நூல்: குழந்தைகள் சுரங்கங்கள்!

குழந்தைகள் சுரங்கங்கள்!

சுன்னத்தான குழந்தை வளர்ப்பு

S. A. மன்சூர் அலிமுன்னுரை

குழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்!.

குழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்! .

குழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்!

குழந்தைகள் ஒரு அமானத்தும் கூட!

எனவே குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பொறுப்பு!

குழந்தை வளர்ப்பு எனும் இந்த மகத்தான பொறுப்பினை (responsibility) நிறைவேற்றிட ஒவ்வொரு பெற்றோரும் தங்களைத் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கென்று பெற்றவர்கள் இருவருமே தகுந்த நேரம் (Quality Time) செலவிட வேண்டும். குழந்தையின் தாயும் தந்தையும் சேர்ந்து அமர்ந்து - குழந்தை வளர்ப்பு குறித்து கலந்துரையாட வேண்டும்.

குழந்தை வளர்ப்பின் "சவால்களை" அவர்கள் மற்றவர்களுடன் கலந்து பேசிட வேண்டும். படித்தவர்கள், அனுபவம் உள்ளவர்களிடமிருந்து - கருத்துக்களை சேகரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அவர்கள் அலட்சியம் செய்தல் கூடவே கூடாது.

பெற்றவர்கள் - குழந்தை வளர்ப்பு எனும் மகத்தான பொறுப்பின் அனைத்துப் பரிமாணங்களையும் புரிந்து கொள்ளவும், அதன்படி செவ்வனே செயலாற்றி தாங்கள் பெற்றெடுத்த செல்வங்களை ஈருலகிலும் வெற்றிபெறத் தகுதியுடைவர்களாக ஆக்கிட -  இது ஒரு நல்ல நூலாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.

இவண்

எஸ். ஏ. மன்சூர் அலி

***

குழந்தை வளர்ப்பு ஒரு கலை!

நல்ல துணி வகைகளை எடுத்து நன்றாக தைக்கத் தெரியாத டெய்லர் ஒருவரிடம் கொடுத்தால் நமது உடைகளின் நிலை என்னவாகும்?

தேவையான அனைத்து சமையல் பொருட்களையும் தேர்வு செய்து சமைக்கத் தெரியாத சமையல்காரரிடம் கொடுத்தால் அந்த உணவின் சுவை எப்படி இருக்கும்?

நல்ல செங்கற்கள், நல்ல சிமெண்ட், நல்ல இரும்புக் கம்பிகள் என்று பார்த்து பார்த்து வாங்கி அரைகுறைப் பொறியாளர் ஒருவரிடம் ஒப்படைத்தால் நமது வீட்டின் அழகு எப்படி காட்சியளிக்கும்?

தோட்டக்கலை தெரியாத ஒருவரிடம் இளம் பூச்செடிகளை ஒப்படைத்தால் அவைகளின் கதி என்னவாகும்?

ஆடு,மாடு,கோழிகளை பண்ணை வைத்து வளர்ப்பவர்கள் அது குறித்த அறிவை சிறிதும் பெறாமல் போய் விட்டால் அந்த உயிரினங்கள் என்ன பாடு படும்?

அரைகுறை மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்டால் நோயாளி என்ன ஆவார்?

பெற்றோர்களே!

தையல் ஒரு கலை (art)! அது ஒரு திறமை (skill)!

சமையல் ஒரு கலை! அது ஒரு திறமை!

வீடு கட்டுதல் ஒரு கலை! அது ஒரு திறமை!

அது போலவே தோட்டப் பராமரிப்பும், ஆடு மாடு வளர்த்தலும், அறுவை சிகிச்சையும் வெவ்வேறு கலைகளே! திறமைகளே!

அப்படியானால் குழந்தை வளர்ப்பு? அது ஒரு கலை அல்லவா? அது ஒரு திறமையல்லவா?

திருமணமான எத்தனையோ தம்பதிகள் குழந்தைப் பேற்றிற்காக ஏங்கித் தவிப்பதைக் கண்டிருப்பீர்கள்! குழந்தைப் பேற்றினை அதுவரை அடையாத ஒரு மனைவியின் ஏக்கத்தை இவ்வாறு வர்ணிக்கிறார் ஒரு கவிஞர்:

அடுக்கி வைக்கவா?

கலைத்துப் போடவா?

அடுக்கி வைத்து என்ன பயன்?

கலைத்துப் போட

ஒரு குழந்தை இல்லையே?

(நன்றி:தினகரன் வார மலர்)

அல்லாஹு தஆலா உங்களுக்கு அழகான குழந்தையை / குழந்தைகளை அருட்கொடையாக வழங்கியிருக்கிறான். ஆனால் நமது குழந்தைகளை எப்படி வளர்த்திட வேண்டும் என்பது குறித்து நமக்கு ஆனா ஆவன்னா கூடத் தெரியாது! இது வேதனை அல்லவா?

நன்றாக உடுத்திக் கொள்ள நல்ல டெய்லரைத் தேடிப் போகிறோம். நாம் பெறுகின்ற குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர்களாக நாம் விளங்கிட வேண்டாமா?  ...

குழந்தைக்கு அம்மா யார்?

சொற்பொழிவு ஒன்றில் கேட்ட நினைவு.

அவர் ஒரு சிறந்த மார்க்க அறிஞர். அவரது பெயர் - இப்ராஹிம் இப்னு அத்ஹம் (ரஹ்). ஒரு நாள் அவரிடம் ஆலோசனை கேட்க ஒருவர் வந்திருந்தாராம்.

'குழந்தை வளர்ப்பது எப்படி என்பது குறித்து தங்களிடம் ஆலோசனை பெற வந்துள்ளேன்'.

அறிஞர் கேட்டார்: 'உங்கள் குழந்தையின் வயது என்ன? '

‘ஒரு மாதம் தான் ஆகிறது குழந்தைக்கு!’

'நீங்கள் மிகவும் தாமதமாக வந்துள்ளீர்களே!'

'ஏன்? அப்படியானால் நான் எப்போது வந்திருக்க வேண்டும்?'

'நீங்கள் திருமணம் முடிப்பதற்கு முன்பே வந்திருக்க வேண்டும். ஏனெனில் குழந்தை வளர்ப்பது என்பது அந்தக் குழந்தையைப் பெற்று வளர்த்திடும் தாயைத் தேர்வு செய்திடும் நேரத்திலேயே துவங்கி விடுகிறது'.

அறிஞரின் பதிலில் உள்ள ஆழத்தைக் கவனித்தீர்களா?

இதோ இன்னொரு சம்பவம்.

அபுல் அஸ்வத் (ரஹ்) என்ற பெரியார், ஹஜ்ரத அலி (ரளி) அவர்களின் மாணவர். அவர் தமது முதுமைக் காலத்தில் தனது பிள்ளைகளை அழைத்து 'நான் உங்களுக்கு நீங்கள் பிறப்பதற்கு முன்பும் பிறந்த பின்னரும் உபகாரம் செய்துள்ளேன்' என்று சொன்னாராம். புரியவில்லையே என்றார்களாம் பிள்ளைகள். நல்ல ஸாலிஹானதொரு பெண்ணை எனக்கு மனைவியாக தேர்வு செய்ததன் மூலம் உங்களுக்கு நல்லதொரு தாயை நான் தேர்வு செய்திடவில்லையா? என்று புரிய வைத்தாராம் அந்த அறிஞர்.

இந்த இடத்தில் நாம் சில பாடங்களைப் படித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறோம்.

1. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது திருமண விஷயத்தில் முற்றிலும் பொருந்தும்.

2. வரதட்சனைக்காக பெண்ணை தேர்வு செய்யும் இளைஞர்களே! கொஞ்சம் சிந்தியுங்கள். பெண்ணின் குணத்தைப் பாருங்கள். பணத்தைப் பார்க்காதீர்கள்.

3. அவசர கோலத்தில் காதலித்து எடுத்தேன் கவிழ்த்தேன் என்று திருமணம் செய்திடத் துடிக்கும் இளைஞர்களே! சற்று நிதானித்து செயல் படுங்கள். காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். இஸ்லாத்தைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு சீரியஸான விஷயம். அதனை விளையாட்டாய் எடுத்துக் கொண்டால் அது உங்கள் திருமண வாழ்க்கையையும் பாதிக்கும். உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையையும் பாதிக்கும்.

4. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மார்க்கப் பற்றுள்ள பெண்களை தேர்வு செய்திடும் காலம் விரைவில் வரும் என்ற நம்பிக்கை பொய்க்கப் போவதில்லை.

இருபத்தொன்றாம் நூற்றாண்டுக் குழந்தைகள்!

இன்றைய குழந்தைகளை நாம் "இருபத்தொன்றாம் நூற்றாண்டுக் குழந்தைகள்" என்று அழைக்கலாம்.

அவர்கள் பிறந்த உடனேயே - நவீன தொழில் நுட்பத்தின் கருவிகள் (GADGETS) எல்லாம் அவர்கள் கைகளுக்கு எளிதில் கிட்டி விடும் காலம் இது!

அவர்கள் வேகம் வேறு; நமது வேகம் வேறு; அவர்கள் வேகத்துக்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாது;

ஒரு எட்டு வயது சிறுமி; தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள்; அவளை அழைத்து - "உன் வாப்பாவிடம் சென்று அவருடைய கைபேசி எண்ணை ஒரு தாளில் எழுதி வாங்கி வருகிறாயா?" - என்று கேட்டேன். "எழுதிக் கொள்ளுங்கள், அங்கிள்!" என்று அப்படியே டக்கென்று சொல்லி விட்டாள் அவள்!

ஐந்து வயது சிறுவன். அவனும் அப்படித்தான்; நெருங்கிய உறவினர்கள் அனைவரின் கைபேசி எண்களும் அவனுக்கு மனசுக்குள்ளேயே அத்துப்படி!

அவர்கள் சில நேரங்களில் கேட்கின்ற கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடிவதில்லை!

அதே நேரத்தில் - இத்தகைய இருபத்தொன்றாம் நூற்றாண்டுக் குழந்தைகளை வளர்ப்பது ஒரு மிகப்பெரிய சவால் (great challenge) என்றால் அது மிகையில்லை!

'சுட்டித்தனம் ' என்பது (CREATIVE INTELLIGENCE) குழந்தைகளுக்கு மிக மிக அவசியம். அவர்களின் எதிர்கால வெற்றிக்கு அவர்களிடம் கொட்டிக் கிடக்கின்ற புதுப்புது சிந்தனைத் திறன்தான் பெரிதும் உதவும். அவற்றை அள்ளி அள்ளி வெளிக்கொணர வேண்டுமே தவிர கிள்ளி எறிந்து விடக் கூடாது.

சில சமயங்களில் அவர்களின் சுட்டித்தனம் நமக்கு எரிச்சலைக் கூடத் தரலாம். அன்றாட வாழ்க்கையில் - நமது குழந்தைகள் நமது எதிர்பார்ப்புகளுக்குத் தகுந்தவாறு 'அடக்கம் ஒடுக்கமாக' நடந்திட மாட்டார்கள் தான்.

அப்போதெல்லாம் பெரியவர்கள் நாம் என்ன செய்வோம்? நமது பழங்கதைகளைத் துவங்கி விடுவோம். அந்தக் காலத்தில் நாங்களெல்லாம் இப்படியா இருந்தோம். கையைக் கட்டி, வாயைப் பொத்தி நில் என்றால் நிற்போம். உட்கார் என்றால் உட்காருவோம். நீங்களும் இருக்கிறீர்களே என்று நீட்டி முழக்கத் துவங்கி விடுவோம். நமது பழங்கதைகள் (FLASHBACK) அவர்களுக்கு சுவைப்பதில்லை.

பெற்றோர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் வேறு; உங்கள் குழந்தைகள் வேறு. நீங்கள் வாழ்ந்த காலம் வேறு. அவர்கள் வளர்கின்ற இன்றைய காலம் முற்றிலும் வேறு. நமது பெற்றோர் நம்மை வளர்த்தது போல நாம் நமது குழந்தைகளை நிச்சயமாக வளர்த்திட முடியாது. கூடாது!!

Umar bin Khattab RA told:

Rabboo Awlaathakum Ghayra tarbiyyatikum fa innahum khuliqoo li zamaanin ghayra zamaanikum

“Educate your children but do not apply the methodology that you have been educated through, as they were created for the times different from yours.”

ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:

பெற்றோர்களாகிய நீங்கள் எப்படிப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டு வளர்க்கப்பட்டீர்களோ, அதே போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு - உங்கள் குழந்தைகளை வளர்த்திடலாம் என்று நினைக்காதீர்கள்; ஏனெனில் நீங்கள் வளர்ந்த காலம் வேறு; அவர்கள் வளர்கின்ற காலம் வேறு!

எனவேதான் சொல்கிறோம்.இன்றைய குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது என்பது ஒரு பெரிய சவால் ஆகும். அதற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு!


தாய்மையின் சிறப்பு!

ஒரு குழந்தையைப் படைத்து அதனை உலகுக்கு அனுப்பி வைக்கு முன்பேயே அக்குழந்தையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவன் அல்லாஹூ தஆலா!

எனவே ஒரு இல்லத்திலே குழந்தை ஒன்று பிறப்பதற்கு முன்பேயே அந்தக் குழந்தையின் தாயின் மனநிலையை (psychological preparation) எவ்வாறு தயார் செய்கிறான் என்பதைப் பார்ப்போமா?

ஒரு முறை அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மகன் இப்ராஹிமின் வளர்ப்புத் தாய் சலமா (ரளி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடத்திலே வந்து கேட்டார்கள்: யா ரஸூலுல்லாஹ்! நீங்கள் ஆண்களுக்கு அதிக நன்மைகளை வாக்களிக்கிறீர்கள். ஆனால் பெண்களுக்கு அது போல் செய்வதில்லையே! நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்: உங்கள் பெண் நண்பர்கள் உங்களை இவ்வாறு கேட்கச் சொல்லித் தூண்டி விட்டார்களா? ஆம் என்றார்கள் சலமா (ரளி) அவர்கள். நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்:

தன் கணவன் மகிழ்ச்சியுற்றிருக்கும் நிலையில் உங்களில் ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளே அவள் - அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்ற ஒரு நோன்பாளி பெறுகின்ற அதே நன்மைகளைப் (reward) பெறுகிறாளே அது உங்களுக்கு திருப்தியளித்திடவில்லையா?

பிரசவ வலியால் துடித்திடும் அந்தப் பெண்ணுக்காக எப்படிப்பட்ட அளவிலா நன்மைகள் காத்திருக்கின்றன என்பதை வானத்திலோ பூமியிலோ உள்ள எந்தப் படைப்பினமும் அறிந்திடாது.

அவள் குழந்தையைப் பெற்றெடுத்து அக்குழந்தை குடிக்கின்ற ஒவ்வொரு மிடறு பாலுக்காகவும் அவளுக்கு நன்மைகள் வழங்கப் படும்.

அக்குழந்தைக்காக அதன் தாய் இரவில் கண் விழிக்கிறாளே அதற்காக அவளுக்கு வழங்கப் படும் கூலி என்ன தெரியுமா? 70 அடிமைகளை அல்லாஹ்வுக்காக உரிமை விட்டவர் பெறுகின்ற அதே அளவு கூலியைத்தான்! (நூல் : தபரானி)

தாய்மார்களே! இவ்வளவு சிறப்புகளையும் நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றிட நாங்கள் துஆ செய்திடும் அதே வேளையில் குழந்தை வளர்ப்பு என்பது எவ்வளவு மகத்தான பொறுப்பு என்பதையும் நீங்கள் உணர்ந்திட வேண்டும் என்பதே எங்கள் அவா!

***

தந்தையின் பொறுப்பு!

ஒப்பு நோக்குங்கால் தந்தையை விட தாய்க்கே குழந்தை வளர்ப்பில் பொறுப்பு அதிகம் என்பது உண்மைதான். ஆனால் தந்தையின் பொறுப்பு என்பது தன் குழந்தைகளுக்கு செலவு செய்வது மட்டும் தான் என்று பல தந்தைமார்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது அப்படியல்ல. அது ஒரு பெரிய பொறுப்பு. இப்பெரும் பொறுப்பினை தாயும் தந்தையும் சேர்ந்தே ஏற்றுக்கொள்ள வேண்டுமேயல்லாமல் எனக்கு எங்கே இருக்கிறது நேரம் என்று ஒரு தந்தை ஒதுங்கி விடக் கூடாது. அப்படி ஒதுங்கினால் பின்னர் 'என் பிள்ளை என் பேச்சைக் கேட்பதேயில்லை, எதிர்த்து எதிர்த்துப் பேசுகிறான், நான் அவனுக்கு என்ன குறை வைத்தேன், எவ்வளவு அவனுக்காக செலவு செய்திருக்கறேன் தெரியுமா' என்றெல்லாம் ஒப்பாரி வைப்பதில் எந்தப் பயனும் இல்லை!

இங்கே இரண்டு நபிமொழிகளைப் பதிவு செய்வோம்:

நபித்தோழர் ஒருவர் தமது குழந்தையை தமது கைகளில் அரவணைத்து அணைத்துக் கொண்டவராக நபி (ஸல்) அவர்களை சந்திக்க வந்திருந்தார். இதனைக்கண்ட நபியவர்கள் 'உங்கள் குழந்தையின் மீது கொண்ட அன்பினாலும் இரக்க குணத்தாலும் தான் இவ்வாறு செய்கிறீர்களா?' என்று கேட்டார்கள். ஆம் என்றார் அந்த நபித்தோழர். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் தெரிவித்தார்கள். 'நீங்கள் எப்படிப்பட்ட அன்பையும் இரக்க குணத்தையும் கொண்டு உங்கள் குழந்தையை இவ்வாறு நடத்துகிறீர்களோ அதை விட பன்மடங்கு அதிகமாக அல்லாஹுதஆலா விடமிருந்து அவன் அன்பையும் அருளையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். ஏனெனில் அல்லாஹு தஆலாவின் அன்பும் இரக்க குணமும் அவன் படைப்பினங்கள் அனைத்தின் இரக்க குணத்தை மிகைத்து நிற்கக் கூடியது!' (நூல்: அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ஒரு தந்தை தமது மகனது முகத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைகின்றார் எனில், அதற்காக அவருக்கு ஒரு அடிமையை உரிமை விட்ட நற்கூலி வழங்கப்படுகிறது. நபித்தோழர் ஒருவர் : முன்னூற்று அறுபது தடவை அப்படிச் செய்தாலுமா என்று கேட்டார்? நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தாரகள்: அல்லாஹு தஆலாவைப் பற்றி நீங்கள் எண்ணுவதை விட அவன் மிகப்பெரியவன் (நூல்: தபரானி)

தந்தையின் பொறுப்பு என்பது தன் குழந்தைகளுக்கு செலவு செய்வது மட்டும் அல்ல என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா தந்தைமார்களே?


குழந்தைகளைக் கொஞ்சுங்கள்!

பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை ஒன்று. இரவில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று விழித்துக் கொள்கிறது. அழத் தொடங்குகிறது. நீங்கள் ஒரு தாய். என்ன செய்வீர்கள்?

இங்கே ஒரு தாய். அவர் பாசத்துடன் தனது குழந்தையை வாரி அணைத்துத் தூக்கிக் கொள்கிறார். 'என்னம்மா, முழிச்கிக்கிட்டியா? என்னம்மா வேணும், இதோ நான் இருக்கேன் உனக்காக!' என்று கொஞ்சுகிறார். கைகளில் அரவணைத்துக் கொண்டே பால் கொடுக்கத் தொடங்குகிறார். குழந்தை தனது அம்மாவைப் பார்த்து சிரித்த முகத்துடன் பால் குடித்து விட்டு அப்படியே திருப்தியுடன் தூங்கி விடுகிறது.

இன்னொரு தாய். இவர் தனது குழந்தையை இரவில் தூங்க வைக்கிறார். தானும் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தூங்கப் போகும் சமயம் மாமியார் சண்டைக்கு வரகிறார். எல்லாம் வரதட்சனைப் பிரச்னை தான். ஒருவாறு சண்டை ஓய்ந்து அந்த இளந்தாய் தூங்கப்போகிறார். தூக்கம் வரவில்லை.

இரவு ஒரு மணி இருக்கும். அப்போது தான் அசந்து தூங்கியிருப்பார். திடீரென்று கண் விழித்துக் கொண்டு அழத் தொடங்குகிறது குழந்தை. 'ஏய்! சும்மா இரு, தூங்க விட மாட்டியா என்னை!' என்று அதட்டியவாறே குழந்தையைத் தூக்குகிறார் தாய். குழந்தை பால் குடிக்க மறுக்கிறது. மீண்டும் அதட்டுகிறார் அந்தத் தாய் சற்றும் முகத்தில் பாசம் இல்லாத படி. குழந்தை தாயை அச்சத்துடன் பார்க்கிறது. நெளிகிறது. அப்படியே விரைத்துக் கொள்கிறது குழந்தை. பால் குடிக்காமல் பசியுடனேயே அசந்து தூங்கி விடுகிறது. இதுவே ஒரு தொடர்கதையானால்?

மேற்கண்ட இரு விதமான தாய்மார்களிடத்தில் வளர்கின்ற குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படிப்பட்டவர்களாக வளர்கிறார்கள் தெரியுமா? முதல் தாயின் குழந்தை சாதனையாளனாக மாறுகிறது. ஆனால் இரண்டாவது தாயின் குழந்தை யாரையும் நம்புவதில்லை. யாரையும் ஒரு உதவிக்குக் கூட அணுகுவதில்லை. ஒட்டு மொத்த உலகமே தனக்கு எதிரானது என்று ஒதுங்கி ஒதுங்கி சென்று பயந்து பயந்து வாழும் இவன் எதனை சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

மைக்கேல் ஜோர்டன் (Michael Jordan) ஒரு தலை சிறந்த முன்னணி கூடைப்பந்து ஆட்டக்காரர். அவர் சொல்கிறார்: நான் கூடைப்பந்தில் மிகச் சிறந்த ஆட்டக்காரராக வந்திட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அதற்கென திட்டமி;ட்டு நான் உழைத்தேன். முயற்சிகள் மேற்கொண்டேன். எனக்கு உதவி தேவைப்படின் யாரையும் அணுகுவதற்குத் தயங்கவே மாட்டேன். நான் ஏன் அதற்கு பயப்பட வேண்டும்?'

இங்கே தான் நாம் நன்றாக சிந்தித்தாக வேண்டும். ஒருவர் சாதித்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில் அவர் தயக்கங்களைத் தூக்கி யெறிந்திட வேண்டும். உதவி தேடுவதற்கு வெட்கப்படக் கூடாது. அதற்கு மற்றவர்கள் நமக்கு உதவிடுவார்கள் என்று நம்பிக்கை அவசியம். கைக்குழந்தையாக இருக்கும் நிலையில் தன் தாயே தன் உதவிக்கு வராத போது அக்குழந்தை வளர்ந்து ஆளாகும் போது வேறு யாரை நம்பிடும்? மைக்கேல் ஜோர்டனின் தாய் தனது மகனைக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்திருப்பாரோ என்றே நமக்கு நினைக்கத் தோன்றுகிறது!

எனவே தான் சொல்கிறோம் - கொஞ்சுங்கள்!

விளையாட்டுக்குக் கூட குழந்தைகளை அதட்டிப் பேசாதீர்கள். 'கோபம்! ரோஷம்! பொத்துக்கிட்டு வர்ரதைப் பாரு!' என்று சில பெற்றோர்கள் சிறு குழந்தைகளை அதட்டி அழ வைத்து வேடிக்கைப் பார்ப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இதை விட ஒரு கொடுமையை நாம் ஒரு குழந்தைக்குச் செய்து விட முடியாது.

பெற்றோர்கள் இதனை உணர்வார்களா?

