நூல்: சுன்னத்தான இல்லறம் - பகுதி 4

குடும்பச் சண்டைகள் குறைந்திட!

ஸஹீஹுல் புகாரி எனும் நபி மொழி நூலிலிருந்து ஒரே ஒரு ஹதீஸை எடுத்து ஆய்வோம் – இங்கே:


ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது; அல்லாஹ்வின் தூதருடைய மனைவிமார்களான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, மற்றும் சவ்தா ஆகியோரும் இருந்தோம். மற்றெhரு குழுவில் உம்மு சலமா அவர்களும் அல்லாஹ்வின் தூதருடைய மற்ற மனைவிமார்களும் இருந்தனர்.


அல்லாஹ்வின் தூதர் என்னை எவ்வளவு (ஆழமாக) நேசித்து வந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, அன்பளிப்பு செய்பவர் தம்மிடம் பரிசுப் பொருள் ஏதும் இருந்தால், அதை அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்புச் செய்ய அவர் விரும்பினால், அதை தள்ளிப் போட்டு, என் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்கும் நாள்) வரும்போது என் வீட்டிற்கு அன்பளிப்பு கொடுத்தனுப்புவார்.

ஆகவே, (இது தொடர்பாக) உம்மு சலமா குழுவினர் (தங்களிடையே கலந்து) பேசினர். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் பேசி, எவர் எனக்கு ஓர் அன்பளிப்பைத் தர விரும்புகிறாரோ அவர், நான் என் மனைவிமார்களின் வீடுகளில் எங்கிருந்தாலும் அங்கு அந்த அன்பளிப்பை அனுப்பி வைக்கட்டும் என்று கூறும்படி (அல்லாஹ்வின் தூதரை) கேட்டுக் கொள் என்று உம்மு சலமா அவர்களிடம் அவர்களின் குழுவினர் கூறினர்.

அவ்வாறே உம்மு சலமா அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் தம் குழுவினர் கூறியதை எடுத்துச் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் ஏதும் கூறவில்லை. பிறகு, உம்மு சலமா அவர்களின் குழுவிலிருந்த மற்ற மனைவிமார்கள் உம்மு சலமா அவர்களிடம், (நமது கோரிக்கையை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்று) கேட்டனர். உம்மு சலமா அவர்கள், எனக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை என்று சொன்னார்கள்.

அவர்கள், மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் (இது பற்றிப்) பேசு என்று கூறினர். உம்மு சலமா அவர்களும் அடுத்து தமது முறை வந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துப் பேசினார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. மீண்டும் உம்மு சலமா (ரலி) அவர்களின் குழுவினர், அவர்களிடம் (நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் சொன்னர்கள் என்று) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எனக்கு பதில் எதுவும் கூறவில்லை என்று உம்மு சலமா அவர்கள் கூறினார்கள்.

அதற்கு அவர்கள், அவர்கள் உனக்கு பதில் தரும்வரை நீ அவர்களிடம் (இது குறித்துப்) பேசிக் கொண்டேயிரு என்று கூறினார்கள். மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். உம்மு சலமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனை) தராதே. ஏனெனில், ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்.

உம்மு சலமா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குத் துன்பம் தந்ததற்காக அல்லாஹ்விடம் நான் பாவ மன்னிப்புக் கோருகிறேன் என்று கூறினார்கள்.

பிறகு, அந்த மனைவியர் அல்லாஹ்வின் தூதருடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அணுகி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், உங்கள் மனைவிமார்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மக(ளான ஆயிஷா(ரலி) அவர்க)ளின் விஷயத்தில் (தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறார்கள் எள்று கூறுமாறு (சொல்லி) அனுப்பினார்கள்.

