நூல்: சுன்னத்தான இல்லறம் - பகுதி 6

நீங்கள் இன்னும் சின்னஞ்சிறுசுகள் அல்ல!

பெற்றோர்கள் பிள்ளைகளின் வாழ்வில் தலையிடலாமா?  - பாகம் 1


இஸ்லாமிய அறிஞர் ஒருவரிடம் பின் வருமாறு ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது:


கணவனின் பெற்றோர்களும், மனைவியின் பெற்றோர்களும் எந்த அளவுக்கு தங்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாம்?

ஒளிவு மறைவின்றி அந்த அறிஞரிடமிருந்து வந்த பதில் இதோ:

தலையிடுதல் கூடவே கூடாது! தங்களுடைய பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடுவதற்கு இரு பெற்றோர்களுக்கும் எந்த ஒரு உரிமையும் கிடையாது! ஒரு திருமணத்தை நாசம் செய்வதற்கு இதனை விட வேறொன்றும் கிடையாது!

பெற்றோர்கள் தங்கள் திருமண வாழ்வில் (மட்டும்) கவனம் செலுத்தட்டும். உங்களுடைய “குழந்தைகளுக்கு” நீங்கள்  திருமணம் செய்து வைத்து விட்டால் – அவர்கள் இன்னும் “சின்னஞ்சிறுசுகள்” அல்ல! அவர்களை அவர்கள் வழிக்கு விட்டு விடுங்கள்! அவர்களுடைய “திருமண மாளிகையை” அவர்களே கட்டி எழுப்பிக் கொள்ளட்டும்! அவர்களும்  வயதுக்கு வந்து விட்ட பெரியவர்கள் (adults) தான்! அதனால் தானே நீங்கள் அவர்களுக்குத் திருமணமே செய்து வைத்தீர்கள்?

இங்கே நம் சமூகத்தில் உள்ள பெற்றோர்களுக்கு (குறிப்பாக அம்மாக்களுக்கு) ஒரு பெரிய “சங்கடம்” என்னவென்றால் – தங்களின் மகனுக்குத் திருமணம் ஆகி ஒரு மருமகள் வீட்டுக்கு வந்து விட்டால் – தான் “அவசியமற்ற ஒரு பிறவியாக” ஆகி விட்டது போல் அஞ்சுகிறார்கள்! இந்த அச்சத்தினால் -  “தன் மகனிடமிருந்து தன்னைப் பிரிக்க வந்திட்ட எதிரியாக” தனது மருமகளைப் பார்க்கிறார்கள்.

மகனை உங்கள் பக்கம் வைத்துக் கொள்வதற்காக – நீங்கள் உங்கள் மருமகளையே ஒரு எதிரியாக்கி அதில் வெற்றி பெற்றாலும் நீங்கள் தோற்று விட்டீர்கள்! அதில் நீங்கள் தோற்று விட்டாலும் உங்களுக்குத் தோல்வி தான்! என்னவாயினும் தோல்வி உங்களுக்குத்தான்!

எனவே “அவர்களை அவர்கள் வழியே விட்டு விடுங்கள்! அவர்கள் திருமண வாழ்வில் குறுக்கிடாதீர்கள்! ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் மகனையும் மருமகளையும் போய்ப் பார்த்து வாருங்கள்! வருடத்துக்கு ஒரு முறை என்றால் அது இன்னும் நல்லது! (என்ன விழிக்கிறீர்கள்?)

தொலைபேசியில் பேசினால் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசாதீர்கள்! கம்ப்யூட்டர் உரையாடல்களை எல்லாம் குறைத்துக் கொள்ளுங்கள். மகளிடம் பேசினால், “சந்தோஷமாக இருக்கிறாயா?” என்று மட்டும் கேட்கவே செய்யாதீர்கள். “அவர் இன்னின்ன விஷயம் குறித்து என்னென்ன சொன்னார்?” என்றெல்லாம் துறுவிக் கொண்டிருக்காதீர்கள்.

இளம் மனைவியரே! உங்கள் அம்மாக்கள் இப்படி எதையாவது உங்களிடம் கேட்டால் – “சாரிம்மா! அவர் சொல்வதை எல்லாம் உன்னிடம் சொல்ல முடியாதம்மா!” என்று அழகாக மறுத்து விடுங்கள்! திருமணம் ஆன பின்னர், கணவனுக்கே முன்னுரிமையும் முதல் உரிமையும்! இப்படிச் சொல்வதால் உங்கள் பெற்றோர்களை உதாசீனப்படுத்துங்கள் என்று  சொல்வதாக ஆகாது!
இளம் தம்பதியர்களுக்கு மேலும் நாம் சொல்வது:

உங்கள் பெற்றோர்கள் உங்கள் திருமண வாழ்வில் தேவையின்றி குறுக்கிட்டால் அதனை விவேகமான முறையில் தவிர்த்து விடுங்கள்! உங்கள் திருமண வாழ்வின் சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கெல்லாம், உங்கள் பெற்றோர்களிடம் ஓடிக் கொண்டிருக்காதீர்கள்!

உங்களுக்குத் திருமணம் செய்வதற்குத் தகுதி வந்து விட்டதென்றால், உங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் உங்களுக்குத் தகுதி இருக்கின்றது! உங்கள் பிரச்னைகளை உங்களால் தீர்த்துக் கொள்ள முடியாது என்றால், பின்னர் ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்? (அதாவது நீங்கள் இன்னும் திருமணத்துக்குத் தயாராகவில்லை என்பதே அதன் பொருள்).

நாம் மேலே எழுதியிருப்பவை அனைத்தும் அந்த இஸ்லாமிய அறிஞரின் கருத்துக்களே!

(இக்கட்டுரை ஆசிரியரான எமக்கு இதில் முழு உடன்பாடு என்பதாலேயே தமிழில் மொழி பெயர்த்து இங்கே தந்திருக்கின்றோம்).

இந்தக் கருத்துக்களை என் உறவினர் வீட்டுப்பெண்மணி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கேட்டார்:

அப்படியானால் பிள்ளைகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டு எங்களைச் செத்துப் போகச் சொல்கிறீர்களா?

காலா காலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்ற “கலாச்சார” வாழ்வு தரும் “சுகத்தை” அனுபவித்துக் கொண்டு அடுத்த தலைமுறையையும் அதன் அடிப்படையிலேயே வார்த்தெடுக்க விரும்பும் இத்தகைய பெற்றோர்கள் இஸ்லாம் காட்டித் தரும் வழிகாட்டுதல்களை முற்றிலும் புறக்கணித்து விடுகிறார்கள்!

பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்த பிறகு பெற்றோர்கள் பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்; பிள்ளைகள் பெற்றோர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்; இதில் கணவன்-மனைவி உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப் பட வேண்டும் – என்பதெல்லாம் இஸ்லாத்தின் அடிப்படையில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

இன்ஷா அல்லாஹ் விவாதிப்போம் – அழகிய முறையில்!



ஏன் இப்படி விளையாடுகிறார்கள் – பெற்றோர்களும் சகோதரிகளும்?

பெற்றோர்கள் பிள்ளைகளின் வாழ்வில் தலையிடலாமா?  - பாகம் 2

புதிதாகத் திருமணம் முடித்த கணவன் மனைவியருக்கு இரு தரப்புப் பெற்றோர்களும் தாங்கள் பெற்ற அனுபவங்களிலிருந்து நேர்மையான நல்ல அறிவுரைகளை வழங்கி வழிகாட்டுதல் நல்லதே! நன்மையே!

ஆனால் இங்கே பெரும்பாலான பெற்றோர்களின் நிலை வேறு விதமாகவே இருக்கின்றது! அளவுக்கு அதிகமான குறுக்கீடுகளையும், (interference), உள் நோக்கத்துடன் கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களையுமே இங்கே நாம் காண முடிகின்றது!

பெற்றோர்களின் இப்படிப்பட்ட தேவையற்ற குறுக்கீடுகள் – திருமண வாழ்வையே இறுக்கமானதாக (stressful) ஆக்கி விடுகின்றன! கணவன் மனைவி புரிந்துணர்வையே சிதைத்து விடுகின்றன!

இதனை எல்லோருக்கும் முன்னதாக கணவனும் மனைவி இருவருமே புரிந்து கொள்தல் அவசியம்.

கணவனும் மனைவியும் மிக அருகில் உள்ள நகரத்துக்குச் சென்று தாங்கள் புதிதாகக் குடியேற இருக்கும் வீட்டுக்கு ஜன்னல் திரைகளை வாங்கிடப் புறப்படுகின்றனர்!

“ஜன்னல் திரைகளை வாங்குவதற்கு ஆண்கள் போனால் போதாதா? நீ வேறு எதற்குப் போக வேண்டும்?”

துப்பட்டியைப் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட்ட மருமகள் – அப்படியே மனம் குன்றி அமர்ந்து விடுகிறார்!!

அருகில் உள்ள ஊரில் ஒரு விஷேசம்! அண்ணன், அண்ணன் மனைவி, தம்பி, தம்பி மனைவி, இரண்டு சகோதரிகள், குழந்தைகளுடன் காரில் புறப்பட இருக்கும் சமயம். திடீரென்று செல்போன் அழைப்பு அம்மாவிடமிருந்து.

“ஏன் இத்தனை பேர்? தம்பி மனைவி போக வேண்டாம்! மற்றவர்கள் போய் வந்தால் போதும்!”

