நூல்: கருத்துப் பரிமாற்றம்!

கருத்துப் பரிமாற்றம்! 

ஆசிரியர்:  S A மன்சூர் அலி 


கருத்துப் பரிமாற்றம்!  அதாவது Communication Skill!


இது குறித்து இன்று நிறைய பேசப் படுகின்றது. அதாவது நாம் சொல்ல வருகின்ற ஒரு கருத்தை மற்ற ஒருவருக்கு அல்லது பலருக்குப் புரிய வைக்கும் திறமை என்று இதனை விளக்கலாம்.

இந்தக் கருத்துப் பரிமாற்றத்தைப் பொறுத்தவரை நம்மில் பலர் பல தவறுகளை நமது அன்றாட வாழ்விலேயே செய்து வருகின்றோம்.

”தம்பீ… அதை எடுத்து வா இங்கே?”

எதை எடுத்து வருவான் தம்பி?

ஏங்க… அன்னைக்கி கொடுத்தேனே… அதை எங்கங்க வச்சீங்க? – மனைவி.

அன்னைக்கி என்ன கொடுத்தாங்க கணவனிடம்?

அந்த சீட்டைப் போய் கொடுத்து விட்டு வரச் சொன்னேனே… ஏம்ப்பா இன்னும் கொடுக்கவில்லை? நம்மைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்? அவர்கள் நமக்கு எவ்வளவு உதவிகள் செய்திருக்காங்க? இதக் கூட ஏன்ப்பா செய்ய மாட்டேங்கறே? – தாய் மகனிடம்.

எந்த சீட்டு அது?

இது போன்ற தெளிவற்ற உரையாடல்களை நம்மில் படித்தவர், படிக்காதவர் வேறுபாடு இன்றி எல்லாரும் செய்து வருகின்றோம்.

ஒரு மேலாளர் தனக்குக் கீழே பணியாற்றுகின்றவர்களுக்குத் தெளிவற்ற உத்தரவுகளை இடுகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். பணியாளர்கள் பாடு திண்டாட்டம்தான்!

எனவே தான் பெரு நிருவனங்களில் பணியாற்றும் அனைவருக்கும் இதற்கான பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன.

நாம் இப்பகுதியில் – இப்பயிற்சி குறித்து திருமறை குர்ஆன் நமக்குக் கற்றுத் தருவது என்ன, அதற்குச் செயல் வடிவம் தந்த நபி பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் நமக்கு என்ன கற்றுத் தருகின்றார்கள் என்று அலசப் போகின்றோம் – இன்ஷா அல்லாஹ்.


கருத்துப் பரிமாற்றம் – வெற்றியும் தோல்வியும்


ஒரு கருத்து பரிமாறப் படுவதற்கு பல நோக்கங்கள் இருக்கலாம்.

ஒரு கருத்து சாதாரணத் தகவல் பரிமாற்றமாக அமையலாம். (exchange of views)

ஒரு கருத்து வேண்டுகோளாக இருக்கலாம். (request)

ஒரு தகவல் கட்டளையாக பிறப்பிக்கப் படலாம். (instruction)

ஒரு கருத்து அழைப்பாக அமையலாம். (invitation)

ஒரு கருத்து அது ஏற்கப் படுவதற்கான பிரச்சாரமாக இருக்கலாம். (propagation)

ஒரு கருத்து மற்றவரை மாற்றுவதற்காக பரிமாறப் படலாம். (to influence)

ஒரு கருத்து உணர்வுப் பரிமாற்றமாகக் கூட இருக்கலாம். (sharing feelings)

எனவே எந்த நோக்கத்துக்காக ஒரு கருத்து பரிமாறப் படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறினால் அதனைக் கருத்துப் பரிமாற்றத்தின் வெற்றி என அழைக்கலாம். (communication success). நோக்கம் நிறைவேறவில்லை எனில் அது கருத்துப் பரிமாற்றத்தின் தோல்வி ஆகி விடுகிறது. (communication failure)

ஒரு கருத்து புரிய வைப்பதற்காகப் பரிமாறப் படுகிறது என்று வைத்துக் கொள்வோம். சான்றாக ஒரு ஆசிரியர் ஒரு கருத்தை மாணவர்களுக்குப் புரிய வைக்கிறார். ஆனால் அது மாணவர்களுக்குப் புரியவில்லை எனில் ஆசிரியர் தனது கருத்துப் பரிமாற்றத் திறனை வளர்த்துக் கொள்வது அவசியம்.

வழக்கறிஞர் ஒருவர் தனது கட்சிக் காரருக்கு ஒரு சட்டத்தை விளக்க முயற்சிக்கிறார். ஆனால் அந்தக் கட்சிக் காரருக்கு புரியவில்லை எனில் அந்த வழக்கறிஞருக்கு கருத்துப் பரிமாற்றத் திறன் பயிற்சி அவசியம்.

இது போன்ற பெரிய விஷயங்கள் மட்டும் அல்ல. இல்லற வாழ்வில் கணவனுக்கும், மனைவிக்கும், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் கூட இந்தத் திறன் மிக அவசியம்.

மனைவி ஒரு கருத்தை கண்வனிடம் முன் வைக்கிறார். மனைவியின் கருத்தைப் “புரிந்து” கொண்ட அவர், மனைவியின் கருத்துக்குப் பின்னே இருந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறார். இதுவும் கூடத் தோல்வி தான்!

தந்தை தன் மகனுக்கு ஒரு கட்டளை பிறப்பிக்கின்றார்: “புகைப் பழக்கம் வேண்டாம்!” மகன் தந்தையின் கருத்தைச் செவி தாழ்த்திக் கேட்கிறான். ஆனால் கட்டளையைப் புரிந்து கொண்ட மகன் புகைப்பதை நிறுத்தவில்லை! இதுவும் தோல்வி தான். அதாவது தன் மகனை “மாற்றுவதற்கு” (failed to influence) தந்தை தவறி விட்டார்.