(அவ்வாறே) ஃபாத்திமாவும் நபி (ஸல்) அவர்களிடம் பேசினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிக்கவில்லையா? என்று கேட்டார்கள். அதற்க அவர்கள், ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்) என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று அவர்களிடம் (தன் சின்னம்மாக்களிடம்) செய்தியைத் தெரிவித்து விட்டார்கள். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் மறுபடியும் போ(ய்ச் சொல்) என்று கூறினார்கள். மீண்டும் (இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம்) செல்ல ஃபாத்திமா அவர்கள் மறுத்து விட்டார்கள்.

ஆகவே, அவர்கள் (தம் சார்பாக) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (சற்று) கடுமையாகப் பேசி, உங்கள் மனைவிமார்கள் அபூ குஹாஃபாவின் மகனுடைய (அபூபக்ருடைய) மகளின் (ஆயிஷா(ரலி)வின்) விஷயத்தில் (நடந்து கொள்வது போன்றே பிற மனைவிமார்களிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள் என்று கூறினார்கள்.

நான் (ஆயிஷா) அமர்ந்து கொண்டிருக்க, அவரது குரல் உயர்ந்தது. அவர் என்னைக குறை கூறித் திட்டினார். எந்த அளவுக்கென்றால், அல்லாஹ்வின் தூதர் நான் பதில் பேசுவேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே, நான் ஸைனபுக்கு பதில் சொல்லி, இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன்.

நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, இவள் (உண்மையிலேயே) அபூபக்ருடைய மகள் தான் என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது, ஃபாத்திமா அனுமதி கேட்டு உள்ளே வந்தார் என்று ஆயிஷா(ரலி) கூறியுள்ளார்கள். (ஸஹீஹுல் புகாரி – மூன்றாம் பாகம் – ஹதீஸ் எண்: 2581)

என்ன அற்புதமான காட்சிகள் – நபியவர்களின் குடும்பத்தில்!

பெண்களின் இயல்புகளைப் புரிந்துகொள்ளவும், அதற்கொப்ப அவர்களிடம் நடந்து கொள்வது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளவும் – இந்த ஒரு நபி மொழியில் இருந்தே நாம் நிறைய பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

பாடங்களுக்குச் செல்வோமா?

1. குழுவாக செயல்படுவது பெண்களின் இயல்பு! (தனி ஆவர்த்தனம் வாசிப்பது எல்லாம் ஆண்கள் தாம்!)

குடும்பத்தில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் – அதன் பின்னணியில் “பெண்கள் குழு” ஒன்று இருந்திட அதிக வாய்ப்பு உள்ளது.

அதைக் கேள், இதைக் கேட்டு வாங்கு – என்று மாமியாரைச் சுற்றி – மகள், அக்கா, தங்கை – போன்ற உறவினர் கூட்டம் ஒன்று போட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பதனால் தான் வரதட்சனைப் பிரச்னைகள்.

2. பெண்கள் நம்மிடம் என்ன செய்தி கொண்டு வந்தாலும் – ஆண்கள் – அதனை சீர்தூக்கிப் பார்த்தே முடிவு செய்திட வேண்டும். கொண்டு வரப் படும் செய்தியில் நேர்மை இல்லை எனில் – ஆண்கள் உறுதியாக மறுத்து விட வேண்டும். நபியவர்களைப் போல! “நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள்” என்ற குற்றச்சாட்டில் என்ன நியாயம் உள்ளது? ஒவ்வொரு மனைவிக்கும் ஒவ்வொரு நாளை ஒதுக்கியது நபியவர்களின் நீதியை உணர்த்திடவில்லையா? அதில் ஏதும் குறை வைத்தார்களா நபியவர்கள்?

3. உம்மு சலமா அவர்களிடம் நபியவர்களின் மனைவியர் “அவர்கள் உனக்கு பதில் தரும் வரை நீ அவர்களிடம் இது குறித்துப் பேசிக் கொண்டே இரு” என்று கூறினார்கள் என்பதைக் கவனியுங்கள். உம்மு சலமாவைத் தொடர்ந்து அன்னை ஃபாத்திமா அவர்களை அணுகுகின்றார்கள். தொடர்ந்து ஸைனபையும் அனுப்பி வைக்கிறார்கள்! தங்களுக்குச் சாதகம் ஏற்படும் வரை – தொடர்ந்து – முயற்சி செய்து கொண்டே இருப்பது – பெண்களின் கை வந்த கலை.

