நீ ஒரு விதை என்றால் - உனது வெற்றி என்பது எது?

இதற்கு முன் எழுதிய கட்டுரையில் -  இறைவனால் மனிதர்களில் இருந்தே தேர்வு செய்யப் பட்ட அந்த இறைத்தூதர்கள் – மனிதனை மனிதனாக மாற்றிட அப்படி என்ன தான் செய்தார்கள்? - என்று கேட்டிருந்தோம்.  அதனை இங்கு பார்ப்போம்.


மனிதனுக்குள் பொதிந்துள்ள கருவூலங்கள் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தோமே - அவைகளின் பக்கம் மனிதர்களின் சிந்தனையைத் திருப்பினார்கள் இறைத்தூதர்கள்.  அவைகளைத் தூய்மைப்படுத்துவதன் அவசியத்தை உணர்த்தினார்கள்.


தூய்மைபடுத்தும் வழிகளைக் கற்றுத் தந்தார்கள். அறிவாற்றல், ஆன்மிக உணர்வு, நல்லொழுக்கம், மன வளம் - போன்ற - மனிதர்களின் எல்லா வளங்களையும் - மேம்படுத்துவதில் முழுக் கவனத்தையும் செலுத்தினார்கள்,

சிந்தனை, அறிவு, நம்பிக்கை – இம்மூன்றுமே மனிதனின் அடிப்படை வளங்களாகும். இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இம்மூன்றிலும் முதலிடம் வகிப்பது சிந்தனையே. தெளிவான சிந்தனை அறிவுக்கு வழி வகுக்கிறது. அறிவின் அடிப்படையிலேயே நம்பிக்கை பிறக்கிறது. சிந்தனையின்றி அறிவு பிறப்பதில்லை. அறிவு அற்ற நம்பிக்கை மூட நம்பிக்கையாகி விடுகின்றது.

எனவே முதலில் இறைத்தூதர்கள் மக்களை சிந்திக்க வைத்தார்கள். தன்னைப் பற்றியும், தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றியும் சிந்தியுங்கள் என்று அவர்களின் சிந்தனையைத் தூண்டி விட்டார்கள். அந்த சிந்தனையின் அடிப்படையில் அவர்களின் அறிவுக்கண்களைத் திறந்து விட்டார்கள். தெளிவான அறிவு நம்பிக்கையாக மலர்ந்தது.

வானம்-பூமி அமைந்திருப்பதிலும் இந்த பூமியில் மனிதனின் வாழ்க்கை அமைந்திருப்பதிலும் – இதன் பின்னணியில் இறைவனின் உள்ளமையும், அவன் வல்லமையும் பொதிந்துள்ளமையைப் புரிய வைப்பதையே தங்கள் முழு முதற்பணியாக அந்த இறைத்தூதர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

ஆம். இறைத்தூதர்கள் அனைவரும் – தங்கள் பணியில் முதன் முதலில் எடுத்துக் கொண்ட விஷயமே – மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவுப் பாலத்தைச் சரி செய்வதைத்தான். இறைவன் இருக்கின்றான் என்ற யதார்த்தத்தை – உண்மை நிலையை – ஒதுக்கி விட்டு மனிதன் எப்படி மனிதனாக முடியும்?

இறைவன் யார்? அவன் எப்படிப் பட்டவன்? மனிதன் யார்? மனிதன் எங்கிருந்து வந்தான்? மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன? – என்பதைப் புரிய வைத்தார்கள் இறைத்தூதர்கள்.

மனிதன் படைக்கப் பட்டதன் நோக்கத்தைப் புரிய வைத்தார்கள். இந்த பூமியில் மனிதன் வாழ்ந்து பின் அவன் சென்றடைய வேண்டிய இலக்கினைச் சுட்டிக் காட்டினார்கள்.

இவை அனைத்துமே சிந்தனை-அறிவு-நம்பிக்கை – இம்மூன்றின் அடிப்படையில் அமைந்து இறுதியில் அது அசைக்க முடியாத நம்பிக்கையாக (conviction) அவர்களுக்குள் பரிணமித்தது.

அடுத்து செயற்களம். இந்த செயற்களத்துக்கு இறைவன் இட்ட பெயர் – “நற்செயல்”. ஆங்கிலத்தில் good deeds. அரபியில் “அமலன் – ஸாலிஹ்”.

இந்த செயற்களத்தில் தான் இறைத்தூதர்கள் – ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளூம் பொதிந்திருக்கின்ற தனிப்பட்ட "ஆற்றல் கருவூலங்களைக்” (hidden unique talents) கண்டுபிடித்தார்கள். அவற்றைக் கண்டுபிடித்து வெளிக் கொணர்ந்தார்கள்.

இந்த செயற்களத்தின் சிறந்த முன்மாதிரியாகத் தாங்களே திகழ்ந்தார்கள். ஒவ்வொரு மனிதரையும் மனிதப்புனிதராக மாற்றிக் காட்டினார்கள்.

அதாவது தாதுப்பொருட்களிலிருந்து தங்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களை இருளிலிருந்து ஒளியின் பால் கொண்டு வந்து சேர்த்தார்கள். பஷர் ஆக இருந்தவனை இன்ஸான் ஆக மாற்றினார்கள்.

அதாவது விதை மரமானது. மரம் நிழலையும் தந்தது. கனிகளையும் தந்தது. மற்ற மக்கள் அந்த மரத்தடியில் வந்து இளைப்பாறினார்கள். கனிகளைப் புசித்தார்கள்.

அதாவது அந்த நம்பிக்கையாளர்களால் உலகம் பயனடைந்தது.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் இறைவனின் இறுதித் தூதர். தங்களின் 23 ஆண்டு கால இறைத்தூது வாழ்வில் ஆயிரக் கணக்கான மனிதர்களைத் தலை சிறந்த மனிதர்களாக மாற்றிக் காட்டினார்கள். சிந்தனையில், அறிவில், உணர்வில், தொலை நோக்குப் பார்வையில், நிர்வாகத் திறனில், பண்பில், பழகுவதில், ஒழுக்கத்தில், திறமைகளில் – என்று தம் தோழர்களின் எல்லா உள்ளாற்றல்களையும் வெளிக் கொணர்ந்தார்கள்.

அவர்களின் தோழர்கள் அனைவருமே -

- நல்ல சிந்தனையாளர்களாக உருவெடுத்தார்கள்.
- நல்ல இறையச்சமிக்கவர்களாக விளங்கினார்கள்.
- நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள்.

அது போலவே அவர்களுக்குள் மறைந்திருந்த தனிப்பட்ட ஆற்றல்களைக் கண்டுணர்ந்து - அவைகளை வளர்த்துக் கொண்டு - உலகுக்கு தம் பங்களிப்பை நிறைவாக வழங்குவதையே தங்களின் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து மறைந்தார்கள்.

இது ஒன்றே மனிதனை மனிதனாக்குகின்ற வழியாகும். இறைத்தூதர்கள் அனைவரையும் இறைவனே வழி நடத்திச் சென்றதால் இந்த ஒரே ஒரு வழி முறை (Divine Methodology) மட்டுமே வெற்றிகரமான வழி என்றும் நாம் துணிந்து சொல்லலாம்.

இப்போது நாம் கேட்ட கேள்விக்கு பதிலைச் சொல்லுங்கள்:

நீ ஒரு விதை என்றால் - உனது வெற்றி என்பது எது?  

Comments