நூல்: சுன்னத்தான இல்லறம் - பகுதி 9

கணவன் - மனைவி - உணர்வுகளும் உணர்ச்சிகளும்!



உங்கள் மனைவியை நீங்கள் புரிந்து வைத்திருக்கின்றீர்களா?

நமது வாழ்க்கைத்துணையின் உள் உணர்வுகளைப் புரிந்து கொள்தல் சிறப்பானதொரு இல்லற வாழ்க்கைக்கு மிக அவசியம்.

நமது துணை – கோபமாக இருக்கின்றாரா?

கவலையுடன் இருக்கின்றாரா?

அவர் மனம் புண்பட்டிருக்கின்றதா?

- என்பதையெல்லாம் மிகத்துல்லியமாகக் கணித்து விடுதல் – கணவன் – மனைவி உறவை மிக அழகாக்கி விடும்.

அழகான நபிமொழி ஒன்றை வைத்து இதனைப் புரிந்து கொள்வோம்.

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள்.

அதற்கு நான், ‘எப்படி நீங்கள் அறிந்துகொள்வீர்கள்?’ என்று கேட்டேன்.

அதற்கவர்கள், ‘என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), ‘முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்!

என் மீது கோபமாய் இருந்தால், ‘இப்ராஹீம்(அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று கூறினார்கள்.

நான், ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீதுன்று)” என்று கூறினேன். (புகாரி – 5228)

இது ஆழமாக சிந்தித்திட வேண்டிய ஒரு நபிமொழியாகும்.

இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்தும் பாடம் என்னவெனில் – கணவன்-மனைவியர் ஒவ்வொருவரும் – தம் துணையின் உள் மனத்து உணர்வுகளை மிகச்சரியாக புரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான்!

இவ்வாறு புரிந்து கொள்வதை ஆங்கிலத்தில் attunement என்று சொல்கிறார்கள். தமிழில் “புரிந்துணர்வு” என்று சொல்லலாம்.

உணர்வுகளைப் புரிந்து கொள்வது தான் புரிந்துணர்வு!

நாம் இங்கே சொல்ல வருவது – உங்கள் கணவருக்குப் பிடித்த கலர் எது? உங்கள் மனைவிக்குப் பிடித்த உணவுப் பண்டம் எது? என்பன போன்ற சாதாரண விஷயங்கள் குறித்து அன்று.

நாம் இங்கே வலியுறுத்திச் சொல்ல வருவது – “உணர்வுகள்” சம்பந்தப்பட்ட ஒரு சூழலை – உங்கள் துணைவர் எவ்வாறு எதிர்கொள்வார்? அவர் எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்துத் தான்.

உணர்வு சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட சூழலில் உங்கள் துணைவர் ஒன்றைப் பேசிட நினைக்கிறார். அவர் என்ன பேசுவார் என்பது உங்களால் ஊகித்து விட இயல வேண்டும்.

ஒரு விஷயம் உங்கள் துணையை எவ்வாறு பாதிக்கும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒரு தோல்வியை அவர் எவ்வாறு எடுத்துக் கொள்வார்?

ஒருவரால் அவமானப்படுத்தப் படுவதை (hurt) எவ்வாறு எதிர்கொள்வார்?

எந்த விஷயங்கள் எல்லாம் அவரைக் கோபப்படுத்தும்? – இவை எல்லாம் உங்களுக்குத் தெள்ளெனத் தெரிந்து இருக்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலான கணவன் மனைவியருக்கு இப்படிப்பட்ட புரிதல் இல்லை என்பது கசப்பான ஒரு உண்மை.

கணவன் மனைவியருக்கு இடையே இப்படிப்பட்ட புரிந்துணர்வு இல்லாமல் போய் விட்டால் – அது அவர்களின் உறவில் விரிசலை நிச்சயம் ஏற்படுத்தும்!

சரி, அப்படியானால் ஒருவர் தன் துணையின் உள் மன உணர்வுகளை புரிந்து கொள்ள என்ன செய்திட வேண்டும்?

அடுத்து வரும் கட்டுரையில் பார்ப்போமே! – இன்ஷா அல்லாஹ்



மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

ஒருவர் தன் துணையின் உள் மன உணர்வுகளை புரிந்து கொள்ள என்ன செய்திட வேண்டும்?

உங்கள் துணையின் பக்கம் நீங்கள் முழுமையாகத் திரும்பிட வேண்டும்! அவர்களுக்கென்று நேரம் ஒதுக்கிட வேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகை முடிந்தவுடன் தம் துணைவியரிடம் செல்வார்கள். அப்போது அவர்களில் சிலருடன் நெருக்கமாக இருப்பார்கள். அவ்வாறே (ஒருநாள்) தம் துணைவியாரான ஹஃப்ஸாவிடம் சென்று வழக்கமாகத் தங்கும் நேரத்தைவிட அதிக நேரம் தங்கினார்கள். (புகாரி – 5216)

உங்களவருடன் நீங்கள் அனுசரணையாகப் பேசிட வேண்டும். அவர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டிட வேண்டும்.

நபியவர்களிடம் யாராவது பேசினால் – அவர் பேசி முடியும் வரை – அமைதியாகக் காது கொடுத்துக்கேட்பார்கள் என்பது நபிமொழி;

உங்களவர் பேசும்போது – குறுக்கிட்டுப் பேசக்கூடாது. அவர் கருத்துக்களை மறுத்துப் பேசிடக்கூடாது. பேச்சைத் திசைத் திருப்பிடக் கூடாது.

உங்களவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ள எடுத்துக் கொள்ளும் விஷயம் உங்களுக்கு “அற்பமானதாக” இருக்கலாம்! ஆனால் அதனை அப்படியே அலட்சியப் படுத்தி விடக்கூடாது. “இதற்குப்போய் ஏன் அலட்டிக் கொள்கிறார் இவர்?” – என்று எண்ணி விடக் கூடாது.