4. பெண்களிடம் – மறுத்துப் பேசுவதை விட மவுனத்துக்கு வலிமை அதிகம். இரண்டு தடவை மவுனம் காக்கிறார்கள் நபியவர்கள். இதுவும் சுன்னத் ஆகி விடுகிறது நமக்கு.

5. பெண்களிடம் பேசும்போது நமது பேச்சோ அல்லது மறுப்போ – சுருக்கமாக நறுக்கென்று அமைந்திட வேண்டும். வள வள என்று பேசி – அது ஒரு விவாதமாக மாறிட நாம் அனுமதிக்கக்கூடாது.

6. பெண்களை – இது போன்ற “நச்சரிப்பு” வேலைகளில் இருந்து காக்கக் கூடியது – இறையச்சம் ஒன்று மட்டுமே. உம்மு சலமா அவர்கள் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு. உம்மு சலமா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குத் துன்பம் தந்ததற்காக அல்லாஹ்விடம் நான் பாவ மன்னிப்புக் கோருகிறேன் என்று கூறினார்களே- அது தான் பாராட்டப் பட வேண்டும்.

7. முகத்தில் தெரிகின்ற உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதிலும், அந்த உணர்ச்சிகளை சொற்களால் விவரித்துக் காட்டுவதிலும் பெண்களே ஆண்களை விட சிறந்தவர்கள். எவ்வளவு அழகாக ஹதீஸை விவரிக்கிறார்கள் அன்னை ஆயிஷா அவர்கள்! நபியவர்களின் முகக் குறிப்பை எவ்வளவு துல்லியமாகவும் விரைவாகவும் புரிந்து கொண்டு விடுகிறார்கள்.

8. ஒன்றை கவனித்தீர்களா? எல்லாவற்றையும் விலா வாரியாக விவரித்த அன்னையவர்கள் – ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்கள் நபியவர்களைக் கடுமையாக என்ன பேசினார்கள் என்பதையோ, தம்மைத் திட்டியதையோ, இறுதியில் அவர்களை எப்படி வாயடைக்கச் செய்தார்கள் என்பதையோ – விவரிக்காமல் விட்டு விட்டார்கள் – பார்த்தீர்களா? இப்படித் தான் பெண்கள் “வடிகட்டிப் பேசிடத்” பழகிக் கொள்ள வேண்டும்! வடிகட்டிப் பேசினாலே பல பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம்.

9. இந்த ஹதீஸிலே வருகின்ற சம்பவம் போன்று நம் வாழ்வில் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆண்களாகிய நாம் எப்படி நடந்து கொண்டிருப்போம்? வீட்டில் ரகளை ஒன்றை நடத்தி முடித்து விடுவோம். இதற்குக் காரணம் ஆண்களின் ஈகோ தான்! இந்த ஒட்டு மொத்த சம்பவத்திலும் – நபியவர்களின் மவுனத்தையும் ஒரே ஒரு கருத்தையும் மட்டுமே இங்கே நாம் காண்கிறோம். தம்மிடம் கடுமையாகப் பேசும் மனைவிக்கு எதிராகக் கூட அவர்கள் வாயைத் திறக்கவேயில்லை!

10. பெண்களின் தன்மைகளை ஆண்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தால் – கணவன் – மனைவி சண்டைகள் வெகுவாகக் குறைந்து விடும் குடும்பங்களில்.

11. ஒரு உணர்ச்சிகரமான சூழலில் நமது குடும்பம். கடுமையான வாக்குவாதம். ஆளுக்கு ஆள் பேசுகின்றார்கள். சப்தம் உயர்ந்து கொண்டே போகிறது. இந்தச் சூழ்நிலையை உங்களால் மாற்றிட முடியுமா? உணர்ச்சிகள் தணிந்து – குடும்பத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு எப்படிக் கொண்டு வருவீர்கள்? நபியவர்களிடமே கற்றுக் கொள்வோம். என்ன செய்கிறார்கள்?

