"வேலைக்கு லாயக்கு இல்லை?"

(மனிதர்கள் எந்த ஒன்றுக்கும் இலாயக்கில்லாதவர்களாக ஆவது எப்படி?)

ஒன்று கூட வாகனத்துக்குரிய தகுதி இல்லாத நூறு ஒட்டகங்கள் இருப்பது போல மனிதர்கள் உள்ளனர் ' என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

இந்த நபிமொழியின் கருத்து என்ன?



மனிதர்கள் அனைவரும் சுரங்கங்கள் என்ற நபியவர்கள், ஏன் அவர்களில் பலரை – ஒன்றுக்கும் உதவாத ஒட்டகங்களோடு ஒப்பிட வேண்டும்?

சற்றே ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயம் இது!

ஏன் மனிதர்களில் பெரும்பாலோர் சுறுசுறுப்பற்றவர்களாக, பயனற்றவர்களாக, எதற்குமே இலாயக்கில்லாதவர்களாக இருக்கிறார்கள்?

அதே நேரத்தில் - ஒரு சிலர் மட்டுமே துடிப்பு மிக்கவர்களாக, ஊக்கமுள்ளவர்களாக, தாமாகவே முன் வந்து செயலாற்றுபவர்களாக விளங்குவது ஏன்?

இயற்கையிலேயே பெரும்பாலான மனிதர்கள் பண்பாடற்றவர்களாகவும் தீயவர்களாகவும் எதற்குமே பயன்படாதவர்களாகவும் தான் படைக்கப்பட்டிருக்கின்றார்களோ என்று நாம் தவறாக விளங்கிக் கொண்டு விடக் கூடாது!

ஏனெனில் – மனிதனுக்கு எல்லா வளங்களும் கொடுக்கப்பட்ட நிலையிலேயே தான் அவன் பிறக்கின்றான்! அவை அனைத்தும் மறைந்து கிடக்கின்றன – சுரங்கங்களில் மறைந்து கிடக்கின்ற தங்கத்தைப் போல வெள்ளியைப்போல!

ஆனால் அவற்றை அகழ்ந்தெடுத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருபவர்கள் மிகக் குறைவு! இதனையே  மேலே சுட்டிக்காட்டிய நபி மொழி உணர்த்துகிறது

எல்லா மனிதர்களுக்கும் பார்க்கின்ற கண்களையும், கேட்கின்ற காதுகளையும், .சிந்திக்கும் இதயங்களையும் கொடுத்திருக்கின்றான் அல்லாஹு தஆலா. ஆனால் அவைகளை முறையாகப் பயன்படுத்தாதது யார் தவறு?

பின் வரும் வசனம் இதனையே சாட்டையடியாக நமக்கு உணர்த்துகிறது:

"அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன – ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் – இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் அலட்சியம் செய்தவர்களாவார்கள். (7: 179)

ஒட்டகம் ஒன்று வாகனமாகவும் பயன்படவில்லை; பொதி சுமந்திடவும் பயன்படவில்லை என்றால் என்ன பொருள்?

வல்லோன் அல்லாஹ் எதற்கும் பயன்படாத நூற்றுக் கணக்கான ஒட்டகங்களைப் படைத்து விட்டான் என்றா பொருள்?

அந்த ஒட்டகங்கள் அவை செய்திட வேண்டிய பணிகளுக்காக முறைப்படி பயிற்றுவிக்கப் படவில்லை என்றே பொருள்!

மனிதனின் நிலையும் இதே தான்! மனிதன் பிறக்கும்போதே எல்லாவிதமான வளங்களையும் தன்னகத்தே (hidden) பொதிந்துள்ள நிலையில் தான் உலகுக்கு வந்து சேர்கிறான்; அவனை வளர்த்தெடுக்க வேண்டியது சமூகத்தின் கடமை! அப்படி வளர்த்தெடுக்கத் தவறினால் – என்ன விளைவுகள் ஏற்படும்?