இங்கேயும் இரண்டு நபிமொழிகளைப் பதிவு செய்வோம்:

அண்ணல் நபியவர்கள் குழந்தைகளுடன் எவ்வாறு நடந்து கொள்வார்கள் தெரியுமா? 'நபியவர்கள் தங்களின் பேரக்குழந்தைகள் ஹசன் மற்றும் ஹூசைன் இருவரையும் தங்களிடம் வரச்சொல்லி அழைத்து இருவரையும் ஆரத் தழுவிக்கொள்வார்கள்' என்று அனஸ் பின் மாலிக் (ரளி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஜாபிர் பின் சமுரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் முதல் தொழுகையைத் தொழுதேன். பின்னர் நபியவர்கள் தங்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். நானும் அவர்களுடன் கூடவே சென்றேன். வழியில் அவர்கள் சில சிறுவர்களைச் சந்தித்தார்கள். ஒவ்வொரு குழந்தையின் கன்னத்தையும் அன்போடு அவர்கள் தட்டிக் கொடுத்தார்கள். எனது கன்னத்தையும் அவர்கள் தட்டிக் கொடுத்த போது நான் நபியவர்களின் கரங்களின் குளிர்ச்சியையும் வாசனையையும் உணர்ந்தேன். அது எப்படி இருந்தது என்றால் ஒரு வாசைன திரவியம் நிரம்பிய பையில் கையை விட்டு எடுத்தவர் கைகள் போன்று இருந்தது. (நூல்: முஸ்லிம்)

குழந்தைகளைக் கொஞ்சுவதும் ஒரு சுன்னத். சரி தானே?

***


குழந்தைகளைப் பாராட்டுங்கள்!


ஒரு வயது கூட நிரம்பியிருக்காது அக்குழந்தைக்கு. அதன் தாய் அந்தக் குழந்தை விளையாடுவதற்காக சில ப்ளாஸ்டிக் டப்பாக்களை எடுத்து வருகிறார். குழந்தைக்கு முன்னே அமர்ந்து கொண்டு அவைகளை எப்படி அடுக்கிட வேண்டும் என்று செய்து காட்டுகிறார். குழந்தை அந்த டப்பாக்களை எடுத்து வைத்துக் கொண்டு அடுக்கத் தொடங்குகிறது. ஒரு டப்பா உருண்டோடுகிறது.

அம்மா அதனை எடுத்து மீண்டும் குழந்தையிடம் கொடுக்கிறார். குழந்தை அம்மாவைப் பார்த்து சிரித்த படி மீண்டும் முயற்சி செய்கிறது. இதோ அடுக்கியும் விட்டது. கண்கள் பளிச்சிட அம்மாவை கவனிக்கிறது. அதன் பொருள் என்ன? ‘அம்மா, எப்படி என் சாதனை?’ அம்மாவும் கை கொட்டி சிரிக்கிறார். அப்படியே தன் குழந்தையை வாரி அணைத்து முத்தமிடுகிறார். குழந்தை தன் தாயின் பாராட்டு மழையில் அப்படியே நனைகின்றது.

இந்தக் குழந்தைக்கு அதன் தாய் கற்றுக் கொடுத்தது என்னென்ன தெரியுமா? தன்னம்பிக்கையும், ஒன்றைக் கற்றுக் கொள்வதில் ஆவலும் ஆர்வமும், மேலும் சாதித்திட வேண்டும் என்ற ஊக்கமும் தான். இப்படி அம்மாவினால் ஊக்கம் பெறுகின்ற குழந்தைகள் பள்ளிக்கூடத்திலும் சாதிக்கின்றன. தன் வாழ்க்கையிலும் சாதிக்கின்றன.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் நமது குழந்தைகள் ஏதாவது ஒரு மிகச்சிறிய செயலை செய்து முடித்தால் கூட அதனை வாய் விட்டுப் பாராட்டி விட வேண்டும். இதனையே ஆங்கிலத்தில் “Celebrating small success” என்று அழைக்கிறார்கள். நமது பெற்றோர்கள் சிலர் அப்படிப் பாராட்டினால் குழந்தைகளுக்கு கர்வம் வந்து விடும் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு.

குழந்தைகளின் எல்லா வளர்ச்சிக் கட்டங்களிலும் அவர்களை நாம் ஊக்கப் படுத்திட வேண்டும். குழந்தைகளைப் பாராட்டுவதற்கு அவர்கள் ஏதாவது பெரிதாகத் தான் செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மிகச் சிறிய ‘சாதனை’ ஒன்றை அவர்கள் செய்து விட்டால் கூட அவர்களைப் பாராட்டி விடுங்கள்.

உங்கள் குழந்தை – புதிதாக ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டதா – பாராட்டுங்கள்.

உங்கள் மகன் ஏதாவது படம் ஒன்றை வரைந்து வந்து காட்டுகின்றானா – பாராட்டுங்கள்;

கீழே சிந்தாமல் ஒரு நாள் உணவு உண்டு விட்டானா – பாராட்டுங்கள்.

உங்கள் மகன் ஒரு தேர்வில் 15 மதிப்பெண் பெற்று வந்திருப்பான். ஆனால் அடுத்த தேர்வில் 25 மதிப்பெண் பெற்றிருப்பான். அடடா! இந்தத் தடவை 10 மதிப்பெண்கள் அதிகம் பெற்றிருக்கிறாயே – இன்னும் முயற்சி செய் – வெற்றி பெற்று விடுவாய் என்று பாராட்டுங்கள்.

உங்கள் மகனுக்கு படிப்பு வரவில்லையா? வேறு ஏதாவது திறமைகள் அவனுக்குள் ஒளிந்திருக்கும். ‘அத்தா! இதைப் பார்த்தீர்களா’ என்று ஏதாவது ஒன்றை செய்து வந்து காட்டுவான். பாராட்டுங்கள்.

ஒரு சிறுவன் தெருவில் மட்டைப் பந்து விளையாட வத்தானாம். ஆனால் அவன் நண்பர்கள் யாரும் வந்து சேரவில்லை. அவனே பந்தை ஒரு கையால் தூக்கிப் போட்டு இன்னொரு கையில் உள்ள மட்டையால் பந்தை அடிக்க முயற்சி செய்தானாம். ஆனால் பந்து அடிபடவில்லை. தவறி விட்டது. இதனைக் கவனித்த பெரியவர் ஒருவர் Good என்றாராம்.

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரை ஒரு கணம் பார்த்து விட்டு மீண்டும் பந்தைப் போட்டு மட்டையை விளாசினான் சிறுவன். இப்போதும் பந்து அடிபடவில்லை. பெரியவர் இப்போது Very Good என்றாராம். சிறுவனுக்கு சற்றே கோபம். அவரை முறைத்துப் பார்த்து விட்டு மூன்றாவது தடவை சற்றே எச்சரிக்கையுடன் பந்தைப் போட்டு மட்டையை வீசினான். ஆனால் இப்போதும் பந்து அடிபடவில்லை. பெரியவர் இப்போது Superb என்றாராம்.

சிறுவனுக்கு கோபம் இப்போது தலைக்கு மேல். கடைசியாக இந்தத்தடவை எப்படியும் பந்தை அடித்தே தீர்வது என்று உறுதியுடன் பந்தைப் போட்டு மட்டையை வீசினான். ஆனால் பரிதாபம். இந்தத் தடவையும் பந்து அடிபடவில்லை. பெரியவரோ தனது கைகளைத் தட்டிக் கொண்டே Excellent என்றாராம். வந்ததே கோபம் சிறுவனுக்கு. நேரே அவரிடம் வந்து என்ன கிண்டலா? என்று அவரைத் திட்டினானாம். அதற்கு அந்தப் பெரியவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘தம்பி! நான் உனது மட்டை வீசும் திறமையைப் பற்றி ஒன்றும் சொல்லிடவில்லை. ஆனால் நான் பாராட்டியதெல்லாம் லாகவமாக நீ பந்தை வீசியதைத் தான். எவ்வளவு அற்புதமாக பந்து வீசுகிறாய் தெரியுமா!’

ஆமாம்! இப்படித் தான் பாராட்டிட வேண்டும் நமது குழந்தைகளை! பாராட்டுவதால் என்ன நன்மை? ஏதாவது ஒன்றில் ஒரு சிறு வெற்றி பெறுகின்ற குழந்தை பாராட்டப் படுகின்ற போது அதற்கு தன் மீது ஒரு நம்பிக்கை வருகிறது! இன்னும் இதை விட ஏதாவது பெரிதாக ஒன்றைச் செய்திட வேண்டும் என்ற வேட்கை அதற்கு ஏற்படுகிறது. துணிந்து இறங்கி இன்னொன்றை சாதித்துக் காட்டுகிறது. அது மீண்டும் பாராட்டைப் பெறுகிறது. இந்த சுழற்சி அந்தக் குழந்தையை சாதனையின் உச்சிக்கு அழைத்துச் செல்கிறது. இது தான் ரகசியம்.

இப்போது சிந்தியுங்கள். எத்தனைத் தடவை உங்கள் குழந்தைகளைப் பாராட்டும் தருணங்களைத் தவற விட்டிருப்பீர்கள் என்பது புரிய வரும். இனியேனும் உங்கள் குழந்தைகளைப் பாராட்டுவீர்களா?


உங்கள் குழந்தைகள் சுரங்கங்கள்!


குழந்தை வளர்ப்பு என்பது பின்வரும் ஐந்து பரிணாமங்களைக் கொண்ட ஒரு பெரும் பொறுப்பு ஆகும்.

1. உடல் வளர்ச்சி (Physical Development)

2. மன வளர்ச்சி (Psychological Development)

3. அறிவு வளர்ச்சி (Intellectual Development)

4. ஆன்மிக வளர்ச்சி (Spiritual Development)

5. ஒழுக்க வளர்ச்சி (Character Development)

பெற்றோர் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் போது மேற்கண்ட ஐந்து பரிணாமங்களிலும் தங்கள் குழந்தைகள் வளர்கிறார்களா என்று கண் காணித்திட வேண்டும். அதுவே முழுமையான குழந்தை வளர்ப்பு முறை ஆகும்.

“மனிதர்கள் சுரங்கங்கள் – தங்கத்தைப் போல, வெள்ளியைப்போல!” – என்றார்கள் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.

சுரங்கம் என்றால் என்ன? தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்பிற்கரிய பொருட்கள் கனிமங்களாக, தாதுப் பொருட்களாக தோண்டத் தோண்டக் கிடைத்துக் கொண்டே இருக்கும் இடம் தானே சுரங்கம் எனப்படுவது. சுரங்கங்களில் பல வகைகள் உண்டு. தங்கச் சுரங்கம், வெள்ளிச் சுரங்கம், நிலக்கரிச் சுரங்கம் – அவற்றுள் சிலவாகும். சுரங்கங்களிலுள்ள தாதுப் பொருட்களைத் தோண்டி எடுத்துத் தூய்மைப் படுத்தினால் நமக்குச் சுத்தமான தங்கம் கிடைக்கும், வெள்ளி கிடைக்கும், நிலக்கரி கிடைக்கும். அவை மக்களுக்குப் பயன் படும்.

அது போலவே மனிதனும் ஒரு சுரங்கம் தான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் பொதிந்து கிடக்கின்ற கருவூலங்கள் – மனித வளங்கள் – ஏராளம். அந்த மனித வளங்களைத் தோண்டித் தோண்டி, அள்ளி அள்ளி எடுக்கலாம். தூய்மைப் படுத்தலாம். பத்தரை மாற்றுத் தங்கங்களாக மிளிரச் செய்யலாம்.

இங்கே நாம் பெற்றோர்களுக்குச் சொல்ல விரும்புவது இது தான்: பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் அனைவருமே சுரங்கங்கள் தாம்! இந்த நபிமொழியின் அடிப்படையில் – பெற்றோர்களுக்கு ஒரு மிகப் பெரிய பொறுப்பு இருக்கின்றது. அது என்னவெனில் – உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட சுரங்கங்கள் என்பதைக் கண்டுபிடிப்பது; அந்த சுரங்கங்களில் உள்ள “பொக்கிஷங்களை” வெளியில் கொண்டு வந்து வளர்த்தெடுப்பது; உங்கள் குழந்தைகளை வெற்றியாளர்களாக மாற்றிக் காட்டுவது! -இதுவே உங்களின் அந்த மகத்தான பொறுப்பாகும்.

அந்தப் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றிட ஒவ்வொரு பெற்றோரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று தான் – இஸ்லாத்தில் மனித வள மேம்பாடு குறித்த அறிவு!

எனவே இதைத் தொடர்ந்து வருகின்ற இஸ்லாத்தின் பார்வையில் மனித வள மேம்பாடு குறித்த கருத்துக்களை சற்றே நிதானமாகப் படித்து சிந்தியுங்கள். அந்த சிந்தனை – உங்கள் குழந்தைகளை சிறப்பாக வளர்த்திட நிச்சயம் உதவும் இன்ஷா அல்லாஹ்!


மறைந்து கிடக்கின்றன – குழந்தைகளின் திறமைகள்!

“மக்கள் சுரங்கங்கள்! தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!” – இந்த நபி மொழியில் பெற்றோர்கள் படித்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதல் பாடம்:

அது தங்கச் சுரங்கமோ அல்லது வெள்ளிச் சுரங்கமோ அல்லது பெட்ரோலியச் சுரங்கமோ – இவை அனைத்தும் மறைந்தே கிடக்கின்றன! அவை ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப் படுகின்றன! பின்னரே அங்கிருந்து அவை அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டி எடுக்கப் படுகின்றன.

அது போலத் தான் மனித வளங்களும். நமது எல்லா வளங்களும் மறைந்தே கிடக்கின்றன. அதாவது – குழந்தையாக நாம் பிறக்கும் போது – உடலளவில் மிகவும் பலவீனமாகவும், அறிவைப் பொறுத்தவரை ஒன்றுமே அறியாத நிலையிலும் தான் பிறக்கின்றோம். என்னென்ன குணங்களுடன் நாம் பிறக்கின்றோம், என்னென்ன திறமைகள் நம்மிடம் ஒளிந்திருக்கின்றன – ஒன்றுமே நமக்குத் தெரியாது!

“உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் – நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு – அவனே அமைத்தான். (குர்ஆன் 16:78)

அப்படியானால் அவை அனைத்தும் கண்டுபிடிக்கப் பட்டாக வேண்டும். எப்படி?

பெற்றோர்களே! குழந்தை வளர்ப்பில் உங்களுக்கு மகத்தான பொறுப்பு ஒன்று இருக்கிறது. அது உங்கள் குழந்தைகளின் மனித வளங்கள் என்னென்ன என்று நீங்களே கண்டு பிடிப்பது தான்!

அதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் – அவர்களை நீங்கள் சற்றே உற்று கவனியுங்கள்! அவ்வளவு தான்! Observe your children!

இங்கே மூன்று சம்பவங்கள் உங்கள் சிந்தனைக்காகத் தரப் படுகின்றன:

ஒன்று:

நபி ஸல் அவர்கள் பெரிய தந்தை அப்பாஸ் (ரளி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள். அவர் சிறு வயதாக இருக்கும்போது, அண்ணலார் வீட்டில் இரவுத் தங்குவார்கள். அவர்களின் சிறிய தாயார் மைமூனா (ரளி) அவர்களை அண்ணலார் மண முடித்திருந்தார்கள்.

ஒரு நாள் பின் இரவில் அண்ணலார் தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்த போது, சிறு நீர் தேவைக்காக சென்றார்கள். அப்போது வெளியில் உளூ செய்ய தண்ணீர் தயாராக எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு தண்ணீர் எடுத்து வைத்தது யார் என்று பார்த்த போது, சிறுவர் இப்னு அப்பாஸ் தான் எனத் தெரிய வந்தது.

இரவில் தான் கண் விழிப்பதை எதிர்பார்த்து, தமக்குத் தெரியாமல் பணிவிடை செய்வதைப் பார்த்த பெருமானார் மன மகிழ்வடைந்தார்கள். அதற்காக சிறுவர் இப்னு அப்பாஸை பாராட்டி, “அல்லாஹும்ம ஃபக்கிஹ்-ஹூ ஃபித்தீனி வ ‘அல்லிம்ஹுத் – தஃவீல் – யா அல்லாஹ்! இவருக்கு மார்க்க சட்ட விளக்கத்தைத் தருவாயாக! திருக் குர் ஆனின் விரிவுரையை இவருக்குக் கற்றுத் தருவாயாக! – என்று பிரார்த்தனையும் செய்தார்கள்.

இரண்டு:

நபிகள் (ஸல்) அவர்கள் ஒரு சமயம் கடைத்தெருவுக்குச் சென்றார்கள். அங்கு அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரளி) என்ற சிறுவர் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள் விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து அவரை அண்ணலார் பாராட்டினார்கள். “அல்லாஹும்ம பாரிக் லஹூ ஃபீ பை-இ-ஹீ!” – யா அல்லாஹ்! இவரின் வியாபாரத்தில் பரக்கத் செய்வாயாக! – என்று பிரார்த்தனையும் செய்தார்கள். (நூல்: அபூ தாவூத்)

மூன்று:

உமைர் (ரளி) என்ற சிறுவர் ஒரு குருவி வளர்த்து வந்தார். அவர் வீட்டு வழியாக அண்ணலார் செல்ல நேர்ந்தால், ” யா உமைர்! மா ஃபஅலன் நுஃகைர் – உமைரே! உனது சின்னக் குருவி என்ன செய்கிறது? என்று அக்கரையுடன் விசாரிப்பார்கள்.

இந்த மூன்று சம்பவங்களில் இருந்து நாம் பெற வேண்டிய பாடங்கள்:

ஒன்று: குழந்தைகளை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைச் சற்றே கவனியுங்கள்.

இரண்டு: அவர்களை மனம் திறந்து பாராட்டுங்கள். அவர்களுக்காக துஆவும் செய்யுங்கள்.

மூன்று: அவர்கள் செய்யும் செயல் மிகச் சாதாரணமானது தானே என்று விட்டு விடாதீர்கள். அவற்றில் தான் உங்கள் குழந்தைகளின் மனித வளங்கள் பொதிந்து கிடக்கின்றன!


ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனிப்பிறவியே!


“மக்கள் சுரங்கங்கள்! தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!” – இந்த நபி மொழியில் நமது பெற்றோர்கள் இன்னும் ஒரு பாடத்தையும் படித்துக் கொள்ள வேண்டியுள்ளது!

தங்கச் சுரங்கத்தில் நமக்குத் தங்கம் தான் கிடைக்கும். வெள்ளிச் சுரங்கத்தில் நமக்கு வெள்ளி மட்டும் தான் கிடைக்கும். வெள்ளிச் சுரங்கத்தில் தங்கம் கிடைப்பது அரிது! தங்கச் சுரங்கத்தில் பெட்ரோலியம் கிடைப்பது அரிது! இப்படித் தான் ஒவ்வொன்றும்.

அது போலத் தான் மனிதனும் அவன் வளங்களும்! இறைவனின் படைப்பில் மனிதம் ஒரு அற்புதமான படைப்பு! மனிதப் படைப்பில் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான அம்சங்கள் பல இருந்தாலும், இரண்டு மனிதர்கள் கூட வெவ்வேறானவர்களே!

ஒருவர் முகம் போன்று இன்னொருவர் முகம் இருப்பதில்லை! ஒருவர் குரல் போன்று இன்னொருவர் குரல் அமைவதில்லை. அது போலவே அறிவாற்றலில் மனிதர்கள் வெவ்வேறானவர்களே! அழகிய பண்புகளைப் பெற்றிருப்பதில் மனிதர்கள் வெவ்வேறானவர்களே! ஆன்மிக உணர்வுகளிலும் இரண்டு மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள் அன்று! மன வலிமை சார்ந்த அம்சங்களிலும், இரண்டு மனிதர்கள் ஒன்று படுவதில்லை!

அப்படியானால் என்ன பொருள்? ஒவ்வொரு மனிதனும் ஒரு தனிப்பிறவியே!

“எதிர் வீட்டுக் குழந்தை அடம் பிடிக்காமல் ஐந்து நிமிடங்களில் சாப்பிட்டு விடுகிறது; ஆனால் எனது குழந்தை மட்டும் பாடாய்ப் படுத்துகிறது” – என்று பேசுவது அறிவீனம்.

“பக்கத்து வீட்டுப் பையன் ஓடி ஓடி வேலை பார்ப்பதில் படு சுறுசுறுப்பு; ஆனால் என் பையன் மட்டும் வீட்டை விட்டு அசையவே மாட்டேன்கிறான்” – என்று ஒப்பிடுவது மிகத்தவறு.

“கணக்கில் உன் நண்பன் நூற்றுக்கு நூறு வாங்கும் போது உனக்கென்ன கேடு” – என்று மகனைத் திட்டுவதும் சரியன்று.

அது போலவே – மனிதர்கள் குணங்களிலும் வேறு பட்டு நிற்கிறார்கள்.

நபி மொழி உணர்த்தும் செய்தி:

நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கிடையே (ரிஸ்கை) வாழ்வாதாரங்களை பங்கிட்டது போல நற்குணங்களையும் உங்களுக்கிடையே பங்கிட்டுள்ளான். (நூல்: அஹ்மது)

எனவே நாம் படித்துக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் என்னெவென்றால் - உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் தயவு செய்து ஒப்பிட வேண்டாம்.  உங்கள் இல்லத்திலேயே ஒரு குழந்தை போல் இன்னொன்று இருப்பதில்லை என்பதுவும் உங்களுக்குத் தெரிந்த விஷயம் தானே?


உங்கள் குழந்தைகளை நீங்களே குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்!

“மக்கள் சுரங்கங்கள்” – எனும் இந்த நபி மொழியை நாம் திரும்பவும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம். .

மனிதர்கள் அனைவருமே தங்கத்தைப் போல வெள்ளியைப் போல் எனும் போது நீங்கள் பெற்றெடுத்த செல்வங்கள் அனைவருமே விலை மதிப்பற்ற சுரங்கங்கள் தானே! They are so precious!

எனவே - பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் – “நீ மதிப்பு மிக்கவன்! நீ உயர்வானவன்! நீ ஆற்றல் மிக்கவன்! நீ சிறந்தவன்! நீ நல்லவன்! நீ ஒரு பொக்கிஷம்! நீ ஒரு சுரங்கம்! நீ அல்லாஹ்வை ஈமான் கொண்டவன்! அவன் உன்னைக் கண்ணியப்படுத்தியிருக்கின்றான்! உன்னை ஒரு பொக்கிஷம் என்கிறான் அவன்! நீ விலை மதிப்பற்றவன்! அல்லாஹு தஆலா உன்னை எல்லா நிலைகளிலும் சிறப்பாக்கி வைப்பான்!” – என்றெல்லாம் நாளும் பொழுதும் சொல்லி சொல்லியே வளர்த்திட வேண்டும்! அவர்களை ஒருக்காலும் நீங்களே குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது!

பெற்றோர்களே நீங்கள் ஏழையாக இருக்கலாம்! உங்கள் குழந்தைகளுக்கு மற்றவர்களைப்போல் தாராளமாக செலவு செய்திட இயலாமல் போகலாம். அதனால் என்ன? நீங்களும் ஒரு சுரங்கம் தான்! உங்கள் குழந்தையும் ஒரு சுரங்கம் தான்!

உங்கள் குழந்தை கருப்பாக இருக்கலாம். அல்லது குட்டையாக இருக்கலாம். அதனால் என்ன? அப்போதும் உங்கள் குழந்தைகள் சுரங்கங்கள் தான்!

அதே நேரத்தில் உங்கள் குழந்தைகளின் திறமைகள் கண்டுபிடிக்கப் பட்டாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதைத் தவிர்த்திட இயலாது!

