யாரும் யாரையும் விட தாழ்ந்தவர்கள் கிடையாது!

'மக்கள் சுரங்கங்களைப் போன்றவர்கள் – தங்கத்தைப் போல, வெள்ளியைப் போல.' – என்றார்கள் இறைவனின் தூதர் முஹம்மது நபி(சல்) அவர்கள்.

இந்த நபி மொழியை நாம் திரும்பவும் திரும்பவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம். ஏனெனில் இந்த மிகச் சிறிய நபி மொழியில் பல ஆழமான அற்புதமான கருத்துக்கள் அடங்கியுள்ளன. எனவே பல கண்ணோட்டங்களிலும் இந்த நபி மொழி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படும்.



மக்களையும் சுரங்கத்தையும் ஒப்பிட்டு நபியவர்கள் கூறியதில் நமக்கென்ன பாடங்கள்? இக்கட்டுரையில் ஒரே ஒரு பாடத்தைப் படித்துக் கொள்வோம்.

இந்த ஒப்பீட்டின் படி – மனிதர்கள் தங்கத்தைப் போல வெள்ளியைப் போல விலை உயர்ந்தவர்கள். விலை மதிப்பற்றவர்கள்! இஸ்லாத்தின் பார்வையிலே மனிதப் படைப்பு என்பது மிக உயர்ந்த படைப்பு! He is precious!

இங்கு நபியவர்கள் பொதுவாக மனிதர்கள் என்று குறித்துச் சொன்னது கவனிக்கத் தக்கது. அதாவது – மனிதர்கள் அனைவருமே விலை மதிப்பற்றவர்கள் தான்!

அதாவது – மேற்குலகம் மார் தட்டிக் கொள்வது போல, மனிதர்களில் சிறந்தவர்கள் வெள்ளையர்களே என்ற கருத்து ஒரு அப்பட்டமான பொய்யாகும்! இங்கே பிராமணர்களே சிறந்தவர்கள் என்று ஒரு சாரார் நெஞ்சு நிமிர்த்துவதும் பொய்யான வாதமே!

வெள்ளையனாக இருந்தாலும், கறுப்பினத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், உயர் குலத்தோனும், தாழ்த்தப் பட்டவனும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், பணக்கார வீட்டுக் குழந்தையானாலும், ஏழையாக ஒருவன் பிறந்தாலும் – இவர்கள் அனைவருமே விலை மதிப்பற்றவர்கள் தாம்!

யாரும் யாரையும் இழிவாகக் கருதிட வேண்டாம் என்பது நபிமொழி.

நபி (ஸல்) அவர்கள் வரலாற்றில் காணக் கிடைக்கின்ற ஒரு நிகழ்ச்சி இது:

மக்களால் அவ்வளவாக மதிக்கப்படாத அடிமை ஒருவர். இவர் நபி ஸல் அவர்களை சந்திக்க அவ்வப்போது மதினா வருவார். வரும்போதெல்லாம் தவறாமல் நபியவர்களுக்கு ஏதேனும் ஒரு அன்பளிப்பு ஒன்றை வாங்கி வரத் தவறுவதில்லை.

ஒரு முறை – அவர் நபியவர்களை சந்திக்க மதினா வந்து அன்பளிப்புப் பொருள் ஒன்றை வாங்க அங்காடி ஒன்றுக்கு சென்றிருந்தார். இவரைக் கண்ட மற்ற நபித்தோழர்கள், அவருடைய வருகை குறித்து நபியவர்களிடம் தெரிவித்து விட்டனர். உடனே நபியவர்கள் அந்த அங்காடிக்குச் சென்று, அவரை பின் பக்கமாகச் சென்று கட்டிப் பிடித்துக் கொண்டு, 'இவரை விலைக்கு வாங்குவார் யாரும் உண்டா?' – என்று கேட்டார்கள். தன்னைக் கட்டிப்பிடித்தது நபியவர்கள் என்று அறியாத அவர், தன்னை விடுவித்துக் கொண்டு திரும்பிப் பார்த்திட அது நபியவர்கள் தான் என்பதைக் கண்ட அவர், 'யார் இந்த அடிமையை விலை கொடுத்து வாங்குவார்கள் நபியே?' என்று கேட்க, அல்லாஹ்விடத்தில் உமது மதிப்பு மிக மிக அதிகமே' என்றார்களாம்.