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார் ஒருவர். ஒரு கருத்தை அவர் தன் முதலாளிக்கு (boss) எடுத்துச் சொல்ல விழைகிறார். ஆங்கிலத்தில் தான் தெரிவிக்க வேண்டிய நிலை. பேச்சின் போது சில ஆங்கிலச் சொற்களைத் தவறாகப் பயன் படுத்துகிறார். என்னவாகும்? கருத்துப் பரிமாற்றத்துக்கு மொழியாற்றலும் அவசியமே.

அது போலவே கருத்துப் பரிமாற்றத்தின் போது “கலாச்சாரமும்” குறுக்கிடுகின்றது.

ஆக, கருத்துப் பரிமாற்றத்தில் இவ்வனைத்து விஷயங்களும் கணக்கிலெடுத்துக் கொள்ளப் பட வேண்டும். ஒவ்வொன்றாகப் பின்னர் பார்ப்போம்.

பயிற்சி ஒன்றே திறமை வளர்க்கும் கருவி!

பொதுவாகவே எந்த ஒரு திறமையை நாம் வளர்த்துக் கொள்வதாக இருந்தாலும் – ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது – எந்த ஒரு திறமையாக இருந்தாலும், அதனைப் பற்றிப் படிப்பதன் மூலமாக மட்டுமே வளர்த்துக் கொண்டு விட முடியாது. களத்தில் இறங்கி தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவதன் மூலமே எந்த ஒரு திறமையையும் வளர்த்துக் கொள்ள முடியும். எந்த அளவுக்குப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுகின்றோமோ அந்த அளவுக்கே நமது திறமையின் அளவும் அமைந்திருக்கும்.

அது சமையல் திறமையாக இருந்தாலும் சரி, கார் ஓட்டும் திறமையாக இருந்தாலும் சரி, நீச்சல் திறமையாக இருந்தாலும் சரி, அது ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறமையாக இருந்தாலும் சரி, அடுத்தவருக்குத் தன் கருத்தைப் புரிய வைத்திடும் கருத்துப் பரிமாற்றத் திறமையாக இருந்தாலும் சரி, அது மற்றவர்களோடு பழகுவது எப்படி எனும் மனித உறவுத் திறமையாக இருந்தாலும் சரி, எல்லாவற்றுக்கும் “பயிற்சி” என்பது பொருந்தும்.

நம்மில் பல பேர் என்ன செய்கிறோம் என்றால் -ஒரு திறமை குறித்த பாடங்களை ஆர்வமாகக் கற்றுக் கொள்கிறோம். ஆனால் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதில்லை.

ஏனெனில் – பயிற்சியில் ஈடுபடும் போது பல தடுமாற்றங்கள் நமக்கு ஏற்படுவதுண்டு.

சைக்கிள் கற்றுக் கொள்ளும் போது, கீழே விழுந்து சிராய்த்துக் கொள்வது சகஜம்.

நீச்சல் கற்றுக் கொள்ளும்போது, நிறைய தண்ணீரைக் குடித்து விடுவதும் சர்வ சாதாரணம் தான்.

அதைப் போலவே தான் -

தப்புத் தப்பாக ஆங்கிலத்தில் பேசத் தயங்குபவர்கள், ஒரு போதும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுபவர்களாக ஆகி விட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தான் சொல்கிறோம் - பயிற்சி ஒன்றே திறமை வளர்க்கும் கருவி!


குர்ஆன் கற்றுத் தரும் கருத்துப் பரிமாற்றம்

மிக மிக அழகாகப் பேசுங்கள்:இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்;

மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள். (2:83)

2. மென்மையாகப் பேசுங்கள்:

“நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான். “நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.” (20:43- 44)

3. நேர்மையாகவும் நேரிடையாகவும் பேசுங்கள்:

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (33:70)

4. விவேகத்துடம் பேசுங்கள்:

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (16: 125)

ஆக, அழகு, மென்மை, நேர்மை, விவேகம் – இந்நான்கும் குர் ஆன் கற்றுத் தரும் கருத்துப் பரிமாற்றத் திறமையின் அடிப்படைகள் ஆகும்!

இவை ஒவ்வொன்றையும் குறித்து விரிவாக பார்ப்போம் – இன்ஷா அல்லாஹ்.


சொல்லில் உறுதி வேண்டும்!

சொல்லில் உறுதி வேண்டும்! (Assertiveness)

அலி காட்டமாலா (Ali Guatemala). இவர் ஒரு முன்னாள் கிருத்துவப் பாதிரியார். அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவர் இஸ்லாத்தைத் தழுவிய பின், 2007 – ம் ஆண்டு ஹஜ்ஜுக்கு சென்றிருந்த போது – இஸ்லாத்தைத் தழுவிய சூழல் குறித்து அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு சொல்கிறார்:

‘அமெரிக்காவில் க்வீன் சிட்டி (Queen City) என்ற நகரத்தில் பாதிரியாராக (Priest) நான் பணியாற்றினேன். எனது பிரச்சாரத் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காக – திருக் குர் ஆனையும் சேர்த்து பிற மத நூல்களை நான் படிக்கத் துவங்கினேன். ஆனால் அதுவே என் வாழ்க்கையின் திருப்பு முனையாகி விட்டது.

அவர் சொல்கிறார்:

“When I read the first verse of Chapter Al-Baqara: ‘This Book, there is no doubt in it, is a guidance to the pious, it struck my mind. I pondered about this verse, which gave me the impression that the author was speaking clearly and definitely without having any doubt.”

‘இது (அல்லாஹ்வின்) திரு வேதம் ஆகும்!

இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை!

பய பக்தியுடையோர்க்கு (இது) நேர்வழிகாட்டி ஆகும்!’