அன்னை ஆயிஷா அவர்கள் ஸைனப் அவர்களை வாயடைக்கச் செய்தவுடன் நபியவர்கள் “இவர் உண்மையிலேயே அபூ பக்ரின் மகள் தான்” என்று நகைச் சுவையாக ஒரு போடு போடுகின்றார்கள். அவ்வளவு தான். சூழ்நிலை மாறி விடுகிறது! உணர்ச்சித் திறன் (Emotional Wisdom) உள்ளவர்களால் தான் இது சாத்தியப் படும்.

12. இறுதியாக – இன்னொரு பாடமும் இங்கே நாம் படித்துக் கொள்வோம். கணவனும் மனைவியும் ஒரே போர்வையில் தூங்குவது தான் அது! அதாவது இதுவும் ஒரு சுன்னத் எனபதை மறந்து விட வேண்டாம்.

(அல்லாஹு தஆலா – நபியவர்களின் மனைவியர் – நமது அன்னையர் – அனைவரையும் பொருந்திக் கொள்வானாக! அவர்களைக் குறித்த நமது எழுத்துக்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!)



தீய்ந்து போன ரொட்டி!

நான் சிறுவனாக இருந்த போது நடந்தது இது.

எனது அம்மாவும் அப்பாவும் காலை சிற்றுண்டி சாப்பிட மேஜையில் அமர்ந்தார்கள். நான் அருகே விளையாடிக் கொண்டிருந்தேன். காலைச் சிற்றுண்டிக்கு அம்மா ரொட்டியை வாட்டி வைத்திருந்தார். ஆனால் அது தீய்ந்து விட்டது என்று நான் நினைத்தேன். ஏனெனில் தீய்ந்து போன அதன் வாசனையை நான் நுகர்ந்து பார்க்க முடிந்தது.

எனக்கு ஒரு ஆவல். அப்பா என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்திட ஆவல். அம்மாவைத் திட்டப்போகிறாரா அல்லது அப்படியே சாப்பிடப்போகிறாரா என்று அப்பாவைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

ஆனால் அப்பா செய்ததெல்லாம் – அந்த ரொட்டியை எடுத்துக் கொண்டே அம்மாவைப் பார்த்து சிரித்தது தான்! அப்பா அந்த ரொட்டித் துண்டுகளை  ஒவ்வொன்றாக எடுத்து அதில் வெண்ணையையும் பழக்கூழையும் தடவி ரசித்து சாப்பிட்டது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.

அம்மா அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டார். ஆனால் அப்பா அதற்கு சொன்ன பதிலை என்னாளும் நான் மறக்க மாட்டேன்.

“கண்ணே! இந்த ரொட்டி எனது வயிற்றைத் தான் நிரப்பும். ஆனால் நீயோ என் இதயத்தையல்லவா நிரப்பியிருக்கின்றாய்!” என்று சொல்லிக் கொண்டே அம்மாவின் கையைப் பற்றிப்பிடித்தார் என் ஆருயிர் அப்பா.

நானோ – “இந்த உலகிலேயே மிகவும் கொடுத்து வைத்த குழந்தை நான் தான்!” – என்று என் இதயத்தின் ஆழத்தில் உணர்ந்தேன்!

படிப்பினைக்குரிய இன்னொரு கதை இது.




அவர்கள் மட்டும் எப்படிக் குடித்தார்கள்?

எப்படிப்பட்ட கணவனும் மனைவியும் சுவர்க்கம் செல்வார்கள்? எப்படிப்பட்ட கணவனும் மனைவியும் நரகம் செல்வார்கள்?

