உங்களிடம் ஒரே ஒரு திறமைதானா? கவலை வேண்டாமே!

ஒரு சிலருக்கு ஒரே ஒரு திறமை மட்டுமே இருக்கும். அதனை மட்டுமே அவர்களால் திறம்பட செய்திட முடியும். வேறு எந்த ஒரு வேலையையும் அவர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஆர்வம் காட்டிட மாட்டார்கள்.


இப்படிப்பட்டவர்கள் – சாதாரணப் பணியாளர்களாகவும் இருப்பார்கள். தலைசிறந்த அறிவியலாளர்களாகவும் திகழ்ந்திட வாய்ப்புண்டு,

இப்படிப்பட்ட சிலரை நீங்கள் உங்கள் அனுபவத்திலேயே பார்த்திருப்பீர்கள்:

இப்போது கேள்வி என்னவெனில் நீங்கள் இப்படிப்பட்டவர்களில் ஒருவர்தானா?உங்களுடைய தன்னம்பிக்கையை உயர்த்திடவே இக்கட்டுரை.


சில குழந்தைகளைப் பற்றி அவர்களின் பெற்றோர்களே இப்படி அலுத்துக் கொள்வது உண்டு:”ஒரு தடவை கூட இவன் ராங்க் Rank எடுத்தது கிடையாது; ஆனால் கணக்குப் பாடத்தில் மட்டும் 90- க்குக் கீழே மார்க் வாங்கியதே கிடையாது.”" இவன் ஒரு பாடத்தில் கூட பாஸ் மார்க் வாங்கியதில்லை. ஆனால் படங்கள் மட்டும் நன்றாக வரைகிறான். படம் வரைஞ்சி என்ன பண்றது?”

கல்லூரி முதல்வர் ஒருவர் என்னிடம் சொன்னார்: “நான் எத்தனையோ பேரை படிக்க வைத்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறேன்; ஆனால் என் மகனுக்கு படிப்பே வரவில்லை. பல கல்வி நிலையங்களுக்கு மாற்றி மாற்றி அனுப்பிப்பார்த்து விட்டேன். ஒரு முன்னேற்றமும் இல்லை; ஆனால் எங்கே சேர்த்து விட்டாலும், ஒரு பத்து பேரையாவது நண்பர்களாக ஆக்கிக் கொண்டு விடுகிறான்.” (இந்த மாணவனின் திறமை எது என்று தெரிகிறதா?)

இப்படிப்பட்ட ஒரே ஒரு திறமையை மட்டுமே உடையவர்கள் தான் – LAZER PROFILE உடையவர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள்.

இவர்கள் வாழ்வில் வெற்றி பெற சாத்தியங்கள் உண்டா எனில் நூறு சதவிகிதம் உண்டு என்பதே மகத்தான உண்மை!

இப்படிப்பட்டவர்கள் என்ன செய்திட வேண்டும்.

முதலில் – இவர்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்.

அடுத்து – மற்றவர்களை ஒருக்காலும் தங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திடக் கூடாது. எனக்கு அந்தத் திறமை இல்லையே, இந்தத் திறமை இல்லையே என்று கவலைப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

உங்களுக்குத் திறமை இல்லாத ஒன்று. ஆனால் அதில் உங்களுக்கு “ஆர்வம்” (interest) மட்டும் இருக்கிறது எனில் – என்ன செய்திட வேண்டும்? முழுமையாக முயற்சி செய்து பார்த்திட வேண்டும். முயற்சி செய்திடாமல் “எனக்கு இது வராது” என்று முயற்சி செய்வதை விட்டு விடக் கூடாது;

போதுமான அளவு முயற்சி செய்த பின்பும் அந்த திறன் நமக்கு வசப்படவில்லை எனில் கவலை வேண்டாம். அதனை அல்லாஹ் நமக்கு நாடவில்லை என்று எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து நீங்கள் செய்திட வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவெனில் உங்களின் அந்த ஒரே திறமையின் மீது உங்கள் கவனத்தை முழுவதும் திருப்புங்கள். அதாவது FOCUS செய்திடுங்கள். உங்களின் பொன்னான எல்லா நேரங்களையும் அதில் ஈடுபடுத்துங்கள். ஒரு நாளைக்கு 12 முதல் 14 மணி நேரம் வரை அதில் நீங்கள் செலவழித்திட வழி காட்டுகிறார் ஒரு Management Consultant.

