நூல்: சுன்னத்தான இல்லறம் - பகுதி 7

கணவன்- மனைவி கருத்துப் பரிமாற்றம் 



குர்ஆன் கற்றுத்தரும் கருத்துப் பரிமாற்றம்!

கருத்துப் பரிமாற்றம் – அதாவது Communication Skill.

இது குறித்து இன்று நிறைய பேசப் படுகின்றது. அதாவது நாம் சொல்ல வருகின்ற ஒரு கருத்தை மற்ற ஒருவருக்கு அல்லது பலருக்குப் புரிய வைக்கும் திறமை என்று இதனை விளக்கலாம்.


இந்தக் கருத்துப் பரிமாற்றத்தைப் பொறுத்தவரை நம்மில் பலர் பல தவறுகளை நமது அன்றாட வாழ்விலேயே செய்து வருகின்றோம்.

”ஹிமானா! அதை எடுத்து வாம்மா இங்கே?”

எதை எடுத்து வருவாள் ஹிமானா?

ஏங்க… அன்னைக்கி கொடுத்தேனே… அதை எங்கங்க வச்சீங்க? – மனைவி.

அன்னைக்கி என்ன கொடுத்தாங்க கணவனிடம்?

அந்த சீட்டைப் போய் கொடுத்து விட்டு வரச் சொன்னேனே… ஏம்மா இன்னும் கொடுக்கவில்லை? நம்மைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்? அவர்கள் நமக்கு எவ்வளவு உதவிகள் செய்திருக்காங்க? இதக் கூட ஏம்மா செய்ய மாட்டேங்கறே? – கணவன் மனைவியிடம்.

எந்த சீட்டு அது?

இது போன்ற தெளிவற்ற உரையாடல்களை நம்மில் படித்தவர், படிக்காதவர் வேறுபாடு இன்றி எல்லாரும் செய்து வருகின்றோம்.

இல்லற வாழ்வில் கணவனுக்கும், மனைவிக்கும், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் கூட இந்தக் கருத்துப் பரிமாற்றத் திறன் மிக அவசியம்.

கருத்துப் பரிமாற்றம் குறித்து திருமறை குர்ஆன் நமக்குக் கற்றுத் தருகிறது என்று பார்ப்போம்.

குர்ஆன் கற்றுத் தரும் கருத்துப் பரிமாற்றம்

மிக மிக அழகாகப் பேசுங்கள்:

இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள். (2:83)

மென்மையாகப் பேசுங்கள்:

“நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான். “நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.” (20:43- 44)

நேர்மையாகவும் நேரிடையாகவும் பேசுங்கள்:

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (33:70)

விவேகத்துடம் பேசுங்கள்:

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (16: 125)

ஆக, அழகு, மென்மை, நேர்மை, விவேகம் – இந்நான்கும் குர் ஆன் கற்றுத் தரும் கருத்துப் பரிமாற்றத் திறமையின் அடிப்படைகள் ஆகும்!



கணவன் மனைவி – கருத்துப் பரிமாற்றம்: தேவை – விவேகம்!

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (16:125)

ஆமாம்! கணவன் மனைவி கருத்துப் பரிமாற்றத்தின் வெற்றிக்கு விவேகம் மிக முக்கியம்.

எப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் பேச இருக்கின்றோம்? நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கக் கூடிய மன நிலையில் துணைவர்/ துணைவி இருக்கின்றாரா? – என்பதிலெல்லாம் கவனமாக இருந்திட வேண்டும்.  .

பாதகமான ஒரு சூழ்நிலையில் கருத்துக்கள் பரிமாற்றப் பட்டால் விளைவு எதிர்விளைவாக ஆகி விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

உங்கள் மனைவியிடம் பேச வேண்டுமா? அவருடைய குறைகள் குறித்துப் பேச வேண்டியுள்ளதா? அதற்கு எப்படிப்பட்ட சூழ்நிலை தேவை?

1. தனிமையான சூழல் இதற்கு அவசியம். மற்றவர்களுக்கு முன்னால் நமது உபதேசங்களைத் தொடங்கி விடக் கூடாது. மனைவியின் கண்ணியம் பாதிக்கப் படலாம்.

2. மனைவி உணர்ச்சி வசப்பட்டிருக்கும் சமயத்திலும் புத்திமதி சொல்லக் கூடாது. ஒன்றுமே மனதில் ஏறாது!

3. மனைவி வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் நேரமும் சரியானதல்ல! சமையலின்போதும் வேண்டாம். தொலைக்காட்சி பார்க்கும் போதும் வேண்டாம்.

4. மனைவி மகிழ்ச்சியோடு இருக்கும் சமயத்தை சமயோசிதமாகப் பயன் படுத்தலாம்.