அந்தத் தம்பி மனைவிக்கு எப்படி இருக்கும்? இத்தனைக்கும் இந்தத் “தம்பி” தான் காருக்கு வாடகை தருபவர்!

“இல்லையம்மா! நான் மனைவியை அழைத்துக் கொண்டுதான் போகிறேன்!” என்று அந்தத் தம்பி சொல்லலாம் அல்லவா?

ஏன் சொல்லவில்லை என்பதே நம் கேள்வி!

திருமணம் முடித்து பயணம் சென்று விட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் பயணத்திலிருந்து வருகிறார் பெற்ற மகன்! இரண்டு மாத விடுமுறை; இரு வீட்டாருக்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை! மகனை மாமியார் வீட்டுக்கு அனுப்பவில்லை தாய்! மனைவி வீட்டார் தங்கள் மகளை அனுப்பி வைக்கிறார்கள்; மருமகளை மகனுடன் படுப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை அந்தப் புனிதவதி!

தாய் பேச்சைத் தட்டாத அருமை மகன் – இரண்டு மாதங்களையும் கூடத்திலேயே பாய் போட்டுப் படுத்து விட்டு பயணம் புறப்பட்டுப் போய் விடுகிறார்! என்ன செய்வது? பெத்த தாயின் பேச்சை எப்படி மீறுவது?

கணவன் வெளி நாட்டில் வேலை பார்க்கிறார்; குடும்பத்துடன் தங்குவதற்கு வீடும் கம்பெனியில் தருகிறார்கள்; மனைவியுடன் சேர்ந்து வாழவும், நல்ல உணவுக்காகவும் மனைவியை அங்கு அழைத்துக் கொள்ள கணவன் விரும்பினால் அதில் தலையிட பெற்றோர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இங்கேயும் பெற்ற தாய்மார்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றேன் என்று தாம் ஏதோ பெரிய தியாகம் செய்வதாக எண்ணிக் கொள்கின்றனர் ஆண்மகன்கள்! மனைவியின் உரிமை? அது பற்றி யாருக்குக் கவலை?

தன் மகனுக்கு அழகான ஒரு பெண்ணைத் தேடுகிறார் ஒரு தாய்! உறவினர் ஒருவர் அந்தத் தாயிடம் கேட்ட கேள்வி: “நீ உனக்கு ஒரு மருமகளைப் பார்க்கிறாயா? உன் மகனுக்கு அழகு சுந்தரி ஒருவரைப் பார்க்கிறாயா?”

என்ன எச்சரிக்கை இது?

ஒரு குடும்பத்தில் தந்தைக்கு அடுத்த படி, குடும்பப் பொறுப்புகள் அனைத்தும் யார் மீது சுமத்தப் படுகிறது? அக்குடும்பத்தின் ஆண் மகன்களிடத்தில் தான்!

நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்த தந்தை உடல் நலம் குன்றி விட்டாலோ, அல்லது அவரால் போதுமான அளவுக்கு பொருளீட்ட இயலாமல் போய் விட்டாலோ, அல்லது தந்தை இறந்து போய் விட்டாலோ – அக்குடும்பத்தின் எல்லாப் பொறுப்புகளையும் அவரது மகன் அல்லது மகன்கள் சுமந்து கொள்கிறார்கள். அந்த சுமையை ஒரு சுமையாகக் கருதாமல் ஒரு சுகமாகக் கருதுகின்ற பல இளைஞர்களை நாம் பார்க்கலாம்.

இப்படிப் பட்ட குடும்பப் பொறுப்பு, ஒரு இளைஞனுக்கு எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். பள்ளிக் கூடத்திலோ கல்லூரியிலோ படித்துக் கொண்டிருக்கும் போது கூட வரலாம். குடும்பப் பொறுப்புக்காக தன் படிப்பைக் கை விட வேண்டிய நிலை ஏற்படலாம். தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டது என்பதால், ப்ளஸ் டூ படித்து விட்டு மேற்படிப்புக் கனவைத் தூக்கி எறிந்து விட்டு ஜவுளிக்கடை வேலை ஒன்றுக்கு வருகிறான் ஒரு இளைஞன்.

தன் தந்தைக்கு அடுத்த படி ஒரு இளைஞன் தன் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய “கடமைகள்” என்று எவைகளைத் தன் தலை மீது சுமத்திக் கொண்டிருக்கின்றான்?

- தன் தந்தை வாங்கிய கடனை அடைப்பது. (அவர் அடகு வைத்த சொத்துக்களை மீட்பது)

- குடும்பச் செலவுகளை கவனித்துக் கொள்வது.

- தன் கூடப் பிறந்த அக்கா- தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது.

- குடும்பத்தின் இதர செலவுகளையும் கவனித்துக் கொள்வது.

இப்படி எந்த ஒரு சுய நலமும் இல்லாமல் – குடும்பத்தின் எல்லாப் பொறுப்புகளையும் தன் தலை மீது சுமந்து கொள்கின்ற அந்த ஆண் மகனிடம் அந்தக் குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள் – அதாவது – தாயும் சகோதரிகளும் – எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

நன்றாகவே நடந்து கொள்கிறார்கள்! “எங்கள் அண்ணனைப் போல் வருமா?” என்கிறார்கள்! குறிப்பாக அண்ணன் பயணம் போய் வருபவனாக இருந்து விட்டால் நன்றாக ஆக்கிப் போட்டு விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள்!

ஆனால் அது எது வரை? அந்த இளைஞன் தான் சம்பாதிப்பதை எல்லாம் தன் தாயையும் சகோதரிகளையும் “கவனித்துக் கொள்கின்ற” காலம் வரை தான்!

அவனுக்குத் திருமணம் ஆகி , குழந்தை குட்டிகள் பெற்றுக் கொண்ட பின்பு  அவன் தன் எதிர் காலத்துக்கு என்று திட்டமிடத் தொடங்கி விட்டால் வந்து விடும் பேராபத்து!

பயணம் சென்றவன் முன்பு போல் பணம் அனுப்புவதில்லை என்றால் அவ்வளவு தான்! மனைவிக்கு ஏதாவது நகை செய்து போட்டு விட்டாலோ அவ்வளவு தான்! நிலைமை தலை கீழாக மாறி விடும்.

தாயைப் பார்க்க வந்தால், முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளுவார்கள். தந்தை வீட்டில் இருந்தால் மகனிடம் “கணக்குக்” கேட்கத் துவங்கி விடுவார்.

அப்படியானால் ஒரு தாய் தன் மகனிடம், இன்னும் என்ன தான் எதிர் பார்க்கிறாள்?

தன் மகன் “கடைசி வரைக்கும்” குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டுமாம். சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டு தானும் திருமணம் செய்து கொண்டு வாழத் தொடங்கும் இளைஞன், தன் மனைவி மக்கள் குறித்து சிந்தித்திடக் கூடாது; தன் சகோதரிகளுக்கும், ஏன், இன்னும் ஒரு படி மேலே போய் சகோதரிகளின் குழந்தைகளுக்கும் “செலவு” செய்திட வேண்டும் என்று தாயும் சகோதரிகளும் எதிர் பார்க்கிறார்கள், இது எந்த விதத்தில் நியாயம்?

மகனிடமிருந்து காசு பறித்து அவற்றை தன் மகள்கள் வீட்டுக்கு சேர்த்து வைப்பதில் ஒரு தாய்க்கு இருக்கும் சுகம் அலாதியானது! அடடா!
மகன் சொத்து சேர்த்து விடக் கூடாது! அவன் சிறிது சேமித்து வைத்து விடக் கூடாது! மனைவிக்கு ஒரு நகை நட்டு செய்து விடக் கூடாது!

தன் எதிர் காலம் குறித்துத் திட்டமிடத் தொடங்கும் ஒரு மகனை – அவனது தாய் எப்படி “மூளைச் சலவை” செய்கிறாள் தெரியுமா?

இதோ – வெளி நாட்டில் இருக்கும் மகனிடத்திலிருந்து தொலைபேசி அழைப்பு. மனைவியிடத்தில் பேசலாம் என்று அழைக்கிறான் இளைஞன். ஆனால் போனை எடுத்துப் பேசுவது தாய்…..!

“தம்பீ! எப்படி இருக்கே! நல்லா இருக்கியா?” போன்ற நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு….

“தம்பீ! அவசரப் பட்டு ஊருக்கு இப்ப வந்துடாதேப்பா! அக்கா மகள் சமீமாவை பெண் கேட்டு வர்ராங்கப்பா! நல்ல இடமெல்லாம் நிறைய வருது. மச்சானைப் பத்தித் தான் உனக்குத் தெரியுமே! அவரை நம்ப முடியாதுப்பா! நம்ம தாம்ப்பா எப்படியாவது தோது செய்து ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணும்”

அடுத்து அக்கா போனை வாங்கி “ஆமாம் தம்பி, அல்லாஹ்வுக்கு அடுத்த படி, உன்னைத் தான் தம்பி நான் மலை போல் நம்பியிருக்கேன்…. எப்படியாவது தோது பண்ணி பணம் அனுப்பி வை தம்பி…… ”

மனைவியிடம் பேசுவதை மறந்தே போய் போனை வைத்து விடுகிறான் நமது இளைஞன்!

ஏன் இப்படி விளையாடுகிறார்கள் – பெற்றோர்களும் சகோதரிகளும்?

