நூல்: தஸ்கியா: ஆன்மிக வள மேம்பாடு!

தஸ்கியா: ஆன்மிக வள மேம்பாடு! 

S A மன்சூர் அலி

பின் வரும் இறை வசனத்தை சற்று ஆய்வு செய்வோம் வாருங்கள்:

இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.(2:151)


மேலே உள்ள இறைவசனத்தில் நபி (ஸல்) அவர்களின் நான்கு பணிகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.


1. இறை வசனங்களை மக்களுக்கு ஓதிக்காட்டுதல் – திலாவதில் ஆயாத்

2. மக்களைத் தூய்மைப்படுத்துதல் – தஸ்கிதுன் நஃப்ஸ்

3. மக்களுக்கு வேதத்தைக் கற்றுக் கொடுத்தல் – யுஅல்லிகுமுல் கிதாப்

4. மக்களுக்கு விவேகத்தைக் கற்றுக் கொடுத்தல் – யுஅல்லிகுமுல் ஹிக்மத்

இன்னொரு வசனமும் உண்டு:

அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (62: 2)

இவ்வசனம் சூரத்துல் ஜும்ஆவிலே இடம் பெற்றுள்ளது. ஒரு அறிஞர் சொன்னார்:

ஜும்ஆத் தொழுகையில் நிகழ்த்தப்படும் குத்பா என்பது இவ்வசனத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்ற நான்கு அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்!

இன்னும் சொல்லப்போனால் இந்த நான்கு அடிப்படைப் பணிகளை நிறைவேற்றிடும் இறைத்தூதர் ஒருவரை அனுப்பி வைப்பாயாக என்று துஆ செய்ததே நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தான்!

“எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக – நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (2: 129)

நாம் இங்கே இந்த நான்கு தூதுத்துவப் பணிகளுள் ஒன்றான “தஸ்கிதுன் நஃப்ஸ்” என்பதைப் பற்றித்தான் இங்கே பார்க்க இருக்கின்றோம்.

மேலே சொல்லப்பட்ட இறை வசனத்தில் உங்களைத் “தூய்மைப்படுத்துவதற்காக” என்பதைக் குறித்திடும் அரபிச்சொல் – யுஸக்கீகும் – என்பதாகும். இதன் மூலச்சொல் – “ஸகா” – ஆகும்.

ஸகா எனும் இந்த அடிப்படைச் சொல்லுக்கு இரண்டு பொருட்கள் உண்டு.

ஒன்று – வளரச் செய்தல். இது தான் இச்சொல்லின் முதற்பொருளும் (primry meaning) ஆகும்.

மற்றது – தூய்மைப் படுத்துதல். இது இம்மூலச் சொல்லின் இரண்டாவது (secondary meaning) பொருளாகும்.

வளரச் செய்தல் என்ற பொருள் இச்சொல்லுக்கு இருக்கும்போது இது ஏன் மொழிபெயர்ப்புகளில் பிரதிபலித்திடவில்லை என்பது நமக்கு வியப்பாக இருக்கின்றது!

முஹம்மது மர்மியூடிக் பிக்தால் எனும் திருக்குர் ஆனின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் – யுஸக்கீகும் என்பதற்கு (and to make them grow) வளர்தல் என்ற பொருளைக் கொடுத்திருக்கின்றார்கள்.

முஹம்மத் அஸத் என்ற திருக்குர் ஆனின் ஆங்கில விரிவுரையாளர் மேற்சொன்ன இரண்டு பொருட்களையும் உள்ளடக்கி – and to cause you to grow in purity – என்று மொழி பெயர்த்திருக்கின்றார்கள்.

இந்த இரண்டு பொருள்களையும் உள்ளடக்கி பொருள் செய்வதாக இருந்தால் – மனிதர்களைத் தூய்மைப் படுத்தி அவர்களை எல்லா நிலைகளிலும் வளர்ப்பது என்று பொருள் கொள்ளலாம்.

இந்த வசனத்தையே நாம் இஸ்லாமிய மனித வள மேம்பாட்டுக்கான

முதன்மை வசனமாக நாம் எடுத்தாளலாம்!

இந்த ஸகா எனும் சொல் இடம் பெறும் மேலும் இரண்டு வசனங்கள் இதோ:

தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.(87:14)

அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.(91:9-10)

ஆனால்

“தன்னைத் தூய்மைப்படுத்தி வளர்த்துக்கொண்டவன் வெற்றி பெறுகிறான்!”

“அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தப்படுத்தி வளர்த்துக் கொண்டவர் வெற்றியடைந்தார். ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்!”

என்பதே முழுமையான மொழிபெயர்ப்பாகத் தெரிகிறது.

ஒன்றைத் தூய்மைப்படுத்தாமல் அதனை வளர்த்தல் சாத்தியமில்லை!

ஆனால் நம்மில் பலர் – அறிவை (இல்ம்)வளர்த்துக் கொள்வதில் காட்டுகின்ற அக்கரை போல் நமது ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி வளர்த்துக் கொள்வதில் (தஸ்கியா) அக்கரை காட்டுவதில்லை என்பது மிகவும் கவலைக்குரிய நிலையாகும்!

இது நம்மை எந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது?

தஸ்கியா குறைபாட்டின் விளைவுகள்!

ஒவ்வொரு முஸ்லிமின் ஆளுமையிலும் (personality) இரண்டு மிக முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அவை

1. அறிவு – இல்ம்

2. தஸ்கியா – உளத்தூய்மை

இந்த இரண்டையும் சேர்த்துத் தான் ஒரு முஸ்லிம் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அறிவை வளர்த்துக் கொண்டு தன்னை தூய்மைப்படுத்துவதில் கவனம் செலுத்தாவிட்டாலும் தவறு!

தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறேன் என்று அறிவைப் பெறுவதில் அலட்சியமாக இருந்தாலும் தவறு!

இவை இரண்டும் ஒரு சைக்கிளின் இரண்டு சக்கரங்களைப்போல என்றார் ஒரு அறிஞர்.

இரண்டு சக்கரங்களிலும் போதுமான காற்று அடிக்கப்பட்டிருந்தால் தான் வண்டி நன்றாக ஓடும்! ஒன்றில் காற்று இருந்து மற்றொன்றில் காற்று போதுமான அளவுக்கு இல்லை என்றால் வண்டி கொஞ்ச தூரம் தான் ஓடும்! பிறகு படுத்து விடும்! இது தான் இன்றைய பெரும்பாலான தமிழ் முஸ்லிம்களின் நிலை!

தஸ்கியாவில் குறைவு ஏற்படுத்திய மிகப்பெரிய விளைவு – மனித உறவுகள் சீர்குலைந்து போனது தான்!

தஸ்கியாவின் குறைபாடு நமது தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்வினை வெகுவாக பாதித்துள்ளது. மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரர்கள் கூட – மனைவி விஷயத்தில் உரிமை மீறுகின்றார்கள். பெற்றோர் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்; சொத்துக்கள் பிரிக்கப்படும்போது இறையச்சம் காணாமல் போன சொத்தாக ஆகி விடுகின்றது.

வணிகத்தை எடுத்துக் கொள்வோம். வணிகத்தில் போட்டி என்ற பெயரில் அடுத்தவன் வணிகத்தை அழித்திடவும் தயங்குவதில்லை! இவர் ஒரு பணக்கார முஸ்லிம். ஒரு பள்ளிவாசலையே கட்டி வக்ஃப் செய்யும் அளவுக்கு கொடை வள்ளல். இவர் ஒரு பல சரக்கு வியாபாரி. ஆனால் இவர் தனது போட்டியாளர் என்று யாரைக் கருதுகிறாரோ – அவர் அவ்வளவு தான்! தனது போட்டியாளர் வணிகத்தை அழித்திட அவர் விற்பனை செய்யும் அதே பொருளை – நஷ்டத்துக்குக் கூட விற்பனை செய்வார். அது குறித்து அவரிடமே விளக்கம் கேட்கப்பட்டது; அதற்கு வியாபாரத்தில் போட்டி என்று வந்து விட்டால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்பது தான் அவர் பதில்!