- என்ற சூரத்துல் பகராவின் முதல் வசனத்தை நான் படிக்கத் துவங்கிய போது – எனது அறிவில் பொறி தட்டியது போல் நான் உணர்ந்தேன். இந்த வசனத்தைக் குறித்து நான் ஆழ்ந்து சிந்தித்த போது – திருக்குர் ஆனின் ‘ஆசிரியர்’ மிகத் தெளிவாகவும் அதே நேரத்தில் மிக உறுதியாகவும் எந்த வித சந்தேகத்துக்கு இடம் இன்றியும் கருத்தைப் பரிமாறியிருப்பதாக உணர்ந்து கொண்டேன்.’

திருக் குர்ஆன் கற்றுத் தரும் கருத்துப் பரிமாற்றத் திறன் (Communication skill) பாடங்களில் முதன்மையானது இது தான்!

அதாவது உங்களின் ஒரு கருத்தை நீங்கள் மற்றவர்களிடம் வெளியிடும் போது, அந்தக் கருத்து குறித்து உங்களுக்கே ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா என்று பார்த்திட வேண்டும்.

‘அப்படித் தான் நான் நினைக்கிறேன்’ என்றோ

‘சரியாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது’ என்றோ,

‘அப்படித் தான் மற்றவர்களும் சொல்கின்றார்கள்’ என்றோ -

நீங்கள் சொன்னால் மக்கள் அக்கருத்துக்கு மதிப்பளிக்க மாட்டார்கள்.

உங்கள் கருத்தினை நீங்களே சந்தேகத்திற்கிடமின்றி நம்புவது கருத்துப் பரிமாற்றத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு மிக அவசியமானது!


நபியவர்களின் வரலாற்றிலிருந்து ஒரு சான்று:

நபியவர்கள் மிஃராஜுக்கு சென்று வந்த மறு நாள், நடந்ததை மக்களிடம் தெரிவிக்க முற்பட்ட போது, அவர்களின் உறவினர் உம்மு ஹானி அவர்கள் – ‘நீங்கள் பொய் சொல்வதாகக் கூறி நம்ப மறுத்து விடுவார்கள், எனவே அதனை மக்களிடம் சொல்ல வேண்டாம், ‘ என்று கேட்டுக் கொண்ட போது அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அதனை மக்களிடம் அவசியம் தெரிவிப்பேன் என்று சொன்னார்களே, எதனால்?

அவர்கள் மிஃராஜுக்குச் சென்று வந்ததில் அவ்ர்களுக்கு கிஞ்சிற்றும் சந்தேகம் இருந்திடவில்லை! அதனால் தான்!

எனவே உங்களின் கருத்தில் எந்த ஒரு சந்தேகமும் உங்களுக்கு இல்லை எனில் அழுத்தமாக உறுதியாக உங்கள் கருத்தை வெளியிடுங்கள். உங்களின் கருத்தில் உங்களுக்கே ஏதேனும் சந்தேகம் இருப்பின் அந்தக் கருத்தை உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள்.

தன்னளவிலேயே தெளிவில்லாதவர்கள் தான் – கருத்துப் பரிமாற்றத் திறனில் தோல்வி அடைகின்றார்கள்!

கருத்துப் பரிமாற்றம்: மென்மையே நன்மை!

“நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான். “நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.” (20:43- 44)

இந்த வசனத்தை சற்று ஆழமாக ஆய்வோம்.

கருத்தைப் பரிமாற இருப்பவர்கள்: மூசா (அலை) மற்றும் அவர் சகோதரர் நபி ஹாரூன் (அலை) இருவரும். இரண்டு நபிமார்கள். மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் இரண்டு இறைத் தூதர்கள்.

கருத்து யாருக்கு முன்னால் வைக்கப் படுகிறது? – பிர் அவ்ன்! – மிக மோசமான ஒரு அரசன். எல்லா அதிகாரங்களும் கைவரப் பெற்றவன்.

ஆனால் அல்லாஹு தஆலா – இரண்டு நபிமார்களிடமும் என்ன சொல்லி அனுப்பி வைக்கிறான்?

“மென்மையாகப் பேசுங்கள்!”

மிக உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவர், மிக மோசமான மனிதரிடம் பேசும் போது கூட மென்மையைக் கடைபிடியுங்கள் என்கிறான் இறைவன் என்பதை மனதில் வைத்துக் கொண்டு – நமது சூழ்நிலைக்கு வருவோம்:

தன் மகனிடம் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கும் ஒரு தந்தை தன் கருத்தை முன் வைத்துப் பேசிட மென்மை தேவையா இல்லையா? உங்கள் மகன் பிர் அவ்னை விட மோசமானவன் இல்லையே!

ஒரு கணவன் தன் மனைவியிடம் பேசும் போது மென்மை தேவையா இல்லையா? உங்கள் மனைவி பிர் அவ்னை விடக் கொடுமையானவர் இல்லையே!

ஒரு முதலாளி தன் தொழிலாளியிடம் பேசும் போது அவர் மென்மையைக் கடை பிடிக்க வேண்டுமா, வேண்டாமா? உங்கள் தொழிலாளி உங்களுக்கு பயந்து வேலை பார்ப்பவர் தானே!

ஏன் மென்மையைக் கடைபிடிக்கச் சொல்கிறான் இறைவன்?

கீழ் வரும் வசனத்தைக் கவனியுங்கள்:

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். (3: 159)

அல்லாஹு த ஆலா “அவர்களிடம்” என்று யாரை இங்கே குறிப்பிடுகின்றான் தெரியுமா?

உஹத் யுத்தத்தின் போது நபியவர்களின் கட்டளையை மீறி நடந்த ஒரு சில நபித் தோழர்களைத் தான் குறிப்பிடுகின்றான். கட்டளை இடுபவர் இறைத்தூதர். கட்டளை இடப் படுவது படை வீரர்களாக செயல் பட வேண்டிய நபித் தோழர்களுக்கு.