மாறாக – அந்தச் சின்ன விஷயம் உங்கள் துணையை எப்படிப் பாதித்திருக்கின்றது என்பதையே நீங்கள் கவனித்திட வேண்டும்.

உங்களவருடைய உணர்வுகளை உதாசீனம் செய்திடக் கூடாது. அவர் நிலையில் உங்களை வைத்து (empathy) – அவர் தம் மன நிலையைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

உங்களவரின் முக பாவனை, பேச்சின் தொனி, கண்கள் சொல்லும் சேதி, உடல் மொழி (body language) – அனைத்தையும் உற்று கவனித்திட வேண்டும். அவருடைய உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிப்பதை அவர் உணரச் செய்திட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்திட்டால் – உங்கள் துணையின் உள் மனத்து உணர்வுகளை நீங்கள் துல்லியமாகக் கணித்திட முடியும். அதற்குத் தக நடந்து கொள்ளவும் முடியும்.

உங்களுக்குள் காதலை வளர்த்திடவும், நம்பிக்கையை (trust) உருவாக்கிடவும், உறவை சிறக்க வைத்திடவும் – இதுவே மிகச் சிறந்த வழியாகும்!

அடுத்து ஒரு சூழ்நிலையை முன் வைத்து இதனை மேலும் விளக்குவோம்.



புரிந்துணர்வு உள்ள கணவரா நீங்கள்?

சூழ்நிலை ஒன்றை கவனியுங்கள்: (பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே)

இங்கே ஒரு மனைவி – காமிலா. கணவன்: நாஸர்.

நாஸரின் சகோதரி – நபீலா.

காமிலாவுக்கு தன் கணவனின் சகோதரி நபீலாவின் பல செயல்பாடுகள் எரிச்சலை உண்டாக்கும். சூழ்நிலை அறிந்து பேசத் தெரியாதவர்.

ஒரு தடவை நபீலா தனது அண்ணன் நாஸர் வீட்டுக்கு வருகிறார். வீட்டில் நாஸர் இல்லை. காமிலா மட்டுமே வீட்டில். உரையாடல் நபீலாவுக்கும் காமிலாவுக்கும் தான்.

நபீலா: காமிலா! நேற்று ஆஸ்பிட்டல் போயிருந்தேனா, ஒரே கூட்டம். அம்மாவுக்கு முதுகு வலி. ஆஸ்பிட்டல் வர இயலவில்லை; லேடி டாக்டரிடம் மருந்து எழுதி வாங்கி வா என்று என்னை அனுப்பி விட்டார்கள். டோக்கன் போடச் சொன்னார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் – ஒரு ஐடியா வந்தது. உன் வாப்பா பெயரைச் சொல்லி டக்கென்று உள்ளே நுழைந்து விட்டேன். (காமிலாவின் வாப்பாவுக்கு அந்த டாக்டர் குடும்பம் மிகவும் பழக்கமான குடும்பம்.) டாக்டர் டோக்கன் கேட்கவில்லை. ஒரு மாதிரி பார்த்து விட்டு மருந்து எழுதித் தந்தார். உடனே திரும்பி விட்டேன். இல்லாவிட்டால் மணிக்கணக்கில் யார் அங்கே காத்திருப்பது?

காமிலா: (சற்றே எரிச்சல் அடைந்தவராக) – ஏன்? என் வாப்பா பெயரை நீங்க தப்பா பயன் படுத்தினீங்க? அதுவும் டோக்கன் வாங்காமலேயே?

நபீலா: அதுவெல்லாம் ஒரு அர்ஜென்டுக்குத் தான் காமிலா; இதுக்கு ஏன் உனக்கு இப்படி கோபம் வருது? இதுவெல்லாம் ஒரு தப்பா? ஒரு சமயத்துக்கு இப்படி செய்றதெல்லாம் தப்பே கிடையாது! தேவைப்பட்டா உங்க வாப்பா பெயரையும் பயன்படுத்துவேன்; உங்க உம்மா பெயரையும் பயன்படுத்துவேன்!

காமிலாவுக்குக் கோபம் தலைக்கேற – பேச்சு வாக்குவாதமாக மாற – நபீலா காமிலாவைத் திட்டிக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.

என்ன திமிர் இவளுக்கு? – என்று மனதுக்குள்ளேயே புழுங்குகிறார் காமிலா.

கணவர் வீட்டுக்கு வந்ததும் மனைவியைக் கவனிக்கிறார். மனைவியின் முகத்தில் ஒரு வாட்டம்.

காமிலா தன் கணவனிடம் அனைத்தையும் சொல்கிறார்.

இப்போது கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எப்படி நடந்து கொள்ளக் கூடாது?

புரிந்துணர்வு கொண்ட கணவன் எப்படி பேசுவார்; புரிந்துணர்வு இல்லாத கணவன் எப்படி நடந்து கொள்வார் என்று இரண்டு முன்மாதிரிகளையும் இங்கே பார்ப்போம்.

காட்சி 1:

காமிலா: காலையிலே உங்க தங்கை வந்திருந்தாங்களா…. டாக்டர்கிட்ட மாமிக்கு மருந்து எழுதி வாங்குவதற்கு – டோக்கன் வாங்காமலேயே – என் வாப்பா பெயரை பயன்படுத்தி மருந்து வாங்கிட்டு வந்தாங்களாம். ஏங்க என் வாப்பா பெயரைத் தவறாக பயன்படுத்தினீங்கன்னு கேட்டா – இதுவெல்லாம் ஒரு தப்பா? ஒரு சமயத்துக்கு இப்படி செய்றதெல்லாம் தப்பே கிடையாது! தேவைப்பட்டா உங்க வாப்பா பெயரையும் பயன்படுத்துவேன்; உங்க உம்மா பெயரையும் பயன்படுத்துவேன் – என்று அவங்க இஷ்டத்துக்குப் பேசுறாங்க! இது நல்லாவா இருக்கு?