தனிப்பட்ட வாழ்வு, குடும்ப வாழ்வு இவையெல்லாம் தாண்டி நமது பொது வாழ்வில் தஸ்கியா குறைபாடு ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?

மார்க்கம் படித்திருக்கின்றார்கள். ஆனால் அறிவு ரீதியான சவால்களை (intellectual challenges) இறையச்சத்துடன் எதிர்கொள்வதில்லை! தன் கருத்தை ஏற்காதவர்களைத் திட்டுகின்றார்கள்!

அறிவில் கொடி கட்டிப் பறக்கின்றார்கள். ஆனால் அவர்களுடைய குறை ஒன்று சுட்டிக்காட்டப்பட்டால் அவர்களின் ஈகோ அதனை ஏற்க விடாமல் தடுத்து விடுகிறது! இந்த நிலைகளுக்கெல்லாம் காரணம் – தஸ்கியாவில் ஏற்பட்ட அலட்சியம் தான்!

ஆதாரங்களை அடுக்குகின்றார்கள்; ஆனால் அடுத்தவர் உணர்வுகளைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் வார்த்தைகளால் குத்திக் கிழிக்கின்றார்கள்!!

சகோதர முஸ்லிம்களை எதிரிகள் போல் பார்க்க வைப்பது – தஸ்கியா குறைவையே காட்டுகிறது! இயக்க வெறிகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணமே – தஸ்கியா குறைவு தான்!

தஸ்கியா குறைபாடு – நமது வணக்கங்களையே சடங்குகளாக ஆக்கி விட்டிருக்கின்றது! தொழுகை, நோன்பு, ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய வணக்க வழிபாடுகளெல்லாம் எந்தவிதமான இஸ்லாமிய உணர்வுகளையும் (islamic spirit) ஊட்டிடவில்லை!

வெளிப்புறத் தோற்றத்துக்கு அதீதமான கவனம் செலுத்தப்படுகின்றது! உடை விஷயத்தில், தாடியின் அளவில், என்று ஒரு இறையச்சமுடையவனின் தோற்றத்தை மக்கள் முன் காட்டுகின்றார்கள். அருகே சென்று கொஞ்சம் பழகினால் அவருடைய குணநலனில் (character) உள்ள பலவீனம் வெளிப்பட்டு விடுகிறது!

செயற்கையாகச் சிரிக்கின்றார்கள். மனப்பூர்வமான சகோதரத்துவம் மருந்துக்கும் காணப்படவில்லை!

வணக்கங்களை நிறைவேற்றுவது எப்படி என்பதில் காட்டிய ஆர்வத்தில் நூறில் ஒரு பகுதி கூட மற்றவர்களுடன் இயைந்து வாழ்வது எப்படி என்று காட்டப்படாததால் - நாம் அனைவரும் தனித்தனித் தீவுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்!

இரண்டு பேர்கள் கூட ஒன்று சேர்ந்து சகோதரர்களாக வாழ்ந்து காட்ட முடியவில்லை!

உங்களுக்குள் அன்பு செலுத்திக் கொள்ளுங்கள் என்பது நபிமொழி – ஆனால் நமக்குள் அன்பு இல்லை!

மன்னியுங்கள் உங்கள் சகோதரனை என்பது இறைவாக்கு; – ஆனால் மன்னிக்கும் மனப்பான்மை நமக்குள் இல்லை!

உங்களுக்குள் கருணை காட்டுங்கள் என்பது இறை வாக்கு. மருந்துக்கும் கூட அதனைக் காணோம்!

நமது நிலையை அலசியது போதும்!

தஸ்கியாவை நாம் கண்டுகொள்ளாமல் போய்விட்டதற்கு வரலாற்றுக் காரணம் ஒன்று இருக்கின்றது!

அது என்ன? இன்ஷா அல்லாஹ் – அடுத்து பார்ப்போம்…


தஸ்கியாவில் குறைபாடு – ஒரு வரலாற்றுப் பார்வை

உளத்தூய்மை (தஸ்கியா) குறித்து நாம் அவ்வளவாகக் கண்டுகொள்ளாமல் போய்விட்டதற்கு வரலாற்றுக் காரணம் ஒன்று இருக்கின்றது என்று சொன்னோம் அல்லவா? அதனை இப்போது அலசுவோம்.

இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை நெறி என்பதை நாம் அறிவோம். அது போல இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கமும் ஆகும். இதில் எந்த விதமான “தீவிரப் போக்குக்கும்” இடமே இல்லை! நமது சமுதாயத்துக்குப் பெயரே “நடுநிலைச் சமுதாயம்” தான்!

தனி மனித வாழ்வுக்கும் பொது வாழ்க்கைக்கும் இடையே சமநிலை! வணக்க வழிபாடுகளுக்கும், மனிதனின் இன்ன பிற கடமைகளுக்கும் இடையே சமநிலை! அறிவுக்கும் உளத்தூய்மைக்கும் இடையே சமநிலை,

நம்பிக்கைக்கும் செயல்பாடுகளுக்கும் இடையே சமநிலை, உலக வாழ்க்கைக்கும் மறுமை வாழ்க்கைக்கும் இடையே சமநிலை

- இவ்வாறு மனித வாழ்வின் எந்த இரண்டு பகுதிகளை எடுத்துக் கொண்டாலும் அவற்றிற்கிடையே சமநிலையைக் கொண்ட மார்க்கத்தையே வல்லோன் அல்லாஹு தஆலா நமக்கு ஒரு அருட்கொடையாக வழங்கியிருக்கின்றான்.

அதன் செயல் வடிவமாக அண்ணலார் அவர்களே ஒரு அழகிய முன்மாதிரியாகவும் திகழ்ந்து எடுத்துக்காட்டி வாழ்ந்திருக்கின்றார்கள். அது போலவே தனது தோழர்கள் சற்றே நடுநிலை மீறி நடக்கும்போது அவர்களை நடுநிலைக்குக் கொண்டு வந்து வழிகாட்டியும் இருக்கின்றார்கள்.

புதிதாகத் திருமணம் முடித்த நபித்தோழர்! இரவெல்லாம் வணக்கம்; பகலெல்லாம் நோன்பு என்ற நிலையை அவர் தேர்ந்தெடுக்க – அது தன் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட போது திருத்தியிருக்கின்றார்கள் நபியவர்கள்.

இன்னும் சொல்லப்போனால் நபியவர்களின் நேரடிப் பயிற்சியில் உருவாக்கப்பட்ட அந்த முதல் தலைமுறை வாழ்வின் எல்லா அம்சங்களிலும் நடுநிலை பேணியிருக்கின்றார்கள்.

“இரவில் அவர்கள் தொழுவதைப் பார்த்தால் – இவ்வுலகத்தில் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லையோ என்பது போல் தோன்றுமாம்; பகலில் அவர்கள் குதிரையேறிப் போர்க்களம் கண்டால், அவர்களுக்கு போர்க்களம் ஒன்றைத் தவிர வேறு எதிலும் கவனம் இல்லையோ என்பது போல் தோன்றுமாம்.”

அந்த நபித்தோழர்கள் – அறிவுக்கும் முக்கியம் தந்தார்கள்; உளத்தூய்மைக்கும் அதே அளவு முக்கியம் தந்தார்கள். அண்ணலாருக்குப் பின் வந்த நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் காலத்திலும் இந்த நிலை தொடர்ந்தது,

போர்க்களத்துக்கு வீரர்களை அனுப்பும்போது ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் உளத்தூய்மையின் அவசியம் குறித்து எச்சரிக்காமல் அனுப்புவதே இல்லை! அந்தப் போர்வீரர்களின் வரலாறுகளைப் படித்தாலே இது புரியும். கண்களில் கண்ணீர் வடியும்!

எதிரிகளின் கோட்டைக்குள் நுழைவதற்கு ஒரே வழி – சாக்கடை வழி தான்; அதனுள் புகுந்து – கோட்டையின் வாசலை உட்பக்கமாகத் திறந்து விட முஸ்லிம்கள் உள்ளே நுழைந்து கோட்டையைக் கைப்பற்றுகிறார்கள். அந்த சாதனையை நிகழ்த்தியது யார் என்று தேடினால் – அவர் தன்னை மறைத்துக் கொண்டு விடுகிறார்!