இது நமது சமூகத்தில் புரையோடிப் போய் விட்ட ஆழமான ஒரு நோய்! இந்த நோய்க்கான காரணத்தையும், அதற்கான மருந்தையும் நாம் கண்டுபிடித்தே ஆக வேண்டும்.

கணவன் மனைவி திருமண வாழ்வில் பெற்றோர்கள் குறுக்கிடும்போது குறிப்பாக கணவன்மார்கள் பெற்றோருக்குக் கட்டுப் பட்டு விடுவது எதனால்?

வாருங்கள் கண்டுபிடிப்போம் – இன்ஷா அல்லாஹ்!



மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத பெற்றோர்!

பெற்றோர்கள் பிள்ளைகளின் வாழ்வில் தலையிடலாமா?  - பாகம் 3

 சென்ற கட்டுரையில் நாம் எழுதியிருந்த உதாரணச் சம்பவங்களை வைத்து எல்லாப் பெற்றோர்களுமே இப்படித்தானோ என்று நினைத்து விட வேண்டாம்!

ஒரு சில நல்ல பெற்றோர்களும் நமக்கு மத்தியில் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட நல்ல பெற்றோர்கள் நம்மிடம் மிகக் குறைவு என்பதே வருத்தத்துக்குரிய கசப்பான உண்மை!

இங்கே ஒரு தாயார், எண்பது வயதைத் தாண்டிய முதுமை! வீல் சேரில்தான் வாசம். துணைக்கு வேலையாள் மட்டுமே. இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு இடங்களில் வசிக்கிறார்கள். கொஞ்சம் கூட பிள்ளைகளிடத்தில் கோபம் கிடையாது. ஒரு மகன் எப்போதாவது வந்து தாயைப் பார்த்துச் செல்வார். இன்னொருவர் மாதம் ஒரு முறை வந்து சில தினங்கள் தாயுடன் தங்கி விட்டுச் செல்வார். எப்போதும் சிரித்த முகம்!
வீட்டில் தொழுகை, துஆக்கள், சலவாத் – இப்படித்தான் வாழ்க்கை கழிகிறது அவருக்கு. பெற்ற மகன்களை அவர் ஒரு போதும் குறை சொல்லியதில்லை!

எனது நண்பர் ஒருவர். அவருடைய தாயாரும் தந்தையும் சொந்த ஊரில் தனியே தான் வசிக்கிறார்கள். இரண்டு மகன்கள் ஒரு மகள். மகள் திருமணமாகி கணவன் வீட்டுக்குச் சென்று விட்டார். மூத்த மகன் அதே ஊரிலேயே வீடு கட்டி தனிக்குடித்தனம் நடத்துகிறார்.
எனது நண்பருக்கும் அதே ஊரிலேயே பெண் பார்த்து, திருமணம் முடிந்த உடனேயே வாடகைக்கு வீடு ஒன்று பார்த்து இரண்டாம் மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் இருக்குமாறு வலியுருத்தி வாழ வைத்திருக்கிறார் அந்த அருமையான தாய்.

நான் என் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்த போது காலையில் அவருடைய தாயும் தந்தையும் அங்கு வந்திருந்தார்கள். மாலையில் அவர்கள் வீட்டுக்குச் சென்று விட்டார்கள். மூத்த மகன் வீட்டுக்குச் சென்றாலும் அப்படித்தானாம்! பிள்ளைகளின் திருமண வாழ்வில் கொஞ்சம் கூடத் தலையிடாமல், அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதை சற்று தூரத்திலேயே இருந்து கொண்டு ரசிக்கின்ற  மனப்பக்குவம் நம்மை மலைக்க வைக்கிறது!

ஆனால் இப்படிப்பட்ட பெற்றோர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். இத்தகைய பெற்றோர்கள் அரிதிலும் அரிதானவர்கள்! அதாவது – micro minority!
இத்தகைய பெற்றோர்களின் கால்களில் தான் சுவர்க்கம் இருக்கின்றது!

இவர்களை விட்டு நம் முகத்தை சற்றே திருப்பி நம் சமூகத்தில் இருக்கும் பெரும்பாலான தாய்மார்களைப் பார்த்தால் – ஒரு தாய் இப்படியெல்லாம் கூட நடந்து கொள்வாரா என்று வியக்கும் அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டு அமைந்திருக்கின்றன!

இத்தகைய மனிதத் தன்மையற்ற தாய்மார்களைப் பற்றித்தான் நாம் ஆய்வு செய்திட இருக்கின்றோம்.

இப்போது கொஞ்சம் உளவியல். அதாவது – psychology!

மகள்கள் விஷயத்தில் ஒரு விதமாக நடந்து கொள்ளும் தாய்மார்கள் மகன்கள் விஷயத்தில் மட்டும் வேறொரு விதமாக ஏன் நடந்து கொள்கிறார்கள்?

நாம் இதற்கு முன்னர் empathy பற்றி சில கட்டுரைகளில் எழுதியிருக்கின்றோம். அதாவது அடுத்தவர் நிலையில் நம்மை வைத்து – அவருடைய சூழ்நிலைகளையும், உணர்வுகளையும், மனோபாவத்தையும், எண்ணங்களையும் புரிந்து கொள்ளும் தன்மைக்கு empathy என்று பெயர்.
இந்த நற்பண்பு – அன்று பிறந்த பாலகர்கள் அனைவருக்கும் கூட இருக்கிறதாம்! எனவே இது இஸ்லாத்தின் நற்பண்பும் ஆகும்!

நமக்காக சமைத்த சமையல் காரருக்கு அந்த உணவில் கொஞ்சம் கொடுங்கள் என்பது நபிமொழி!

மூன்று பேர்கள் சேர்ந்திருக்கும்போது இருவர் தனியே பிரிந்து சென்று உரையாடிட வேண்டாம்; அது மூன்றாமவரை வருத்தமடையச் செய்திடும் என்பதும் நபி வழிகாட்டுதல் ஆகும்.

இந்த மன நலம் சார்ந்த நற்பண்பை ஊட்டி வளர்த்திட வேண்டியது பெற்றோர் கடமை! பெற்றோர்களுக்கு இந்தப் பண்பு இருந்தால், குழந்தைகளும் இந்த அரும்பண்புடனேயே வளர்வார்கள். பெற்றோர்களுக்கு இந்தப்பண்பு இல்லையெனில், குழந்தைகளும் அப்படியே தான் வளர்கிறார்கள்!

இந்தப் பண்பு எப்படிப்பட்டவர்களை உருவாக்கிடும்?

இந்த நற்பண்பு அடுத்தவர் மீது அக்கரை காட்டுபவர்களை உருவாக்கிடும்! (care for others)

இந்த நற்பண்பை உடையவர்கள் அடுத்தவர்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திட மாட்டார்கள்.

நியாய உணர்வு இவர்களிடத்தில் மிகைத்திருக்கும்.

இவர்கள் – நியாய உணர்வு அற்றவர்களை – அவர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் – விரும்பிட மாட்டார்கள்!

எதிரியாக இருந்தாலும் அவர்கள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துப்பேசிடத் தயங்க மாட்டார்கள். எப்போதும் இவர்கள் நியாயத்தின் பக்கமே நிற்பார்கள்!

பொது நலம் மிக்கவர்களாக விளங்குவார்கள்! சமூக சேவை செய்பவர்களாக இருப்பார்கள்!

நன்றி உடையவர்களாக இருப்பார்கள்!

அடுத்தவர் உணர்வைப் புரிந்து கொண்டு செயல் பட உதவுகின்ற empathy எனப்படும் இந்த நற்பண்பு இல்லாதவர்கள் எப்படிப்பட்டவர்களாக விளங்குவார்கள்?

நியாய உணர்வு சுத்தமாக இவர்களிடத்தில் இருக்காது; நியாயம் பேசுபவர்களை இவர்களுக்குப் பிடிக்காது! நியாயம் பேசுபவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்களை இவர்கள் விரும்பிட மாட்டார்கள்.
குழு உணர்வே இவர்களிடத்தில் மிகைத்திருக்கும்! தாங்கள் செய்வதையெல்லாம் நியாயப் படுத்துவார்கள்!

சுயநலம் மிக்கவர்களாக விளங்குவார்கள்! இத்தகையவர்களிடம் “உண்மையான நட்பை” எதிர்பார்க்க முடியாது! நயவஞ்சகத்தனமே இவர்களிடத்தில் குடிகொண்டிருக்கும்!

இந்த நற்பண்பு இல்லாதவர்கள் அடுத்தவர்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடத் தயங்க மாட்டார்கள். சில சமயங்களில் குற்றம் (crime) புரிவதற்குக் கூடத் தயங்க மாட்டார்கள். சதி செய்வார்கள்.

குற்றவாளிகளின் மனநிலையை ஆய்வு செய்பவர்கள் சொல்வது: lack of empathy leads to crimes! அதாவது அடுத்தவர் உணர்வுகளை ஒரு பொருட்டாகக் கருதாதவர்கள் தான் குற்றவாளிகளாக மாறுகிறார்கள்.

இத்தகையவர்கள் என்னென்ன குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் தெரியுமா?

கற்பழிப்புக் குற்றங்கள், குழந்தைகள் பலாத்காரம் (child molesters) மற்றும் குடும்ப வன்முறை (domestic violence) இவற்றில் ஈடுபடுபவர்கள் அனைவருமே அடுத்தவர் உணர்வைப் புரிந்து கொள்ள மறுப்பவர்கள் தாம்.

