மனைவி ஒரு பொக்கிஷம்! பயிலரங்கம் அறிமுகம்! ;

மனைவி ஒரு பொக்கிஷம்!

இது நீடூர் S A மன்சூர் அலி அவர்கள் நடத்தும் கணவன்- மனைவியருக்கான மூன்று நாள் பயிலரங்கம்!
'
இனிக்கும் இல்லற வாழ்க்கை!

இல் வாழ்க்கை என்பது கரும்பு போன்றது! மகிழ்ச்சி, அன்பு, அரவணைப்பு, காதல், பரிவு, பாசம், நெருக்கம், தாம்பத்யம் - இவற்றோடு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, விட்டுக் கொடுப்பது, மன்னிப்பது, அர்ப்பணிப்பது, இவற்றின் விளைவாக -குழந்தைகள், குதூகலம், கொண்டாட்டம் - இவற்றோடு குடும்பத்தில் அமைதி, மன நிம்மதி, திருப்தி மொத்தத்தில் திகட்டாத தித்திப்பு - இதுவே இனிக்கும் இல்லற வாழ்க்கை!


இல்லத்தரசன்! இல்லத்தரசி!

கணவனும் மனைவியும் இல்லத்தரசரும் இல்லத்தரசியும் ஆவார்கள்! இஸ்லாத்தைப் பொறுத்தவரை - நம்மில் ஒவ்வொருவரும் பொறுப்பு மிக்கவர்களே - எனும் அடிப்படையில் கணவன் குடும்பத் தலைவனாகவும்; மனைவி குடும்பத் தலைவியாகவும் பொறுப்பேற்றுக் கொள்பவர்கள். இந்தப் பொறுப்புணர்ச்சியை செவ்வனே நிறைவேற்றுவது எப்படி என்பதை கணவன் மனைவியர் அவசியம் கற்றுக் கொண்டாக வேண்டும்!  

சவால்கள் நிறைந்த குடும்ப வாழ்க்கை!

உடலளவில் மட்டுமல்ல, மனத்தளவிலும் கூட பெண்கள் ஆண்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள்! அறிவாற்றலில், உணர்வுகளைப் புரிந்து கொள்வதில்  ஆண்களும் பெண்களும் முற்றிலும் வேறுபட்டவர்கள்! எனவே இல்லற வாழ்க்கை என்பது பல சவால்கள் நிறைந்தது! கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளை எவ்வாறு கையாள்தல் வேண்டும் என்பது பெரும்பாலான கணவன் மனைவியருக்குத் தெரிவதில்லை! எனவே பல கணவன் மனைவியர் தங்களது இல்லறத்தில் பிரச்னைகள் தோன்றி அவை மேலும் சிக்கலாகி விட்டால், அவை தீர்க்கப்படவே முடியாது என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர். எனினும் இல்லறச் சிக்கல்கள் எதுவாயினும், அவற்றுக்கு அழகிய தீர்வுகள் இருக்கின்றன!

உணர்ச்சிக் கட்டுப்பாட்டின் அவசியம்!

கணவனும் மனைவியும் பல காரணங்களினால் பல சூழ்நிலைகளில் உணர்ச்சியின் பிடியில் சிக்கிக் கொண்டு விடுகின்றார்கள். உணர்ச்சிகளால் கணவனும் மனைவியும் அலைக்கழிக்கப்படும்போது – சற்றே அவர்கள் நிதானித்துச் செயல் பட வேண்டியுள்ளது. இல்லற வாழ்வில் கணவனும் மனைவியும் தங்களின் உணர்ச்சிகளை அறிவு பூர்வமாகக் கையாள்தல் எப்படி என்பதைக் கற்றுக் கொள்தல் அவசியம்!

கணவன் மனைவி கருத்துப் பரிமாற்றம்!

கணவன் மனைவி இருவருக்கிடையே கருத்துப் பரிமாற்றம் என்பது தொய்வில்லாமல் நடந்து கொண்டே இருந்திட வேண்டிய ஒன்று. எனவே ஒருவர் தனது கருத்தை மற்றவர் ஏற்கச் செய்வது எப்படி என்பதை கணவனும் மனைவியும் கற்றுக் கொள்வது அவசியம்.

குழந்தைகள் சுரங்கங்கள்!  

இன்றைய குழந்தைகள் படு சுட்டிகள்!  நாமே வியந்து அசந்து போகும் அளவுக்கு அவர்களிடம் அதிசயமான பல திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன! இன்றைய குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது என்பது ஒரு பெரிய சவால் ஆகும். அதற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு! தங்கள் குழந்தைகளை வெற்றியாளர்களாக ஆக்கிட - குழந்தைகளைப் பெற்றிருக்கும் ஒவ்வொருவரும் - குழந்தை வளர்ப்பு எனும் கலையை அவசியம் கற்றுக் கொண்டாக வேண்டும்.

இப்பயிலரங்கத்தின் சிறப்பம்சங்கள்:

சிந்தனையைத் தூண்டும் கேள்வி-பதில் மற்றும் கலந்துரையாடல்களுடன் இனிய தமிழில், இறை வழிகாட்டுதலின் அடிப்படையில், நவீன ஆய்வுகளின் உதவியோடு, அளிக்கப்படும் பயிற்சி இது!

யார் யார் கலந்து கொள்ளலாம்?

இது இல்லறத்தை இனிமையாக்கிட விரும்பும் கணவன் - மனைவியர் மற்றும் திருமணத்துக்குக் காத்திருக்கும் இளைஞர்கள், இளைஞிகள் அனைவரும் கலந்து பயன்பெறலாம். 

Comments