நூல்: உணர்ச்சித் திறன்!

உணர்ச்சித் திறன்!

(PSYCHOLOGICAL RESOURCE DEVELOPMENT)

ஆசிரியர்: S A மன்சூர் அலி

அறிவா? உணர்வா? இரண்டுமா?

நவீன உலகம், மனிதனை ஒரு சிந்திக்கும் மிருகமாகவே சித்தரித்து வந்துள்ளது. அதே நேரத்தில் மனிதன் சிந்திக்கும் மூளையோடு மட்டும் பிறந்திடவில்லை.


உணர்வுகள் ததும்பி வழிகின்ற இதயம் ஒன்றுடனும் தான் பிறந்துள்ளான்.
மனிதனின் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் குறித்தும், அவை எந்த அளவுக்கு நம் வாழ்வில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்த வல்லவை என்பது குறித்தும் மிகத் தாமதமாகவெ நவீன உலகம் சிந்திக்கத் தலைப் பட்டுள்ளது.

அறிவு ரீதியாகவே ஒவ்வொரு விஷயத்திலும் முடிவெடுத்துச் செயல் படுகின்ற மனிதனை, வாழ்க்கையின் பல முக்கியமான தருணங்களின் போதும், சவால்களின் போதும் உணர்வுகளே அவனை வழி நடத்திச் சென்றிடுவதை நாம் பார்க்கலாம். மனிதனை உடனடியாக செயல்படத் தூண்டி விட்டு விடுகின்ற ஒரு வலிமை மிக்க சாதனமாக விளங்குவது நமது உணர்வுகளே!

சான்றாக – ஒரு காரியத்தில் தோல்வி அடைந்த ஒருவனைத் தொடர் முயற்சியில் ஈடுபட வைப்பது எது? ஆர்வம் எனும் அவன் உணர்ச்சிகளே!

- தன் குடும்பத்துக்காக ஒருவனைத் தியாகம் செய்ய வைப்பது எது? பாசம் காட்டும் அவன் உணர்வுகளே!

- ஆபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டு விடுவோமோ என்ற பய உணர்ச்சி தான் தன்னையும், தன் குடும்பத்தையும் பாதுகாத்திடுகின்ற செயல்பாடுகளில் ஒருவனை ஈடுபட வைக்கிறது!

- தன் கண் முன்னே ஒரு தீமை அரங்கேறிக் கொண்டிருக்கும் போது, அதனைத் தட்டிக் கேட்கின்ற துணிவைத் தருவது கோபம் எனும் உணர்ச்சியே!

அதே நேரத்தில் – உணர்ச்சிகளின் அடிப்படையில் செயல்பட்டு விடுகின்ற மனிதன் – பின்னர் நாம் ஏன் இவ்வாறு செயல்பட்டோம் என்று வருந்துகின்ற அளவுக்கு அறிவுக்குப் பொருத்தமில்லாத செயல்களில் ஈடுவட்டு விடுவதையும் நாம் பார்க்கிறோம்.

கோபத்தில் – மனிதன் மிருகமாக மாறி விடுகின்றான்.

பாசம் – சில சமயங்களில் நம் கண்களை மறைக்கின்றது.

மனத்தூண்டல் – பல கட்டங்களில் நமது பண்புகளை இழப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.

இப்படி வாழ்வின் மிக முக்கியமான தருணங்களில், நம்மை வழி நடத்தவோ அல்லது வழி தவறச் செய்திடவோ, நமது உணர்வுகளே வலிமை மிக்க ஒரு காரணியாக விளங்குகின்றது எனும் போது, நாம் மனிதனின் உணர்வுகள் குறித்தும், அவற்றின் வலிமை குறித்தும், அவ்வுணர்வுகளை நெறிப் படுத்திட வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்திட வேண்டியுள்ளது.

உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப் படா விட்டால்? 

ஒரு முது கலைப் பொறியியல் பட்டதாரி. மிக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர். தமது படிப்பில் பல தங்கப் பதக்கங்களை வென்றவர். ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் வேலைக்குச் சேர்கிறார் அவர். வகுப்பறைக்குள் செல்கிறார். அவருக்கு முதலாவது வகுப்பு அது. மிக நன்றாக பாடத்தைத் தயார் செய்து வந்திருக்கிறார். பாடம் நடத்தத் துவங்குகிறார்.

மாணவர்கள் அவரை சீண்டிப் பார்க்கின்றனர். கரும் பலகையில் எழுதிடத் திரும்பும் போதெல்லாம், ஓ…ஹொ! – என்று சத்தம். மாணவர்களைப் பார்த்து நீங்கள் எல்லாம் மாணவர்கள் தானா? அல்லது ரவுடிகளா? என்று சத்தம் போடுகிறார். மயான அமைதி வகுப்பில். மறுபடியும் கரும் பலகையின் பக்கம் அவர் திரும்ப மீண்டும் ஓ…ஹொ! மீண்டும் அவர் திட்ட மீண்டும் அமைதி. பாடத்தைத் தொடர முடியவில்லை!

அவருடைய இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? அவர் வேலையை ராஜினாமா செய்து விட்டுப் போய் விட்டார்! இது ஏன்? சிந்தியுங்கள்!

ஒரு மிக மிகத் திறமை வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர். ஆயிரக் கணக்கான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்தவர். சிக்கலான பல கேஸ்களை இலாகவமாகக் கையாள்பவர். ஆனால் – அவருடைய மனைவி அவருடன் வாழ இயலாது என்று தனியே போய் விட்டார். பாவம். ஹோட்டலில் தான் அவருக்கு தினமும் சாப்பாடு! இது ஏன்? சிந்தியுங்கள்!

பெற்றோர் – புத்தாண்டு விழா ஒன்றுக்காக வெளியூர் சென்றிட மகளை அழைக்கின்றனர். மகள் வர மறுக்கிறார். தந்தை தன் மனைவியைத் திட்டுகிறார்: ‘எல்லாம் நீ கொடுத்த செல்லம் தான்!’ அவ்வளவு தான் நடந்தது. ஆனால் பிறகு? அந்த மகள் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி. இத்தனைக்கும் அவர் ஒரு கல்லூரி மாணவி! இது ஏன்? சிந்தியுங்கள்!

நமது உள்ளத்திலே எழுகின்ற உணர்வுகளும் உணர்ச்சிகளும் வலிமை மிக்க மனித வளங்கள் ஆகும். அவை ஆக்கவும் வல்லவை. அழிக்கவும் வல்லவை. இவை நமது உள்ளம் சம்பந்தப் பட்டதால் – இவைகளை நாம் உளவியல் மனித வளங்கள் (psychological human resources) என்று அழைக்கலாம்.

அன்பு, இரக்கம், பாசம், விருப்பம், ஆர்வம், உற்சாக, மகிழ்ச்சி, கவலை, கோபம், வெறுப்பு, பயம், – போன்றவை நமது உள்ளத்தில் இயல்பாய் எழுகின்ற உணர்வுகள் ஆகும்.

நமது உணர்வுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அவசியமும் ஒரு மதிப்பும் இருக்கிறது. சான்றாக – கோப உணர்வு – தீமைகளை எதிர்த்துப் போராட மனிதனுக்கு அவசியம். இரக்க உணர்வு – ஏழைகளுக்கு உதவிட மனிதனைத் தூண்டுகிறது. உணர்வுகளே அற்ற வாழ்க்கை – உயிரோட்டமுள்ள வாழ்க்கையாக இருக்க முடியாது.

ஆனால் நமது உணர்வுகளுக்கு ஒரு அழுத்தம் கொடுக்கப் படும் போது அது உணர்ச்சியாக மாறி விடுகிறது. Intensive feeling leads to emotion!

அந்த உணர்ச்சிகள் கட்டுப் படுத்தப் படாவிட்டால் – மனிதன் தனது இயல்பான நிலையை இழந்து விடுகிறான். மிருகமாக மாறி விடுகிறான்.