இவர்களால் பாதிப்புக்குள்ளானவர்கள் (victims) எப்படிப்பட்ட உணர்வுகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இயலாதவர்கள் / அல்லது புரிந்து கொள்ள மறுப்பவர்கள் தங்களுக்குத் தாங்களே, தாங்கள் செய்கின்ற கொடுமையான குற்றங்களை நியாயப் படுத்திக் கொள்வார்களாம்.

எப்படி நியாயப் படுத்திக் கொள்கிறார்களாம் தெரியுமா?

Women wants to be raped!” -  பெண்கள் தாங்கள் கற்பழிக்கப் படுவதை
விரும்புகிறார்கள்!

“கற்பழிக்கப் படுவதிலிருந்து ஒரு பெண் தன்னைக் காத்துக் கொள்ள முயற்சி செய்வது எதற்கு எனில் – கற்பழிப்பின் சுகத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்கே!”

குழந்தையை மானபங்கப் படுத்துபவன் அதனை எப்படி நியாயப் படுத்துகிறான் தெரியுமா?

“இதுவும் ஒரு விதமான அன்பு செலுத்துதல் தான்!” (just showing love!)

“அந்தக் குழந்தைக்கு நான் செய்வது பிடிக்கவில்லை என்றால் என்னைத் தடுத்திருக்கும் தானே? தடுக்கவில்லையே!”

வீட்டில் மனைவியை/ குழந்தைகளை அடித்து நொறுக்குபவன் கூட அதனை எப்படி நியாயப் படுத்துகிறான்?

“இது ஒரு வகையில் “அவர்களை சீர்திருத்திடத் தான்!” (this is just good discipline!)

இப்படிப்பட்டவர்கள் ஒரு விதத்தில் “மன நலக் குறைபாடு” உடையவர்களே!

பெரும் குற்றங்களைச் செய்து விட்டு அவைகளை நியாயப்படுத்திக் கொள்ளும் குற்றவாளிகளைப் போலவே, திருமண விஷயங்களில் மூக்கை நுழைத்து கணவன் மனைவியரின் தார்மிக உரிமைகளைப் பறித்து விட்டு தங்கள் செயல்களை நியாயப் படுத்திக் கொள்கிறார்கள் பல பெற்றோர்கள்!!
பெற்றோர்கள் தங்கள் செயல்களை எவ்வாறு “நியாயப் படுத்திக்” கொள்கிறார்கள் தெரியுமா?

“என் மகள் மட்டும் அங்கே கொடுமைப் படுத்தப் படுகிறாளே! நான் இவளை அந்த அளவுக்கா கொடுமைப் படுத்துகிறேன்?”

“நம் மகளுக்கு நாம் வாரி வாரிக் கொடுத்திருக்கும்போது, நம் மகனுக்கு வாங்குவதில் என்ன தப்பு?”

“மகள் என்பவள் ஒரு சட்டி ரத்தத்தில் பிறந்தவள்! மகன் ஒரு சொட்டு ரத்தத்தில் பிறந்தவன்! – எனும்போது மகளுக்குத் தானே நான் அதிகம் செய்திட வேண்டும்!”

“என் மகள் அவள் மாமியார் வீட்டில் எவ்வளவு வேலை பார்க்கிறாள் தெரியுமா? என் மருமகள் மட்டும் இங்கே சுகமா தூங்க விட்டு விடுவோமா?”

இப்போது சொல்லுங்கள்! தங்கள் செயல்களை நியாயப் படுத்திக் கொண்டு பெரும் குற்றங்களைச் செய்பவர்கள் மன நலக் குறைபாடு உடையவர்கள் என்றால் – அதே போன்று தங்கள் செயல்களை நியாயப்படுத்திக் கொண்டு கணவன் மனைவியர் உரிமைகளைப் பறித்திடும் பெற்றோர்களும் மன நலக்குறைபாடு உடையவர்கள் தானே?

இது தான் நாம் எடுத்துக் கொண்ட பிரச்சனையின் ஆணி வேர்!

அதாவது – அடுத்தவர் உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் அளிக்காத மன நலக் குறைபாடே (lack of empathy) பிரச்னையின் ஆணிவேர்!

சரி! நமது பெற்றோருக்கு இந்த empathy  எனும் உணர்வு இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி அறிவது?

அடுத்த கட்டுரையில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!




இளைஞர்கள் மிகவும் தடுமாறுகின்ற இடம் இது தான்!

பெற்றோர்கள் பிள்ளைகளின் வாழ்வில் தலையிடலாமா?  - பாகம் 4

அடுத்தவர் உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் அளிக்காத மன நலக் குறைபாடே (lack of empathy) பிரச்னையின் ஆணிவேர் என்பதை இதற்கு முன்னர் பார்த்தோம் அல்லவா?

நமது பெற்றோர்களுக்கு இந்த empathy  எனும் உணர்வு இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்கு மிகச் சுலபமான வழி ஒன்று இருக்கிறது.

அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்கள் நியாய உணர்வு மிக்கவர்களாக இருப்பார்கள் என்பதை முன்னரே பார்த்தோம் அல்லவா?

உங்கள் பெற்றோர்களிடம் அந்த நியாய உணர்வு இருக்கிறதா என்று பார்த்து விடலாம் தானே? இதனை எப்படிப் பார்ப்பது? இன்னொரு குடும்பத்தில் நடந்த, நடக்கின்ற பிரச்சனைகளை உங்கள் பெற்றோர்களிடம் பேசிப் பார்ப்பது தான் அது!

நீங்கள் எடுத்து வைக்கின்ற அந்த ஒரு குடும்பப் பிரச்சனையில் யார் பக்கம் நியாயம் இருக்கின்றது; யார் பக்கம் நியாயம் இல்லை என்பதை எவ்வாறு உங்கள் பெற்றோர்கள் அணுகுகிறார்கள் என்பதை நுணுக்கமாகக் கவனியுங்கள். கேள்விகளை முன் வைத்துப் பேசுங்கள்; அவர்கள் தருகின்ற பதில்களை அலசுங்கள்; உங்கள் பெற்றோர் நியாய உணர்வு மிக்கவர்களா இல்லையா என்பது தெள்ளென விளங்கும்!

ஒரே நாளில் நீங்கள் எந்த முடிவுக்கும் வந்திட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பல உதாரணங்களையும், பிரச்சனைகளையும் நீங்கள் பேசிப் பார்க்கும் போது உங்கள் பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மிகத் தெளிவாக உங்களால் எடை போட முடியும்!

சான்றுக்கு நாமே ஒரு பிரச்சனையை உங்கள் முன் வைக்கிறோம். இது உங்கள் பெற்றோர்களுடன் நீங்கள் விவாதிப்பதற்கு உதவலாம்.

இங்கே ஒரு இளைஞர். எனது உறவினர். வெளி நாடு சென்று சம்பாதித்து வந்தவர். அவர் தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னார்:

“கடந்த எழுபது எண்பதுகளில் (1970 – 1980) நான் முதன் முதலில் பயணம் சென்ற போது மாதா மாதம் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பி வைப்பேன் அம்மாவுக்கு. இரண்டு வருடம் கழித்து ஊருக்கு வந்து அம்மா எவ்வளவு பணம் பாக்கி வைத்துள்ளார் என்று பார்த்தால் எல்லாம் செலவாகி யிருக்கும். தந்தை தான் (இன்னொரு வெளி நாட்டிலிருந்து) குடும்ப செலவுக்குப் பணம் அனுப்புகிறார்களே, நாம் அனுப்பி வைப்பதை சேமிக்கலாமே என்றால் அது அம்மாவால் முடியாது.

நான் வேறு திறமைகளை வளர்த்துக் கொண்டதால் பின்னர் எனது சம்பளம் உயர்ந்தது. மாதா மாதம் ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பிக் கொண்டிருப்பேன். மீண்டும் விடுமுறையில் ஊருக்கு வந்து பார்த்தால் அம்மா அவ்வளவையும் செலவு செய்து விட்டிருப்பார். ஏனம்மா, ஐந்தாயிரத்தில் செலவுக்கு இரண்டாயிரம் போக மீதி மூவாயிரம் ரூபாயை சேமித்திருக்கலாம் தானே என்றால், அம்மா கணக்கு சொல்வார்கள். குடும்ப செலவுகள் போக – மீதமிருந்த பணத்தை, “மாமா மகன் கல்யாணத்துக்கு ஆயிரம் ரூபாய் வைத்தேன், மச்சி மகள் வயதுக்கு வந்ததுக்கு ஒரு பவுன் போட வேண்டியிருந்தது…..கொழுந்தனுக்கு பேரன் பிறந்து நாற்பதுக்கு அரை பவுன் போட்டேன், வீட்டிலே “இந்த” விருந்துக்கு நூறு பேருக்கு சாப்பாடு ஆக்கிப் போட்டதில் மூவாயிரம் செலவு…..

இப்படி – சேமித்து வைக்கத் தெரியாத பெற்றோருக்கு எல்லாவற்றையும் அனுப்பி வைத்த அவருக்கு – ஒரு முறை பணம் அனுப்ப இயலாமல் போய் விட்டது. அவருக்கே சில முக்கியமான செலவுகள். ஊருக்கு வரும் முன்னர் மூன்று மாத சம்பளத்தை சேர்த்து – “பயண சாமான்களை” வாங்கிக் கொண்டு ஊர் வந்து சேர்கின்றார் நமது உறவினர்.