அந்தத் திறமையில் நீங்கள் தலை சிறந்து விளங்கிட எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். அந்த ஒரு விஷயத்தில் உங்களைத் தட்டிக் கொள்ள வேறு யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேறிச் சென்றிடுங்கள்.

இவர் ஒரு மெக்கானிக்; ஒரு மிஷின் பழுதடைந்து விட்டால் அது எப்படிப் பழுதடைந்தது என்பதைக் கண்டு பிடித்திடுவதில் இவர் ஒரு கில்லாடி! ஒரு மிஷினுக்குள் அவர் “புகுந்து விட்டால்” அவர் தன்னையே மறந்து விடுவாராம். இவரைப் பற்றி இவரது முதலாளி சொன்னாராம்: இவரைப் போன்று ஒரு ஐந்து பேர் என்னிடம் இருந்தார்களென்றால் அமெரிக்காவிலேயெ மிகப் பெரிய பணக்காரர்களில் நானும் ஒருவனாகி விடுவேன்!”

வல்ல இறைவன் தனது திருமறை குர் ஆனில் சொல்கிறான்:

மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும். நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம். பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து- பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம். திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்- ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் – அடர்ந்த தோட்டங்களையும், பழங்களையும், தீவனங்களையும் (புற்பூண்டுகளையும் )- (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக, (80: 24 – 32)

மழையைக் கொண்டு – இறைவன் முளைப்பிக்கச் செய்த பல்வேறு தாவரங்களைக் குறிப்பிட்ட இறைவன் “புற்பூண்டுகளையும்” முளைப்பிக்கச் செய்ததாகக் குறிப்பிடுகின்றான்.

புற்பூண்டுகளின் பயன் என்ன? நமது கால்நடை பிராணிகளுக்கு அவை உணவாகின்றன! அவ்வளவுதான்! ஒரே ஒரு பயன் தான்! பல்வேறு விதங்களில் பயனளிக்கக்கூடிய தாவரங்களுடன் ஏன் தீவனங்களையும் படைக்கிறான் இறைவன்.

நமது கால் நடைகளுக்கு உணவாகிடுகின்ற புற்பூண்டுகள் இறைவனால் படைக்கப்படவில்லை எனில் என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். கால் நடைகள் என்னவாகும்? பால் உற்பத்தி என்னவாகும்? இந்த ஒரே ஒரு விஷயம் கூட மனித வாழ்வை எப்படியெல்லாம் பாதிக்கும் என்று ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.

ஒரு சுவாரஸியமான விஷயம்:

தொழிற்சாலைகளில் மிகச் சாதாரண வேலைகளுக்கு அமர்த்தப் படுபவர்கள் factory fodders என்று தான் அழைக்கப்படுகின்றார்கள். Fodders என்றால் தீவனம் என்று தான் பொருள்.

அது போலத் தான் – மனித இனத்தின் வாழ்க்கை அமைப்பும். பல திறமைகளை உள்ளடக்கிய மனிதர்களுடன் ஒரே ஒரு திறமை கொண்டவர்களையும் சேர்த்தே இறைவன் படைத்திருகின்றான். ஏன்? மனித வாழ்க்கை சீராக நடை பெற்றிடத்தான்!

பல திறன் படைத்தவர்களை நாம் கேட்டுக் கொள்வதெல்லாம்

- யாரையும் திறமையற்றவர்கள் என்று ஒதுக்கித் தள்ளாதீர்கள். ஒரே ஒரு சிறிய திறமையை கொண்டே கூட ஒருவர் உலகுக்கு தனது பங்கைத் திறம்பட ஆற்றிட முடியும்.

எனவே அத்தகையவர்களை மட்டம் தட்டாதீர்கள். ஏனெனில் உங்களைப் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைத்த அந்த அல்லாஹு தஆலா தான் அவர்களையும் படைத்து உலகுக்கு அனுப்பி வைத்திருக்கின்றான் என்பதை மறந்து விட வேண்டாம்.

அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களின் முன்மாதிரியும் அப்படித்தான் இருக்கிறது. நபித்தோழர்களின் வரலாறுகளே இதற்குச் சான்று!

Comments