அது போலவே உணர்வுக்கும் (feeling) சிந்தனைக்கும் (thinking) ஒரு பெரிய வேறுபாடு உண்டு. நாம் மனதால் ஒன்றை உணர்வதற்கும், அறிவைக் கொண்டு ஒன்றை சிந்திப்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. எல்லார்க்கும் எல்லாமும் வேண்டும்! யாரும் பட்டினி கிடந்து விடக் கூடாது – இவை எல்லாம் நல்ல சிந்தனைகளே.

ஆனால் மனிதனை ‘செயல்’ களத்தில் இறக்கி விடுவது மனிதனின் உணர்வுகளே! நமது பையிலிந்து பணத்தை வெளியே எடுத்துக் கொடுக்க வைப்பது ‘இரக்கம்’ என்ற உணர்வே. எவ்வளவு கொடுக்கலாம் – என்று கணக்குப் போடுவது சிந்தனை. தம்மிடம் இருந்த எல்லாவற்றையும் கொடுத்து விட்டு வீட்டுக்கு பத்து கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்வது உணர்ச்சியின் உந்துதல்!

பொதுவாக மனிதன் எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னும் சிந்திக்கவே செய்கிறான். ஆனால் மனிதன் உணர்ச்சி வசப் படும்போது அவன் சிந்தனை தடைபடுகிறது. எனவே அந்த தருணத்தில் அவனால் அறிவு பூர்வமாக செயல் பட முடிவதில்லை.

ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்வது எவ்வளவு உண்மை!

பதறிய காரியம் சிதறி விடும் என்பதும், பதறாத காரியம் சிதறாது என்பதும் – எப்படிப் பட்ட உண்மைகள்!

மனிதன் பல காரணங்களினால் உணர்ச்சியின் பிடியில் சிக்கிக் கொண்டு விடுகின்றான்.

ஒருவரால் திட்டப் படும் போது, ஒருவரின் தன்மானம் பறிக்கப் படும் போது, ஒருவர் நினைத்தது நிறைவேறாத போது, ஒருவர் தோல்வி அடைந்து விட்டால், தனது பேச்சைக் கேட்டு நடக்க வேண்டியவர்கள் – தன் சொல்லை மீறி நடக்கும் போது – இவ்வாறு – மனிதன் பல உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப் படுகின்றான். விளைவுகள் என்ன?

கோப உணர்ச்சியில் – ஒருவரை அடித்து விடுகிறான் மனிதன். கொலை கூட செய்து விடுகின்றான். டீவீ பார்ப்பதில் தகறாறு. அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி. இது பத்திரிகை செய்தி.

டீவி பார்க்க அனுமதிக்கவில்லை. சிறுமி தற்கொலை. இதுவும் பத்திரிகை செய்தி.

ஆசிரியர் திட்டினார். மாணவி தற்கொலை.

கணித ஆசிரியர் ‘வீட்டுப் பாடம் போட்டு வரவில்லை என்றால் நீ உயிருடன் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் ஒன்று தான்’ என்று திட்டினார். நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து கால்களை முறித்துக் கொண்டான் ஒரு ஒன்பதாவது வகுப்பு மாணவ்ன்.

பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது – தற்கொலையில் தீர்வு தேடும் தேர்ச்சி பெறாத மாணவ – மாணவிகள்.

அது போலவே – பய உணர்ச்சியால் உந்தப் பட்டு தனது மகளையே சுட்டு விட்டு – பின் கதறிக் கொண்டு மருத்துவ மனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடிய தந்தையைப் பற்றியும் படிக்கின்றோம்.

எனவே உணர்ச்சிகளால் மனிதன் சூழப்படும்போது – சற்றே அவன் நிதானித்துச் செயல் பட வேண்டியுள்ளது. இந்த நிதானத்தைத தான் உணர்ச்சித் திறன் (Emotional Intelligence) என்று அழைக்கிறார்கள். இன்றைய நவீன உலகில் இது குறித்து அதிகம் அதிகம் பேசப் படுகிறது. ஒரு நிர்வாகத்தின் பல் வேறு மட்டங்களில் பணியாற்றக் கூடியவர்களுக்கு உணர்ச்சித் திறன் பயிற்சி அளிக்கப் படுகிறது.

முன்பெல்லாம் – ஒரு பணிக்குத் தேர்வு செய்திட அவனது அறிவுத் திறன் – Intelligence – மற்றும் அதனுடைய அளவீடாகிய IQ – அளவு கோளாக எடுத்துக் கொள்ளப் பட்டது. ஆனால் இன்று IQ வுடன் EQ வும் சேர்த்து கவனிக்கப் படுகிறது. அது என்ன EQ (Emotional Quotient) என்கிறீர்களா? அது தான் உணர்ச்சித் திறனுக்கான அளவீடு. இதற்கென்ன அவசியம்?

ஒருவர் எப்படிப் பட்ட அறிவாளியாக இருந்தாலும் சரியே, யார் தனக்குள் எழுகின்ற உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ‘திறமையாகக்’ கையாள்கிறார்களோ அவர்களே – பணியிடத்தில், குடும்ப வாழ்க்கையில், சமூக உறவில் வெற்றி பெறுகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன!

எனவே நமக்குத் தேவை – அறிவும் உணர்வும் கை கோர்த்துச் செல்கின்ற நடு நிலையான ஒரு பாதையே. எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த உணர்ச்சிகளை, எந்த அளவுக்கு வெளிப் படுத்திட வேண்டுமோ – அந்த அளவுக்கு மட்டும் வெளிப் படுத்தி – விவேகமாக நடந்து கொள்ளும் பக்குவம். அதாவது – Maturity!

கணவன் இறந்து விடுகிறான். ஓ என ஒப்பாரி வைத்துக் கதறி அழுகிறாள் ஒரு மனைவி.

ஆனால் இன்னொரு பெண். படித்தவர். பக்குவப் பட்டவர். கணவன் அகால மரணம் அடைந்து விடுகிறான். உறவினர்கள் வந்து குவிகிறார்கள். பாசம் மிக்க கணவன் தான். உணர்ச்சிகளை வெளிக் கொட்டலாம் தான். ஆனால் அவள் அழவில்லை. அமைதியாகவும் சோகமாகவும் அமர்ந்திருக்கிறாள் – அவ்வளவு தான்! இது தான் அந்த பக்குவம்!

ஆனால் எல்லா நேரங்களிலும் எல்லார்க்கும் இது சாத்தியப் படுவதில்லை!

நாம் இதனை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் அணுகுவோம். இஸ்லாம் – அடிப்படையிலேயே – சிந்தனையின் பக்கமும் அறிவின் பக்கமும் அழைப்பு விடுக்கின்ற மார்க்கமாகும். சிந்திப்பவர்களை இறைவன் பாராட்டுகிறான். சிந்திக்க மறுக்கின்றவர்களைக் கடிந்தும் கொள்கின்றான். இக்ரஃ என்று திருமறையின் முதல் வசனத்தை இறக்கி வைக்கின்றான். நாம் சிந்தித்து செயல்படுவதையே இறைவன் பெரிதும் விரும்புகிறான்.

அதே நேரத்தில் பல உணர்வுகளுக்குச் சொந்தக் காரர்களாகவும் தான் நம்மை இறைவன் படைத்துள்ளான். அன்பு (முஹப்பத்), நேசம் (மவத்தத்) போன்ற சொற்கள் திருக் குர் ஆனில் பல தடவைகள் பயன் படுத்தப் பட்டுள்ளன. இறைவனே கருணையாளனாகவும் (ரஹ்மான்), அன்புள்ளவனாகவும் (ரஹீம்) தான் இருக்கின்றான்.

எனவே அறிவும் உணர்வும் – இஸ்லாத்தில் எப்படி கை கோர்த்துச் செயல் படுகின்றன என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக இப்பகுதியில் பார்ப்போம்.

முதலில் மனதில் ஆழமாக இதனைப் பதிய வையுங்கள்.