பயணக் களைப்பு கூட நீங்கியிருக்காது. கணக்குக் கேட்கத் தொடங்கி விட்டனர் பெற்றவர்கள். அருகில் இருந்து கொண்டு மூட்டி விட்டுக் கொண்டிருக்கிறாள் தங்கை. ஏன் இந்த விசாரிப்பு தெரியுமா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் முடிந்திருந்தது!

பெற்றோருக்கு வந்த சந்தேகம் – மகன் பணத்தை தங்களுக்கு அனுப்பி வைக்காமல், மனைவிக்கு அனுப்பி விட்டான்!!!

“இல்லையம்மா! நான் கன ரக வாகனங்களை ஓட்டுவதற்காக பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது; உரிமம் பெற வேண்டியிருந்தது. விசா புதுப்பிக்க வேண்டி “இவ்வளவு” பணம் தேவைப் பட்டது. அதற்கு முன்னர் நாற்பதாயிரம் அனுப்பி வைத்தேனே. ஊருக்கு வரும் முன்பு மூன்று மாத சம்பளத்தில் தான் பயண சாமான்கள் வாங்கி வந்துள்ளேன்… இது தானம்மா கணக்கு….”

பெற்றோர் இந்தக் கதையை நம்பிடத் தயாராக இல்லை!

“எல்லாப் பணத்தையும் எடுத்துக் கொண்டு வருவதாக இருந்தால் வீட்டுக்கு வா…. இல்லாவிட்டால் உன் மனைவி- குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விடு….”

இரவு நேரம். கொட்டுகின்ற மழை. மனைவியையும், கைக்குழந்தையையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான் நம் இளைஞன். மாமனார் வீட்டுக்குச் செல்கிறான். சில தினங்களில் வாடகை வீடு ஒன்றை பிடித்துக் குடியேறுகிறான். பயணம் சென்று தனக்கென்று புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்குகிறான்.

மகனைத் துறத்தியடித்த பெற்றவர்கள் தங்களது சொத்துக்களை மகள்கள் பேருக்கு எழுதி வைத்து விடுகின்றனர்….

இதைப் போன்ற நிறைய “கதைகள்” உங்களைச் சுற்றியே நடந்து கொண்டிருக்கும். எல்லாவற்றையும் பற்றியும் உங்கள் பெற்றோர்களிடமும், சகோதரிகளுடனும் பேசுங்கள்.  கொஞ்ச நாட்களிலேயே அவர்களின் மன நிலையை நீங்கள் துல்லியமாக அறிந்து கொண்டு விடலாம்.

உங்கள் பெற்றோர்கள் நியாய உணர்வு மிக்கவர்களாக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ்!

ஆனால் அவர்களிடம் நியாய உணர்வு இல்லையெனில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் – “நம் பெற்றோர்கள் மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்கள் அன்று”- என்பதைத் தான்!

உங்கள் பெற்றோர்கள் அடுத்தவர் உணர்வுகளை மதிப்பவர்களே இல்லை; அவர்களிடம் நியாய உணர்வும் இல்லை  எனில் என்ன செய்வது?

இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ நினைக்கின்ற (திருமணம் ஆகாத) இளைஞர்கள் மிகவும் தடுமாறிப் போய் விடுகின்ற இடம் (exactly) இந்த இடம் தான்!

ஒரு பக்கம் பெற்றோர்களுக்கு இஸ்லாம் அளித்திடும் கண்ணியத்தைப் பற்றியும், பெற்றோர் உரிமைகள் பற்றியும், பிள்ளைகளின் கடமைகள் பற்றியும் மார்க்கம் சொல்வதை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (17:23)

ஆனால் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் இறை நம்பிக்கையாளர்கள் – நீதியுடனும் நேர்மையுடனும் மற்றவர்களின் உரிமைகளைப் பேணி நடப்பதன் அவசியத்தையும் அவர்கள் உணர்வார்கள்.

“முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (4:135)

பெற்றோர்கள் – இறையச்சம் மிக்கவர்களாக, அடுத்தவர் உணர்வுகளை மதிப்பவர்களாக, நியாய உணர்வு மிக்கவர்களாக இருந்து விட்டால் – அந்த இளைஞன் கொடுத்து வைத்தவன்! அவன் தனது பெற்றோருக்கு கண்ணியம் அளித்திடுவான்! அவர்களின் இறுதி மூச்சு வரை அவர்களுக்குப் பணிவிடை செய்திடுவான்! அதே நேரத்தில் நீதியுடனும் நியாயத்துடனும் நேர்மையுடனும் நடந்து கொள்வான்! அவனது திருமண வாழ்வு சிறப்பானதாக விளங்கும்!

ஆனால் பெற்றோர்கள் அடுத்தவர் உணர்வு பற்றிக் கவலைப்படுபவர்கள் இல்லை! அவர்கள் இரட்டை வேடம் போடுகின்றார்கள்! அவர்களிடம் நியாய உணர்வு இல்லை – என்பதெல்லாம் புரிகின்றது! என்ன செய்வது?

இங்கே தான் – குறிப்பாக தங்களின் திருமண விஷயத்தில் – பெரும்பாலான நமது இளைஞர்கள் மிகுந்த குழப்பத்துக்கு ஆளாகின்றார்கள்.

பெற்றோர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள், அவர்களை கண்ணியமாக நடத்துங்கள், அவர்களுக்குக் கீழ்படிந்து நடந்து கொள்ளுங்கள்- எனும் மார்க்க வழிகாட்டுதல்களின் ஒரு பகுதியை மட்டும் கவனத்தில் கொண்டு - அவர்கள் விதிக்கும் நியாயமற்ற கோரிக்கைகளையும் விரும்பியோ விரும்பாமலேயோ ஏற்றுக் கொண்டு விடுகின்றார்கள்! பின்னர் வருந்துகின்றார்கள்!

அடுத்த கட்டுரையில் – பெற்றோர்களின் நியாயமற்ற கோரிக்கை ஒன்றைப் பற்றி எழுதுவோம் இன்ஷா அல்லாஹ்.



இவர்களே புத்திசாலி இளைஞர்கள்!

பெற்றோர்கள் பிள்ளைகளின் வாழ்வில் தலையிடலாமா?  - பாகம் 5

 வயதுக்கு வந்து விட்ட இளைஞன் ஒருவனிடம் அவனது பெற்றோர் எதிர்பார்ப்பது என்ன? அல்லது ஒரு இளைஞன் – தன் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய “கடமைகள்” என்று எவைகளைத் தன் தலை மீது சுமத்திக் கொண்டிருக்கின்றான்?

இங்கே ஒரு இளைஞன். பெயர் பஷீர் அஹமத். அவனுக்கு மூன்று தங்கைகள். பஷீருக்கு பதினைந்து வயதாகும் போது தந்தை மாரடைப்பில் இறந்து விட்டார். சொத்துக்கள்? வீடு, கட்டிடம், வயல் என்று – அது ஒரு கோடிக்கு மேல் தேறும்.

பஷீருக்கு படிப்பு வரவில்லை. (எதிர்பார்த்தது தானே!). ஒரு சில ஆண்டுகளிலேயே பயணம் புறப்பட்டு விட்டான், அதாவது அனுப்பி வைக்கப் பட்டு விட்டான். துவக்கத்தில் மாதச் சம்பளம் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து வந்த ஆண்டுகளில் சம்பளம் கணிசமாக உயர்ந்து கொண்டே சென்றது. எல்லாவற்றையும் தன் அம்மாவுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தான் பஷீர். ஆண்டுகள் உருண்டோடுகின்றன.

பஷீருக்கு இருபத்து ஐந்து வயது ஆன போது மூத்த தங்கை பாத்திமா நஸ்ரினுக்குத் திருமணம் நடந்தேரியது. மாப்பிள்ளைக்கும் வயது இருபத்து ஐந்து தான்.

பஷீருக்குத் திருமணம் எப்போது? அம்மா அவர்கள் சொல்லி விட்டார்கள் – மூன்று தங்கைகளுக்கும் திருமணம் முடிந்த பிறகே பஷீருக்குத் திருமணம் என்று!

பாத்திமா நஸ்ரினுக்கு வேறு சில இடங்களில் இருந்து பெண் கேட்டு வந்த போது, “மாப்பிள்ளைக்கு முப்பது வயது இருக்கும்போல் தெரிகிறதே” என்று பஷீரின் தாயார் மறுத்து விட்டதெல்லாம் தனி விஷயம்.

ஏன் இந்த இரட்டை நிலை? தங்கைகள் அனைவருக்கும் திருமணம் முடித்து விட்டுத் தான் அண்ணன் ஒருவன் தனது திருமணம் குறித்து சிந்தித்திட வேண்டும் என்பது என்ன நியாயம்?

“வயதுக்கு வந்த தங்கைகளை வீட்டில் வைத்துக் கொண்டு அண்ணன்காரனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிறீர்களா?” – என்பது பெற்றோரின் நியாயமற்ற வாதம்!

