நீ தலைவனாக விருப்பமா?

(மனித வள மேம்பாடும் தலைமைத்துவமும்)

தலைமைத்துவம் என்பது என்ன?

தலைமைத்துவம் என்பது பொறுப்புணர்ச்சியைக் குறிக்கும் (Responsibility).

தலைமைத்துவம் என்பது வழி காட்டும் திறனைக் குறிக்கும் என்பது திருமறைக் கருத்து.



தலைமைத்துவம் என்பது ஒருவர் தனது கருத்துக்களை முன் வைத்து மக்களுக்கு மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் (leadership is the capacity to influence) என்று சொல்லலாம்.

தலைமைத்துவம் என்பது இரண்டு திறன்களைக் கொண்டது என்பாரும் உண்டு:

முடிவெடுக்கும் திறன் (Decision making skill)

சிக்கல்களைத் தீர்க்கும் திறன் (Problem solving skill)

தலைமைத்துவம் என்பது சில அடிப்படையான பண்புகளைக் கொண்டது என்றும் சொல்லலாம். இதனையே தலைமைத்துவப் பண்புகள் (leadership qualities) என்று சொல்கிறார்கள்.

இவ்வாறு – தலைமைத்துவத்தின் எல்லாவிதமான திறமைகளையும் பண்புகளையும் வளர்த்துக் கொள்வது எப்படி?

மனித வளங்களை நாம் ஐந்து விதங்களாக பிரித்து ஆய்வு செய்து வருகிறோம் அல்லவா?

அவை: அறிவு வளம் (intellectual resources); ஆன்மிக வளம் (spiritual resources); மன வளம் (psychological resources); ஒழுக்க வளம் (ethical resources); உடல் வளம் (physical resources).

இந்த ஐந்து விதமான வளங்களையும் எந்த அளவுக்கு ஒருவன் வளர்த்துக் கொள்கின்றானோ அந்த அளவுக்கே ஒரு மனிதனின் ஒட்டு மொத்தத் தலைமைத்துவத் திறன் (total leadership capacity) அமைந்திருக்கும் என்றால் அது மிகையில்லை.

நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து விதமான மனித வளங்களும் தலைமைத்துவத்திற்கு மிக அவசியம் என்பதை வல்லோன் இறைவனே தனது திருமறையில் பல இடங்களில் அழகாகக் கோடிட்டுக் காட்டுகிறான்.

அற்புதம் என்னவென்றால் – இறுதி நபியாக வல்லோன் அல்லாஹு தஆலாவினால் தெரிவு செய்யப்பட்ட அண்ணல் நபியவர்கள் நாம் மேலே சொன்ன ஐந்து விதமான மனித வளங்களையும் மிகைபடவே பெற்றிருந்தார்கள் என்பது தான்!

வல்லோன் அல்லாஹ்வுக்கும் அண்ணல் நபியவர்களுக்கும் இருந்த நெருக்கம் ஆகட்டும், அவர்களுடைய உடல் வலிமை ஆகட்டும், அவர்களின் அறிவாற்றல் ஆகட்டும், உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் மன வளம் ஆகட்டும், நபியவர்களின் ஒழுக்க வலிமை ஆகட்டும் – இவை அனைத்தும் நபியவர்களைப் பொருத்தவரை தன்னிகரற்றவை! மனித வளங்களில் எல்லா மனிதர்களையும் மிகைத்து நின்ற ஒருவரைத்தான் நமக்கு அழகிய முன்மாதிரியாக ஆக்கியுள்ளான் வல்லோன் அல்லாஹ்!

எனவே நாம் இங்கே சொல்ல வருவது என்னவெனில் – நல்லதொரு தலைவனாக நீ வளர விரும்பினால் - மேலே சொல்லப்பட்ட அந்த ஐந்து பரிமாணங்களிலும் உன்னை  வளர்த்துக் கொள்வதில் நீ கவனம் செலுத்திட வேண்டும் என்பது தான்!

நாம் இங்கே பேசுவது அரசியல் தலைவர்களைப் பற்றி அல்ல!

ஏனெனில் இஸ்லாத்தைப் பொறுத்தவரை – நம்மில் ஒவ்வொருவரும் பொறுப்பு மிக்கவர்களே – எனும் அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் தலைவர்களே!

கணவன் என்பவன் நல்லதொரு குடும்பத்தலைவன்!

மனைவி என்பவள் நல்லதொரு குடும்பத்தலைவி!

குழந்தைகளைப் பொறுருத்தவரை தந்தையும் தலைவன் தான்; தாயும் தலைவி தான்!

பள்ளியைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு தலைவர் தான்!

ஆசிரியருக்கு அறிவாற்றல் அவசியம் என்பதற்கு விவாதம் எதுவும் தேவையில்லை.

ஒரு நிறுவனத்தை வழி நடத்தும் மேலாளரும் தலைவர் தான்; மக்களை “வழி நடத்தும்” அறிவுடையோர் அனைவருமே தலைவர்கள் தான்!

எனவே எனதருமை புதிய தலைமுறையே! உங்கள் மனித வளங்களை முறையாக நீங்கல் வளர்த்துக் கொள்ளுங்கள். சமூகத்துக்கு நல்ல தலைவர்கள் கிடைப்பது திண்ணம்!

Comments