்து பேணி வாருங்கள். பள்ளியில் அமர்ந்து திக்ர்களில் ஈடுபடுங்கள். துஆ விஷயத்தில் ஆர்வம் காட்டுங்கள். இறைவனிடத்திலே அழுது மன்றாடுங்கள்.

உடை தோற்றம் ஆகிய விஷயங்களில் மார்க்க வரம்புகளைப் பேணுங்கள். உணவு உண்ணும் முறை, நீர் அருந்தும் முறை, பல் துலக்குவது, நகம் வெட்டுவது, முடி வெட்டுவது, களைவது ஆகிய அனைத்து விஷயங்களிலும் சுன்னத்தைக் கடைபிடிப்பதில் கவனமாக இருங்கள். இவைகளை மக்களுக்குக்காட்டுவதற்காகச் செய்திட வேண்டாம். அல்லா{ஹு தஆலாவின் திருப்பொறுத்தம் நாடிச் செய்திடுங்கள். குர்ஆனை தினமும் ஓதிடுங்கள். மண்ணறைகளுக்குச் சென்று மறுமைச்சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். இயற்கைப் பெருவெளியைத் தேடிச் சென்று உற்று நோக்குங்கள். இரவு வானத்தை அடிக்கடி ரசித்துப் பாருங்கள். அல்லா{ஹ தஆலாவின் ஆற்றலைப் போற்றிப் புகழுங்கள்.

இவ்வாறு நீங்கள் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும்போது மட்டுமே, உங்களின் அறிவாற்றலுக்கு இறைவனின் அங்கீகாரமும் உண்டு! மக்களும் உங்களது அறிவால் பயன் பெறுவார்கள்! சரிதானே?

Comments