பெண்மக்களை எப்படி “குமரிகளாகப்” பார்க்கிறோமோ அதுபோல் ஆண்மகன்களை ஏன் நாம் “குமரர்களாகப்” பார்க்க மறுக்கின்றோம்? மகளுக்கு காலா காலத்தில் திருமணம் செய்து வைப்பதை எப்படி பெற்றோர்கள் விரும்புகிறார்களோ அது போலவே மகனுக்கும் காலா காலத்தில் திருமணம் செய்து வைப்பது தானே நியாயம்?

நியாய உணர்வற்ற பெற்றோர்கள் – இதற்கு சொல்கின்ற இன்னொரு காரணத்தைப் பாருங்கள்:

மகனுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டால், அதன் பிறகு அவன் தன் தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதில் அலட்சியம் வந்து விடுமாம்!?

ஒரு இளைஞனுக்கு வயது இருபத்தியேழு! அவன் தனது திருமணத்தைப் பற்றி சிந்தித்துக் கூட பார்ப்பதற்கு இயலாத சூழலாம்! ஆனால் நாம் கேட்பது என்னவென்றால் – அவனுக்குத் திருமண ஆசை இருக்குமா,இருக்காதா? உளவியல் அறிஞர்கள் சொல்வது என்னவென்றால் – அந்த வயதில் ஆண்களுக்கான செக்ஸ் ஹார்மோனாகிய – டெஸ்டோஸ்டரோன் – இரண்டு மடங்கு (200%) சுரக்கின்றதாம்!

இப்படிப்பட்ட பாலியல் தூண்டல் (sexual urge) ஒரு இளைஞனுக்கு வந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் அதை யாரிடம் போய் சொல்வான்? திருமணம் குறித்தெல்லாம் சிந்தித்திட முடியாத “சூழ்நிலை” குடும்பத்தில்! அவன் தனது பாலியல் தூண்டல்களை  எப்படித் தணித்துக் கொள்வான்?  அவன் கெட்ட வழிகளை நாடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது பெற்றோர்களுக்குச் சம்மதம் தானா?

என்ன செய்கிறார்கள் நம் இளைஞர்கள்? நோன்பு வைத்துக் கொள்கிறார்கள்! பெற்றோர் பேச்சை மீற முடியாமல் முப்பது வயதைத் தாண்டியும் தன் கடைசித் தங்கைக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கின்றார்கள்! தனது திருமணம் குறித்து வீட்டில் பேசத் தயங்குகின்றார்கள். மனம் புழுங்குகின்றார்கள்! வெளியே சொல்ல முடியவில்லை! பிரச்சனை எதுவும் இல்லாதது போல் நடித்துக் கொண்டு தங்கள் இளமையை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்!

தங்களின் மகள்களுடைய வாழ்க்கையை செவ்வனே அமைத்துக் கொடுப்பதில் காட்டுகின்ற அக்கரை போல் தங்கள் மகன்களின் வாழ்க்கை விஷயத்திலும் அக்கரை காட்டாத பெற்றோர்களின் நியாயமற்ற கோரிக்கையை இளைஞர்கள் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? !

இளைஞர்களே! திருமண வயதும் பக்குவமும் வந்து விட்டால் உடனே உங்கள் பெற்றோர்களிடம் நீங்களே மனம் திறந்து பேசிட வேண்டியது தானே? அதற்கு நீங்கள் தயங்கினால் உங்களுக்கு தாய்மாமன் அல்லது சித்தப்பா போன்ற உறவினர்கள் இருக்கிறார்களா? அவர்களிடம் போய் முறையிடலாம் அல்லவா?

இங்கே ஒரு தாய் மாமனுக்கு நேர்ந்த நிலையைப் பாருங்கள்: தாய் மாமன் ஒருவர் – தனது தங்கை மகனுக்கு ஒரு பெண் பார்க்கப் போக – வாரி சுருட்டிக் கொண்டு வந்து விட்டார் அந்த இளைஞனின் தாய். “என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்துக் கொடுக்கத் துப்பில்லை, மகனுக்கு கல்யாணம் பேச வந்து விட்டீர்களா?”

எனது வயதை ஒத்த நண்பர் ஒருவர் சொன்னார்: “என்னால் பாலியல் தூண்டல்களைக் கட்டுப்படுத்திட முடியவில்லை! உடனே எனக்குத் திருமணம் செய்து வைத்து விடுங்கள்; இல்லாவிட்டால் நான் கெட்டுப் போய் விடுவதற்கு வாய்ப்ப்பு இருக்கின்றது! அப்படி நான் கெட்டுப் போய் விட்டால் அதற்கு நீங்களே பொறுப்பு!” – என்று பெற்றோர்களிடமே போய் முறையிட்டாராம். விரைந்து திருமணம் முடிக்கப்பட்டதாம் அவருக்கு!

தங்கள் திருமணம் எப்போது என்பதைத் தாங்களே தீர்மானித்துக் கொள்கின்ற இளைஞர்களே – புத்திசாலி இளைஞர்கள்!

அப்படி இல்லாவிட்டால் – உங்கள் திருமணத்தை – நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒத்திப் போட்டு விடுவதன் மூலம் – உங்கள் பெற்றோர்கள் வெற்றி பெற்று விடுகிறார்கள்! நீங்களோ தோற்றுப் போய் விடுகிறீர்கள்!

YOU LOSE! THEY WIN!!



சகோதரிகளின் திருமணத்துக்கு செலவு செய்வதில் விவேகம் தேவை!

பெற்றோர்கள் பிள்ளைகளின் வாழ்வில் தலையிடலாமா?  - பாகம் 6

அடுத்து நாம் நமது இளைஞர்களுக்குச் சொல்ல வரும் ஆலோசனை:

சகோதரிகளின் திருமணத்துக்கு செலவு செய்வதில் விவேகம் தேவை

ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒவ்வொரு சூழல்.

ஒரு சிலருக்கு தந்தை இறந்திருக்கலாம். வேறு சிலருக்கு தந்தை உடல் நலம் குன்றியவராக இருக்கலாம். அல்லது அவரால் சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கலாம்.

ஒரு சில இளைஞர்களுக்கு திருமணம் ஆகாத ஒரே ஒரு சகோதரி; வேறு சிலருக்கோ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சகோதரிகள்…

ஒரு சில இளைஞர்களின் தந்தைக்கு ஏராளமான சொத்துக்கள். வேறு சிலருக்கோ சொத்துக்கள் அவ்வளவாக கிடையாது…

உங்கள் தாய் அல்லது தாயும் தந்தையும் உங்களிடம் எதிர்பார்ப்பதென்ன? “அண்ணன் காரன்” தான் தன் தங்கைகளுக்கு எல்லா செலவுகளையும் செய்து திருமணம் செய்து வைக்க வேண்டும்!

இங்கே இந்தப் பிரச்சனையை நாம் இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம்.

ஒன்று

அவ்வளவாக சொத்துக்கள் இல்லாத குடும்பத்து இளைஞர்கள்:
இந்த இளைஞர்கள் நன்றாகப் படித்து நன்றாக சம்பாதித்து, நல்ல முறையில் தன் சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைப்பது மறுமையில் நல்ல கூலியைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை!

ஆனால் இயன்ற வரை – மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற குடும்பத்தில் பெண் கொடுங்கள்; திறமையான மாப்பிள்ளையைத் தேடிப் பார்த்து திருமணம் செய்து கொடுங்கள்!

அத்தோடு சரி! ஆனால் – அவர்களின் திருமணத்துக்குப் பிறகும், உங்கள் சகோதரிகள், அவர்களுக்கு நீங்கள் தொடர்ந்து செலவு செய்து கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அழகாக மறுத்து விடுங்கள். ஏனெனில் – நீங்கள் உங்கள் குடும்பத்தையும் கவனித்திட வேண்டியிருக்கின்றது!

இரண்டு:

நிறைய சொத்து உள்ள குடும்பத்து இளைஞர்கள்:

இங்கே தான் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தந்தை இறந்து விட்டிருந்தால் – தந்தையின் சொத்துக்கள் பிரிக்கப்பட்டு வாரிசுகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான தாய்மார்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? “நான் உயிரோடு இருக்கும் வரை சொத்துக்களைப் பிரித்திட அனுமதித்திட மாட்டேன்!”

இவரே இறைவனுக்கு எதிராகக் கலகம் செய்திடும் தாய்!

ஆனால் இவரது மகன் அல்லது மகன்கள் என்ன செய்கிறார்கள்? “அம்மா” பேச்சைக் கேட்டுக்கொண்டு விடுவார்கள். அடுத்து சகோதரிகள் அனைவருக்கும் எல்லாச் செலவுகளையும் செய்து திருமணம் முடித்து வைப்பார்கள் சகோதரர்கள். அவர்களின் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து செல்வு செய்திட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். உங்களால் சேமிக்கவே முடியாது!

உங்கள் தாய் கடைசியில் வைக்கின்ற “ஆப்பு” என்ன தெரியுமா? உங்கள் தந்தையின் சொத்துக்களைப் பாகம் பிரித்திடும் போது எந்த அளவு மகள்களுக்கு சேர்க்க முடியுமோ அந்த அளவுக்கு முயற்சிப்பார்கள். இதிலே நியாயமாக நடந்து கொள்ள மாட்டார்கள் உங்கள் தாயும் சகோதரிகளும்!

சில சகோதரிகள் வழக்கு மன்றங்களுக்குக் கூட செல்லத் தயங்க மாட்டார்கள்! அவர்களது கணவன் மார்களும் வந்து நிற்பார்கள் – ஏதாவது எலும்புத்துண்டு சிக்காதா என்று பார்த்துக் கொண்டு!!

