வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு! பயன்படுத்திக்கொள்ளத் தவறாதீர்கள்!

ஒவ்வொரு மனிதனும் ஒரு சூழ்நிலையுடன் தான் பிறக்கின்றான். ஒரு மனிதனின் சூழ்நிலைகள் சில வேளைகளில் அவனது உள்ளாற்றல்களைப் பயன் படுத்திடத் தடையாக அமைந்து விடுவதுண்டு. குறிப்பாக ஏழைகள்,


அனாதைகள், அடிமைகள், பெண்கள், கறுப்பர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் – இத்தகையவர்களின் உள்ளாற்றல்கள் கண்டுபிடிக்கப் படாமலேயே போய்விட வாய்ப்புண்டு. அவர்கள் தங்களின் மதிப்பை உணர்ந்திருக்க மாட்டார்கள்.


அவர்களுக்கு யாரும் கண்ணியம் அளிப்பதுமில்லை. அவர்களுக்கு வாய்ப்புகளும் தரப்படுவதில்லை. இந்நிலையில் அவர்களுக்குள் பொதிந்துள்ள உள்ளாற்றல்களின் நிலை என்ன? இவர்கள் – யாரும் கேட்பாரற்ற நிலையில் கிடக்கின்ற பட்டை தீட்டப் படாத இரத்தினக் கற்களுக்குச் சமம்.

ஆனால் இத்தகையவர்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அத்தகைய இரத்தினக் கற்களைப் பட்டை தீட்டி உலகோர் முன் சமர்ப்பித்தார்கள். ஆயிரக் கணக்கான சான்றுகள் இருக்கின்றன. ஒரு சில சான்றுகளை மட்டும் பார்ப்போம்.

பிலால்.

பிலால். ஓர் அடிமை. கறுப்பு நிறத்தவர். தனக்கென்று எந்த ஒரு சுய மதிப்பும் இல்லாதவர். அவர் இஸ்லாத்தினை ஏற்கிறார். அதற்காக பல இன்னல்களைச் சந்திக்கிறார். இஸ்லாம் அவருக்கு கண்ணியம் வழங்குகிறது. உயர் குலத்தைச் சேர்ந்த்தவர்களெல்லாம் அவரை 'எங்கள் தலைவரே' என்றழைக்கிறார்கள். அவருக்கு அப்படி ஒரு குரல் வளம்.அவர் குரலில் 'பாங்கொலி' கேட்டு மெய் சிலிர்க்காதவர் யாருமில்லை. அதன் பின் அவர் எந்த நிலைக்கு உயர்த்தப் படுகிறார் தெரியுமா? அவரே, முதல் இறை ஆலயமாம் கஅபாவின் (மக்களை தொழுகைக்கு அழைக்கின்ற) முதல் அழைப்பாளராக நியமிக்கப் படுகிறார்.

ஜுலைபீப்.

இவரும் முன்னால் அடிமையே. மிக மிகக் குள்ளமானவர் (dwarf). முகத்தில் எந்த ஒரு அழகையும் பெற்றிடாதவர். யாரும் இவரை விரும்புவதில்லை. எந்த ஒரு சமூக நிகழ்ச்சிக்கும் இவரை அழைப்பாரில்லை. இவர் வந்து விட்டாலோ – முகம் சுளிப்பு. எனவே அவரும் ஒதுங்கிக் கொண்டார் – கூண்டிலடைபட்டவரைப் போல்.

இஸ்லாம் அவரைக் கண்டெடுத்தது. அவரை வெளிக் கொணர்ந்தது. மதினாவிலேயே மிகச் சிறந்த ஒரு பெண்ணை அவருக்கு மணமுடித்துத் தருகின்றார்கள் நபியவர்கள். அவருடைய உள்ளாற்றல்கள் எப்படி வெளிப் படுகிறது தெரியுமா? அவர் போர்க்களம் செல்கிறார். வீர சாகசங்கள் புரிகிறார்! எதிரிகளில் எழுவரைக் கொன்று விட்டு உயிர்த்தியாகியாக இறைவனிடம் போய்ச் சேர்கிறார்.