இது தான் நமது மனப்பாங்காக இருந்திட வேண்டும்!

'நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள பலவற்றையும் விட அவர்களை மேன்மைப் படுத்தினோம். (17:70)

இப்போது பாடங்களுக்கு வருவோம்.

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் அனைவருமே விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் தான் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். அப்படியே அவர்களை நடத்துங்கள்.

அது போலவே – உங்கள் குழந்தைகளுக்கு, மனிதர்கள் அனைவரையும் 'மதித்திட வேண்டும்' என்பதைக் கற்றுக் கொடுங்கள். யாரையும் அவர்கள் மட்டம் தட்டிப் பேசிட அனுமதிக்காதீர்கள். உங்கள் வீட்டு வேலைக்காரருக்குக் கூட உங்கள் குழந்தைகள் மதிப்பளிக்கக் கற்றுக் கொடுங்கள். நீங்களும் மதிப்பளியுங்கள்.

ஆசிரியர்களே! உங்கள் மாணவர்கள் அனைவருமே பொக்கிஷங்கள் தான். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களைப் பாராட்டுங்கள். ஆனால் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை அவமானப் படுத்தாதீர்கள். அவர்கள் வேறு விதமான சுரங்கங்களாக இருக்கலாம் என்பதை உணருங்கள்.

புதிய தலைமுறை முஸ்லிம்களே! உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது. உங்களுக்கு முந்தைய தலைமுறை முஸ்லிம்கள் செய்த தவறை நீங்கள் செய்து விடக் கூடாது. அவர்கள் மனிதர்களை வேறு படுத்தி நடத்துவதில் மற்றவர்களைப் போலவே நடந்து கொண்டார்கள். அவர்களில் ஒரு சிலர் தங்களின் வம்சப் பரம்பரைப் பெருமை பேசினார்கள். ஒரு சிலர் மற்ற சிலரை தாழ்த்தப் பட்டவர் போன்று நடத்தினர். (விரிவாக எழுதிட இது இடமல்ல.)

வேண்டப் படுவது என்னவெனில் – நீங்கள் மனிதர்கள் அனைவரையும் கண்ணியமாக நடத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு கேள்வி கேட்கப் படலாம். பாவம் செய்பவர்களை எவ்வாறு கண்ணியப் படுத்த முடியும் என்று.

ஆதத்தின் மக்கள் அனைவருமே பாவம் செய்திடும் சூழலோடு தான் படைக்கப் பட்டிருக்கின்றார்கள். ஏன், நமது கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால் நாம் கூட பாவங்கள் பல செய்தே இருப்போம்.

பாவம் செய்பவர்களிடத்தில் நமது அணுகு முறை எவ்வாறு இருக்க வேண்டும் எனில், ஒரு மருத்துவர் போன்று இருந்திட வேண்டும். ஏனெனில் அவர் பாவம் எனும் நோயில் வீழ்ந்திருக்கிறார். அவரைக் காத்திட வேண்டியது மருத்துவரின் பொறுப்பு. அல்லது தீயில் சிக்கிக் கொண்டவர்களைக் காக்க வருகின்ற தீயணைப்புப் படை வீரர்களைப் போன்று நீங்கள் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் பாவத் தீயில் சிக்கிக் கொண்டவர்கள் தான்.

நபியவர்கள் கூட தம்மை இவ்வாறு தான் ஒப்பிட்டுச் சொல்லியிருக்கின்றார்கள்:

'நான் தீயில் தானே வந்து விழுகின்ற விட்டில் பூச்சிகளை அந்தத் தீயில் விழாமல் தடுப்பவரை போன்றவன்' -என்று.

மக்கள் அனைவரையும் மதிக்கும் அணுகுமுறையே நமது நாகரிகம். உன்னதமான இந்த மனப்பாங்கு இஸ்லாமிய வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கங்கள் அளவிட முடியாதவை!

Comments