நூல்: சுன்னத்தான இல்லறம் - பகுதி 5

உணர்ச்சிகளின் பிடியில் கணவனும் மனைவியும்! – பாகம் 1

மனைவி ஒரு பிரச்னை குறித்து அல்லது தனது உணர்வுகள் குறித்து கணவனிடம் பேசிட விருப்பம் தெரிவிக்கின்றார்.

ஆனால் கணவனோ – இதற்கு முன்னர் அவர்களுக்குள் நடைபெற்ற கசப்பான உரையாடல்கள் நினைவுக்கு வர, அமைதி காக்கின்றார். பேசுவதற்கு விருப்பம் இல்லை. அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.


சான்றுக்காக சில கற்பனை உரையாடல்கள்:

வாங்கி வைத்த பேரிச்சம் பழங்களை சாப்பிடுகின்றான் கணவன், அதில் ஒரு விதமான வாடை வருகின்றது.

கணவன் மனைவியிடம்: “பேரிச்சம் பழத்தில் ஒரு விதமான வாடை (smell) வருகின்றது! சாப்பிட்டுப் பாரேன்…

மனைவி: நீங்க வாங்கி வச்சது தானே!

***

கணவன்: சாம்பார் இன்றைக்கு ரொம்ப நல்லா இருக்கு!

மனைவி: ஏன்? நல்லா இல்லாம யாராவது சமைப்பாங்களா?

**

குளியலறையில் கணவன். கதவைத் தட்டுகின்றாள் மனைவி. திறந்ததும்….

மனைவி: ஏங்க, அந்த ஹீட்டர் (heater) ஸ்விட்சை கொஞ்சம் போடுங்களேன். குழந்தையை குளிக்க வைக்கணும்.

கணவன்: கையெல்லாம் ஈரமா இருக்கம்மா… நீயே போட்டுக்கொள்.

மனைவி கைக்கெட்டும் தூரத்தில் தான் அந்த ஸ்விட்ச்.

மனைவி: (ஸ்விட்சைப் போட்டுக் கொண்டே) ஏன், கையைத் துடைத்துக் கொண்டு போட வேண்டியது தானே?

**

இது போல் கணவனின் ஒவ்வொரு சொல்லுக்கும், கேள்விக்கும், வேண்டுகோளுக்கும் – எதிர்மறையான ஏட்டிக்குப் போட்டியான பதில் அளிக்கும் மனைவிமார்களிடத்தில், கணவன்மார்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்?

மிக மிக மவுனமாக அப்படிப்பட்ட சூழ்நிலைகளைத் தவிர்த்துக் கொண்டு ஒதுங்கி விடுகிறார்கள்.

“ஏன் வாயைத் திறக்க வேண்டும்… வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்.. வாயைப் பொத்திக் கொண்டால் நிம்மதி!!”

ஆனால் அது அப்படி அல்ல! ஏன் இப்படி கணவன்மார்கள் ஒதுங்குகிறார்கள்? அவர்கள் சொல்லாமல் சொல்ல வருகின்ற செய்தி இது தான்:

“இவள் திருந்தவே மாட்டாள்!”

இதில் பொதிந்துள்ள இன்னுமொரு கருத்து என்ன?

கணவனாகிய நம் மேல் எந்தத் தப்பும் கிடையாது. திருந்த வேண்டியது எல்லாம் அவள் தான்!  இந்த எண்ணத்தினால் கணவன்  அமைதி வழிப் பின் வாங்கி விடுகின்றான்.

இப்படிப்பட்ட அமைதியை, பேசிட மறுக்கும் நிலையையே ஆங்கிலத்தில் stonewalling  என்று அழைக்கின்றார்கள். “To shutdown emotionally and withdraw into silence!”

தமிழில் இதனை “உதாசீனப்படுத்துதல்” என்று மொழிபெயர்த்தாலும், இதனை இப்படிப் புரிந்து கொள்ளலாம்: ஒருவர் ஒரு சுவருக்கு முன்னால் நின்று எவ்வளவு கத்திப் பேசினாலும், சுவர் அமைதியாகவே இருக்கும். எந்த ஒரு பதிலையும் அந்த சுவரிடம் நாம் எதிர்பாத்திட முடியாது!

அது போலத்தான் கணவனோ, மனைவியோ இப்படிப்பட்ட மயான அமைதி நிலைக்குச் சென்று விடுகின்றார்கள்! இது கணவன் மனைவி இல்லறச் சிக்கல்களுக்குத் தீர்வாகாது!

இந்த “அமைதிப் போராட்ட” வழியை மிக அதிகமாகத் தேர்ந்தெடுப்பவர்கள் கணவன்மார்களே!

அதற்குக் கணவன்மார்கள்சொல்கின்ற காரணங்கள்:

ஒன்று – “அவள் என்னைக் கோபப்படுத்துகிறாள்!

இரண்டு: “நான் என்ன சொன்னாலும் அதனை அவள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை! பின் பேசுவதால் என்ன பயன்?”