சலீம்.

இவரும் ஓர் அடிமையே. தந்தை பெயர் அறியாதவர். இஸ்லாத்தை ஏற்கிறார். இவரிடம் இருந்த 'அறிவு நுட்பம்' எனும் உள்ளாற்றலை வெளிப் படுத்திக் காட்டியது இஸ்லாம். 'நீங்கள் திருக்குர்ஆனை இந்த நால்வரிடம் கற்றுக் கொள்ளுங்கள்' என்று நபியவர்களால் நற்சான்று வழங்கப் பட்டவர்களுள் இவரும் ஒருவர்.

துணிவு – இவரிடம் காணப்ப்ட்ட இன்னொரு உள்ளாற்றல். காலித் பின் வலித். முஸ்லிம்களின் ஒப்பற்ற தளபதிகளுள் ஒருவர். உயர்குலத்தைச் சேர்ந்தவர். இவர் தனிப்பட்ட ஒரு விவகாரத்தில் நியாயமின்றி ஒருவரைக் கொன்று விடுகிறார். அந்தச் சமயத்திலேயே அவரைத் தட்டிக் கேட்கும் துணிவு இந்த முன்னால் அடிமை சலீமுக்கு மட்டுமே இருந்த்து. இவரும் உயிர்த்தியாகியாகவே மரணத்தைத் தழுவுகிறார்.

இவரின் அந்தஸ்து எந்த அளவுக்கு உயர்ந்தது எனில் – இரண்டாம் கலீஃபா உமர் அவர்கள் தமது மரணத் தருவாயில் சொன்னார்கள்: சலீம் மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால் நான் அவரையே அடுத்த கலீஃபாவாக தெரிவு செய்திருப்பேன்.

சரி,அப்படியானால் உயர்குலத்தில் பிறந்தவர்கள், செல்வந்தர்கள், அதிகாரம் கை வரப்பெற்றவர்கள், 'வெள்ளை' நிறத்தவர்கள், – இவர்களின் நிலை? இவர்கள் எல்லா வாய்ப்புகளும் கை வரப்பெற்றவர்கள். இவர்களுக்குள்ளும் ஏராளமான உள்ளாற்றல்கள். இவர்களின் உள்ளாற்றல்கள் தூய்மைப் படுத்தப் படாவிட்டால் நிலைமை என்ன ஆகும் என்று சற்று சிந்தியுங்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மனிதர்களின் உள்ளாற்றல்கள் தவறாகப் பயன்படுத்தப் பட்டு விடும். இவர்களின் சிந்தனை வளம் தந்திரம் செய்யப்படும். இவர்களின் அறிவாற்றல் அழிவுப் பணிக்குப் பயன்படுத்தப்பட்டு விடும். ஹிரோஷிமா என்ற சான்று ஒன்று போதும் தானே. உணர்வு என்பது மனிதனின் வலிமை மிக்க ஒரு உள்ளாற்றல். அது வெறியாக மாற்றப் பட்டு விடும். நிர்வாகத் திறன் இராஜ தந்திரமாக மாறி விடும். தொலைநோக்குப் பார்வை சதித் திட்டங்கள் தீட்டவே பயன்படும்.

ஆனால் இஸ்லாம் உயர்குலத்துச் செல்லப் பிள்ளைகளை எப்படி மாற்றியது தெரியுமா? சில சான்றுகளை மட்டும் பார்ப்போம்.

உமர்.

சிறு வயதில் தந்தையின் ஒட்டகங்களை மேய்த்து வந்தவர். முஹம்மது நபியைக் கொல்லத் துணியும் அளவுக்கு உணர்ச்சிப் பிழம்பானவர். இஸ்லாம் அவரைத் தூய்மைப் படுத்தியது. அவருக்கு வாய்ப்பையும் கொடுத்தது. இரண்டாம் கலீஃபாவாக உயர்கிறார். பதவி சுகம் காணவா? இல்லை. மரத்தடியில் படுத்து உறங்குகிறார். ஏழைத் தாய்க்காக உணவு சுமந்து செல்கிறார். நீதிக்கு ஓர் உமர் என்று பெயர் பெறுகிறார்.

