உயிரியல் பிரியரா நீங்கள்?

(உயிரியல் ஆர்வத்துக்கு ஒரு உமர் கனி!)

குழந்தைப் பருவத்திலேயே சிலருக்கு உயிர்ப்பிராணிகளிடத்தில் ஆர்வம் மிகுந்து காணப்படும். சில குழந்தைகள் பூனைகளுடன் பயமின்றி விளையாடும்;


சில குழந்தைகளுக்கு மீன்கள் என்றால் ஆர்வம் அதிகம். சில குழந்தைகள் கோழிக்குஞ்சுகளுடன் கொஞ்சிக் குலவுவர். வேறு சில குழந்தைகளுக்கு இலைகள், பூக்கள் என்றால் பிரியம் அதிகம்.

இவ்வாறு உயிரியல் துறையில் உள்ள ஆர்வத்தை biological intelligence என்று குறிப்பிடுகின்றார்கள்.


இவ்வாறு உயிரியலில் அளவு கடந்த ஆர்வம் மிக்க இளைஞி ஒருவர் தான் - உமர் கனி அவர்கள். "ஊனத்தை வென்ற உமர் கனி" என்ற தலைப்பில் முஸ்லிம் முரசு மாத இதழில் சில ஆண்டுகளுக்கு முன் வந்த கட்டுரையை அப்படியே தருகின்றோம்:

"போலியோவால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட ஊனமுற்ற பெண் ஒருவர், விஞ்ஞானி ஆகும் ஆசையோடு சாதனைகளைப் படைத்து வருகிறார்.

தஞ்சை மாவட்டம் சுவாமி மலையை அடுத்த கங்காதரபுரம் கிராமத்தில் வசிப்பவர் 26 வயது உமர் கனி. 2 வயதிலேயே போலியோ தாக்கி இவரது இரண்டு கால்களும் செயலிழந்து போனது. ஊனத்தை வெல்ல வேண்டும் என்ற வேகத்தில் படிப்பை தீவிரப் படுத்தினார் அவர். பி.எஸ்.சி விலங்கியல் படித்து விட்டு தஞ்சை சென்று எம்.எஸ்.சி பயோ டெக்னாலஜி படித்தார்.

எம்.எஸ்.சி படிக்கும்போது, மண்ணில் பெட்ரோலியம் கலந்தால் அதை பிரித்தெடுக்கும் முறை பற்றி இவர் சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரை பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் சிறப்பான ஆராய்ச்சி என்ற பாராட்டைப் பெற்றது. இதையடுத்து பி.எச். டி ஆராய்ச்சிக்கு அனுமதி கிடைத்தது.

இதைத் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார். குறிப்பாக தென்னை, பாக்கு, கொய்யா மரங்களின் இலைகளைக் கொண்டு, அதன் திசுக்கள் மூலம் அதே வகையில் செடிகளை உருவாக்கி தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார். எதிர்பார்த்தது போல் கொய்யா அதிக அளவிலும், பெரிய சைஸிலும் காய்க்கத் தொடங்கியது.

அதே போல் மருத்துவத் துறையிலும் இவருக்கு ஆராய்ச்சி ஆர்வம் உண்டு. மனித உறுப்புகளை செயற்கையோடு கூடிய இயற்கையாக வளர்க்கும் முறை பற்றியும் ஆய்வு செய்து வருகிறார்.