மூன்று: “நானே நொந்து போயிருக்கின்றேன்! என்னை அவள் எவ்வளவு அவமதிக்கிறாள்?” அவளுடன் அமர்ந்து பேசினாலே என்னை என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை; என்னைப் பாதுகாத்துக் கொள்ளவே நான்  வாயை மூடிக்கொள்கிறேன்!”

ஆனால் – மனைவி என்ன நினைக்கிறார்?

“இவர் – இந்த அமைதியை எனக்கெதிரான “ஆயுதமாக” பயன்படுத்திட நினைக்கிறார்!”

“இவர் – இந்த அமைதியை எனக்கு வழங்குகின்ற “தண்டனை” என்று நினைக்கிறார்!”

இந்த அமைதி ஏதோ ஒரு சில மணி நேரங்களோ அன்று! சிலருக்கு ஆண்டுக் கணக்கில் கூட இந்த அமைதி வாழ்க்கை தானாம்!

ஆனால் – பிரச்னைகளை ஒரு முடிவுக்குக்கொண்டு வர இந்த அமைதி வழி ஒரு தீர்வே அல்ல என்பதை கணவன்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட உணர்ச்சிச் சிக்கல்களிலிருந்து இருவரும் வெளி வருவது எப்படி?

உணர்ச்சி வயப்பட்டிருக்கும்போது பேசிடக்கூடாது என்பது உண்மையே! எனவே மனைவியிடம் இப்படிச் சொல்லலாம். நான் அரைமணி நேரம் கழித்து உன்னிடம் இது பற்றிப் பேசுகின்றேன்.”

கணவனுக்கும் மனைவிக்கும் பிரச்சனைகள் எழுவது என்பது இல்லற வாழ்வில் தவிர்க்கவே இயலாது! எனவே செய்திட வேண்டியது என்னவெனில் கணவனும் மனைவியும் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளும் திறமைகளைக் (conflict resolution skills) கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.

அவற்றுள், ஒருவர் தனது கருத்தினை பாங்காக எடுத்து வைப்பது எப்படி எனும் – communication skill – கருத்துப் பரிமாற்றத் திறனையும் வளர்த்துக் கொள்வதும் அடங்கும்.




உணர்ச்சிகளின் பிடியில் கணவனும் மனைவியும்! – பாகம் 2

ஒரு கணவனின் மன நிலை இது:

“என் மனைவி என்னைக் கடுமையாக வெறுக்கிறாள்! அதனால் தான் அவள் அடிக்கடி என்னை ஆழமாகப் புண்படுத்தி வேடிக்கை பார்க்கிறாள்! நான் என்ன நினைக்கிறேன் என்பது குறித்தோ, எனது உணர்வுகள் குறித்தோ கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் வேண்டுமென்றே என்னைச் சீண்டிக் கொண்டே இருக்கிறாள்!

அவள் சீண்டுதல்கள் தொடர்கதையாகி விட்டன! கொஞ்சம் கூட கணவன் மனைவி உறவு என்னாகும் என்பது குறித்து அவள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை!”

இப்படிப்பட்ட கடுமையான அச்சமூட்டுகின்ற ஒரு மன நிலையிலேயே பெரும்பாலான நேரம் கழிகின்றது அந்தக் கணவனுக்கு!

இவ்வாறு ஒரு கணவன் (அல்லது மனைவி)  அலைமோதும் உணர்ச்சிகளால் அனுதினமும் அலைக்கழிக்கப்படுகின்ற மன நிலை எப்படிப்பட்டதென்றால் -
கடுமையான வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஒருவன் எவ்வாறு அங்கும் இங்கும் அலை மோதி அலைக்கழிக்கப் படுகின்றானோ அது போலவே இங்கே கணவன் “உணர்ச்சி வெள்ளத்தில்” சிக்கிக் கொண்டு  அலைக்கழிக்கப்படுகின்றார்கள்!

ஒரு முறை பெண்களைப்பார்த்து நபியவர்கள் சொன்னார்கள்: “அறிவிலும் மார்க்கத்திலும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் சிந்தனையை போக்கக்கூடியவர்களாக உங்களை விட  வேறு யாரையும் நான் பார்க்கவில்லை!” (புகாரி)

என்ன செய்வது என்று அவனால் சிந்திக்கக் கூட முடிவதில்லை! தவிப்பான்! துடிப்பான்! நாடித்துடிப்பு அதிகரித்திடும்! என்பது, தொண்ணூறு, ஏன் நூறு வரைக்கும் கூட எகிறி விடும்! இதனையே ஆங்கிலத்தில்  emotional flooding in marriage – என்று அழைக்கிறார்கள்! தமிழில் நாம் இதனை “திருமண வாழ்வில் உணர்ச்சிப் பிரவாகம்” என்று அழைக்கலாம்.

இந்த உணர்ச்சி வெள்ளத்தில் கணவன் மட்டும் தான் சிக்கிக் கொள்கிறான் என்று எண்ண வேண்டாம். ஒரு மனைவியும் கணவனின் சொல் அல்லது செயல்களால் அதே போன்ற மன நிலைக்குத் தள்ளப்படுகின்றாள்.