எந்த ஒரு உணர்வாக இருந்தாலும் அது நம்மை ஒரு செயலுக்குத் தூண்டி விடுவதாகவே இருக்கும். இந்தத் தூண்டலின் அடிப்படையில் நாம் செயல் பட வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிப்பது நமது சிந்தனையும் அறிவும். சிந்தனை அனுமதித்தால் செயல் படுகிறோம். இல்லாவிட்டால் தூண்டலைத் தவிர்த்து விடுகிறோம்.

ஆனால் நாம் உணர்ச்சி வசப் பட்டு விட்டால் அந்த உணர்ச்சிகள் உடனடியான செயல்பாட்டிற்கு நம்மைத் தூண்டி விட்டு விடும். இந்தத் தூண்டல் மிக வலிமையானது. உடனடியானது. இதற்குக் காரணம் நமது ‘ஹார்மோன்களே’.

இந்த ஹார்மோன் தூண்டுதல் நமது மூளையின் ‘அறிவு ரீதியாக ஆய்வு செய்து முடிவு செய்திடும்’ பகுதிகளைச் (cognitive centers) செயலற்றதாக ஆக்கி விடுகின்றது. எனவே அந்தத் தருணங்களில் – நமது செயல்களை ஒரே ஒரு வினாடி – தாமதித்து விட்டால் போதும். நமது அறிவு வேலை செய்யத் தொடங்கி விடும்.

ஆனால் பெரும்பாலான சமயங்களில் அந்த ஒரு வினாடி தாமதம் கூட நமக்கு சாத்தியப் படுவதில்லை. அதனை சாத்தியப் படுத்தும் தாரக மந்திரம் தான் – குர் ஆன் எடுத்துச் சொல்லும் ‘சப்ர்’ (SABR) என்றால் வியப்பாக இருக்கிறது இல்லையா?

இவ்வளவு காலம் நாம் சப்ர் என்றால் பொறுமை என்று சாதாரணமாகப் பொருள் கொண்டு விட்டோம். அன்று! சப்ர் என்பது மிக ஆழமான பல பொருள்களை உள்ளடக்கிய ஒரு சொல். நாம் அனைவரும் மிக ஆழமாக ஆய்வு செய்திட வேண்டிய ஒரு சொல்! அதன் ஒரே ஒரு அம்சம் தான் உணர்ச்சி வசப் படும் போது – உடன் நிதானத்துக்கு வருதலைக் குறிப்பதாகும்.

இந்த நபி மொழியைப் பாருங்கள்:

மண்ணறை ஒன்றின் அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்ற போது ‘அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!’ என்றார்கள். அதற்கு அப்பெண், ‘ என்னை விட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை’ என்று – நபி (ஸல்) அவர்கள் யாரென அறியாமல் கூறினாள்.

அவர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண், நபி (ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். அங்கு காவலாளிகள் எவருமில்லை – ‘நான் உங்களை யாரென அறியவில்லை’ என நபி (ஸல்) அவர்களிடம் கூறினாள். ‘பொறுமை என்பது, அதிர்ச்சி ஏற்பட்ட உடனேயே கைகொள்வது தான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபி மொழி ஆதார நூல்: புகாரி)

நபி மொழியில் ‘இன்னமஸ் ஸப்ரு இன்தஸ் ஸத்மதில் ஊலா’ என்று வருகிறது. ஸத்மத் என்ற சொல்லை பொதுவாக துன்பம் என்று மொழி பெயர்க்கிறார்கள்; ஆனால் அது போதாது. ஏனெனில் ஸத்மத் என்பதற்கு ஆங்கிலத்தில் – push, thrust, jolt, shock, blow, stroke, upset, commotion, psychic shock, obstacle, difficulty – என்றெல்லாம் மொழி பெயர்க்கப் படுகிறது. இதனை வைத்துப் பார்க்கும்போது நபியவர்கள் சொன்ன செய்தியின் ஆழம் நமக்குப் புலப்படுகிறது.

நமக்கு மனத்தளவில் ஏதேனும் ஒரு அதிர்ச்சி ஏற்படும்போது உடனேயே உணர்ச்சிகளின் கொந்தளிப்புகளுக்கு நாம் ஆளாகி விடுகின்றோம். ஆனால் – அதே சமயத்திலேயே – நம்மிடம் பொறுமையை எதிர்பார்க்கிறான் இறைவன். அந்த சமயத்தில் சற்று நிதானித்து – நமது ‘சிந்தனைக்கு’ இடம் கொடுத்து விடுவோமேயானால் நமது செயல்கள் எதுவும் அறிவுக்குப் புறம்பாக அமையாது. இந்தத் திறமையைத் தான் உணர்ச்சித் திறன் என்கிறார்கள். இந்த உணர்ச்சித் திறன் நமது வெற்றிக்கு மிக அவசியம். இத்தகைய உணர்ச்சித் திறனை நாம் வளர்த்துக் கொள்ள முடியுமா?

பிறகு விரிவாக – இன்ஷா அல்லாஹ்!

பதற்றம் தவிர்! வெற்றி நிச்சயம்!

பதற்றம்! ஆங்கிலத்தில் இதனை Anxiety என்று குறிப்பிடுகின்றார்கள். அடுத்து என்ன நடந்திடுமோ என்ற பயம் கலந்த அச்சம். இது ஒரு மனித பலவீனம். இதனை நாம் வென்றாக வேண்டும்.

தனி மனித வாழ்விலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, தொழில் துறை அல்லது பணியிடம் ஆனாலும் சரி, தொண்டனாக இருக்கும் போதும் சரி, தலைவர் பொறுப்பில் இருக்கும் போதும் சரி – இந்த பதற்றம் கூடவே கூடாது.

ஏனெனில் – பதற்றம் – நமது செயல் திறனை பாதிக்கும் (performance).

பதற்றம் – நமது முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் (interferes decision making).

பதற்றம் – எந்த ஒன்றிலும் நமது கவனத்தைக் குவித்திட இயலாமல் தடுக்கும் (shatters concentration).

எந்த ஒரு செயலையும் நாம் அழகே செய்து முடித்திட நிதானம் தேவை. அவசரம் கூடாது. பதற்றம் எந்த ஒரு காரியத்தையும் கெடுத்து விடும். பதறாத காரியம் சிதறாது என்பது முதுமொழி.

சாதாரண சூழலில் யாரும் பதற்றம் அடைய மாட்டார்கள் தான். ஆனால் சில அழுத்தம் தரும் சூழல்கள் (stressful situations) பதற்றத்தைக் கொண்டு வரலாம். அந்த சமயங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதே நமது ஆளுமையை (personality) நிர்ணயிக்கும்.

இதோ பதற்றம் வரவழைக்கும் சூழல்களில் சில:

மாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு.

ஏதேனும் அவசியமான பொருள் ஒன்று அவசியமான நேரத்தில் தொலைந்து விட்டால்.

அவசிய வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் போது போக்குவரத்து நெரிசல் – Traffic jam – ஏற்பட்டால்.

புதிதாக ஒரு இடத்துக்குச் சென்றிருக்கும் போது.

முற்றிலும் புதிதான மனிதர்கள் (strangers) இருக்கும் இடத்தில்.

சொற்பொழிவுக்கு முன்னர்.

நேர்முகத் தேர்வுக்கு முன்னர் – நேர்முகத் தேர்வின் போது.

சரி, இப்படிப்பட்ட தருணங்களில் பதற்றம் தவிர்க்க என்ன வழி?

ஆசுவாசப் படுத்துதல் – Relaxation!

நன்றாக மூச்சை இழுத்து விடுதல்.

நகைச்சுவை உணர்வை வரவழைத்துக் கொள்ளுதல்.

“நல்லதே நடக்கும்” என்ற சிந்தனையை வலிந்து நினைத்தல்.

எது நம் கைகளில் இல்லையோ அது குறித்து கவலைப் படுவதைத் தவிர்த்தல்.

எது நம் கைகளில் உள்ளதோ அது குறித்து ஆகக் கூடிய காரியத்தில் இறங்குதல்.

இறைவன் மீது நம்பிக்கை (தவக்குல்) வைத்தல். துஆ செய்தல்.