பொதுவாக – போர் வீரர்கள் தங்கள் தளபதியின் கட்டளையை அதுவும் போரின் சமயத்தில் மீறினால், படைத்தளபதி, அவர்களிடம் எப்படி நடந்து கொள்வார்? ஆனால் நபியவர்கள் எப்படி இங்கே நடந்து கொள்கிறார்கள்?

மென்மையாக!!!

மென்மையைக் கடைபிடிக்காவிட்டால் அதன் விளைவு என்ன ஆகும் என்பதைத் தான் இறைவன் இங்கே குறிப்பிட்டுக் காட்டுகின்றான்: “அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்!”

அதாவது ஒரு தந்தையோ, ஒரு ஆசிரியரோ, ஒரு முதலாளியோ, ஒரு கணவனோ, ஒரு மேலாளரோ – அவர் யாராக இருந்தாலும் அவர் மென்மையாக நடந்து கொள்ளத் தவறினால் – மகனும், மாணவனும், மனைவியும், தொழிலாளியும் – “ஓடிப் போய் விடுவார்கள்”.

அப்படியென்றால் என்ன?

மனித உறவுகள் சீர்குலைந்து போய் விடும். நாம் தனி மரமாகிப் போவோம். பிறகு யாரிடம் நாம் கருத்துப் பரிமாறுவது?

“டேய், இங்கே வாடா!” என்பதற்கும் “தம்பி,இங்கே வாப்பா!” என்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு! இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மென்மை உள்ளத்தைத் தொடும். மனதை வருடிக் கொடுக்கும். கடினமான உள்ளத்தைக்கூட கரைத்து விடும். மாற்றம் தானே பிறக்கும்.

கடினமாக நடப்பது – உள்ளத்தை உடைத்து விடும். உறவைக் குலைத்து விடும்.

ஆனால் – எப்போதும் மென்மையாக நடந்து கொள்பவர்களை மற்றவர்கள் ஏமாற்றி விடுகிறார்களே – தலையில் மிளகாய் அறைத்து விடுகிறார்களே என்று கேட்கிறீர்களா?

கொஞ்சம் பொறுத்திருங்கள். அடுத்த கட்டுரை வரும் வரை…


கருத்துப் பரிமாற்றம்: எனக்கும் வெற்றி! உனக்கும் வெற்றி!

நீங்கள் ஒரு வரிசையில் (queue) நிற்கிறீர்கள். மெதுவாக நகர்கிறது அந்த வரிசை. இப்போது உங்கள் முறை. திடீரென்று ஒருவர் உங்களுக்கு முன்னால் குறுக்கே புகுந்து விடுகிறார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒன்று – நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் மென்மையானவர்(?). குறுக்கே புகுந்தவர் தன் காரியத்தை கன கச்சிதமாக முடித்துக் கொண்டு போய் விடுகிறார். இதற்குப் பெயர் மென்மை அல்ல! இது கையாலாகாத் தனம். Passiveness.

அல்லது – நீங்கள், “ஏய், முட்டாள்! என்னாச்சு உனக்கு? நாங்கள்ளாம் வரிசையிலே நிக்கிறது கண்ணுக்குத் தெரியலையா?” என்று கேட்கிறீர்கள். இதுவும் தவறு. அது முரட்டுத் தனம். Aggressiveness.

அப்படியானால் எப்படி நடந்து கொள்வது சிறப்பு என்கிறீர்களா?

நீங்கள் குறுக்கே புகுந்தவரிடம் அவருடைய முகத்தை நோக்கி உறுதியான ஒரு பார்வையுடன், “மன்னிக்கவும்! இப்போது எனது முறை!” என்று கூறுகிறீர்கள். அவ்வளவு தான். அவர் நகர்ந்து விடுகிறார். வார்த்தைகளில் கடுகடுப்பு தேவை இல்லை. குரல் உயர்த்திடத் தேவையில்லை. கொஞ்சம் Seriousness. அவ்வளவு தான். இந்த அணுகு முறையைத் தான் assertive communication என்கிறார்கள். அதாவது தன் நிலையை உறுதிப் படுத்திக் கொண்டு பேசிடும் முறை.

கணவன், மனைவி, மூன்று குழந்தைகளைக் கொண்டதொரு குடும்பம் அது. கணவன் மது அருந்துகிறான். மனைவியைப் போட்டு அடிக்கிறான். குழந்தைகளைக் கன்னா பின்னாவென்று திட்டுகிறான். இது ஒரு தொடர்கதை.

மனைவி என்ன செய்வாள்? இந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது அவள் எங்கேயும் படித்துக் கொள்ளவில்லையே! ஏதோ அவளுக்குத் தெரிந்தவரையில் கணவனைத் திருத்த முயற்சி செய்கிறாள். கணவன் திருந்திடத் தயாராக இல்லை. மனைவி தன் குழந்தைகளுடன் தற்கொலையை நாடுகிறாள். இதுவே இங்கே அன்றாட நடப்பாகி விட்டது.

சில மனைவிமார்கள், கணவன் எப்படியும் போகட்டும் என்று விதியின் மீது பழியைப் போட்டு விட்டு கணவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்கிறாள். இது தான் நாம் முன்பு குறிப்பிட்ட கையாலாகாத் தனம். இங்கே கணவனுக்கு வெற்றி(?). மனைவிக்குத் தோல்வி! (I lose – You win).

ஆனால் இதே போன்ற சூழ்நிலையில் வேறொரு மனைவி எப்படி நடக்கிறாள் பாருங்கள். பொறுமையாகப் பல தடவை சொல்லிப் பார்த்தும் கணவன் திருந்துவதாகக் காணோம்.