உணர்ச்சி வெள்ளத்தில் சிக்கியிருக்கின்ற கணவனால் (அல்லது மனைவியால்) தெளிவாக ஒன்றைக் காதில் வாங்கிக் கொள்ள இயலாது. கேட்கப்படுகின்ற கேள்விக்குத் தெளிவான பதிலையும் அளித்திட முடியாது. மனதை ஒருமுகப்படுத்திட முடியாது. அவனால் செய்ய முடிவதெல்லாம், எங்கேயாவது ஓடி விடலாமா என்று தோன்றும்; அல்லது ஒங்கி மனைவியை அடித்து விடலாமா என்று தோன்றும்;

தனித்தனியே போய்ப் படுத்துக் கொள்வார்கள்; ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள். பேசிப் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளலாம் எனில் “யார் முதலில்?” என்ற கேள்வி எழும்.

“என் மேல் என்ன தப்பு?” என்று இருவருமே நினைப்பதனால், “கருத்துப் பரிமாற்றம்” நின்று போய் விடுகிறது.

இத்தனைக்கும், இந்த உணர்ச்சி வெள்ளப் பிரவாகத்துக்கு ஆரம்ப காரணம் ஏதோ பெரிதான ஒன்றாகத்தான் இருந்திட வேண்டும் என்பதில்லை! ஒரு மிகச் சிறிய பிரச்சனை கூட இறுதியில் இருவரையும் சோகத்துக்கு ஆளாக்கி விடும்.

கணவன் மிகவும் நல்லவன் தான். ஆனால் ஒரே ஒரு கெட்ட பழக்கம். சாப்பிட்ட பின்பு, பல் இடுக்கில் சிக்கிக் கொண்ட உணவுத் துகள்களை தனது இடது கை சுண்டு விரலை வாய்க்குள் விட்டு எடுப்பது இவர் வழக்கம். பின்னர் கையைக் கழுவுவதும் இல்லை!

“அய்யய்யே! ச்சீச்சீ! இப்படியா செய்வார்கள்! எனக்கு இது சுத்தமாகப் பிடிக்கவே இல்லை! என்ன மனிதர் நீங்கள்?” – இது மனைவி

ஆனால், கணவனுக்கு இது நீண்ட காலப் பழக்கம் என்பதால், மனைவியின் முகச் சுழிப்பைப் பெரிதாக ஒன்றும் எடுத்துக் கொள்ளவே இல்லை! பழக்கம் தொடர்கிறது! மனைவியின் கண்டனமும் அவ்வப்போது தொடரும்.

ஒரு கட்டத்தில் மனைவி என்ன நினைக்கிறாள்? “நான் இவ்வளவு சொல்லியும் இவர் கேட்கவில்லை என்றால் என்ன பொருள்? எனது உணர்வுகளை இவர் மதிப்பதே இல்லை!” என்பது தான்!

இது தான் உணர்ச்சி வலையில் மனைவி சிக்குவதன் துவக்கம்!

தொடர்வது என்ன?

அதே மனைவிக்கு ஒரு கெட்ட பழக்கம். இது சமையலறை சம்பந்தப்பட்டது. காய்கறி நறுக்குவாள் மனைவி; ஆனால் சரியாக அவைகளைக் கழுவுவதில்லை! பாத்திரம் கழுவும் தொட்டி அருகே வைத்து காய்கறிகளை நறுக்குவாள். அப்படியே சமையல் பாத்திரத்துக்கு மாற்றி விடுவாள்.

“அய்யய்யே! இப்படியா செய்வார்கள்! காய்கறிகளைச் சுத்தம் செய்வதன் அவசியத்தை தொலைக்காட்சியில் நீ பார்க்கவில்லையா?  இனி மேல் இப்படி செய்யாதே!”

ஆனால், “எங்கள் வீட்டில் நாங்கள் எல்லாம் இப்படித்தான் சமைக்கிறோம்; யாருக்கும் ஒன்றும் ஆனது கிடையாது! சும்மா கிடங்க!” – இது மனைவி!

மனைவி மனதுக்குள் என்ன நினைக்கிறார்? “ஆமாம்! நான் எத்தனை தடவை இவரிடம் சொல்லியும், இவரது கெட்ட பழக்கத்தை இவர் மாத்திக்கிட்டாரா? வந்து விட்டார் நம்மிடம் குறை கண்டுபிடிக்க!”

கணவன் என்ன நினைக்கிறான்: “இவளைத் திருத்தவே முடியாது! என்னை இவள் என்றைக்கு மதித்திருக்கிறாள்! இன்றைக்கு மதிக்க!”

ஆனால் இது இத்துடன் நிற்பதில்லை! அது தான் வேதனை.

இது போன்ற சிறு குற்றச்சாட்டுகள் குறித்து இருவருக்கும் பேச்சு துவங்கும்.

ஆனால் ஒவ்வொரு முறையும் அது பெரிய “சண்டையாகவே” முடியும்!