நாஸர்: நபீலாவப் பத்தித் தான் உனக்கு நல்லா தெரியுமில்ல? ஏன் அவளிடம் போய் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிற! விடும்மா அத! போய் நல்லா ரெண்டு டீ போட்டு எடுத்துக்கிட்டு வா! குடிப்போம்!

இந்த பதில் காமிலாவுக்கு திருப்தி அளிக்குமா? நிச்சயமாக அளிக்காது! இங்கே கணவன் மனைவிக்குச் சொன்னது “அறிவுரை!”. மனைவியின் உள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வழங்கப்பட்ட அறிவு+உரை!

காமிலா என்ன பதில் சொல்வார்?

“உங்க அட்வைஸ்க்காகவா இதனை நான் உங்களிடம் சொன்னேன்?”

விருட்டென்று எழுந்து அடுக்களைக்குச் சென்று விடுகிறார். “இவருக்குத் தேவையெல்லாம் டீயும் சாப்பாடும் தான்!”

இந்தக் கணவரே புரிந்துணர்வு இல்லாத கணவர். No attunement!

காட்சி 2:

காமிலா: காலையிலே உங்க தங்கை வந்திருந்தாங்களா…. டாக்டர்கிட்ட மாமிக்கு மருந்து எழுதி வாங்குவதற்கு – டோக்கன் வாங்காமலேயே – என் வாப்பா பெயரை பயன்படுத்தி மருந்து வாங்கிட்டு வந்தாங்களாம். ஏங்க என் வாப்பா பெயரைத் தவறாக பயன்படுத்தினீங்கன்னு கேட்டா – இதுவெல்லாம் ஒரு தப்பா? ஒரு சமயத்துக்கு இப்படி செய்றதெல்லாம் தப்பே கிடையாது! தேவைப்பட்டா உங்க வாப்பா பெயரையும் பயன்படுத்துவேன்; உங்க உம்மா பெயரையும் பயன்படுத்துவேன் – என்று அவங்க இஷ்டத்துக்குப் பேசுறாங்க! இது நல்லாவா இருக்கு?

நாஸர்: “ஏன் இப்படி நபீலா நடந்துக்கிறா? ஒருவருடைய பெற்றோர் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினால் யாருக்குத் தான் கோபம் வராது? உன்னுடைய கோபத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது காமிலா! உன் பெற்றோர்களை நீ எப்படி மதிக்கிறாய் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

காமிலா சற்றே ஆறுதல் அடைகிறார்.

“சரி, விட்டுத் தள்ளுங்க! என்ன, டீ போட்டு எடுத்துக்கிட்டு வரவா?

இங்கே என்ன நடந்தது?

கணவன் முற்றிலும் தன் மனைவியின் உள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உரையாடியதால் – அந்த விஷயம் அத்துடன் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது.

மனைவி என்ன நினைக்கிறார்? என் கணவன் என்னைப் புரிந்து வைத்திருக்கின்றார்! என் உணர்வுகளைப் புரிந்து வைத்திருக்கிறார். என்னையும் என் பெற்றோர்களையும் மதிக்கிறார். நான் ஏதாவது எதிர்மறை உணர்வுகளுக்கு ஆட்பட்டால் நான் ஆறுதல் அடைய என் கணவன் எப்போதுமே எனக்கென்று இருக்கின்றார்!!

***
இங்கே கவனித்திட வேண்டியது என்னெவென்றால் – கணவன் தன் மனைவிக்கு “அறிவுரை” வழங்கவே இல்லை! மனைவி அப்படிப்பட்ட ஒரு அறிவுரையை எதிர்பார்க்கவும் இல்லை!

இந்த இரண்டாம் கணவன் பின்பற்றியது தான் நபிவழியாகும் என்றால் வியப்பாக இல்லை?

நபியவர்களின் ஒரு மனைவிக்குக் கோபம். ஆனால் நபியவர்கள் அந்த சமயத்தில் மனைவிக்கு எந்த அறிவுரையும் வழங்கிடவில்லை!

பின்வரும் நபிமொழி இதனை நமக்குக் கற்றுத்தருகிறது:

நபியவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். வீட்டிலிருந்த நபி அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள்.

நபி அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலீ) நூல்: புகாரீ 2481

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் வீட்டில் இருந்த போது தான் இச்சம்பவம் நடந்தது. நபியவர்களுக்கும், நபியவர்களின் தோழர்கள் சிலருக்கும் – ஆயிஷா அவர்களே உணவு சமைத்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்நேரத்தில் இன்னொரு மனைவியின் வீட்டிலிருந்து உணவு வந்ததும் ஆயிஷா அவர்களுக்குக் கோபம் வந்து விட்டது.

இந்தச் சமயத்தில் நபியவர்களின் செயலை சற்று கூர்ந்து கவனியுங்கள்:

உணவுத்தட்டை ஓங்கி அடிக்கிறார்கள் அன்னை ஆயிஷா அவர்கள்.

தட்டு உடைகிறது, உணவுப்பண்டம் சிதறுகிறது.

நபியவர்கள் அமைதியாக அதை ஒன்று சேர்க்கிறார்கள். தோழர்களை உண்ணச் செய்கின்றார்கள். உடைந்த தட்டுக்குப் பதிலாக நல்ல தட்டு ஒன்றைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.

நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் -

நபியவர்கள் ஏன் வாயைத் திறக்கவே இல்லை?