சகோதரனுக்கு எல்லாவற்றையும் கொடுத்து விட்டு தான் பட்டினி கிடப்பார்! வெளியே சொல்ல மாட்டார்.

அங்கே மனிதப் புனிதர்களையே நாம் காண்கிறோம்!!

ஆனால் – நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் காலத்திற்குப் பிறகு – இஸ்லாமிய உலகில் மன்னராட்சி நிலைபெற்றதனால் – பல தீமைகளை முஸ்லிம் சமுகம் சந்தித்திட வேண்டிய நிலை ஏற்பட்டது.

கலீஃபாக்கள் காலத்தில் மக்களின் மார்க்கக்கல்வி மற்றும் உளத்தூய்மை, அவர்களுடைய குணநலன்கள் மற்றும் மனித உறவுகள் அனைத்திலும் ஆட்சியாளர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்!

ஆனால் மன்னராட்சி நிலைபெற்றதன் பின்னர் – தனி மனித வளர்ச்சியில் – பெரும்பாலான மன்னர்கள் சிறிது கூட கவனம் செலுத்திடவில்லை! ஹள்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களைப் போன்ற ஒரு சில ஆட்சியாளர்களைத் தவிர!

ஆட்சியாளர்கள் செய்திடத் தவறி விட்ட இந்த அரும்பணியை அன்றைய அறிஞர் பெருமக்கள் எடுத்துக் கொண்டார்கள். இஸ்லாமிய வரலாற்றின் இந்தப் பகுதியில் (கிலாஃபத்துக்குப் பின்னர்) – இமாம்கள் (வழிகாட்டுபவர்கள்), முஜ்தஹித்கள் (ஆராய்ச்சியாளர்கள்), முஜத்தித்கள் (சீர்திருத்தவாதிகள்), தலை சிறந்த ஆலிம்கள் (அறிஞர்கள்) – இவர்களெல்லாம் முஸ்லிம்களின் அறிவு மற்றும் தஸ்கியாவிலே மிகுந்த கவனம் செலுத்தி மக்கள் தூய்மையான இஸ்லாத்தைப் பின்பற்றுவதற்கு அயராது பாடுபட்டார்கள்.

ஆனால் – அதனைத் தொடர்ந்த கால கட்டங்களில் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டன!

மார்க்கக்கல்வி ஆராய்ச்சி (இஜ்திஹாத்) மூடி வைக்கப்பட்டு ஒருவரைக் கண்ணை மூடிப் பின்பற்றும் நிலை (தக்லீத்) ஏற்பட்டது!

மன்னர்கள் வானளாவப் புகழப்பட்டார்கள். உலக விரும்பி உலமாக்கள் (world seeking ulema) – மன்னர்களுக்குத் “தகுந்த” இஸ்லாத்தை மக்களிடம் பரப்பினார்கள்.

பிற தத்துவங்களின் பால் ஈர்க்கப்பட்டு – அந்தத் தத்துவங்களுக்குத் தோதுவாக குர்ஆனையும் நபி மொழிகளையும் விளக்கம் செய்திடும் “அறிஞர்கள்” தோன்றினார்கள்!

இறந்து விட்ட முன்னோர் வழிபாடு முஸ்லிம் சமுகத்தில் நுழைந்தது.

முஸ்லிம்களை சீர்திருத்துகிறேன் பேர்வழி என்று உள்ளே நுழைந்தது சூஃபியிஸம்!

சூஃபியிஸத்தின் முதல் நோக்கமே – மனித உள்ளங்களைத் தூய்மைப் படுத்துவது தான் என்று முழங்கப்பட்டது!

சூஃபியிஸத்தின் “மொழியே” வேறு! உளத்தூய்மைக்கு இவர்கள் கண்டு பிடித்த புதிதான சொற்கள் நம்மை வேற்று வழிகளுக்குள் தள்ளி விடக்கூடியவை!

வஹ்தத்துல் உஜூத் என்பார்கள்! இறைவன் ஒருவனே! அவனே அனைத்தையும் படைத்தவன் எனும் தூய வழிகாட்டுதலை ஓரங்கட்டி – “உள்ளமையெல்லாம் ஒன்றே ஒன்று தான்” என்ற “அத்வைதக்” கொள்கை இது!

இறைவனை நெருங்கிட – நான்கு படித்தரங்கள் உள்ளன என்பார்கள்; அவை – ஷரீஅத், தரீக்கத், ஹகீகத், மஃரிஃபத் என்பார்கள்; இவை அண்ணலார் நமக்குச் சொல்லித் தராதவையாகும்.

முஸ்லிம்களின் பிந்தைய வரலாற்றில் – இந்த சூஃபியிஸம் – நிலை பெற்று – அதனால் இஸ்லாத்துக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் (damages) எண்ணிலடங்கா!

கொள்கை இப்படி என்றால் – இந்த சூஃபியிஸத்தினால் வார்த்தெடுக்கப் பட்டவர்கள் எப்படிப்பட்டவர்களாக விளங்கினார்கள் தெரியுமா?

சான்றுக்கு இரண்டே இரண்டு:

ஒரு சூஃபி மகானைப் பார்க்க ஒருவர் சென்றாராம்; அந்த சூஃபி வசித்து வந்த தெருவுக்குள் நுழைந்து அவர் வீடு எங்கே என்று விசாரித்தாராம்; ஒருவர் சொன்னாராம்: இதோ ஒரு சிறிய நீரொடை ஓடிக் கொண்டிருக்கிறதல்லவா; இந்த நீரோடை வழியே சென்று இது எங்கே முடிவடைகிறதோ அதுவே அந்த சூஃபியின் வீடு என்றாராம். அவர் அந்த வீட்டை சரியாக அடையாளம் கண்டு பிடித்து சூஃபியைச் சந்தித்தாராம்.

அது என்ன நீரோடை? அந்த சூஃபி தனது பாவங்களை நினைத்து நினைத்து அழுது கொண்டே இருந்தாராம்; அது தான் அவருடைய தாடியில் இருந்து வழிந்து வீட்டிற்குக் கீழே கொட்டி தெருவில் ஒரு நீரோடை போல் ஓடிக் கொண்டிருந்ததாம்!

இன்னொரு சூஃபியைச் சந்தித்தாராம் ஒருவர்; தங்களிடம் பயிற்சி பெற வந்துள்ளேன் என்றாராம்; உலகிலேயே மிக மோசமான பண்டம் எதுவோ அதனைக் கொண்டு வா என்றாராம் சூஃபி. வந்தவர் புறப்பட்டுச் சென்று மிக மோசமான பண்டம் எதுவாக இருக்கும் என்று ஆழமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தாராம்; அது என்ன தெரியுமா? மனிதனின் மலம்! – ஐடியா தோன்றியவுடன் உடனே மனித மலத்தைக் கொஞ்சம் எடுத்துச் செல்லலாம் என்று அருகில் கிடந்த மலத்தை எடுத்திட முனைந்தாராம்; உடனே மலம் கேட்டதாம் = ஏன் என்னைப்போய் எடுக்கிறாய்?

என் சூஃபி உலகிலேயே மிக மோசமான பண்டம் ஒன்றைக் கொண்டு வரச் சொன்னார்; அது நீ தான் என்று நான் நினைக்கிறேன்! எனவே தான் உன்னை எடுத்துச் செல்ல விரும்புகிறேன் என்றாராம் அவர்; உடனே அந்த மலம் சொன்னதாம்; சில மணி நேரங்களுக்கு முன் நான் இனிப்புப் பலகாரமாகத் தான் இருந்தேன்; உன்னைப் போல் ஒருவன் என்னைத் தின்றதனால் தானே எனக்கு இந்த நிலை ஏற்பட்டது; எனவே நீதான் என்னை விட மிக மோசமானவன் என்று! பொட்டில் அறைந்தாற்போல் அவர் உணர்ந்து கொண்டாராம்! உடனே அந்த சூஃபியிடம் சென்று – உலகிலேயே தானே மிக மோசமான பண்டம்! என்று தான் உணர்ந்து விட்டதாகத் தெரிவித்ததும் – இப்போது தான் நீ என்னிடம் பயிற்சி பெறுவதற்கு தகுதி வந்திருக்கின்றது என்றாராம் அந்த சூஃபி!