சமாதானம் செய்திடும் முயற்சியில் யாரேனும் இறங்கினால், யாரேனும் பேச்சைத் திசை திருப்பி வேறு விஷயங்களுக்குச் சென்றால் கூட அதனையும் “நல்ல எண்ணத்துடன்” பார்த்திட மாட்டார் துணைவர்!

“ஏம்மா! இதனைப்பாரு!” என்று என்பான் கணவன்.

“ஏன்? என் கண்ணு என்ன பொட்டையா?” என்பாள் மனைவி!

“சாப்பாடு இன்னைக்கி சூப்பர்! ரொம்ப நல்லா இருந்தது!” என்பான் கணவன்.

“யாராவது நல்லா இல்லாம சமைப்பாங்களா?” என்பாள் மனைவி!

சரி, இதையெலாம் பார்த்தால் சரிவராது, பேசித் தீர்த்துக்கொள்வோம் பிரச்சனையை  என்று கணவன் முன் வந்து, “இதோ பார், இப்படியே போனால் சரி வராது; பேசி ஒரு முடிவுக்கு வருவோம்”, என்பார்.

“ஏன், இன்னொரு தடவை சண்டை போடவா?” என்பாள் மனைவி!

இது இப்படியே தொடர்ந்தால் …..

இதற்கு அடுத்த கட்டம் தான் நாம் முன்னர் விளக்கிய “அமைதியாகப் பின் வாங்கிடும்” வழிமுறை! அதாவது  “Stonewalling!




உணர்ச்சிகளின் பிடியில் கணவனும் மனைவியும்! – பாகம் 3

நாம் முன்பு குறிப்பிட்டது போல ஆண்களே அதிகமாக “அமைதி வழி பின்வாங்குதலை” (stonewalling) நாடுகிறார்கள்!

அது போலவே பெண்களே அதிமாக கணவன்மார்களைக் கடுமையான சொற்களால் வசை பாடுகிறார்கள். (harsh cricism)

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு உபதேசம் செய்திடும்போது இவ்வாறு கூறினார்கள்: ‘பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது’ என்று கூறினார்கள். அது ஏன் என்று அப்பெண்கள் கேட்டதற்கு, அதற்கான காரணங்களில் ஒன்றாக பெண்கள் அதிகமாகச் சாபமிடுவதைக் குறிப்பிட்டார்கள் நபியவர்கள். (புகாரி)   .

பெண்களின் கடுமையான விமர்சனம் எப்படி இருக்கும் எனில் தவறு எதுவோ அதனை விமர்சிப்பதற்கு பதிலாக தவறு செய்த கணவனை நோக்கியே விமரிசனம் அமைந்திருக்கும்.

“இப்படி தாமதமாக வருவது தப்பில்லையா?” என்பதற்கும்

நீங்க என்னைக்கு நேரத்துக்கு வந்திருக்கீங்க? என்பதற்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள்.

நபிமொழியைக் கவனியுங்கள்:

அந்தப்பெண்களின் ஒருத்திக்கு காலம் முழுக்க உபகாரம் செய்து, பின்பு உங்களில் ஒரு தவறை அவள் கண்டுகொண்டால், நான் உன்னிடத்தில் எந்த நலவையும் கண்டதில்லை என்று கூறிவிடுவாள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

இப்போது மனைவியின் கடுமையான விமர்சனம் அதனைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படுத்தும் படுபாதகமான பின் விளைவுகளை சற்று ஆழமாக கவனியுங்கள்:

கணவன் ஏதோ தவறு செய்து விடுகிறான். (சிறிய விஷயம் தான்! பல் இடுக்கில் உள்ள உணவை சுண்டு விரலை விட்டு எடுக்கும் கெட்ட பழக்கம் தான்!)

மனைவி கடுமையாகத் திட்டுகிறாள்! (ஏங்க! உங்களுக்கும் சுத்தத்துக்கும் சம்பந்தமே கிடையாதுங்க!)

பயங்கரமான கோபம் கணவனுக்கு! (“ஏன்? என் தம்பி மனைவி அருகில் இருக்கும்போது தான் என்னை இப்படி திட்டுவியா?).

கணவன் இப்போது உணர்ச்சிப் பிரவாகத்தில்!

“ஆமாம், அவங்க நாம பேசுறத எல்லாம் காதில வாங்கிக்கிட்டுத் தான் உட்கார்ந்து இருக்கிறாங்களாக்கும்!”

இவளிடம் இனியும் பேசினால் இன்னும் என்னென்ன பதில்கள் எல்லாம் அவள் வாயிலிருந்து வருமோ என்று அஞ்சியவனாக “அமைதி வழி” ஒதுங்க ஆரம்பிக்கிறான்!

இது தான் stonewalling!

கணவன் தன்னை அலட்சியம் செய்து விட்டு ஒதுங்குவது மனைவியை இன்னும் கோபப்படுத்துகிறது! அவள் குரலை இன்னும் உயர்த்திப் பேசுகிறாள்!

“ஏன், ஓடி ஒளியறீங்க?”

கணவனிடம் பதில் இல்லை! சுவர் போல!