ஒரு நாள் கணவன் நிதானமாக இருக்கும் சமயமொன்றைத் தேர்வு செய்து அவன் அருகில் வந்து, “இங்கே பாருங்கள், நான் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு எப்படிப்பட்டது என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் அதற்காக நீங்கள் குடித்து விட்டு வந்து, அந்த போதையில் என்னிடமும், குழந்தைகளிடமும் நடந்து கொள்ளும் முறையை இனியும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. குழந்தைகளுக்கு நாம் என்ன எதிர்காலத்தைக் கொடுக்கப் போகிறோம்?

எப்படிப்பட்ட குழந்தைகளை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? அவர்கள் பெரியவர்கள் ஆனால் அவர்களும் உங்களைப் போன்று ஆகி விடுவதை நான் அனுமதிக்க முடியாது. நீங்கள் குடிப்பதை நிறுத்தவில்லையென்றால், என்னையும் குழந்தைகளையும் திட்டுவதையும் அடிப்பதையும் நிறுத்தவில்லை என்றால் – அடுத்து நான் காவல் துறையைத் தான் அணுகிட வேண்டியிருக்கும் என்றால் அதற்கும் கூட நான் தயங்கிட மாட்டேன்”.

உறுதியாகச் சொல்லி விடுகிறாள் மனைவி. குரலை உயர்த்தி கத்திப் பேசி ஊரைக் கூட்டிடவில்லை! திட்டவில்லை; கணவனை மிரட்டிடவில்லை. கணவன் மீது தான் வைத்திருக்கும் அன்பையும் வெளிப் படுத்தத் தவறிடவில்லை. இங்கே கணவன் திகைத்துப் போய் விடுகிறான். ஒரு கணம் சிந்திக்கின்றான். மனைவியை உற்றுப் பார்க்கிறான். அவள் முகத்தில் கோபம் தெரியவில்லை. ஆனால் அவள் தன் நிலையில் உறுதியாக இருக்கிறாள் என்பது புரிகிறது. கணவனை அதே நிலையில் விட்டு விட்டு நகர்கிறாள் மனைவி.

அன்று திருந்தியவன் தான் அவன்! அல்ஹம்து லில்லாஹ்! இங்கே இருவரும் வெற்றி பெற்று விடுகிறார்கள் (I win – You also win).

தன் நிலையில் உறுதியுடன் பேச வேண்டிய சமயத்தில் பேச வேண்டிய முறையில் பேசுபவர்கள் – தன்னம்பிக்கை உடையவர்களாகத் திகழ்கிறார்கள். தன் உரிமைகளை யாருக்கும் அவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. மற்றவர்களால் மதிக்கப் படுகின்றார்கள். வாழ்வில் வெற்றியும் பெறுகின்றார்கள்.

இந்த assertiveness பயிற்சி குழந்தைப் பருவத்திலேயே கொடுக்கப் படுதல் சாலச் சிறந்தது.

உங்கள் பெண் குழந்தை. மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். மதிய உணவு தயாரித்துக் கொடுத்து அனுப்புகிறீர்கள். ஆனால் மாலையில் வீட்டுக்கு வரும் உங்கள் மகள், “நான் சாப்பிடத் துவங்கும் போது, மற்ற மாணவர்கள் ஓடி வந்து என் உணவை எடுத்துச் சாப்பிட்டு விடுகிறார்கள்; எனக்கு ஒன்றையுமே அவர்கள் விட்டு வைப்பதில்லை அம்மா!” என்கிறாள். இதுவும் ஒரு தொடர்கதை! பெற்றோர்களாகிய நீங்கள் என்ன செய்வீர்கள்?

அன்பு மாணவியரே! நீங்கள் கல்லூரி ஒன்றில் படிக்கிறீர்கள். சக மாணவன் ஒருவன் உங்களைச் சீண்டுகின்றான். அவனிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்?

இந்தத் திறமை கைவரப் பெற தொடர் பயிற்சியும் முயற்சியும் தேவை. ஆனால் முயற்சித்துப் பார்த்து விட்டு இடையில் விட்டு விடுபவர்களே நம்மில் அதிகம்!
ஆனால் எந்த அளவுக்கு முயற்சிக்கிறோமோ அந்த அளவுக்கு வெற்றியும் நிச்சயம்!

கருத்துப் பரிமாற்றம்: தேவை – விவேகம்!

நபி யூசுப் (அலை) அவர்கள் வாழ்வில் நடைபெற்ற ஒரு படிப்பினை மிக்க சம்பவம். எந்த ஒரு குற்றமும் செய்திடாத நிலையில் யூசுப் நபியவர்கள் சிறையிலடைக்கப் படுகின்றார்கள். சிறையில் நடைபெற்ற அந்த சம்பவத்தை திருக்குர் ஆன் இவ்வாறு விளக்குகின்றது:

“அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், “நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான்.

(பின் இருவரும் “யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).

அதற்கு அவர் கூறினார்: “உங்களிருவருக்கும் அளிக்கக்கூடிய உணவு உங்களிடம் வருவதற்கு முன்னரும் – (இக்கனவுகளின்) பலனை நீங்களிருவரும் அடைவதற்கு முன்னரும் – இவற்றின் விளக்கத்தை உங்களிலிருவருக்கும் கூறிவிடுகிறேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்தும் உள்ளவை; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டு விட்டேன்.

“நான் என் மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல; இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.

“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆள்கின்ற ஒருவனான அல்லாஹ்வா?

“அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை. (12: 36- 40)

****

சிறையிலே நபி யூசுப் (அலை) அவர்களுடன் இரண்டு வாலிபர்கள். அந்த இரண்டு இளைஞர்களும் யூசுப் நபியை நல்லதொரு மனிதராகவே பார்க்கின்றனர்.

அவர்கள் இருவரும் தாங்கள் கண்ட கனவுகளுக்கு பலன் கேட்டு நபியவர்களிடம் வருகின்றனர். அந்த சூழ்நிலையை பயன் படுத்தி அந்த இரு இளைஞர்களுக்கும் ஓரிறைக் கோட்பாட்டை விளக்கி அழைப்பு விடுக்கின்றார்கள் யூசுப் நபியவர்கள்.