ஆமாம் சகோதரர்களே! சூஃபியிஸம் இப்படிப்பட்டவர்களைத் தான் உருவாக்கும்! இவர்கள் நிஜ மனிதர்களாக நமக்குத் தெரியவில்லை!

ஆனால் குர் ஆனும், நபிமொழிகளும் உருவாக்கிய நிஜ மனிதர் ஒருவரைப் பாருங்கள்:

உமைர் பின் சஅத் (ரலி) அவர்கள் ஒரு நபித்தோழர். சிரியாவின் ஹிம்ஸ் பகுதிக்கு கவர்னராக விளங்கியவர். கவர்னர் பொறுப்பிலிருந்து விலகிய பின் தன் கிராமத்தில் எளிமையானதொரு வாழ்க்கையை நடத்தி வருபவர். அவரது நிலையைப்பற்றி அறிந்து வர ஹாரித் என்பவரை அனுப்பி வைக்கிறார் கலீஃபா உமர் (ரலி) அவர்கள்.

ஹாரிதிடம், “உமைர் வசிக்கும் ஊருக்குச் செல்லவும். நீர் ஒரு பயணி என்று கூறி அவருடன் தங்கவும். அவர் சொகுசாய் வாழ்கிறார் என்று தெரிந்தால் ஏதும் பேசாமல் என்னிடம் திரும்புங்கள். ஆனால் அவர் வறுமையில் இருந்தால், இந்தாருங்கள் தீனார், அவருக்கு அளியுங்கள்” என்று ஒரு பையில் நூறு தீனார்களை அளித்தார்.

உமைரின் வீட்டில் மூன்று நாள் விருந்தினராகத் தங்கினார் ஹாரித். ஒவ்வொரு நாள் மாலையும் விருந்தினருக்கு உணவளித்தார் உமைர். உணவு என்றால் வாற்கோதுமை ரொட்டி. அவ்வளவுதான். மற்றபடி இறைச்சி, குழம்பு என்று எதுவும் இல்லை.

மூன்றாம் நாள். அவ்வூரைச் சேர்ந்த ஒருவர் ஹாரிதிடம் உரையாடும்போது, “நீர் உமைருக்கும் அவருடைய மனைவிக்கும் பெரும் சிரமம் அளித்துவிட்டீர் தெரியுமா? அவர்கள் தினமும் உண்ணும் உணவு அந்த ரொட்டி மட்டுமே. அதையும் விருந்தினரான உமக்குத் தந்துவிட்டு அவர்கள் தங்களின் பசியைப் பொறுத்துக் கொண்டுள்ளனர். நீர் மேலும் சிலநாள் இவ்வூரில் தங்க வேண்டியிருந்தால் தயவுசெய்து என் வீட்டிற்கு வந்து விடுவீராக” என்று அழைப்பு விடுத்தார்.

ஹாரிதுக்கு உமைரின் நிலை நன்கு புரிந்துபோனது. தம்மிடம் அளிக்கப்பட்டிருந்த தீனார்கள் அடங்கிய பையை உமைரிடம் அளித்தார்.

“எதற்கு இது?” என்று கேட்டார் உமைர்.

“அமீருல் மூஃமினீன் இதைத் தங்களிடம் அளிக்கும்படிச் சொல்லித் தந்தார்.”

“இதை அவரிடமே திருப்பித் தந்துவிடுங்கள். என் சார்பாய் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ தெரிவியுங்கள். உமைருக்கு இதன் தேவை இல்லை என்று தெரிவித்துவிடுங்கள்.”

உள்ளிருந்து இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த உமைரின் மனைவி குறுக்கிட்டார்.

“அதைப் பெற்றுக்கொள்ளுங்கள் உமைர். உமக்குத் தேவையெனில் நீங்கள் பயன்படுத்தலாம். இல்லையெனில் தேவையுள்ள வறியவர்கள் இவ்வூரில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அளிக்கலாம்.”

இதைச் செவியுற்ற ஹாரித் பணப் பையை அங்கேயே வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டார். அந்த தீனார்களை சிறு பைகளில் பங்கிட்டுப் பிரித்தார் உமைர். ஏழைகளுக்கும், ஜிஹாதுக்குச் சென்று உயிர்த் தியாகி ஆகிப்போனவர்களின் பிள்ளைகளுக்கும் அதைப் பகிர்ந்தளித்துவிட்டு, பிறகுதான் இரவுத் தூக்கமே.

மதீனா திரும்பிய ஹாரிதிடம் விசாரித்தார் உமர். “அங்கு என்ன கண்டுவந்தீர் ஹாரித்?”

“அமீருல் மூஃமினீன். உமைர் மிகவும் வறுமையில், கடின வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்துவருகிறார்.”

“அவரிடம் பணம் அளித்தீரா?”

“ஆம்.”

“அதை அவர் என்ன செய்தார்?”

“எனக்குத் தெரியாது. ஆனால் அதிலிருந்து தமக்கென ஒரு திர்ஹமைக்கூட அவர் எடுத்திருக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.”

உமைருக்குக் கடிதம் எழுதினார் உமர். “இக் கடிதம் கிடைத்து, படித்து முடித்ததும் உடனே வந்து என்னைச் சந்திக்கவும்.”

மதீனாவுக்கு வந்து கலீஃபா உமரைச் சந்தித்தார் உமைர் இப்னு ஸஅத். முகமன்கூறி வரவேற்று தம் அருகே அவரை அமர்த்திக் கொண்டார் உமர்.

“பணத்தை என்ன செய்தீர் உமைர்?”

“அமீருல் மூஃமினீன்! அதைத் தாங்கள் எனக்கென அளித்துவிட்டபின் அதைப்பற்றி தங்களுக்கென்ன கவலை?”

“அதை நீர் என்ன செய்தீர் என்பதை நான் அறிய விரும்புகிறேன் உமைர்” என்று வற்புறுத்தினார் உமர்.

“செல்வமோ, சந்ததியோ எனக்கு யாதொரு உதவியும் புரிய இயலாத நாள் ஒன்று வருமே, அப்பொழுது அந்தப் பணம் எனக்கு உதவட்டும் என்று ஏற்பாடு செய்துவைத்துவிட்டேன்” என்றார் உமைர்.

கண்கள் கலங்கிப்போனார் உமர். “தமக்கெனத் தேவைகள் இருந்தும் தம்மைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிப்பார்களே அத்தகையவர்களில் நீர் ஒருவர் என்று நான் சாட்சியம் பகர்கிறேன் உமைர்.”

ஒட்டகம் சுமக்கும் பொதியளவு உணவுப் பொருட்களும், இரண்டு மேலங்கியும் உமைருக்கு அளிக்கும்படி கட்டளையிட்டார் உமர்.

“அமீருல் மூஃமினீன்! எங்களுக்கு இந்த உணவின் தேவை இல்லை” என்று அதையும் மறுத்தார் உமைர். “நான் கிளம்பும்போது என் குடும்பத்தினருக்காக இரண்டு ஸாஉ வாற்கோதுமையை அளித்து வந்திருக்கிறேன். அதை நாங்கள் உண்டு முடிக்கும்போது, அல்லாஹ் எங்களுக்கு மேற்கொண்டு் படி அளப்பான். ஆனால் இந்த இரண்டு அங்கி… அதை மட்டும் என் மனைவிக்காக எடுத்துக் கொள்கிறேன். ஏனெனில் அவளது உடை மிகவும் கிழிந்து அவளது உடலை முழுமையாகப் போர்த்தும் நிலையிலும் அது இல்லை.”

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு வெகு சில காலத்திற்குள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் உமைர் இப்னு ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு!

கவனித்தீர்களா வித்தியாசத்தை!

சூஃபியிசக் கொள்கைகளையும், அக்கொள்கை உருவாக்கிடும் மனிதர்களையும் ஆய்வு செய்திட்ட நேர்மை மிக்க மார்க்க அறிஞர்கள் – உளத்தூய்மைக்கு திருக்குர் ஆனும் நபி வழியும் காட்டுகின்ற வழிகாட்டுதல்களே போதுமானவை என்று அதன் அடிப்படையில் மக்களுக்கு போதனை செய்திடத் தொடங்கினார்கள். நூல்களை எழுதிக் குவித்தார்கள்.