சரி, பதற்றமான சூழல்களில் அண்ணலார் (ஸல்) அவர்களின் முன்மாதிரி எப்படி என்று பார்ப்போமா?

பத்ர் போருக்கு முன். நபியவர்கள் பதற்றப் பட்டார்களா? இல்லையே! ஏன்? எந்த ஒரு போரின் போதும் சரி நபியவர்கள் பதற்றப்பட்டதே கிடையாது.

அரபுலகம் முழுவதுமே திரண்டு வந்து மதீனாவை முற்றுகையிட்டு அழித்திட வந்த அகழ் யுத்தத்தின் போதும் நபியவர்கள் பதற்றம் அடைந்திடவில்லை. நபித்தோழர்களும் பதற்றம் அடைந்திடவில்லை.

அவ்விடத்தில் முஃமின்கள் (பெருஞ்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள். (33: 11)

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, “இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை. (33: 21 – 22)

பொதுவாகச் சொல்வதென்றால் – எல்லா இறைத்தூதர்களின் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட சூழல்கள் நிறைந்தே காணப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழல்களில் வைத்துத் தான் அல்லாஹு தஆலா இறைத்தூதர்களுக்கும் இறை நம்பிக்கை கொண்ட அந்த நபித் தோழர்களுக்கும் “பயிற்சி” அளித்திருக்கின்றான்.

ஹிஜ்ரத்தின் போது தவ்ர் குகையில் அண்ணலாரும் அபூ பக்ர் சித்தீக் அவர்களும் தங்கியிருந்த சமயம் பதற்றத்திற்குரியது தான். “பயப்பட வேண்டாம்! அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்!” என்றார்கள் நபியவர்கள்.

அதுவெல்லாம் சரி! நாம் எப்படி நிதானத்தைக் கற்றுக் கொள்வது?

தினமும் அதற்குப் பயிற்சி அளிக்கின்றானே அல்லாஹு தஆலா!

என்ன அது?

ஐந்து வேளை தொழுகையைத் தான் சொல்கின்றேன். அவசரப்படாமல் நிதானமாகத் தொழுங்கள்!

இன்னும் சொல்லப்போனால் – உளூவை நிதானமாகச் செய்யுங்கள்.

பள்ளிக்கு நிதானமாக கம்பீரத்துடன் நடந்து வாருங்கள். ஓடி வர வேண்டாம் என்பது நபிமொழி.

“தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்.” (புஹாரி )

தொழுகையில் நிதானமாக குர் ஆனை நிறுத்தி நிறுத்தி ஓதுங்கள்.
மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக. (73: 4)

தொழுகையின் ஒவ்வொரு நிலையிலிருந்து மறு நிலைக்குச் செல்லும் போது நிதானத்தைக் கடைபிடிக்கவும்.

இவ்வாறு நிதானமாக ஒவ்வொரு நாளும் நாம் பெற்றுக் கொள்கின்ற பயிற்சி, நமது வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் நமக்கு நிச்சயம் உதவும்.

நாம் தான் இரண்டு ரக்அத் தொழுகையை இரண்டு நிமிடங்களில் முடிப்பவர்கள் ஆயிற்றே!

அவசரம் அவசரமாக தொழுது முடிக்கப் படும் தராவிஹ் தொழுகையும் நமக்கு எப்படி பயிற்சியாக அமையும்?

இன்றிலிருந்து நிதானமாகத் தொழுவோம் தானே!

பதற்றம் தவிர்க்க இதுவே சிறந்த வழி! வெற்றிக்கான வழியும் கூட!

நமது பாங்கொலியே இதற்குச் சான்று!

“தொழுகையின் பக்கம் வாருங்கள்! தொழுகையின் பக்கம் வாருங்கள்!
“வெற்றியின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்!

மனத் தூண்டலைக் கட்டுப்படுத்துவதன் அவசியம்!

மனத்தூண்டலை ஆங்கிலத்தில் Impulse என்றும் அதனைக் கட்டுப் படுத்துவதை Impulse control என்றும் அழைக்கிறார்கள். பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றை செய்து விடுவதைத் தான் ஆங்கிலத்தில் Impulsiveness என்று குறிப்பிடுகின்றார்கள்.

ஒருவர் மனத்தூண்டலுக்கு ஆட்பட்டு விட்டால்- அவர் அவசரக் காரராக மாறி விடுவார். எனவே அவர் செய்யும் செயல்கள் அறிவுக்குப் பொறுத்தமாக இருக்காது. ஒன்றைச் செய்து விட்டு பின்னர் வருந்துவார்.

இவர் தாமாக எந்த ஒரு நன்மையான காரியத்தையும் செய்திட முன் வர மாட்டார்.அப்படி ஒரு காரியத்தில் அவர் இறங்கினாலும் கூட ஒரு சிறு பின்னடைவு ஏற்பட்டாலும் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் ஆர்வம் இவரிடம் இருக்காது. அப்படியே போட்டு விட்டுப் போய் விடுவார். தற்காலிகத் தோல்வியைக் கூட இவரால் தாங்கிட இயலாது. அடிக்கடி எரிந்து விழக் கூடியவராக இருப்பார்.

வேறு எவரும் கூட – இவரை வைத்துக் கொண்டு ஒரு காரியத்தில் இறங்கிட இயலாது. ஒத்துழைக்க மாட்டார். பாதியில் விட்டு விட்டு ஓடி விடுவார். நம்பிக்கைக்கு உரியவராக இவர் விளங்கிட மாட்டார்.

தன்னம்பிக்கை சுத்தமாக இருக்காது. தான் எதற்கும் இலாயக்கில்லை என்ற தாழ்வு மனப்பான்மை இவரிடம் தவறாது குடி கொண்டிருக்கும். எனவே மற்றவர் மீது இவர் பொறாமை கொள்வார்.

ஒருவர் இப்படிப்பட்ட “மனோ இச்சைக்காரர்” (impulsive person) தானா என்பதை எப்படி அறிவது? ஒரு விஷயத்தில் ஒருவர் ஆசைப்பட்டு விட்டால் அதனை உடனேயே அடைந்திடத் துடிக்கின்றாரா அல்லது ஆலோசித்து முடிவெடுக்கும் பொறுமை அவரிடம் இருக்கிறதா என்று பாருங்கள்.

ஒரு திரைப்படம் வெளி வருகிறது. முதல் நாள் நல்ல கூட்டம். வெளியில் மறைமுகமாக அதிக விலைக்கு டிக்கெட் விற்கிறார்கள். ஓராயிரம் ரூபாய் வரை கூட விற்கப் படுவதாகக் கேள்வி. அன்றே அந்த திரைப்படத்தைப் பார்த்திடத் துடிக்கின்றாரா அவர்? – இவரைத் தான் நாம் சொல்கிறோம் – மனோ இச்சைக்காரர் என்று!

ஆடித் தள்ளுபடி. ஒன்று வாங்கினால் ஐந்து இலவசம். மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு விரைகிறார் ஒருவர். தனக்கு அது தேவை தானா, இப்போதே தேவையா, இவ்வளவும் தேவை தானா – என்றெல்லாம் சிந்திப்பதற்கு அவருக்கு நேரம் இல்லை. இவர் தான் நாம் குறிப்பிடும் மனோ இச்சைக்காரர்!

இத்தகையவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிக மிகக் கடினம்!

மனோ இச்சையைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். மனம் ஒன்றை உடனேயே எதிர்பார்க்கும். உடனேயே செயற்களத்தில் நம்மைத் தள்ளி விடத் துடிக்கும். ஆனாலும் அவர் ஒரு கணம் சிந்திப்பார். இது தேவை தானா? இப்போதே தேவை தானா? பின்னர் பார்த்துக் கொண்டால் என்ன? ஒத்தித் தான் போடுவோமே! – என்றெல்லாம் எண்ணிப் பார்க்கும் அவர் – மனம் இடுகின்ற கட்டளைக்கு வீட்டோ போட்டு விடுவார். இவரே வெற்றியாளர்.

