பேச்சுக் கலையில் உங்களுக்கு ஆர்வமா?

முஹம்மது நபியவர்கள் எப்படி ஒரு தலைமுறையை மிகச் சிறப்பாக வார்த்தெடுத்தார்கள் என்பதை முன்னரே குறிப்பிட்டோம் அல்லவா?

அவ்வாறு நபியவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட நபித்தோழர்கள் சிலரின் வாழ்வை - இத்தொடரில் அவ்வப்போது எழுத இருக்கின்றோம் - இன்ஷா அல்லாஹ்!


இப்போது - மொழியாற்றலுக்கு ஒரு ஸைத் பின் தாபித்!


ஒரு திறமை ஒருவருக்குள் மொட்டு விட்டு மலர்ந்திட இரண்டு விஷயங்கள் அமைந்திட வேண்டும். ஒன்று: குறிப்பிட்ட ஒரு திறமையை வளர்த்துக் கொள்ள அதில் அளவு கடந்த ஆர்வம் ஒருவருக்கு இருந்திட வேண்டும். இரண்டு: அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை அவர் வாழ்கின்ற சமூகம் அபரிமிதமாக வழங்கிட வேண்டும்.

மனிதர்களுக்குள் புதைந்திருக்கின்ற பல விதமான திறமைகளுள் ஒன்று தான் மொழியாற்றல். ஒரு மொழியை மிக இலாகவமாகக் கையாள்வதற்கென்று ஒரு திறமை வேண்டும். இதனை ஆங்கிலத்தில் linguistic intelligence என்று அழைக்கிறார்கள். இப்படிப்பட்ட திறமைக்கு நாம் ஸைத் பின் தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் காட்டலாம்.

அவருடைய வரலாற்றிலிருந்து சில முக்கியப் பக்கங்களை சுருக்கித் தருகின்றோம். பாருங்கள்:


பத்ர் போரில் கைதிகளாக 70 காஃபிர்கள் பிடிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் 3 அல்லது 4 ஆயிரம் திர்கங்களை ஈட்டுத் தொகையாகக் கொடுத்து அல்லது பத்து முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்து விட்டு விடுதலை பெறலாம் என்று நபி (ஸல்) அறிவித்தார்கள். இவ்வாறு எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டவர்களில் ஒருவர் தான் ஸைத் பின் தாபித் (ரலி) அவர்களாவார்கள்!

ஒரு தடவை அவருடைய தாயார் அந்நவ்வார் பின்த் மாலிக் அவர்கள் தனது உறவினர்களிடம் சென்று என் மகன் அல்லாஹ்வின் வேதம் கற்றவனாய் ஆக விரும்புகிறான். உதவி செய்யுங்கள் - என்று கேட்டுக் கொண்டார்கள். அந்த உறவினர்கள் சிறுவர் ஸைது இப்னு தாபித்தை நபியவர்களிடம் அழைத்துச் சென்று சிபாரிசு செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! இந்தச் சிறுவன் ஸைது இப்னு தாபித் நன்றாய் எழுதப் படிக்கத் தெரிந்தவன், புத்திக்கூர்மையுள்ளவன். குர்ஆனின் பதினேழு அத்தியாயங்களை மனனம் செய்து வைத்துள்ளான். தங்களுக்கு அருளப்பட்ட அதே நேர்த்தியுடன் அதை ஓதக்கூடியவனாகவும் இருக்கிறான். தங்களுடனிருந்து மேலும் மேலும் ஞானம் பெருக்கிக் கொள்ள விழைகிறான் என்றார்கள்.

எங்கே நீ மனனம் செய்து வைத்துள்ளதை ஓது! நான் கேட்கிறேன் - என்றார்கள் நபியவர்கள். ஓதிக்காட்டினார் ஸைது இப்னு தாபித் (ரலி). அழகாய், தெளிவாய், நேர்த்தியுடன் அவரது நாவிலிருந்து வெளிவந்தன குர்ஆன் வசனங்கள். ஸைது அவர்களின் மொழியாற்றல் புரிந்துவிட்டது நபியவர்களுக்கு. அதையும் தாண்டி நபியவர்களை உவகையில் ஆழ்த்திய விஷயம் ஒன்றிருந்தது - ஸைது சிறப்பாய் எழுத, படிக்கக் கூடியவர் என்பது.

யாருக்கு என்ன திறமை இருக்கிறதோ அதை முற்றிலும் பயன்படுத்திக் கொள்ளும் தேர்ச்சி முஹம்மது நபியவர்களிடம் இருந்தது. எனவே ஸைதை எப்படி இஸ்லாத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது அவர்களுக்கு அக்கணமே உறுதியாகிவிட்டது.

ஸைது! யூத கோத்திரத்தினர் நான் கூறுவதை சரியாகத்தான் எழுதிக் கொள்கிறார்களா என்பதை அறியும் வாய்ப்பு எனக்கில்லை. எனவே நீ உடனே ஹீப்ரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் - எனக் கேட்டுக் கொண்டார்கள் நபியவர்கள்.

அவ்வளவுதானே, இதோ - தங்களது உத்தரவிற்கு அடிபணிந்தேன் நபியவர்களே! என்று உடனே, வெகு உடனே காரியத்தில் இறங்கினார் ஸைது. வெகு குறுகியகாலத்தில் இரண்டே வாரத்தில் ஹீப்ரு மொழி கற்றுத் தேர்ந்தார் அவர்.