எழுத்தாளரும் கதை சொல்வதில் வல்லவருமான ஸப்ரினா A. அக்பர் அவர்கள் சொன்ன ஒரு கற்பனைக் கதையைக் கீழே தருகிறோம். நீங்களும் படித்துப் பாருங்கள்:

ஒரு ஊரில் ஒரு தாத்தாவும் பேரனும் இருந்தார்களாம். ஒரு நாள் பேரன் தாத்தாவிடம் கேட்டானாம். ஏன், தாத்தா, ஒரு சிலர் மட்டும் சுவர்க்கம் சென்று விடும்போது மற்ற சிலரால் ஏன் சுவர்க்கம் செல்ல முடியவில்லை?

தாத்தா தனது பேரனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் பேரனின் புத்திக்கூர்மையை வியந்தவராக பேரனுக்குப் பொருத்தமான பதில் ஒன்றை சிந்திக்கத் தொடங்கினார்.

தாத்தா சொன்னார்:

சுவர்க்கத்துக்கு வாசல்கள் உள்ளது போலவே நரகத்துக்கும் வாசல்கள் உண்டு; உனக்கு அது தெரியும் தானே! கொஞ்சம் கற்பனை செய்து பார்; நரகத்தின் கதவு ஒன்றை நாம் திறப்போம். அங்கே என்ன தெரிகிறது? ஒரு பெரிய கூடம் அது;

நடுவிலே ஒரு பெரிய சாப்பாட்டு மேஜை. மேஜையின் நடுவிலே ஒரு பெரிய பாத்திரம். அதில் மூக்கைத் துளைத்தெடுக்கும் வாசனையுடன் ஒரு அருமையான பாயாசம். நாக்கில் எச்சில் ஊற வைக்கும் வாசனை அது. ஆனால் அந்த மேஜையைச் சுற்றியிருந்த அனைவரும் நோயாளிகளைப் போல ஒல்லியாகக் காட்சியளிக்கின்றனர். அவர்கள் பட்டினியால் பல நாட்கள் வாடியிருப்பது தெரிந்தது.

அவர்கள் கைகளில் ஆளுக்கொரு கரண்டியை வைத்திருந்தார்கள். ஆனால் அதன் கைப்பிடிதான் மிக நீளமானதாக இருந்தது. எந்த அளவுக்கு எனில் அந்தக் கரண்டியினால் பாயாசத்தை எடுத்து தம் வாய்க்கு அருகே ஒருவராலும் கொண்டு செல்ல முடியவில்லை!  ஏனெனில் அவர்களின் கைகளை விட அந்தக் கரண்டிகளின் கைப்பிடி மிக நீளமானதாக இருந்தது! அதனால் யாராலும் அந்தப் பாயாசத்தைக் குடிக்க முடியவில்லை!

இப்போது சுவர்க்கத்தின் கதவு ஒன்றை நாம் திறந்து பார்ப்போம். அங்கே என்ன தெரிகிறது? அதே போலவே இங்கேயும் ஒரு பெரிய கூடம்; நடுவிலே ஒரு பெரிய சாப்பாட்டு மேஜை. மேஜையின் நடுவிலே அதே போல ஒரு பெரிய பாத்திரம். அதில் மூக்கைத் துளைத்தெடுக்கும் அதே வாசனையுடன் ஒரு அருமையான பாயாசம். நாக்கில் எச்சில் ஊற வைக்கும் வாசனை தான் இதுவும்.

அதே போல கரண்டியைத் தான் இங்கேயும் ஆளுக்கொன்று வைத்திருந்தார்கள். ஆனால் இங்கே அந்த மேஜையைச் சுற்றியிருந்த அனைவரும் மிக நன்றாக கொழு கொழு என்று வாட்ட சாட்டமாக இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அங்கே சிரித்துக் கொண்டும் பேசிக்கொண்டும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருந்தார்கள்.

சிறுவன் கேட்டான்: எனக்கு இது புரியவில்லையே!

சிம்பிள்! இதற்கு ஒரே ஒரு திறமை மட்டும் தான் வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி விட வேண்டியது தான் அந்த சின்ன டெக்னிக்!