எதிர்மறை உணர்வுகளுள் ஒன்றுக்கு ஆளாகி இருக்கும் ஒருவருக்கு - அறிவுரை சொல்வதில் எந்தப் பயனும் இல்லை!

கணவன்மார்களே! இந்த நபிவழியைச் செயல்படுத்திப் பாருங்கள்!

புரிந்துணர்வு – attunement – தாமாகவே ஏற்படும் – உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையில்!



முகத்தைத் திருப்பிக் கொள்ளாதீர்கள்!

இங்கே ஒரு மனைவி:

“ஏங்க! இன்றைக்கு மாலை சற்றே காலாற கடற்கரையில் (ஜோடியாகத் தான்!) நடந்து போய் வரலாம்; வருகிறீர்களா?”

கணவனுக்கு இதில் சற்றும் ஆர்வம் இல்லை. பதில் எதுவும் சொல்லாமல் பேச்சைத் திசை திருப்பி விடுகிறான். அமைதியாக மனதுக்குள் – “இது ஒன்னு தான் பாக்கி!” – என்று சொல்லிக் கொண்டு – “ஆமா! இன்னைக்கு உங்க அண்ணன் வந்திருந்தாரில்ல; என்ன சொன்னார்?”

மனைவிக்கு இது எப்படி இருக்கும்?

மனைவி கணவனோடு சேர்ந்து நடக்க மிகவும் ஆசைப் படுகிறார். இது உணர்வு பூர்வமான ஒரு அழைப்பு! ஆனால் முகத்தைத் திருப்பிக் கொள்கிறான் கணவன்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது – இப்படிப்பட்ட உரையாடல்கள் – கணவன் மனைவியருக்குள் அன்றாடம் நடப்பவை தானே என்று நாம் நினைத்து விடலாம். ஆனால் இப்படிப்பட்ட உரையாடல்களில் – முக்கியமான செய்தி ஒன்று உள்ளே பொதிந்திருக்கின்றது!

இந்த உரையாடலை – ஏதோ மனைவி ஆசைப்பட்டுக் கேட்டாள்; கணவனுக்கு அதில் விருப்பம் இல்லை! அவ்வளவு தான் என்று எடுத்துக் கொள்ள முடியாது,

இங்கே – இந்தக் கணவன் சொல்லாமல் சொல்கின்ற செய்தி என்ன?

- உன் ஆசைகளை நிறைவேற்ற எனக்கு நேரம் இல்லை!
- அதற்கு எனக்கு அவசியமும் இல்லை!
- எனக்கு நீ முக்கியமில்லை!
- நீ என்ன நினைப்பாய் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை!
- என்னை விட்டு விடு!

இது எதனை உணர்த்துகிறது என்றால் – கணவன் – மனைவி உறவு மிகவும் பாதிப்படைந்திருக்கிறது என்பதைத் தான்!

மாறாக – முகம் கொடுத்துப் பேசும் கணவன் என்ன பதில் தருவான் மனைவிக்கு?

நல்ல ஐடியா! நானும் தான் நினைத்துக் கொண்டிருந்தேன்! நான்கு மணிக்கெல்லாம் தயாராக இரு ஹனீ! இரவு உணவு தயாரிக்க வேண்டாம்; அப்படியே வெளியிலேயே சாப்பிட்டு விட்டு வரலாம்; ரொம்ப நாளாச்சு இல்ல?

இந்த பதில் எதனை உணர்த்துகிறது? இதில் என்ன செய்தி இருக்கின்றது?

கணவன் மனைவி உறவு மிகச் சிறப்பாக இருக்கின்றது என்பதைத் தானே!

- நீ சொல்வதை நான் கேட்கிறேன் – கண்ணே!
- உன்னுடைய தேவைகளை நான் நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றேன்!
- உனது விருப்பம் தான் எனது விருப்பமும்!
- நான் எப்போதுமே உன் பக்கம் தான்!
- உன் விருப்பத்தை நிறைவேற்றுதே என் மகத்தான ஆசை!
- உன் விருப்பத்தை நிறைவேற்றுவதை விட எனக்கு இப்போது வேறு எந்த வேலையும் முக்கியம் இல்லை!

மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கணவன் முகம் கொடுத்துப் பேசும்போது – மனைவிக்கு ஏற்படுவது மன அமைதி! – அதாவது சகீனா!

அது போலவே தான் கணவனின் உணர்வுகளுக்கு மனைவி முகம் கொடுக்கும்போது கணவனுக்கு ஏற்படுவது மன அமைதி!

சகீனா என்றால் என்ன? மன நிம்மதி என்றும் மன அமைதி என்றும் மொழிபெயர்க்கிறோம்.

திருமண வாழ்க்கை என்பதன் அடிப்படை நோக்கமே – ஒருவருக்கொருவர் மன நிம்மதி பெறுவதற்காகத் தான் என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றோம்.

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

மேற்கண்ட இறை வசனத்தில் சகீனா என்பது (தஸ்குனூ) வினைச்சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பொருள் – மன அமைதியை ஏற்படுத்துவதற்காக – என்பதாகும். ஆங்கிலத்தில் – REASSURE – to set somebody’s mind at rest – என்று மொழி பெயர்க்கலாம்.

இந்த மன நிம்மதி என்பது – ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் முடித்து விட்டாலே போதும் – அவர்களுக்குள் இந்த மன நிம்மதி என்பது தானாகவே வந்து விடும் என்று சொல்ல முடியாது!

திருமணம் முடித்த பின் ஒருவருக்கொருவர் மன நிம்மதியை அளித்திடும் வண்ணம் கணவனும் மனைவியும் நடந்து கொள்வதால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.