அல்லாஹ் சொல்வது போல கால்நடைகளை விடக் கேடு கெட்டவர்களைத்தான் எண்ணிக்கையில் மிக அதிகமாக ஒரு சமூகத்தில் பார்க்க இயலும்!

அதனால் தான் – சின்னஞ்சிறுமிகள் பலர் கற்பழிக்கப்படுகின்றார்கள்!

அதனால் தான் – வயிற்றில் உள்ள குழந்தையைக் குத்திக் கிழித்து தூக்கி வீசுகின்ற கொடும்பாவிகளை நாம் காண முடிகின்றது!

அதனால் தான் – பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்படுவதைப் பார்க்கின்றோம்.

அதனால் தான் – 'இனப்படுகொலை' என்ற பெயரில் பலவீனமான மனித இனங்கள் அழித்தொழிக்கப்படுகின்றன!

அதனால் தான் – பலவீனமான மனித குழுக்கள் அடிமைப்படுத்தப் படுகின்றார்கள்!

தீர்வு எங்கே இருக்கிறது? அது மனிதர்களை மனிதர்களாக்குவதில் தான் இருக்கின்றது என்றால் அது மிகையாகாது!

எந்தப் பொருளும் தன்னைப்போன்ற ஆயிரம் பொருள்களை விட சிறந்ததாக இருப்பதில்லை – மனிதனைத் தவிர! என்றொரு நபிமொழி உண்டு. (நூல்: தபரானி)

அதாவது உருவத்திலும் வயதிலும் தன்னைப்போன்ற ஆயிரம் மனிதர்களை விட ஒரே ஒரு மனிதன் தன் உயர்ந்த பண்புகளால் சிறந்தவனாகிறான் என்று பொருள்.

மனித வளங்கள் மேம்படுத்தப்படும் போது ஒரு மனிதன் ஆயிரம் பேர்களை விடச் சிறந்தவன் ஆகின்றான்!

மனித வளங்கள் பண்படுத்தப்படாத நிலையில் – ஒன்றுக்கும் பயன்படாத நூறு ஒட்டகங்களைப் போன்றவனாகி விடுகின்றான் மனிதன்!

துடிப்பான மனிதப் பொக்கிஷங்களின் அவசியம் குறித்து இரண்டாம் கலீபா உமர் அவர்கள் எப்படி சிந்திக்கிறார் பாருங்கள்:

ஒரு சமயம் கலீபா உமர் அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் ஒரு வீட்டிலிருந்தார்கள். அது ஒரு விசாலமான பெரிய வீடு. அப்போது உமர் அவர்கள் தம் தோழர்களிடம் இப்போது உங்களுக்கு மனதில் தோன்றும் கற்பனைகளை ஆசைகளைச் சொல்லுங்கள் என்றார்கள்.

உடனே அங்கிருந்த தோழர்களில் ஒருவர் இந்த பெரிய வீடு முழுக்க எனக்கு வெள்ளிக்காசுகள் கிடைக்க வேண்டும். அவற்றை நான் அல்லாஹ்வின் பாதையில் செலவிட வேண்டும். இதுவே என் ஆசை கற்பனை என்றார்.

இன்னொருவர் இந்த வீடு முழுக்க எனக்கு தங்கம் கிடைத்தால் அவற்றை நான் அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவேன் என்றார்.

பிறகு தோழர்கள் நீங்கள் உங்கள் ஆசையைச் சொல்லுங்கள் என்று கலீபா உமர் அவர்களிடம் கேட்டனர். அப்போது உமர் அவர்கள் இந்த வீடு முழுக்க எனக்குச்சில மனிதர்கள் வேண்டும். அபூ உபைதா, முஆது பின் ஜபல், அபூ ஹுதைபாவின் முன்னாள் அடிமை ஸாலிம் - போன்ற மனிதர்கள் எனக்கு வேண்டும். அவர்களை அல்லாஹ்வின் பாதையில் நான் பயன்படுத்த வேண்டும்.இதுவே என் ஆசை, கற்பனை என்று கூறினார்கள்.

ஆனால் நமது நிலை என்ன?

Comments