எனினும் இந்த சூஃபியிஸத்தைத் தலையில் வைத்துக் கொண்டாடுபவர்கள் இன்றும் இருக்கின்றார்கள்.

மற்றொரு புறத்தில் தூய்மையான உளத்தூய்மையின் பக்கம் மக்களை அழைத்திடும் அறிஞர் பெருமக்களும் இன்றைய உலகில் இருக்கின்றார்கள்!

மூன்றாவது ஒரு பிரிவினரும் இருக்கின்றார்கள். அவர்கள் அறிவுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கின்றார்கள். இந்த “உளத்தூய்மை” சமாச்சாரங்களெல்லாம் அளவுக்கு மீறிப் பெரிது படுத்தப்பட்டு விட்டது! அது தேவையில்லை! என்று நினைக்கின்றார்கள் அவர்கள்.

பெரும்பாலான இன்றைய இயக்கங்களுக்கும், அமைப்புகளுக்கும் இது பொருந்தும்!

நாம் முன்னமே சொன்னது போல அறிவுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் உளத்தூய்மைக்கு அளிக்கப்படாவிட்டால் அது நடுநிலையை இழந்து விடும் (imbalance)! அதன் விளைவுகளைத் தான் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டோம். இந்த நடுநிலை பேணப்படாததால் தான் – இறையச்சம் மிகுந்த சகோதரர்களை நாம் அதிகம் காண முடிவதில்லை!


தஸ்கியாவில் குறைபாடும் இன்றைய முஸ்லிம்களும்

இஸ்லாமிய மனித வள மேம்பாடு என்பது மனிதனின் அனைத்து விதமான வளங்களையும் ஒருங்கிணைத்து வளர்த்திடும் (comprehensive) அற்புதமான வழிமுறையாகும். என்பதை மனித வள மேம்பாட்டுக் கட்டுரைகளில் முன்னரே எழுதியுள்ளோம்.

இப்போது கேள்வி என்னவெனில் – இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சியில் நாம் கவனம் செலுத்துகின்றோமா? அல்லது நமது குழந்தைகளுக்குத்தான் இப்படிப்பட்ட வளர்ச்சியை வழங்குகின்றோமா?

நம்மில் ஒரு சிலர் – ஆன்மிகத்துக்கு வழங்கும் முக்கியம் அளவுக்கு அறிவு வளத்துக்கு வழங்குவதில்லை! வேறு சிலரோ – அறிவு வளத்துக்கு வழங்கிடும் முக்கியம் அளவுக்கு ஆன்மிகத்தில் கவனம் செலுத்துவதில்லை! இவ்விரண்டையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அறிவு வளம் கலக்காத ஆன்மிகத்தினால் என்ன பயன்?

“நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் – ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். (35:28)

ஆம்! அறிவு வளம் என்பது நமது ஆன்மிக வளத்தை வளர்க்கும் ஆற்றல் மிக்கது! ஏனெனில் அறிவு இறையச்சத்துக்கு வழி வகுக்கிறது.

அது போலவே நமது ஆன்மிக உணர்வு – நமது அறிவை மேலும் பெருக்கிடத் தூண்டுகோளாய் விளங்குகிறது என்பதும் உண்மையே!

“அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றான்.” (2: 282)

இந்த இறை வசனங்களின் அடிப்படையிலிருந்து இஸ்லாத்தைப் பொறுத்தவரை அறிவும் ஆன்மிகமும் பின்னிப் பிணைந்தவை. ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்கவே முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் நம்மில் பலர் ஆன்மிக வளத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் அளவுக்கு அறிவு வளத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

நிறைய தொழுவார்கள். ஆனால் குர்ஆன் மொழிபெயர்ப்பைக் கூட இவர்கள் தொடுவதில்லை.

நிறைய நோன்புகள் வைப்பார்கள். ஆனால் மார்க்கக் கல்வியில் இவர்களுக்கு ஆர்வமே தோன்றுவதில்லை!

இவர்கள் வெளிப்புறத் தோற்றத்தால் மற்றவர்களை அசத்துவார்கள். ஆனால் கொஞ்சம் இவர்களிடம் பேசிப்பார்த்தால் – இவர்களின் “அறிவுத்திறனின் அளவு” (intellectual capacity) வெளிப்பட்டு விடும்.

இதன் விளைவுகள் என்ன?

நேர் வழி பெற்ற கலீஃபாக்களில் ஒருவரான உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் மிக அருமையாகச் சொன்னார்கள்:

“கல்வியின்றி செயல் படுகின்றவர்களால் சீர்திருத்தங்களை விட சீர்கேடுகளே அதிகம் ஏற்படும்.”

இத்தகையவர்களிடம் இறையச்சம், மனத்தூய்மை, மார்க்கப்பற்றுக்கெல்லாம் ஒரு குறையுமிருக்காது. ஆனால் மார்க்க அறிவு, மார்க்கத்தின் தேட்டம் (the spirit), மார்க்க சட்டங்களின் அடிப்படை நோக்கங்கள் – இவை குறித்த தெளிவு இவர்களிடத்தில் இருப்பதில்லை!

இதில் வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால் – இவர்கள் அறிவுத்திறன் மிக்க மற்றவர்களிடமிருந்து விலகிக் கொண்டு விடுவார்கள்!

தங்களின் அபரிமிதமான வழிபாடுகளைக் கணக்கில் கொண்டு தங்களுக்குத் மிக உயர்வான ஒரு அந்தஸ்தை – கற்பனையாக – ஏற்படுத்திக் கொள்வார்கள்.

விளவு? இத்தகையவர்களை வழி கெடுப்பது ஷைத்தானுக்கு மிகச் சுலபம்!

காரணம் அவர்களின் கல்வி அறிவின்மை!

நபி மொழி ஒன்றைப் பாருங்கள்:

“அவர்களின் தொழுகை, நோன்பு இதர செயல்களை நீங்கள் கண்டால் உங்களுடைய நோன்பு தொழுகை நற்செயல்களெல்லாம் மிகக்குறைவானவை என்றே கருதுவீர்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். அது தொண்டையைக் கடந்து செல்லாது. சிலை வணங்கிகளை விட்டு விட்டு முஸ்லிம்களைக் கொல்வார்கள்” என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

இமாம் ஹஸன் அல் பசரீ (ரஹ்) சொல்வதைப் பார்ப்போமா?

“அறிவுத்திறன் இன்றி செயற்களத்தில் குதிப்பவன் பாதையின்றி நடப்பவன் போலாவான். அறிவின்றி செயல்படுபவனால் விளையும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம். எனவே வணக்க வழிபாட்டுக்கு இடையூறு இன்றி கல்வியைத் தேடுங்கள். கல்விக்கு இடையூறு இல்லாமல் வணக்க வழிபாட்டில் ஈடுபடுங்கள்.” சிலர் கல்வியைக் கைவிட்டு வணக்க வழிபாட்டில் திளைத்தனர். இறுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகவே வாளேந்தும் அளவுக்கு வந்து விட்டார்கள். அவர்கள் கல்வியைப் பெற்றிருந்தால் அவர்கள் கற்ற கல்வி ஒருபோதும் அவர்களை அப்படிச் செய்ய விட்டிருக்காது!” (நூல்: இப்னுல் கைய்யும் எழுதிய மிஃப்தாஹு தாரிஸ் ஸஆதா)

எனவே தொலைநோக்குப்பார்வை உடைய நமது புதிய இளந்தலைமுறை சமூகப் பணிகளில் எதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது இங்கே உள்ளங்கை நெல்லிக்கனி போல மிகத் தெளிவாகி விட்டது.

ஆம்! நமது செயற்களம் “இக்ரா” விலிருந்து தான் துவங்குகிறது என்பதை மறந்து விட வேண்டாம்!

அடுத்து இதற்கு நேர் மாற்றமாக – அறிவில் அளவு கடந்த ஆர்வம்! ஆனால் ஆன்மிகத்தில் அலட்சியம்!!