இன்னொரு மிக முக்கியமான பாடம்:

தாங்கள் மதிப்பு மிக்கவர்கள் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் உணர்த்துவது போலவே – மற்ற குழந்தைகளும் மதிப்பு மிக்கவர்களே என்றும் அவர்கள் அனைவரையும் அவ்வாறே “மதித்திட வேண்டும்” என்பதையும் சேர்த்தே கற்றுக் கொடுங்கள்.

யாரையும் அவர்கள் மட்டம் தட்டிப் பேசிட அனுமதிக்காதீர்கள். உங்கள் வீட்டு வேலைக்காரருக்குக் கூட உங்கள் குழந்தைகள் மதிப்பளிக்கக் கற்றுக் கொடுங்கள். நீங்களும் மதிப்பளியுங்கள்.

யாரும் யாரையும் இழிவாகக் கருதிட வேண்டாம் என்பது நபிமொழி.

நபி (ஸல்) அவர்கள் வரலாற்றில் காணக் கிடைக்கின்ற ஒரு நிகழ்ச்சி இது:

மக்களால் அவ்வளவாக மதிக்கப்படாத அடிமை ஒருவர். இவர் நபி (ஸல்) அவர்களை சந்திக்க அவ்வப்போது மதினா வருவார். வரும்போதெல்லாம் தவறாமல் நபியவர்களுக்கு ஏதேனும் ஒரு அன்பளிப்பு ஒன்றை வாங்கி வரத் தவறுவதில்லை.

ஒரு முறை – அவர் நபியவர்களை சந்திக்க மதினா வந்து அன்பளிப்புப் பொருள் ஒன்றை வாங்க அங்காடி ஒன்றுக்கு சென்றிருந்தார். இவரைக் கண்ட மற்ற நபித்தோழர்கள், அவருடைய வருகை குறித்து நபியவர்களிடம் தெரிவித்து விட்டனர். உடனே நபியவர்கள் அந்த அங்காடிக்குச் சென்று, அவரை பின் பக்கமாகச் சென்று கட்டிப் பிடித்துக் கொண்டு, “இவரை விலைக்கு வாங்குவார் யாரும் உண்டா?” – என்று கேட்டார்கள்.

தன்னைக் கட்டிப்பிடித்தது நபியவர்கள் என்று அறியாத அவர், தன்னை விடுவித்துக் கொண்டு திரும்பிப் பார்த்திட அது நபியவர்கள் தான் என்பதைக் கண்ட அவர், “யார் இந்த அடிமையை விலை கொடுத்து வாங்குவார்கள் நபியே?” என்று கேட்க, அல்லாஹ்விடத்தில் உமது மதிப்பு மிக மிக அதிகமே!” என்றார்களாம்.

இதுவே நமது மற்றும் நமது குழந்தைகளின் மனப்பாங்காக அமைந்திட வேண்டும்!

வீட்டுக்குள்ளே விண்மீன்கள்!

இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; (குர்ஆன் 2:31)

அறிவு என்பது மனிதனின் முதன்மையான மனித வளம் ஆகும்.

ஆனால் பிறக்கும்போதெ மனிதன் அறிவாற்றல் மிக்கவனாகப் பிறப்பதில்லை. தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் எந்த ஒரு குழந்தையும் எந்த ஒன்றையுமே அறியாத நிலையிலேயே பிறக்கின்றது.

உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் – நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு – அவனே அமைத்தான். (குர்ஆன் 16:78)

மனிதர்கள் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் ஐந்து புலன்களையும், சிந்திகின்ற இதயத்தையும் வழங்கியிருக்கின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா.

புலன்களின் மூலமாக அறிவை வளர்த்துக் கொள்வதற்கு, குழந்தைகள் வளர்கின்ற சூழல் மிக முக்கியம்! அப்படிப்பட்ட சூழலை குழந்தைகளுக்கு வழங்கிட வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் நீங்காக் கடமையாகும்.

ஆதிபிதா ஆதம் (அலை) அவர்கள் காலம் தொடங்கி, இன்றைய நவீன அறிவியல் யுகம் வரை மனிதனின் அறிவு எப்படி வளர்ந்தது? நாம் மேலே குறிப்பிட்டபடி ஐந்து புலன்களின் வழியே தான் தன் அறிவை வளர்த்துக் கொள்கிறான் மனிதன்.

உதாரணமாக கண்களால் உற்று நோக்கி (observation) மனிதன் கற்றுக் கொண்ட ஒரு சம்பவம் பற்றி திருமறை குர்ஆன் நமக்குச் சொல்லிக்காட்டுகிறது.

ஆதத்தின் இரு மகன்கள் வரலாறு நமக்குத் தெரியும். ஆபில் அவர்களை அவருடைய சகோதரர் காபில் கொன்று விட்டார். இச்சம்பவம் திருமறையிலே விளக்கப்பட்டுள்ளது.

(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார். (குர்ஆன் 5:30)

இது உலகில் நடந்த முதல் கொலை. சரி, அடுத்து உடலை என்ன செய்வது?

பின்னர் தம் சதோதரரின் உடலை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய உடலை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார். (குர்ஆன்5: 31)

மனித இனம் இப்படித் தான் தனது அறிவை வளர்த்துக் கொண்டு வருகிறது – ஆதம் (அலை)  அவர்கள் காலத்திலிருந்து.. இன்று வரை!

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்பதும் உண்மையே!

மண்டை ஓட்டினை உதைத்து விளையாடியத் துவங்கிய மனிதன் தான் பின்னர் அதனை கால்பந்தாக மாற்றியிருக்கிறான்.

மாதிரிக் கணக்கு ஒன்றை விளக்கிக் காட்டித்தான் மற்ற கணக்குகளைப் போடச்சொல்கிறார் கணித ஆசிரியர்.

வல்லோன் இறைவன் உதாரணங்கள், உவமைகளைக் கூறுவதன் நோக்கமும் – மனிதனின் இயல்பு அறிந்து தான்! நாம் கண்களால் பார்த்து ரசிக்கின்ற தோட்டம் எனும் சொல் மூலமாகத் தான் நாம் பார்க்காத சுவனத்தை அறிமுகப்படுத்துகிறான் வல்லோன் அல்லாஹ்!

நபியவர்களை அழகிய முன்மாதிரியாக நமக்கு ஆக்கியிருப்பதுவும், நபியவர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்கள் தொழுங்கள் என்பதுவும் நபிமொழி. ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதும் இதே வழிமுறையைப் பின்பற்றித்தான்.

குழந்தைகளும் அப்படித்தான் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்கின்றன.

எங்கள் ஊரில் ஒரு ஆசிரியர். ஒரு முறை அவர் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைச் சொன்னார். அவரது சிறிய மழலைக் குழந்தைக்கு ஒவ்வொன்றாக இது என்ன, அது என்ன – என்று ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுத்து வந்தாராம்.

“கைக்குழந்தைக்கு” ஆங்கிலச் சொல் இலகுவாக இருக்கும் என்று BABY என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். வீட்டில் வளர்க்கப் பட்டு வந்த கோழிகளை “BO-BO” என்றும் சொல்லிக் கொடுத்தாராம். ஒரு நாள் அவர் வீட்டுக் கோழி - குஞ்சு பொரித்த போது கோழிக்குஞ்சுகளைப் பார்த்த அந்த மழலை எப்படி அழைத்திருக்கும் என்கிறீர்கள்?

“BABY-BOBO” என்று அழைத்ததாம்!

ஒரு உணவுப் பண்டத்தைத் தயாரிக்கிறான் ஒருவன். இன்னொருவன் வந்து அதில் புதிதாக ஒன்றை சேர்த்து அல்லது ஒன்றுக்கு பதிலாக இன்னொன்றைப் போட்டு புதியதொரு உணவுப் பண்டத்தை செய்து தருகிறான்.

நவின் கிருஷ்ணா என்ற மாணவன் ஒருவன் – பூச்சிகளைக் கொல்லும் பூச்சிக் கொல்லி மருந்து மனிதனையும் கொல்லும் என்றால் மனிதனுக்கு விஷமான நிகோடினை வைத்து பூச்சிகளைக் கொல்ல முடியுமா என்று சிந்தித்தான். விளைவு – நமக்கு அவ்வளவாகத் தீங்கு விளைவிக்காத தாவர-பூச்சிக் கொல்லி மருந்து தயார்!

நம்மைப் போன்ற சாமானியர்களுக்கும், இது போன்று பல சிந்தனைகள் உதிக்கத் தான் செய்யும். நமக்கும் கண்டுபிடிப்பாளர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, நாம் சிந்திப்பதோடு நிறுத்திக் கொள்வோம். அவர்கள் செய்து பார்த்து விடுவார்கள். அவ்வளவு தான்!

இதில் பெற்றோர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது.

நம் குழந்தைகள், இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து பார்க்க முயற்சிப்பார்கள். நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவர்களை ஊக்குவிப்பது தான்.

ஆனால் இதற்கு நேர்மாறாக அல்லவா நாம் நடந்து கொள்கிறோம்! நம் நாட்டில் அறிவியலாளர்கள் அதிகம் தோன்றாமைக்கு இதுவே காரணமாக இருக்கலாம் அல்லவா?

உங்கள் வீட்டுக்குள்ளும் “விண்மீன்கள்” இருக்கலாம். அவைகளைக் கண்டு பிடித்து ஒளி வீசிப் பிரகாசிக்கச் செய்வதெல்லாம் உங்கள் கரங்களில் தான் இருக்கின்றது!

புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். வீட்டுச் சூழல் உங்கள் குழந்தைகளின் ஆராய்ச்சிக்குத் தோதுவான ஆய்வுக்கூடங்களாக மாறட்டும்!!

அறிவியல் அறிஞர்களை வீட்டுக்கு வெளியில் தேட வேண்டாம். அவர்கள் உங்கள் இல்லங்களில் தான் இருக்கின்றார்கள்!

மகனை வெற்றியாளனாக்கிப் பார்ப்பதில் ஒரு தாயின் பங்கு!

ஸைத் பின் தாபித் ரளியல்லாஹு அன்ஹு! 

இந்த நபித்தோழருடைய வாழ்க்கை வரலாற்றை நாம் சற்றே ஊன்றிப் படித்துப் பார்த்தால் – ஒரு மகனை வெற்றியாளனாக்கிப் பார்ப்பதில் ஒரு தாய்க்கு எந்த அளவு பங்கு இருந்திட வேண்டும் என்பது தெள்ளெனப் புரியும்.

அப்போது ஸைத் பின் தாபித் (ரளி) அவர்களுக்கு பதின்மூன்று வயது மட்டுமே. பத்ர் போரில் கலந்து கொள்ள அளவு கடந்த ஆர்வம். அவரை பெருமிதத்துடன் அண்ணலாரிடம் அழைத்துச் சென்றது அவரது தாயார் அந்நவ்வார் பின்த் மாலிக் அவர்களே! ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. காரணம் வயது! மிகவும் ஏமாற்றமடைந்தார் அந்தச் சிறுவர்.

வயது ஒரு குறையென்று போரில் பங்கெடுக்கும் பாக்கியம்தான் கிட்டவில்லை, வேறென்ன செய்யலாம்? சிந்தித்தார் சிறுவர். யோசனையொன்று பளிச்சிட்டது. திருமறை வசனங்களைப் படித்து உய்த்துணரும் மாணவனாய் ஆகிவிட்டால்? அதுவே சரியென்று தோன்றியது. மீண்டும் ஓடினார் தாயிடம். திட்டம் அறிந்த தாய்க்கு அளவிலா மகிழ்ச்சி. “சபாஷ்! சரியான முடிவு” என்று தட்டிக் கொடுத்தவர் உடனே தன்னுடைய உறவினர்களிடம் இது குறித்துப் பேசினார். “என் மகன் அல்லாஹ்வின் வேதம் கற்றவனாய் ஆக விரும்புகிறான். உதவி செய்யுங்கள்”.

அவரது உறவினர்கள் சிறுவர் ஸைது இப்னு தாபித்தை நபியவர்களிடம் அழைத்துச் சென்று சிபாரிசு செய்தார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! இந்த எங்களின் சிறுவன் ஸைது இப்னு தாபித், பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்தவன். நன்றாய் எழுதப் படிக்கத் தெரிந்தவன், புத்திக்கூர்மையுள்ளவன். குர்ஆனின் பதினேழு அத்தியாயங்களை மனனம் செய்து வைத்துள்ளான். தங்களுக்கு அருளப்பட்ட அதே நேர்த்தியுடன் அதை ஓதக்கூடியவனாகவும் இருக்கிறான். தங்களுடனிருந்து மேலும் மேலும் ஞானம் பெருக்கிக் கொள்ள விழைகிறான் அவன். தாங்களே அவனை ஓதச் சொல்லிக் கேட்டுப் பாருங்களேன்!”

“எங்கே நீ மனனம் செய்து வைத்துள்ளதை ஓது, கேட்கிறேன்” என்றார்கள் முஹம்மது நபியவர்கள். ஓதினார் ஸைது இப்னு தாபித். அழகாய், தெளிவாய், நேர்த்தியுடன் அவரது நாவிலிருந்து வெளிவந்தன குர்ஆன் வசனங்கள். புரிந்துவிட்டது நபியவர்களுக்கு. அவருடைய உறவினர்கள் விவரித்ததைவிட ஸைது திறமைசாலி என்பது தெளிவாய்த் தெரிந்தது. அதையும் தாண்டி நபியவர்களை உவகையில் ஆழ்த்திய விஷயம் ஒன்றிருந்தது – ஸைது சிறப்பாய் எழுத, படிக்கக் கூடியவர் என்பது.

யாருக்கு என்ன திறமை இருக்கிறதோ அதை முற்றிலும் பயன்படுத்திக் கொள்ளும் தேர்ச்சி முஹம்மது நபியவர்களிடம் இருந்தது. எனவே ஸைதை எப்படி உருவாக்கிட வேண்டும் என்பது அவர்களுக்கு அக்கணமே உறுதியாகிவிட்டது.

“ஸைது! யூத கோத்திரத்தினர் நான் கூறுவதை சரியாகத்தான் எழுதிக் கொள்கிறார்களா என்பதை அறியும் வாய்ப்பு எனக்கில்லை. எனவே நீ உடனே யூதர்களின் ஹீப்ரு மொழியைக் கற்றுக்கொள்!

இரண்டே வாரங்களில் ஹீ்ப்ரு மொழியைக் கற்றுத் தேர்ந்தார் அவர். அதன் பிறகு யூதர்களுக்கு எழுதக் கூடிய கடிதம், அவர்களிடமிருந்து வரும் தகவல் என்று எதுவாய் இருந்தாலும் படிப்பது மொழிபெயர்ப்பது எழுதுவது எல்லாம் ஸைது பொறுப்பிற்கு வந்து சேர்ந்தது.

அதைத் தொடர்ந்து, “உனக்கு சிரியாக் மொழி தெரியுமா?” என்று கேட்டார்கள் நபிகள். “தெரியாது” என்றார் ஸைது. “சென்று அதைக் கற்று வா ஸைது”. அதையும் உடனே பயின்றார். அதுவும் எத்தனை நாட்களில்? பதினேழே நாட்களில்.

இவ்வாறாக – இளைஞர் ஸைது இப்னு தாபித் ஆழ்ந்த அறிவுள்ள ஒரு மொழி வல்லுநராய் வளர்ந்து வரலானார். நபியவர்களுக்கு அவரே அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பாளராக ஆகி விட்டார்.

அவ்வப்போது அருளப்பெறும் இறைவசனங்களை எழுதிவைத்துக் கொள்வதற்காகவே சிலரை நியமித்து வைத்திருந்தார்கள் நபியவர்கள். அவர்களுள் ஸைதும் பிரதானமான ஒருவராய் ஆகிப்போனார். இறைவசனம் புதிதாய் வந்திறங்கியதும் ஸைதை அழைத்துவரச் சொல்வார்கள். பிறகு அவர்கள் உச்சரிக்க உச்சரிக்க கவனமாய் எழுதிக் கொள்வார் ஸைது. எத்தகைய பாக்கியம் அது?

அது மட்டுமல்லாமல் மன்னர்களுக்கு நபியவர்கள் அனுப்பிவைத்த கடிதங்களை எழுதும் பணியும் ஸைதிற்கு அமைந்தது.

நபியவர்களின் மறைவுக்குப் பின்னர் – ஹள்ரத் அபூபக்ர் (ரளி)  அவர்களின் காலத்தின் குர்ஆனைத் தொகுக்கும் மாபெரும் பணியையும் சுமந்து கொண்டவர்கள் ஸைத் அவர்கள் தான்! கலீஃபா உத்மான் (ரளி) அவர்கள் காலத்தில் திருமறையின் மூலப் பிரதிலிலிருந்து நகல்கள் எடுக்கும் மகத்தான பொறுப்பையும் செவ்வனே நிறைவேற்றியவர்கள் ஸைத் அவர்கள் தான்!

இப்பொழுது புத்தக வடிவத்தில் – அன்று அருளப்பெற்ற அதே துல்லியத்துடன் ஓர் எழுத்துகூட பிழையின்றி இன்று நம் கைகளில் தவழும் குர்ஆன் நூலிற்குப் பின் ஸைதின் உழைப்பு மகத்தானது என்பது மறுக்க முடியாத உண்மை!

இந்த அருமையான நபித்தோழரின் வரலாற்றில் பெற்றோர்கள் படித்துக் கொள்ள வேண்டிய பாடங்களை மட்டும் இங்கே பார்ப்போம்:

1. ஸைத் அவர்கள் தனது மொழித்திறமையைக் கண்டுணர்ந்து அதனை வளர்த்துக் கொள்ளத் துவங்கிய காலம் அவரது மிக இளமைப் பருவம் ஆகும் (adolescence). அதாவது அவரது – பதினான்கு பதினைந்து வயதிலிருந்தே – அவரது திறமைகள் வெளிப்படத் துவங்கி விட்டன. இதனைத் தான் இன்றைய சிறுவர்களின் பெற்றோர்கள் நன்கு கவனித்திட வேண்டும். அதாவது உங்கள் குழந்தைகள் எட்டாவது, ஒன்பதாவது வகுப்புகளில் படிக்கும் கால கட்டம் மிக முக்கியமானது. உங்கள் குழந்தைகளின் ஆர்வத்தின் அடிப்படையில் அவர்களுக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை நீங்கள் தவறாமல் வழங்கிட வேண்டும்.

2. இன்றைய தாய்மார்களுக்கெல்லாம் ஒரு அழகிய முன்மாதிரியாக இங்கே ஸைத் அவர்களின் தாயார் – அந்நவ்வார் பின்த் மாலிக் அவர்களைப் பார்க்க முடிகிறது. மகன் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தும் போதெல்லாம் – உடனே களத்தில் இறங்கி ஆவன செய்யத் தொடங்கி விடுகிறார் அவர். இப்படித் தான் ஒவ்வொரு தாயும் தான் பெற்ற செல்வங்களின் திறமைகளுக்கு வழி அமைத்துக் கொடுத்திட ஆர்வத்துடன் முயற்சிகள் மேற்கொண்டிட வேண்டும்,

3. மனிதர்களுக்குள் புதைந்திருக்கின்ற பல விதமான திறமைகளுள் ஒன்று தான் மொழியாற்றல். ஒரு மொழியை மிக இலாகவமாகக் கையாள்வதற்கென்று ஒரு திறமை வேண்டும். இதனை ஆங்கிலத்தில் linguistic intelligence என்று அழைக்கிறார்கள். இப்படிப்பட்ட திறமைக்கு ஸைத் பின் தாபித் அவர்கள் ஒரு முன்மாதிரி! உங்கள் குழந்தைக்கு மொழியைக் கையாள்வதில் ஆர்வம் மிக்கவரா? அவருடைய இந்தத் திறமையை வளர்க்க முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

4. ஸைது அவர்களின் வாழ்வில் உங்களுக்குப் படிப்பினை என்னவென்றால் – அபரிமிதமான திறமை உங்கள் பிள்ளைகளிடம் இருந்தால் வாய்ப்புகள் தானாக உங்கள் குழந்தைகளைத் தேடி வரும் என்பது தான். இப்படித் தான் திருக்குர்ஆனைத் தொகுக்கும் அருமையான வாய்ப்பு ஸைது அவர்களை வந்தடைந்தது என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.


உங்கள் குழந்தைகளின் ஆர்வங்களைப் பட்டியலிடுங்கள்!

உங்கள் குழந்தைகளின் ஆர்வங்கள் என்னென்ன என்று நீங்கள் அறிந்து வைத்திருப்பது அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும். எனவே உங்கள் குழந்தைகள் எவற்றிலெல்லாம் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றார்கள் என்று அவர்களை உற்று நோக்குங்கள்.

உங்கள் குழந்தைக்கு ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்கின்றது என்பதற்கு என்ன அளவுகோல்? அக்குழந்தை அந்த ஒன்றில் எவ்வளவு நேரம் செலவிட்டாலும் அது அக்குழந்தைக்கு அலுத்துப் போவதில்லை! that will not be boring! அது அவரது சிந்தனையையும் செயல்பாட்டையும் ஆக்கிரமித்திருக்கும். மீண்டும் மீண்டும் அதன் பக்கமே அதன் கவனம் சென்று கொண்டிருக்கும். அது தான் அளவுகோல்!

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் -

உங்கள் மகனுக்கென்று / மகளுக்கென்று ஒரு டைரியை தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்ற காரியங்கள் அனைத்தையும் அதில் பட்டியலிடுங்கள். அவர்களை ஆர்வப்படுத்துகின்ற விஷயம் எதுவாயினும் அவையனைத்தையும் – அது பத்து அல்லது பதினைந்து அல்லது இருபது என்று இருந்தாலும் தவறில்லை – பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சரி, அனைத்தையும் பட்டியலிட்டு விட்டீர்களா?

அடுத்தது நீங்கள் செய்ய வேண்டியது:

அந்தப் பட்டியலில் – இறைவன் தடை செய்துள்ள ஏதாவது இடம் பெற்றுள்ளதா என்று பாருங்கள். உதாரணமாக – உங்கள் மகன் drums வாசிப்பது போல் அல்லது guitar வாசிப்பது போல் சமிக்ஞை செய்து கொண்டிருக்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் பட்டியலில் சேர்த்திருந்தால் அதனை நீக்கி விடுங்கள். இது போன்று மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டுள்ள விஷயங்கள் எதுவாயினும் அவற்றை நீக்கி விட்டு – இரண்டாவது பட்டியல் ஒன்றை அதற்குக் கீழே தயாரித்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஹராம் – ஹலால் பற்றிய விழிப்புணர்வை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்துங்கள்.

அடுத்தது -

அந்தப் பட்டியலில் – உங்கள் செல்வங்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்ற ஏதாவது விஷயம் ஒன்றில் அவர்களுக்கு எந்த ஒரு பயனும் அளிக்காத காரியம் ஏதாவது இருந்தால் அதனையும் நீக்கி விடவும். சான்றாக உங்கள் குழந்தைகளுக்கு தொலைக்காட்சியில் கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்கும்; கார்ட்டூன் கதைகளை மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் பிடிக்கும் என்று எழுதியிருந்தால் இவைகளையும் பட்டியலிலிருந்து நீக்கி விடுங்கள். “உங்களுக்கு எது பயன் அளிக்குமோ அதில் ஆர்வம் காட்டுங்கள்” – என்பது நபிமொழியாகும். எனவே பயனற்ற விஷயங்களை நீக்கி விட்டு அதற்குக் கீழே மூன்றாவது பட்டியல் ஒன்றைத் தயாரியுங்கள். இப்பட்டியலில் உங்கள் குழந்தைகளை ஆர்வப்படுத்தும் விஷயங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கும். பரவாயில்லை!