எனவே தான் – இப்படிப்பட்ட நிலையில் உள்ள இளைஞர்களுக்கு நாம் சொல்வது – மார்க்க முறைப்படி இறந்து விட்ட தந்தையின் சொத்துக்களைப் பிரித்து உங்கள் பங்கினை தக்க வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களால் இயன்ற வரை உங்கள் சகோதரிகளுக்கு நடு நிலை தவறாமல் செலவு செய்திடுங்கள். தாயைக் கை விட்டு விடாதீர்கள்!

இன்னொரு நிலை என்ன தெரியுமா?

சொத்துக்களும் இருக்கின்றன. தந்தையும் தாயும் உயிருடன் இருக்கிறார்கள்.
இந்த சொத்துக்களைக் காட்டியே மகன்களை மிரட்டி வைக்கின்ற பெற்றோர்களை நான் பார்த்திருக்கின்றேன்!

மகன் சம்பாதிப்பார்! ஆனால் அவர் எதனையும் சேர்த்து வைத்துக் கொள்ளக்கூடாது! எல்லாவற்றையும் தாயிடமும் தந்தையிடமும் கொடுத்து விட வேண்டும்!

இறுதியில் மகன் மீது திருப்தி இல்லை என்று எல்லாச் சொத்துக்களையும் மகள்களுக்கு எழுதி வைத்து விடுவார்கள்.

இந்த சொத்தை நம்பி, எல்லா செல்வத்தையும் கண்ணை மூடிக்கொண்டு பெற்றோர்களிடம் கொடுத்து விட்டு ஏமாந்த சோனகிரிகளையும் நாம் அறிவோம்!

ஒன்றை உங்களுக்குச் சொல்கிறோம்! உங்களுக்குத் தந்தை இருக்கும்போது, அவருக்கு சொத்துக்கள் இருக்கும்போது உங்கள் சகோதரிகளுக்குத் திருமணம் முடித்து வைத்திட வேண்டியது உங்கள் தந்தையின் பொறுப்பே!
நாம் சொல்ல வருவது என்னவெனில் – உங்கள் பெற்றோர்களுக்கு நியாய உணர்வே இல்லை என்பதை  நீங்கள் கண்டு கொண்டு விட்டால் – உங்கள் சேமிப்பு குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்! அவர்கள் உங்களுக்குரிய பாகத்தை மறுத்து விட்டால் கூட உங்கள் சேமிப்பிலிருந்து உங்கள் வாழக்கையைக் கட்டமைக்கலாம்.

உங்கள் பெற்றோர் நியாய உணர்வு மிக்கவர்களாக இருந்தால் – நான் மேலே சொன்னது எதுவும் உங்களுக்குப் பொருந்தாது! நாம் சொல்ல வருவதெல்லாம் நியாய உணர்வற்ற பெற்றோர் குறித்துத் தான்!

எனவே – இப்போதே – உங்கள் குடும்பத்தை எடை போடுங்கள்! அவர்கள் மார்க்கத்தைப் பின் பற்றி வாழ்கிறார்களா என்று பாருங்கள். – அவர்களிடம் நியாய உணர்வு இருக்கிறதா என்று பாருங்கள். – அவர்கள் இரட்டை வேடம் போடக் கூடியவர்களா என்றும் அவசியம் பாருங்கள். – அவர்கள் நியாய உணர்வு அற்றவர்களாக இருந்திட்டால், நீங்கள் சற்றே கவனமாக நடந்து கொள்ள வேண்டியது தான்.

அடுத்து பொதுவாக நாம் சொல்ல வருவது என்னவென்றால் – உங்கள் வருமானத்துக்கு ஏற்றவாறு – குடும்ப செலவுகளைத் திட்டமிடுங்கள்.

தாய்க்கும், தந்தைக்கும் – நல்ல உணவுக்காகவும், நல்ல உடைகளுக்காகவும் தாராளமாகக் கொடுங்கள். மருத்துவ செலவுகளுக்கும் குறை வைக்காமல் செலவு செய்திடுங்கள். அவ்வளவு தான். இதற்குப் பிறகு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் – உங்கள் எதிர்காலம் குறித்துத் திட்டம் தீட்டுவது தான்.

தாராளமாக சம்பாதிப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் தங்கைகளுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் நீங்கள் தாராளமாகவே செலவு செய்திடலாம்.

நீங்கள் செய்கின்ற அனைத்து செலவுகளும் “சதகா” வாக ஆகி விடும்.

ஆனால் – நாம் கவலைப் படுவது எல்லாம், நடுத்தர வர்க்கத்து இளைஞர்களைக் குறித்துத் தான். இவர்கள் என்ன செய்கிறார்கள்? பெற்றோர்களின் வரம்பு மீறிய செலவுகளுக்காக தான் சம்பாதித்ததை எல்லாம் அப்படியே அவர்களிடம் கொடுத்து விட்டு, அது போதாது என்று – அவர்கள் வற்புறுத்திக் கேட்கிறார்கள் என்பதற்காக கடனையும் வாங்கிக் கொடுத்து விட்டு, மனைவி மக்களுக்காக எதனையும் சேமித்து வைக்காமல், வாங்கிய கடனை அடைப்பதிலேயே காலத்தைக் கடத்துகின்றனர்! எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடையாத அம்மாக்களிடம் ஏமாந்து போய் நிற்கின்றனர்!

மார்க்கத்தைக் கடை பிடிக்கின்ற, நியாய உணர்வு படைத்தவர்களா உங்கள் பெற்றோர்கள்? அப்படியானால் அவர்கள் சொல் பேச்சை அப்படியே கேட்டு நடந்து கொள்ளுங்கள்! ஏனெனில் அப்படிப்பட்ட தாயின் பாதங்களில் தான் சொர்க்கம் அமைந்துள்ளது! அப்படிப் பட்ட தந்தையின் திருப்தியில் தான் இறைவனின் திருப்தியும் உள்ளது.

அதுவல்லாமல், உங்களைப் பெற்றவர்கள் இரட்டை வேடம் போடுபவர்களாக இருந்தால் – அவர்கள் இழுக்கின்ற பக்கமெல்லாம் வளைந்து நெளிய வேண்டியது உங்கள் மீது கடமையே அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்!



பெற்றவங்க சொல்லும் போது அத மீறி செயல்பட முடியுமா?

பெற்றோர்கள் பிள்ளைகளின் வாழ்வில் தலையிடலாமா?  - பாகம் 7

ஒரு வழியாக தங்கைகளுக்கெல்லாம் திருமணம் முடித்து, அடுத்து உங்கள் வீட்டில் இப்போது தான் உங்கள் திருமணத்தைப் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்போது தான் மிக முக்கியமான திருப்பு முனை உங்கள் வாழ்வில்!
அல்லாஹு தஆலா உங்களுக்கு வைக்க இருக்கின்ற மகத்தான சோதனை இதோ!

மார்க்கம் காட்டியிருக்கின்ற வழியில் நீங்கள் மணம் முடிக்கப் போகின்றீர்களா?

பெற்றோர் காட்டித் தருகின்ற வழியில் திருமணம் செய்யப் போகின்றீர்களா?
இந்த இரண்டில் நீங்கள் எதனைத் தேர்வு செய்திடப் போகின்றீர்கள்?

இறை வழிகாட்டுதல் என்ன?

இறையச்சத்தின் அடைப்படையில் மணப்பெண்ணைத் தேர்வு செய்யுங்கள்!

மஹர் கொடுத்துத் திருமணம் முடியுங்கள்!

எளிமையாகத் திருமணத்தை நடத்திக் கொள்ளுங்கள்!

இவையே மிக முக்கியமான இறை வழிகாட்டுதல்கள்!

ஆனால் பெற்றோர் சொல்வதென்ன?

பொருளாதார வசதியின் அடிப்படையில் பெண்ணெடுப்போம்!

முடியுமட்டும் வரதட்சணை வாங்கிக் கொள்வோம்!

நன்றாக செலவு செய்து திருமணத்தை நடத்துவோம்!

“அவ்வளவு பணம் என்னிடம் இல்லையே!” என்று சொல்லிப் பாருங்கள். “சம்பாதித்துக் கொண்டு வா! அப்புறம் திருமணம் செய்து கொள்ளலாம்”, என்பார்கள்.

“வரதட்சணையெல்லாம் கேட்க வேண்டாம் அம்மா!” என்று சொல்லிப் பாருங்கள். அதனை நியாயப் படுத்தி உங்களை சம்மதிக்க வைப்பார்கள்! நீங்களும் சம்மதித்து விடுவீர்கள்!

நாம் கேட்போம் இப்படிப்பட்ட மணமகன்களைப் பார்த்து: “ஏனப்பா வரதட்சணைக்கு ஒத்துக் கொண்டாய்?”

அவர்கள் சொல்வார்கள்: “என்னண்ணே செய்றது? பெற்றவங்க சொல்லும் போது அவங்களை மீறி நாம செயல்பட  முடியுமா?”

இறுதியில் உங்கள் பெற்றோருக்கே வெற்றி! மார்க்கம் தோற்றுப் போய் விடுகிறது! (நஊது பில்லாஹி மின்ஹா!)