ஒரு சிலர். இவர்கள் அறிவைப் பெற்றுக் கொள்வதில் காட்டுகின்ற ஆர்வத்தில் ஒரு சிறு பகுதி கூட, ஆன்மிகம் குறித்து கவலைப்படுவதில்லை!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மிகச் சிறந்த மார்க்க அறிஞர். அவர் சொற்பொழிவுகள் மிகவும் அருமையாக இருக்கும். ஒரு தடவை அவருடைய சொற்பொழிவு ஒன்றை வீடியோ குறுந்தகடு ஒன்றில் போட்டுக் காட்டினேன் என் உறவினர் ஒருவருக்கு. அவர் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டுபவர். விடாமல் தஹஜ்ஜுத் தொழுபவர். அவர் வீடியோவைப் பார்க்கும்போதே தனது விமர்சனத்தைத் தொடங்கி விட்டார்:

“என்ன தான் சொல்லுங்க… அவர் மீசையைக் கத்தரிக்காமல் விட்டு வைத்திருக்கிறாரே… இப்படி வந்து நின்று கொண்டு பேசினால் யார் அவர் கருத்தைக் காதில் வாங்குவார்கள்?”

இதிலிருந்து தெரிய வருவது என்னவெனில் மக்கள் அறிஞர்களை இப்படித்தான் கவனிக்கிறார்கள்!

நாம் சொல்ல வருவது என்னவெனில் இப்படிப்பட்ட சின்ன சின்ன விஷயங்களில் கூட ஏன் நமது அறிஞர்கள் சுன்னத்தைப் பின் பற்றுவதில் அலட்சியம் காட்டிட வேண்டும்?

நமது சிறு சிறு அலட்சியங்கள் நாம் சொல்ல வருகின்ற பெரிய விஷயங்கள் குறித்து மக்கள் சிந்தனையைத் திருப்பிடத் தடையாக விளங்குகிறது என்பதை அறிஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தடவை இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் தலைவர் – மிக மிக சீரியஸான ஒரு விஷயத்தின் பக்கம் தமது தொண்டர்களின் கவனத்தைத் திருப்பிடும் சொற்பொழிவு ஒன்றை ஆற்றுகிறார். பேச்சின் முடிவில் ஒருவர் கேட்கிறார்:

“நமது தொண்டர்கள் தங்களின் தாடியைக் கத்தரித்துக் கொண்டு அதனை சிறியதாக வைத்துக் கொள்கிறார்கள்; எனவே தாங்கள் தங்களின் தொண்டர்களுக்கு அவர்கள் தாடியை சற்றே நீளமாக வைத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும்!”

ஒரு தடவை ஒரு இஸ்லாமியஅமைப்பின் அலுவலகம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அது பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த சமயம். மாலை அஸர் நேரம் அது. அலுவலகத்துக்கு எதிரே தான் பள்ளிவாசல். பாங்கு சத்தம் கேட்கிறது. ஆனால் யாரும் பள்ளிக்கு வருவதாகத் தெரியவில்லை! கேட்டேன்.

அவர்கள் சொன்னார்கள்:

“நடந்து முடிந்த தேர்வுகள் பற்றிய முக்கியமான கண்ணோட்டம் ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் நேரம் இது. அதனைப்பார்த்து விட்டு இங்கே தனியாக ஜமாஅத் வைத்துத் தொழுது கொள்ளலாம்!”

முதலில் இதற்கு அனுமதி இருக்கிறதா என்பதே நம் கேள்வி. அதே நேரத்தில் மக்கள் இதனை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையும் நாம் உணரத் தவறி விடுகின்றோம்!

ஒரு தடவை – இலங்கையிலுள்ள அரபிக்கல்லூரி ஒன்றின் முதல்வர் ஒருவர் தமிழகத்துக்கு வருகை தந்திருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அங்குள்ள முஸ்லிம் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து பேச்சு திரும்பியது. ஒரு அமைப்பினரைப் பற்றி அவர் சொன்னார்: எதிரே தான் பள்ளிவாசல். ஆனால் ஒரு நாய் கூட பள்ளிக்கு வந்து தொழ வருவதில்லை!”

புரிகிறதா?

அறிவில் நாம் மிகச் சிறந்தவர்களாக விளங்கலாம். விவாதங்களில் நம்மை மிஞ்சுவோர் யார் என்று நாம் மார் தட்டலாம். எந்த ஒரு கேள்விக்கும் விலாவாரியாக நாம் விளக்கம் அளிப்பவர்களாக இருக்கலாம். ஆனால் எங்கே போனது நமது ஆன்மிகம்? ஏன் நாம் தொழுகையில் அசட்டையாக இருக்கின்றோம். ஏன் நாம் தொழுகைக்குப் பிறகு திக்ர் செய்வதில் அலட்சியம் காட்டுகிறோம்? ஏன் நாம் பிற சுன்னத்தான நடைமுறைகளில் கவனம் செலுத்துவதில்லை?

அறிவில் அளவு கடந்த ஆர்வம் – ஆனால் ஆன்மிகத்தில் அலட்சியம் என்ற நிலை ஒருவரிடத்தில் தொடர்ந்தால் என்னவாகும் தெரியுமா?

அவர் சில சமயங்களில் மார்க்க வரம்புகளை மீறிட ஷைத்தான் தூண்டிகொண்டே இருப்பான். இவர் அவன் வலையில் விழுந்து விடுவார்!!

சில சமயம் அவர் பொய் சொல்லி விடுவதை ஷைத்தான் நியாயப் படுத்தி விடுவான்.

சில சமயம் ஒரு பாவமான காரியத்தைச் செய்திடத் தூண்டப்படும்போது, அவரது குறைவான இறையச்சம் – அவரை அப்பாவத்திலிருந்து தடுத்திடப் போதுமானதாக இருக்காது. விளைவு? அப்பாவத்தையே நியாயப்படுத்தத் தொடங்கி விடுவார்! இது மிகவும் ஆபத்தான நிலை அல்லவா?

எனவே தான் சொல்கிறோம். அறிவு பலம் மிக்கவர்களா நீங்கள்? வணக்க வழிபாடுகளில் சற்றே அதிகமாக கவனம் செலுத்திடுங்கள்! ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள்.

சுன்னத்தான தொழுகைகளைத் தொடந்து பேணி வாருங்கள். பள்ளியில் அமர்ந்து திக்ர்களில் ஈடுபடுங்கள். துஆ விஷயத்தில் ஆர்வம் காட்டுங்கள். இறைவனிடத்திலே அழுது மன்றாடுங்கள்.

உடை தோற்றம் ஆகிய விஷயங்களில் மார்க்க வரம்புகளைப் பேணுங்கள். உணவு உண்ணும் முறை, நீர் அருந்தும் முறை, பல் துலக்குவது, நகம் வெட்டுவது, முடி வெட்டுவது, களைவது ஆகிய அனைத்து விஷயங்களிலும் சுன்னத்தைக் கடைபிடிப்பதில் கவனமாக இருங்கள்.

இவைகளை மக்களுக்குக்காட்டுவதற்காகச் செய்திட வேண்டாம். அல்லாஹுத ஆலாவின் திருப்பொறுத்தம் நாடிச் செய்திடுங்கள். குர்ஆனை தினமும் ஓதிடுங்கள்.

மண்ணறைகளுக்குச் சென்று மறுமைச்சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். இயற்கைப் பெருவெளியைத் தேடிச் சென்று உற்று நோக்குங்கள். இரவு வானத்தை அடிக்கடி ரசித்துப் பாருங்கள். அல்லாஹு தஆலாவின் ஆற்றலைப் போற்றிப் புகழுங்கள்.

இவ்வாறு நீங்கள் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும்போது மட்டுமே, உங்களின் அறிவாற்றலுக்கு இறைவனின் அங்கீகாரமும் உண்டு! மக்களும் உங்களது அறிவால் பயன் பெறுவார்கள்!

சரிதானே?

இனி அடுத்து – தூய்மையான உளத்தூய்மையின் பக்கம் நாம் கவனம் செலுத்துவோம்- இன்ஷா அல்லாஹ்!


தஸ்கியாவை வளர்த்துக் கொள்வது எப்படி?


தஸ்கியாவுக்காக நாம் எடுத்து வைத்திட வேண்டிய முதல் அடி எது தெரியுமா?