இங்கே கவனிக்கப் பட வேண்டியது என்னவென்றால், அந்த இரு இளைஞர்களும் நபியவர்களிடம் வந்தது தாங்கள் கண்ட கனவுகளுக்கு பலன் கேட்டுத் தான். ஆனால் அவர்களின் கனவுகளுக்கு பதில் அளிப்பதாக உறுதி அளித்து விட்டு, அதனை சற்றே ஒத்திப் போட்டு விட்டு இறை மார்க்கத்தின் பக்கம் அழைப்பு விடத் துவங்கி விடுகிறார்கள்.

இதனையே நாம் ஹிக்மத் – மதி நுட்பம் – விவேகம் – wisdom – என்று அழைக்கிறோம்.

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (16:125)

ஆமாம்! கருத்துப் பரிமாற்றத்தின் வெற்றிக்கு விவேகம் மிக முக்கியம்.

யாரிடம் பேசுகின்றோம், அவர்களின் பின்னணி என்ன, எப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் பேச இருக்கின்றோம், அவர்கள் நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கக் கூடிய மன நிலையில் இருக்கின்றார்களா – என்பதையெல்லாம் கவனித்தே நமது கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும்.

பாதகமான ஒரு சூழ்நிலையில் கருத்துக்கள் பரிமாற்றப் பட்டால் விளைவு எதிர்விளைவாக ஆகி விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

நம் குடும்ப சூழ்நிலையை எடுத்துக் கொள்வோம். உங்கள் மனைவியிடம் பேச வேண்டுமா? அவருடைய குறைகள் குறித்துப் பேச வேண்டியுள்ளதா? அதற்கு எப்படிப்பட்ட சூழ்நிலை தேவை?

1. தனிமையான சூழல் இதற்கு அவசியம். மற்றவர்களுக்கு முன்னால் நமது உபதேசங்களைத் தொடங்கி விடக் கூடாது. மனைவியின் கண்ணியம் பாதிக்கப் படலாம்.

2. மனைவி உணர்ச்சி வசப்பட்டிருக்கும் சமயத்திலும் புத்திமதி சொல்லக் கூடாது. ஒன்றுமே மனதில் ஏறாது!

3. மனைவி வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் நேரமும் சரியானதல்ல! சமையலின்போதும் வேண்டாம். தொலைக்காட்சி பார்க்கும் போதும் வேண்டாம்.

4. மனைவி மகிழ்ச்சியோடு இருக்கும் சமயத்தை சமயோசிதமாகப் பயன் படுத்தலாம்.

அது போலத் தான் – ஒவ்வொரு சூழ்நிலையிலும் – இது பொறுத்தமான நேரம் தானா என்று நாம் கவனித்துப் பேசிட வேண்டும்.

பொறுத்தமான சூழ்நிலையில், பொறுத்தமான குரலில், பொறுத்தமான அளவுக்கு மட்டும் பேசுதல் விவேகம் ஆகும்.

இல்லாவிட்டால் என்னவாகும்?

ஒரு உண்மைச் சம்பவம். உறவினர் ஒருவருக்கு சிறு நீரகம் பழுதடைந்து விட்டது. டயாலிஸிஸ் செய்து வருகின்றார்கள். அவருக்கு ஒரே மகன். திருமண வயது. நோய் விசாரிக்க வந்த உறவுப் பெண் ஒருவர், நோயாளியின் மனைவி மற்றும் பல உறவினர்கள் ஹாலில் அமர்ந்திருக்கும் சமயத்தில், அந்த மனைவியிடம், “சட்டு புட்டென்று ஒரு பெண்ணைப் பார்த்து உன் மகனுக்குக் கல்யாணம் பண்ணி விடம்மா!” என்கிறார்.

அந்த மனைவி டக்கென்று திருப்பிக் கேட்டார்: “ஏன்? என் புருஷனைச் சாகச் சொல்கிறீர்களா?”

அந்த உறவுக்காரப் பெண்மணி என்ன செய்திருக்க வேண்டும். பலருக்கு முன்னிலையில் அந்தப் பேச்சையே எடுத்திருக்கக் கூடாது. அப்படி ஏதாவது உண்மையிலேயே அவர் அக்குடும்பத்தின் நலம் நாடுபவராக இருந்தால் – அந்த மனைவியைத் தனியே அழைத்துச் சென்று பேசியிருக்க வேண்டும். இப்படித் தான் – சூழ்நிலை அறியாமல் – பேசத் தேவையில்லாத விஷயங்களை, பேசப் பொறுத்தமற்ற இடங்களில், பேசுகின்றார்கள் பலர். இதனால் உறவுகள் கெட்டுப் போகின்றன.

விவேகத்தை எப்படிக் கற்பது?

இதற்கும் பயிற்சி தேவை. நமது அனுபவங்களையும், பிறர் அனுபவங்களையும் பாடமாக்கிக் கொண்டு விவேகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.


ஈட்டி முனையுடன் வருபவரை மாற்றிக் காட்டும் சாகசம்!

நபி صلى الله عليه وسلم அவர்கள் – மதினாவில் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கும், மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் தனது முதல் இஸ்லாமிய அழைப்பாளராக மதினாவுக்கு அனுப்பியது – முஸ் அப் பின் உமைர் رَضِيَ اللَّهُ عَنْهُ – என்ற மிகச் சிறந்த நபித் தோழரைத் தான்!
இவர் ‘அல் முக்ரி’ – குர் ஆனின் ஞானமுடையவர் – என்று முஸ்லிம்களால் கண்ணியமாக அழைக்கப் பட்டார்.

அவருடைய கருத்துப் பரிமாற்றத் திறனைக் கொஞ்சம் கவனியுங்கள்.