இவர் துணிந்து ஒரு காரியத்தில் இறங்கக் கூடியவர். தோல்வி ஏற்பட்டாலும் ஒன்றை பாதியில் விட்டு விட்டு ஓடி விட மாட்டார். இறுதி வரை போராடி இலக்கை அடைந்திடுவார். தன்னம்பிக்கை இவரிடம் குடி கொண்டிருக்கும். இவரை நம்பி யாரும் ஒரு பொறுப்பை ஒப்படைக்கலாம்.

ஒத்தித் தான் போடுங்களேன்! என்ன குறைந்து விடும்?

மனத்தூண்டலினால் தான் நினைத்த ஒன்றை ஒருவர் உடனேயே அடைந்திடத் துடிக்கின்றாரா? இந்தத் தன்மையை ஆங்கிலத்தில் Instant gratification என்று அழைக்கிறார்கள். ஆனால் மனம் தூண்டுகின்ற ஒன்றை, உடனே அனுபவித்திடத் துடிக்காமல், அறிவார்ந்த காரணங்களுக்காக ஒத்திப் போடுகின்ற தன்மை ஒருவருக்கு இருந்தால் அதனை Delaying gratification என்று அழைக்கிறார்கள்.

இப்படி ஒத்திப் போடுகின்ற தன்மையை ஒருவர் வளர்த்துக் கொள்ள ஒருவருக்குத் தேவை – சுயக் கட்டுப்பாடு! ஆங்கிலத்தில் இதனை – Self discipline, self control, self management, self governance – என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

குறிப்பாக இப்படிப்பட்ட கட்டுப்பாடு – ஒரு குழுவாகப் பணியாற்றுகின்ற அனைவரிடத்திலும் இருந்திட வேண்டும். அப்போது தான் ஒரு குறிப்பிட்ட காரியத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (deadline) ஒரு குழுவினரால் முடித்துக் கொடுக்க முடியும். அந்தக் குழுவில் இப்படிப்பட்ட கட்டுப்பாடு இல்லாமல் – எதனையும் “உடனே அனுபவித்து விடும்” தன்மை உள்ளவர்கள் ஒரு சிலர் இருந்து விட்டால் கூட அந்தக் குழு செம்மையாக செயல் பட முடியாது! காரியத்தைக் கெடுத்துக் குட்டி சுவராக்கி விடுவார்கள்.

குர் ஆனில் இடம் பெற்றுள்ள பின் வரும் வரலாற்று நிகழ்ச்சியை ஊன்றிப் படியுங்கள்.

“பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர் “நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்” என்று கூறினார்.

“அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்; பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) “ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை” என்று கூறிவிட்டனர்;

“ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், “எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” என்று கூறினார்கள். (2: 249)

பின்னர் என்ன நடந்தது? அந்த கட்டுப்பாடு மிக்க ஒரு சிலர் இறைவனிடம் இறைஞ்சினார்கள். பொறுமையைக் கேட்டார்கள். தங்களின் பாதங்களை உறுதிப் படுத்திடுமாறு வேண்டினார்கள். இறைவனின் உதவிக்காகப் பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹு தஆலா அவர்களுடைய இறைஞ்சுதலை ஏற்றுக் கொண்டான். ஜாலூத்தின் படையை அவர்கள் முறியடித்தார்கள்.

இதில் பல படிப்பினைகள் நமக்கு இருக்கின்றன:

1. மனக் கட்டுப்பாடு இல்லாதவர்களைக் (people of instant gratificatrion) கூடவே வைத்துக் கொண்டு எந்த ஒரு காரியத்திலும் நாம் வெற்றி பெற இயலாது.

2. மனக் கட்டுப்பாடு உடையவர்கள் (people of delaying gratification)- அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுகிறார்கள்.

3. மனக்கட்டுப்பாடு அற்றவர்களைப் பிரித்தறிய வேண்டியது – அணித் தலைவருக்கு அவசியம்.

தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா? (25:43)

4. மனக் கட்டுப்பாடு உடையவர்கள் பொறுமையாளர்கள். இறைவன் இவர்களின் பாதங்களை உறுதிப் படுத்துகின்றான். இவர்களுக்கு இறைவனின் உதவி கிடைக்கின்றது. இவர்களே வெற்றி பெறுகின்றார்கள்!

மனத்தூண்டலைக் கட்டுப் படுத்துவது எப்படி?

மனத் தூண்டலைக் கட்டுப் படுத்திட வல்ல இறைவன் கற்றுத் தந்துள்ள வழிகள்:

1. இறைவனை சந்திப்போம் எனும் அச்சம்:

“எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.(79: 40 – 41)

தாலூத்தின் அணியில் இடம் பெற்றிருந்த – மனக் கட்டுப்பாடு மிக்கவர்களை அல்லாஹ், “நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர்” என்றே குறிப்பிடுகின்றான்.

மன இச்சைகளைத் தகர்த்து விடக் கூடிய ஒன்றை அதிகமாக நினைவு கூறுங்கள் – அது தான் “மரணம்”. (முஸ்லிம்)

2. ஐந்து வேளைத் தொழுகை:

ஐந்து வேளை அனுதினமும் தொழுது வந்தால் – மனோ இச்சையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதை எளிதில் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் மனக் கட்டுப்பாடு இல்லாதவர்களால் ஐவேளைத் தொழுகையை சரி வர நிறைவேற்றிட இயலாது.

மனோ இச்சையைப் பின் பற்றுபவர்கள் தொழுகையை வீணாக்கி விடுபவர்கள் என்றும் திருமறை எச்சரிக்கை விடுக்கின்றது.

ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.(19: 59)

3. இரவில் எழுந்து தொழுதல்:

நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது. (73: 6)

மேற்கண்ட இறை வசனத்தில் – அரபி மொழியில் “வத்-அன்” என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இச்சொல்லுக்கு, “to make smooth and soft, to force down, to tread under foot, to trample down – என்றெல்லாம் மொழி பெயர்க்கப் படுகின்றது.

ஆம். இரவுத் தொழுகைக்கு நம் மனத்தை மென்மையாக மாற்றிடும் வலிமை உள்ளது.

4. நோன்பு:

ரமலான் மாதம் பகல் முழுவதும் ஹலாலான உணவை உண்ணாமல், பருகாமல் – அதனை ஒத்திப் போட்டிடும் பயிற்சி, நிச்சயமாக மனக் கட்டுப் பாட்டை வளர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


குழந்தையின் முகத்தில் வாட்டமா? உடன் கவனம் செலுத்துங்கள்!

ஆங்கிலத்தில் ஒரு சொல். Depression. இதற்கு ஆங்கிலத்தில் இப்படி பொருள் கொள்கிறார்கள்: “The state of feeling very sad (and anxious) and without any hope. தமிழில் இதனை – “ஆழ்ந்த கவலையில் மூழ்கியிருக்கும் நிலை” என மொழி பெயர்க்கலாம். அந்தக் கவலைக்குக் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு விடிவு தெரியாத நிலையில் விரக்தியும் சோகமும் நிலை கொள்வதால் இதனை மனச் சோர்வு என்றும் பொருள் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட ஆழ்ந்த கவலை எதனால் ஏற்படுகின்றது, இந்நிலை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன என்பதை ஆய்வதற்கு முன்பு சில தகவல்கள்…


இந்த ஆழ்ந்த கவலை என்பது நவீன உலகம் நமக்களித்த “பரிசு” என்றால் அது மிகையில்லை! நமது இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டை – “The Age of Meloncholy” – அதாவது மனிதர்களை விரக்திக்கு இட்டுச் செல்லும் காலம் என்று வர்ணிக்கிறார்கள். (கடந்த இருபதாம் நூற்றாண்டை – “The Age of Anxiety” – அதாவது பதற்றத்தின் காலம் என்று வர்ணித்தார்களாம்.)

நவீன வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்த எல்லா நாட்டு மக்களையும் தொற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு நோய் தான் இது!