இதனைப் படியுங்கள்:

மனிதன் மட்டுமே வளர வேண்டியவன்; மனிதனுக்கும் ஏனைய படைப்பினங்களுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால் மற்ற எந்த படைப்பினங்களுக்கும் “வளர்ச்சி” என்பது கிடையாது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தேனீ என்ன செய்ததோ ஒரு மண்புழு என்ன செய்ததோ அதையே தான் இன்றும் செய்து கொண்டிருக்கும். அவை மாறுவதே இல்லை!

ஆனால் மனிதன் மாறிட வேண்டியவன்! மாறித்தான் ஆக வேண்டும்! மனிதனின் இயல்பே அவன் மாற்றத்துக்குரியவன் என்பதைப் பறைசாற்றுகிறது! இது இறைவன் மனிதனுக்கு விதித்த விதி!

“அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்”. (36:67)

“நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.” (84:19)

உண்மையில் சொல்லப்போனால் இஸ்லாமிய மார்க்கமே ஒரு மனிதனை “மாற்றிக்காட்டும்” மார்க்கம் (Transformational Religion) ஆகும்.

ஆனாலும் பொதுவாக மனிதன் தன்னை மாற்றிக் கொள்வதற்குத் தயங்கிடக் கூடியவனாகவே விளங்குகிறான்!

மாறுவது என்பது மனிதனுக்குச் சங்கடமாகவே தெரிகிறது!

தான் மாறாமல் இருந்திடுவதற்கு ஆயிரம் காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்வான்!

அதே நேரத்தில் இது குறித்து அல்லாஹ் என்ன சொல்கிறான் தெரியுமா?

“எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை!” (13:11)

நன்றாக கவனியுங்கள்:

தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்தல் என்பது நமது சுய விருப்பம். அதாவது நமது freewill

அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை என்பது நமக்கு விதிக்கப்பட்ட விதி!

இந்த இறைவசனத்தின் மூலம் – நமது விதி என்பது நமது சுய விருப்பத்துடன் தான் பிணைக்கப்பட்டிருக்கின்றது என்பதை அல்லாஹு தஆலா நமக்குத் தெளிவாக்கிக் காட்டுகின்றான்.

எனவே நாம் உங்களைக் கேட்பதெல்லாம் -

மாறுவதற்கு நீங்கள் தயாரா? – என்பது தான்!

தயார் என்று நீங்கள் முன் வருவதே – தஸ்கியாவை நோக்கி – நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடி! இந்த (first step) முதல் அடியைத் தான் அல்லாஹு தஆலா மிகவும் நேசிக்கின்றான்!

இந்த நபி மொழியை சற்று சிந்தியுங்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”ஒரு மனிதர் தமது ஒட்டகத்தில் தமது பயண உணவையும் தோல் பையையும் ஏற்றிக்கொண்டு பயணம் செய்தார்.

வறண்ட பாலைவனத்தில் அவர் சென்றுகொண்டிருந்த போது, மதிய ஓய்வு நேரம் வரவே, அவர் இறங்கி, ஒரு மரத்தின் கீழ் தம்மையும் அறியாமல் உறங்கிவிட்டார். அப்போது அவரது ஒட்டகம் தப்பியோடியது.

அவர் விழித்தெழுந்தபோது (ஒட்டகத்தைக் காணாததால்) ஓடிப்போய் ஒரு குன்றின் மேலேறிப் பார்த்தார். எதையும் அவர் காணவில்லை. பிறகு மற்றொரு குன்றின் மீதேறிப் பார்த்தார். அங்கும் எதையும் காணவில்லை. பிறகு வேறொரு குன்றின் மீதேறிப் பார்த்தார். எதையும் காணவில்லை…..

ஆகவே, முன்பு ஓய்வெடுத்த இடத்துக்கே திரும்பிவந்து அமர்ந்துகொண்டார். அப்போது அவரது ஒட்டகம் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அது வந்து தனது கடிவாளத்தை அவரது கையில் இட்டது.

இந்த நிலையில் அவர் தனது ஒட்டகத்தைக் காணும்போது அடைந்த மகிழ்ச்சியைவிடத் தன் அடியார் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.” (முஸ்லிம்)

என்ன முதல் அடியை எடுத்து வைக்கலாமா?



பிறர் குறை காண்பதல்ல நமது வேலை!

நமது தஸ்கியாவை வளர்த்துக் கொள்ள பல வழிகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று – இறை கட்டளை என்று ஒன்றை நாம் தெரிந்து கொண்டால் – உடனே அதற்குச் செயல் வடிவம் கொடுத்திடுவது தான்!

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொண்டு அதற்குக் கீழ்ப்படிய வேண்டியவாறு கீழ்ப்படியாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.(4:65)

மது தடை செய்யப்பட்ட போது நபித்தோழர்களின் உடனடியான கீழ்ப்படிதலை நாம் வரலாற்றில் பார்க்கின்றோம்.

அது போலவே ஹிஜாப் அணிவதன் கட்டளை பெண்களுக்கு இடப்பட்ட போது -  நபித்தோழியர்கள் அனைவரும் உடனடியாக அதனைச் செயல் படுத்தியதையும் வரலாறு நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.

“நாங்கள் செவிமடுத்தோம்; நாங்கள் வழிப்பட்டோம்!” (2:285) – என்பது தான் ஒரு இறைநம்பிக்கையாளர்களின் பண்பு!

இறை விருப்பத்தை நிறைவு செய்யும் போது தான் நமது தஸ்கியா உயர்கிறது! இறைவன் நம்மை நேசிக்கின்றான்.

சான்றாக -
நீங்கள் திருமறையின் – ஹுஜுராத் – எனும் அத்தியாயத்தை ஓதுகிறீர்கள். அதில் ஒரு வசனத்தில் புறம்பேசுதலைத் தவிர்க்கச் சொல்கிறான் அல்லாஹு தஆலா.

“உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.” (49:12)

நாம் இதனை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்?

இந்த வசனம் எனக்குச் சொல்லும் செய்தி என்ன? – என்றே ஒவ்வொருவரும் பார்த்திட வேண்டும்.

முதலில் புறம்பேசுதல் என்றால் என்ன என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டும். (ஒருவரிடம் காணப்படுகின்ற குறையைப் பிறரிடத்தில் பேசுவதே புறம்).

அடுத்து நான் யாரைப் பற்றியாவது புறம்பேசியிருக்கின்றேனா? – என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

யாரைப்பற்றியாவது நாம் புறம் பேசியிருந்தால் அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும். (யாரைப் பற்றிப் புறம் பேசினோமோ அவரிடமே சென்று மன்னிப்புக் கேட்டு விட வேண்டும்).

இனி யாரைப் பற்றியும் புறம் பேசுவதில்லை என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

புறம் பேசுகின்ற அமர்வுகளை இனி தவிர்த்துக் கொள்வது என முடிவு செய்து விட வேண்டும். (அமைதியாக நழுவி விட வேண்டியது தான்!)..

ஆனால் – பொதுவாக நம்மில் பலர் குர்ஆனை ஓதும்போது என்ன செய்வோம் என்றால் – “புறம் பேசாதீர்கள்” என்ற இறைக்கட்டளையைப் பற்றி ஓதும்போது – மற்றவர்கள் யார் யாரெல்லாம் பிறரைப் பற்றிப் புறம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்று பட்டியல் போட ஆரம்பித்து விடுவோம்.

அதாவது இந்தக் குறை நம்மிடம் இல்லை; பிறரிடத்தில் தான் இருக்கின்றது என்று அடித்துப் பேசத் தொடங்கி விடுவோம்!

இவ்வாறு ஒவ்வொரு இறைக்கட்டளையை ஓதும்போதும் – நாம் பாடம் படித்துக் கொள்வதற்கு பதிலாக – மற்றவர்களைக் குறை கண்டுபிடிப்பவர்களாகவே நாம் ஆகி விடுவோம்.

எனவே இங்கே நாம் சொல்ல வருவது என்னெவெனில் – ஒரு இறைவசனத்தையோ அல்லது நபிமொழியையோ நாம் படிக்கும்போது – நாம் பார்க்க வேண்டியதெல்லாம் = இதில் எனக்கு என்ன செய்தி இருக்கின்றது என்பதைத் தான்!