முஸ் அப் அவர்களும் அஸ்அத் இப்னு ஜுராரா رَضِيَ اللَّهُ عَنْهُ என்ற இன்னொரு மதினத்து அன்சாரித் தோழரும் சேர்ந்து அங்கே அழைப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு நாள் அஸ்அத் அவர்களும் – முஸ் அப் அவர்களும் அழைப்புப் பணி நிமித்தமாக – ஒரு கோத்திரத்தாரின் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இது – மதினத்து கோத்திரங்களைச் சேர்ந்த ஸஅது இப்னு முஆத் மற்றும் உஸைத் இப்னு {ஹளைர் – ஆகிய இரு தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை.

முஸ்அபும் அஸ்அதும் தங்களின் தோட்டத்தில் அமர்ந்திருக்கின்றனர் என்று கேள்விப் பட்டவுடன் ஸஅத் உஸைதிடம் ‘நீ நமது எளீயோர்களை ஏமாற்றும் இந்த இருவரிடமும் சென்று அவர்களை எச்சரிக்கை செய்! நமது வீடுகளுக்கு அவர்கள் வரக்கூடாது என்று தடுத்து விடு! நான் அவர்களிடம் கூற முடியாததற்குக் காரணம் அஸ் அத் இப்னு ஜுராரா எனது சிறிய தாயின் மகன் ஆவார். இல்லாவிட்டால் நானே இதனைச் செய்திருப்பேன்’ என்று கூறினார்.

உஸைத் தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு இருவரையும் நோக்கி விரைந்து வந்தார். இதைப் பார்த்து விட்ட அஸ்அத், முஸ்அபிடம் கூறினார்: ‘இதோ, எனது கூட்டத்தின் தலைவர் வருகிறார். நீங்கள் அவரிடம் அல்லாஹ்வுக்காக உண்மையானவற்றைக் கூறி விடுங்கள்!’

‘அவர் என்னுடன் அமர்ந்தால் நான் அவருடன் பேசுவேன்’ என்றார் முஸ்அப்.

‘நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்! எங்களில் எளியோர்களை ஏமாற்றவா? உங்களுக்கு உயிரின் மீது ஆசை இருந்தால் இங்கிருந்து சென்று விடுங்கள்’ என்று கோபமாகப் பேசினார் உஸைத்.

அதற்கு முஸ் அப் அவரிடம் ‘நீங்கள் அமர்ந்து நான் சொல்வதைக் கேளுங்கள்! உங்களுக்கு விருப்பமாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பாவிட்டால் விட்டு விடுங்கள்!’ என்று கூறவே -

- உஸைத் ‘நீங்கள் சொல்வது சரி தான்!’ என்று கூறித் தனது ஈட்டியை நட்டு வைத்து அதற்கருகில் அமர்ந்து கொண்டார்.

முஸ் அப் அவர்கள் உஸைதுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்து குர் ஆனை ஓதிக் காட்டினார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவர் முகத்தில் மாற்றம் தெரிந்தது!

உடன் அவர் இஸ்லாத்தைத் தழுவுகிறார்!

பின்னர் ஸஅத் இப்னு முஆத் அவர்களுடனும் – இது போன்ற ஒரு சந்திப்புக்கு – ஏற்பாடு செய்யப் பட்டது!

முஸ் அப் அவர்கள் அமைதியாக ‘சஅதே! அமர்ந்து நான் கூறுவதைக் கேட்க மாட்டீர்களா? உங்களுக்கு நாங்கள் கூறுவது பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு நாங்கள் கூறுவது வெறுப்பாக இருந்தால் உங்களுக்கு விருப்பமற்றதிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம்’ என்று கூறினார்.

சரி – என்று கூறி தனது ஈட்டியை நட்டு வைத்து ஸஅத் அமர்ந்து கொண்டார்.

முஸ் அப் அவருக்கும் இஸ்லாத்தை அறிமுகம் செய்து குர் ஆனை ஓதிக் காட்டினார். அடுத்து ஸஅத் பேசத் துவங்கும் முன்பே அவரது முகத்தில் இஸ்லாம் பிரகாசித்தது!

உடன் அவரும் இஸ்லாத்தைத் தழுவுகிறார்!

இது என்ன விந்தை?

உயிரின் மீது ஆசை இருந்தால் இங்கிருந்து சென்று விடுங்கள் – என்று ஈட்டியுடன் வருகிற ஒருவரை தனது மார்க்கத்துக்குச் சொந்தக் காரராக மாற்றிக் காட்டும் சாகசம்!

இதில் என்ன சூட்சுமம் அடங்கியுள்ளது?

அமருங்கள் பேசுவோம் என்கிறார்.

விருப்பமிருந்தால்…. என்று ஒரு வாய்ப்பைக் கேட்கிறார்.

மார்க்கம் அறிமுகப் படுத்தப் படுகிறது.

குர் ஆன் ஓதிக் காட்டப் படுகிறது.

அவ்வளவு தான்!

வந்தவர் – இஸ்லாத்தில்! – சுப்ஹானல்லாஹ்!

அதே முறை மீண்டும்! அதே பலன் மீண்டும்!

இப்படிப் பட்ட கருத்துப் பரிமாற்றத் திறனை நாம் வேறு யாரிடத்தில் சென்றுக் கற்றுக் கொள்ள முடியும்?

இதில் நாம் கற்க வேண்டிய பாடங்கள்:

1. கோபமாக வருபவரை அமரச் செய்து பேசுவது நல்ல பலனைத் தரும். ஏனெனில் கோபத்தில் ‘அறிவு’ உள்ளே நுழையாது.

