அப்படியே கிடைத்து விடுமா தங்கமும், வெள்ளியும்?

'மக்கள் சுரங்கங்கள்! தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!' - இந்த நபி மொழியில் இன்னும் ஒரு பாடமும் உண்டு!

தங்கமாக இருந்தாலும் சரி, அல்லது வெள்ளியாக இருந்தாலும் சரி - அவற்றின் சுரங்கங்களில் இருந்து அப்படியே கிடைத்து விடுவதில்லை தங்கமும் வெள்ளியும்!



அவை - கனிமங்களாகவும், தாதுப் பொருட்களாகவும் (ores and minerals) - அதாவது மண்ணோடு மண்ணாக, பல தூய்மையற்ற பொருட்களுடன் கலந்த நிலையிலேயே நமக்குக் கிடைக்கின்றன!

தோண்டி எடுக்கப் படுகின்ற அந்த உலோகக் கலவையிலிருந்து தான் - தூய்மையான தங்கமும் அல்லது வெள்ளியும் பிரித்து எடுக்கப் படுகின்றன.

அது போலவே ஒவ்வொரு மனிதனும் 'இயல்பிலேயே' பல அற்புதமான வளங்களுடன் பிறந்தாலும் மனிதனுக்கு உள்ளே பொதிந்திருக்கின்ற வளங்கள் அனைத்தும் உடனடியாக பயன்பாட்டுக்கு வந்து விடுவதில்லை.

சுரங்கத்தின் தாதுப் பொருட்களிலிருந்து ''தங்கத்தை'' வெளிக் கொணர்வது போன்றுதான் மனித வளங்களும் கண்டுபிடிக்கப்பட்டு (identification) தூய்மைப்படுத்தப்பட்டு (purification) பின்பு மெருகேற்றப்பட (development) வேண்டும். அதன் பின்னரே மனித வளங்கள் அனைத்தையும் முறையான பயன்பாட்டுக்குக் கொண்டு வர இயலும்.

மனிதன் தூய்மைப் படுத்தப் பட வேண்டியவனா என்றால், ஆமாம்! அவன் தூய்மைப் படுத்தப் பட வேண்டியவனே! ஏனெனில், மனிதன் இயல்பிலேயே ஒரு சில 'பலவீனங்களுடன்' தான் பிறக்கின்றான். ஏனெனில் அவன் 'மண்ணிலிருந்து' படைக்கப்பட்டவன்!

மனிதனிடத்திலே காணப் படும் அந்த பலவீனங்கள் என்னென்ன?

மனிதன் தனது இயல்பிலேயே பலவீனமானவன்.

அவன் அவசரப் படுபவன். பொறுமையற்றவன். மறந்து விடுபவன்.

மனிதன் கோபக்காரன்; பொறாமைப் படுபவன். பயந்து நடுங்குபவன்; பதற்றப் படுபவன்; படபடப்பவன்;

கவலைப்படுபவன்; சோம்பல் உடையவன்; பேராசை மிக்கவன்; தன்னையே தாழ்த்திக் கொள்பவன்; ஆணவம் மிக்கவன்; பெருமைப் படுபவன்;

மனிதன் மனோ இச்சைகளுக்கு அடிமையாகி விடுபவன்;

இவைகளையே நாம் மனித 'பலவீனங்கள்' என்று அழைக்கிறோம்.

இப்படிப் பட்ட பல விதமான 'பலவீனங்களிலிருந்து' மனிதன் தூய்மைப்படுத்தப்பட்டு - படைப்பு அளவில் மனிதனாகப் பிறக்கும் அவன் ''மனிதத்தன்மை'' உடையவனாக மாற்றப்பட வேண்டும்.

இறைவேதம் திருக்குர்ஆனிலே மனிதனைக் குறித்திட இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் ஒன்று – பஷர் (bashar); மற்றொன்று – இன்சான்(insaan). பஷர் என்பது மனிதனின் உடலமைப்பை வைத்துச் சொல்லப்படுவது.

ஆனால் இன்சான் எனப்படுவது ”மனிதத்தன்மை”யை வைத்துச் சொல்லப்படுவது. தாதுப் பொருளில் இருந்து தங்கத்தை வெளிக் கொணர்வது போல பஷர் எனும் நிலையிலுள்ள மனிதனை இன்சான் எனும் நிலைக்கு உயர்த்தப் பட வேண்டும்.

இன்னொரு எடுத்துக்காட்டு. ஒரு விதை. அந்த விதைக்குள்ளே – நிழல் தருகின்ற சுவை மிகு கனிகளை வழங்குகின்ற, ஒரு அழகான மரத்தை உருவாக்கிட வல்ல சத்துக்கள் அனைத்தும் – அடங்கியுள்ளன. இந்த விதை ஒரு முழுமையான மரமாக மாற்றப்பட வேண்டும்.

மற்றொரு எடுத்துக்காட்டையும் திருமறை எடுத்தியம்புகிறது. மனிதன் இருளில் இருக்கின்றான். அவன் ஒளியின் பக்கம் கொண்டு சேர்க்கப் படல் வேண்டும்.

இப்போது ஒரு கேள்வி:

தங்கத்தைச் சுத்திகரித்திட ஒரு முறை உண்டு. வெள்ளிக்கு ஒரு முறை உண்டு.அந்தந்த முறையை - முறையாகப் பின்பற்றினால் தான் தூய்மையான தங்கத்தை அல்லது வெள்ளியை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

சரி அப்படியானால் ''மனிதனை'' உருவாக்கிட என்ன வழி முறை? இந்த அரும்பணியைச் செய்வது எப்படி? இந்த வழி முறையை நமக்குக் கற்றுத் தருபவன் நமது இறைவன். இந்தப் பணியைச் செய்வதற்கென்றே இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் தாம் இறைத்தூதர்கள்!

'இது வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; ( குர் ஆன் 14:1)

''நாம் உங்களிடையே உங்களில் இருந்தே ஒரு தூதரை நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும் உங்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவும் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காகவும் இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்''. ( குர் ஆன் 2: 151)

மேலே சொல்லப்பட்ட இறை வசனத்தில் தூய்மைப் படுத்தலைக் குறித்திட ''தஸ்கியா'' (tazkiya) என்றொரு சொல் இடம் பெற்றுள்ளது. இச்சொல்லுக்கு இரண்டு பொருட்கள் உண்டு. ஒன்று - வளரச் செய்தல். மற்றது - தூய்மைப் படுத்துதல். அதாவது மனிதர்களைத் தூய்மைப் படுத்தி அவர்களுடைய எல்லா ஆற்றல்களையும் வளர்ப்பது என்பது இறைத்தூதர் அனுப்பப்பட்ட நோக்கங்களுள் ஒன்று.

ஏன் இறைவன்? ஏன் இறைத்தூதர்கள்? இறைநம்பிக்கை இல்லாமலேயே நல்ல மனிதர்களை உருவாக்கிட முடியாதா? – என்று கேட்கப்படலாம்.

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவு பிரிக்கவே முடியாதது. இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு அறுபட்டால் – மனிதன் தான் மனிதன் என்பதையே மறந்து விடுகிறான்.

மனிதன் தனக்குள்ளே உள்ள “மனிதனை” மறந்து விட்டால் மனிதனிடம் எஞ்சியிருப்பது “மிருகம்” தானே!

சரி! இறைவனால் மனிதர்களில் இருந்தே தேர்வு செய்யப் பட்ட அந்த இறைத்தூதர்கள் – மனிதனை மனிதனாக மாற்றிட அப்படி என்ன தான் செய்தார்கள்?

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்ப்போமே!

Comments