அடுத்தது -

இந்த மூன்றாவது பட்டியலில் நீங்கள் எழுதியிருப்பவற்றுள் – உங்கள் குழந்தைகளுக்கு எது மிக மிக அதிகமான விருப்பமாக இருக்குமோ அதற்கு முன்னுரிமை தந்து அதன் அடிப்படையில் அவைகளை வரிசைப்படுத்தும் நான்காவது பட்டியல் ஒன்றைத் தயாரியுங்கள். இது தான் உங்களுடைய குழந்தைகளின் இப்போதைய ஆர்வப் பட்டியல்!

அடுத்தது -

ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கழித்து மீண்டும் அந்த டைரியைப் புரட்டுங்கள். உங்கள் குழந்தைகளின் ஆர்வப்பட்டியலைப் பார்வையிடுங்கள். இப்போது அப்பட்டியலில் ஏதாவது புதிதாக சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா; சேருங்கள். அதிலிருந்து ஏதாவது ஒன்றை நீக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா, நீக்கி விடுங்கள். புதிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு ஒரு வருடம் கழித்தும் புதிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து – நீங்கள் பட்டியலிட்ட விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து அவற்றில் உங்கள் குழந்தைகள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து சிந்தியுங்கள். தகவல்களை சேகரியுங்கள். களத்தில் இறக்கி விடுங்கள் உங்கள் குழந்தைகளை! அது போலவே உங்கள் குழந்தைகள் தங்கள் எதிர்கால் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் களம் ஒன்றைப் பற்றியும் சிந்தியுங்கள். சிந்தித்துக் கொண்டே இருங்கள்.

இறைவன் உங்கள் குழந்தைகளுக்கு மகத்தான வாய்ப்புகளைத் திறந்து விடுவான் – இன்ஷா அல்லாஹ்!

“மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். (குர்ஆன் 29: 69)

திட்டமிட்டுச் செயலாற்ற பயிற்சி கொடுங்கள்!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்: “உங்களில் மிகச் சிறந்தவர் எவர் எனில் – யார் ஒருவர் எந்த ஒரு செயலையும் மிகச் சிறந்த முறையில் (with perfection) செய்து முடிக்கின்றாரோ அவரே!” (நூல்: அல் -பைஹகி – ஷுஅபுல் ஈமான்)

நம்மில் பெரும்பாலான பெற்றோர்கள் – திட்டமிட்டு செயல் படுவதில்லை. எல்லாமே அரைகுறை வேலைகள் தான். எந்த ஒரு மிகச்சிறிய ஒரு செயலாக இருந்தாலும் சரி, அல்லது பெரிய காரியமாக இருந்தாலும் சரி – ஒன்றை எப்படி துவங்குவது, எப்படி தொடர்வது, எப்படி அழகாக முடிப்பது – என்று நாம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லையோ என்றே தோன்றுகிறது.

வீட்டில் – அது சமையலாக இருக்கட்டும், துணி துவைப்பதாக இருக்கட்டும், வீட்டைத் தூய்மைப் படுத்துவதாக இருக்கட்டும் – எல்லாமே அரைகுறை வேலைகள் தான். இங்கே நாம் சொல்ல வருவது நமது குழந்தைகளுக்கு திட்டமிட்டு செயலாற்ற எப்படி பயிற்சி அளிப்பது பற்றித்தான்.

இதனை ஆங்கிலத்தில் Good Work Habit என்கிறார்கள். அதாவது எந்த ஒன்றையும் சிறப்பாகச் செய்திடும் பழக்கம் என்று இதனைச் சொல்லலாம். இதனைக் கற்றுத் தருவதில் பெற்றோருக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது.

அது என்ன? எப்படி?

Good work habit என்பது பின் வரும் 5 அம்சங்களையும் கொண்டது:

1. எந்த ஒரு காரியத்திலும் இறங்குவதற்கு முன்பு – அதற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் சேகரித்து நம் முன் வைத்துக் கொள்தல்.

2. குறிப்பிட்ட நேரத்தில் அந்தச் செயலைத் துவக்கி விடுதல்.

3. அந்தச் செயலைத் தொடர்வதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதனை அரைகுறையாக விட்டு விட்டுச் சென்று விடாமல் அதனைத் தொடர்தல் (persistence)

4. அந்தச் செயலைத் தொடர்வதற்கு நமக்கு மற்றவரின் உதவி தேவைப்படின், தயங்காமல் அந்த உதவியை நாடிப் பெற்றுக் கொள்தல்.

5. குறித்த நேரத்தில் எடுத்துக் கொண்ட எந்த ஒரு செயலையும் முடித்து விடுதல்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அன்றாட வீட்டுப் பணிகளில் இப்படிப்பட்ட பயிற்சியைத் தொடர்ந்து அளித்து வந்தால் – குழந்தைகள் வளர்ந்து ஆளாகி அவர்கள் ஈடுபடுகின்ற எல்லாச் செயல் பாடுகளிலும் இந்த Good work habit அவர்களுக்குக் கை கொடுக்கும்.

சரி தானே?நான் பட்ட கஷ்டங்கள் என் பிள்ளைகள் படக்கூடாது…??

“நான் பட்ட கஷ்டங்கள் என் பிள்ளைகள் படக்கூடாது என்று பெற்றோர்கள் சொல்வது ஒன்றும் சரியான கருத்தாக இருக்க முடியாது.

பெற்றோர்களுக்கு – குறிப்பாக தந்தைமார்களுக்கு நாம் சொல்வது இது தான்:

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து பல் வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு, பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து பல தரப்பு மக்களையும் சந்தித்து உதவி கேட்டு, மூட்டை தூக்கி, பல இரவுகள் கண் விழித்து காத்திருந்து, பதற்றம், பயம், சோகம், மன அழுத்தம் போன்ற மன உளைச்சல்களுக்கு ஆளாகி, வெற்றியை சந்திப்பதற்கு முன் பல தோல்விகளை சந்தித்து, ……. ஒரு கட்டத்தில் அல்லாஹு தஆலா உங்களைக் கைத்தூக்கி விட நீங்கள் இப்போது சற்றே ஆசுவாசபடுத்திக் கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்த பிறகு… என்ன சொல்கிறீர்கள்?

“அப்பப்பா! நான் பட்ட கஷ்டங்கள் என் பிள்ளைகள் படக்கூடாது!”

இது உங்கள் குழந்தைகளைப் “பறக்க” விடாமல் தடுப்பதற்கு நீங்கள் செய்கின்ற முதல் தவறு! மகா தவறு!

கதை ஒன்று சொல்வார்கள்: வண்ணத்துப்பூச்சி ஒன்று அது பறந்து திரிவதற்கு முன் அது தனது கூட்டுக்குள் (cocoon) இருந்து வெளியே வர படு முயற்சி செய்து கொண்டிருந்ததாம். இதைக் கவனித்த சிறுவன் ஒருவன் அதன் மீது இரக்கப்பட்டு அந்தக் கூட்டை ஒரு கத்தரிக்கோலால் உடைத்து விட்டானாம். அவன் எதிர்பார்த்தது அந்த வண்ணத்துப்பூச்சி பறக்கும் என்று! ஆனால் அதனால் பறக்க முடியவில்லையாமல் கீழே விழுந்து அப்படியே செத்துப் போனதாம்!

படிப்பனை பெற வேண்டியது பெற்றோர்கள்.

பொதுவாகவே நமது குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்த பிறகும் சரி, அவர்கள் வளர்ந்ததும் கல்லூரிக்கு அனுப்பும் காலத்திலும் சரி, பல பெற்றோர்கள் செய்கின்ற தவறு என்னவெனில் – “பிள்ளைகள் கஷ்டப்பட்டு படிக்கின்றார்கள். வீட்டுப்பாடம் எழுதுகின்றார்கள். தேர்வுக்கு தயார் செய்கின்றார்கள். எனவே அவர்களை மேலும் நாம் வேலை வாங்குவது தவறு” – என்று விட்டு விடுகின்றார்கள்.

இது எதில் போய் முடியும் என்றால் – கூடு உடைக்கப்பட்டு வெளியில் வந்து விழுந்த வண்ணத்துப்பூச்சியின் நிலைக்கே கொண்டு போய் விடும்!

படிப்பு படிப்பு என்று புத்தகப்புழுவாக படித்து படிப்பு ஒன்றில் மட்டுமே தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தி வேறு எந்த ஒரு திறமையையும் வளர்த்துக் கொள்ளாமல், பள்ளியிலும் கல்லூரியிலும் பல தங்க மெடல்களை வாங்கிக் குவித்த பெரும்பாலோர் – வாழ்க்கையில் வெற்றி பெற்றதில்லை என்பது வாழ்க்கை கற்றுத்தரும் பாடம்!

தனது வாழ்வில் வெற்றிக்கொடி நாட்டிய – ஒரு வன விலங்கு வீடியோகிராஃபர் சொல்கிறார்: “என் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்கள் பெரும்பாலானவற்றை நான் பள்ளிக்கும், கல்லூரிக்கும் வெளியில் தான் கற்றுக் கொண்டேன்!”

பள்ளிகளும் கல்லூரிகளும் படிப்பு ஒன்றை மட்டும் தான் கற்றுத்தரும். ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெறத்தேவையான பல விஷயங்களை நாம் கல்விக்கூடங்களுக்கு வெளியில் தான் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

சிந்திக்கும் திறமை, கருத்துப் பரிமாற்றத் திறமை, மற்றவர்களுடன் கலந்து பழகும் திறமை, தலைமைத்துவத் திறமை, குழுவில் ஒரு அங்கமாக இருந்து மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு காரியத்தை முடித்துத் தரும் திறமை, உணர்ச்சிகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளும் திறமை, தொழில் நுட்பத்திறமைகள், தன்னை ஒழுங்கு படுத்திக் கொள்ளும் திறமை – இவை அனைத்தும் வாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான அடிப்படைத் திறமைகளாகும்.

ஒரு ஆய்வின் படி – கல்லூரிகளில் படித்து விட்டு வெளி வருகின்ற மாணவர்களில் 90% – க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு “பணியாற்றும் திறமை” இல்லையாம்! They are unemployable! – என்று சொல்கிறார்கள்!

விழித்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்களே!

நீங்கள் என்ன தான் சொல்ல வருகின்றீர்கள் என்கிறீர்களா?

குறித்துக் கொள்ளுங்கள்:

உங்கள் வீட்டை சுத்தப் படுத்தும் பணிகளில் உங்கள் பிள்ளைகளையும் ஈடுபடுத்துங்கள். குறிப்பாக கழிவறைகளை சுத்தப்படுத்துவதிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள்! குழந்தைகள் தானே என்று விட்டு விட வேண்டாம்!

உங்கள் பிள்ளைகளுக்கென்று தனி இடம் ஒன்றைக் கொடுத்து அவர்களது பொருள்களை ஒழுங்காக அடுக்கி வைக்கச் சொல்லி ஆர்வமூட்டுங்கள்.

அவர்கள் துணிகளை அவர்களே துவைத்திடச் செய்திடுங்கள். யந்திரத்தில் (washing machine) துவைப்பதாக இருந்தாலும் அதனை அவர்களே செய்து கொள்ள வேண்டும் என்று விதியுங்கள். சிறு குழந்தைகளுக்குக் கூட அவர்களது அழுக்குத்துணிகளை இங்கு தான் போட வேண்டும் என்றும் துவைக்கப் பட்ட துணிமணிகளை இப்படித்தான் அடுக்கி வைத்திட வேண்டும் என்றும் பயிற்சி கொடுங்கள்.

வீட்டுக்குத்தேவையான மளிகை, காய்கறிகள் வாங்குவது எப்படி என்ற பயிற்சியும் அவசியமான பயிற்சியாகும். ஒரு பொருளில் சிறந்ததை தேர்வு செய்வது எப்படி, விலையை சரிபார்ப்பது எப்படி, பொருள் கொடுத்து ஒரு பொருள் வாங்குவது எப்படி, (தேவையேற்படின்) பேரம் பேசுவது எப்படி – போன்ற திறமைகள் தானாகவே வளரும்.

மற்றவர்களுடன் பழகுவது எப்படி என்று கற்றுக் கொள்ளுங்கள். சிரித்த முகம் காட்டுவதன் அவசியத்தை உணர்த்துங்கள். நலம் விசாரித்தலைப் பழக்குங்கள்.

பேச்சுத்திறமையை வளர்த்துக் கொள்ள வீட்டிலேயே பயிற்சி அளியுங்கள். அழகாகப் பேசுவது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். மற்றவர்கள் பேசும்போது காது தாழ்த்திக் கேட்பதன் அவசியத்தை உணர்த்துங்கள். அன்றைய செய்திகளை விவாதப் பொருளாக்குங்கள். கேள்விகள் கேளுங்கள். பதில் தராதீர்கள். அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்த்திடுங்கள்.

மின் சாதனங்களையும், மின்னணு சாதனங்களையும் பொருத்துவது எப்படி, அவைகளைப் பழுது பார்ப்பது எப்படி, தண்ணீர்க் குழாய்களைச் சரி செய்வது எப்படி, சின்னச் சின்ன கொத்தனார் வேலைகள், ஆசாரி வேலைகள் செய்வது எப்படி, கிழிந்த துணிகளைத் தைப்பது எப்படி, பொத்தான்களைத் தைப்பது எப்படி, சிறு தோட்டங்களைப் பராமரிப்பது எப்படி, – போன்ற தொழில் நுட்பங்களைக் கொஞ்சமேனும் அவர்கள் கற்றுக் கொள்ள வகை செய்யுங்கள்.

தலைமைத்துவத் திறமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொடுங்கள். ஒரு விஷயத்தில் மிகச் சரியானதைத் தேர்வு செய்வது (decision making) எப்படி என்ற பயிற்சியும் தாருங்கள். ஒரு பிரச்னையைத் தீர்ப்பது எப்படி என்ற பயிற்சியும் அவசியம். மற்றவர்கள் நமது கருத்தை ஏற்க வைப்பது என்ற பயிற்சியும் தேவை.

தோல்விகளைச் சந்திப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்; கோபம், பதற்றம் – போன்ற உணர்ச்சிகளை ஒழுங்கு படுத்துவது எப்படி; அவைகளை பொருத்தமாக வெளிப்படுத்துவது எப்படி என்றும் பயிற்சி அளியுங்கள். (பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் கூட ஏன் தற்கொலையை நாடுகின்றார்கள்?)

உங்கள் பிள்ளைகள் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வருவதற்குள் நாம் மேலே குறிப்பிட்டுள்ள திறமைகளை கொஞ்சமேனும் வளர்த்துக் கொண்டிருந்தால் - அவர்கள் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது!


ஏழு வயதினிலே!


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களது மக்களுக்கு ஏழு வயதாகும் போது அவர்களுக்குத் தொழுகையைக் கற்றுக் கொடுங்கள். பத்து வயதாகியும் அவர்கள் தொழுகையை விட்டால் அவர்களை அடியுங்கள். அவர்களுடைய படுக்கைகளைப் பிரித்து விடுங்கள். (நூல்: ஸுனன் அபூ தாவூத்)

“Teach your children to pray when they are seven years old, and smack them if they do not do so when they are ten, and separate them in their beds.” (Narrated by Abu Dawood)

ஏன் ஏழு வயது?

நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்குப் பழக்கி விட (habit formation) நபி (ஸல்) அவர்கள் தேர்வு செய்த வயது ஏழு! ஏனெனில் குழந்தைகளுக்குத் தொழுகையை கற்றுக் கொடுப்பதில் என்னென்ன அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள். நேரத்தைத் திட்டமிடல், கட்டுப்பாடு, முறையான தூக்கம், குறிப்பிட்ட நேரத்தில் எழுதல், கழிவறை சென்று வருதல், பல் துலக்குதல், உடல் சுத்தம், உடை சுத்தம், இடம் சுத்தம், உளூ செய்தல், தொழுகையின் சட்டங்களைக் கற்றல், மனனம் செய்தல், போன்ற இன்ன பிற நல்ல விஷயங்களையும் குழந்தைகள் தொழுகையுடன் சேர்ந்தே கற்றுக் கொள்வார்கள்.

இதில் பெற்றோர் கவனித்திட வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

எல்லாப் பழக்கங்களையும் உடனேயே குழந்தைகள் கற்றுக் கொண்டு விட வேண்டும் என்று எதிர்பார்ப்பது, அவசரப் படுவது, குழந்தைகளைத் திட்டுவது, அதட்டுவது, அடிப்பேன் உதைப்பேன் என்று மிரட்டுவது எல்லாம் கூடாது. ஏன்? நபியவர்களே மூன்று ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளார்கள் என்பதைக் கவனிக்க!

குழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதெல்லாம் சரிதான். ஆனால் அது எது வரை? ஏழு வயது வரை மட்டுமே! பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக செல்லம் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பழக்கங்களை அவர்களுக்குள் உருவாக்கிட வேண்டும். எது வரை? பத்து வயது வரை!

குழந்தைகள் பத்து வயதை அடைந்து விட்டால், செல்லம் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும.; “அடியுங்கள்” - என்கிறார்கள் நபியவர்கள். எனவே நமது குழந்தைகளை – சின்னப் பிள்ளைகள்தானே, பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுதல் ஆபத்து. ஏனெனில் பத்தில் வளையாதது பதினைந்தில் வளையாது. பிறகு இருபதில், இருபத்தைந்தில் எப்படி வளையும்?

இந்த ஏழு வயது இருக்கிறதே அது எப்படிப் பட்டது தெரியுமா? பெரியவர்கள் செய்வதை அப்படியே காப்பி (imitate) அடிக்கும் வயது. அப்படியென்றால் என்ன செய்திட வேண்டும். குழந்தைகளைத் தொழு தொழு என்றால் போதாது. வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் தொழக்கூடியவர்களாக விளங்கிட வேண்டும்.

குழந்தைகள் சில நேரங்களில் அடம் பிடிக்கும். தூங்குவது போல் நடிக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் குறிப்பாக தாய்மார்கள் என்ன செய்திட வேண்டும் தெரியுமா? குழந்தைகளுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டு அன்பாக, ஆதரவாக, மென்மையாக, அதே நேரத்தில் உறுதியாகப் பேசிட வேண்டும். பெற்றோர் கோபத்தை வெளிப்படுத்தினால் குழந்தைகள் தொழுகையையே வெறுத்து விடலாம். எனவே மென்மையான வழிமுறையினை மட்டுமே தொடர்ந்து பொறுமையுடன் கையாள வேண்டும்.

குழந்தைகளிடம் தக்க தருணஙகளில் நாம் – அல்லாஹு தஆலாவைப் பற்றி, அவன் நம் மீது வைத்திருக்கின்ற அளவிட முடியாத அன்பு பற்றி, அவன் நமக்கு வழங்கியிருக்கின்ற எண்ணிலடங்கா அருட்கொடைகளைப் பற்றி, அவன் நமக்கு வழங்க இருக்கின்ற நற்கூலி பற்றி, அவன் நமக்காகத் தயார் செய்து வைத்திருக்கும் சுவர்க்கம் பற்றி – இவ்வாறு நேர்மறையாக (positive approach) எடுத்துச் சொல்லி ஆர்வமூட்டிட வேண்டும.;

இவ்வாறு சிறு வயதிலேயே பழக்கப் படுத்தப் படுகின்ற குழந்தைகள் தாம் – வாழ்நாள் முழுவதும் விடாமல் தொழுகின்ற தொழுகையாளிகளாக மிளிர்கின்றார்கள். இப்படிப்பட்ட குழந்தைத் தொழுகையாளிகளின் பெற்றோர் தாம் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்!

குழந்தைகளை பள்ளிவாசலுடன் இணைத்து வையுங்கள்!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர். எல்லாவிதமான மானக்கேடான செயல்களையும் செய்திடுவதற்கு தங்கு தடையில்லாத நகரமாம் அது. அங்கு ஒரு பள்ளிவாசல். குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்கள் - என்று பள்ளிவாசல் எப்போதுமே கலகலப்பாக இருக்குமாம்.

குழந்தைகள் விளையாடுவதும் அங்கே தான். மாணவர்கள் வீட்டுப்பாடம் எழுதுவதும் அங்கே தான். அங்கே பத்து வயது வரை தான் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களில் படித்திட முடியும். அதன் பின் - அரசுப் பள்ளிக்கூடங்களில் தான் (PUBLIC SCHOOLS) படித்திட வேண்டும்.

அதிசயம் என்னவென்றால் - பள்ளிவாசலுடன் இணைக்கப்பட்டிருந்த நமது பிள்ளைகள் யாரும் அங்கே கெட்டுப்போவதில்லையாம். கட்டுரை ஒன்றில் படித்தேன். மகிழ்ச்சியாக இருந்தது!

ஆனால் நமதூர் பள்ளிகளின் நிலை என்ன?

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து வருவார்கள். ஜமாஅத் தொழுகை துவங்கியதும் அந்தக் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடும். தொழுகை முடிந்ததும் "பிளு பிளு" - என்று சண்டைக்கு வந்து விடுவார்கள் மற்ற "தொழுகையாளிகள்!"

அவ்வளவு தான்!

"விரட்டியடிக்கப்பட்ட" - அந்தக் குழந்தைகள் அப்புறம் பள்ளியின் பக்கமே தலை காட்ட மாட்டார்கள்!

ஆனால் - நபியவர்கள் காலத்தில் பள்ளிவாசலில் குழந்தைகளின் நிலை என்ன என்று பார்ப்போமா?

உங்கள் சிந்தனைக்கு இரண்டு நிகழ்ச்சிகள்!

ஒரு தடவை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்களின் பேரக்குழந்தைகளில் (ஹசன் அல்லது ஹுசைன்) ஒருவரைச் சுமந்தவாறு மக்ரிப் அல்லது இஷா தொழுகைக்கு வந்தார்கள்.

குழந்தையைக் கீழே இறக்கி விட்டு விட்டு தொழுகையைத் தொடங்கினார்கள். அவர்கள் சஜ்தாவுக்குச் சென்றதும் நீண்ட நேரம் அதே நிலையிலேயே இருந்திடவே – நான் சற்று என் தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தேன். பேரக்குழந்தை நபியவர்கள் முதுகில் அமர்ந்திருந்தது! நான் மீண்டும் சஜ்தாவுக்குச் சென்று விட்டேன்.

தொழுகை முடிந்ததும் நபித்தோழர்கள் கேட்டார்கள்: “யா ரசூலுல்லாஹ்! தாங்கள் நீண்ட நேரம் சஜ்தாவில் இருந்திடவே ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதோ அல்லது தங்களுக்கு வஹி வரத் தொடங்கி வி;ட்டதோ என்று நாங்கள் நினைத்து விட்டோம் என்றார்கள்.

நபியவர்கள் சொன்னார்கள்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, எனது பேரன் என் முதுகில் அமர்ந்து விட்டார். அவரது மகிழ்ச்சியைக் கெடுத்து விட நான் விரும்பவில்லை! (அன் நசயீ, அஹ்மது, அல் ஹாக்கிம்)

இன்னொரு நிகழ்ச்சி:

அண்ணல் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் அமர்ந்து அளவளாவும் அவைக்கு, நபித்தோழர் ஒருவர் தம் குழந்தையையும் அழைத்து வருவார். அந்தக் குழந்தை நேரே நபியவர்களிடம் ஓடிச்சென்று அவர்களின் முதுகில் ஏறத் தொடங்கும்.

நபியவர்கள் அக்குழந்தையை தம் மடியில் அமர்த்திக் கொள்வார்கள். ஆனால் பின்னர் அக்குழந்தை இறந்து விட்டது! எனவே அக்குழந்தையின் தந்தை நபியவர்களின் அவைக்கு வர இயலவில்லை. இதைக் கவனித்த நபியவர்கள் எங்கே அவரைக் காணோம்? என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் அவருடைய குழந்தை இறந்து விட்ட செய்தியைச் சொன்னார்கள்.

