நாமெல்லாம் சுரங்கங்களாம்!

முஹம்மது நபி (சல்) பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?

அவர்கள் - நம்மைப் பற்றி நச்சென்று ஒன்றைச் சொன்னார்கள். அதுவும் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னார்கள். என்ன சொன்னார்கள் தெரியுமா?


நாமெல்லாருமே சுரங்கங்களைப் போல! - என்றார்கள். அதுவும் தங்கத்தைப் போலவாம்! வெள்ளியைப் போலவாம்! அவர்கள் சொன்னதை அப்படியே தமிழில் பார்ப்போமா?


'மனிதர்கள் சுரங்கங்கள் - தங்கத்தைப்போல! வெள்ளியைப்போல!'

சுரங்கம் என்றால் என்ன? விலை மதிப்பிற்கரிய பொருட்கள் கனிமங்களாக, தாதுப் பொருட்களாக தோண்டத் தோண்டக் கிடைத்துக் கொண்டே இருக்கும் இடத்தைத் தான் நாம் சுரங்கம் என்கிறோம். சுரங்கங்களிலுள்ள தாதுப் பொருட்களைத் தோண்டி எடுத்துத் தூய்மைப் படுத்தினால் நமக்குச் சுத்தமான தங்கம் கிடைக்கும், வெள்ளி கிடைக்கும், நிலக்கரி கிடைக்கும். அவை மக்களுக்குப் பயன் படும்.

அது போலவே மனிதனும் ஒரு சுரங்கம் தான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் பொதிந்து கிடக்கின்ற "கருவூலங்கள்" - ஏராளம். அந்தக் கருவூலங்களை நாம் கண்டு பிடித்து, தோண்டியெடுத்து, தூய்மைப் படுத்தி - விலை மதிப்பிற்கரியவனாக மாற்றலாம் மனிதனை!

அப்படிச் செய்திடும்போது மனிதன் உண்மை மனிதனாக மாற்றப் படுகின்றான்! மற்றவர்களுக்குப் பயன்படக் கூடியவனாக மாறுகின்றான்!

அது என்ன மனிதனுக்குள் பொதிந்துள்ள "கருவூலங்கள்?"

1. அவனுக்கு சிந்திக்கும் ஆற்றல் உண்டு. (intellectual capacity)

2. அவன் தனது இயல்பிலேயே ஆன்மிக உணர்வை (spiritual awareness) பெற்றிருப்பவன்.

3. பல நற்பண்புகளை, குண நலங்களைப் (character) பெற்றிருப்பவன் மனிதன்.

4. அவனுக்கு மனசாட்சி ஒன்று உண்டு. தீய ஒன்றைச் செய்ய முற்படும்போது அவனை 'இடித்துக் காட்டுகின்ற மனம்' ஒன்று அவனுக்கு உண்டு.

5. அவன் பொலிவுடன் திகழ வல்ல உடல் வளத்தைக் (body) கொண்டவன்.

6. அவன் பல உணர்வுகளுக்குச் (psychological resources) சொந்தக்காரன்.

7. அவன் தனக்கென்று பல விருப்பங்களை (interests and passions) வைத்திருப்பவன். ஆர்வம் மிக்கவன்.

8. இவை எல்லாவற்றையும் விட மற்ற எந்த ஒரு படைப்பினத்துக்கும் இல்லாத தாமே ஒன்றைத் தெரிவு செய்து செயல்படுகின்ற சுய அதிகாரம் கொண்டவன்.

இவ்வளவு ஆற்றல்களையும், திறமைகளையும், வளங்களையும் தான் நாம் மனிதனுள்ளே புதைந்து கிடக்கின்ற கருவூலங்கள்!

சிந்தனைக்கு:

கேள்வி 1: மேலே சொல்லப்பட்ட வளங்களையெல்லாம் மனிதனுக்குத் தந்தது யார்? இறைவனா? அல்லது - இறைவனை மறுப்பவர்கள் சொல்வது போல், இந்த வளங்கள் அனைத்தும் தற்செயலாக மனிதனுக்கு அமைந்து விட்டனவா?

கேள்வி 2: இவ்வளவு வளங்களையும் பெற்றிருக்கும் மனிதன் - இவ்வுலகில் வாழ்ந்திட வாய்ப்பளிக்கப் பட்டிருப்பது எதற்காக? உண்டு, வளர்ந்து, செத்து மடிந்திடவா? அல்லது மனித வாழ்க்கைக்கு உயர்ந்த நோக்கம் ஒன்று இருந்திட வேண்டுமா?

Comments