அது போலத் தான் – ஒவ்வொரு சூழ்நிலையிலும் – இது பொறுத்தமான நேரம் தானா என்று நாம் கவனித்துப் பேசிட வேண்டும்.

பொருத்தமான சூழ்நிலையில், பொருத்தமான குரலில், பொருத்தமான அளவுக்கு மட்டும் பேசுதல் விவேகம் ஆகும்.

விவேகத்தை எப்படிக் கற்பது?

இதற்கும் பயிற்சி தேவை. நமது அனுபவங்களையும், பிறர் அனுபவங்களையும் பாடமாக்கிக் கொண்டு விவேகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.



கணவனுக்கும் வெற்றி! மனைவிக்கும் வெற்றி!

நீங்கள் ஒரு வரிசையில் (queue) நிற்கிறீர்கள். மெதுவாக நகர்கிறது அந்த வரிசை. இப்போது உங்கள் முறை. திடீரென்று ஒருவர் உங்களுக்கு முன்னால் குறுக்கே புகுந்து விடுகிறார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒன்று – நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் மென்மையானவர்(?). குறுக்கே புகுந்தவர் தன் காரியத்தை கன கச்சிதமாக முடித்துக் கொண்டு போய் விடுகிறார். இதற்குப் பெயர் மென்மை அல்ல! இது கையாலாகாத் தனம். Passiveness.

அல்லது – நீங்கள், “ஏய், முட்டாள்! என்னாச்சு உனக்கு? நாங்கள்ளாம் வரிசையிலே நிக்கிறது கண்ணுக்குத் தெரியலையா?” என்று கேட்கிறீர்கள். இதுவும் தவறு. அது முரட்டுத் தனம். Aggressiveness.

அப்படியானால் எப்படி நடந்து கொள்வது சிறப்பு என்கிறீர்களா?

நீங்கள் குறுக்கே புகுந்தவரிடம் அவருடைய முகத்தை நோக்கி உறுதியான ஒரு பார்வையுடன், “மன்னிக்கவும்! இப்போது எனது முறை!” என்று கூறுகிறீர்கள். அவ்வளவு தான். அவர் நகர்ந்து விடுகிறார். வார்த்தைகளில் கடுகடுப்பு தேவை இல்லை. குரல் உயர்த்திடத் தேவையில்லை. கொஞ்சம் Seriousness. அவ்வளவு தான். இந்த அணுகு முறையைத் தான் assertive communication என்கிறார்கள். அதாவது தன் நிலையை உறுதிப் படுத்திக் கொண்டு பேசிடும் முறை.

கணவன், மனைவி, மூன்று குழந்தைகளைக் கொண்டதொரு குடும்பம் அது. கணவன் மது அருந்துகிறான். மனைவியைப் போட்டு அடிக்கிறான். குழந்தைகளைக் கன்னா பின்னாவென்று திட்டுகிறான். இது ஒரு தொடர்கதை.

மனைவி என்ன செய்வாள்? இந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது அவள் எங்கேயும் படித்துக் கொள்ளவில்லையே! ஏதோ அவளுக்குத் தெரிந்தவரையில் கணவனைத் திருத்த முயற்சி செய்கிறாள். கணவன் திருந்திடத் தயாராக இல்லை. மனைவி தன் குழந்தைகளுடன் தற்கொலையை நாடுகிறாள். இதுவே இங்கே அன்றாட நடப்பாகி விட்டது.

சில மனைவிமார்கள், கணவன் எப்படியும் போகட்டும் என்று விதியின் மீது பழியைப் போட்டு விட்டு கணவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்கிறாள். இது தான் நாம் முன்பு குறிப்பிட்ட கையாலாகாத் தனம். இங்கே கணவனுக்கு வெற்றி(?). மனைவிக்குத் தோல்வி! (I lose – You win).

ஆனால் இதே போன்ற சூழ்நிலையில் வேறொரு மனைவி எப்படி நடக்கிறாள் பாருங்கள். பொறுமையாகப் பல தடவை சொல்லிப் பார்த்தும் கணவன் திருந்துவதாகக் காணோம்.

ஒரு நாள் கணவன் நிதானமாக இருக்கும் சமயமொன்றைத் தேர்வு செய்து அவன் அருகில் வந்து, “இங்கே பாருங்கள், நான் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு எப்படிப்பட்டது என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் அதற்காக நீங்கள் குடித்து விட்டு வந்து, அந்த போதையில் என்னிடமும், குழந்தைகளிடமும் நடந்து கொள்ளும் முறையை இனியும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.