கட்டுக்கோப்பான, கட்டுப்பாடான குடும்ப அமைப்பு சிதறிப் போனமை, அதிகரித்துக் கொண்டே செல்கின்ற திருமண முறிவுகள். குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் அலட்சியம்; வேலைப் பளுவின் காரணம் காட்டி – குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்காமை. இறை நம்பிக்கையின் அடிப்படையில் வாழத் தவறியமை. மற்றவர்களைப் பற்றிய அக்கரையற்ற சமூகச் சூழல். மனதுக்கு ஆறுதல் அளிக்க என்று எந்த ஒரு அமைப்பும் இல்லாத நிலை. இப்படிப்பட்ட காரணங்களாலேயே குழந்தைகள் சோக மயம் ஆகிறார்கள்.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் – இந்த ஆழ்ந்த கவலை தொற்றிக் கொள்கின்ற வயது என்ன தெரியுமா? பத்து வயதிலிருந்து பதிமூன்று வயதுக்குள்! அதாவது நமது சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும்.

கவலைப் படுவது என்பது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் தானே – இதற்குப் போய் ஏன் கவலைப் படுகிறீர்கள் என்று கேட்கப் படலாம். சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்படுவதும், அது பற்றிக் கவலைப் படுவதும், பின்னர் பிரச்னை தீர்ந்து விட்டால் அதிலிருந்து விடுபட்டு விடுவதும், வாழ்க்கையின் யதார்த்தமே. ஆனால் நாம் இங்கே சொல்ல வருவது ஆழ்ந்த கவலை குறித்து. அதுவும் சிறிய வயதிலேயே தொற்றிக் கொள்கின்ற ஒரு எதிர்மறை மன நிலை குறித்து.

சிறு வயதிலேயே ஆழ்ந்த கவலைக்கு ஆட்பட்டு விடுபவர்கள் தான் – பின்னாட்களில் மனச் சோர்வாளர்களாக ஆகி விடுகிறார்கள் என்பதும் ஆய்வுகள் தெரிவிக்கும் செய்தியாகும். அப்படியானால் இந்த Depression குறித்து நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

குழந்தைகளுக்கு கவலை எப்படி ஏற்படுகிறது?

குறிப்பாக இரண்டு சூழல்களில் தான் குழந்தைகள் கவலைக்கு ஆளாகிறார்கள்:

ஒன்று: தன் முயற்சியில் தோல்வி அடைந்திடும் போது.

ஒரு காரியத்தில் இறங்குகிறான் ஒரு சிறுவன். அதில் தோல்வி அடைகின்றான். அல்லது ஒன்றை அடைந்திட முயற்சி செய்கின்றான். அது அவனுக்கு கிட்டிடவில்லை. அடுத்து என்ன செய்தால் தான் நினைத்தது கைகூடும் என்று அவனுக்குத் தெரியவில்லை. தான் எதற்கும் இலாயக்கில்லை என்று எண்ணத் தொடங்குகிறான். அப்போது தான் அவனை கவலை தொற்றிக் கொள்கிறது!

இரண்டு: மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பது புரியாத போது.

கவலைக்கு இன்னொரு காரணம் அவன் மற்றவர்களோடு பழகும் போது ஏற்படுகின்றது. ஏதோ ஒரு தேவைக்காக மற்ற ஒருவனை அணுகுகின்றான். அதை அவன் மறுத்து விடுகின்றான். இவன் அவனை விட்டு விலகி விடுகின்றான். தொடர்பை முறித்துக் கொள்கின்றான். மறு படி அவன் வந்து “சமாதானம்” பேசினாலும் அதனை இவன் ஏற்பதில்லை. அவன் எதிரே வந்தாலும் தலையைத் திருப்பிக் கொண்டு விலகிச் சென்று விடுகின்றான். இப்படியாக அவன் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கின்றான். விளைவு: கவலை!!!

இப்படிப்பட்ட இரண்டு சூழ்நிலைகளில் இருந்தும் இத்தகைய சிறுவர்களைக் காப்பாற்றிட வேண்டியது யார் பொறுப்பு?

பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு இதில் நீங்காப் பொறுப்பு இருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள்.

சோக வயப்பட்ட குழந்தைகள் – படிப்பில் கவனம் செலுத்திட இயலாது! இப்படிப்பட்ட குழந்தைகள் பள்ளியிலிருந்து இடையிலேயே நின்று விடும் நிலையும் (drop out) ஏற்பட்டு விடுகிறது. எனவே – ஆசிரியர்கள் அன்றாடம் நடத்துகின்ற பாடங்களோடு சேர்த்து – தோல்வியைச் சந்திப்பது எப்படி என்றும், அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடப்பது எப்படி என்றும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்திட வேண்டும். (மேலை நாடுகளில் சில பள்ளிகளில் இவ்வாறு சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்).

அடுத்து பெற்றோர்கள்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் காட்டினால்? தந்தை எப்போதும் வேலை வேலை என்று தனது தொழிலில் பிஸியாக இருந்து விட்டால்? தாய்க்கு தன் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை என்றால்? கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்தால்? கணவனும் மனைவியும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தால்……..? என்னவாகும் குழந்தைகள்?

குழந்தைகளின் கவலைகளை நீக்கிடப் போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படாத காரணத்தினால் தான் உலக அளவில், சோகத்துக்கு ஆளாகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றதாம். இதற்கு வழி ஒன்றை நாம் கண்டே ஆக வேண்டும் தானே!

குழந்தைகளின் கவலைகளைப் போக்கிட இஸ்லாம் என்ன தீர்வு தருகின்றது?

ஒன்று:

மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்வை இறைவன் கற்றுத் தருகின்றான். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும் எனில் பெற்றவர்கள் முதலில் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும்.

இரண்டு:

போதும் என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்திடக் கற்றுத் தருகின்றான் இறைவன். பொருள்களை வாங்கி வாங்கிக் குவிப்பதில் மகிழ்ச்சி இல்லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குப் புரிய வைத்திட வேண்டும்.

மூன்று:

மற்றவர்களுடன் மகிழ்ச்சியோடு பழகுவது எப்படி என்று கற்றுத் தருகின்றான் இறைவன். சிரித்த முகத்தோடு அணுகுவது, கை குலுக்குவது, சலாம் சொல்வது, அன்பளிப்புகளைப் பகிர்ந்து கொள்வது, மற்றவர்களுக்கு முன்னுரிமை தருவது, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, மன்னிக்கும் மனப்பான்மை, வீணான சந்தேகங்களைத் தவிர்த்தல், கோள் சொல்லாமை, மற்றவர்க்கு உதவி செய்தல் மற்றும் துஆ செய்தல் – இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுத் தந்திட வேண்டும். பெற்றோர்களின் முன்மாதிரியை அப்படியே பின்பற்றுவார்கள் என்பதால், பெற்றோர்கள் மற்றவர்களுடன் இனிமையாகப் பழகுவதை வழக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் அதற்குத் தக நடந்து கொள்வது எப்படி என்பதையும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் புரிய வைத்திட வேண்டும்.

குழந்தைகள் கவலை தோய்ந்தவர்களாக ஆவதிலிருந்து காப்பதே சாலச் சிறந்தது. ஏனெனில் ஒரு முறை அவர்கள் சோக வயப் பட்டு விட்டால், காலம் முழுவதும் அது தொடருமாம்!

குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வைத்திருத்தல் சமூகக் கடமை. ஏனெனில் அவர்களே எதிர்கால சமூகத்தின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கப் போகிறவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது!


வெற்றி வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கு மட்டும்!

அன்புள்ள மாணவச் செல்வங்களே!

மேல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!


ஆனால் இம்மடல் மேல்நிலைத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இப்போது (மட்டும்) இழந்திருக்கின்ற மாணவச் செல்வங்களுக்காக எழுதுகிறேன்.
மேல்நிலைப் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேறுவது என்பது ஒவ்வொரு மாணவனின் கல்வி வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான மைல்கல் தான்.