இவர் ஆராய்ச்சியில் மனித உறுப்புகளில் எந்த பகுதி தேவையோ அதை மட்டும் தனியாக வளர்த்து தேவையானவருக்குப் பொறுத்த முடியும். கண் பார்வை இழந்தவர்களுக்கு கழுகின் பார்வையில் உள்ள செல்களை எடுத்து மனிதனின் கண்ணுக்குள் வைத்து பார்வையை மீண்டும் கொண்டு வர முடியும். இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளிலும் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இவருடைய ஆர்வத்தையும் ஆராய்ச்சியையும் பாராட்டிய பலர், இது தொடர்பாக மேற்கொண்டு ஆராய்ச்சிகளை வெளி நாடுகளில் தான் செய்ய முடியும் என்று சொல்லி, இவரை வெளி நாடு செல்லுமாறு கூறினர். ரஷ்யாவில் இருக்கும் ரஷ்யோ மெடிக்கல் அகாடமிக்கு விண்ணப்பித்து, இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்குறிய ஆராய்ச்சி படிப்பு படிக்க வேண்டும். ரூபாய் 12 லட்சம் வரை செலவாகும். ஆனால் இவரது குடும்பத்துக்கு அவ்வளவு வசதி இல்லை. வாய்ப்பு கிடைத்து, தான் வெளி நாடு சென்று ஆராய்ச்சி மேற்கொண்டாலும் இந்தியாவுக்குத் தான் அதை பயன் படுத்துவேன் என்று கூறுகிறார் உமர்கனி.
தான் ஊனமாக இருக்கிறோம் என்று அவர் ஒரு நாளும் கவலைப்பட்டது கிடையாதாம்.

ஊனமுற்றவர்களுக்காக அரசு தரும் சலுகைகள் எதையும் அவர் இன்று வரை பெறவில்லை. அரசிடம் ஊனத்துக்கான சலுகையைப் பெறுவதை விட ஆராய்ச்சிக்கான உதவியையே எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஆராய்ச்சியை மேலும் தொடர கும்பகோணத்துக்கு பேருந்தில் சென்று நாளொன்றுக்கு குறைந்தது ஐந்து மணி நேரம் இன்டர்நெட்டில் தகவல்களை திரட்டி வருகிறார் வருங்கால விஞ்ஞானி உமர்கனி.

செய்தி: தினகரன் நாளிதழ்
தகவல்: S.K.J. சாகுல் ஹமீது

இங்கே நாம் படித்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், குழந்தைப் பருவத்திலேயே ஒரு குழந்தைக்கு உயிரியல் ஆர்வம் இருக்கிறதா என்று அறிதல் சுலபம். இப்படிப்பட்ட குழந்தைகள் தான் நாளைக்கு மருத்துவராக பரிணமிக்க வேண்டும். உயிரியல் ஆர்வம் அற்ற குழந்தைகளைப் பெற்றுள்ள பெற்றோர்கள் அவர்களை நான் டாக்டர் ஆக்குவேன் என்று அடம் பிடிப்பது முயலுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க முயல்வது போல் தான்!

அடுத்து - உயிரியல் ஆர்வம் உள்ள குழந்தைகளை நாம் உயிரியல் பூங்காக்களுக்கு அடிக்கடி அழைத்துச் சென்றிட வேண்டும். அவர்களை தாவரவியல் பூங்காக்களுக்கும் (botanical gardens),

நீர் வாழ் பிராணிகள் காட்சியகங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். வன விலங்குகள் சரணாலயங்கள், பறவைகளின் சரணாலயங்கள் ஆகிய இடங்களுக்கும் அழைத்துச் சென்றிட வேண்டும்.

அவர்களுக்கு அத்துறையில் ஊக்கமளித்திட வேண்டும். அவர்களின் சிறிய "சாதனைகளைக்கூட" பெரிது படுத்திப் பாராட்டிட வேண்டும்.

இன்று உயிரியல் துறை பன்மடங்கு விரிவடைந்துள்ளது. பொதுவாக உயிரியல் (Biology) என்று அழைக்கபட்டு வந்த இத்துறை - இன்று micro biology, bio technology, genetic engineering, bio informatics என்று விரிவடைந்து கொண்டே செல்கின்றது.

அது போலவே மருத்துவத் துறையும் பல்வேறு பிரிவுகளாக (specialization) விரிவடைந்து செல்கின்றது என்பதை நாம் அறிவோம்.

இத்துறையில் சாதனை படைப்பவர்களை நாம் உருவாக்கிட உயிரயல் ஆர்வம் உள்ள குழந்தைகளை நாம் கண்டெடுக்க வேண்டும். இதுவே அவர்களுக்கும் நல்லது. மற்ற எல்லா உயிரினங்களுக்கும் நல்லது.

Comments