வெற்றிக்குப் புதிய இலக்கணம்!

வெற்றி என்பது என்ன?

எடுத்துக் கொண்ட ஒரு காரியத்தில் முழுமையாக இறங்கி அதில் சாதனை (achievement) ஒன்றை நிகழ்த்திக் காட்டும் போது ஒருவன் வெற்றி பெற்று விட்டான் என்று சொல்கிறோம்.


ஒரு கேள்வி என்னவென்றால் – ஒருவனை ஒரு காரியத்தில் தொடர்ந்து ஈடுபாடு கொள்ளச் செய்திடுவது எது?



அளவு கடந்த ஆர்வம்! ஆங்கிலத்தில் இதனை passion என்று அழைக்கிறார்கள்.

எடுத்துக் கொண்ட ஒரு காரியத்தில் – இந்த 'கட்டுக்கடங்காத ஆர்வம்' மட்டும் ஒருவரிடம் இல்லை என்றால் – அவர் அந்தக் காரியத்தில் தொடர்ந்து நின்று சாதித்துக் காட்டுவாரா என்பது சந்தேகமே!

ஆர்வமே இல்லாமல் ஒன்றில் ஈடுபடும்போது என்ன நிகழும்?

ஒன்று – பாதியிலேயே அதனை விட்டு விட்டுச் சென்று விடுவார்

அல்லது – ஏனோ தானோ என்று காலம் கடத்துவார் – சாதனை நிகழாது!

அல்லது – ஏதோ வற்புறுத்தல் அல்லது நிர்ப்பந்தம் காரணமாக ஒரு காரியத்தில் இறங்குகிறார் என்றால் – அவர் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்துக்கு அவர் ஆளாகி விடுவார்.

அல்லது – அக்காரியத்தில் அவர் நிலைத்திருந்தால் கூட வாழ்க்கையில் ஏதோ ஒன்றை பறிகொடுத்தவர் போல் காணப்படுவார். அவருக்கு உண்மையான ஆர்வம் எதில் இருந்ததோ அதனைத் தொடர முடியாமல் போய்விட்டதே என்று அங்கலாய்த்துக் கொண்டே காலத்தைத் தள்ளுவார்!

எனவே தான் சொல்கிறோம். உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதிலேயே முழு மூச்சுடன் இறங்குங்கள். சாதிப்பீர்கள்! அதுவே உங்களுக்கு வெற்றி!

சில உண்மையான எடுத்துக்காட்டுகளை பெயர் மாற்றித் தருகிறோம் – உங்கள் சிந்தனைக்காக.

பலருடன் பழகுவது, புதிய இடங்களுக்குச் செல்வது, புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது இவற்றில் ஆர்வம் மிக்க ஒருவர். இவரை ஆங்கிலத்தில் enterprising personality ன்று அழைக்கிறார்கள். ஆனால், இவரது தந்தையோ ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முதலாளி. தனக்கு அடுத்து அந்நிறுவனத்தின் நிர்வாகத்தை தம் மகனிடம் ஒப்படைத்திட பெரிதும் விரும்புகிறார். கம்ப்யூட்டர் நிறுவனமா? அது எனக்கு வேண்டவே வேண்டாம் என மறுக்கிறார் மகன். ''how can I sit in front of dead machines for hours together?'  என்பது மகனின் வாதம். ஆனால் தந்தையின் வற்புறுத்தலை மீற முடியாத மகன் வேண்டா வெறுப்பாக பொறுப்பேற்கிறார். நல்ல வருமானம் தான்! ஆனால் என்ன செய்ய? அவர் மன நோய் பிடித்தவராக ஆகி விடுகிறார்!!

இன்னொரு ஒரு உண்மைக் கதை. எனினும் சற்று கற்பனை கலந்து மாற்றித் தருகிறோம்.

இவர் ஒரு விவசாயியின் மகன். பெயர் நாசர். (உண்மைப் பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் படிப்பில் மிகவும் கெட்டிக்காரர். முதல் தர (first rank) மாணவர். பள்ளிப் படிப்பை முடித்ததும், கல்லூரிப் படிப்பைத் தொடர மிகவும் ஆர்வம் மாணவனுக்கு. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கல்லூரிக்கு மிகவும் தாமதமாக விண்ணப்பிக்கிறார். அவர் எதிர்பார்த்த B.Sc (Chemistry) யில் சீட் அவருக்குக் கிடைக்கவில்லை. B.A. Economics – பிரிவில் தான் இடம் இருந்தது. அரை மனத்துடன் சேர்ந்து விட்டார்.

நாட்கள் உருண்டோடுகின்றன. அவர் தனது விருப்பத்தை கல்லூரிப் பேராசிரியர்களிடம் சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு வாய்ப்பு கிட்டியது. வேதியியல் மாணவன் ஒருவன் வேறொரு கல்லூரிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டதால், ஒரு சீட் காலியாக, அந்த சீட் நாசருக்குத் தரப்பட்டது.

நாசருக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! ஆர்வத்துடன் படித்து இளநிலைப் படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெறுகிறார். பின்னர் முதுகலைப் படிப்பிலும் (Bio Chemistry) தங்கப்பதக்கம் வெல்கிறார். ஆய்வுப்படிப்பையும் தொடர்ந்து முனைவர் பட்டம் பெறுகிறார். பின்னர் மேல்நாடு ஒன்றுக்குச் சென்று அங்கும் ஒரு முனைவர் பட்டம்.

அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட துறை 'வைரஸ்' பற்றியதாகும். எந்தக் கல்லூரியில் அவர் இளநிலைப் பட்டம் பெற்றாரோ அதே கல்லூரிக்கு ஒரு தடவை வந்து மாணவர்களுக்கு மத்தியில் உற்சாகமாக உரையாடுகிறார்!

இப்போது கேள்வி என்னவெனில் – அதே மாணவர் தனக்கு சற்று கூட விருப்பமில்லாத பொருளாதாரத் துறையிலேயே அவர் தொடர்ந்து படித்திருந்தால் கூட – மதிப்பெண்களைக் குவித்திருந்தால் கூட அவர் வாழ்க்கையில் ஒரு நிறைவைக் கண்டிருக்க மாட்டார்.

எனவே – இப்போது கேள்வி என்னவெனில் உங்களுக்கு எதிலே அளவு கடந்த ஆர்வம்? கட்டுக்கடங்காத ஆர்வம்?

உங்களுக்கு ஒரு பயிற்சி காத்திருக்கிறது! விரைவில்!!

Comments