என் மனைவிக்கு மன நிம்மதி அளிக்கும் வண்ணம் நான் நடந்து கொள்ள வேண்டிய கடமை எனக்கு உண்டு என்று கணவன் நினைத்திட வேண்டும்!

அது போலவே – என் கணவனுக்கு மன நிம்மதி அளிக்கும் வண்ணம் நான் நடந்து கொள்ள வேண்டிய கடமை எனக்கு உண்டு என்று மனைவியும் நினைத்திட வேண்டும்!

நினைப்பது மட்டும் போதாது! அதனை செயல் படுத்திக் காட்டிடவும் வேண்டும்!

கணவனின் அழைப்புக்கு மனைவியோ, மனைவியின் அழைப்புக்குக் கணவனோ – முகம் திருப்பிக் கொள்ளும்போது – மன நிம்மதி குலைகிறது!

பின் வரும் நபி மொழிகள் நாம் அறிந்தவை தானே?

அன்னை ஆயிஷா அவர்கள் சொல்கிறார்கள்: ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ”நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?” எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) ”அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது, ”உனக்கு போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ”அப்படியானால் (உள்ளே) போ!” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 950

நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்! அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 5236

நாம் கேட்பது என்னவென்றால் – நபியவர்களை விட நாம் ஒன்றும் “பிஸி”யானவர்கள் அல்லவே?

நம்பிக்கை மோசம் – நினைத்துக் கூடப் பார்க்க வேண்டாம்!

கணவன் மனைவி உறவை பலப்படுத்துவது எது? அவர்களுக்குள் காதல் உணர்வை நிலைத்திருக்கச் செய்வது எது? அது தான் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் “நம்பிக்கை” (trust)!

ஒருவர் தனது வாழ்க்கைத்துணையை – “இனி நான் இவரை நம்பிடத் தயாரில்லை” – என்று முடிவெடுத்து விட்டால் – அவர்களின் உறவு (relationship) மிகவும் ஆட்டம் கண்டு விட்டது என்று பொருள். அவர்களின் இல்லற எதிர்காலம் இருண்டு விட்டதாக பொருள்.

இவ்வுறவை நீடிப்பதா அல்லது முடித்துக் கொள்வதா – என்று மகா குழப்பத்துக்கு ஆளாகிறார்கள் கணவன் மனைவியர்.

“இவளுடன் இல்லாமல் நான் வேறு ஒருத்தியைத் திருமணம் முடித்திருந்தால் என் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” – என்று தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கும் கணவன் தான் – வேறு பெண்களை நாடுகிறான். அது போலத்தான் மனைவியரும்.

மனைவியின் குறைகளையே துருவிக் கொண்டிருக்காமல் – அவளுடைய நிறைகளை நினைத்து – அவைகளால் தான் அடையும் “பலன்களுக்கு” நன்றியுணர்ச்சி உடையவனாக கணவன் நடந்து கொள்ளும்போது – கணவன் மனைவி நம்பகத் தன்மை உறுதி செய்யப்படுகின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு இறை நம்பிக்கையுள்ள ஆண் (கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (அவன் மனைவியை) வெறுக்க வேண்டாம்.அவன் அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால்,அவளிடமுள்ள வேறொரு நற்குணத்தைக் கொண்டு பொருந்திக்கொள்வானாக! என நபி (ஸல்) அவர்கள் ௬றினார்கள்.(முஸ்லிம்-2672)

இதற்குப் பெயர் தான் POSITIVE APPROACH!

மனைவியை வெறுப்பதற்கு பதிலாக –

“நீயே என் எதிர்காலம்! நீ இல்லாவிட்டால் என் வாழ்க்கை ஒரு பாலை வனம்; நீ ஒரு அற்புதமான தாய்! எனக்கு அற்புதமான குழந்தைகளைத் தந்தவள் நீ! நீ எனக்கு சிறந்த நண்பன். ஆலோசகன். நீ கொடுத்துக் கொண்டே இருப்பவள். கிடைப்பது பற்றிக் கவலைப்படாதவள்!”

– என்றெல்லாம் உளமாற மனமாறப் பாராட்டிப் பாருங்கள்!

அட! இதுவும் நபிவழி தாங்க!! அப்புறம் – நம்பகத் தன்மை வலிமை பெறுகிறதா இல்லையா என்று பாருங்கள்.

ஆனால் இந்த நம்பகத் தன்மையை உடைத்தெறிந்திடப் புறப்பட்டவன் யார் தெரியுமா? அவன் தான் ஷைத்தான் – மனிதனின் பொது எதிரி! அவன் கங்கணம் கட்டினான். அல்லாஹ் அனுமதி கொடுத்தான். கணவன் மனைவியரைப் பிரிப்பது தான் மிகச் சிறந்த ஷைத்தானிய வேலை என்று தன் சகாக்களுக்கு “சான்றிதழ்” வழங்கினான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற ஷைத்தானே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் திரும்பி வந்து “நான் இன்னின்னவாறு செய்தேன்” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், “சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நீ எதையும் செய்யவில்லை” என்று கூறுவான்.

பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, “நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, “நீதான் சரியான ஆள்” என்று பாராட்டிக் கூறுவான். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி). இந்த ஹதீஸின் இன்னொரு அறிவிப்பின் படி – “அந்த ஷைத்தானை இப்லீஸ் கட்டி அணைத்துக் கொள்கிறான்” – என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. நூல்: முஸ்லிம் (5419)

கணவன் மனைவி நல்லுறவை உடைத்தெறிவதற்கு ஷைத்தான் மேற்கொள்ளும் வழிமுறைகள் என்னென்ன?