பின்னர் அக் குழந்தையின் தந்தையை நபியவர்கள் சந்தித்து விசாரித்த போது, தமது குழந்தை இறந்து விட்ட விபரத்தைத் தெரிவித்தார் அந்த நபித்தோழர். அவருக்கு ஆறுதல் சொன்ன நபியவர்கள் அவரிடம் கேட்டார்கள்:

தோழரே! எது உங்களுக்கு விருப்பமானது? உங்கள் மகன் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பதையா அல்லது சுவர்க்கத்துக்கு நீங்கள் செல்லும் போது, எந்த வாசல் வழியாக நீங்கள் நுழைந்திட முற்பட்டாலும், உங்கள் மகன் அங்கெல்லாம் வந்து நின்று கொண்டு உங்களை வரவேற்பதற்காக அதன் கதவுகளைத் திறந்து விடக் காத்திருப்பதையா?

அவர் சொன்னார்: யா ரசூலுல்லாஹ்! என் மகன் எனக்கு முன்னேயே சுவர்க்கம் சென்று என்னை வரவேற்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன் என்றார். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: உங்களுக்கு அது கிடைக்கும்! (அன் நசயீ )

இந்த இரண்டு நிகழ்வுகளில் இருந்தும் நாம் நிறைய பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளன. அதே நேரத்தில் இங்கே ஒரே ஒரு பாடத்தை மட்டும் நினைவூட்டுவோம்.

அதாவது நபியவர்கள் காலத்தில் குழந்தைகள் பள்ளிவாசலோடு இணைக்கப் பட்டிருந்தார்கள் என்பது தான் அந்தப் பாடம். அதாவது இதுவும் ஒரு சுன்னத் என்பதை நாம் மறந்து விடக்கூடாது! இந்த ஒரே ஒரு பாடத்தை நாம் மறந்து போய் விட்டதன் பலனைத் தான் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்!

புரிகின்றதா?

குழந்தைகளின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள்!

நமது உள்ளத்திலே எழுகின்ற உணர்வுகளும் உணர்ச்சிகளும் வலிமை மிக்க மனித வளங்கள் ஆகும். அவை ஆக்கவும் வல்லவை. அழிக்கவும் வல்லவை. இவை நமது உள்ளம் சம்பந்தப் பட்டதால் – இவைகளை நாம் உளவியல் மனித வளங்கள் (psychological human resources) என்று அழைக்கலாம்.

அன்பு, இரக்கம், பாசம், விருப்பம், ஆர்வம், உற்சாக, மகிழ்ச்சி, கவலை, கோபம், வெறுப்பு, பயம், – போன்றவை நமது உள்ளத்தில் இயல்பாய் எழுகின்ற உணர்வுகள் ஆகும். நமது உணர்வுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அவசியமும் ஒரு மதிப்பும் இருக்கிறது.

ஆனால் நமது உணர்வு ஒன்றுக்கு (feeling) ஒரு அழுத்தம் கொடுக்கப்படும்போது அது உணர்ச்சியாக (emotion) மாறி விடுகிறது. Intensive feeling leads to emotion!

அவ்வாறு நாம் உணர்ச்சி வசப் பட்டு விட்டால் அந்த உணர்ச்சிகள் உடனடியான செயல்பாட்டிற்கு நம்மைத் தூண்டி விட்டு விடும். இந்தத் தூண்டல் மிக வலிமையானது. உடனடியானது.

இதற்குக் காரணம் நமது ‘ஹார்மோன்களே’. ஆனால் அந்த உடனடியான செயல் அறிவுக்குப் பொருத்தமானதாக அமையாது!

குழந்தைகளை வளர்க்கின்ற பெற்றோர்கள் இதனை நன்றாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் உணர்வுகளும் உணர்ச்சிகளும் குழந்தைகளுக்கும் சொந்தமானவையே!

நாம் முன்பு சொன்னது போல - உணர்ச்சி ஒன்றுக்கு ஆளாகி விடுகின்ற ஒரு குழந்தையின் செயல்பாடு எப்படி இருக்கும்? அது அறிவுக்குப் பொருத்தமானதாக இருக்காது! நமது குழந்தைகளின் இப்படிப்பட்ட அறிவுக்குப் பொருத்தமில்லாத செயல்பாடுகளை நாம் எப்படி அழைக்கிறோம் தெரியுமா?

Misbehaviour! கெட்ட நடத்தை!

இப்படி நமது குழந்தைகளை நாமே - நியாயமின்றி  குற்றம் சுமத்துவதிலிருந்து
அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

அப்படியானால் - உணர்ச்சி வசப்பட்டு செயல்படும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது?

உணர்வுகள் குறித்தும் உணர்ச்சிகள் குறித்தும் குழந்தைக்கு எதுவும் தெரியாது! அதனை எப்படி வெளிப்படுத்துவது என்பதும் தெரியாது! அப்படியிருக்க - அவைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டியது நம் கடமை அல்லவா?

என்னென்ன கற்றுக் கொடுக்க வேண்டும்? எப்போது கற்றுக் கொடுக்க வேண்டும்? எப்படிக் கற்றுக் கொடுக்க வேண்டும்?

குழந்தைகள் குறிப்பிட்ட ஒரு உணர்ச்சிக்கு ஆளாகி விடும்போது - அறிவுக்குப் பொருத்தமற்ற ஏதாவது ஒன்றைச் செய்து விடுவார்கள் தான்!

ஆனால் நாம் என்ன செய்திட வேண்டும்? எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது?

முதலாவது நாமே உணர்ச்சி வசப்பட்டு விடக்கூடாது!!

அடுத்து குழந்தை என்ன உணர்வுக்கு ஆளாகியிருக்கிறது என்பதை நாம் கண்டுபிடித்திட வேண்டும். அந்த உணர்வுக்கு என்ன பெயர் என்பதை குழந்தைக்குப் புரிய வைத்திட வேண்டும்.

அனைத்து உணர்வுகளும் நியாயமானவையே என்பதை குழந்தைக்கு எளிமையாக உணர்த்திட வேண்டும்.

அவ்வாறு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எவ்வாறு செயல்பட்டால் அது நன்றாக இருக்கும் என்பதையும் உதாரணத்துடன் எடுத்துச் சொல்லிட வேண்டும்.

உதாரணம் ஒன்றுடன் விளக்குவோம் - இன்ஷா அல்லாஹ்!


இவர்களே குழந்தை வளர்ப்பில் கெட்டிக்காரர்கள்!


அது ஒரு ஞாயிறு காலை. அம்மா – இதோ ஒரு திருமணத்துக்குச் செலவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றார். ஐந்து வயது மகளை – கணவனின் சகோதரி வீட்டில் விட்டுச் செல்லலாம் என்பது ஏற்பாடு. 

ஆனால் – மகளுக்கோ அது பிடிக்கவில்லை. “அம்மா! நீ போக வேண்டாம்! என்னோடு இருந்து விளையாடு!” நான் மாமி வீட்டுக்குப் போக மாட்டேன்!”

“அதெல்லாம் நடக்காது; நீ மாமி வீட்டுக்குப் போய்த்தான் ஆக வேண்டும்!”

மகள் திடீரென்று தரையில் புரண்டு அழுகிறாள்.

அந்தத் தாயின் நிலையில் நீங்கள். என்ன செய்வீர்கள்?

முதலில் இந்தத் தாய் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் –தன் மகள் தற்போது ஏதோ ஒரு உணர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறாள் என்பதைத் தான்.

அது என்ன உணர்ச்சி என்று எப்படித் தெரிந்து கொள்வது?

“ஏம்மா! மாமி வீட்டுக்குப் போவது என்றால் தான் உனக்குப் பிடிக்குமே! இன்றைக்கு ஏன் போக மாட்டேன் என்கிறாய்?” – என்று கனிவான குரலில் கேட்கிறார் தாய்.

இதோ மகள்:

“அன்னைக்கி மாமி வீட்டுக்கு நான் போயிருந்தேனா? சமீர் வந்து என்னை என்ன சொன்னான் தெரியுமா? ஒரு சாக்குப் பையில் போட்டு தூரப் போட்டு விடுவேன்னு பயம் காட்டினாம்மா!”

மகளுக்கு ஏற்பட்ட உணர்ச்சி எதுவென்று புரிகிறதா?

பயம்!

“சேச்சே! இதுக்குப் போயா பயப்படுவது! அவன் சும்மா பயம் காட்டியிருப்பான். அப்படியெல்லாம் போட மாட்டான்; பேசாம வா என்னோடு!”

இப்படித்தான் பேசக்கூடாது ஒரு தாய்!

ஏனெனில் தனக்கு ஏற்பட்டிருக்கின்ற பயம் என்ற உணர்ச்சியை தன் தாய் ஏன் ஒத்துக் கொள்ளவில்லை என்பது அவளுக்குப் புரிவதில்லை!

“அப்படியானால் நான் பயப்படுவது என்பதே தப்பா? எனக்கு பயம் வருகிறதே! நான் என்ன செய்ய? என்னிடம் ஏதோ ஒரு குறை இருக்கிறதோ? அதனால் தான் நான் பயப்படுகிறேனா? “ – குழம்பிப் போகிறாள் மகள்.

பின் எப்படித்தான் பேசிட வேண்டும் அந்தத் தாய்?

மகள் பயந்து போயிருக்கிறாள் என்று தெரிந்தவுடன் – திருமணத்துக்குத் தன்னைத் தயாரித்துக் கொள்வதை சற்றே இடை நிறுத்தி விட்டு – மகளுடன் பேசுவதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 

(ரொம்பக் கஷ்டம் இல்லை??)

ஏனெனில் – மகள் இப்போது இருந்து கொண்டிருக்கின்ற சூழல் - தாய்க்கு வல்லோன் அல்லாஹ் தந்திருக்கும் அருமையான ஒரு வாய்ப்பு!

உணர்ச்சிகளை எவ்வாறு கையாள்வது என்பதை தன் மகளுக்குக் கற்றுத் தருகின்ற ஒரு வாய்ப்பு இது என்று எடுத்துக் கொண்டு – மகள் அருகே வந்து அமர்ந்து விட வேண்டும்.

“ஓ! அதுவா விஷயம்! பயம் காட்டி விட்டானா சமீர்! சாக்குப்பையிலே போட்டு தூரப்போட்டு விடுவேன்னு சொன்னா யாருக்குத் தான் பயம் வராது! இதே மாதிரி தாம்மா. நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ – எங்கம்மா பயம் காட்டுவாங்க; எப்படி தெரியுமா?

“ஏய்! தெருவில் இறங்கி விளையாடாதே என்று எத்தனை தடவை சொல்றது? இறங்கினேன்னு வச்சிக்கோ; அவ்வளவு தான்; பிள்ளை பிடிக்கிறவன் வந்து பிடிச்சுட்டுப் போயிடுவான்!”

அப்போதிலிருந்து நான் எப்போ தெருவில் இறங்கி விளையாடப் போனாலும் – எப்படி பயப்படுவேன் தெரியுமா?

இவ்வாறு கனிவுடன் பேசினாலே போதும். உங்கள் மகள் அமைதியாகி விடுவாள். பொறுமையாக பரீட்சித்துப் பாருங்கள்.

அடுத்து அவள் அடம்பிடித்து அழமாட்டாள். மாறாக தன் தாய் தன்னைப் புரிந்து கொண்டதே போதும் அந்த மகளுக்கு. மனம் அமைதி அடைந்து விடுகிறது. தன்னைத்தானே தேற்றிக் கொள்ளத் துவங்கி விடுவாள்.

இந்தக் கட்டத்திற்குப் பிறகே - தாய் சமாதான முயற்சி ஒன்றில் ஈடுபட வேண்டும்.

"ஏம்மா? நான் வேணுமின்னா வந்து மாமி கிட்ட அல்லது சமீர் கிட்ட பேசவா? இப்படியெல்லாம் பயம் காட்டக் கூடாதுன்னு?"

அடுத்து அவளே சொல்வாள்: சரிம்மா! நான் மாமி வீட்டுக்குப் போறேன்; நீ மாமியிடம் வந்து சமீரை அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லச் சொல். நீ கல்யாணத்துக்குப் போயிட்டு வா!”

***

இது போன்று தம் குழந்தைகளின் உணர்ச்சிகளைப் (emotional state) புரிந்து கொண்டு – பொறுமையாக அவர்களுடன் அமர்ந்து – தமக்கு வருகின்ற உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்திட வேண்டும் என்றும் எப்படியெல்லாம் வெளிபடுத்திடக் கூடாது என்றும் கற்றுக் கொடுக்கும் தாய்மார்களே - குழந்தை வளர்ப்பில் கெட்டிக்காரர்கள்! 

தவறு செய்யும் குழந்தைகளைத் திருத்துவது எப்படி?

நம்மில் பல பெற்றோர்கள் - தங்கள் குழந்தைகளிடம் சில கெட்ட பழக்க வழக்கங்கள் வந்து விட்டால் - அவர்களைத் திருத்திடவே முடியாது என்று அழுத்திச் சொல்லி விடுகிறார்கள். ஆனால் அது தவறு!

குழந்தைகளிடம் காணப்படுகின்ற “தவறுகள்” எல்லாம் – அவர்கள் பிறக்கும்போதே அவர்களுடன் ஒட்டிக் கொண்டு பிறப்பதில்லை! தூய்மையாகத் தான் அவர்கள் பிறக்கிறார்கள் என்ற உண்மையை நாம் உணர்ந்திட வேண்டும்.

கொஞ்சம் வளர்ந்ததும் அவர்களிடம் கெட்டப் பழக்கங்கள் வந்திருக்கின்றன என்றால் என்ன பொருள்? யாரிடமிருந்தோ அவர்கள் அதனைக் கற்றிருக்கிறார்கள் என்று தான் பொருள்!

யார் கற்றுக் கொடுத்திருப்பார்கள்?

ஒன்று – பெற்றோர்; அல்லது – அண்ணன் - தம்பியர்; அல்லது – உறவினர்கள்; அல்லது – தாத்தா- பாட்டி; அல்லது – நண்பர்கள்; அல்லது – அண்டை அயலார்; அல்லது – காட்சி ஊடகங்கள் – இவற்றுள் ஏதாவது ஒன்று!

அது போலவே - நமது குழந்தைகளிடம் கெட்டவை தவிர்த்து, நல்ல பழக்கங்கள் என்று ஏதாவது காணப்பட்டால் - அதுவும் அவர்கள் கற்றுக் கொண்டது தான். ஒரு நல்ல பழக்கமும் அவர்களிடத்தில் இல்லை என்றால், என்ன பொருள்?

அவர்கள் பார்த்து கற்றுக் கொள்ள நம்மிடத்தில் எந்த ஒரு நல்ல பழக்கமும் இல்லை என்று தானே பொருள்?

எது எப்படியோ! இப்போது கேள்வி என்னவெனில் - நமது குழந்தைகளிடம் கெட்ட பழக்க வழக்கங்கள் ஏதேனும் காணப்பட்டால் அவைகளைக் களைந்திட முடியுமா என்பதே!

இன்ஷா அல்லாஹ் - முடியும் என்பது தான் முடிவான பதில்!

ஏன் தெரியுமா? இடையில் வந்து சேர்ந்த்தை, இடையிலேயே திருப்பி அனுப்பி விடலாம் தானே!

உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான். (குர்ஆன் 16:78)

குழந்தைகளைத் திட்டாதீர்கள்!

தவறு செய்கின்ற குழந்தைகளைத் திருத்திட பெரும்பாலான பெற்றோர்கள் தேர்ந்தெடுப்பது இரண்டு முறைகளைத் தான்:

ஒன்று: திட்டுவது

இன்னொன்று: அடிப்பது

இந்த இரண்டு முறைகளுமே தவறு!

முதலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் திட்டுவதை எடுத்துக் கொள்வோம்.

எந்த ஒரு தாயாவது தான் பெற்றெடுத்த குழந்தைகயை 'சனியனே!' என்று அழைப்பாளா?

ஆனால் அழைக்கிறார்களே! இதை எங்கே போய்ச் சொல்வது?

'சனியனே! இங்கே வந்து தொலையேன், உன்னை எத்தனை தடவைக் கூப்பிடறது!' என்று திட்டுகின்ற தாய்மார்களை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.

இன்னும் எப்படியெல்லாம் திட்டுகிறோம் தெரியுமா?

'இங்கே வாடா நாயே!'

'உயிரை வாங்காதேடா!'

'நீ ஒன்னுக்கும் லாயக்கில்லைடா!'

'டேய்! சோம்பேறிக் கழுதை!'

பயிலரங்கம் ஒன்றில் கலந்து கொண்டோரிடம் கேட்கப்பட்டது. பெற்றோர்கள் தம் குழந்தைகளை வேறு என்னென்ன சொற்களால் திட்டுகிறார்கள் என்று!

அவர்கள் எழுதித் தந்ததிலிருந்து:

தடிமாடு, குரங்கு, லூஸ், நாய், பேய், பிசாசு, எருமை, கழுதை....

அறிவு இல்லை? திருட்டு நாய்! தொலைஞ்சு போ! .......

**

ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது - ஒரு குழந்தை தனது பதினாறு வயதை அடைவதற்குள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் மொத்தம் 17000 முறை திட்டு வாங்குகிறதாம். என்னவாகும் குழந்தைகள்?

***

குழந்தைகளைத் திட்டுவதால் ஏற்படும் விளைவுகள்!

குழந்தைகளை திட்டுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன தெரியுமா?

1. பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளைத் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருந்தால் - அது பெற்றவர் - குழந்தை நல்லுறவையே பாதிப்படையச் செய்து விடுகிறது! பெற்றவர் நல்லுறவு பாதிப்படைந்து விட்டால் - அந்தக் குழந்தை - "பாதுகாப்பற்ற மனநிலை" ஒன்றுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. The child feels insecure!

2. 'நீ எங்கேடா உருப்படப் போகிறாய்' என்று குழந்தைகளை திட்டுவதால் - அவர்களின் தன்னம்பிக்கையை நாம் அழித்து விடுகிறோம் தெரியுமா? அவர்களுக்குள் பொதிந்திருக்கின்ற ஆற்றல்கள் (hidden talents) அனைத்தும் எப்படி வெளிப்படும் சொல்லுங்கள்? திட்டப்படுகின்ற குழந்தைகள் தங்களின் கருத்துக்களை வெளியே சொல்ல பயப்படுவார்கள்! எந்த ஒரு விஷயத்திற்கும் தாமாகவே நல்லதொரு முடிவை எடுத்திட அவர்கள் அஞ்சுவார்கள்! புதிதாத எந்த ஒன்றையும் சாதித்திட வேண்டும் என்ற ஊக்கம் (initiative) மங்கிப்போய் விடும்! பெற்றவர்கள் அவர்களைத் தட்டிக் கொடுக்க மாட்டார்கள்! மட்டம் தட்டுதல் மட்டும் தவறாமல் நடந்து கொண்டிருக்கும்!

3. திட்டுவதால் - நமது குழந்தைகளின் கண்ணியம் பாதிக்கப்படுகிறது. மற்றவர்கள் முன்பு திட்டப்படும் போது - நமது குழந்தைகள் கூனிக் குறுகி விடுகிறார்கள் (scolding leads to low self esteem). தங்களுக்கு எந்த ஒரு மதிப்புமில்லையே என்று கையறு நிலைக்கு ஆளாகிறார்கள்! திட்டுவது குழந்தைகளின் மனத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களின் சுயமரியாதை பறிக்கப்படுகிறது. ஒரு தடவை திட்டுவதால் ஏற்பட்ட காயத்தை ஆற்றிட பத்து தடவை நாம் 'மருந்து' இட வேண்டுமாம்.

அண்ணல் நபியவர்கள் சொன்னார்கள்: ' உங்கள் குழந்தைகளை கண்ணியப் படுத்துங்கள்!' (நூல்: இப்னு மாஜா)

4, குழந்தைகளை திட்டுவதால் - பெற்றோர் ஒரு அழகற்ற முன்மாதிரியாக ஆகி விடுகிறார்கள். இதன் மூலம் - நமது குழந்தைகள் மற்றவர்களை திட்டுவதற்கு நாமே வழி வகுத்துத் தந்து விடுகிறோம்! திட்டுதல் என்கின்ற கெட்ட பழக்கம் ஒரு தொற்று நோய் போல!

5. திட்டுவது குழந்தைகளின் கோப உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது. தங்கள் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்; அவர்கள் வாய் திறக்க மாட்டார்கள். அடக்கி வைக்கப்படுகின்ற அந்தக் கோபம் அவர்கள் எதிர்காலத்தில் வன்முறை மிக்கவர்களாக மாறுவதற்கு வழி வகுக்கிறது.

6. நமது குழந்தைகள் தங்களின் தவறுகளை ஒப்புக் கொள்ள பயப்படுவார்கள். பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயம் - அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டி விடுகிறது. நாம் ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்திருப்போம். நமது செல்வம் அதனை எக்குத் தப்பாக செய்து விட்டு வந்திருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் கொடுத்திருப்போம். ஒன்று தொலைத்து விட்டு வந்திருப்பான். அல்லது அதனை உடைத்து விட்டு வந்திருப்பான். 'நீ ஒன்னுக்கும் லாயக்கில்லைடா' என்று வசை பாடி விடுவோம். பத்தொன்பது வயது பையன் ஒருவன். அப்பா ஒரு கைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். ஒரே வாரத்தில் அதனைத் தொலைத்து விட்டான். தந்தை திட்டுவார் என்று பயந்து மகன் தற்கொலை என்று செய்தி வருகிறது.

***
இறை வாக்கு ஒன்றை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

'மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்!' (குர் ஆன் 2 : 83)

அழகானதைப் பேசுங்கள் என்ற இந்த இறைக் கட்டளைக்கு முன்னும் பின்னும் அல்லாஹ் வேறு என்னென்ன கட்டளைகளை விதித்திருக்கிறான் என்று பாருங்கள்:

- அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது.

- பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்.

- உறவினர்க்கும் நன்மை செய்யுங்கள்.

- அநாதைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.

- ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.

- மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்.

- தொழுகையை நிலை நிறுத்துங்கள்.

- ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள்.

எப்படிப்பட்ட உயர்ந்த வணக்க வழிபாடுகளுடன் மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள் என்ற கட்டளையையும் இணைத்துச் சொல்கிறான் அல்லாஹ் என்று ஒரு கணம் சிந்தியுங்கள்.

வல்லோன் அல்லாஹ் பனி இஸ்ரவேலர்களிடம் வாங்கிய உறுதிமொழிகள் தான் மேற்கண்ட இறைக் கட்டனைகள் அனைத்தும்.

அல்லாஹ்விடம் உறுதி மொழி செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்! சிந்தியுங்கள்.


குழந்தைகளை அடிக்காதீர்கள்!

பல பெற்றோர்கள் குழந்தைகளை அடித்துத் திருத்துவதையே மிகச் சரியான வழிமுறை என்று வாதிடுகின்றார்கள்.

தூரத்து உறவினர் பெண்மணி ஒருவர் தம் மகளுடன் எம் இல்லத்துக்கு வந்திருந்தார். குழந்தைகளை அடித்துத் திருத்துவது பற்றி பேச்சு வந்தது.

அந்தப் பெண்மணியின் பத்து வயது மகள், “மாமா, அம்மா எதற்கெடுத்தாலும் என்னை தலையில் “ணங்…ணங்” என்று குட்டுகிறார்!” - என்று என்னிடம் முறையிட்டாள்.

அந்தப் பெண்மணி குறுக்கிட்டு, “அண்ணே! எங்க அம்மா எங்களை அப்படித்தான் குட்டிக் குட்டி வளர்த்தார்; அதனால் தான் நாங்கள் இப்போது நன்றாக இருக்கிறோம்;

அது போல என் மகளை நான் குட்டி குட்டித்தான் வளர்ப்பேன்; எல்லாம் அவள் நன்றாக வர வேண்டும் என்பதற்காகத் தான்!” என்றார்.