அதைத் தொடர்ந்து, 'உனக்கு சிரியாக் மொழி தெரியுமா?' என்று கேட்டார்கள் நபியவர்கள். தெரியாது என்றார் - ஸைது. சென்று அதனையும் கற்று வா என்றார்கள் நபியவர்கள்.

அதையும் உடனே பயின்றார். அதுவும் எத்தனை நாட்களில்?

பதினேழே நாட்களில்!

நபியவர்கள் இட்ட கட்டளைக்காக மிக இளவயதினர் ஒருவர் இரு வாரங்களில் ஒரு மொழியினைக் கற்றுத்  தயாராய் வந்து நிற்கிறார்.

இளைஞர் ஸைது இப்னு தாபித் ஆழ்ந்த அறிவுள்ள ஒரு மொழி வல்லுநராய் வளர்ந்து வரலானார். நபியவர்களுக்கு அவரே அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பாளராக ஆகிப்போனார். அவ்வப்போது அருளப்பெறும் இறைவசனங்களை எழுதிவைத்துக் கொள்வதற்காகவே சிலரை நியமித்து வைத்திருந்தார்கள் நபியவர்கள். அவர்களுள் ஸைத் பிரதானமான ஒருவராய் ஆனார்.

அது மட்டுமல்லாமல் மன்னர்களுக்கு நபியவர்கள் அனுப்பிவைத்த கடிதங்களை எழுதும் பணியும் ஸைதிற்கு அமைந்தது. இவ்வளவும் ஸைதின் மிக இளமைப் பருவத்தில் - பதினாலு பதினைந்து வயதிலிருந்தே - நிகழ ஆரம்பித்தன. இளைஞர் இளவயதிலேயே அறிஞராகிப் போனார்.

ஸைத் பின் தாபித் அவர்களின் வாழ்விலிருந்து நாம் பெற வேண்டிய பாடங்கள்:

1. ஸைத் அவர்கள் தனது மொழித்திறமையைக் கண்டுணர்ந்து அதனை வளர்த்துக் கொள்ளத் துவங்கிய காலம் அவரது மிக இளமைப் பருவம் ஆகும் (adolescence). அதாவது அவரது – பதினாலு பதினைந்து வயதிலிருந்தே – அவரது திறமைகள் வெளிப்படத் துவங்கி விட்டன. இதனைத் தான் இன்றைய இளைஞர்கள் நன்கு கவனித்திட வேண்டும்.

2. இன்றைய தாய்மார்களுக்கெல்லாம் ஒரு அழகிய முன்மாதிரியாக இங்கே ஸைத் அவர்களின் தாயார் – அந்நவ்வார் பின்த் மாலிக் அவர்களைப் பார்க்க முடிகிறது. மகன் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தும் போதெல்லாம் – உடனே களத்தில் இறங்கி ஆவன செய்யத் தொடங்கி விடுகிறார் அவர். இப்படித் தான் ஒவ்வொரு தாயும் தான் பெற்ற செல்வங்களின் திறமைகளுக்கு வழி அமைத்துக் கொடுத்திட ஆர்வத்துடன் முயற்சிகள் மேற்கொண்டிட வேண்டும்,

3. ஸைத் அவர்களின் உறவினர்களையும் நாம் பாராட்டித் தான் ஆக வேண்டும். அவர்கள் என்ன செய்தார்கள். சிறுவரை அழைத்துச் சென்று நபியவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். இதில் நாம் படித்துக் கொள்ள வேண்டிய இன்னொரு படிப்பினை – நமது எல்லா விதமான 'தலைமை' (Leadership) களுக்கும் இருக்கிறது. இளைஞர்களின் ஆற்றல்களை சரியான தருணத்தில் கண்டுணர்ந்து அவர்களின் ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திட வேண்டும்.

வயது முதிர்ந்தவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கச் சொல்லும் இஸ்லாம் அதே நேரத்தில் வயதில் சிறிய இளைஞர்களின் எந்தவொரு திறமையையும் அவர்களின் வயதின் காரணத்தால் நிராகரிக்கவுமில்லை, உதாசீனப்படுத்தவுமில்லை. மாறாய், போற்றி ஊக்கப்படுத்தி நல்வடிவம் அளித்தது. அற்புதமாக அதை நிகழ்த்திக் காட்டினார்கள் நபியவர்கள். நமது இளைய தலைமுறையினருக்கு இதில் நிறைய பாடம் இருக்கிறது; முதிய தலைமுறையினருக்கு அறிவுரை இருக்கிறது.

4. இளைஞர்களே! உங்கள் திறமைகளில் நீங்கள் மேன்மேலும் முன்னேறிச் சென்று கொண்டே இருந்திட வேண்டும். தொய்வு ஏற்பட்டிடக் கூடாது. அரைகுறை சாதனைகளில் திருப்தி அடைந்து விடக் கூடாது . கவனச் சிதறல் (distractions) கூடாது. ஸைது அவர்களின் வாழ்வில் உங்களுக்குப் படிப்பினை என்னவென்றால் – அபரிமிதமான திறமை உன்னிடம் இருந்தால் வாய்ப்புகள் தானாக உன்னைத் தேடி வரும் என்பது தான். இப்படித் தான் திருக்குர்ஆனைத் தொகுக்கும் அருமையான வாய்ப்பு ஸைது அவர்களை வந்தடைந்தது என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

Comments