தனக்கு பதில் ஏதும் சொல்லாமல் சுவர் போல் நிற்கும் கணவன் இந்த அமைதி மூலம் தன்னை அவமானப் படுத்துவதாகவும் தன்னை தன் கணவன் தண்டிப்பதாகவும் எண்ணுகிறாள். அவளது உணர்வுகளை சற்றும் மதிக்காத கணவன் மீது கோப உணர்ச்சி கொப்பளிக்கிறது! குரலை உயர்த்தி மேலும் திட்டுகிறாள் கணவனை!

இப்போது மனைவி “உணர்ச்சிப் பிரவாகத்தில்!”

இங்கே ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது பொதுவாகவே பெண்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதில் ஆண்களை விட மிகச் சிறப்பானவர்கள். அது போலவே அந்த உணர்ச்சிகளுக்கு சொல் வடிவம் தந்து விலாவாரியாக வர்ணிப்பதிலும் பெண்கள் கெட்டிக்காரர்கள்.

ஆனால் பரிதாபம்! ஆண்களின் நிலை இதற்கு நேர் மாறானது! அவர்களால் உணர்ச்சிகளைச் சரிவர புரிந்து கொள்ளவே முடியாது!  அது போல உணர்ச்சிகளை அவர்களால் விவரித்துச் சொல்லிடவும் முடியாது!

இதனால் தான் – மனைவி கணவனிடம் பேச்சைத் தொடர்கிறார் (she wants to engage!) . ஆனால் கணவன் பேச்சைத் தொடங்க பயப்படுகிறார்! பின் வாங்கி விடுகிறார்1 (he wants to withdraw!).

கணவன் பின் வாங்குவதற்கு “பழி” வாங்கிட மனைவி மேலும் அவமானப் படுத்தும் சொற்களைப் பயன்படுத்தி திட்டுகிறார்!

கணவனோ தன்னை “ஒரு பாவமும் அறியாத சூழ்நிலைக் கைதி” (innocent victim!) என்று தன்னை நினைத்துக் கொள்கிறார்!

நாம் முன்பு குறிப்பிட்டது போல “உணர்ச்சிப்பிரவாகம்” நாடித்துடிப்பை அதிகரிக்கச் செய்து விடும்! ஆனால் அமைதியாக பின் வாங்கிடும்போது நாடித்துடிப்பு நார்மலாகி விடுமாம்! இது கணவனுக்கு சற்றே ஆறுதல் தான்!

ஆனால் – கணவனின் இந்தப் பின் வாங்கலால் -  இப்போது மனைவி உணர்ச்சிப் பிரவாகத்தில்!

இப்படி மாறி மாறி கணவனும் மனைவியும் உணர்ச்சிப் பிரவாகம் எனும் சக்கரத்தைச் சுற்றிக் கொண்டிருந்தால் இல்லற வாழ்க்கை அறுபட்டுப் போய்விடும் என்பதே ஆய்வுகளின் தீர்க்கமான முடிவாக உள்ளது!

இதிலிருந்து கணவன் மனைவியரைக் காத்திட என்ன வழி?

கணவனுக்கு தனி அறிவுரை! மனைவிக்குத் தனி அறிவுரை!

அது என்ன? தொடர்வோம் அடுத்த பகுதியில் இன்ஷா அல்லாஹ்!




உணர்ச்சிகளின் பிடியில் கணவனும் மனைவியும்! – பாகம் 4

உணர்ச்சிப் பிரவாகமான சூழ்நிலைகளை கணவனும் மனைவியும் எவ்வாறு எதிர்கொள்வது?

அறிவுரை முதலில் கணவன்மார்களுக்கு -

பொதுவாகவே பெண்கள் “உணர்வுகளுக்கு” அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை கணவன்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

எனவே, மனைவி ஒரு பிரச்னையை உங்களிடம் கொண்டு வந்தால் – அந்தப் பிரச்னைக்குப் பின்னணியில் உள்ள அவளின் உணர்வை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் முதலில் குறிப்பிட்டது போல் பிரச்னை மிக அற்பமானது என்று கணவன் நினைக்கலாம். ஆனால் அது மனைவியை உறுத்துகிறது எனில், ஒன்று – மனைவியின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் மனைவியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி விட வேண்டியது தானே! பல்லிடுக்கின் உணவை விரல்களை விட்டு நீக்கும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் தானே! “என் கணவர் என் பேச்சுக்கு (உணர்வுக்கு) மதிப்பளித்து விட்டாரே!” – என்று மனம் குளிர்ந்து போய் விடுவார் அவர்!

ஆனால் உங்கள் மனைவியின் கோரிக்கையில் நியாயம் இல்லை எனில் – அமைதியான சூழல் ஒன்றில் வைத்து மனைவியிடம் உங்கள் நிலையை எடுத்துச் சொல்லலாம். உணர்ச்சிவசப்பட்ட சூழலில் விவாதங்கள் எடுபடாது என்பதால் சற்றே ஒத்திப்போட்டு பின்னர் பேச்சைத் தொடங்குவது நல்லது!