ஆனால் ஒரு சில மாணவர்களும் மாணவிகளும் இத்தேர்வில் வெற்றி பெறாமல் போய்விட்டால் - அவர்கள் தங்கள் வாழ்க்கையிலேயே தோற்று விட்டது போல் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

தாழ்வு மனப்பான்மை தேவையில்லை. விரக்தியடையத் தேவையில்லை. தற்கொலை எண்ணம் தலைதூக்கிடத் தேவையில்லை.

பெற்றோருக்கு பயந்து சாக வேண்டிய அவசியம் இல்லை. பெற்றோர்கள் உங்கள் மீது அளவிலாத அன்பும் நம்பிக்கையும் வைத்திருப்பவர்கள். உங்கள் நலம் நாடுபவர்கள். உங்களைத் திட்டினாலும் அதுவும் உங்கள் நன்மைக்குத் தான்! அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

தேர்வில் வெற்றி பெறவில்லையா? உணர்ச்சி வசப் படுகிறீர்களா? தனிமையை நாட வேண்டாம். உங்கள் நலம் நாடும் நண்பர்களுடன் (மட்டும்) சேர்ந்திருங்கள். வேறு யாரிடமும் ஒரு மூன்று நாட்கள் வரை பேச்சுக் கொடுக்க வேண்டாம்.

உங்கள் தந்தை உங்களைப் புரிந்து கொள்ளக் கூடியவரா? அவரிடம் சென்று உங்கள் நிலையை விளக்க முயற்சியுங்கள். மீண்டும் தேர்வு எழுதுகிறேன், அப்பா! என்று பணிவுடன் சொல்லுங்கள்.

அல்லது ஒரு கால் உங்களுக்கு விருப்பம் இல்லாமலேயே ப்ளஸ்-டூ வில் சேர்க்கப் பட்டிருந்தால் வேறு என்ன துறையில் நீங்கள் ஈடுபட விருப்பம் என்பதையும் உங்கள் பெற்றோரிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லி அவர்களை சமாதானப் படுத்துங்கள்.

உங்கள் தந்தை மிகவும் கண்டிப்பானவரா? உங்கள் நிலையை உங்கள் உறவினர் அல்லது ஆசிரியர் யாராவது ஒருவர் மூலமாக உங்கள் தந்தைக்குத் தெரிவியுங்கள்.

வாழ்க்கையே முடிந்து போய் விட்டது போல் துக்கப்பட வேண்டாம். உங்கள் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இப்போது உங்கள் கைகளில்!

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பல்லாயிரக் கணக்கான வாய்ப்புகள் உங்களுக்கு முன்னே காத்திருக்கும் போது வாழ்க்கையையே முடித்துக் கொள்ள நாடுதல் புத்திசாலித் தனமே இல்லை.

பள்ளிப் படிப்பில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருமே வாழ்க்கையில் வெற்றி
பெற்றவர்கள் அல்ல!

பள்ளிப் படிப்பில் தோல்வி அடைந்தவர்கள் எல்லோருமே வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களும் அல்ல!

நீ ஒரு விதை! இனி மேல் தான் -நீ விண்ணை நோக்கி கிளை பரப்பும் மரமாக எழுந்திட வேண்டியுள்ளது!

நீ ஒரு சுரங்கம்! இனி மேல் தான் உனக்குள் இருப்பதை நீ தான் தோண்டி எடுத்திட வேண்டியுள்ளது!

நீ ஒரு பட்டை தீட்டப்படாத வைரம்! இனி மேல் தான் உன்னை நீயே பட்டைத் தீட்டப் புறப்பட வேண்டும்.

நீ இருட்டில் விடப் பட்டதாக எண்ணாதே! ஒரே ஒரு அடி முன்னே எடுத்து வை! வெளிச்சம் உன்னை அரவணைக்கும்!
***

பெற்றோர்களே!

உங்கள் இளவல்கள் தோல்வி அடைந்து உங்களிடம் வரும் போது -
தஞ்சம் புகும் குஞ்சுகளைத தன் இறக்கைகளுக்குள் உள் வாங்கிக் கொள்ளும்
ஒரு தாய்க்கோழி போல் நடந்து கொள்ளுங்கள்!

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தானே எல்லாம்!

அவர்கள் வேறு எங்கு செல்வார்கள்? அரவணைத்துக் கொள்ளும் தருணம் இதுவே!

நாம் ஒன்றும் குறைந்து போய்விட மாட்டோம்!

நாமும் வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்தவர்கள் தானே!


சாதிக்கப் பிறந்தவனை சாக விடலாமா?

ரூபாய் 1000 தொலைத்ததால் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை. இது அண்மையில் நடந்த ஒரு சம்பவம்.


திருச்சிக்கு அருகில் உள்ள ஓர் கிராமம். அங்கே விவசாயி ஒருவரின் மகன் மாரிமுத்து (17). அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு, குடும்ப செலவிற்காக இவரது தந்தை நகையை அடகு வைத்தார். அதில் ரூ. ஆயிரத்தை, கடை வீதியில் நின்றிருந்த மகன் மாரிமுத்துவிடம் கொடுத்து வீட்டில் ஒப்படைக்கும் படி கூறியிருக்கிறார்.

தந்தையிடம் பணத்தைக் பெற்றுக் கொண்டு வீட்டுக்கு செல்லும் வழியில் பணத்தை தொலைத்து விட்டார். தந்தை அடிப்பார் என பயந்து மாரிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெற்ற மகனை பரி கொடுத்து வாடும் அந்தப் பெற்றோருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

சில வருடங்களுக்கு முன்பு - இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது. 19 வயது இளைஞன் ஒருவன். அவனது தந்தை புதிதாக கைபேசி ஒன்றை வாங்கித் தருகிறார். ஒரே வாரத்தில் அதனைத் தொலைத்து விட்டான் மகன். தந்தை திட்டுவாரே என பயந்த அந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டான்.

அது போலவே - சென்னையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி. பாண்டிச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல மகளை அழைத்தார் தந்தை. மகள் மறுத்து விட்டார். "என்னடி நீ குழந்தை வளர்த்த லட்சணம்", என்று மனைவியைத் திட்டினார் தந்தை. அவ்வளவு தான். அந்த மாணவி செய்து கொண்டதும் தற்கொலையே!

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. படிக்கின்றோம். மறந்து விடுகின்றோம். அவ்வளவு தானா? இது போன்ற தற்கொலைகளை நிகழ விடாமல் தடுத்திட நம்மால்முடியாதா? முடியும். முயற்சிக்க வேண்டும். தற்கொலைகளைத் தடுக்க வழி வகைகளைக் காண வேண்டியது அனைத்து சமூக ஆர்வலர்களின் கடமை என்பதை இங்கே நினைவு படுத்த விரும்புகிறோம்.

என்ன செய்யலாம்?

முதலில் மாணவர்களுக்கு சில ஆலோசனைகள்:

ஒரு பொருள் தொலைந்து விட்டது. தந்தை திட்டுவார் அல்லது அடிப்பார். அவ்வளவு தானே. நிலைமையைச் சந்திப்பது எப்படி என்று யோசிப்பதை விட்டு விட்டு தற்கொலையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டுமா? வேறு வழிகளே இல்லையா?

தம்பி! ஒரு பொருளைக் காணாமல் அடித்து வீட்டீர்கள். தந்தை திட்டுவார். என்ன செய்யலாம்? ஒன்று உங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்று அவர்கள் மூலம் பிரச்னையைத் தீர்க்க முயற்சி செய்யலாம். அல்லது - உங்கள் சக மாணவனின் பெற்றோர் வீட்டுக்குச் சென்று இது விஷயத்தில் உங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளலாம்.

அல்லது - உங்கள் மனம் கவர்ந்த ஆசிரியர் வீட்டுக்குச் சென்று அடைக்கலம் தேடலாம். இதுவெல்லாம் சரிப்பட்டு வராதா? வேண்டாம். ஒரு கடைக்குச் சென்று பகுதி நேர வேலை ஒன்றைத் தேடுங்கள். நான்கைந்து நாட்கள் வேலை செய்து இழந்த தொகையைச் சம்பாதித்து தந்தையிடம் ஒப்படைக்கலாமே.