கணவன் மனைவி நம்பகத்தன்மையை உடைப்பது; சந்தேக விதைகளை விதைப்பது; சந்தேக சூழலைத் தனக்குச் சாதகமாக்குவது. அதனைப் பரப்பி விடுவது; கணவன் மனைவியருக்குள் சண்டை மூட்டுவது;பெரிது படுத்தி வேடிக்கை பார்ப்பது;

இதனை நாம் நுணுக்கமாக ஆய்வு செய்திட வேண்டியுள்ளது: ஏனெனில் ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின் பற்ற வேண்டாம் என்பது இறை கட்டளை!

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் தூய்மையடைந்திருக்க முடியாது – எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் – மேலும் அல்லாஹ் செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.(24:21)

அடிச்சுவடு என்பது சின்ன சின்ன ஸ்டெப்!

அதாவது ஷைத்தான் நம்மை வழிகெடுக்கும் முறை – நம்மை சின்ன சின்ன “தவறுகளில்” விழ வைத்து – அப்படியே அவன் வழியில் நம்மை வழி கெடுத்து – இறுதியில் ஒரேயடியாக நம்மைப் பாவப் படுகுழியில் தள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பது தான்!

ஆனால் – அல்லாஹு தஆலா – தன் அடியார்களாகிய நமக்கெல்லாம் மிகத் தெளிவாகவும் மிக விரிவாகவும், மிக விளக்கமாகவும் வழி காட்டியிருக்கின்றான். எந்தெந்த வழிகளில் எல்லாம் அவன் வழி கெடுக்க வருவானோ அத்தனை வழிகளையும் அடைத்துக் கொள்ளச் சொல்லி வழிகாட்டினான்.

வல்லோன் அல்லாஹ்வின் விரிவான வழிகாட்டுதல்கள் என்னென்ன?

சுருக்கமாகப் பட்டியலிடுவோம் இங்கே.

1. பருவம் அடைந்ததும் – தாமதிக்காமல் திருமணம் செய்து வைத்து விடுதல்

2. திருமணம் தாமதமானால் கற்பைப் பாதுகாத்துக் கொள்தல்

3. தூய்மையான துணையைத் தேர்வு செய்தல்

4. திருமணத்தை எளிமையாக்குதல்

5. கணவன் மனைவியரின் திருப்திகரமான பாலுறவுக்கு (sex life) ஊக்கம் அளித்தல்; அதனை உறுதி செய்தல்

6. மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்வுக்கு எளிமையான வழிகாட்டுதல்கள் (முத்தம்; விளையாட்டு, சேர்ந்து குளித்தல்; சேர்ந்து உண்ணுதல்; வேலைகளைப் பகிர்ந்து கொள்தல்; மென்மையைக் கடைபிடித்தல், நேரம் ஒதுக்குதல்)

7. வாழ்க்கைத் துணையை மதித்தல்; கண்ணியமாக நடத்துதல்; நகைச்சுவை உணர்வு; மன்னிக்கும் மனப்பான்மை; உணர்வுகளை மதித்தல்; தனிமையில் மட்டும் கண்டித்தல்; இரக்கம் காட்டுதல்

8. கண்ணியமாக பேசுதல்; திட்டுவதைத் தவிர்த்தல்; வாக்குறுதிகளைக் காப்பாற்றுதல்; தவறுகளை ஒத்துக் கொள்தல்; கருத்து வேறுபாடுகளை அழகான முறையில் தீர்த்துக் கொள்தல்

9. கண்ணியமான ஆடை (ஹிஜாப்) அணிதல்; அலங்காரத்தை மறைத்துக் கொள்தல்

10. ஆணும் பெண்ணும் தங்கள் கண் பார்வையைத் தாழ்த்திக் கொள்தல்

11. (அன்னியரான) ஆண் – பெண் தனிமையைத் தவிர்த்தல் / பயணத்தைத் தவிர்த்தல்

12. ஒருவர் வீட்டுக்குள் நுழைவதில் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்தல்; எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்தல்

13. நடந்து செல்லும்போதும் கட்டுப்பாடு

14. அன்னியருடன் பேசும்போதும் கட்டுப்பாடு

15. சந்தேகமான சூழ்நிலைகளைத் தவிர்த்துக் கொள்தல்

16. கற்புள்ள பெண்கள் மீது அவதூறு பரப்பினால் கடுமையான தண்டனை

17. விபச்சாரத்துக்கு கடுமையான தண்டனை

18. நம்பிக்கை மோசடி செய்த பெண்ணுக்கு கணவனே – இறைச்சாபமிட்டுப் பிரித்து விடுதல் எனும் கடுமையான சட்டம்

இறைவனின் இந்த அழகான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடந்தாலே – நம்பிக்கை மோசடிக்கு வேலையே இல்லை!

ஆனால் – இல்லற வாழ்க்கை குறித்து சரியான வழிகாட்டுதலை அறியாத, நல்லெண்ணம் கொண்ட நமது சகோதர குடும்பங்களில் கூட இந்த நம்பிக்கை மோசடி – தலை விரித்து ஆடுகிறது! பல அவமானகரமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது!

அவர்களுக்கு நம் ஆலோசனைகள்:

A. உங்கள் துணை உங்களை மோசம் செய்து விடாமல் இருப்பதற்கு:

ஏழையாக இருந்தாலும், இறையச்சமுள்ள நற்குணம் மிக்க ஒரு துணையைத் தேர்வு செய்யுங்கள்.

பயணம் சென்று பிரிந்து வாழும் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள்.

நெருங்கி வாழுங்கள்; நேரம் ஒதுக்குங்கள்; ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்;

துணையின் தேவைகளை நன்றாக நிறைவேற்றிக் கொடுங்கள். வெளியில் அழைத்துச் செல்லுங்கள்; பேசுங்கள்; சிரியுங்கள்; பேச விட்டுக் கேளுங்கள்; விளையாடுங்கள்.