மிக முக்கியமாக கணவன் இங்கே புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் – மனைவி தன் உணர்வுகளை வெளிப்படுத்திப் பேசத்தொடங்கினால் – அவசரப்பட்டு – ஒரு தீர்வை (solution) வழங்கி விடக்கூடாது! அப்படி மனைவியின் பேச்சை இடைமறித்து ஒரு முடிவை முன்வைப்பதை மனைவி எப்படி எடுத்துக் கொள்கிறார் எனில், “நம்மை இவர் பேசவே விட மாட்டேன் என்கிறாரே! முழுமையாக காதில் வாங்கினால் என்ன குறைந்தா போய்விடும்?”

ஆனால் அமைதியாக முகம் பார்த்து காது தாழ்த்திக் கணவன் கேட்கும்போது மனைவி என்ன நினைக்கிறார்: “இவர் என்னைப் புரிந்து கொள்கிறார்! என் உணர்வுகளை மதித்து நான் சொல்ல வருகின்ற அனைத்தையும் பொறுமையாகக் கேட்கின்றார்! என் நிலைமையில் தன்னை வைத்து என் கண்ணோட்டத்தில் இருந்து பிரச்சனையைப் பார்க்கிறார்! அது போதும் எனக்கு!”

இதில் வேடிக்கை என்னவென்றால் – தாங்கள் சொல்வதை முழு மனதுடன் தங்களின் கணவன்மார்கள் காதில் வாங்கிக் கொண்டாலே போதும் என்று நினைக்கிறார்கள் மனைவிமார்கள்!  கணவன்மார்கள் தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அது அவர்களுக்கு உறுத்துவதில்லை!

“என் கணவன் என்னை மதிக்கிறாரா? நான் சொல்ல வருவதைப் புரிந்து கொள்கிறாரா? – இதுவே அவர்களுக்கு மிக முக்கியம்!

மனைவிக்கு என்ன அறிவுரை?

கணவனின் எந்த செயல் உங்களுக்குப் பிடிக்கவில்லையோ, உங்களுக்கு எது உறுத்தலாக இருக்கிறதோ – அந்த செயலை மட்டுமே விமர்சியுங்கள்!

கணவனின் அந்தச் செயலால் நீங்கள் எப்படி பாதிக்கப்படுகிறீர்கள் என்பதை உணர்த்திடுங்கள்! ஆனால் – அதனை விமர்சிக்கும்போது அந்தச் செயலைச் செய்திட்ட உங்கள் கணவனை விமர்சித்திட வேண்டாம்! அது உங்கள் கணவனை அவமானத்துக்கு உள்ளாக்குகிறது!

சுற்றுலா ஒன்றுக்குத் திட்டமிடுகிறார் கணவர். மனைவி எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக பயணம் மேற்கொள்ள இயலாமல் போய் விடுகிறது!

ஊர் முழுவதும் ஒரே அரசியல் போராட்டம். வாகனங்களின் மீது கல்லெறிகின்றார்கள்! ஒரு பயணி இறந்தும் போய் விடுகின்றார். பலருக்குக் காயம். பேருந்துகள் எரிக்கப்படுகின்றன! ஒரு பதற்றமான சூழ்நிலையில் வேண்டாமே ஒரு சுற்றுலா என்று கணவன் தன் முடிவை மாற்றிக் கொண்டு விடுகிறார்!.

அவ்வளவு தான்! மனைவிக்கு வந்ததே கோபம்.

“போடுகின்ற எந்த திட்டத்தையாவது நீங்கள் உருப்படியாகச் செய்து முடித்ததுண்டா? எத்தனை தடவை இது போல ஏற்பாடு செய்து பின்பு அதனை கேன்ஸல் செய்திருக்கிறீர்கள்! உங்களை நம்பி நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தேனே! எனக்கு வேண்டும்! – என்று பேசுவதற்கு பதிலாக,

“ஏங்க! பிள்ளைகள் எல்லாம் ஆசையாக ரெடியாகி விட்டார்கள்; நானும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்; ஊரில் போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும்; மற்றவர்கள் எல்லாம் போய்க் கொண்டு தானே இருக்கிறார்கள்! இப்படி திடீரென்று நீங்கள் வேண்டாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்வது எனக்குச் சரியாகப் படவே இல்லைங்க! உங்கள் முடிவை மாற்றிக் கொண்டு நீங்கள் புறப்பட்டால் எனக்கும் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி தானே!”  – என்று பேசிடலாம் அல்லவா?

எனவே தான் சொல்கிறார்கள் – செயலை விமர்சியுங்கள்! செய்தவரை விமர்சிக்க வேண்டாம்! அது உறவுகளைக் கெடுத்து விடும்!