அதற்கிடையில் தொலைபேசி மூலம் உங்கள் நிலையை உறவினர்/ நண்பர் மூலமாக உங்கள் பெற்றோருக்கு"என்னைத் தேட வேண்டாம் சில தினங்களில் வீட்டுக்கு வந்து விடுவேன்" என்று தெரியப் படுத்தலாம் தானே! இது போன்ற எத்தனையோ வழிகள் இருக்கத் தானே செய்கின்றன!

அடுத்து பெற்றோருக்கு சில ஆலோசனைகள்: ஒரு பொருளைத் தொலைப்பது என்பது எல்லோர் வாழ்விலும் நடக்கக் கூடியது தானே! அது ஒன்றும் ஹிமாலயத் தவறு கிடையாதே! இதற்குப் போய் உங்கள் பிள்ளைகள் ஏன் உங்களைக் கண்டு இப்படி பயந்து நடுங்குகிறார்கள்?
காரணம் இருக்கிறது.

அது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு பெரிய "இடைவெளி" இருக்கிறது. அதனை உருவாக்கியது நீங்கள் தான்! எந்த ஒன்றையும் குறித்து உங்களிடம் அவர்கள் நேரடியாகப் பேசி விட முடியாது. அவ்வளவு பயம்! அதனால் தான் சொல்கிறோம். இந்த இடைவெளியை நீங்கள் தகர்த்திட வேண்டும். உங்கள் பிள்ளைகள் எந்தச் சூழ்நிலையிலும் உங்களிடம் ஓடி வந்து "அடைக்கலம்" தேடிட வேண்டும். அதற்கு நீங்கள் நேரம் ஒதுக்கிட வேண்டும். மனம் திறந்து அவர்களிடம் பேசிட வேண்டும்.

வாழ்க்கையின் சவால்களை சந்திப்பது எப்படி என்று அவர்களுக்கு நீங்கள் சொல்லித் தர வேண்டும். உங்கள் பேச்சில் "பாசம்" பொங்கி வழிய வேண்டும். "அதிகாரம்" தலையெடுக்கக் கூடாது. உங்கள் பிள்ளைகள் தவறு செய்திடும்போது அந்தத் தவறையே ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்வது எப்படி என்று நீங்கள் கற்றுக் கொடுத்திட வேண்டும்.

அடுத்து ஆசிரியர்களுக்கு:ஆசிரியர்களே! நீங்கள் ஆங்கிலம், தமிழ், இயற்பியல், வரலாறு எந்தப் பாடத்தை மாணவர்களுக்கு எடுத்தாலும், அத்துடன் அவர்களுக்கென்று ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி வாழ்க்கைக் கலையைக் கற்றுக்கொடுங்கள். அதில் உங்கள் கரிசனம் தென்படட்டும்.

சினிமா இயக்குனர்களுக்கு:

மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை அடியோடு தகர்க்கும் விதத்தில் ஒன்றிரண்டு படங்கள் எடுங்களேன்.

தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு:

குழந்தை வளர்ப்பு குறித்த நிகழ்ச்சிகளை சுவாரசியமாகத் தயாரித்து ஒளிபரப்புங்களேன். (இதற்கு விஜய் டீவியின் நீயா! நானா! நிகழ்ச்சி ஒரு நல்ல அணுகுமுறை)

பள்ளி நிர்வாகிகளுக்கு:

மாணவர்களுக்கு நீங்கள் soft skill வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். உணர்ச்சி வசப் படும் நேரங்களில் அறிவு பூர்வமாக செயல்படுவது எப்படி என்று அந்த வகுப்புகளில் மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். இவ்வகுப்புகளை உங்கள் பள்ளியில் தொடர்ந்து நடத்திட ஆவன செய்யுங்கள்.

மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை அகற்றி அவர்களைத் தன்னம்பிக்கையாளர்களாக மாற்றிட வேண்டிய விஷயத்தில் மத்திய மாநில அரசுகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஏனெனில் நமது மாணவர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். அவர்களை நாம் சாக விடக் கூடாது!


மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்!

மற்றவர் உணர்வுகளை மதிப்பது (respecting the feelings of others) குறித்து நபிமொழிகள் நிறைய உண்டு!

அடுத்தவர் நிலையில் நம்மை வைத்து சிந்தித்தால் அவருடைய உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள முடியும். இதற்கு ஆங்கிலத்தில் empathy என்று பெயர்.

இவ்வாறு மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்வது நபி வழியாகும். நபியவர்கள் மற்றவர்கள் உணர்வுகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பளிப்பவர்கள் என்பதை சில நபிமொழிகளைக் கொண்டு ஆய்வோம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக்கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இருபிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) – நூல்: ஸஹீஹுல் புகாரி

இன்னொரு நபிமொழியைப் பார்ப்போம்:

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”நீங்கள் மூவர் இருந்தால் ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் உரையாட வேண்டாம், நீங்கள் மக்களுடன் கலக்கும்வரை. ஏனெனில் அது மூன்றாமவரைக் கவலையில் ஆழ்த்திவிடும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அந்த மூன்றாவது நபருடைய நிலையில் உங்களை வைத்து சிந்தித்துப் பாருங்கள். உங்களை அந்த இருவரும் அவமானப்படுத்துவது போல் நீங்கள் உணர்வீர்கள்!

அப்துல்லாஹ இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நானும் இப்னு உமர் (ரழி) அவர்களும் கடைவீதியிலுள்ள காலித் பின் உக்பாவின் வீட்டின் அருகிலிருந்தோம். அப்போது ஒரு மனிதர் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் ரகசியம் பேச விரும்பினார். அது சமயம் இப்னு உமர் (ரழி) அவர்களுடன் என்னைத் தவிர வேறு எவருமில்லை. அதனால் இப்னு உமர் (ரழி) மற்றொரு மனிதரையும் அழைத்துக் கொண்டார்கள்.

இப்போது நான்கு நபர்களானோம். என்னிடமும், தான் அழைத்த மூன்றாவது நபரிடமும், ”நீங்கள் இருவரும் சிறிது நேரம் தாமதியுங்கள். ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்றார்கள். (அல் முவத்தா)

இப்னு உமர் (ரழி) அவர்கள் ஒருவர் தன்னை வழியில் சந்தித்து ரகசியம் பேச விரும்பியபோது மூன்றாம் நபருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் அதைத் தவிர்த்து விட்டார்கள். நான்காமவரை அழைத்ததன் மூலம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைக் கற்றுத் தந்து விட்டார்கள். என்ன அற்புதமான அணுகுமுறை பார்த்தீர்களா?

நபித் தோழர்களை – அடுத்தவர் நிலையில் தம்மை வைத்து – சிந்தித்துப் பார்த்திடச் சொல்லி – பாடம் கற்பித்திருக்கின்றார்கள் நபியவர்கள்.

கேள்விப்பட்ட நபிமொழி தான் அது: நபித்தோழர் ஒருவர் நபியவர்களிடம் வந்து விபச்சாரம் செய்திட அனுமதி கேட்டிட மற்ற நபித்தோழர்களுக்குக் கோபம் வந்திட நபியவர்களோ அவரை தம் அருகில் அமர்த்திக் கொண்டு — “நீங்கள் எந்த செயலை செய்திட விரும்புகின்றீர்களோ அதே செயலை உங்கள் தாயோ, சகோதரியோ, மனைவியோ அல்லது மகளோ செய்திட விரும்பிட மாட்டீர்கள் அல்லவா?” என்று சிந்திக்க வைத்து அவரைத் திருத்திய நிகழ்ச்சியை நாம் அறிவோம்.

பொதுவாகவே – அடுத்தவர் நிலையில் நம்மை வைத்து சிந்தித்தாலே போதும் – நமது பல பிரச்னைகள் தீர்ந்து போகும்!

தொழுகை இந்த உணர்வினை நமக்குக் கற்றுத் தரும் என்பதற்கு நபியவர்களே முன்மாதிரி:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்'. என அபூ கதாதா(ரலி) அறிவித்தார். (புகாரி)

Comments