வேலைப்பளுவைக் காரணம் காட்டி – அவர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள்.

பாலுறவில் சுய நலம் வேண்டாம்; உங்கள் துணையின் திருப்தியை அலட்சியம் செய்து விடாதீர்கள்!

எதிர்மறைப் பேச்சுக்களை முற்றாகத் தவிர்த்திடுங்கள். இது தான் நம்பிக்கை மோசடிக்கு இட்டுச் செல்ல ஷைத்தான் தேர்வு செய்திடும் முதல் ஸ்டெப்!

சந்தேகம் ஏற்படுகின்றதா? வெளிப்படையாகப் பேசி விடுங்கள்; நீங்களும் வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள்.

B. ஏதோ – காரணங்களால் உங்கள் துணையை வெறுத்து – அவருக்கு நம்பிக்கை மோசடி செய்திட ஷைத்தான் உங்களைத் தூண்டுகின்றானா? ஒரு தடவை நீங்கள் ஷைத்தானின் வலையில் வீழ்ந்து விட்டாலும் – அதன் விளைவுகளை சற்றே எண்ணிப் பாருங்கள்:

அனுதினமும் பொய் சொல்ல வேண்டிய அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.

தெரிந்து போய் விடுமோ என்ற அச்ச உணர்வு அலைக்கழித்துக் கொண்டே இருக்கும்.

யாருடைய வலையில் விழுகின்றீர்களோ – அவர்களின் மிரட்டலுக்கு ஆளாக வேண்டி வரும். திருந்தி வாழும் வாய்ப்பு கூட கடினமாகி விடும்.

வெட்க உணர்வற்றுப் போக நேரிடும்.

எதிர்காலம் இருண்டதாகி விடும், மற்ற உறவுகளும் கூட வர மாட்டார்கள்.

இதுவெல்லாம் ஒரு புறம் இருக்க – உங்கள் தாயின் மனநிலை என்னவாகும்? தந்தையின் தலைகுனிவுக்கு என்ன மருந்து? உங்கள் சகோதரர்களின் கண்ணியம் என்னவாகும்? சகோதரிகளின் திருமண வாழ்க்கை என்னவாகும்? நீங்கள் பெற்ற செல்வங்களின் மன நிலை என்ன பாடுபடும்? என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள். வெளியே தலை காட்டிட முடியாமல் – கூனிக் குறுகி வாழ்ந்திட வேண்டிய அவல நிலைக்கு உங்கள் சுற்றம் ஆளாக நேரிடும்.

இறுதியாக ஒரு அறிவுரை: தப்பு செய்து விட்டு அது தெரிந்த பின்னரும் – உங்கள் துணைவர் உங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அது கண்ணாடி ஒன்றை உடைத்து விட்டு – மீண்டும் அதனை ஒட்ட வைப்பது போலத்தான்! கண்ணாடியின் பழைய தோற்றம் வரவே வராது!

அல்லாஹ் நம் சகோதரர்களையும் சகோதரிகளையும் நம்பிக்கை மோசம் செய்வதிலிருந்தும், செய்யப்படுவதிலிருந்தும் பாதுகாப்பானாக! ஆமீன்!



கணவன் மனைவியருக்குள் அசைக்க முடியாத நம்பிக்கை! எவ்வாறு?

உங்கள் துணையைப் பற்றிய சந்தேகம் துளிர் விடத் தொடங்கியுள்ளதா?

என் துணையை நான் இனியும் நம்புவதா? நான் ஏமாற்றப் படுகின்றேனா? அல்லது என் சந்தேகம் வீணான கற்பனையா? அதனை நான் எப்படி உறுதிப் படுத்திக் கொள்வது? – என்றெல்லாம் – கவலை உங்களை வாட்டிக் கொண்டிருக்கின்றதா? உங்களுக்காகவே இந்தக் கட்டுரை.

பொதுவாகவே – கணவன் தன் மனைவியையும், மனைவி தன் கணவனையும் மேலோட்டமாக சந்தேகப் பட்டுக் கொள்வது என்பது அரிதான ஒன்று கிடையாது! இந்த மேலோட்டமான சந்தேகம் என்பது பெரும்பாலான கணவன் மனைவியருக்கு ஏற்படுகின்ற ஒன்றுதான்!

ஆனால் கணவன் மனைவியருக்குள் உண்மையிலேயே சந்தேகம் எனும் பேய் ஒன்று வந்து புகுந்து கொண்டு விட்டால் அவ்வளவு தான்! கவலை வந்து விடும்! நிம்மதி குலைந்து விடும். தூக்கம் வராது. விளைவு? தொடர்ந்த மன அழுத்தம்!

கணவன் மனைவியரின் நம்பகத் தன்மை குறைந்து விடுவதால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைப் பார்ப்போம் முதலில்.

கணவன் மனைவியர் சந்தேகம் – உடல் நலத்தையும் கெடுக்கின்றது! மன நலத்தையும் கெடுக்கின்றது. சந்தேக விதை மட்டும் விதைக்கப் பட்டு விடும்போது ஏற்படுகின்ற மன அழுத்தம் – ஒரு தொடர்கதையானால் அது நமது மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு லேசானதல்ல!

ஹார்மோன்கள், இதயம், இதய நாளங்கள், நரம்பு மண்டலம் அனைத்தையும் பாதிப்புக்குள்ளாக்கி விடுகிறது இந்த மன அழுத்தம். வாழ்நாள் அருகி விடுகிறது அவர்களுக்கு.

அதே நேரத்தில் இன்னொரு உண்மையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கைக்குரிய கணவன் மனைவியர் – உடல் நலமும் பாதுகாக்கப்படுகிறது; மன நலமும் பாதுகாக்கப்படுகிறது என்பது தான் அது. நீண்ட நாள் வாழ்கிறார்கள் அவர்கள் – அதுவும் மகிழ்ச்சியுடன்.

எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் – என் துணையின் நம்பிக்கையை நான் பெறுவது எப்படி? நம்பிக்கை மோசம் எப்படி உருவாகிறது? அப்படி ஒன்று உருவானால் அதனை முளையிலேயே கிள்ளி எறிவது எப்படி? – ஆகியவற்றைத்தான்!

நல்ல செய்தி என்னவென்றால் – தன்னை ஏமாற்ற நினைக்கின்ற துணையைத் திருத்தி நம் வழிக்குக் கொண்டு வந்திட நிறைய வழிகள் இருக்கின்றன என்பது தான்!

பொதுவான பட்டியல் ஒன்றை இங்கே முன் வைக்கிறோம். பின்னர் தனித்தனியே ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம்.

ஒன்று: நிறையப் பேசிட வேண்டும். மனம் திறந்து பேசிட வேண்டும். பேசுவதைக் காது மட்டும் அல்ல – இதயத்தையும் கொடுத்துக் கேட்டிட வேண்டும். கருத்து வேறுபாடுகள் வரும்போது கூட நம் துணையின் கண்ணோட்டம் என்ன என்பதை– தெளிவான முக பாவத்துடனேயே – கேட்கத் தயாராக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பேச்சு (communication) தடைபடக்கூடவே கூடாது.

இரண்டு: ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நம் துணை எப்படிப்பட்டவர்? நம் துணையின் விருப்பங்கள் என்னென்ன? அவரது கவலைகள் என்ன? அவரது எதிர்காலத் திட்டங்கள் என்ன? அவர் எதனை சாதிக்க விரும்புகிறார்? அவருக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயங்கள் என்னென்ன? பாலுறவு விஷயம் உட்பட! எல்லாவற்றையும் தெரிந்து கொள்வது அவசியம்.

மூன்று: உங்கள் துணையின் சிறப்புகளை நீங்களும் அங்கீகரிக்க வேண்டும். பாராட்ட வேண்டும். ஊரே பாராட்டும் உங்கள் துணையை! ஆனால் நீங்கள் பாராட்டா விட்டால்? இதற்கு நேர் மாற்றமாக – “என்ன இதுவெல்லாம் ஒரு பெரிய்ய விஷயமா?” – என்றாலோ அல்லது ஊருக்கு என்ன தெரியும் உங்களைப்பற்றி எனக்கல்லவா தெரியும் உங்கள் வண்டவாளம் என்று தனது துணையின் குறைகளை நேரடியாக – அவமானப் படுத்தும் விதமாக – பேசினால் நம்பகத்தன்மை பறிபோய் விடும்!

நான்கு: உங்கள் துணைக்குச் செய்திட வேண்டிய “கடமைகளை” நிறைவேற்றினால் மட்டும் போதாது. “வீடு கொடுத்தேன்; உணவு கொடுத்தேன்; உடை கொடுத்தேன்; அப்புறம் செக்ஸ் – வேறென்ன வேண்டும்?” என்று கணவனோ, “சமைத்துப் போட்டேன்; பிள்ளைகளைக் கவனித்துக் கோண்டேன்; செக்ஸும் கொடுத்தாகி விட்டது – வேறென்ன? என்று மனைவியோ – சொல்வது அபத்தம்! சின்னச் சின்ன ஆசைகள் ஒவ்வொரு கணவனுக்கும் உண்டு! மனைவிக்கும் உண்டு! அன்றாடம் உண்டு! துணையின் ஒவ்வொரு ஆசையையும் தெரிந்து வைத்துக் கொண்டு – அதனை இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டிட வேண்டும். அதுவும் அன்றாடம்!

ஐந்து: கருத்து வேறுபாடுகள் தலை தூக்கும் தான்! அதனை எப்படிக் கையாள்வது என்று அறிந்து கொள்வது ஒரு புறம் இருக்கட்டும். எப்படியெல்லாம் கையாளக் கூடாது என்பதனை ஒவ்வொரு கணவனும் மனைவியும் தெள்ளத்தெளிவாக புரிந்து வைத்திருக்க வேண்டும். கடுமையான திட்டல்கள் கூடாது (harse criticism); அவமானப்படுத்தும் சொற்கள் கூடவே கூடாது; பேசிப் பயனில்லை என்று பேசாமல் ஒதுங்கி விடவும் கூடாது! நேரம் காலம் பார்த்து – பொறுமையைக் கையாண்டு, சொற்களைத் தேர்வு செய்து பேசி, உங்கள் துணையின் நிலையில் உங்களை வைத்து சிந்தித்து, விட்டுக் கொடுக்க வேண்டியவற்றை விட்டுக் கொடுத்து – நகைச்சுவை உணர்வுடன் ஒரு முடிவுக்கு வருவதே சாலச் சிறந்தது!

இவைகளையெல்லாம் உளவியல் அறிஞர்கள் ஒரு பக்கம் அழுத்தி அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்தாலும் – வருத்ததுடன் ஒன்றை நாம் சொல்ல வேண்டியுள்ளது:

மருத்துவம் படித்தோம், பொறியியல் படித்தோம். வணிகம் படித்தோம். நம் பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். அடுத்த தலைமுறையையும் படிக்க வைப்போம். ஆனால் கணவன் மனைவியாக மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவது எப்படி என்று படித்துக் கொடுக்காமலேயே – பொருள் பார்த்து, அழகு பார்த்து, “படிப்பையும்” பார்த்து – திருமணம் செய்து கொடுத்து விடுவோம். கஷ்டப் படுவோம்.

நிலைமை எப்போது மாறும்?

Comments