அடிப்பதை நியாயப்படுத்திட அவர்கள் சொல்கின்ற 'பொன்மொழிகளைப்' பாருங்கள்:

- கோள் எடுத்தால் குரங்கும் ஆடும்!

- அடியாத மாடு படியாது!

- அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்!

- அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்!

குழந்தைகளை அடித்தால் நம் சொல்லுக்கு அவர்கள் உடனே கட்டுப்பட்டு விடுகிறார்கள் என்பது உண்மைதான்!

ஆனால் அது பய உணர்ச்சியினால் உந்தப்பட்டு! அதுவும் தற்காலிகமாக! அதுவும் நமது முன்னிலையில் மட்டும்!

ஆனால் குழந்தைகளை அடிப்பதனால் ஏற்படுகின்ற பாரதூரமான விளைவுகள் என்னென்ன?

சிறிய குழந்தைகள் தொடர்ந்த பய உணர்ச்சிக்கு ஆட்பட்டு விடுகிறார்கள்.

சற்றே வயது வந்த குழந்தைகளை அடித்தால் - அது கோபம், வெறுப்பு போன்ற உணர்ச்சிகளைத் தூண்டி விடும்! கட்டுப் பட மாட்டார்கள். எதிர்த்துப் பேசுவார்கள். விலகிப் போய் விடுவார்கள். மறைவாக செயல் படத் தொடங்கி விடுவார்கள்.

குழந்தைகள் வன்முறையாளர்களாக மாறுவது, அவர்களிடம் தற்கொலை எண்ணம் தலை தூக்குவது, அவர்கள் வீட்டை விட்டு ஓட நினைப்பது எல்லாமே - குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் பெற்றோர்களால் தான்.

அடித்தால் தான் காரியம் கைகூடும் என்பதைப் பெற்றவர்களிடமிருந்தே அவர்கள் கற்றுக் கொண்டு விடுவார்கள்.

'அப்பா, அண்ணன் என்னை அடிக்கிறான், பாருங்களேன்.' - என்று ஓடி வருகிறான் தம்பி.

- 'அவன் தான்ப்பா முதலில் என்னை அடித்தான்.' - இது அண்ணன்.

- 'டேய்! யாரடா முதலில் அடித்தது? - இது தந்தை.

- தம்பி தயங்கியபடியே - அவன் ஏன்ப்பா என்னைத் திட்டினான். அதனால் தான் அவனை அடித்தேன்!'

- 'திட்டினால் என்னிடம் வந்து சொல்ல வேண்டியது தானே? அதற்காக ஏன் அண்ணனை அடித்தாய்?' - என்று அதட்டிய படியே தந்தை தம்பியை ஒரு தட்டு தட்டுகிறார். கூடவே அதனை சரி கட்டுவதற்கு அண்ணனையும் ஒரு போடு போடுகிறார்!

- 'இனி மேல் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளக் கூடாது! புரிகிறதா?' என்று அனுப்பி வைக்கிறார்.

இங்கே அந்த இரு சிறுவர்களும் தங்கள் தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டதென்ன? இனி நாம் யாரையும் அடித்திடக் கூடாது - என்றா அவர்கள் கற்றுக் கொண்டார்கள்? இல்லை!

மாறாக - அடிப்பது தவறு என்றால் அப்பா நம்மை ஏன் அடித்திட வேண்டும்? அடிக்காமலேயே சொல்ல வேண்டியது தானே! ஆக தந்தை நம்மிடம் 'அடிக்கக் கூடாது' என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குத் தான். அவருக்குத் தேவைப்படும் போது அவர் அடிக்கலாம் என்றால் நமக்குத் தேவைப்படும் போது நாமும் அடிக்கலாம் தானே - இதுவே அவர்கள் கற்றுக் கொள்கின்ற பாடம்!

***

குழந்தைகளை அடிப்பதற்குத் தான் மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதே என்கிறீர்களா? ஆம்!

'உங்கள் குழந்தை ஏழு வயதை எட்டி விடும் போது தொழுகையை நிறைவேற்றும்படி அவர்களை ஏவுங்கள். அவர்கள் பத்து வயதை எட்டி விடும் போது தொழுகையைத் தவற விட்டால் அவர்களை அடியுங்கள்.' (முஸ்லிம்)

ஆனால் அடிப்பது என்பது ஃபர்ளோ வாஜிபோ கிடையாது! தவிர்க்க முடியாத ஒரு சில சூழ்நிலைகளில் மட்டும் அடிப்பதை பயன் படுத்திக் கொள்ள 'அனுமதி' உள்ளது. அவ்வளவு தான்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளை அடித்திருக்கிறார்களா என்ன?

ஒரு முறை ஒரு வேலைக்காரச் சிறுமியை ஒரு பொருள் வாங்கி வருமாறு கடைக்கு அனுப்புகிறார்கள் அண்ணல் நபியவர்கள். சிறுமியோ தெருவில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று விடுகிறாள்.

நீண்ட நேரம் காத்திருந்து, காத்திருந்து, பொறுமையிழந்து, சிறுமியைத் தேடி கடை வீதிக்குப் போகிறார்கள் அண்ணலார். அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி அண்ணலார் என்ன சொன்னார்கள் தெரியுமா?

'மறுமையில் பதில் அளிக்க வேண்டும் என்கிற பொறுப்பு மட்டும் இல்லாமலிருந்தால் உன்னை இந்த மிஸ்வாக் குச்சியால் அடித்திருப்பேன்!'

எடை குறைவான, மிருதுவான விழுது தான் மிஸ்வாக்.

***

குழந்தைகளை அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள் என்று நாம் அழுத்திச் சொல்வது ஏன் தெரியுமா? குழந்தைகளைப் பிரம்பினால் அடிப்பது, கன்னத்தில் அறைவது, தலையில் குட்டுவது போன்ற 'தண்டனைகள்' குழந்தைகளின் உடலளவிலும் மனத்தளவிலும் ஏற்படுத்துகின்ற விளைவுகள் பாரதூரமானவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இத்தனைக்குப் பிறகும் “மென்மையான” முறைகள் எல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்று சொல்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் யார் தெரியுமா?

குழந்தைகளை செல்லம் கொடுத்துக் கெடுத்தவர்கள்!

தாமே முன் மாதிரியாக நடக்கத் தவறியவர்கள்!

இவர்கள் தாம்.

நீங்கள் அப்படி இல்லையே?

**

அடிப்பது கூடாது என்றால் குழந்தைகளை எவ்வாறு கட்டுப் படுத்துவது என்று கேட்கிறீர்களா?

ப்ளீஸ் வெயிட்!

என்னவாயிற்று சமீமாவுக்கு?

சமீமா ஒரு சிறுமி. வயது எட்டு. நான்காம் வகுப்பு படிக்கிறாள். மிக நன்றாகப் படித்துக் கொண்டிருந்த சமீமாவிடம் சில மாற்றங்கள். முன்பு போல் இப்போது நன்றாக படிப்பதில்லையாம். பல பாடங்களில் ஃபெயில் மார்க் வாங்குகிறாளாம்.

பள்ளிக்கூடத்திலிருந்து பெற்றோருக்கு அழைப்பு. முன்பு போல் அவள் இல்லை; படிப்பில் கவனம் இல்லை; போதாததற்கு இப்போதெல்லாம் மற்ற சிறுமிகளை அடித்து விடுகிறாளாம். அடிக்கடி இது நடக்கிறதாம் என பெற்றோரிடம் தெரிவிக்கப்படுகிறது.

என்னவாயிற்று சமீமாவுக்கு?

கவுன்ஸலரிடம் செல்கிறார்கள் பெற்றோர்கள்!

**
அது ஒரு கூட்டுக் குடும்பம். கணவன் (சலீம்), மனைவி, கணவனின் தாய், கணவனின் சகோதரி (ரஹீமா) எல்லாரும் ஒரே வீட்டில். சகோதரி விவாக விலக்கு பெற்று அண்ணன் வீட்டில் தாயுடன் சேர்ந்து வசிக்கிறார்.

சகோதரி ரஹீமாவுக்கு ஒரு மகன். சலீமுக்கு ஒரே மகள். இந்த இரண்டு குழந்தைகளும் சேர்ந்து விளையாடுவார்கள். ஆனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்து விடும்.

பெரும்பாலும் வம்புக்கு இழுப்பவன் சகோதரி மகன் தான். டக்கென்று அடித்து விடுவான் அவன். பாட்டி எழுந்து வருவார். பேரனைக் கட்டிப்பிடித்துக் கொள்வார். பேத்தியைக் கண்டிப்பார்: “அவன் சின்னப் பிள்ளை தானே! அவன் அடித்தால், அவனைத் திருப்பியா அடிப்பது?”

“ஏன் புள்ள! என்ன புள்ள வளர்க்கிற? கண்டிச்சு வைக்கிறதில்ல?” என்று மருமகளுக்கும் ஒரு டோஸ் கொடுப்பார் அவர்.

மருமகள் தன் மகளை அழைத்து விசாரிப்பார். “என் மேல எந்தத் தப்பும் இல்லைம்மா! எப்ப பாத்தாலும் அவன் தான் என்னை வம்புக்கு இழுத்து அடித்து விடுகிறான் அம்மா!” என்பாள் மகள்.

தாய்க்குப் புரிகிறது. ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. “அவன் உன்னை அடித்தால் நீ திருப்பி அவனை அடிக்காதே!” என்று மட்டும் சொல்கிறார் மகளிடம்.

“என்னைக் கண்டிக்கிறீர்களே! அவனை ஏன் கண்டிக்க மாட்டேன் என்கிறீர்கள்?” என்று கேட்கிறாள் மகள்.

ஆனாலும் அவர்கள் இருவருக்கும் சண்டை அடிக்கடி தொடரும். மகள் வயிற்றுப் பிள்ளை மேல் பாசம் கொண்ட பாட்டி – மருமகளைத் தொடர்ந்து திட்ட – வேறு எந்த ஒன்றையும் செய்ய முடியாத மருமகள் – தன் மகளைப் போட்டு அடிக்கத் தொடங்குகிறார். அதுவே ஒரு தொடர்கதையாகப் போய் விடுகிறது!

விளைவு?

கட்டுரையின் ஆரம்ப வரிகளை மீண்டும் படியுங்கள்.

சமீமா வேறு யாருமில்லை! சலீமின் மகள் தான் அவள்!!

**
சமீமாவுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்ததற்கும், அவள் மற்ற சிறுமிகளை அடிக்கத் தொடங்கியிருப்பதற்கும் காரணம் இப்போது புரிகிறதா?

**
நீங்கள் உங்கள் குழந்தைகளை அடித்துத் “திருத்துபவர்களாக” இருந்தால் – அது குறித்து சற்று கவலையுடன் சிந்தியுங்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்.


குழந்தைகளைத் திருத்திட ஏழு அடிப்படைகள்!

1. எல்லாக் கெட்டப் பழக்கங்களும் - இடையில் வந்தவை தான். கற்றுக் கொள்ளப்பட்ட கெட்டப் பழக்க வழக்கங்களில் இருந்து குழந்தைகளை நிச்சயமாக காப்பாற்றிட முடியும் என்ற நம்பிக்கை அவசியம்.

2. குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்; எல்லாம் தானாகவே சரியாகப் போய்விடும் என்பது முற்றிலும் தவறு.

3. குழந்தைகளைத் திருத்துவதில் பெற்றோருக்கு தொடர்படியான உறுதி தேவை. அரைகுறை முயற்சி பலன் தராது. ஒரே நாளில் எல்லாம் மாறி விடாது. பொறுமை தேவை. தொடர்ந்த பயிற்சி அவசியம்.

4. ஒன்றைச் செய்யாதே என்று சொல்லும் போது, அதற்கு பதிலாக இதனைச் செய் என்று நல்ல ஒன்றின் பக்கம் குழந்தைகளின் கவனத்தைத் திருப்பிட வேண்டும்.

5. பெற்றவர்கள் முன்மாதிரி அவசியம். நமது "சொற்கள்" பயன் அளிக்காது; நமது "செயல்களே" பயன் தரும்.

6. நல்லதொரு பழக்கத்துக்கு குழந்தைகள் மாறிடும்போது அவர்களைப் பாராட்டிட வேண்டும். அவர்களை ஊக்கப் படுத்துதலும் அவசியம்.

7. எந்த வயதிலும் திருத்திட முடியும். இனி மேல் எங்கே திருந்தப் போகிறார்கள் என்று விட்டு விடத் தேவையில்லை!மூன்று வகையான குடும்பங்கள்!

முதல் வகை:

மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட குடும்பங்கள்! very strict and very harsh! கடுகடுப்பான முகங்கள்; நகைச்சுவை உணர்வு அற்ற மனிதர்கள்; எதையோ பரிகொடுத்தது போல் - எல்லாரும் முகத்தைத் தூக்கி வைத்திருக்கும் சூழல்; பய உணர்ச்சியுடன் சுற்றி வரும் குழந்தைகள்; ஒரே வரியில் சொல்வதானால் - அது குழந்தைகளுக்கு ஒரு சிறைச்சாலை!

தந்தை வீட்டில் இல்லாத போது சற்றே மகிழ்ச்சி! ஆனால் தந்தை வீட்டுக்கு வந்து விட்டாலோ அங்கே மயான அமைதி; குழந்தைகள் என்ன செய்வார்கள்? ஒன்று வெளியே ஓடி விடுவார்கள்; அல்லது வீட்டில் எங்காவது ஒளிந்து கொள்வார்கள்.

எப்போதும் அதிகாரம் செலுத்தும் தந்தை. குரலில் கூட கொடூரம். இதில் முரண்பாடு என்னவென்றால் - இந்தத் தந்தை தான் வீட்டுக்கு வெளியே மார்க்கப்பற்றுள்ளவர் என்று அறியப்படுபவர்! "அல்லாஹ் நரகத்தில் போட்டு விடுவான்" என்று அடிக்கடி குழந்தைகளை பயமுறுத்துபவர் இவர். குழந்தைகள் இங்கே "வளர்வதில்லை" என்பது தான் கவலை அளிக்கக்கூடிய விஷயம்!

**

இரண்டாவது வகை:

இதற்கு நேர் எதிரான வகையைச் சேர்ந்த குடும்பங்கள்! அதாவது - கட்டுப்பாடுகள் என்பது அறவே இல்லாத குடும்பங்கள். இதனை ஆங்கிலத்தில் disorganized family என்கிறார்கள்.

இரண்டு சான்றுகளைச் சொன்னால் போதும்.

ஒன்று: இரவில் மிகத்தாமதமாகவே இவர்கள் தூங்கச் செல்வார்கள்; காலையில் எட்டு மணி வரை கூட தூங்கிக் கொண்டிருப்பார்கள்; உணவு உண்ணும் நேரம் கூட - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம் தான் இங்கே!

இரண்டு: ஒரு பொருளை எங்கேயாவது வைத்து விட்டு தேடுவார்கள், பாருங்கள்! அப்படி ஒரு தேடல்! "இங்கே தானே வைத்தேன்! நீ பார்த்தாயா?" -என்று ஒவ்வொரு பொருளையும் தேடி எடுப்பதிலேயே நேரம் ஓடிக் கொண்டிருக்கும் இந்த இல்லங்களில்!

குழந்தைகளிடம் "பாக்கெட் மணி" பொங்கி வழியும். அவர்கள் எங்கே போகிறார்கள்; யாருடன் சேர்கிறார்கள்; என்ன செய்கிறார்கள் - என்பது பற்றியெல்லாம் பெற்றவர்கள் கவலைப்படுவதே இல்லை! இந்தப் பெற்றவர்களுக்கு - குழந்தைகளுடன் செலவழிக்க என்று நேரமே இருப்பதில்லை!

**

மூன்றாவது வகை:

இந்த வகைக் குடும்பங்கள் - நெகிழ்ச்சியான கட்டுப்பாடுகளுடன் மகிழ்ச்சியாக வாழும் குடும்பங்கள். ஆங்கிலத்தில் organized family - என்று அழைக்கிறார்கள்.

இங்கே தந்தையும் தாயும் குழந்தை வளர்ப்பு பற்றி அறிந்திருப்பார்கள்; ஒன்று - அவர்கள் தங்களின் பெற்றோர்களிடமிருந்து அனுபவமாகப் படித்துக் கொண்டிருப்பார்கள்; அல்லது மார்க்கக்கல்வி அவர்களுக்கு அதனைக் கற்றுக் கொடுத்திருக்கும்.

இந்தக் குடும்பங்களில் - இன்ன பொருள் இன்ன இடத்தில் தான்! இன்ன இன்ன நேரத்தில் இன்ன இன்ன விஷயங்கள் தான்!

வீட்டுச் சாவியா? அது இன்ன இடத்தில் தான்! நோட்டுப் புத்தகங்களா? அது அந்த அலமாரியின் மேல் தட்டில் தான்! உப்பு, புளி உட்பட அது அது அந்தந்த இடங்களில் அழகாக அமர்ந்து அலங்கரித்துக் கொண்டிருக்கும்!
பயன்படாத பொருள்களை அவர்கள் அப்புறப்படுத்தி விடுவார்கள்; அளவுக்கு அதிகமாக ஒவ்வொன்றையும் வாங்கிக் குவித்து வைத்திருக்க மாட்டார்கள். வீடு மிக சுத்தமாக இருக்கும் - கழிவறைகள் உட்பட.

அடுத்து - எந்தெந்த நேரத்தில் எது எதுவோ அவை அனைத்தும் தவறாமல் நடந்து கொண்டிருக்கும். அதே நேரத்தில் நெகிழ்ச்சியுடன் நடந்து கொள்வார்கள் பெற்றோர்கள்.

வீட்டுப்பாடம் எழுத வேண்டிய நேரம் அது; எதிர்வீட்டுக் குழந்தைகள் விளையாட அழைக்கின்றார்கள்; "அம்மா! நான் விளையாடப் போகிறேன், அம்மா!" என்பான் மகன். "ஓக்கே! இஷாவுக்கு பாங்கு சொன்னதும் வீட்டுக்கு வந்து விட வேண்டும்; காலையில் ஃபஜ்ர் தொழுததும் வீட்டுப்பாடம் எழுதி விட வேண்டும், சரியா?" என்பார் தாய். மறு நாள் காலை அந்தச் சிறுவன் - தொழுது விட்டு, வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருக்கும் அழகைப் பார்த்து, பூரித்துப் போய் விடுவார் தாய்! பள்ளிக்கூடம் அனுப்பு முன், அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அனுப்பி வைப்பாள் அந்தத் தாய்!

**

இந்த மூன்று வகை குடும்பங்களில் எந்த வகை குடும்பங்களில் குழந்தைகள் மிக நன்றாக வளர்கிறார்கள்?

மூன்றாவது வகைக் குடும்பங்களில் தான் என்று நீங்களே சொல்லி விடுவீர்கள்!

அதாவது கட்டுப்பாடுகளும் வேண்டும்; அந்தக் கட்டுப்பாடுகளுடன் நெகிழ்ச்சியும் கை கோர்த்துச் சென்றிட வேண்டும்.

இப்படிப்பட்ட குடும்பங்கள் எங்கே இருக்கிறது என்கிறீர்களா?

அது உங்கள் குடும்பம் தான்! அதுவும் இன்றிலிருந்தே!


எப்படித் திருத்துவது குழந்தைகளை?

பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் – குழந்தைகளையும் மாணவர்களையும் திட்டாதீர்கள், அடிக்காதீர்கள் என்று சொன்னால் – பின்பு எப்படித் தான் அவர்களைத் திருத்துவது என்று கேட்கிறார்கள்.

குழந்தைகளை திட்டுவதனாலும் அடிப்பதனாலும் ஏற்படுகின்ற பாரதூரமான விளைவுகளைப் பற்றி நாம் முன்னரே விளக்கியுள்ளோம்.

இப்போது நமது அறிவுரைகளை மீறுகின்ற குழந்தைகளை எப்படி அடிக்காமலும் திட்டாமலும் திருத்துவது என்பதைப் பார்ப்போம்.

குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்களே. எல்லாக் குழந்தைகளும் ஒன்று போலவே இருக்க மாட்டார்கள், ஒன்று போலவே செயல் பட மாட்டார்கள்.

எனினும் பெரும்பாலான குழந்தைகள் பெரியவர்களின் அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாகவே தான் இருப்பார்கள். ஒரு ஆய்வின் படி சுமார் 85% குழந்தைகள் இப்படிப்பட்டவர்கள் தானாம். இவர்களை COMPLIANT CHILDREN என்று அழைக்கிறார்கள்,

ஆனால் மீதி சுமார் 15% குழந்தைகள் தான் எந்த அறிவுறுத்தல்களுக்கும் அப்படியே கட்டுப் படுவதில்லையாம். இவர்களை DEVIANT CHILDREN என்று அழைக்கிறார்கள்,

பள்ளிக் கூடங்களில் ஏற்படுகின்ற பெரும்பாலான பிரச்னைகள் இத்தகைய குழந்தைகளால் தான் ஏற்படுகின்றனவாம்.

இத்தகையவர்கள் பெற்றோர்களின் எந்த அறிவுறுத்தல்களுக்கும் கட்டுப் பட மாட்டார்கள். கட்டுப்பாடுகளை மீறுவார்கள். பெற்றோர்களுக்கு பெரும் சோதனையாக விளங்குவார்கள்.

"எங்களுக்கு ஏன் தான் இப்படி ஒரு பிள்ளை வந்து பிறந்துள்ளதோ?" - என்று கூட பெற்றவர்கள் அங்கலாய்ப்பது உண்டு.

ஒன்றைச் செய்யாதே என்றால் அதனைச் செய்தே காட்டுவார்கள். ஒன்றைச் செய் என்றால் செய்யவே மாட்டார்கள்.

“வீட்டுக்குள் சிறிய குழந்தைகள் இருக்கின்றனர். பந்து விளையாடுவதாக இருந்தால் வெளியே போய் விளையாடுங்கள்" - என்பார் தாய். ஆனால் தாய் கொஞ்சம் அங்கே இங்கே போயிருக்கும் நேரம் பார்த்து வீட்டுக்குள்ளேயே விளையாடத் தொடங்கி விடுவார்கள். கேட்டால் - "நாங்கள் குழந்தைகள் மீது படாமல் விளையாடுவோம்!" - என்று சமாளிப்பார்கள். பொறுமை இழப்பார் தாய்! இத்தகைய குழந்தைகளை STRONG WILLED CHILDREN என்றும் அழைக்கிறார்கள்.

இப்படிப்பட்ட குழந்தைகளைத் திருத்துவது எப்படி?

அடுத்து வரக்கூடிய கருத்துக்களை சற்று நிதானமாக படித்துப் பாருங்கள்.

பொதுவாக குழந்தைகளைத் திருத்துவதில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் செய்கின்ற தவறு ஒன்று இருக்கின்றது. அதாவது குழந்தைகள் என்ன செய்திட வேண்டும், என்னவெல்லாம் செய்திடக் கூடாது என்பதனை “வாய் மொழி” வழியே அறிவுறுத்துவது மட்டுமே போதும் என்று எண்ணுகிறார்கள். இதனை ஆங்கிலத்தில் VERBAL STEP என்று அழைக்கிறார்கள். ஆனால் இந்த வாய்மொழி அறிவுறுத்தல் மட்டுமே இப்படிப்பட்ட குழந்தைகளுக்குப் போதாது.

இன்னொரு படி நாம் மேலே செல்ல வேண்டும். அதற்குப் பெயர் தான் – “செயல் வழி அறிவுறுத்தல்”. அதாவது – ACTION STEP!

அது என்ன – செயல் வழி அறிவுறுத்தல் – என்கிறீர்களா?

மேலே சொல்லப் பட்ட அதே உதாரணத்துடன் விளக்குவோம்:

தாய் சொல்கிறார்; “வீட்டுக்குள்ளே பந்து விளையாடக் கூடாது. கைக்குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது.”