திருமணத்துக்கு முன்னரேயே உங்கள் திருமணத்தின் கடிவாளத்தை உங்கள் பெற்றோர்கள் உங்களிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு விடுகிறார்கள் என்பது ஏன் உங்களுக்குப் புரிவதில்லை?

ஏன் பெற்றோர் தோண்டிய படுகுழியில் போய் நீங்களாகவே வழுக்கி விழுந்து விடுகின்றீர்கள்?

நீங்கள் விழுந்து விட்டதை நீங்கள் உணராமல் இருக்கலாம்; ஆனால் உங்கள் பெற்றோர்கள் அதனை நன்றாக உணர்ந்திருக்கின்றார்கள்!

“பையன் நம்ம கையில் தான்!”

பிறகு என்ன நடக்கும்?

“ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா”

உங்கள் இல்லற வாழ்வின் சிறிய பெரிய விஷயங்கள் அனைத்திலும் உங்கள் பெற்றோர் சொல்வதே வேத வாக்கு! உங்கள் மனைவியின் உரிமைகள்? அது பற்றி யாருக்குக் கவலை?

இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள்? – ஆம் – அது ஒரு அழகிய தலைப்பு! எங்களைப் போன்றவர்கள் அழகாக மேடையில் பேசிடுவதற்கு!!

பெற்றோர் விருப்பங்களின் அடிப்படையில் வரதட்சணை வாங்கி திருமணம் முடிக்கும் இளைஞர்கள் எப்படிப்பட்டவர்களாக விளங்குவார்கள்?

சாட்சாத் அவர்கள் பெற்றோர்களைப் போலவே உருவெடுப்பார்கள்! அது எப்படி என்கிறீர்களா?

இத்தகைய இளைஞர்கள் தங்களின் சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் போது பட்ட கஷ்டங்கள் அப்படியே பசு மரத்தாணி போல் நினைவில் இருக்கும் தானே?

அப்படியானால் – தனக்குத் திருமணம் முடிக்கும்போது தனது மைத்துனர்களும் நம்மைப்போல் தானே கஷ்டப்படுவார்கள் என்ற சிந்திக்க வேண்டுமா இல்லையா?

அப்படி சிந்தித்தால் தானே – அவர்கள் அடுத்தவர் உணர்வை மதிக்கும் empathy  எனும் நற்குணம் மிக்கவர்கள் என்று நாம் சொல்வோம்!

அப்படிப்பட்ட சிந்தனை வராவிட்டால் – இவர்களும் அடுத்தவர் உணர்வைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் தானே? இந்த lack of empathy  இவர்களை எதில் கொண்டு போய் விடும்?

இவர்களிடத்திலும் நியாய உணர்வு இருக்காது! சுய நலம் மிகுந்திருக்கும்! நன்றி உணர்ச்சி அற்றுப் போய் விடும்! நயவஞ்சகம் குடிகொண்டு விடும்!! தவறுகளை நியாயப் படுத்திக் கொள்வார்கள்!

Exactly – இவர்களும் இவர்களுடைய பெற்றோர்களும் இப்போது ஒன்று போலத்தான்!

நியாய உணர்வற்ற, அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மறுக்கின்ற, lack of empathy எனும் மன நலக் குறையுடன் அடுத்த தலைமுறை இதோ தயார்!

இந்த இழி நிலையிலிருந்து இந்த சமூகத்தை மீட்டெடுப்பது எப்படி? சிந்தியுங்கள்!


மார்க்கத்தைப் பின்பற்றும் கணவன், மனைவி, பெற்றோர்!

பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா? – பாகம் 8

இக்கட்டுரைத்தொடரில் இது இறுதியானது.

இதில் நாம் பார்க்க இருப்பது மார்க்கத்தை முழு மனதுடன் பின்பற்றும் கணவன் மனைவியர் எப்படி குடும்பம் நடத்துகிறார்கள் என்பதைப் பற்றித் தான்!

மூன்று விதமாக இவர்களின் குடும்பங்களை நாம் காணலாம்:

ஒன்று:

இவர்கள் சில இளைஞர்கள். திருமண விஷயத்தில் பெற்றோர் விருப்பத்துக்கெல்லாம் இவர்கள் ஆடுவதில்லை! வரதட்சனை கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். மார்க்கமான பெண் வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். அப்படிப்பட்ட பெண்ணைத் தாங்களே தேடிப் பிடிப்பார்கள்.

ஆனால் பெற்றோர்கள் முரண்டு பிடிப்பார்கள்!
கடைசி வரை மசிய மாட்டார்கள்!!  பெற்ற மகனின் நலன் கண்ணுக்குத் தெரியாது! மார்க்க நலனும் கண்ணுக்குத் தெரிவதில்லை!

இறுதியில் இறைவனை அஞ்சும் அந்த இளைஞர்கள் என்ன செய்வார்கள்?
தான் விரும்பிய இறையச்சமிக்க பெண்ணை மணம் முடிக்கிறார்கள்! மஹர் கொடுத்துக் கரம் பிடிக்கிறார்கள்! இறை விருப்பத்துக்கேற்ற முறையில் திருமணத்தை நடத்துகிறார்கள்!

இவர்கள் எளிமையாக வாழ்கிறார்கள்; ஆனால் அடிமைகளாக வாழவில்லை! பெரிய சொத்துக்கள் இல்லை தான்! ஆனால் சுதந்திரம் இருக்கின்றது! பெரிய வீடு என்று ஒன்று இல்லை தான்! ஆனாலும் வாடகை வீட்டில் மன நிம்மதியுடன் வாழ்கிறார்கள்!

இரண்டாவது -

மார்க்கத்தைப் பின்பற்றும் கணவன் மனைவியர்! மார்க்கத்தைப் பின்பற்றும் பெற்றோர்! இந்தப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் திருமண விஷயங்களில் தலையிடுவதை விரும்பாமல் – அவர்களை சற்று தூரவே வைத்து அழகு பார்ப்பவர்கள். பிள்ளைகளும் அடிக்கடி வந்து பெற்றோர்களை கவனித்துக் கொள்கின்றார்கள். பெற்றோருக்குச் செய்திட வேண்டிய உரிமைகளை நிறைவேற்றித் தருவதில் எந்தக் குறையும் இவர்கள் வைப்பதில்லை! மாமியார் நாத்தனார் பிரச்னைகள் இங்கு அறவே கிடையாது!

மூன்றாவது -

மார்க்கத்தைப் பின்பற்றும் கணவன் மனைவியர்! மார்க்கத்தைப் பின்பற்றும் பெற்றோர்! ஆனால் கணவன் மனைவி கணவனின் பெற்றோர் அனைவரும் ஒரே இல்லத்தில் வசிப்பவர்கள்.

இங்கே கணவனின் பெற்றோர்கள் மிக நல்லவர்கள்! மருமகளை நன்றாக கவனித்துக் கொள்கிறார் மாமியார்! மகனின் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கிறார்கள்! கணவன் மனைவியர் இல்லற விஷயங்களில்  தலையிடுவதே இல்லை!

இப்படிப்பட்ட கணவன் மனைவியருக்கு நாம் சொல்லும் அறிவுரைகள்:

1. பெற்றவர்களுக்கு கண்ணியம் அளித்திடுங்கள். மரியாதையான சொற்களால் உரையாடுங்கள். அவர்களிடம் பணிவைக் காட்டுங்கள். அவர்களுக்குப் பணிவிடை செய்திடுங்கள்.

2. பெற்றோர்கள் அனுபவம் மிக்கவர்கள். அவர்களின் அனுபவங்களில் இருந்து நீங்கள் பாடம் படித்துக் கொள்தல் நலமே! அவர்கள் அறிவுரை பகர்ந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் இயன்றவரை!

3.  சின்னச் சின்ன விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் உங்கள் பெற்றோரிடம் போய் நின்று கொண்டிருக்காதீர்கள்; உங்கள் இல்லற வாழ்வின் சவால்களை முடிந்த மட்டும் நீங்களே சந்தித்து சாதித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

4.  எல்லா நேரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை! சில சமய்ங்களில் உங்கள் கணவருக்கும் அவரது பெற்றோருக்கும் கூட ஏதாவது கருத்து வேறுபாடு தோன்றலாம். அது போன்ற சமயங்களில் உங்கள் கணவரே, தன் பெற்றோரை “விமர்சித்துப் பேசினால்” – அதனை அனுமதிக்காதீர்கள். செல்லமாக அதனைத் தடுத்து விடுங்கள்.

5. மனைவியால் கணவனின் பெற்றோருக்கு சில சமயங்களில் பணிவிடை செய்ய இயலாமல் போகலாம். அப்போது அதனை மனைவி போய் தனது மாமியிடம் – “இப்போது என்னால் முடியாது மாமி!” என்று சொல்வதை விட கணவன் தன் தாயிடம் போய் -  “இன்றைக்கு அவளுக்கு உடல் நலம் இல்லையம்மா! வேறு ஏற்பாடு செய்து தருகிறேன்!” என்று சொல்வதே விவேகம்!
மற்ற படி அன்பு, கண்ணியம், பணிவிடை, இரக்கம் – போன்ற அருமையான

இஸ்லாமிய நற்குணங்களால் இல்லத்தை மகிழ்ச்சிகரமாகக் கொண்டு செல்வதற்கு கணவனுக்கும் மனைவிக்கும் பொறுமை (Sabr) மிக அவசியம்!

வாழ்த்துக்கள் இவர்கள் அனைவருக்கும்!

Comments