2. நபி (ஸல்) அவர்களின் வரலாற்று நூலிலிருந்து தான் இந்நிகழ்ச்சியை நாம் படிக்கிறோம். ஆனால் முஸ் அப் (ரலி) அவர்கள் பேசியதை, அவர் ‘எப்படி’ இதனைப் பேசியிருப்பார் என்று கற்பனை செய்து அசை போட்டுப் பாருங்கள். பேசும் போது அவர் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்திருக்கும்! அவர் ஈட்டியைக் கண்டு கலவரப் பட்டிருக்க மாட்டார்! அமைதியே உருவாக அவர் அந்தத் தலைவர்களை எதிர் கொண்டிருப்பார்!

3. குர் ஆன் வசனங்கள் தாம் உண்மையில் கவர்ந்திழுக்கக் கூடியது, என்பதில் சந்தேகமே இல்லை! ஆனால் – குர் ஆன் வசனங்களை ஓதிக் காட்டுவதற்கு முன்பு – பொறுத்தமான சூழல் ஒன்று (atmosphere) ஏற்படுத்தப் படுதல் அவசியம்.

4. அழைப்புப் பணிக்கு அவசியமான தேவை: கருத்துப் பரிமாற்றத் திறன்.

5. கருத்துப் பரிமாற்றத் திறன் இல்லாதவர்கள் அழைப்புப் பணியில் ஈடு பட்டால் – அது எதிர் விளைவுகளை ஏற்படுத்தலாம்.

6. நபி (ஸல்) அவர்கள் – ஒவ்வொரு பணிக்கும் மிகச் சரியானவரையே தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள்.

விவாதத் திறனுக்கு ஒரு அழகிய முன்மாதிரி நபி இப்ராஹிம் (அலை)!

அறிவுக்குப் பொறுத்தமான எந்த ஒரு விஷயத்தையும் மனிதன் ஏற்றுக் கொள்கிறான். அது அவன் இயல்பு. அறிவுக்குப் பொருந்தி வராத ஒரு விஷயம் அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் அது யாரிடம் இருந்து வந்தாலும் – அதனை மனித அறிவு நிராகரித்து விடுகிறது. எனவே நீங்கள் ஒரு விஷயத்தை அது உண்மை என்று உணர்ந்த நிலையில் மக்களுக்கு முன் சமர்ப்பிக்கும் போது – அந்த விஷயம் மனித அறிவுக்கு எப்படிப் பொருந்தி வருகிறது என்பதனை விளக்கிட வேண்டியுள்ளது.

நீங்கள் சமர்ப்பிக்கும் “உண்மையான” ஒரு விஷயத்தை ஒருவர் ஏற்க மறுக்கிறார்; விவாதம் புரிகிறார்; கேள்வி கேட்கிறார்; சந்தேகம் எழுப்புகிறார் எனில் – உங்கள் கருத்தை அவர் ஏற்கச் செய்திட, அல்லது உங்கள் கருத்துக்கு அவர் மறுப்புக்கூறிட இயலாமல் செய்து விட உங்களுக்கு இரண்டு விதமானத் திறமைகள் வேண்டும்.

ஒன்று: விவாதத் திறன் – argumentation skill

இரண்டு: மறுத்துரைக்கும் திறன்: refutation skill

இந்த இரண்டு திறன்களையும் ஒரு சேரக் குறிக்கும் திறனை – logical intelligence என்று குறிக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட திறமையின் உச்சக்கட்ட முன்மாதிரி தான் நபி இப்ராஹிம் (அலை)!

இதற்கு பின் வரும் இரண்டு வரலாற்றுச் சம்பவங்களே போதுமான சான்று:

ஒன்று:

அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு (இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை. (2: 258)

இரண்டு:

இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் – அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் “நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?” என்று கேட்ட போது: அவர்கள், “எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.

(அதற்கு) அவர், “நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையரும் – பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள்” என்று கூறினார். (அதற்கு) அவர்கள் “நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?” என்று கேட்டார்கள்.“அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.

“இன்னும்: நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!” (என்றும் கூறினார்.) அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்).“எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருப்பான்” என்று கூறினார்கள்.

அதற்கு (அவர்களில் சிலர்) “இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது” என்று கூறினார்கள். “அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு” என்று சொன்னார்கள்.

“இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?” என்று (அவர் வந்ததும்) கேட்டனர். அதற்கு அவர் “அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்” என்று கூறினார்.

(இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) “நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்” என்று பேசிக் கொண்டார்கள். பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; “இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!” (என்று கூறினர்).

“(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்” என்று கேட்டார். “சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?” (என்று இப்ராஹீம் கூறினார்). (21: 51- 67)

இப்படிப்பட்ட விவாதத் திறமைக்கு அண்ணல் நபியவர்களும் ஒரு அழகிய முன்மாதிரி என்பதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன என்பதை நாம் அறிவோம்.

நமது பொறுப்பு என்னவெனில் – இப்படிப்பட்ட திறன் சில குழந்தைகளிடம் இயல்பாகவே மிகுந்து காணப்படும். அந்தத் திறமையை அவர்கள் வளர்த்துக் கொள்ள நாம் உருதுணையாக இருந்திட வேண்டும். அவர்கள் அழகிய விவாதம் ஒன்றை முன் வைத்தால் அதனை நாம் பாராட்டிட வேண்டும்.

இப்படிப்பட்ட திறன் உள்ளவர்கள் – திறன் மிக்க ஆசிரியர்களாக வரலாம்; சிறந்த வழக்குறைஞர்களாக ஆகலாம். எல்லா மட்டங்களிலும் உள்ள தலைவர்களுக்கும் இந்தத் திறன் அவசியம். அழைப்பாளர்களுக்கும் இந்தத் திறன் அவசியம்.

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! (16: 125)

மேலும் – பிரச்னைகளைத் தீர்க்கும் குழுவில் இடம் பெறுபவர்களுக்கும், நிர்வாக முடிவுகள் எடுப்பவர்களுக்கும் இந்தத் திறன் மிக அவசியம்.

Comments