மற்றவர்க்கு உதவும் மனப்பான்மை மிக்கவர்கள், எப்போதும் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.  சுவர்க்கத்தில் நீ பார்த்தது இவர்களைத் தான்!

ஆனால் பேராசை பிடித்தவர்களும், சுயநலம் பிடித்தவர்களும் தங்களைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். மற்றவர் நலன் குறித்து இவர்களுக்கு அக்கரையே கிடையாது. நரகத்தில் நீ பார்த்தது இவர்களைத் தான்!

இது கணவன்-மனைவி உறவுக்கு மிகவும் பொருந்தும்!

குடும்ப வாழ்க்கையில் கணவனும் மனைவியும் வைத்திருப்பது பெரிய கைப்பிடி உள்ள கரண்டிகளைத் தான்! கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் ஊட்டி விடுவதில் தான் இல்லற சுவர்க்கமே அடங்கியுள்ளது. சுயநலம் பிடித்த கணவன் மனைவியர் இல்லற வாழ்வில் பட்டினி கிடந்து மெலிந்து போய் நரக வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருப்பர்.

படிப்பினை பெறுவார்களா இக்கதையிலிருந்து?



சீரியஸான பிரச்னையா? நேரிடையாக எதிர்கொள்க!

ஆங்கிலத்தில் ஒரு சொல்: ASSERTIVENESS

இதனை – “தன் முனைப்பு” என்று மொழிபெயர்த்துள்ளனர். தனது நிலையில் உறுதி காட்டுவதை இது குறிக்கும். தனது தேவைகளுக்காகவும் (needs), உரிமைகளுக்காகவும் (rights)  ஒருவர் உறுதியுடன் நிற்கின்ற நிலை இது.
சிறிய உதாரணத்துடன் இதனை விளக்குவோம்:

நீங்கள் ஒரு வரிசையில் (queue) நிற்கிறீர்கள். மெதுவாக நகர்கிறது அந்த வரிசை. இப்போது உங்கள் முறை. திடீரென்று ஒருவர் உங்களுக்கு முன்னால் குறுக்கே புகுந்து விடுகிறார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒன்று – நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் மென்மையானவர்(?). குறுக்கே புகுந்தவர் தன் காரியத்தை கன கச்சிதமாக முடித்துக் கொண்டு போய் விடுகிறார். இதற்குப் பெயர் மென்மை அல்ல! இது கையாலாகாத் தனம். Passiveness.

அல்லது – நீங்கள், “ஏய், முட்டாள்! என்னாச்சு உனக்கு? நாங்கள்ளாம் வரிசையிலே நிக்கிறது கண்ணுக்குத் தெரியலையா?” என்று கேட்கிறீர்கள். இதுவும் தவறு. அது முரட்டுத் தனம். Aggressiveness.

அப்படியானால் எப்படி நடந்து கொள்வது சிறப்பு என்கிறீர்களா?

நீங்கள் குறுக்கே புகுந்தவரிடம் அவருடைய முகத்தை நோக்கி உறுதியான ஒரு பார்வையுடன், “மன்னிக்கவும்! இப்போது எனது முறை!” என்று கூறுகிறீர்கள். அவ்வளவு தான். அவர் நகர்ந்து விடுகிறார். வார்த்தைகளில் கடுகடுப்பு தேவை இல்லை. குரல் உயர்த்திடத் தேவையில்லை. கொஞ்சம் Seriousness. அவ்வளவு தான்.

இந்த அணுகு முறையைத் தான் assertive communication என்கிறார்கள். அதாவது தன் நிலையை உறுதிப் படுத்திக் கொண்டு பேசிடும் முறை.