முஸ்அப்.

பெரும்பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளை. இஸ்லாம் இவரைக் கண்டெடுத்தது. அறிவுக் கூர்மை என்றால் அப்படி ஓர் அறிவுக் கூர்மை. நபியவர்கள் மதினா வந்து சேர்வதற்கு முன்பு முதல் அயலகத் தூதராக அங்கு அனுப்பப்பட்டவர். அங்கே இஸ்லாத்துக்கு நல்லதொரு தளம் அமைப்பதில் வெற்றி கண்டவர்.

இவர் அமர்ந்து பேசினால் எதிரியும் நண்பனாகி விடுவார். இஸ்லாத்தையும் தழுவி விடுவார். அப்படிப்பட்ட ஒரு கருத்துப் பரிமாற்றத் திறமை (communication skill) அவருக்கு. ஆனால் அவர் மரணித்த போது அவரது நிலை என்ன தெரியுமா? அவர் அணிந்திருந்த ஆடை அவரது உடலைக் கூடப் போர்த்திடப் போதுமானதாக இல்லை.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்.

வியாபாரத் திறமை மிக்கவர். இவர் மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது – வெறுங்கையுடன் தான் வந்தார். மிகக் குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய வியாபாரியாகி விட்டார். செல்வத்தை சேர்த்து வைத்துக் கொண்டாரா? தனக்கென செலவழித்துக் கொண்டாரா? அள்ளிக் கொடுத்தார் ஏழைகளுக்காகவும், இஸ்லாமியப் பணிகளுக்காகவும்.

தங்கத்தை கிலோ கணக்கில் தர்மம் செய்தவர் இவர். ஒரு தடவை இவர் செய்த தர்மத்தின் அளவு என்ன தெரியுமா? 600 ஒட்டகங்கள் சுமந்து வந்த இவரது வியாபாரப் பொருட்கள் முழுவதும்!

அன்றைய ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று ஒதுக்கி வைத்திருந்த அந்த அரேபிய மக்களை இஸ்லாம், பேரரசுகளை நிர்மாணிப்பவர்களாக (empire builders) மாற்றிக் காட்டியது. இஸ்லாம் மட்டும் இவர்களைக் கண்டெடுக்கவில்லை என்றால், இவர்களெல்லாம் அரபு நாடோடிகளாக வாழ்ந்து மறைந்து போயிருப்பர்.

இது ஒரு மிகப்பெரிய புரட்சி. தாம் உருவாக்கிய தலைமுறை குறித்து நபியவர்கள் இவ்வாறு சொன்னார்கள்:

'எனது சமுதாயத்தினரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே!'

இவ்வாறு நற்சான்று வழங்கிட யாரால் முடியும்?

இப்போது கேள்வி என்ன என்றால் - நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்?

உங்களின் ஆற்றல்களைக் கண்டுபிடித்து மெருகேற்றிக் கொள்ள வாய்ப்பே இல்லாத சூழலிலா?

அல்லது எல்லா வாய்ப்புகளும் கைவரப்பெற்று - உங்கள் ஆற்றல்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வழி தெரியாமல், உங்களின் ஆற்றல்கள் வீணடிக்கப் படும் சூழலிலா?

நீங்கள் எப்படிப்பட்ட சூழலில் சிக்கிக் கொண்டிருந்தாலும் - உங்கள் ஆற்றல்களை உங்களுக்கே உணர்த்தி, அவைகளைத் தூய்மைப்படுத்தி, அவைகளை மெருகேற்றி வளர்த்து அவை அனைத்தையும் உலக மக்களின் நலனுக்காக  நீங்கள் பயன்படுத்திட வேண்டும் என்பதே உங்களைப் படைத்த இறைவனின் விருப்பம்.

வாழ்க்கை என்பது ஒரே ஒரு வாய்ப்புத் தான்! உங்கள் வாழ்வின் இலக்கு என்ன என்பது குறித்துச் சிந்திக்க மறந்து விடாதீர்கள்!     

Comments