ஆனால் குழந்தையின் அண்ணன்மார்கள் இரண்டு பேரும் வீட்டுக்குள்ளேயே பந்தை எடுத்து விளையாடத் தொடங்கி விடுகிறார்கள்.

தாய் இதனை கவனித்து விடுகிறார். “என்ன? நான் முன்பே சொல்லியிருக்கின்றேனே, வீட்டுக்குள் பந்து விளையாடக் கூடாது என்று; வெளியே போய் விளையாடுங்கள்; அடுத்த தடவை நீங்கள் உள்ளே பந்து விளையாடுவதைப் பார்த்தால் பந்தை எடுத்து உள்ளே வைத்து விடுவேன், சரிதானே?” என்று சொல்லி விட்டு நகர்கிறார். இது தான் வாய் மொழி அறிவுறுத்தல்.

ஆனால் அந்த பெரிய குழந்தைகள் இருவரும் மீண்டும் பந்தைப் போட்டு வீட்டுக்குள்ளேயே விளையாட்டைத் தொடர்கிறார்கள். சற்று நேரத்தில் தாய் அங்கு வந்து சேர்கிறார்.

உடனே அவர்கள் அருகில் சென்று அந்த பந்தை அவர்களிடமிருந்து பறித்துக் கொண்டு – இன்று உங்களுக்கு பந்து விளையாட்டு அவ்வளவு தான்; சொன்ன பேச்சைக் கேட்பீர்கள் என்றால் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று உறுதியாகச் சொல்லி விட்டு பந்தை பத்திரமாக எடுத்து அலமாரியில் வைத்து மறக்காமல் பூட்டி சாவியை எடுத்துச் சென்று விடுகிறார். .

இது தான் செயல் வழி அறிவுறுத்தல்.

அதாவது தான் செய்த தவறுக்கான விளைவை இப்போது அவர்கள் அனுபவிக்கின்றார்கள். அவ்வளவு தான்!

இது போன்று ஒவ்வொரு தடவையும் குழந்தைகள் கட்டுப் பாடுகளை மீறி நடக்கும் போதும் இதே வழி முறையைப் பின்பற்றினால் வீட்டுக்குள் கட்டுப்பாடு தானே வரும்.

தவறுகள் செய்கின்ற மனிதர்களைத் திருத்துவதற்கு இறைவன் கடை பிடிக்கும் நியதியும் இதுவே தான்!

பின் வரும் இறை வசனத்தை சற்று ஆழமாக நோக்குங்கள்:

மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட தீய செயல்களின் காரணத்தால் கடலிலும் தரையிலும் நாசமும் குழப்பமும் தோன்றின; தீமைகளிலிருந்து அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே தீவினைகள் அவற்றில் சிலவற்றை அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (குர்ஆன் 30: 41)

சிந்தனைக்குரிய வசனம் தானே இது!

ஆய்வுகள் தெரிவிப்பது என்னவென்றால் இது போன்று குழந்தைகள் செய்கின்ற சிறு சிறு தவறுகளுக்கெல்லாம் இவ்வாறு “விளைவுகளை அனுபவிக்க வைத்திடும்” பயிற்சியைத் தொடர்ந்து வழங்கிடும் போது விளைவுகளைக் குறித்து அஞ்சி தவறுகளிலிருந்து பின் வாங்கிடும் மன நிலை ஒன்று – அவர்களின் மூளை நரம்புகளின் நுணுக்கமான பிணைப்புகளில் ஆழமாகப் பதிவு செய்யப் படுகிறது,

பின்பு தவறு ஒன்றைச் செய்ய நினைக்கும்போது மூளை அவனுக்கு அதன் விளைவு குறித்து எச்சரிக்கத் துவங்கி விடும். பின்னர் தானாகவே இப்படிப்பட்ட குழந்தைகள் கட்டுப்பாடுகளைக் கடை பிடிப்பவர்களாக மாறி விடுவார்கள்.

இதுவே இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வழங்குகின்ற மிகப்பெரிய நன்கொடை - GIFT - ஆகும் என்றால் அது மிகையாகாது!

பெற்றோர்களே! தவறு செய்கின்ற குழந்தைகளிடம் நமது அணுகுமுறையை மாற்றிக் கொள்வோமா?

ஒரே நாளில் மாற்றம் வந்து விடாது என்பதை மட்டும் மீண்டும் நினைவில் கொள்ளுங்கள்!

குழந்தைகளுக்காக, ப்ளீஸ்!

கணவன் மனைவியர் கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்!

ஆனால் அந்த கருத்து வேறுபாடுகளை முன்னிருத்தி குழந்தைகளுக்கு முன்பாகவே, கணவனும் மனைவியும் "சண்டை" போட்டுக் கொள்ளாதீர்கள் என்பதற்காகவே இந்தப் பதிவு.


இவ்வாறு குழந்தைகளுக்கு முன்பாகவே "மோதிக் கொள்ளும்" பெற்றோர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

ஒன்று:

கணவனும் சண்டை போடுவார்; மனைவியும் சண்டை போடுவார்; கடினமான சொற்களால் ஒருவரை ஒருவர் (HARSH CRITICISM) திட்டிக் கொள்வார்கள்; ஒருவரை ஒருவர் அவமானப்படுத்திக் கொள்வர்(CONTEMPT); ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்வார்கள் (BLAMING); தன் மீது தப்பே கிடையாது (DEFENSIVE) என்று வாதாடுவார்கள்; இருவரும் குரலை உயர்த்துவார்கள்; குழந்தைகள் அருகில் இருப்பதெல்லாம் அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை! இந்த சண்டையில் யாரும் சளைத்தவர்கள் கிடையாது! விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இங்கே இடமில்லை!

இரண்டு:

இங்கேயும் கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொள்வார்கள்; திட்டிக் கொள்வார்கள்; குற்றம் சுமத்திக் கொள்வார்கள்; தன் மீது தப்பே இல்லை என்று வாதாடியும் கொள்வார்கள்; ஆனால் - ஒரு கட்டத்தில் - கணவனோ அல்லது மனைவியோ - "இவரோடு" சண்டை போடுவதில் எந்தவிதமான பயனும் இல்லை என்று முடிவு கட்டிக் கொண்டு - ஒதுங்கி விடுவார்கள்; இதற்குப் பெயர் தான் STONE WALLING! இவ்வாறு ஒதுங்கி விடுபவர்கள் பெரும்பாலும் கணவன்மார்கள் தானாம்!

பெற்றவர்கள் இருவரும் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் சரி, அல்லது இருவரில் ஒருவர் மட்டும் ஒதுங்கிச் சென்று கொண்டிருந்தாலும் சரி, இதனால் குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் நிதரிசனமான உண்மை!

எப்படி பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா?

விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொள்கின்ற பெற்றோர்களின் குழந்தைகள் - பிறருடன் சண்டை போடக்கூடியவர்களாக உருவாகிறார்களாம்!

எந்த வயதில் தெரியுமா? எட்டு வயதிலிருந்தே! இந்தக் குழந்தைகள் தான் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் உடைத்துக் காட்டுவார்களாம்! They only - break the rules! சட்டென்று கோபப்பட்டு மற்றக் குழந்தைகளை அடித்து விடுபவர்கள் இவர்கள் தாம்!

பெற்றவர்களில் இருவரில் ஒருவர் (குறிப்பாக தந்தை) ஒதுங்கி விடும் நிலை தொடர்கின்ற குடும்பத்தில் வளர்கின்ற குழந்தைகள் - ஆழ்ந்த சோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக மாறுகிறார்கள். They become highly depressed!

இந்தக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள்; நண்பர்கள் என்று இவர்களுக்கு யாரும் இருக்க மாட்டார்கள்!

எனவே பெற்றோர்களை நாம் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான்:

குழந்தைகளுக்காக, ப்ளீஸ்!

எதற்கெடுத்தாலும் அவசரப்படுகிறார்களா குழந்தைகள்?


ஏதாவது ஒன்றை அடைந்திட வேண்டும் என்று மனம் விரும்புகிறது! அந்த ஒன்றை உடனேயே அடைந்திடத் துடிக்கும் தன்மைக்குப் பெயர் தான் மனத் தூண்டல்!

மனத்தூண்டலை ஆங்கிலத்தில் Impulse என்றும் அதனைக் கட்டுப் படுத்துவதை Impulse control என்றும் அழைக்கிறார்கள். பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றை செய்து விடுவதைத் தான் ஆங்கிலத்தில் Impulsiveness என்று குறிப்பிடுகின்றார்கள்.

குழந்தைகள் இயல்பிலேயே இப்படிப்பட்ட மனத்தூண்டலுக்கு ஆளாகக்கூடியவர்கள் தான்! இந்த அவசரப்படும் தன்மை – குழந்தைக்குக் குழந்தை வேறுபடும்! பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அவசரப்படும் தன்மை எத்தகையது என்பதைத் தெரிந்து கொள்தல் நல்லது.

மனத்தூண்டலுக்கு ஆளாகி அவசரப்பட்டு ஒன்றை உடனேயே அடைந்திடத் துடிக்கின்ற தன்மை – உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல! இத்தன்மை கட்டுப்படுத்தப் பட்டாக வேண்டும். ஏனெனில் மனதூண்டலின் படி செயல் படும் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை சுத்தமாக இருக்காது. தான் எதற்கும் இலாயக்கில்லை என்ற தாழ்வு மனப்பான்மை தவறாது குடி கொண்டிருக்கும். எனவே மற்றவர் மீது இத்தகைய குழந்தைகள் பொறாமைப்படுவார்கள். இத்தகையவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிக மிகக் கடினம்!

மனக்கட்டுப்பாடு இல்லாத குழந்தைகள் – கல்வியிலும் பின் தங்கி நிற்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் – இவர்கள் வளர்ந்து ஆளானதும் – வன்முறையாளர்களாக மாறுவதற்குக் காரணமே மனக் கட்டுப்பாடு இல்லாமல் போனது தான் என்றும் ஆய்வாளர்கள் கணக்கெடுத்துச் சொல்கிறார்கள்.

மனக் கட்டுப்பாடு மிக்க குழந்தைகள் துணிச்சல் மிக்கவர்களாக விளங்குவார்கள். எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவார்கள். மற்றவர்களுடன் இனிமையாகப் பழகுவார்கள். இவர்களே வெற்றியாளர்கள். எனவே குழந்தைகளுக்கான மனக் கட்டுப்பாட்டுப் பயிற்சியினை குழந்தைப் பருவத்திலேயே தொடங்கி தொடர்ந்திட வேண்டியது அவசியமான ஒன்று. இதில், பெற்றோருக்கும், பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் பெரும் பொறுப்பு இருக்கின்றது. மனத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளை துவக்கப் பள்ளியிலேயே வைத்து அளித்திட வேண்டும் என்கிறார்கள் உளவியல் வல்லுனர்கள்.

குழந்தைகளின் மனதூண்டலைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகள்:

1. முதலில் பெற்றோர்கள் – தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தாங்களே – குழந்தைகளுக்கு முன்மாதிரியாக – எவ்வித மனத்தூண்டலுக்கும் ஆளாகாதவர்களாக விளங்கிட முயற்சிக்க வேண்டும். எந்த ஒரு காரியத்தையும் அவசரப்பட்டு அவசரப்பட்டு செய்திடாமல் எந்த ஒன்றையும் நிதானமாக செயல் படுத்துகின்ற சூழ்நிலை இல்லங்களில் நிலவிட வேண்டும். குழந்தைகளும் அவ்வாறே செயல்படக் கற்றுக் கொண்டு விடுவார்கள். வீடுகளை ஒழுங்கு படுத்தி வைத்தால் மட்டுமே எந்த ஒன்றையும் நிதானமாக செய்திட முடியும். இன்ன நேரத்தில் இதைச் செய்திட வேண்டும், இன்ன இடத்தில் இது இருந்திட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் மிக்க இல்லங்களில் தான் (organized family) குழந்தைகள் மிக இலகுவாக மனக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்கிறார்கள்.

2. மனத்தூண்டலைக் கட்டுப் படுத்திட தொழுகை ஒரு பயிற்சியாகும். ஏழு வயதிலிருந்தே நாம் குழந்தைகளைத் தொழுகைக்குப் பழக்கப் படுத்தக் கூடியவர்களாக விளங்கினால், குழந்தைகள் “கட்டுப்பாடு” (disciplined) மிக்கவர்களாக விளங்குவார்கள். ஐந்து வேளை அனுதினமும் தொழுது வந்தால் – மனோ இச்சையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதை எளிதில் நம்மால் புரிந்து கொள்ள முடியும். மனக்கட்டுப்பாட்டிற்கான மிகச் சிறந்த பயிற்சி தொழுகையாகும்!

3. சில குழந்தைகள் மனத்தூண்டலுக்கு ஆட்பட்டு விட்டால் அடம் பிடிக்கத் தொடங்கி விடுவார்கள். தொண்டையில் சதை வளர்ந்திருக்கும். மருத்துவர் ஐஸ் போன்ற குளிர் பொருட்களைக் கொடுத்திட வேண்டாம் என்று கட்டுப்பாடு விதித்திருப்பார். ஆனால் குழந்தையோ, ” எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும், அதுவும் இப்போதே வேண்டும்” என்று அடம் பிடிக்கும். அப்போது பெற்றோர்கள் உறுதியுடன் நடந்து கொண்டிட வேண்டும். எப்போதெல்லாம் குழந்தைகள் இச்சைப்படி நடக்க முயற்சிக்கிறார்களோ – அப்போதே அதனைத் தடுத்திடுவதில் உறுதி காட்டிட வேண்டும்.


படிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி?


எல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.

ஆனால் – நாம் நமது குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்த்த பின்பு, சில காலம் கழித்து பள்ளிகளின் பொறுப்பாளர்கள் நம்மை அழைத்துச் சொல்வார்கள்:

“உங்கள் குழந்தைக்கு படிப்பு வரவில்லை!” சிறப்பு வகுப்புகள் எல்லாம் எடுத்த பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை!

எனவே – Your child is unfit for our school! – என்று சொல்லி TC கொடுத்து நம்மை அனுப்பி விடுவார்கள்!!

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பெற்றோர்கள் திகைத்து விடுகிறார்கள்.

படிப்பு வராத குழந்தை என்று முத்திரை குத்தப்பட்ட குழந்தைக்கு அடுத்து நாம் என்ன செய்திட வேண்டும் என்று புரியாதவர்களாக – வேறு சில பள்ளிக்கூடங்களை நோக்கிச் செல்கிறார்கள். அங்கு சேர்த்த சில காலத்துக்குப் பின் அதே அழைப்பு…. அதே விளக்கம்… அதே நீக்கம்…..

இக்கட்டுரை குறிப்பாக அத்தகைய குழந்தைகளின் பெற்றோர்களுக்காக எழுதப்படுகிறது.

ஒரு குழந்தைக்கு படிப்பு “வராமல் போவதற்கு” பலப்பல காரணிகள் உண்டு!

எனவே எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் குழந்தைக்கு படிப்பு வரவில்லை என்பதைக் கண்டறியும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.

படிப்பு வராமல் போவதற்கான காரணங்களில் சிலவற்றை கீழே தருகின்றோம்:

மகிழ்ச்சியான, குதூகலமான, பாதுகாப்பான சூழலில் தான் குழந்தைகள் நன்றாகக் கல்வி கற்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைக்கு “பாதுகாப்பற்ற” உணர்வு (insecure) இருந்தால் அக்குழந்தைக்கு படிப்பு வராதாம். Very strict ஆன பெற்றோர்களும், குழந்தைகளை அடிக்கும் பெற்றோர்களும் சற்று கவனிப்பார்களாக.

கவலை மற்றும் மனச்சோர்வுக்கு (depression) ஆளான குழந்தைகளுக்கு மண்டையில் எதுவுமே ஏறாதாம். மனச்சோர்வுக்குக் காரணம் கண்டு அதனை நீக்கினாலே – குழந்தை படிக்கத் துவங்கும். அதற்குத் தேவை குழந்தையின் மீது அக்கரை காட்டும் பெற்றோர்கள்.

பதற்றப்படும் (anxiety) குழந்தைகளும் கற்றுக் கொள்ளவியலாது. குழந்தைகளுக்கு நிதானத்தைக் கற்றுக் கொடுத்தல் பெற்றோர் பெற்றோர் கடமை!

மனத் தூண்டலுக்கு (impulsiveness)ஆளாகும் குழந்தைகளும் சரிவரக் கற்பதில்லையாம். தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், தான் ஆசைப்படும் எந்த ஒன்றையும் உடனேயே அடைந்திடத் துடிக்கும் குழந்தைகள், செல்லம் கொடுக்கப் படும் குழந்தைகள் எல்லாம் இப்பிரிவில் அடங்குவர். கவனிக்க வேண்டியது பெற்றோர் கடமை!

திட்டப்படும் குழந்தைகள் படிப்பதேயில்லை! “உனக்குப் படிப்பே வராது!” என்றால் “தனக்குப் படிப்பே வராது!” என்று குழந்தை முடிவெடுத்து விடும்!

எனவே பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்குப் படிப்பு வரவில்லை என்றால் அவர்களை மக்குப் பிள்ளை என்று முத்திரை குத்தி விட வேண்டாம்!

இன்னொன்றையும் பெற்றோர்கள் கவனித்திட வேண்டும். அதாவது உங்கள் குழந்தைகளை நீங்கள் எந்தப் பள்ளியில் சேர்த்திருக்கின்றீர்களோ அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் நம் குழந்தைகளுடன் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லாக் குழந்தைகளும் பாடங்களை ஒரே மாதிரியாக கற்றுக் கொள்வதில்லை! குழந்தைகளின் “கற்கும் பாணிகளில்” (learning styles) பல விதங்கள் உண்டு. “காதால் கேட்டு கற்றுக் கொள்தல்” , கண்களால் பார்த்துக் கற்றுக்கொள்தல், எந்த ஒன்றையும் செய்து காட்டுவதன் மூலம் கற்றுக் கொள்தல் – என்பவை அவற்றுள் முக்கியமானவை. உங்கள் குழந்தைகளின் பள்ளியில் பாடங்கள் நடத்தப் படும் முறைகள் குறித்தும் அறிந்து கொள்வதும் நலம்.

குழந்தையின் முகத்தில் வாட்டமா? உடன் கவனம் செலுத்துங்கள்!

ஆங்கிலத்தில் ஒரு சொல். Depression. இதற்கு ஆங்கிலத்தில் இப்படி பொருள் கொள்கிறார்கள்: “The state of feeling very sad (and anxious) and without any hope. தமிழில் இதனை – “ஆழ்ந்த கவலையில் மூழ்கியிருக்கும் நிலை” என மொழி பெயர்க்கலாம். அந்தக் கவலைக்குக் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு விடிவு தெரியாத நிலையில் விரக்தியும் சோகமும் நிலை கொள்வதால் இதனை மனச் சோர்வு என்றும் பொருள் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட ஆழ்ந்த கவலை எதனால் ஏற்படுகின்றது, இந்நிலை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன என்பதை ஆய்வதற்கு முன்பு சில தகவல்கள்…

இந்த ஆழ்ந்த கவலை என்பது நவீன உலகம் நமக்களித்த “பரிசு” என்றால் அது மிகையில்லை! நமது இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டை – “The Age of Melancholy” – அதாவது மனிதர்களை விரக்திக்கு இட்டுச் செல்லும் காலம் என்று வர்ணிக்கிறார்கள். (கடந்த இருபதாம் நூற்றாண்டை – “The Age of Anxiety” – அதாவது பதற்றத்தின் காலம் என்று வர்ணித்தார்களாம்.)

நவீன வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்த எல்லா நாட்டு மக்களையும் தொற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு நோய் தான் இது!

கட்டுக்கோப்பான, கட்டுப்பாடான குடும்ப அமைப்பு சிதறிப் போனமை, அதிகரித்துக் கொண்டே செல்கின்ற திருமண முறிவுகள். குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் அலட்சியம்; வேலைப் பளுவின் காரணம் காட்டி – குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்காமை. இறை நம்பிக்கையின் அடிப்படையில் வாழத் தவறியமை. மற்றவர்களைப் பற்றிய அக்கரையற்ற சமூகச் சூழல். மனதுக்கு ஆறுதல் அளிக்க என்று எந்த ஒரு அமைப்பும் இல்லாத நிலை. இப்படிப்பட்ட காரணங்களாலேயே குழந்தைகள் சோக மயம் ஆகிறார்கள்.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் – இந்த ஆழ்ந்த கவலை தொற்றிக் கொள்கின்ற வயது என்ன தெரியுமா? பத்து வயதிலிருந்து பதிமூன்று வயதுக்குள்! அதாவது நமது சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும்.

கவலைப் படுவது என்பது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் தானே – இதற்குப் போய் ஏன் கவலைப் படுகிறீர்கள் என்று கேட்கப் படலாம். சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்படுவதும், அது பற்றிக் கவலைப் படுவதும், பின்னர் பிரச்னை தீர்ந்து விட்டால் அதிலிருந்து விடுபட்டு விடுவதும், வாழ்க்கையின் யதார்த்தமே. ஆனால் நாம் இங்கே சொல்ல வருவது ஆழ்ந்த கவலை குறித்து. அதுவும் சிறிய வயதிலேயே தொற்றிக் கொள்கின்ற ஒரு எதிர்மறை மன நிலை குறித்து.

சிறு வயதிலேயே ஆழ்ந்த கவலைக்கு ஆட்பட்டு விடுபவர்கள் தான் – பின்னாட்களில் மனச் சோர்வாளர்களாக ஆகி விடுகிறார்கள் என்பதும் ஆய்வுகள் தெரிவிக்கும் செய்தியாகும். அப்படியானால் இந்த Depression குறித்து நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

குழந்தைகளுக்கு கவலை எப்படி ஏற்படுகிறது?

குறிப்பாக இரண்டு சூழல்களில் தான் குழந்தைகள் கவலைக்கு ஆளாகிறார்கள்:

ஒன்று: தன் முயற்சியில் தோல்வி அடைந்திடும் போது.

ஒரு காரியத்தில் இறங்குகிறான் ஒரு சிறுவன். அதில் தோல்வி அடைகின்றான். அல்லது ஒன்றை அடைந்திட முயற்சி செய்கின்றான். அது அவனுக்கு கிட்டிடவில்லை. அடுத்து என்ன செய்தால் தான் நினைத்தது கைகூடும் என்று அவனுக்குத் தெரியவில்லை. தான் எதற்கும் இலாயக்கில்லை என்று எண்ணத் தொடங்குகிறான். அப்போது தான் அவனை கவலை தொற்றிக் கொள்கிறது!

இரண்டு: மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பது புரியாத போது.

கவலைக்கு இன்னொரு காரணம் அவன் மற்றவர்களோடு பழகும் போது ஏற்படுகின்றது. ஏதோ ஒரு தேவைக்காக மற்ற ஒருவனை அணுகுகின்றான். அதை அவன் மறுத்து விடுகின்றான். இவன் அவனை விட்டு விலகி விடுகின்றான். தொடர்பை முறித்துக் கொள்கின்றான். மறு படி அவன் வந்து “சமாதானம்” பேசினாலும் அதனை இவன் ஏற்பதில்லை. அவன் எதிரே வந்தாலும் தலையைத் திருப்பிக் கொண்டு விலகிச் சென்று விடுகின்றான். இப்படியாக அவன் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கின்றான். விளைவு: கவலை!!!

இப்படிப்பட்ட இரண்டு சூழ்நிலைகளில் இருந்தும் இத்தகைய சிறுவர்களைக் காப்பாற்றிட வேண்டியது யார் பொறுப்பு?

பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு இதில் நீங்காப் பொறுப்பு இருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள்.