பிறர் குறை காண்பதல்ல நமது வேலை!

ஈமான் கொண்டவர்களே! (நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! (5:105)

தஸ்கியாவை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள்! (MEANS OF TAZKIYA)

திருமறையிலிருந்தும், நபிமொழிகளில் இருந்தும் – நம்மை நாமே தூய்மைப் படுத்திக்கொள்ளும் வழிமுறைகளை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

ஐந்து வேளை தொழுகையையும் நேரம் தவறாது ஜமாஅத்துடன் தொழுதல்

தொழுகையிலே இயன்றவரை மனத்தை ஒருமைப்படுத்திட தொடர்ந்து முயற்சி செய்தல்

ரமளான் மாதம் முழுவதும் கடமையான நோன்பைத் தவறாது வைத்தல்

ஆண்டின் முடிவில் ஸகாத்தைக் கணக்கிட்டு வழங்குதல்

ஆயுளில் ஒரு முறையேனும் (வசதி இருப்பின்) ஹஜ் கடமையை நிறைவேற்றுதல்

தினமும் ஐந்து வேளை தொழுகையோடு இணைந்துள்ள பனிரெண்டு ரக்அத் சுன்னத்தான தொழுகைகளை தொடர்ந்து தொழுதல்

ளுஹா, தஹஜ்ஜத் – போன்ற நஃபிலான தொழுகைகளை நிறைவேற்றல்

திருமறையை தினமும் தவறாது பொருள் அறிந்து ஓதுதல் – திலாவத்

இறைவனை நினைவு கூர்தல் – திக்ர்

இறைவனின் படைப்புக்களைக் குறிந்து……

சிந்தித்தல் (ஃபிக்ர் – contemplation);

இயற்கைச் சூழல் நிறைந்த பகுதிகளுக்குச் சென்று அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கண்டு இறை நம்பிக்கையை வளர்த்துக் கொள்தல்

அல்லாஹுதஆலா தனது திருமறையில் நமக்குக் கற்றுத்தந்திருக்கும் துஆக்களின் மூலமாகவும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கும் சுன்னத்தான துஆக்களின் மூலமாகவும் இறை உதவியைத் தேடுதல்

நாள் தவறாது வல்லோனிடம் பாவ மன்னிப்பு கேட்டல் (தவ்பா மற்றும் இஸ்திஃக்ஃபார்)

தினமும் நபி (ஸல்) அவர்கள் மீது உவப்புடன் ஸலவாத் ஓதுதல்

மரணத்தைக் குறித்து சிந்தித்தல்; பொதுவான அடக்கத் தலத்துக்குச் சென்று

மறுமை சிந்தனையை வளர்த்துக் கொள்தல்

இயன்றவரை அதிகமாக தர்மம் செய்தல்

அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றை அனுபவித்துப் படித்தல்

மற்ற இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் படிப்பினை பெறும் நோக்கில் படித்தல்

நபித்தோழர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் தொடர்ந்து படித்தல்

நமக்கு முன்னர் வாழ்ந்து சென்ற இறையச்சமிக்க நல்லடியார்களின் வரலாறுகளையும் படித்தல்

நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல முஸ்லிம்களை சென்று சந்தித்தல்; அவர்களுடன் சில நாட்கள் தங்கியிருத்தல்

தினமும் இரவில் படுக்கச் செல்லு முன் நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்தல்

இன்ஷா அல்லாஹ் இந்த வழிமுறைகளை நாம் தொடர்ந்து கடைபிடித்தால் – நமது உள்ளங்கள் தூய்மை அடைவது உறுதி!


தஸ்கியா நமக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள்! (IMPACT OF TAZKIYA)

அடுத்து – தஸ்கியா எனும் உளத்தூய்மை – ஒருவருக்குள் ஏற்படுத்துகின்ற மாற்றங்களைப் பார்ப்போம்!

இறைவன் மீது அளப்பரிய அன்பு

இறைவனின் தூதர் (ஸல்) மீது அன்பு

வணக்க வழிபாடுகளில் பேணுதல்

ஆழமான சிந்தனை; மறுமை சிந்தனை; மரணம் குறித்த சிந்தனை

இறைவனை முற்றிலும் சார்ந்திருத்தல் (தவக்குல்)

பாவமான காரியங்களிலிருந்து வெகுதூரம் விலகியிருத்தல்

அமைதி மற்றும் மவுனம் காத்தல்; அழகிய உரையாடல்

புறம் பேசாமை; அவதூறு கூறாமை

புன்முறுவல் பூக்கும் முகம்; எளிதில் பழகி விடும் தன்மை;

கள்ளங்கபடமில்லா அன்பு

உண்மையாக நடந்து கொள்தல் (நடிப்பதும் இல்லை; நயவஞ்சகத் தனமும் இல்லை)

நம்பகத்தன்மை (trustworthiness)

பணிவு (humbleness)

தற்பெருமையின்மை

நிதானம்

வெட்க உணர்ச்சி (modesty)

அனைத்திலும் நடுநிலை பேணுதல் (balanced)

வீரம் (courage)

உறுதி – istiqaamat – இஸ்திகாமத்

பொறுமை – steadfast

இறைதிருப்தி ஒன்றையே நாடி செயலாற்றுதல் (ikhlaas – purity of intention)

எளிமையும் போதும் என்ற மனமும்; (simplicity and contentment)

எதிலும் ஒரு ஒழுங்கு (orderliness; self disciplined)

சுறுசுறுப்பு – active, proactive, taking initiative

பணிகள் எதுவாயினும் மிக அழகுடன் செய்து முடித்தல் (conscientiousness)

சுய மதிப்பு, சுயமரியாதை, மற்றும் கண்ணியம் (self esteem / self respect)

நட்பு; சகோதரத்துவம்; பிறருடன் மிகச் சிறந்த நல்லுறவு (excellent human relationship)

பிறர் நலன் நாடுதல்

அடுத்தவர் உணர்வை மதித்தல் (empathy)

கொடைத்தன்மை (generosity and preference)

பத்தினித்தனம்; குடும்பத்தில் நல்ல பெயர்

தேவையற்றவற்றில் இருந்து விலகி இருத்தல்

பொறாமையின்மை மற்றும் பேராசையின்மை

எந்த ஒன்றிலும் பக்குவம் மற்றும் விவேகம்

இன்னும்… இன்னும்….

இப்போது – நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம்;

“அப்படியானால் – உளத்தூய்மையை வளர்த்துக் கொள்பவர்கள் எந்தத் தவறும் செய்திட மாட்டார்களா?”

பதில்: நாமெல்லோரும் மனிதர்களே! மலக்குகள் அன்று! தவறுகளைச் செய்து விடுவதற்கு வாய்ப்புகள் நிச்சயம் இருக்கவே செய்கின்றது! ஆனால் நாம் என்ன சொல்ல முடியும் என்றால் – உளத்தூய்மையில் கவனம் செலுத்துபவர்கள் தவறுகளில் நிலைத்திருக்க மாட்டார்கள்! தவறை உணர்ந்ததும் உடனே விலகிக் கொண்டு விடுவார்கள்!

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் – அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.(7:201)

இங்கே இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்.

நாம் மேலே குறிப்பிட்டிருக்கின்ற அனைத்து மாற்றங்களும் – ஒருவருக்கு – ஒரே நாளில் ஏற்பட்டு விடுமா என்றால் அப்படியும் சொல்லி விட முடியாது!

தஸ்கியா எனும் வளர்ச்சி என்பது – ஒரு விதை, செடியாகி, மரமாக வளர்வதைப் போல! அது மிக மெதுவாகத்தான் நடக்கும்; ஆனால் பூத்துக் காய்த்துக் கனிகள் குலுங்கப்போவதென்னவோ நிச்சயம். அதற்குப் பொறுமை தேவை!

ஆனால் நாம் “வளர்வதை” நாமே உணர்வோம்! முயற்சி மட்டுமே நமது! வாசல்களைத் திறந்து விடுபவன் அல்லாஹுத ஆலா ஒருவனே!

மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.(29:69)

Comments