குழந்தைகளுக்கு நாம் என்ன எதிர்காலத்தைக் கொடுக்கப் போகிறோம்? எப்படிப்பட்ட குழந்தைகளை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? அவர்கள் பெரியவர்கள் ஆனால் அவர்களும் உங்களைப் போன்று ஆகி விடுவதை நான் அனுமதிக்க முடியாது. நீங்கள் குடிப்பதை நிறுத்தவில்லையென்றால், என்னையும் குழந்தைகளையும் திட்டுவதையும் அடிப்பதையும் நிறுத்தவில்லை என்றால் – அடுத்து நான் காவல் துறையைத் தான் அணுகிட வேண்டியிருக்கும் என்றால் அதற்கும் கூட நான் தயங்கிட மாட்டேன்”.

உறுதியாகச் சொல்லி விடுகிறாள் மனைவி. குரலை உயர்த்தி கத்திப் பேசி ஊரைக் கூட்டிடவில்லை! திட்டவில்லை; கணவனை மிரட்டிடவில்லை. கணவன் மீது தான் வைத்திருக்கும் அன்பையும் வெளிப் படுத்தத் தவறிடவில்லை.

இங்கே கணவன் திகைத்துப் போய் விடுகிறான். ஒரு கணம் சிந்திக்கின்றான். மனைவியை உற்றுப் பார்க்கிறான். அவள் முகத்தில் கோபம் தெரியவில்லை. ஆனால் அவள் தன் நிலையில் உறுதியாக இருக்கிறாள் என்பது புரிகிறது. கணவனை அதே நிலையில் விட்டு விட்டு நகர்கிறாள் மனைவி.

அன்று திருந்தியவன் தான் அவன்! அல்ஹம்து லில்லாஹ்! இங்கே இருவரும் வெற்றி பெற்று விடுகிறார்கள் (I win – You also win).

தன் நிலையில் உறுதியுடன் பேச வேண்டிய சமயத்தில் பேச வேண்டிய முறையில் பேசுபவர்கள் – தன்னம்பிக்கை உடையவர்களாகத் திகழ்கிறார்கள். தன் உரிமைகளை யாருக்கும் அவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. மற்றவர்களால் மதிக்கப் படுகின்றார்கள். வாழ்வில் வெற்றியும் பெறுகின்றார்கள்.

இந்த assertiveness பயிற்சி குழந்தைப் பருவத்திலேயே கொடுக்கப் படுதல் சாலச் சிறந்தது.

உங்கள் பெண் குழந்தை. மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். மதிய உணவு தயாரித்துக் கொடுத்து அனுப்புகிறீர்கள். ஆனால் மாலையில் வீட்டுக்கு வரும் உங்கள் மகள், “நான் சாப்பிடத் துவங்கும் போது, மற்ற மாணவர்கள் ஓடி வந்து என் உணவை எடுத்துச் சாப்பிட்டு விடுகிறார்கள்; எனக்கு ஒன்றையுமே அவர்கள் விட்டு வைப்பதில்லை அம்மா!” என்கிறாள். இதுவும் ஒரு தொடர்கதை! பெற்றோர்களாகிய நீங்கள் என்ன செய்வீர்கள்?

அன்பு மாணவியரே! நீங்கள் கல்லூரி ஒன்றில் படிக்கிறீர்கள். சக மாணவன் ஒருவன் உங்களைச் சீண்டுகின்றான். அவனிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்?

இந்தத் திறமை கைவரப் பெற தொடர் பயிற்சியும் முயற்சியும் தேவை. ஆனால் முயற்சித்துப் பார்த்து விட்டு இடையில் விட்டு விடுபவர்களே நம்மில் அதிகம்!

ஆனால் எந்த அளவுக்கு முயற்சிக்கிறோமோ அந்த அளவுக்கு வெற்றியும் நிச்சயம்!




சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!

கணவன் மனைவி இருவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் கடுமையான கருத்து வேறுபாடு. கோப உணர்ச்சி கொப்பளிக்கிறது.

அது குறித்துப் பேசி விடலாம் என்று கணவனோ அல்லது மனைவியோ நினைக்கிறார்கள். ஆனால் அதற்குத் தகுந்த சூழல் ஒன்றை அவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லா இடங்களிலும் அவர்கள் தங்கள் பேச்சைத் துவங்கி விடக்கூடாது.

ஒரு சூழ்நிலை.

கணவனும் மனைவியும் வீட்டில்…

“ஏம்மா! சாயங்காலம் அஞ்சு மணிக்கு ரெடியாக இரு! பீச்சுக்குப் போகலாம்! இது கணவன்.

ஆமா! அது ஒண்ணு தான் குறைச்சல்!” இது மனைவி.

ஆமாம்மா! உன் கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு; பீச்சிலே பேசுவதற்கு வசதியாக இருக்கும்ல!