சுருக்கமாகச் சொல்வதென்றால் – உணர்ச்சிகரமான சூழ்நிலை கணவன் மனைவியருக்குள் ஏற்படும்போது

1. இருவருமே அமைதி காத்தல் அவசியம் (calm down)

2. ஒருவர் மற்றவரின் கண்ணோட்டதிலிருந்து பிரச்சனையைப் பார்த்திட முன் வர வேண்டும். (empathy)

3. ஒருவர் மற்றவரின் கருத்துக்களை காது தாழ்த்திக் கேட்டிட வேண்டும். குறுக்கீடுகள் கூடாது! (மனைவிமார்கள் சற்று சுருக்கமாகப் பேசிட கற்றுக்கொள்தல் அவசியம்) (active listening)

4. நமக்குப் பழகி விட்ட எந்த ஒரு “பழக்கமும்” ஒரே நாளில் மாறி விடாது. பயிற்சி தேவை (practice)! அதற்குப் பொறுமை தேவை! பொறுமையுடன் பயிற்சி செய்து அதன்படி நம் செயல்பாடுகளை நாம் மாற்றிக் கொண்டால் இல்லறம் பாதுகாக்கப்படும் – அது முறிக்கப்படுவதிலிருந்து!



உங்கள் மனைவியின் நிலையில் நீங்கள் இருந்தால்…?

ஆங்கிலத்தில் Empathy என்று ஒரு அருமையான சொல்.

Empathy என்றால் என்ன?

To be empathic is having the ability to identify with and understand another person’s situation, feelings, attitudes, or motives.

ஒருவர் – மற்ற இன்னொருவரின் நிலையிலிருந்து கொண்டு அவருடைய சூழ்நிலைகளையும், உணர்வுகளையும், மனோபாவத்தையும், எண்ணங்களையும் புரிந்து கொள்ளும் தன்மைக்கு empathy என்று பெயர்.
இந்தத் தன்மையை மிக அழகாக விளக்குகிறது ஒரு கதை.

இதோ அந்தக் கதை!

அது ஒரு குளிர்காலம். அது ஒரு சிறிய நகரம். அங்கே ஒரு சமூக நல மையம். அங்கே சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்! அந்நகரத்தில் வீடில்லாதோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும், அதற்கு தாங்கள் என்ன செய்திடலாம் என்பது குறித்தும் தான் பேச்சு!

பல்வேறு கருத்துக்களை முன் வைத்து கவலையுடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென்று கதவைத் திறந்து கொண்டு ஒரு வயதான மூதாட்டி உள்ளே நுழைந்தார். வளைந்து விட்ட முதுகு. முகத்தில் களைப்பு. கந்தல் துணிகளே அவருடைய ஆடைகள்.

சேவை மையத்தின் தலைவி வியப்புடன் கேட்டார்: “என்ன உதவி வேண்டும் உங்களுக்கு?”

“முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் – இவ்வாறு அனுமதி இன்றி உள்ளே நுழைந்து உங்களுக்குச் சிரமம் தந்ததற்காக! இங்கே மிக அருகில் உள்ள இராணுவ மையம் எங்கிருக்கின்றது என்று உங்களால் சொல்ல முடியுமா? எனக்கு அங்கே போய் ஒரு ஜோடி காலணிகள் கிடைக்குமா என்று பார்த்திட வேண்டும்?”

அந்த மையத்தின் தலைவி முதலிலேயே பார்த்து விட்டார் – அந்த மூதாட்டியின் பாத அணிகள் இரண்டிலும் நிறைய ஓட்டைகள்! எந்த நேரத்திலும் அவை பிய்ந்து விடும் நிலையில்.

“உங்கள் அளவு என்னம்மா?” – கேட்டார் அந்தத் தலைவி.

“எட்டரை அம்மா!’ என்றார் மூதாட்டி.

உடனே அந்தத் தலைவி கீழே குனிந்து தனது காலணிகளைக் கழற்றி அவர் கையில் கொடுத்து, “இது உங்களுக்கு சரியாக இருக்கிறதா, பாருங்கள்”, என்றார்.

“இதனை நான் எப்படி அணிந்திட முடியும்? இது விலை உயர்ந்த புத்தம் புதிதான காலணியாக அல்லவா இருக்கிறது!” என்றார் மூதாட்டி.

தலைவி, “பரவாயில்லை, போட்டுப் பாருங்கள்!” என்றார்.

அந்த மூதாட்டி அந்த புத்தம் புதிய காலணிகளை அணிந்து பார்க்கிறார். “என்ன ஒரு மிருதுவாக கதகதப்பாக இது இருக்கின்றது!” என்று வியக்கிறார். லேசான ஒரு புன்சிரிப்பு அவர் முகத்தில்.

தலைவி அம்மூதாட்டியின் கரம் பிடித்துச் சொன்னார்: “இவை உங்களுக்குத் தான்! எனக்கு வீட்டில் இன்னொன்று இருக்கின்றது!”

அந்த ஏழை மூதாட்டி நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து  புறப்பட்டார். “இறைவன் உங்களை வாழ்த்துவானாக!” என்று கூறியவராக.