இத்தகைய தன் முனைப்பு (assertiveness)  கணவன் மனைவி இருவருக்கும்  தேவை! அதுவும் குறிப்பாக இல்லற வாழ்வில் எழுகின்ற பிரச்னை சற்று சீரியஸாக இருந்து விட்டால் கணவனோ அல்லது மனைவியோ இத்தகைய தன் முனைப்புடன் எழுந்து நின்று பிரச்னையை எதிர்கொண்டிட வேண்டும்.

கணவன், மனைவி, மூன்று குழந்தைகளைக் கொண்டதொரு குடும்பம் அது. கணவன் மது அருந்துகிறான். மனைவியைப் போட்டு அடிக்கிறான்.

குழந்தைகளைக் கன்னா பின்னாவென்று திட்டுகிறான். இது ஒரு தொடர்கதை.

மனைவி என்ன செய்வாள்? இந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது அவள் எங்கேயும் படித்துக் கொள்ளவில்லையே! ஏதோ அவளுக்குத் தெரிந்தவரையில் கணவனைத் திருத்த முயற்சி செய்கிறாள். கணவன் திருந்திடத் தயாராக இல்லை. மனைவி தன் குழந்தைகளுடன் தற்கொலையை நாடுகிறாள். இதுவே இங்கே அன்றாட நடப்பாகி விட்டது.

சில மனைவிமார்கள், கணவன் எப்படியும் போகட்டும் என்று விதியின் மீது பழியைப் போட்டு விட்டு கணவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்கிறாள். இது தான் நாம் முன்பு குறிப்பிட்ட கையாலாகாத் தனம். இங்கே கணவனுக்கு வெற்றி(?). மனைவிக்குத் தோல்வி! (I lose – You win).

ஆனால் இதே போன்ற சூழ்நிலையில் வேறொரு மனைவி எப்படி நடக்கிறாள் பாருங்கள். பொறுமையாகப் பல தடவை சொல்லிப் பார்த்தும் கணவன் திருந்துவதாகக் காணோம்.

ஒரு நாள் கணவன் நிதானமாக இருக்கும் சமயமொன்றைத் தேர்வு செய்து அவன் அருகில் வந்து, “இங்கே பாருங்கள், நான் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு எப்படிப்பட்டது என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் அதற்காக நீங்கள் குடித்து விட்டு வந்து, அந்த போதையில் என்னிடமும்,
குழந்தைகளிடமும் நடந்து கொள்ளும் முறையை இனியும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. குழந்தைகளுக்கு நாம் என்ன எதிர்காலத்தைக் கொடுக்கப் போகிறோம்? எப்படிப்பட்ட குழந்தைகளை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்?

அவர்கள் பெரியவர்கள் ஆனால் அவர்களும் உங்களைப் போன்று ஆகி விடுவதை நான் அனுமதிக்க முடியாது. நீங்கள் குடிப்பதை நிறுத்தவில்லையென்றால், என்னையும் குழந்தைகளையும் திட்டுவதையும் அடிப்பதையும் நிறுத்தவில்லை என்றால் – அடுத்து நான் காவல் துறையைத் தான் அணுகிட வேண்டியிருக்கும் என்றால் அதற்கும் கூட நான் தயங்கிட மாட்டேன்”.

உறுதியாகச் சொல்லி விடுகிறாள் மனைவி. குரலை உயர்த்தி கத்திப் பேசி ஊரைக் கூட்டிடவில்லை! திட்டவில்லை; கணவனை மிரட்டிடவில்லை.

கணவன் மீது தான் வைத்திருக்கும் அன்பையும் வெளிப் படுத்தத் தவறிடவில்லை. இங்கே கணவன் திகைத்துப் போய் விடுகிறான். ஒரு கணம் சிந்திக்கின்றான். மனைவியை உற்றுப் பார்க்கிறான். அவள் முகத்தில் கோபம் தெரியவில்லை. ஆனால் அவள் தன் நிலையில் உறுதியாக இருக்கிறாள் என்பது புரிகிறது. கணவனை அதே நிலையில் விட்டு விட்டு நகர்கிறாள் மனைவி.