சோக வயப்பட்ட குழந்தைகள் – படிப்பில் கவனம் செலுத்திட இயலாது! இப்படிப்பட்ட குழந்தைகள் பள்ளியிலிருந்து இடையிலேயே நின்று விடும் நிலையும் (drop out) ஏற்பட்டு விடுகிறது. எனவே – ஆசிரியர்கள் அன்றாடம் நடத்துகின்ற பாடங்களோடு சேர்த்து – தோல்வியைச் சந்திப்பது எப்படி என்றும், அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடப்பது எப்படி என்றும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்திட வேண்டும். (மேலை நாடுகளில் சில பள்ளிகளில் இவ்வாறு சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்).

அடுத்து பெற்றோர்கள்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் காட்டினால்? தந்தை எப்போதும் வேலை வேலை என்று தனது தொழிலில் பிஸியாக இருந்து விட்டால்? தாய்க்கு தன் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை என்றால்? கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்தால்? கணவனும் மனைவியும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தால்……..? என்னவாகும் குழந்தைகள்?

குழந்தைகளின் கவலைகளை நீக்கிடப் போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படாத காரணத்தினால் தான் உலக அளவில், சோகத்துக்கு ஆளாகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றதாம். இதற்கு வழி ஒன்றை நாம் கண்டே ஆக வேண்டும் தானே!

குழந்தைகளின் கவலைகளைப் போக்கிட இஸ்லாம் என்ன தீர்வு தருகின்றது?

ஒன்று:

மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்வை இறைவன் கற்றுத் தருகின்றான். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும் எனில் பெற்றவர்கள் முதலில் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும்.

இரண்டு:

போதும் என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்திடக் கற்றுத் தருகின்றான் இறைவன். பொருள்களை வாங்கி வாங்கிக் குவிப்பதில் மகிழ்ச்சி இல்லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குப் புரிய வைத்திட வேண்டும்.

மூன்று:

மற்றவர்களுடன் மகிழ்ச்சியோடு பழகுவது எப்படி என்று கற்றுத் தருகின்றான் இறைவன். சிரித்த முகத்தோடு அணுகுவது, கை குலுக்குவது, சலாம் சொல்வது, அன்பளிப்புகளைப் பகிர்ந்து கொள்வது, மற்றவர்களுக்கு முன்னுரிமை தருவது, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, மன்னிக்கும் மனப்பான்மை, வீணான சந்தேகங்களைத் தவிர்த்தல், கோள் சொல்லாமை, மற்றவர்க்கு உதவி செய்தல் மற்றும் துஆ செய்தல் – இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுத் தந்திட வேண்டும். பெற்றோர்களின் முன்மாதிரியை அப்படியே பின்பற்றுவார்கள் என்பதால், பெற்றோர்கள் மற்றவர்களுடன் இனிமையாகப் பழகுவதை வழக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் அதற்குத் தக நடந்து கொள்வது எப்படி என்பதையும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் புரிய வைத்திட வேண்டும்.

குழந்தைகள் கவலை தோய்ந்தவர்களாக ஆவதிலிருந்து காப்பதே சாலச் சிறந்தது. ஏனெனில் ஒரு முறை அவர்கள் சோக வயப் பட்டு விட்டால், காலம் முழுவதும் அது தொடருமாம்!

குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வைத்திருத்தல் சமூகக் கடமை. ஏனெனில் அவர்களே எதிர்கால சமூகத்தின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கப் போகிறவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது!

பிற்சேர்க்கை 1:
இனி பருவமடைந்த பெண்களின் பெற்றோர்களுக்காக கொஞ்சம் எழுதுவோமே!

தாயின் மடியில் மகள்!

அது வரை வெகுளியாக துள்ளிக் குதித்து ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த சிறுமி – இப்போது அவள் பருவமடைந்த ஒரு பெண்!
உடல் வளர்ச்சியிலே சில மாற்றங்கள். மனத்தளவிலும் பல மாற்றங்கள்.
அது வரை பெற்ற தாயிடம் அனைத்தையும் பேசித்தீர்த்து விடுகின்ற அவள் இப்போதெல்லாம் சற்றே அம்மாவிடமிருந்து விலகுகின்றாள். தாய்க்கு ஒன்றும் புரிவதில்லை! பேச்சு கொடுத்தாலும் ஒரு வரி பதில் தான்!
என்ன ஆயிற்று என் அன்பு மகளுக்கு என்று திகைக்கின்றாள் தாய்!
பொதுவாகவே தாய் மகள் உறவு என்பது ஒரு அற்புதமான உறவாகும். ஒரு தாய்க்கும் மகனுக்குமான உறவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
தாயும் ஒரு பெண். மகளும் ஒரு பெண். எனவே இருவருக்குமே பொதுவான இயல்புகள்!

பெண் உணர்வு மயமானவள். உணர்வுகளைப் புரிந்து கொள்பவள். உணர்வுகளுக்கு மொழி வடிவம் கொடுத்து பேசுவதில் சிறந்தவள். (ஆண்களுக்கு இது கஷ்டம்!). எனவே ஒருதாய் தன் மகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடப்பது எளிது!

அது போலவே பெண்கள் உணர்ச்சி வசப்பட்டு விடுபவர்கள். எது அவர்களுக்கு பலமோ அதுவே அவர்களின் பலவீனமும் கூட! அவர்கள் சில சமயங்களில் சிந்தனை ஏதுமின்றி உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது செய்து விடுவார்கள். ஆனால் பின்னர் வருந்துவார்கள்!

எனவே பருவமடைந்த தன் மகளுக்கு அவள் தன் உணர்வுகளைக் கையாள்வது குறித்து ஒரு தாயின் வழிகாட்டுதல் அவசியம்.
இப்படிப்பட்ட தாய்க்கு சில இங்கே சில குறிப்புகள்:
உங்கள் (அதாவது பெற்றோர்களின்) இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக விளங்கட்டும். மகளின் முன்னால் சண்டையிட வேண்டாம்.
குடும்பத்தில் இஸ்லாமிய சூழல் அவசியம். தொழுகை, குர்ஆனை ஓதுதல் மட்டுமல்ல; உடை விஷயம், ஹலால்- ஹராம் விஷயம் அனைத்திலும் மார்க்கத்தின் வழிகாட்டுதல்கள் பேணப்பட வேண்டும்.

குடும்பத்தில் நெகிழ்ச்சிக்கு இடமளிக்கின்ற கட்டுப்பாடுகள் அவசியம். இது குறித்து முன்னரே நாம் எழுதியிருக்கிறோம்.

இப்படிப்பட்ட இஸ்லாமிய சூழலில் வளர்ந்து வருகின்ற ஒரு பருவமடைந்த முஸ்லிம் பெண்ணுக்கு ஒரு பிரச்னை! அது என்ன?
பருவமடைந்த பெண்களை நாம் படிக்க வைக்க பள்ளிக்கோ கல்லூரிக்கோ அனுப்பி வைக்கின்றோம். ஆனால் அங்கே வேறு ஒரு சூழ்நிலை. அங்கே மாணவர்களும் மாணவிகளும் சேர்ந்து படிக்கின்ற சூழல்.

பெரும்பாலான மாணவர்களும் மாணவிகளும் முஸ்லிம் அல்லாதவர்கள். இன்றைய பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் இஸ்லாத்தின் இயல்புகளுக்கு முற்றிலும் வேறுபட்ட ஒரு கலாச்சாரச் சூழல். அது மேற்கத்திய கலாச்சாரத்தைத் தழுவியதொரு புதிய கலாச்சாரம்.
அங்கே ஒரு மாணவனும் ஒரு மாணவியும் தனிமையில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். தங்களை “நண்பர்கள்” (boy friend-girl friend) என்று அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.

இந்தச் சூழலில் ஒரு முஸ்லிம் பெண் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கிறாள். மற்ற மாணவிகளோ – “ஏன் ஒதுங்கிச் செல்கிறாய்? ஏங்களோடு கலந்து பழகிட வேண்டியது தானே? ஏன் தயக்கம்?” – என்று அழைப்பு விடுக்கின்றார்கள். இதற்குப் பெயர் தான் – peer pressure!
நமது முஸ்லிம் பெண்ணுக்கு சற்றே மனக்குழப்பம்!

இப்படிப்பட்ட ஆண்-பெண் கலந்துறவாடும் கலாச்சாரத்துக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பது அவளுக்கு நன்றாகவே புரிகின்றது.
ஆனால் அதே நேரத்தில் மற்ற மாணவிகளிடமிருந்து முற்றாக விலகிச் செல்வதையும் அவள் மனம் ஏற்க மறுக்கின்றது! தான் தனித்து விடப்பட்டதைப் போல உணர்கிறாள் அவள்.

இந்த மனப்போராட்டத்தை அவள் யாரிடம் பகிர்ந்து கொள்வாள்?
தன் தாயிடம் தானே!

இதோ ஓடி வருகின்றாள் நீங்கள் பெற்ற உங்கள் அருமை மகள்! தன் உள்ளத்தில் கிடப்பதை அள்ளிக் கொட்டுகின்றாள் அவள்.

தாயின் மடியில் மகள்!

அவளுக்கு நீங்கள் தரப்போவது என்ன?

உங்கள் மகள் சொல்ல வருவதை அக்கரையுடன் கேளுங்கள்!

பெண்கள் உணர்ச்சிமயமானவர்கள் என்பதை முன்னரேயே சொல்லியிருக்கின்றோம் அல்லவா?

உங்கள் பருவமடைந்த மகளும் அப்படித்தான் என்பதை முதலில் ஒரு தாய் அவசியம் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

இது நாள் வரை நன்றாகப் பழகிக் கொண்டிருந்த ஒரு தோழி திடீரென்று தன்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டு விட்டால் உணர்ச்சிவசப்படுவாள் பெண்!

அக்கம்பக்கத்தில் உள்ள பெண்கள் எல்லாம் சேர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்கப்போகிறார்களாம். சென்ற தடவை தன்னைச் சேர்த்துக் கொண்டவர்கள் இந்தத்தடவை என்னவோ தெரியவில்லை – சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் சோகமயமாகி விடுவாள் பெண்!

இது போன்ற தருணங்களில் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முதலில் ஒரு பெண் நாடுவது தன் தாயைத்தான்!

ஆனால் – ஒரு தாய் – தன் மகள் தன்னிடம் வந்து – தனது உள்ளக் கிடக்கைகளைப் பகிர்ந்து கொள்ள முற்படும்போது – “ஆமாம்! இதுவெல்லாம் ஒரு பிரச்னையா? அவர்கள் கிடக்கின்றார்கள்! நீ போய் வேறு வேலையைப் பார்!” என்று சொல்லி விட்டால்…..?

மகள் என்ன நினைப்பாள் தெரியுமா?

என் தாய் என்னைப் புரிந்து கொள்வதே இல்லை!

ஒரு தடவை, இரண்டு தடவை என்று தன் தாயிடம் ஒரு மகள் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முற்படும்போது – தன் தாய் அதற்கு சரியாக செவி சாய்க்கவில்லை எனில் என்ன செய்வாள் மகள்?

தன் தாயிடம் பேசுவதைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு விடுவாள் மகள்!
இது தான் முதல் ஆபத்து!

எனவே தான் சொல்கின்றோம். உங்கள் மகள் உங்களிடம் வந்து தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வரும்போது – உங்கள் தலைக்கு மேலே என்ன வேலை இருந்தாலும் – அவைகளை அப்படியே வைத்து விட்டு – உங்கள் மகளுடன் அமர்ந்து கொள்ளுங்கள் முதலில்!

அவர்கள் சொல்வதை நீங்கள் அக்கரையுடன் கேட்பது ஒன்றே கூடப் போதும் அவர்களுக்கு! அவர்களின் பிரச்னைகளுக்கு நீங்கள் தீர்வு சொல்லிட வேண்டிய அவசியம் கூட இல்லை! தன்னைப் புரிந்து கொள்கிறாளா தன் தாய் என்பதே மகளின் எதிர்பார்ப்பு!

தன் மகள் தன்னிடம் ஏதோ சொல்ல வருகின்றாள் என்றால் ஒரு தாய் என்ன செய்திட வேண்டும். என்னவெல்லாம் செய்திடக்கூடாது என்பதைப் பார்ப்போம்.

உங்கள் மகளை முழுமையாகப் பேச விடுங்கள். அவள் சொல்ல வருவதை அக்கரையுடன் தான் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பதாக அவளுக்கு உணர்த்துங்கள்.

அந்த சமயத்தில் அந்த ஒரு வேலையை விட வேறு எந்த வேலையும் தனக்கு முக்கியம் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளச் செய்திட வேண்டும்.
தன் மகளுடன் உரையாடும் போது – அந்த உரையாடல் – ஒரு நெகிழ்ச்சியான சூழலாக (relaxed atmosphere) அமைந்திட வேண்டும். இருக்கமான சூழலாக மாற விட்டு விடக்கூடாது!

மகள் சொல்வதை உன்னிப்பாக கவனித்துக் கேட்டிட வேண்டும். (active listening).
அடிக்கடி குறுக்கிட்டு இடை மறித்துப் பேசிடக் கூடாது.
அதனை ஒரு விவாதமாக மாறிட அனுமதித்திடக் கூடாது.
அந்த சமயத்தில் போய் உங்கள் மகளின் குறைகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கக் கூடாது.

மாறாக உங்கள் மகளின் நற்குணங்களைப் பாராட்டிட இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

நீங்கள் பேசிடும் போது மென்மையைக் கடைபிடிக்க வேண்டும்.
உங்கள் மகளின் உணர்வுகளைத் தாம் புரிந்து கொள்வதாக அவளிடம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு நீங்கள் தொடர்ந்து உங்கள் மகளிடம் ஒரு கருத்துப் பரிமாற்றத்தை (open communication) வைத்துக் கொள்தல் மிக மிக அவசியம். இது ஒன்றே உங்கள் மகள் தனது உணர்ச்சிப் போராட்டங்களைத் திறமையுடன் கையாள்வதற்கு மிகச் சிறந்த துணையாக அமைந்திடும்.

Open communication with your daughter is the need of the hour!

மகளிடம் மனம் திறந்த கருத்துப்பரிமாற்றம் என்பது - இன்றைய சூழலில் - காலத்தின் கட்டாயம்!

தன்னுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள ஒரு தாய் தனக்கு இல்லாதபோது அல்லது தன் தாய் தனது உணர்வுகளை உதாசீனப்படுத்தி விடும்போது ஒரு மகள் என்ன செய்வாள்? எங்கே செல்வாள்?
யோசிக்க வேண்டிய விஷயம் இது!

பருவம் எய்திய மகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது எப்படி?

ஆண் – பெண் கலந்து பழகும், இஸ்லாத்துக்கு ஒவ்வாத சூழலில் வளர்கின்ற நம் பிள்ளைகளிடம் – அந்தச் சூழலின் தீங்குகளிலிருந்து அவர்கள் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு – தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டிய ஏழு வழிமுறைகளைக் கற்றுத் தருகிறார் - கிம்பர்லீ பென் – எனும் எழுத்தாளர்.
அவை:

ஒன்று: உங்கள் குழந்தைகள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பையும், பாசத்தையும் சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்திக் காட்டிடத் தவறாதீர்கள். இதனை நீங்கள் அலட்சியம் செய்திட வேண்டாம்.

இரண்டு: வளர்ந்து ஆளாகி விட்ட உங்கள் குழந்தைகள் – வீட்டில் ஏதேனும் நல்லதொரு நற்செயலைச் செய்து விட்டால் – அதனை மனமாற பாராட்டி விடுங்கள். உதாரணமாக – நீங்கள் கேட்காமலேயே – சமையலறையைச் சுத்தம் செய்து விட்டாளா உங்கள் மகள். பாராட்டத்தவறாதீர்கள்.

மூன்று: அது போலவே, உங்கள் மகள் நற்பண்பு ஒன்றை எடுத்து நடக்கின்றாள் என்றால் – அப்போதும் அவளைப் பாராட்டுங்கள். தனது தம்பி, தங்கைகளுக்கு அவர்கள் படிப்பில், குர் ஆன் ஓதுவதில் – உதவி செய்கிறாள் என்றால் – “என் மகள் பொறுப்பு மிக்கவள், பொறுமை மிக்கவள்,” என்று பாராட்டி விடுங்கள்!
நான்கு: தனக்குள் “தன்னம்பிக்கைப் பேச்சு” ஒன்றைப் பேசுவது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். இதனை ஆங்கிலத்தில் – positive self talk – என்கிறார்கள். அது என்ன?

“நான் எதற்கும் இலாயக்கில்லாதவள். எந்த ஒன்றையும் என்னால் சரிவரச் செய்திட முடியாது. என்னை யாருக்கும் பிடிக்காது. என்னிடம் யாரும் நட்பு பாராட்ட விரும்ப மாட்டார்கள்” – என்று ஒரு பெண் பேசிக் கொண்டால் – அது – negative self talk. அது தனக்குள் பேசிக்கொள்கின்ற தன்னம்பிக்கையற்ற பேச்சு.
ஆனால், “படிப்பது என்பது எனக்குக் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் கடினமாக உழைத்தால் என்னால் நல்ல மதிப்பெண் பெற்றுக்காட்ட முடியும்” என்றோ

அல்லது - “இது கொஞ்சம் கடினம் தான். ஆனால் என்னால் என்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”! – என்று ஒருவர் பேசிக் கொண்டால் இதுவே - தன்னம்பிக்கை உடையவர்கள் பேசிக் கொள்கின்ற positive self talk!

ஐந்து: உங்கள் மகள் தவறு ஒன்றைச் செய்து விட்டாள் எனில் தவறை மட்டும் விமர்சியுங்கள். தவறு செய்த உங்கள் மகளை விமர்சித்து விடாதீர்கள். உதாரணமாக – உனது உடமைகளை நீ சுத்தமாக வைத்துக் கொள்வதை நான் விரும்புகிறேன்! என்று பேசிட வேண்டுமே ஒழிய – “நீ ஒரு காலமும் சுத்தமாக இருக்கப் போவதில்லை!” என்று ஒரு போதும் பேசிடக்கூடாது.

ஆறு: பிரச்னை ஒன்று வருகிறது என்றால் அந்தப் பிரச்னையை எதிர்கொண்டு, அதனைத் தீர்க்கும் வழிவகைகளை ஆய்ந்து, சரியான தருணங்களில், சரியான முடிவெடுத்து, பிரச்னைகளை வெற்றிகரமாக வென்றெடுக்கும் திறனைக் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மகளுக்குக் கற்றுக் கொடுங்கள். அவ்வாறு – தாமே ஒரு பிரச்னையை வெற்றிகரமாக சந்தித்து அதனை முறியடித்து விட்டு வந்தால் – அவளை வானளாவப் பாராட்டி விடுங்கள்! “Praise those efforts to the sky!” என்கிறார் கிம்பர்லீ பென்.

ஏழு: உங்கள் மகளை – இஸ்லாத்தைப் பின்பற்றி வாழும் இதர முஸ்லிம் பெண்களுடன் – அறிமுகம் செய்து வைத்திடுங்கள். அவர்களுடன் பழக விடுங்கள். “தான் மட்டும் தனி கிடையாது. தன்னோடு – இஸ்லாமிய விழுமியங்களுடன் – வாழ்கின்ற –சக தோழிகள் நமக்கு உண்டு!” என்பது உங்கள் மகளில் தன்னம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டும் அற்புதமான வழி இது!

இதனைப் படிக்கின்ற பெற்றோர்களை நாம் கேட்டுக் கொள்வது:
பருவம் அடைந்த பெண்மக்களை உடைய இதர பெற்றோர்கள் சிலருடன் – இந்தப் பதிவில் விவாதிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைக் குறித்து ஒரு கலந்துரையாடல் மேற்கொள்தல் மிக்க நலம் பயக்கும்!

மகள்கள் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்திட மிகச் சிறந்த வழி எது?

நபியவர்களாருக்கு அப்போது வயது ஐம்பத்து இரண்டு. ஆருயிர் மனைவி அன்னை கதீஜா (ரளி) அவர்களும், பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களும் மரணித்து கொஞ்ச காலம் தான் ஆகியிருக்கும்.

மனைவியை இழந்த சோகம் இன்னும் குறைந்த பாடில்லை. அதே வேளையில் தாயை இழந்த நான்கு பெண் குழந்தைகளைத் தாமே கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல்.

இந்நிலையில் - ஒரு நாள் - நபித்தோழியர்களில் ஒருவரான கவ்லா பின்த் ஹகீம் (ரளி) அவர்கள் அண்ணலாரைச் சந்திக்க வருகிறார்கள்.
நபியவர்களோ, வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரங்களைக் கழுவி வைப்பது போன்ற வீட்டு வேலைகளை தனது நான்கு மகள்களுடன் சேர்ந்து செய்து கொண்டிருப்பதைக் கவலையுடன் கவனிக்கிறார்கள்.

அன்னை கதீஜா அவர்கள் இறந்த பின் இறைத்தூதர் (ஸல்) தனிமையில் மிகவும் சிரமப்படுவதைக் கவனித்த கவ்லா அவர்கள், "நீங்கள் கதீஜா அவர்களது நினைவிலேயே இருந்தால் என்னாவது? நீங்கள் திருமணம் முடித்துக்கொள்ளுங்களேன்!" - என்று ஆலோசனை கூறுகிறார்கள்.

அண்ணலார் என்ன பதில் சொன்னார்கள் தெரியுமா?

"என்னை யார் மணந்து கொள்வார்கள் ? இன்னும் எனது மக்களையும் என்னைப் போலவே யார் கவனித்துக் கொள்வார்கள் ?"

ஐம்பத்து ஐந்து வயதை அடைந்த ஸவ்தா (ரளி) அவர்களை திருமணம் புரிந்து கொள்ள அண்ணலாரிடம் கவ்லா அவர்கள் சம்மதம் கேட்க, அண்ணலார் அவர்களும் சம்மதித்திட திருமணம் நடந்தேறுகிறது என்பதெல்லாம் தனி விஷயம்.

ஆனால் பெண் குழந்தைகளைப் பெற்றிருக்கும் தந்தைமார்களுக்கு இதிலே மிக முக்கியமான படிப்பினை ஒன்று இருக்கிறது.

பொதுவாக - ஒரு பெண் குழந்தையை வளர்ப்பதில் - அவளின் தாய்க்குப் பங்கு அதிகமா; தந்தைக்குப் பங்கு அதிகமா என்று கேட்டால் - தாய்க்குத் தான் பங்கு அதிகம் என்றே சொல்ல முடியும்! அப்படியானால் குழந்தை வளர்ப்பில் தந்தைக்குப் பங்கே இல்லையா என்றால் - தந்தைக்கும் பங்கு உண்டு என்பதே நபிகளார் வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் பாடம்.

சரி, இந்தப் பாடத்தை எவ்வாறு செயல்படுத்துவது?

உங்கள் மனைவி வெளியூர் சென்றிருக்கின்றாரா? அல்லது உடல் நலமின்றி இருக்கின்றாரா? இது போன்ற சமயங்களில் - உங்கள் மகள்களோடு சேர்ந்து - தரையைத் துடைப்பது, சமையல் பாத்திரங்களைக் கழுவுவது, துணிகளைத் துவைத்துக் கொடுப்பது போன்ற வீட்டுப்பணிகளில் நீங்கள் ஈடுபட்டால் அதுவும் சுன்னத் தானே?

உங்கள் மகள்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் ஆழமான பாசத்தை வெளிப்படுத்திட - இதை விட வேறு சிறந்த வழி எதுவும் இருக்க முடியுமா சொல்லுங்கள்?

"என்னைப்போல் என் மகள்களை யார் கவனித்துக் கொள்வார்கள்?" - என்று அண்ணலார் சொன்ன அதே போல ஒரு சொல்லை நம்மால் சொல்ல முடியுமா என்று ஒவ்வொரு தந்தையும் தன்னைத் தானே கேட்டுக் கொள்ளலாம் தானே?

Comments