அம்மூதாட்டி சென்றதும் அங்கே ஒரு பெரிய அமைதி! யாரும் வாய் திறக்கவே இல்லை! அனைவரும் நெகிழ்ந்து போய் விட்டனர்! ஒருவர் மட்டும் கேட்டார்:

“மேடம், ஆனால் நீங்கள் எப்படி வீட்டுக்குச் செல்வீர்கள்?” பனி கொட்டிக் கொண்டிருக்கின்றது; காலணிகள் இல்லாமல் எப்படி நீங்கள் செல்வீர்கள்?”

கருணை உள்ளம் படைத்த அந்தத் தலைவி சொன்னார்: “எனது காலுறைகள் சற்று கனமானவை தான்! பரவாயில்லை! மேலும் எனக்கு இங்கே ஒரு ஜோடி காலணியும் இருக்கத் தானே செய்கிறது!”

அந்த வயதான மூதாட்டி விட்டுச் சென்ற கந்தலான காலணியை அணிந்தவராக புறப்பட்டார் அவர் வீட்டுக்கு!

“மேடம், ஜாக்கிரதை! காலணிகள் ஓட்டையாக இருக்கின்றன! பனிப்பொழியும் பாதையில் எச்சரிக்கையுடன் செல்லுங்கள்! – என்றார் இன்னொருவர்.

புன்சிரிப்புடன் பதில் சொன்னார் அந்தத் தலைவி: “ஆமாம்! நான் பார்த்துக்கொள்கிறேன்; வயதான ஏழை மூதாட்டி ஒருவர் = ஓட்டைக் காலணிகளை அணிந்து கொண்டு எப்படித் தான் நடப்பார் என்பதை நான் அனுபவித்துப் பார்த்திட முடியும் அல்லவா?

ஆம்! இது தான் இரக்கமுள்ள இதயம்!

இந்தக் கதை கணவன் மனைவியருக்கு மிக அற்புதமான ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது.

இல்லறத்தில் பிரச்னை! கணவனும் மனைவியும் ஆலோசனை கேட்க வருகின்றனர். அங்கே கணவனும் மனைவியும் ஆலோசகரிடம் என்ன சொல்வார்கள் தெரியுமா?

கணவன் என்ன சொல்வார்?

தனக்கும் தன் மனைவிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை அடுக்குவார்; தன் மீது தவறே இல்லை என்று அடித்துப் பேசுவார். மனைவி செய்கின்ற தவறுகளைப் பட்டியல் போடுவார். பேசுவார், பேசுவார், அடுக்கிக் கொண்டே போவார் மனைவியின் குறைகளை!

பதிலுக்கு மனைவி என்ன சொல்வார்?

கணவனுக்கு சற்றும் தான் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்திடும் வண்ணம் அவரும் அடுக்குவார் – கணவனின் குறைகளை!

ஆலோசகர் (counselor) கேட்பார்: “உங்கள் மனைவியின் நிலையில் நீங்கள் இருப்பதாக எண்ணிக் கோண்டு – உங்கள் மனைவியைப் பற்றிப் பேசுங்கள்” என்றாலோ… அல்லது “உங்கள் கணவனின் நிலையில் உங்களை வைத்துக்கொண்டு உங்கள் கணவரைப் பற்றிப் பேசுங்கள்” என்றாலோ…. பதில் சொல்வதற்குத் தடுமாறுகிறார்களாம். இருவருமே அமைதியாகி விடுகிறார்களாம்!

அங்கே பேசுவதற்கு ஒன்றும் இருப்பதில்லை! ஏனெனில் ஒருவர் மற்றவரின் மன நிலையில் இருந்து கொண்டு பிரச்சனைகளைப் பார்த்திடும் போது – அவைகளெல்லாம் பிரச்சனைகளே இல்லை என்றாகி விடுகின்றன!

எனவே தான் சொல்கிறோம். கணவன் மனைவியருக்குள் பிரச்சனைகள் தோன்றினால் – உடனே உங்கள் துணைவரின் நிலையில் உங்களை வைத்து சிந்தியுங்கள். உங்கள் கண்ணோட்டம் முழுவதும் மாறிப்போய் விடும்!

இரக்க உணர்வு மேலிடும்! குறைகளைப் பொறுத்துக் கொள்வீர்கள்! மன்னிக்கத்தொடங்கி விடுவீர்கள்! அன்பும் நேசமும் மேலோங்கும்!

அங்கே இருவரும் சேர்ந்தே பிரச்சனையைத் தீர்ப்பது எப்படி என்று பேசத் தொடங்குவார்கள். கருத்துக்கள் அங்கே தாராளமாக பரிமாறப்படும்!

ஒருவர் மற்றவரின் மன நிலையிலிருந்து கொண்டு பிரச்சனைகளைப் பார்த்திடும்போது கருணை தானாகவே சுரக்கும் – அந்த சமூக மையத்தின் தலைவியைப் போல!

இத்தகைய கருணை உள்ளம் கணவன் மனைவி இருவருக்கும் வேண்டும்!

“கருணை உணர்வு எதனையும் அழகாக்கி விடும்!” (முஸ்லிம்)

ஆம்! கருணை உணர்வு திருமண உறவையும் அழகாக்கிவிடும்! தேவை – Empathy மட்டுமே!

Comments