அன்று திருந்தியவன் தான் அவன்! அல்ஹம்து லில்லாஹ்! இங்கே இருவரும் வெற்றி பெற்று விடுகிறார்கள் (I win – You also win).

தன் நிலையில் உறுதியுடன் பேச வேண்டிய சமயத்தில் பேச வேண்டிய முறையில் பேசுபவர்கள் – தன்னம்பிக்கை உடையவர்களாகத் திகழ்கிறார்கள். தன் உரிமைகளை யாருக்கும் அவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. மற்றவர்களால் மதிக்கப் படுகின்றார்கள். வாழ்வில் வெற்றியும் பெறுகின்றார்கள்.



ஆமைகள் மட்டுமல்ல! மனிதர்களும் அப்படித்தான்!

இது ஒரு கதை…

சிறுவன் ஒருவன் கடல் ஆமை ஒன்றைக் கண்டானாம். அவன் அதைச் சோதித்துப் பார்க்க ஆசைப்பட்டானாம். ஆனால் அதனை இவன் தொட்டவுடனேயே அந்த ஆமை தன் தலையையும் கால்களையும் தனது ஓட்டுக்குள்ளே  இழுத்துக் கொண்டு விட்டதாம். என்னென்னவோ செய்து பார்த்தும் அந்த ஆமை தன் தலையையோ கால்களையோ வெளியே நீட்டிடவே இல்லை!

உடனே ஒரு குச்சியை எடுத்து வந்து அதனைக் குத்திப் பார்க்கலாம் என்று அதனை மீண்டும் நெருங்கினானாம். அப்போது அவனது மாமா அங்கே வந்தாராம். அவர், “அது அப்படி இல்லையப்பா! நீ அதனைக் குச்சியால் குத்தினாலும், அது செத்துப் போனாலும் போகுமே தவிர, அது தன் தலையையோ, கால்களையோ வெளியில் நீட்டிடவே நீட்டாது!

உடனே மாமா அந்த ஆமையை அப்படியே எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று கதகதப்பாக இருந்த அடுப்படிக்கு அருகில் சென்று அதனை வைத்தாராம். ஒரு சில நிமிடங்களிலேயே அந்த ஆமை, தனது தலையையும் கால்களையும் வெளியே நீட்டி ஊர்ந்து செல்லவும் ஆரம்பித்து விட்டதாம். அதனை ஆச்சரியத்துடன் பார்த்த சிறுவனை நோக்கி மாமா, “ஆமைகள் மட்டுமல்ல! மனிதர்களும் அப்படித்தான்!” என்றாராம்.

மாமா மேலும் சொன்னாராம்: “உன்னைச் சுற்றியிருப்பவர்களை நீ மாற்ற விரும்பினால், உனது இனிய முகத்தைக் கொண்டும், உனது கனிவான இரக்கத்தைக் கொண்டும் அவர்களின் இதயத்தைக் “குளிர வை!” அப்போது அவர்கள் தாங்களாகவே முன் வந்து தங்களை உன்னிடம் ஒப்படைத்து விடுவார்கள்! நீ விரும்பும் மாற்றத்தை அவர்களிடம் மிக இலகுவாகக்  கொண்டு வந்திட முடியும்!”

கணவன்மார்களே! இந்தக் கதையில் உங்களுக்கு நல்லதொரு பாடம் இருக்கின்றது!

தடியெடுத்து ஒரு கனியைக் கனிய வைத்திட முடியாது! அது பழுத்துக் கனிந்திட வேண்டிய சூழலையை உருவாக்கினாலே போதும். தானே அது கனிந்து விடும்!

மனைவியைப் பொறுத்தவரை கனிவான சூழல் என்பது அன்பும், ஆசை வார்த்தைகளும், காதலும், கனிமொழிகளும், இரக்கமும், மன்னித்தலும் தான்!

ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள்! உங்கள் மனைவி தம்மை அப்படியே உங்களிடம் ஒப்படைத்து விடுகிறாரா இல்லையா என்று பாருங்களேன்!

Comments