ஆமாம்! நீங்க பேசிக் கிழிச்சதெல்லாம் போதும்!

உடனே கணவன் தன் மனைவியைக் கோபமாகத் திட்ட மனைவியும் பதிலுக்குத்திட்ட இந்த இந்த “அழகிய உரையாடலைக்” காதில் வாங்குவது யார் யார்?

அவர்களுடைய பன்னிரெண்டு வயது மகள்! ஹாலில் அமர்ந்து கொண்டு பாடம் படித்துக் கொண்டிருக்கின்றாள்.

கணவனின் தம்பி மனைவி! தம்பியின் அறையிலிருந்து சமையலைக்குச் செல்லும் சமயத்தில் அவர் காதிலும் விழுகிறது!

இங்கே கணவனின் ஈகோ தலையெடுக்குமா எடுக்காதா?

சுர்ர்ரென்று கோபம் தலைக்கேறிய கணவன் என்ன செய்வான்?

“உன்னிடம் பேச நினைத்தேனே! என்னைச் செருப்பால் தான் அடித்துக் கொள்ள வேண்டும்!”

“ஆமா! அது ஒன்னு தான் பாக்கி!”

***

எனவே தான் சொல்கிறோம்: சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!

எந்தெந்தச் சூழலிலெல்லாம் அவர்கள் பேசிடக் கூடாது?

வீட்டில் மற்ற உறவினர்கள் இருக்கிறார்களா? அவர்களுக்கு மத்தியில் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் குறித்து வாய் திறக்க வேண்டாம். அங்கே ஈகோ தலையெடுக்கத் துவங்கி விடும்.

குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு உங்கள் விவாதங்களைத் தொடங்கிட வேண்டாம். அது அவர்களை மிகவும் பாதிக்கும்.

வீட்டில் குழந்தைகளும் இல்லை; உறவினர்களும் இல்லை. நீங்கள் இருவர் மட்டும் தனியே என்றாலும் கூட உரத்தக் குரலில் இருவரும் பேசிட வேண்டாம். அக்கம்பக்கத்தார் இருக்கிறார்கள்.

கணவன் மனைவி இருவரும் பஸ் அல்லது ரயிலில் பயணிக்கிறீர்களா? சுற்றிலும் பயணிகள் சூழ்ந்திருக்க நீங்கள் உங்கள் பாட்டுக்கு உங்கள் கருத்து வேறுபாடுகளைப் பேசிடத் துவங்கி விடாதீர்கள்.

அல்லது நீங்கள் இருவருமாக காரில் செல்கிறீர்களா? நீங்களே ஓட்டுனர் என்றால் பரவாயில்லை. ஆனால் காரை ஓட்டுவது ஒரு டிரைவர் எனில் உங்கள் குடும்ப விஷயங்களைப் பேசாதீர்கள். அங்கே டிரைவர் நீங்கள் பேசுவதை உற்றுக் கேட்கக்கூடும்.

வெளியே இருவரும் நடந்து செல்கிறீர்களா? முன்னும் பின்னும் யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டு பேச்சைத் துவக்கி விடாதீர்கள். “ஆமா! யாரு நாம பேசுறத கேட்டுக்கிட்டு இருக்காங்க?” என்று உங்கள் துணை பேசத் தொடங்கினால் பதில் பேசாதீர்கள்.

குடும்ப விஷயங்களை கடைகளில் பொருட்கள் வாங்கும் சமயத்திலும் பேச வேண்டாம்!

கணவன் – மனைவி கருத்துரையாடலுக்கு மேற்கண்ட சூழ்நிலைகளை நாம் தவிர்க்கச் சொல்வதற்குக் காரணம் – ஒருவர் மானத்தை மற்றவர் காத்திட வேண்டும் என்பதற்காகத் தான்.

சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் பேசத் தொடங்கினால் என்னவாகும்? சாதாரணமாகத் தான் பேச்சு தொடங்கும். ஒரே ஒரு வார்த்தை உங்கள் உரையாடலை – விவாதமாக மாற்றி விடும்! அடுத்து என்ன நடக்கும் என்று நாம் சொல்லத் தேவையில்லை.

கணவனோ அல்லது மனைவியோ – இருவரில் ஒருவர் எதற்கெடுத்தாலும் “சண்டை போடக்கூடிய” மனிதராக இருந்து விட்டால் கேட்கவே வேண்டியதில்லை. மேற்கண்ட சூழ்நிலைகளில் எதுவாக இருந்தாலும் – பேசுவதைத் தவிர்த்திடா விட்டால் அது கணவன் மனைவி உறவை மேலும் சிக்கலாக்கி விடும்.

எனவே தான் சொல்கிறோம்: சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!

Comments