விவாதம் புரிவதில் ஆர்வமா?

(விவாதத் திறனுக்கு ஒரு அழகிய முன்மாதிரி நபி இப்ராஹிம் (அலை)!)

அறிவுக்குப் பொறுத்தமான எந்த ஒரு விஷயத்தையும் மனிதன் ஏற்றுக் கொள்கிறான். அது அவன் இயல்பு. அறிவுக்குப் பொருந்தி வராத ஒரு விஷயம் அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் அது யாரிடம் இருந்து வந்தாலும் – அதனை மனித அறிவு நிராகரித்து விடுகிறது.



எனவே நீங்கள் ஒரு விஷயத்தை அது உண்மை என்று உணர்ந்த நிலையில் மக்களுக்கு முன் சமர்ப்பிக்கும் போது – அந்த விஷயம் மனித அறிவுக்கு எப்படிப் பொருந்தி வருகிறது என்பதனை விளக்கிட வேண்டியுள்ளது.

நீங்கள் சமர்ப்பிக்கும் 'உண்மையான' ஒரு விஷயத்தை ஒருவர் ஏற்க மறுக்கிறார்; விவாதம் புரிகிறார்; கேள்வி கேட்கிறார்; சந்தேகம் எழுப்புகிறார் எனில் – உங்கள் கருத்தை அவர் ஏற்கச் செய்திட, அல்லது உங்கள் கருத்துக்கு அவர் மறுப்புக்கூறிட இயலாமல் செய்து விட உங்களுக்கு இரண்டு விதமான ததிறமைகள் வேண்டும்.

ஒன்று: விவாதத் திறன் –  argumentation skill

இரண்டு: மறுத்துரைக்கும் திறன்: refutation skill

இந்த இரண்டு திறன்களையும் ஒரு சேரக் குறிக்கும் திறனை – logical intelligence என்று குறிக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட திறமையின் உச்சக்கட்ட முன்மாதிரி தான் நபி இப்ராஹிம் (அலை)!

இதற்கு பின் வரும் இரண்டு வரலாற்றுச் சம்பவங்களே போதுமான சான்று:

ஒன்று:

அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: 'எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு (இறைவன்)' என்று;

அதற்கவன், 'நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்' என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: 'திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!' என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை. (2: 258)

இரண்டு:

இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் – அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் 'நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?' என்று கேட்ட போது: அவர்கள், 'எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.

(அதற்கு) அவர், 'நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையரும் – பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள்' என்று கூறினார். (அதற்கு) அவர்கள் 'நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?' என்று கேட்டார்கள்.'

அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்' என்று (இப்ராஹீம்) கூறினார்.

'இன்னும்: நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!' (என்றும் கூறினார்.) அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்).'எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருப்பான்' என்று கூறினார்கள்.

அதற்கு (அவர்களில் சிலர்) 'இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது' என்று கூறினார்கள். 'அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு' என்று சொன்னார்கள்.

'இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?' என்று (அவர் வந்ததும்) கேட்டனர். அதற்கு அவர் 'அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்' என்று கூறினார்.

(இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) 'நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்' என்று பேசிக் கொண்டார்கள். பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; 'இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!' (என்று கூறினர்).

'(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்' என்று கேட்டார். 'சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?' (என்று இப்ராஹீம் கூறினார்). (21: 51- 67)

இப்படிப்பட்ட விவாதத் திறமைக்கு அண்ணல் நபியவர்களும் ஒரு அழகிய முன்மாதிரி என்பதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன என்பதை நாம் அறிவோம்.

இப்படிப்பட்ட திறன் சில குழந்தைகளிடம் இயல்பாகவே மிகுந்து காணப்படும். அந்தத் திறமையை அவர்கள் வளர்த்துக் கொள்ள பெற்றவர்கள் உறுதுணையாக இருந்திட வேண்டும். அவர்கள் அழகிய விவாதம் ஒன்றை முன் வைத்தால் அதனை நாம் பாராட்டிட வேண்டும்.

இப்படிப்பட்ட திறன் உள்ளவர்கள் – திறன் மிக்க ஆசிரியர்களாக வரலாம்; சிறந்த வழக்குறைஞர்களாக ஆகலாம். எல்லா மட்டங்களிலும் உள்ள தலைவர்களுக்கும் இந்தத் திறன் அவசியம். அழைப்பாளர்களுக்கும் இந்தத் திறன் அவசியம்.

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! (16: 125)

மேலும் – பிரச்னைகளைத் தீர்க்கும் குழுவில் இடம் பெறுபவர்களுக்கும், நிர்வாக முடிவுகள் எடுப்பவர்களுக்கும் இந்தத் திறன் மிக அவசியம்.

Comments